Friday, 30 December 2016

விடைபெறும் 2016


யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணங்கள் எப்பவுமே உணர்வுபூரணமானவை. இந்து மாசமுத்திரத்தின் அலைகள் மோதும் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஒரு அதிகாலை வேளை யாழ்ப்பாணம் செல்லும் கடுகதி ரயிலில், பிதுங்கி வழியும் சூட்கேஸுகளைக் காவிக் கொண்டு, "வெளிநாட்டுக்காரர்" என்று ஊர்ச்சனம் பார்வையால் முத்திரை குத்த, ரயிலில் இருபத்தாறு ஆண்டுகளிற்கு பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பமாகியது. 


2016ம் ஆண்டு பறந்தோடியே விட்டது. எங்களிற்கு வயது ஏறுவதால் நாட்கள் வேகமாக நகர்கிறதா, இல்லை உலகம் இறக்கை கட்டி பறப்பதால், பொழுதுகளும் வேகமெடுக்கிறதா தெரியவில்லை. இந்தாண்டு உலக அரங்கில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள் 2016ஜ மறக்க முடியாத ஒரு ஆண்டாக பதிவு செய்துவிட்டன.


2016ம் ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் ஷோபா ஷக்தியின் "Box" கதைப்புத்தகம்".
விறுவிறுப்பான மொழிநடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை கோப உணர்வுடன் இரு நாட்களிலேயே வாசித்து முடித்தேன். எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து விலாசம் காட்டி கொண்டிருப்பதை கண்முன் கொண்டு வந்த மனசாட்சியின் மறுவுருவத்தை, வாசித்த அனுபவத்தை சயந்தனின் "ஆதிரை" நாவல் தந்தது. இந்தாண்டு வாசித்த மிகச் சிறத்த புத்தகம் ஆதிரை தான். 


திறக்க முடியாத யன்னலிற்கு வெளியே பச்சை வயல்வெளிகளும், புத்தர் சிலைகளும், தென்னை மரங்களும், ரயில் கடவைகளில் மனிதர்களும் வழியனுப்பி வைக்க, குருநாகலும் பொல்கஹவெலவும் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி ரயில் முன்னேறிக் கொண்டிருந்தது. பள்ளி விடுமுறையாதலால் வெள்ளைச் சீருடையணிந்து வரப்புகளில் அன்னநடை பயிலும் சிங்களக் குமரிகளை காணவில்லை.


பெப்ரவரி மாதம் மைக்கல் நவரட்ணராஜா எம்மை விட்டுப்பிரிந்தது, அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது. வாழ்வு எனும் இந்த குறுகிய பயணத்தின் யதார்த்தத்தை மீண்டுமொரு உணர்வித்த நிகழ்வாக மைக்கலின் மரணம் அமைந்தது. 


மார்ச் மாதம் Big Match பார்க்க நண்பர்களுடன் யாழ்ப்பாணம் போனது என்றுமே மறக்கவே முடியாத ஒரு இனிய பயணமாக அமைந்தது. துள்ளித்திரிந்த காலத்தில் ஓடித்திரிந்த பாடசாலை வளாகத்தை,  பம்பலடித்து திரிந்த நண்பர்களுடன் மீண்டும் தரிசிக்கும் அனுபவத்தை விபரிக்க வார்த்தைகள் தேட கஷ்டப்பட்டேன்.


இந்தாண்டு நிறைய புத்தகங்கள் வாசித்த ஆண்டாக அமைந்தது. மெலூஹாவின் அமரர்கள், அமல்ராஜின் கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், ஜெயமோகனின் காடு, Gota's War, செங்கை ஆழியனின் மீண்டும் வருவேன் மற்றும் சங்கிலியன், Tuesdays with Morrie, குணா கவியழகனின் விடமேறிய கனவு, ஜேகேயின் கந்தசாமியும் கலக்சியும் என்று இந்தாண்டு வாசிப்பு பசிக்கு தீனி போட்ட ஆண்டாக அமைந்தது. 

வவுனியா ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, வடையும் வாழைப்பழமும் தந்து வரவேற்றான் பள்ளிக்கால நண்பன் சுது சிறி. வன்னிக்காடுகளிற்கூடாக A9 வீதியை கொஞ்சிக் கொண்டு ரயில் பயணிக்க, ஜயசிக்குரு கால இடங்கள் ஒவ்வொன்றாய் நினைவில் வந்து தொலைத்தன. பக்கத்து சீட்டிலிருந்த சிங்கள குடும்பம் வரைபடத்தை விரித்து வைத்து அடுத்து வரும் ஸ்டேஷனை எதிர்வுகூறி எரிச்சல் படுத்தினார்கள். 


இந்தாண்டு தலைவர் படம் வெளிவந்த சிறப்பாண்டாக அமைந்தது. 2016ல் பார்த்த படங்களில் குற்றமே தண்டனை, 24, தோழா, காதலும் கடந்து போகும், விசாரணை, இறுதிச் சுற்று,  என்பன சிறந்தவை. இந்தாண்டின் சிறந்த படம், சூப்பர் ஸ்டார் இயல்பாக நடித்து கலக்கிய கபாலி தான்.


கிளிநொச்சியை ரயில் அண்மிக்க பச்சை பசுமையான வயல்வெளிகள் கண்ணிற்கு விருந்தாகின. பாரிய சில தொழிற்சாலை கட்டிடங்களும் தெரிந்தன. கிளிநொச்சி ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் தரித்து நின்ற ரயில், யாழ்ப்பாணம் நோக்கி வேகமெடுத்தது. ஆனையிறவு வெளியை ரயில் கடந்து தென்மராட்சிக்குள் ரயில் நுழைய, மொட்டை தென்னை மரங்கள் இருந்த இடங்களில் புதிய மரங்கள் துளிர் விட தொடங்கியிருந்தன. 


AR ரஹ்மான், இளையராஜா, இமான், ஹரீஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பல சிறந்த பாடல்கள் வெளிவந்த ஆண்டாக 2016 அமைந்தது. அச்சம் என்பது மடமையமடாவில் வந்த பாரதிதாசனின் வரிகளிலமைந்த "நானும் அவளும்", 24ல் அமைந்த "நான் உன்னழகினிலே", கபாலியில் "வானம் பார்த்தேன்" பாடல்கள் மனதை கவர்ந்தன. 


சாவகச்சேரி தாண்டி நாவற்குழி பாலம் கடக்க, கதவை திறந்து யாழ்ப்பாண காற்றை ஆசை தீர சுவாசித்தேன். தண்டவாளத்தை தொட்டு விடும் தூரத்தில் இருந்த வீடுகளை கடந்து வீறுடன் ரயில் யாழ்ப்பாண ரயில் நிலையத்தை அடைந்தது. மீண்டும் மண்ணில் கால்பதிக்க உள்ளம் உவகையில் திளைக்க, கண்களின் ஓரத்தில் ஏனோ ஈரம் கசிந்தது. 

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்கள் உலக அரங்கில் செலுத்தப் போகும் தாக்கங்கள் 2017ம் ஆண்டு பதிவு செய்யும்.  ஈழத்தமிழர்களிற்கு கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தந்த வலியுடனும் அடுத்த ஆண்டில் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற எதிர்பார்ப்புடனும் தான் கடக்கும். 2016ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்த நம்பிக்கைகள் படிப்படியாக பொடி பொடியாகி, 2017ஜ ஏக்கத்துடன் தான் நாங்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அடுத்த ஆண்டிலாவது எங்களிற்கு விடிவும் நீதியும் கிடைக்க கர்த்தரும் கந்தனும் கருணை காட்டட்டும்.

Friday, 23 December 2016

பஹ்ரேய்ன் பசுபாரசீக வளைகுடாவில் அமைந்திருக்கும் முப்பது தீவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி இராஜ்ஜியம் தான் பஹ்ரேய்ன். மன்னராட்சி நடக்கும் ஒரு இஸ்லாமிய நாடு. பெற்றோலியத்தில் தங்கியிருந்த பொருளாதாரத்தை, அதிலிருந்து மீட்டு, நிதிச் சேவைகள் நோக்கி நகர்த்திய முதலாவது வளைகுடா நாடும் பஹ்ரேய்ன் தான். மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு தேடி எம்மவர்கள் கடல் கடக்க வெளிக்கிட்ட போது,  பஹ்ரேய்னையும் விட்டு வைக்கவில்லை.


எங்கட SJC92 பிரிவில் முதன்முதலாக மத்திய கிழக்கிற்கு போனவர் சியாமளராஜ். தொண்ணூறுகளின் மத்தியிலேலே மத்திய கிழக்கிற்கு பறந்து விட்டார். "டேய் நீங்க கொப்பி பேனையோடு தூக்கிக்கொண்டு திரிந்த நாட்களிலியே நான் தினாரில் உழைக்க தொடங்கிட்டன்" என்று லெவலடிப்பார். "எங்கட பட்சிலேயே மிடில் ஈஸ்டிற்கு முதல் முதலா வந்தது நான்தான்டா" என்று ஒரு நாள் ஸ்கைப்பில் பீத்தினார். "ஓமடா மச்சான், சந்திரனிற்கும் மனுசன் போக முதல் நாயைத் தான் அனுப்பினவங்கள்" என்று திருப்பி அடிக்க, சிரித்துவிட்டு கட் பண்ணினார்.


பத்தாண்டுகளிற்கும் மேலாக பஹ்ரேய்னில் பதுங்கியிருக்கும் இந்தப் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக Facebook மற்றும் WhatsApp சமூகவலைத் தளங்களில் உறுமிக் கொண்டு திரிகிறது. அன்டிமாரோடு பல குழுக்களில் கொட்டமடிக்கும் இந்த கன்னிப்புலியின் ரோதனையை ரசிப்பவர் பலர், சொல்லாலடித்து துரத்துபவர் சிலர். 


எதற்கெடுத்தாலும் "வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவன்" என்று தொடங்கி WhatsAppல் பிரசங்கம் வைப்பதும், "I am number 2" என்று பெருமையடிப்பதும், பாட்டு பாடுறன் என்று சொல்லி கல்பனா அக்காவையே அழ வைக்குமளவிற்கு கத்துவதும், அரசியல் மேதாவியாக அவதாரம் எடுத்து அலட்டுவதும், தத்துவம் சொல்லி அறுப்பதும் என்று, கடந்த சில ஆண்டுகளில் இவனின் அட்டகாசம் எல்லைக் கோட்டை தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.


இந்த ஆண்டு பல பயணங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்தது. அதற்கெல்லாம் பிள்ளாயார் சுழி போட்டது மார்ச் மாதம் Big Match பார்க்கப் போன பயணம் தான். போன நவம்பரில் சுரேன் Big Match போகும் எண்ணத்தை விதைத்தான், உடனடியாக ஆதியும் கணாவும் நானும் டிக்கட் போட்டு விட்டோம். டிக்கட் போட்டு விட்டு தான் மனிசியிடம் சொன்னோம். பெப்ரவரியில் டுபாய்க்கு வேலை விஷயமாக போகும் நிர்ப்பந்தம் எற்பட, டிக்கெட்டை மாற்றி டுபாய் போய் வேலையை முடித்துவிட்டு யாழ்ப்பாணம் போக பயணத்தை மாற்றினேன். 


டுபாயில் வசிக்கும், பரி யோவானில் பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த நண்பன் கணேஷ்குமாரும் இணைந்து கொள்ள, பஹ்ரேய்ன் புலியை பார்த்து வரும்  திட்டம் தயாரானது. "மச்சான், சனிக்கிழமை காலம்பற வாறம், குளிச்சு கிளிச்சு நில்.. சரியோ" என்று மெஸேஜ் அனுப்ப, சிங்கன் காத்தால எழும்பி தலை முழுகி விட்டு செல்ஃபி எடுத்து படத்தை குறூப்பில் போடுறார்.


சியாமள்ராஜ், ஒரு மண்டைக்காய், பரி யோவான் U15 opening batsman, யாழ்ப்பாணத்தின் தலை சிறந்த Table Tennis ஆட்டக்காரன். யுத்தம் என்ற கொடிய அரக்கன் எம்மல்லோரின் வாழ்வையும் உலுப்பி எடுத்தது. 1990ல் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றி நாங்கள் கல்வியில் கரையை தொட்டுவிட, சியாமளராஜ் யுத்தம் சிதைத்த வாழ்க்கைக் கடலில் இன்றும் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.


பத்தாம் ஆண்டு, முதல் தவணைப் பரீட்சையில் சியாமளிற்கு கணிதத்திற்கு கிடைத்த மதிப்பெண்கள் 35. அடுத்த தவணைப் பரீட்சைக்கு கடுமையாக உழைத்து, வகுப்பில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அந்தனிப்பிள்ளை மாஸ்டரை அசர வைத்தான். உயர்தரத்தில், பரீட்சைக்கு முதல் நாள்  கிரிஷாந்தனின் கொமர்ஸ் கொப்பியை வாங்கிக் கொண்டு போய், போட்டோ கொப்பி எடுத்து இரவிரவாக முழித்திருந்து படித்து விட்டு வந்து பரீட்சை எழுதினான். பரீட்சை பெறுபேறு வரும்போது இரண்டு வருடம் படித்த கிரிஷாந்தனிற்கும் B ஒரு நாளிரவு மட்டும் படித்த சியாமளராஜிற்கும் B. சியாமள்ராஜ், கொமர்ஸ் படித்த மண்டைக்காய். 


காலை 7 மணிக்கு டுபாயிலிருந்து பஹ்ரேய்ன் புறப்படும் விமானத்தில் கணேசும் நானும் பயணித்தோம். இரவிரவாக குறட்டை விட்டு என் நித்திரையை கெடுத்த கணேசை "மச்சான் ப்ளைட்டில் நித்திரை கொள்ளாதேடா, நான் ஒரு குட்டித் தூக்கம் அடிக்கப் போறன்" என்று எச்சரித்து விட்டு கண்ணயர்ந்தேன். டுபாய் விமான நிலையத்தில் குடித்த குப்பை கோப்பி வயிற்றுக்குள் விளையாட்டு காட்டியது.


யாழ்ப்பாண YMCAயில் சியாமளை எப்போதும் காணலாம், பக்கத்தில் தான் அவரின் வீடும். Table Tennisல் பல வெற்றிகளை ஈட்டிய சாம்பியன் சியாமள்ராஜ். அந்தக்காலத்தில் ஒல்லிப்பிச்சானான சியாமள் ஒரு ஸ்டைலா தான் விளையாடுவார், அவரோடு ஜோடி போட்டு ஆட, சுண்டுக்குளி பெட்டைகள் போட்டி போடுவார்களாம், அதையும் அவரே சொல்லுவார். சியாமள் பரி யோவான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது தனிக்கதை. அதை விபத்து என்பதா விபரீதம் என்பதா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.


பஹ்ரேய்ன் விமான நிலையத்தில் இறங்கிய எங்களை இம்மியளவும் சிரிக்காத தாடி வைத்த ஷேக் அப்துல்லா வரவேற்றார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தால், டானியலை காணவில்லை. பஹ்ரேய்னிற்கு போன சியாமளராசா என்ற சிவனடியார், பெந்தகோஸ்து திருச்சபையில் திருமுழுக்கு பெற்று டானியலாக புதிய பிறவி எடுத்திருந்தார். டானியல், பைபிளை கரைத்து குடித்து ஒரு அதி தீவிர கிறிஸ்தவனாக மாற்றம் கண்டிருந்தார். 


சியாமள் நல்லா கதை சொல்லுவான், கதை சொல்லும் பாணியிலேயே சிரிப்பு வரும்.1990ல் பலாலிக்கு பங்கர் வெட்ட இயக்கம் பிடித்துக் கொண்ட போன கதையை எவ்வளவு தரம் சொன்னாலும் கேட்கலாம், அலுக்காது. வெள்ளவத்தையில் மாலை நேரங்களில் ஊத்தைக்கடையடியில் சியாமள் வந்தா தான் கச்சேரி களைகட்டும். ஊத்தகடையின் கண்ணாடி அலுமாரியை தவறுதலாக உடைத்து நொறுக்கியதற்காக பொலிஸ் பிடித்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போகும் போதும் சிரித்துக் கொண்டே Bye சொன்ன வீரவேங்கை அவன்.


நாங்க பஹ்ரேய்ன் விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியால வெளியே வர, டானியல் உள்நுழையும் பகுதியின் வாசலில் போய் எங்களை வரவேற்க நிற்கிறான். எங்களைக் கண்டதும் ஓடி வந்து கட்டிபிடத்து அரவணைத்து சிரி சிரி என்று சிரிக்கிறான். "டேய் பயந்தாங்கொள்ளி, வந்து சேர்ந்து விட்டாய், உன்னை இன்றைக்கு போட போறன்" என்று ஆப்கானிஸ்தான் காரனின் பழைய காரில் எங்களை ஏற்றிக் கொண்டு போகும் போது காமெடி பண்ணினான். 


சியாமள் எங்களோடு CIMA படிக்கவும் வந்தான், முதலாவது stageஐ ஒரே ஷொட்டில் பாஸ் பண்ணினான். CIMA பாஸ் பண்ணினதற்கு Mt Lavinia கடற்கரையில் ஒரு பெரிய Partyயும் வைத்தான். அதற்கு பிறகு ஆளை CIMA பக்கம் காணவில்லை. 


"மச்சான் பசிக்குதடா, நல்ல தேத்தண்ணியா வாங்கித் தாடா" என்று கேட்டோம். எங்களை ஒரு மலையாள ஊத்தைக்கடைக்கு கொண்டு போய் தேத்தண்ணி என்ற பெயரில் களனித்தண்ணி வாங்கித் தந்தான். "நாயே இது நாறல் சாப்பாடு" என்று அலுப்பு கொடுக்க, எங்களை ஆனந்தபவனிற்கு கூட்டி போய் வயிறாற தோசை, கேசரி, கோப்பி எல்லாம் வாங்கித் தந்தான். அன்று பகல் முழுவதும் டானியலோடு பம்பலாக கதைத்து வயிறு வலிக்க சிரித்துவிட்டு அன்று பின்னேரமே டுபாய்க்கு திரும்பினோம். 


புலியைத் தேடி பஹ்ரேய்ன் போனால் அங்கே ஒரு பசுவைத் தான் தரிசித்தோம். சமூக வலைத்தளங்களில் ஐஃபோனிற்கு பின்னால் மறைந்திருந்து உறுமுவது புலியல்ல, டானியல் என்ற நல்ல மென்மையான உள்ளம் கொண்ட நல்ல பசு தான். 


முப்பது ஆண்டுகால கொடிய யுத்தம் எங்களில் இருந்த திறமையானவர்களை மட்டும் எங்களிடமிருந்து பறிக்கவில்லை, எங்களிடமிருந்த திறமைகளையும் மழுங்கடித்து விட்டது.  உலகத்திற்கு விடிவை கொண்டு வந்த கிறிஸ்துவின் பிறப்பு நெருங்கும் இந்த காலத்தில், எங்களதும் எம்மினத்தினதும் வாழ்விலும் ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திப்போம். 


குழந்தை யேசுவின் அழுகுரல் கேட்டதும், மீட்பர் அவதரித்து விட்டார் என்று உலகம் மகிழ்ந்ததாம் என்று போன கிழமை தேவாலயத்தில் போதகர் பிரசங்கித்தார்.  அன்று முள்ளிவாய்க்காலிலும் இன்று அலப்பாயிலும் அழும் குழந்தைகளினதும் மனிதர்களதும் அழுகுரல் ஏன் அந்த யேசுவிற்கு இன்னும் கேட்கவில்லை? 

Friday, 16 December 2016

பரி யோவான் பொழுதுகள்: ஓடு ராசா ஓடு


1984ம் ஆண்டு ஆரம்பப் பிரிவில் Thompson இல்லத்திற்கும் Johnstone இல்லத்திற்கும் தான் கடும் போட்டி. இரண்டு இல்ல அணிகளும் மிகச்சிறந்த ஓட்டக்காரன்களை கொண்டிருந்ததால், எல்லாவித ரேஸ்களும் விறுவிறுப்பாக இருந்தன.  Johnstone இல்ல அணியில் கேர்ஷன், கண்ணதாசன், அன்புச்செல்வன், "வெள்ளை" சத்தியேந்திராவும் Thompson Houseல் ஜெய்மன், வரேந்திரன், "அட்டாக்" சசி, யோகதாஸும் இருந்தார்கள். எங்கட Handy Houseல் ஏகாம்பரநாதன் (பிரபு) மட்டும் தான் திறமான ஓட்டக்காரன். 


ஆரம்பப் பிரிவின் கடைசி வருட Sports Meet ஒரு சனிக்கிழமை மத்தியானம் March Past உடன் ஆரம்பித்தது. Layden Garments தயாரித்த vest அணிந்து, swan polish போட்டு மினுக்கிய வெள்ளைச் சப்பாத்துக் காலால் அணிவகுப்பு கலாதியாக நடந்தது. எங்களிற்கு March Pastல் மூன்றாவது இடமும், அது முடிய நடந்த Ball passingல் நாலாவது இடமும் கிடைத்தது. 


"அந்த" ரேஸிற்கான நேரம் நெருங்க இதயம் படபடக்க தொடங்கியது. "மச்சான், நாங்க இந்தமுறை நாலாவதா வாறதா மூன்றாவதா வாறது என்றது உங்கட கையில் தான் இருக்கு" என்று எங்கள் இல்லத்தின் கேப்டன் பிரபு உற்சாகப்படுத்தினான். முதல் இரு இடங்களிற்கும் Johnstone இல்லமும் Thompson இல்லமும் தான் போட்டியிட்டன. மூன்றாவது இடத்திற்கு எங்களிற்கும் Peto இல்லத்திற்கும் தான் போட்டி. "அப்ப இன்னும் கொஞ்சம் குளுக்கோஸ் தாடா டேய்" சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். 


கையில் பிடித்திருந்த Handy houseன் பெரிய பச்சை நிறக் கொடியை நண்பன் சத்தியரூபனிடம் கொடுத்து விட்டு "வரத் திரும்பத் தரோணும்" என்று சாதுவா வெருட்டி விட்டு, "அந்த" ரேஸிற்கு ஆயத்தமாகிறேன்.  ஒலிபெருக்கியில் மயில்வாகனம் மாஸ்டரின் சிம்மக் குரலில், "அந்த" ரேஸ் பற்றிய அறிவிப்பு வர, shot put பிட்ச் இருக்கும் physics lab அடிக்கு நகர்கிறேன். 


"அந்ந" ரேஸின் இறுதிப் போட்டிக்கு தெரிவான ஜவரில் இருவர் எங்கட ஹவுஸ், இறைவனும் நானும். டொக்டர்இறைவன் தற்பொழுது கொழும்பில் பிரபல மருத்துவர், சக்தி டீவியில் வலம் வருவார். Johnstone இல்லத்திலிருந்து கோபியும் (பிரபல யாழ்ப்பாண Orthopaedic surgeon) Pargiterவிருந்து ஓருத்தனும் Petoவிலிருந்து இன்னொருத்தனும் தெரிவாகியிருந்தார்கள். 


வெள்ளை நிற cowboy தொப்பியணிந்த மகாலிங்கம் மாஸ்டர், "on your mark" சொல்ல, மூன்றாவது லேனில் ஓடத்தயாரான எனக்கு முடிவு கோட்டை விட மிச்ச எல்லாம் கண்ணுக்கு தெரிந்தது. 


Robert Williams மண்டபத்தின் கரையில் அடுக்கப்பட்டிருந்த இளநீல நிற வாங்குகளில் அமரந்திருந்த பெற்றோர்கள், அவர்களிற்கு சூசியமும் வடையும் பரிமாறப்படுவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஜீவானந்தம் மாஸ்டர், முன்வாங்கில் வெள்ளையும் சொல்லையுமாக உடையணிந்து மிடுக்காக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அதிபர் ஆனந்தராஜா மாஸ்டர், தண்ணீர் தாங்கியடியில் அமர்ந்திருந்த மாணவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த துரைச்சாமி மாஸ்டர் என்று எல்லாருமே பார்வை வீச்சுக்குள் வந்தார்கள். 

மகாலிங்கம் மாஸ்டர் "set" சொல்லவும் பழைய பூங்கா பக்கம் ஹெலிகொப்டர் ஒன்று பறக்கவும், அந்த சத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெளவால்கள் திடுக்கிட்டெழும்பி மரத்தை விட்டு எழும்பி வானில் பறக்கவும் சரியாயிருந்தது. முகாம்களுக்குள்  ஆமி முடக்கப்படுவதற்கு முந்தைய காலமது. பழைய பூங்காவிலும் குருநகர் தொடர்மாடியிலும் இராணுவ முகாம்கள் இருந்தன. பழைய பூங்கா வீதியில் எப்போதும் இராணுவ நடமாட்டம் இருக்கும். 


"Go" சொல்லாமல் மகாலிங்கம் மாஸ்டர் வாயிலிருந்த விசிலால் விசிலடிக்க, "அந்த" ரேஸ் தொடங்கியது. ஆரம்பக் கோட்டிலிருந்து புயலென புறப்பட்டால், எனக்கு முன்னாலே கோபி பறக்கிறான். மற்றப்பக்கம் இறைவன் கோபியை கலைத்துக் கொண்டு போறான். போன வருடம் கோபிக்கு முதலாவது இடமும் இறைவனிற்கு இரண்டாவது இடமும் கிடைத்தது. ரேஸின் அரைவாசித் தூரமான புளியமரத்தடி தாண்ட, நான்காவது இடத்தில் ஓடிக்கொண்டிருந்த எனக்கு முடிவுக்கோடு வெகு தூரத்திலேயே தெரிகிறது. 


பழைய பூங்காப் பக்கமிருக்கும் குட்டிச்சுவரிற்கு மேலால, ஒரு இராணுவ ட்ரக் வலு வேகமாக போவது தெரிந்த அந்த கணத்தில் தான் அந்த அதிசயம் நடந்தது. எனக்கு இடப்பக்க லேனில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்த இறைவன் தடக்கப்பட்டு கீழே விழுந்துவிட்டான், கோபி இன்னும் முன்னிலையில். 


கடவுளே விழுந்து வழிவிட,  உடனடியாக மூன்றாவது இடத்திற்கும், பிரபு தந்த இரண்டாவது கரண்டி குளுகோஸின் சக்தியால் உந்தப்பட்டு, சில நொடிகளில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறுகிறேன். 


முடிவு கோட்டை நெருங்கியாச்சு, எங்கட இல்லத்தின் பச்சைக் கொடியை சத்தியரூபன் ஆட்டுவது தெரிகிறது, பிரபு "come on come on" கத்துவதும் கேட்கிறது. கோபி கோட்டை முதலாவதாக தாண்டப் போறான், அடுத்தது நான் தான்.


இன்றைக்கு இரண்டாவது இடம், ஹையா ஹையா, நான் சாதித்து விட்டேன். அந்த பச்சைக் கொடியின் நிழலில் நடந்து போய், இரண்டாவது பரிசை இன்னும் சில மணி நேரங்களில் வாங்கப் போகிறேன். தேவதாசன் மாஸ்டர் தான் அறிவிப்பார், ஆனந்தராஜா மாஸ்டர் கதிரையிலிருந்து கூர்ந்து கவனிப்பார், துரைச்சாமி மாஸ்டர் மேசையடியில் நிற்க பிரதம விருந்தினர் அந்த சான்றிதழை வழங்குவார், அதை பத்திரமாய் கொண்டு போய்... என்று கனவு கண்டு கவனத்தை சிதறடித்த அந்த சில கணங்களில்.. Pargiter இல்லக்காரன் கோபிக்கு அடுத்ததாக கோட்டைத் தாண்டிவிட்டான், பின்னால மூசிக்கொண்டு இறைவன் ஓடிவாற சத்தம் கேட்கிறது.


"கர்த்தரே என்னை கைவிடாதேயும்" என்று ஜெபிக்க "ஓடு ராசா ஓடு" என்ற கர்த்தரின் குரல் எதிரொலிக்கிறது. வியர்த்து, இளைத்து,  மூச்சிழைக்க, கோட்டைத் தாண்டுகிறேன். "சேர், இவர் தான் third" சந்திரமெளலீசன் மாஸ்டர் என்னுடைய கையை பிடித்துக் கொண்டு போய், "அந்த" ரேஸின் முடிவை பதிவு செய்கிறார். பிரபு குளுக்கோஸோடு ஓடி வாறான், பின்னால் கொடியோடு சத்தியரூபனும். 

Sack race என்ற "அந்த" ரேஸில் வென்ற பெருமிதத்துடன் பிரபு தந்த குளுகோஸை கையில் வாங்கி வாயில் போட்டு விட்டு, சத்தியிடமிருந்து மீண்டும் எங்கள் Handy இல்லத்தின் கொடியை பெருமையுடன் மீளபெற்றுக் கொள்கிறேன்.Friday, 9 December 2016

ஜெயலலிதா.. ஒரு பார்வை
"I must say it wasn't a pleasure talking to you"

... என்று, கண்ணிமைக்காமல் நேர்கொண்ட பார்வையுடன் சொல்லிவிட்டு, கை குலுக்க கையை நீட்டிய BBC Hardtalk ஊடகவியலாளர் Karan Thaparயோடு கைகுலுக்காமல், மைக்கை கழற்றி மேசையில் டொப்பென்று போட்டு விட்டு, விருட்டென்று எழுந்து செல்லும் ஜெயலலிதாவின் 2004ம் ஆண்டு நேர்காணல், அவரது துணிச்சல் மிகுந்த ஆளுமையின் வெளிப்பாடாக அமைந்தது. 

மீடியா இப்படி சொல்லுது, சனம் அப்படி சொல்லுது பாணி கேள்விகளை கேட்ட கரனிற்கு, பொத்துக்கொண்டு வந்த ஆத்திரத்தை வெளிக்காட்டாமல், ஆணித்தரமாக பதிலடி கொடுக்கும் ஜெயலலிதாவின் அந்த பேட்டியை பார்ப்பவர்களிற்கு ஜெயலலிதா மீது நிட்சயம் ஒரு பிரமிப்பு கலந்த ஈர்ப்பு ஏற்படும். 

இந்த நேர்காணலில், தன்னை ஏன் ஊடகங்கள் குறிவைக்கின்றன என்று  ஜெயலலிதா பின்வருமாறு விபரிப்பார்.

KT: (Intervenes) You’re saying that media picks on you?

JJ: I do think so.

KT: Because you are a woman?

JJ: I don’t think it’s because I am a woman. It’s because I don’t have a background like other women political leaders of Asia. If you’ll allow me to complete a sentence, Mrs. Indira Gandhi was born into the Nehru family. She was the daughter of Jawaharlal Nehru. Mrs. Srimavo Bandaranaiake was the wife of Bandaranaiake, Benazir Bhutto was the daughter of Bhutto, Khaleeda Zia was the widow of Zia-ur- Rehman. 

KT: What’s the point you are making?

JJ: Sheikh Haseena was the daughter of Mujibur Rehman. I have no such background. I’m a self made woman. Nothing was handed to me on a golden platter

----------------------------

1987 டிசம்பரில் MGRன் மரணச்சடங்கில்  பல்வேறு இழி பேச்சுக்களிற்கும் தள்ளல்களிற்கும் நுள்ளல்களிற்கும் மத்தியில், மணிக்கணக்கில் அவரது உடலின் தலைமாட்டில் நின்றதிலிருந்தும், பின்னர் அவரது பூதவுடல் தாங்கிச் சென்ற பீரங்கி வண்டியில் இருந்து தள்ளப்பட்டதிலிருந்தும், சில ஆண்டுகளிற்கு பின்னர் தமிழக சட்டசபையில் துயிலுரியப்பட்டு அவமானப்பட்டதிலிருந்தும் ஆரம்பமான ஜெயலலிதாவின் சவால்கள் நிறைந்த அரசியல் பயணம், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவிற்கு வந்தது. 


இந்திய இராணுவம் ஈழத்தில் கொலைத் தாண்டவமாடிய 1987-89 காலப்பகுதியில் விடுதலைக் புலிகளின் பிரதிநிதிகளை சென்னையில் சந்தித்ததை பகிரங்கமாக அறிவித்த ஜெயலலிதா, இந்தியப் படைகளின் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும் கோரியிருந்தார். விடுதலைப் புலிகளிற்கு பகிரங்கமாக தனது ஆதரவை அறிவித்தும் இருந்தார். 1990 ஒக்டோபரில், பத்மநாபாவினதும் அவரது தோழர்களதும் படுகொலைகளிற்கு பின்னரும் புலிகள் தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடவில்லை என்று செவ்வியளித்தார். 


1990 டிசம்பரில் விபி சிங் அரசு கவிழ்ந்து, சந்திரசேகர் மத்தியில் ஆட்சி கட்டிலேற, மாநில திமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற ஒரே தன்னல நோக்கத்திற்காக புலி எதிர்ப்பாளராக ஜெயலலிதா அவதாரம் எடுத்தார். திமுகவிற்கும் புலிகளிக்குமிடையிலான தொடர்புகளை ஆவணப்படுத்தி, சுப்ரமணிய சுவாமியோடு இணைந்து ஜெயலலிதா சமர்ப்பித்த 101 பக்க அறிக்கை 1991 ஆரம்பத்தில் கலைஞரின் ஆட்சிக்கு உலை வைத்தது. 


May 21, 1991ல் ரஜீவ் படுகொலை நடந்த அடுத்த மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருந்த ஜெயலலிதாவின் அதிமுக அமோக வெற்றி பெற, தனது 43வது வயதில் தமிழ்நாட்டின் வரலாற்றில் வயதில் குறைந்த முதலமைச்சராக ஜெயலலிதா அரியணை ஏறினார். 


புலிகளை தமிழகத்திலிருந்து அகற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகளைக் (extra judicial killings) கூட செய்யுமாறு, தனது அதிகாரிகளுக்கு இக்காலப்பகுதியில் ஜெயலலிதா உத்தரவிட்டதாக, Wikileaks தகவல்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியதன் மூலம் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியதாக ஜெயலலிதா பெருமையும் பட்டுக்கொண்டார்.


ஊரைக் கொள்ளையடித்த ஊழல், வளர்ப்பு மகனின் படோபகார திருமணம் என்பவற்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" என்ற சன் டீவி பேட்டியின் தாக்கத்தாலும், திமுகாவோடு கூட்டணி அமைத்த மூப்பனாரின் செயற்பாட்டாலும் 1996 தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். 


2001 தேர்தலில் ஜிகே மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜெயலலிதாவோடு கூட்டணி அமைக்க, அதிமுக யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியை பிடித்தது. ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மீளாத ஜெயலலிதா முதலமைச்சராவதை உச்சநீதிமன்றம் தடுக்க, ஓ பன்னீர்செல்வம் "நிழல்" முதல்வராக பதவியேற்றார். 


பெப்ரவரி 22, 2002ல் ரணில்-பிரபா ஒப்பந்தம் கைச்சாத்தாகி எட்டாம் நாள், ஜெயலலிதா  ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். ஏப்ரல் 10, 2002 அன்று கிளிநொச்சியிலில் நடந்த தலைவரின் ஊடகவியலாளர் மாநாட்டை தமிழக தொலைக்காட்சிகள் அனைத்தும் ஓளிபரப்பி
தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை தலைவரின் பால் ஈர்க்க, ஜெயலலிதாவிற்கு எரிச்சல் உச்சியில் கொதித்தது.  


ஆறு நாட்கள் கழித்து, ஏப்ரல் 16, 2002ல், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தலைவர் பிரபாகரனை "உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று ஜெயலலிதா அனல் பறக்க பேசினார்.


சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், சென்னை ஊடாக வன்னி செல்லவும் சென்னையில் மருத்துவ உதவி பெறவும் விடுத்த கோரிக்கையையும் இதற்கு சில வாரங்களிற்கு முன்னர் ஜெயலலிதா நிராகரித்திருந்தார். இதனாலேயே பாலசிங்கம் மாலைதீவிலிருந்து நேரடியாக இரணைமடுக் குளத்தில் சென்று இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிறுபான்மை திமுக ஆட்சியை பிடிக்க, ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் தஞ்சமடைந்தார். 2009ன் ஆரம்பத்தில் வன்னியுத்தம் உச்ச கட்டத்தை அடைய, மே நடுப்பகுதிக்கு இந்திய பொதுத் தேர்தலிற்கு நாள் குறிக்கப்படுகிறது. 


2009 ஜனவரியில் "யுத்தமென்றால் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள்" என்று கருத்து வெளியிட்ட ஜெயலலிதா, மார்ச் மாதமளவில் "தமீழீழத்தை பெற்றுத் தருவேன்" என்ற நிலைபாட்டிற்கு மாறியிருந்தார். மார்ச் மாதம் சேப்பாக்கம் மைதானத்தில் காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமரந்திருந்து ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தது தமிழனத்தை நெகிழ வைத்தது. 


ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியில் நம்பிக்கை வைத்திருந்த அவரது  தேர்தல் கூட்டாளியான வைகோ போன்ற ஏமாளிகளின் தவறான நம்பிக்கையூட்டங்களின் மத்தியில், 18 மே 2009ல் தமிழீழப் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பலத்த இழப்புக்களோடு மெளனிக்கப்பட்டது.  


2011லும் 2016லும் மீண்டும் மீண்டும் ஆட்சியிலமர்ந்த ஜெயலலிதா, ஈழத்தமிழர்களிற்கான தனது கரிசனையை சட்டமன்ற தீர்மானங்களோடு மட்டுப்படுத்திக் கொண்டார். ஐநா தீர்மானத்திற்கான ஆதரவான தீர்மானமாகட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானம் ஆகட்டும் , இலங்கை கிரிக்கெட் வீரர்களை சென்னையில் விளையாட அனுமதியாமையாகட்டும், அனைத்துமே தமிழர்களின் விடிவிற்கு உறுதுணையாகவும் அரணாகவும் அமைந்தன. 


கடந்த ஏழு ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவர் கடைபிடித்த கொள்கைகளில் மாற்றம் இருக்கவில்லை. இதுவரை அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மார்ச் 2009ல் அவரில் ஏற்பட்ட மாற்றம் அவரின் இறுதி நாட்கள் வரை நீடித்தது மட்டுமல்லாது, இதே காலப்பகுதியில் கபட நாடகம் ஆடிய கருணாநிதியிலிருந்து ஜெயலலிதாவை பிரித்தும் காட்டியது. 


மரித்தோரை மதிக்க வேண்டும் என்பது எமது மரபு. மரித்தோரைப் பற்றி அளவுக்கதிகமாக புகழாமல் இருப்பதும், குறைகளை பேசாமல் இருப்பதும் மரித்தோரை மதிக்கும் மரபில் அடங்கும்.  அதே வேளை மரித்தோரின் தவறுகளை வரலாறு மன்னிக்காது, குறிப்பாக ஒரு இனத்தை, தங்களின் சுய அரசியல் லாபத்திற்காக பலிக்கடாவாக்கியவர்களை வரலாறு என்றும் மன்னிக்காது. 

----- 

1996ல் Simmi Garewalற்கு ஜெயலலிதா ஒரு அழகான தொலைக்காட்சி பேட்டியளித்தார். ஒரு அழகிய உரையாடல் வடிவில் அமைந்த இந்த பேட்டியில், தனது குழந்தைப் பருவம், இளமைக்காலம், சினிமா வாழ்க்கை, அரசியல் பயணம் என்பன பற்றி மனந்திறந்து ஜெயலலிதா பேசுவார். MGR உடனான உறவு பற்றிய கேள்விக்கு கூட நேரடியாக பதிலளிப்பார், பேட்டியின் இறுதியில் தன்னை யாரும் இப்படியான கேள்விகள் கேட்க துணிந்ததில்லை என்று புன்முறுவலோடு சிம்மியை பாராட்டுவார். 


ஜெயலலிதாவின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் இந்தப் பேட்டியில், சிமியோடு இணைந்து ஜெயலலிதா ஆஜா சனம் என்ற தன்னுடைய விருப்பத்திற்குரிய இந்திப்பாடலையும் பாடி அசத்துவார். பேட்டியில் கிரிக்கட் வீரர் நரி கொன்ட்ரக்கடர் மற்றும் நடிகர் ஷமிதா கபூர் ஆகியோர் மீது ஓரு பள்ளி மாணவியாக தனக்கு இருந்த ஈர்ப்பு பற்றி கூறும் போது வெட்கப்படும் ஜெயலலிதா, தன்னுடைய அம்மா பற்றிய நினைவுகளை பகிரும் போது 
கண்ணில் துளிர்விடும் கண்ணீரை கண்களாலேயே கட்டுப்படுத்துவார்.

SG: do you think you intimidate men?

JJ: you must ask them.. I think i do (laughs)


வாழ்வில் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி, மீண்டும் மீண்டும் ஆறுதடவைகள் தமிழக மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா எனும் ஆளுமை பற்றிய இனிய எண்ணங்களை மனதில் பதிவு செய்யும் ஒரு அழகிய நிகழ்ச்சியாக Simi Garewellன் இந்த Rendezvous நேர்காணல்  அமைகிறது.


ஆடும் வரை ஆடிவிட்டு 
அல்லி விழி மூடம்மா

Links

Friday, 2 December 2016

மகனும் நானும்....
மகள்மாரைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள், மகன்மாரைப் பெற்ற அப்பாக்கள் புண்ணியவான்கள்

நேற்றுக் காலை என்னுடைய மூத்தவனின் Primary school graduationல் கலந்து கொண்ட போது கண்கள் ஏனோ பனித்தன. உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வை உணரமுடிந்ததே தவிர, உணர்வின் ஊற்றைத் தேட மூளை மறுத்துவிட்டது. "My baby has become a boy" என்று மண்டைக்குள் ஒரு குரல் கேட்டது.


சாதுவாக மழைத் தூறிக் கொண்டிருந்த புரட்டாசி மாதத்தின் ஒரு செவ்வாய்க்கிழமை மாலைப் பொழுதில், கைக்குழந்தையாய் அவனை முதன்முதலாக கரங்களில் தாங்கினேன். உருண்டு, பிரண்டு, நடந்து, ஓடி, விழுந்து அவன் கண்முன் வளர வளர, வாழ்வில் ஒரு புதுவசந்தம் தவிழ ஆரம்பித்தது.


அம்மா சொல்ல முதல் அப்பா சொல்லி, சொற்கள் வாக்கியங்களாகி, வாக்கியங்கள் கேள்விகளாக தொடங்க, Thomas the Tank Engineல் தொடங்கிய அவனுடனான சம்பாஷணைகள் இன்று Cricket வரை வளர்ந்துவிட்டது. 


ஏழு ஆண்டுகளிற்கு முன்னர் இதே பள்ளியில், ஒரு அழகிய காலைப் பொழுதில், அவனை வகுப்பில் கொண்டு வந்து சேர்த்ததும் இன்று நினைவில் நிழலாடியது. பள்ளியில் முதல்நாள், காரிலிருந்து இறங்கி எனது கையைப் பிடித்துக்கொண்டு வந்தவன், வகுப்பறை வாசலில் எனது கையை விட்டு விட்டு, தனக்கென ஒதுக்கப்பட்ட கதிரையில் அவன் போய் அமர, கண் முட்டி கண்ணீர் வந்தது எனக்குத் தான், அவனுக்கல்ல. 


அடுத்து வந்த ஆண்டுகளில் வகுப்பறையில் கொண்டு போய் விட்ட காலம் போய், காரில் drop off பண்ணும் காலமும் வந்தது. காரிலிருந்து இறங்கி பார்வையால் bye சொல்லிவிட்டு அவன் பள்ளிக்கு போவான். இரவு வீடு வந்து "பள்ளிக்கூடத்தில் என்னடா நடந்தது" என்று கேட்க "nothing" என்று மொட்டையாய் பதில் சொல்வான். 


கிழமையில் நான்கு நாட்கள் பெடியளை பள்ளிக்கூடத்தில் விடும் இனிய பொறுப்பை மகிழ்வோடு நிறைவேற்றினேன். "When the sun shines in the morning and the night is on the way, it's a new day and a new way" என்று ஒவ்வொரு நாளும் நான் பாட, அவங்கள் பேசாமல் கேட்பாங்கள். பதினைந்து நிமிஷ ஓட்டத்தில் பள்ளிக்கூடம் வரமுதல், நாங்கள் ஜெபித்து விட்டு, cricket அல்லது footy பற்றி கதைப்பம். சில நாட்களில் அப்பாவின் அறிவுரை நேரமாகவோ அல்லது அப்பாவின் நனவிடை தோய்தல் பொழுதாகவோ அந்த பதினைந்து நிமிடங்கள் அமைந்துவிடும். ஒவ்வொரு நாளும் நான் விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக கருதும் பதினைந்து நிமிடங்கள் அவை. 


பள்ளியின் ஆராதனை வழிபாடுகளில் அவன் கர்த்தரை ஸ்தோத்தரிப்பதை கண்டு நெகிழ்ந்ததும், மேடை நிகழ்வுகளில் அவனை கண்டு ரசித்ததும்,  இசைக் குழவில் கிட்டாரோடு அவனைக் கண்டு மகிழ்ந்ததும், ஆண்டிறுதி பரிசளிப்பு விழாவில் விருதுகள் பெறும் போது பெருமைப்பட்டதும், விருது பெறாத போது கலங்கியதும் என்று ஏழு ஆண்டுகள் பறந்தோடி விட்டன. 


பதின்மத்திற்குள் மகன் நுழைய எங்கள் வாழ்வும் அடுத்த கட்டத்திற்குள் முன்னேறுகிறது. புலம்பெயர்ந்த பெற்றோருக்கு புலம்பெயர் நாட்டில் பிறந்த தலைமுறை, பதின்ம பருவத்தில் எதிர்நோக்கப் போகும் சவால்களை சந்திக்கும் களமாக இனிவரும் ஆண்டுகள் அமையப் போகின்றன. 


வேகமாக மாறிவரும் உலக அரங்கில், எந்த துறையை தேர்ந்தெடுத்து வாழ்வை நிலைநிறுத்துவான் என்ற எண்ணம் ஒருபக்கம் அலைபாய, என் குழந்தை, இல்லை,  என்ர பெடியனும், காதல் வயப்படுவானா? தமிழ் பெட்டை அல்லாத வேறொருத்தியை காதலித்தால்?... இப்படி அவசியமேயில்லாமல் மனம் இன்னொரு பக்கம் அல்லாட, வாழ்வு எனும் இனிய பயணம் தன்டபாட்டிற்கு தொடர்கிறது.


மகன் என்ற பந்தத்தில் எத்தனையோ இன்பங்கள் நிறைந்திருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இதுவரை அவன் என்னை திட்டவில்லை. பிறந்த நாளிலிருந்து அம்மாட்ட ஏச்சு வாங்கி, அப்பாட்ட அடிவாங்கி, வாத்திமாரிடம் மொத்து வாங்கி, வேலைத் தளத்தில் பொஸ்ஸிடம் கிழி வாங்கி, வீட்ட வந்து மனிசிட்டயும் பேச்சு வாங்கி வாழும் வாழ்க்கையில், திட்டாத ஒரு உறவு இருக்குமென்றால், அது திகட்டும் தானே. 

மகன்மாரைப் பெற்ற அப்பாக்கள் புண்ணியவான்கள்!