Friday, 25 November 2016

மாவீரர் யாரோ என்றால்....
"மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது,
நான் முன்னுக்கு போகப் போறன்,
என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா"

ஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர் நண்பர்களோடு பலமுறை விரிவாக கதைத்திருந்த சிவகுமரனின் இந்த கடைசி  அழைப்பு,  ஓரிரு நிமிடங்களே நீடித்தது. 

----------------------------------------------------------------------------------------------------------------------

1984ல், பரி யோவானில் இணைந்த சிவகுமரன் எல்லோரோடும் பம்பலாக பழகுவான். தேவதாசன் மாஸ்டர் வகுப்பாசிரியராக இருந்த Grade 5Aல் தான் சிவகுமரன் அறிமுகமானான். எங்களது வகுப்பறை பிரின்ஸிபல் ஒஃபிஸிற்கு முன்னால் இருந்த கொட்டகையில் இருந்தது. இப்பொழுது அந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு புதிய கல்லூரி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 


சிவகுமரனின் நட்பில் வாஞ்சை மிதமிஞ்சும், வஞ்சகம் எள்ளளவும் இருக்காது.  சிவகுமரன் விடும் குழப்படிகள்,  தானும் அடிவாங்கி மற்றவர்களுக்கும் அடிவாங்கிக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. சிவகுமரனின் சொந்த ஊர் நயினாதீவு என்பதால், அவனுக்கு நைனா என்ற பட்டபெயர் ஒட்டிக் கொண்டது. சிவகுமரனின் நகைச்சுவை கலந்த பம்பல்களால், இலங்கை வானொலியின் பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான நானா மரிக்காரை நினைவில் வைத்து, நைனா மரிக்கார் என்ற பட்டப் பெயரையும் பெற்றான். 


சிவகுமரனிடம் சிக்கி கந்தசாமி மாஸ்டர், காசிநாதன் மாஸ்டர் போன்ற அப்பிராணி வாத்திமார் பட்ட அவஸ்தை சொல்லிலடங்காதவை. நைனா ஒரு சிறந்த ராஜதந்திரி, "பயங்கரவாத" வாத்திமாரிடம் தன்னுடைய வாலை சுருட்டிக் கொள்வான். இந்த பயங்கரவாத வாத்திமார் லிஸ்டில், தேவதாசன், கதிர்காமத்தம்பி, பிரபாகரன், தனபாலன், சரா தாமோதரம், டோனி கணேஷன் மாஸ்டர்மார் அடங்குவினம். சந்திரமெளலீசன் மாஸ்டரின் வகுப்புகளில் நைனா விடும் சேட்டைகளை அவரும் சேர்ந்து ரசிப்பதால் வகுப்பு கலகலப்பாகும். 


எங்கட வகுப்பிற்கு duty பார்க்க வாற prefectsஐயும் நைனா வாட்டி வதைப்பான். பத்தாம் வகுப்பில் "ஐசே ஏன் நிற்கிறீஈஈஈர்" நிருபனும்,  Lower VIல் "எடுவை" ஐங்கரனும் சிவகுமரனின் குழப்படிகளை கட்டுப்படுத்த முடியாமல் திக்கு முக்காடினார்கள். 


-------------------------------------------------------------------------------------------------------------------

1988ம் ஆண்டு பரி யோவான் மைதானத்தில், ஒரு சனிக்கிழமை, பற்றிக்ஸ் அணிக்கெதிரான u17 ஆட்டம் நடைபெறுகிறது. பரி யோவான் அணியின் தலைவர் சதீசன், அரைச்சதம் தாண்டி நூறு ஓட்டங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். பழைய பூங்கா பக்கம் இருக்கும் பொன்னுத்துரை பவிலியனிலிருந்து சிவகுமரனோடு நானும் சில நண்பர்களும் மட்ச் பாரத்துக் கொண்டிருந்தோம். 


"மச்சான், காசை எடுங்கடா, சதீசன் செஞ்சரி அடிக்க சோடா குடுப்பம்" நைனா வினையை விலைக்கு வாங்க திட்டம் போட்டான். மைதானத்தில் மட்ச் நடக்கும் போது, மைதானத்திற்குள் ஓடுவது என்பது பரி யோவானின் கடும் ஒழுக்க விதிகளிற்கு முரணாணது, பாரிய குற்றம்.


"மச்சான், பிடிபட்டோமென்றா பிரின்ஸிபலிடம் தான் கொண்டு போய் நிற்பாட்டுவாங்கள்" எவ்வளவோ எச்சரித்தும், விடாப்பிடியாக சதீசன் செஞ்சரி அடிக்க சோடா கொடுப்பதில், நைனா உறுதியாக நின்றான்.


"டேய், நீங்க சோடா வாங்க காசு போடுங்கோ, நான் கொண்டு ஓடுறன்" என்றான் சிவகுமரன். பின்னாட்களில் வெளிநாடுகளிலிருந்து நாங்கள் காசு அனுப்ப, அவன் தாயகத்தில் களமாடப் போகும் வரலாற்றை கட்டியம் கூறுவதாக அந்த சம்பவம் அமையப் போகிறது என்று  அன்று நாங்கள் உணரவில்லை.


நைனா அடம்பிடிக்க தொடங்கினால் யாராலும் சமாளிக்க ஏலாது. வேண்டா வெறுப்பாக எல்லோரும் சேர்ந்து காசு போட்டு, செரில்ஸிற்கு போய் நெக்டோ வாங்கி வந்து, மீண்டும் பழைய பூங்கா பக்கத்தில் போய் மட்ச் பார்க்கத் தொடங்கினோம். 


சதீசன் நூறடிக்க, சிவகுமரன் மைதானத்திற்குள் ஓடிப் போய், நடுப் பிட்சில் வைத்து சதீசனிற்கு சோடா கொடுத்தான்.  "ஐசே, இப்படி செய்யக் கூடாது" என்று நடு பிச்சிலும் சதீசன் அன்பாக கண்டித்துவிட்டு, ஒரு மிடாய் சோடா குடித்தார்.


திரும்பி பழைய பூங்கா பக்கம் வராமல், டைனிங் ஹோல் பக்கம் தப்ப ஓடிய சிவகுமரனை ஏற்றிக் கொண்டு பிரின்ஸிபல் பங்களாவிற்கு செல்ல புவனரட்ணம் மாஸ்டர் சைக்கிளோடு தயாராக நின்றார். 

-----------------------------------------------------------------------------------------------------------------

Big Match வென்ற 1990 பரி யோவான் கிரிக்கெட் அணியில் சிவகுமரன் 12th man. சிவகுமரன் மிகச்சிறந்த fielder. Big Matchல் அணியில் விளையாடிய பதினொரு பேரிடமும் தன்னை எப்படியாவது field பண்ண விடுமாறு வலியுறுத்திக் கேட்டிருந்தான். 


இரண்டாம் நாள் மத்தியானம், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய சென்ரலின்  எட்டாவது விக்கெட் விழுந்து, பரி யோவான் அணி வெற்றியின் விளிம்பில் நிற்க, மைதானத்திற்குள் நுழைந்த  பரி யோவான் பழைய மாணவர்கள், "கடைசி விக்கெட் விழுந்ததும் dressing roomற்கு ஓடுங்கடா, அடி விழும், கவனம்" என்று அணியை எச்சரித்தார்கள்.


இதைக் கேட்டு பயந்த விபீஷ்ணா, அடுத்த ஓவரே, கையை காட்டி, சிவகுமரனை கூப்பிட்டு field பண்ணவிட்டு விட்டு தான் மைதானத்திலிருந்து தப்பி வெளியேறினான். பின்னாட்களில் நண்பர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட, சிவகுமரன் தாய் மண்ணில் களமாடப் போகும் காலங்களை உணர்த்திய சம்பவமாக இதுவும் அமைந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------

1990ம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரிக்கெதிராக பரி யோவான் மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் சிவகுமரன் பிடித்த கட்சை  கேர்ஷன் ஞாபகப்படுத்தினான். "மட்ச் முடியிற நேரம், யாரோ வெளியே வர,  சிவகுமரனை field பண்ண இறக்கினாங்கள். Water tank பக்கமிருந்த boundary லைனில் சிவகுமரன் ஓடிப் போய் ஒரு அந்த மாதிரி கட்ச் எடுத்தான்டா. இன்றைக்கும் என்ட கண்ணுக்குள் நிற்குது" என்றான் கேர்ஷன். 


அதே ஆண்டில் இடம்பெற்ற இரு வேறு ஆட்டங்களில் ஸ்லிப்ஸில் சிவகுமரன் எடுத்த கட்ச் பற்றி சிறிபிரகாஷும், சிவகுமரன் எடுத்த ரன் அவுட் ஒன்றைப் பற்றி அருள்மொழியும் நினைவுறுத்தினார்கள். 


இந்தாண்டு  நாங்கள் Big Match பார்க்கப் போகும் போது, Big Matchல்  Best Fielderற்கான விருதை சிவகுமரன் ஞாபகார்த்த விருதாக வழங்கப்பட SJC 92 லண்டன் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தது நெகிழ வைத்தது. 

---------------------------------------------------------------------------------------------------------------

1990ம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்தம் மீண்டும் தொடங்கியது, எங்களின் பரி யோவான் பாடசாலை வாழ்க்கையும் சிதைந்து போனது. இயக்கம் Open பாஸ் அறிவித்த நாட்களில் நாங்கள் கொம்படி வெளி கடந்து கொண்டிருக்க, சிவகுமரன் இயக்கத்தின் பாசறையொன்றில் போராளியாக மாறியிருந்தான். 

------------------------------------------------------------------------------------------------------------------

1994 டிசம்பரில், சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலப்பகுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றிருக்கும் போது, நான் வந்திருப்பதை அறிந்து தேடி வந்து சந்தித்தான். பரி யோவான் மைதானத்தின் ஓரத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மைதானத்தின் புற்தரையில் அமர்ந்திருந்து  யசியோடும் என்னோடும் பழைய குழப்படிகளை இரை மீட்டான்.


இயக்கத்தில் சிவகுமரனின் வளர்ச்சி துரிதமாக நடந்தது. அந்தக் காலப்பகுதியில் கலை பண்பாட்டு கழகத்தின் துணை பொறுப்பாளராக செயற்பட்ட சேரலாதன், அடுத்த நாள் யசி வீட்டில் மத்தியான சாப்பாட்டிற்கும் எங்களோடு இணைந்து கொண்டான்.  தன்னுடைய கோப்பையிலிருந்து எடுத்து எங்களிற்கு சோறு ஊட்டிவிட்டு நட்பு பாராட்டிய அந்த கணங்களை மறக்கவே இயலாது.

--------------------------------------------------------------------------------------------------------------

2002 நவம்பரில், மாவீரர் நாளிற்கு சில நாட்களுக்கு முன்னர், சிவகுமரனை மீண்டும் கிளிநொச்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிக்கூட காலத்தில் மெல்லிய உருவமாக இருந்த சிவகுமரன், நல்லா கொழுத்து தடியனாக மாறியிருந்தான். இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனாக, நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பனை கண்டு பெருமைப்பட்டேன்.


"டேய் மச்சான், உன்னை இயக்கத்தில் இவ்வளவு காலம் எப்படிடா வச்சிருந்தவங்கள்" என்று பம்பலாக ஒரு  மூத்த தளபதி முன்னிலையில் கேட்க, அந்த மூத்த தளபதி சேரலாதனிற்கு இயக்கம் "காத்து கழற்றிய" கதையை சொல்லி சிரித்தார். சிவகுமரனும் சளைக்காமல் தனக்கேயுரிய இயல்பான நக்கலுடன் திருப்பி தாக்கி அந்த பொழுதை இனிமையாக்கினான்.  

------------------------------------------------------------------------------

2005 நவம்பர் மாதம் 1ம் திகதி

யுத்த மேகங்கள் சூழத்தொடங்கியிருந்த காலம், இயக்கம் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட தனது அரசியல்துறை உறுப்பினர்களை வன்னிக்கு மீள அழைத்திருந்தது. திருமண நிகழ்வொன்றிற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, சிவகுமரனை சந்திக்க கிளிநொச்சி நோக்கி பயணமானேன். 


"முகமாலைக்கு வாகனத்தோடு ஆளனுப்புறன், நீ பாஸ் எடுக்காமல் வா" என்று அவன் சொல்லியும் கேட்காமல், முறையாக பாஸ் எடுத்து கிளிநொச்சி போய் சேர, "சொன்னா கேட்கமாட்டாய், போ..போய் நந்தவனத்தில் மினக்கிடு" என்று கடிந்து கொண்டான். 


நந்தவனத்தில் அன்று கடமையிலிருந்த தம்பி நாங்கள் படித்த காலத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்தவர், சுணங்காமல் பாஸ் தந்து அனுப்பினார். அன்று சிவகுமரனோடு பாண்டியன் சுவையகத்தில் நாட்டுக் கோழிக் குழம்போடும் கணவாய்க் கறியோடும் மத்தியான சாப்பாடு சாப்பிட்டேன். 


மத்தியானம் சிவகுமரனின் வீட்டில் பழைய கதைகள் கதைத்துக் கொண்டே, இந்திய இலங்கை அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்றைய ஆட்டத்தில் ட்ராவிட்டும் தோனியும் இணைந்து கலக்கினார்கள். 


மட்சை பார்த்துக் கொண்டே "மச்சான் அவன் எங்க இருக்கிறானடா, மச்சான் இவன் எப்படி இருக்கிறான்டா, டேய், அந்த நாயை என்னை தொடர்பு கொள்ள சொல்லு" என்று எங்களோடு படித்த நண்பர்களை பற்றி சிவகுமரன் அக்கறையாக விசாரித்தான். 


தேத்தண்ணி குடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு, அவனது அலுவல் நிமித்தம் தர்மேந்திரா கலையகத்திற்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கிருந்த போராளிகளை அதட்டினான், பின்னர் அவர்கள் தோள் மேல் கை போட்டு "என்னடா வெருண்டிட்டயளோ" என்று மறுமுகம் காட்டினான்.


முகமாலை மூடும் நேரம் நெருங்க, நான் விடைபெற ஆயத்தமானேன். என்னை இறுக்கிக் கட்டிப்பிடித்து தழுவி விட்டு, "இனி எப்ப சந்திப்பமோ தெரியாது மச்சான், நீ தொடர்பில இரு" என்று சிவகுமரன் சொன்ன சொற்களில் சோகம் குடிகொண்டிருந்தது. -------------------------------------------------------------------------------------------------------------

2009 ஏப்ரல் மாதம் 6ம் நாள்

நடுச்சாமம் Skype அலற, பதறியடித்து எழும்பினேன்.
"அண்ணா, எல்லாம் முடிஞ்சுது, உங்கட friend சேரலாதன் அண்ணாவும்..." எந்த செய்தியை கேட்கக் கூடாது என்று கர்த்தரை தினமும் மன்றாடினோ, அந்த செய்தி செவிப்பறைகளில் ஓங்கி ஒலித்து, இதயத்தை பிளந்தது.

------------------------------------------------------------------------------------------------------------------

ஊர் வாழ வேண்டுமென்றே,
உன்னத ஆர்வம் கொண்டோர்,
ஏராளமான துயர்,
எண்ணங்கள் தாங்கி நின்றோர்

மாவீரர் யாரோ என்றால்.....

----------------------------------------------------
Friday, 18 November 2016

Dravid

இன்றிரவு கடவுள் தோன்றி, நாளை உன்னோடு அந்த மாதிரி  ருசியான  மட்டன் கொத்துரொட்டி சாப்பிட, உனக்கு விருப்பமான மூன்று பேரை சொல்லு, கொண்டு வந்து நிற்பாட்டுறன் என்று வரம் தந்தால், பதில் டக்கென்று வரும்.


முதலாவது, அநீதிக்கெதிராக போராட துணிவும்,  தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தையும்  உணர்வித்த தேசிய தலைவர் பிரபாகரன். இரண்டாவது கனவானாக (Gentleman) வாழ்வது எப்படி என்று களத்திலும் வாழ்விலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ராகுல் ட்ராவிட் மற்றது எங்கட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


ஜனவரி 11, 1973ல் பிறந்த இரண்டாம் நம்பர் காரனான ராகுல் ஷரத் ட்ராவிட், எனது அபிமான கிரிக்கட் வீரர் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ட்ராவிட் என்னுடைய role model & inspiration.  ட்ராவிட் ஆடுகளத்தில் ஆடும் விதம் அவரது ஆளுமையை வெளிப்படுத்தும். ஆடுகளத்திற்கு வெளியே ட்ராவிட் வாழும் விதம், எளிமையின் எடுத்துக்காட்டு. 


"ட்ராவிட் ஒரு பசையல் மன்னன், நொட்டிக் கொண்டு நிற்பான்டா, அவனைப் போய் நீ..."என்று சொன்ன நண்பர்களும் "ட்ராவிட் இஸ் போரிங்.." சொன்ன தோழர்களும் சூழ இருந்து வசை பாடி அழவைத்தும், ட்ராவிட்டை தொடர்ந்து ஆராதித்தேன். ட்ராவிட்டில் வெளிப்பட்ட கடின உழைப்பும், அணிக்காக விளையாடும் சுயநலமற்ற அர்ப்பணிப்பும், எளிமையான கனவான் தனமும் ட்ராவிட்டில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணமாயின. 


1996ம் ஆண்டு மார்ச் மாதம் உலக கிரிக்கெட் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் படுகேவலமாக இந்திய அணி இலங்கை அணியிடம் தோற்க, அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.  உலக கோப்பையில் சொதப்பிய அழுகுணி காம்பிளியை தூக்கிவிட்டு ட்ராவிட்டை அணியில் இணைத்தார்கள்.


அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான சிங்கர் கிண்ண ஒரு நாள் ஆட்டத்தில், மெல்லிய மீசையோடு, No 4ல் தனது முதலாவது ஆட்டத்தில் களமிறங்கிய ட்ராவிட், மூன்று ஓட்டங்களை எடுத்த நிலையில் முரளியின் பந்துவீச்சில் களுவிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். Leg side போன பந்தை, வினையை விலைக்கு வாங்குவது போல், பந்திற்கு நோகாமல் மென்வலு கொண்டு தட்டி விட, களுவிதாரண ஒரு குருட்டு கட்ச் பிடித்தார்.2000களின் ஆரம்பத்தில் தோளில் ஏற்பட்ட  காயத்திற்கு சிகிச்சை பெற மெல்பேர்ண் வந்திருந்த முரளியோடு சில மணித்துளிகள் கதைக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அப்பொழுது முரளியிடம் ட்ராவிட்-டென்டுல்கர் பற்றி கேட்டபோது "டென்டுல்கரை கழற்றலாம், ட்ராவிட்டை அசைக்க ஏலாது" என்று சொன்னார். (ஓமடா முரளி தமிழில் தான் சொன்னார்.)


1996 ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு எதிராக, கிரிக்கட்டின் புனித பூமியான Lordsல் நடந்த இரண்டாவது  டெஸ்ட் போட்டி தான் கங்குலிக்கும் ட்ராவடிற்கும் முதலாவது டெஸ்ட். முதலாவது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்திடம் தோற்க, பசையல் மன்னன் மஞ்ச்ரேக்கரையும் ஸ்பின்னர் ஜோஷியையும் அணியிலிருந்து தட்டிவிட்டு கங்குலியையும் ட்ராவிட்டையும் களமிறக்கினார்கள். 


மஞ்ச்ரேக்கர் ஆடிய No 3ல் கங்குலி இறங்க, டென்டுல்கர், அஸாருதீன், அஜய் ஜடேஜாவிற்கு பிறகு No 7ல் ட்ராவிட் களமிறங்கினார். ட்ராவிட் இறங்கும் போது அணியின் நிலை 202/5, மறுமுனையில் கம்பீரமாக கங்குலி கலக்கிக் கொண்டிருந்தார். தனது முதலாவது டெஸ்ட் ஆட்டத்திலேயே 131 ஓட்டங்களை எடுத்து கங்குலி 296/6ல் ஆட்டமிழந்தார். 


வியர்த்து விறுவிறுத்து, நொட்டி, தட்டி, ஓடி ஓடி, சிங்கிள் சிங்கிளா எடுத்து, குருவி சேர்ப்பது போல் ரன்கள் குவித்து, கும்ப்ளேயோடும்  சிறிநாத்தோடும் மாம்பேரியோடும் மல்லுக்கட்டி,  9வது விக்கெட்டாக ட்ராவிட் ஆட்டமிழக்கும் போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 419/9. ட்ராவிட்  95 ஓட்டங்கள் அடிக்க எடுத்துக் கொண்ட பந்துகள் 267. உலக கிரிக்கட் அரங்கிற்கு தனது வரவை அறிவித்த இன்னிங்ஸாக, ட்ராவிட்டின் முதலாவது லோர்ட்ஸ் டெஸ்ட் இன்னிங்ஸ் அமைந்தது. 


ட்ராவிட்டின் அப்பா ஒரு Jam தொழிற்சாலையில் முகாமையாளராக வேலை செய்ததால், ட்ராவிடிற்கு Jammy என்பது பட்டப் பெயராகியது. அதைவிட Wall, Mr. Dependable என்று பல பெயர்களால் ட்ராவிட் விமர்சிக்கப்படுவார்.  சச்சின் டென்டுல்கர் என்ற கடவுளிற்கே ட்ராவிட் எனும் சுவர் தான் அரண் (even the god needs wall's protection) என்று ட்ராவிட் ரசிகர்கள் கிலாகிப்பார்கள். நட்சத்திரங்கள் நிறைந்த அன்றைய இந்திய கிரிக்கட் அணி, வெளிநாடுகளில் ஈற்றிய பல வெற்றிகளின் கதாநாயகன், ட்ராவிட் தான். 


ட்ராவிட் bat பண்ணும் போது விளையாடும் cover driveல் வெளிப்படும் லாவகத்தையும் square cut அடிக்கும் போது வெளிப்படும் கம்பீரத்தையும் காண கண்கோடி வேண்டும். டென்டுல்கரோடும் லக்‌ஷமனோடும் கங்குலியோடும் இணைந்து ஆடும் போது பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


2002ம் ஆண்டில், இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட மும்மூர்த்திகளான ட்ராவிட்(148), டென்டுல்கர்(193), கங்குலி(128) மூவரும் சதிராடி சதங்கள் அடித்து, 16 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியை இங்கிலாந்தில் வெற்றிவாகை சூடவைத்த    Headlingly டெஸ்டை  இந்திய கிரிக்கட் ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த வெற்றிக்கு அடித்தளம் இட்டது ட்ராவிட்டின் 148 என்று சொன்னால் மிகையாகாது. 


அதே போல் 2006ல் மேற்கிந்தியத்தீவுகளிற்கெதிராக சப்ரீனா பார்க்கில் தனது தடுத்தாடும் (defensive) திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்து ட்ராவிட் (81,68) இந்திய அணிக்கு ஈட்டித்தந்த சரித்திர முக்கியம் வாய்ந்த வெற்றியையும் குறிப்பிட்டேயாக வேண்டும். 2001ல் தென்னாபிரிக்க அணிக்கெதிராக போர்ட் எலிஸபெத்தில் இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய ட்ராவிட்டின் 87 ஓட்டங்களும் ட்ராவிட்டின் தடுத்தாடும் ஆற்றலிற்கு கிடைத்த மகுடம். 


ட்ராவிட் ஆடிய அதகளங்கள் மொக்கை அணிகளிற்கெதிரானவையல்ல. வோர்னும் மக்ராவும் கலக்கிய ஒஸ்ரேலிய அணிக்கெதிராக  கொல்கத்தாவில் அடித்த 180ஐயும்,  அடலெய்டில் கிலப்ஸியோடும் மக்கில்லோடும் மல்லுக்கட்டி நொறுக்கிய 233ஐயும் கிரிக்கெட் வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். ராவல்பிண்டியில் அக்தரையும் சமியையும் துணிவுடன் எதிர்கொண்டு குவித்த 270ஐ பாக்கிஸ்தான்காரன் மறந்தும் மறக்க மாட்டான். 

தொடரும்...


Saturday, 12 November 2016

நல்லதோர் வீணை செய்து..
"நல்லதோர் வீணை செய்து, அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ"

கெளதம் மேனனின் "அச்சம் என்பது மடைமயடா" படத்தை பார்த்து விட்டு வரும் போது இந்த பாரதியார் பாடல் தான் நினைவில் நிழலாடியது. மீண்டும் சிக்கல் மன்னன் சிம்புவோடு ரிஸ்க் எடுத்து கெளதம் மேனன் இணைந்து படைத்த இந்த படைப்பு, சிம்பு படங்களிற்கே உரித்தனான இழுத்தடிப்புகளையும்  தடைகளையும் தாண்டி திரைக்கு வந்திருக்கிறது. ரஹ்மானின் இசையிலமைந்த படத்தின் அருமையான இரண்டு பாடல்கள்  ஏற்கனவே படத்தின்பால் எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தன.

"அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்

படத்தின் முதல் பாதி கெளதம் மேனனின் அதே ஃபோர்மிலவில் விளைந்த நல்ல காதல் கவிதை,  இருதடவை காதலில் தோற்று, love philosophy வசனம் பேசிக் கொண்டு திரியும் சிம்பு, மஞ்சிமிவை கண்ட கணம் முதல் திரையில் விரியும் காதல் காட்சிகள், கவிதை.  எங்களின் உதடுகளில் புன்னகையை வரவழைக்கும் காட்சிகளும் வசனங்களும், மனதார ரசிக்கவும் வைக்கிறது. 

"ஆறும் கரையும் அம்பும் வில்லும்
பாட்டும் உறையும் நானும் அவளும்"

காதலை அழகாக திரையில் வடித்து, அற்புதமான வசனங்களால் செதுக்கி,  அதை  ரசிகரகளும் அனுபவிக்க வைக்கும் வன்மை அறிந்தவர் கெளதம் மேனன். "அவ அப்படியே என்னை சாப்பிட்டாடா" என்று சிம்பு சொல்லும் இடம், லவ்லி. பாரதிதாசனின் "அவளும் நானும்" கவிவரிகளை அழகாக பாடலாக்கிய ரஹ்மானை மெச்சியே ஆகவேண்டும்


"நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்"

பைக்கில் சிம்புவும் மஞ்சிமாவும் பயணம் தொடங்க, ரஹ்மான் எங்களை "பறக்கு ராசாளியில்"  பயணிக்க வைக்கிறார். தென்னிந்தியாவின் அழகிய கரையோரங்கள் கண்களைக் கவர, ரஹ்மானின் இசையும் கவிஞர் தாமரையின் அழகு தமிழ் வரிகளும் நம்மையும் காதலை உணரவைக்கின்றன. பாடலின் இடையில் வரும் அருணகிரிநாதரின் தேவார வரிகளின் திணிப்பு புதுமை.

"என் தோள் மீது நீ
குளிர் காய்கின்ற தீ"

பைக் பயணத்தின் இறுதிக் கணங்களில் திரைக்கதையில் திருப்பம் வந்து, காட்சிகள் ரணகளமாகும் போது, " தள்ளிப் போகாதே" என்ற ஏற்கனவே ஹிட்டான பாட்டை வைக்கும் துணிவு கெளதம் மேனனிற்கு மட்டும் தான் வரும். ஒரு பக்கம் ஒரு ரத்தம் சொட்டும் கொடிய காட்சி, மறுபக்கம் காதல் சொட்டும் ரோமான்டிக் பாடல் என்று, அந்த காட்சியில் அவ்வளவு நேரமும் காதலை ரசித்துக் கொண்டிருந்த எங்கள் உதட்டிலிருந்த புன்னகை மறைந்து இதயம் கனக்க தொடங்குகிறது. 

"கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே..

கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்.."


படத்தின் மிக முக்கியமான விஷயம் படத்தின் இறுதிவரை சொல்லாமலே மறைக்கப்படும் சிம்புவின் பெயர். அந்தப் பெயரை கேட்டாலே.. வேண்டாம் திரையில் பார்த்துத் தான் அதை அனுபவிக்கணும்.


படத்தின் முதல் பாதி கவிதை என்றால், இரண்டாம் பாதி உண்மையிலேயே வதை. தேவையில்லாமல் நீண்டு போகும் வன்முறைக் காட்சிகளில், படத்தின் முன்பாதியில் செதுக்கிய நல்லதோர் வீணையை தூக்கி குப்பையில் போட்டது போலாகின்றது. 


ப்ரேக் அறுந்து போன Royal Enfield மோட்டர் பைக் மாதிரி பயணிக்கும் திரைக்கதையை, எப்படி முடிப்பது என்று தெரியாமல் கெளதம் மேனன் திணறியது போலுள்ளது.

அச்சம் என்பது மடைமயடா:
முதல் பாதி: நல்லதோர் வீணை
இரண்டாம் பாதி: குப்பையில் வீணை

உறுதி
அடுத்த முறை இந்தியா போகும் போது கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் பார்த்தேயாக வேண்டும் ! Friday, 11 November 2016

வேலை அமைவதெல்லாம்
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பது எவ்வளவு உண்மையோ, வேலை அமைவதும் ஆண்டவன் அருளும் வரப்பிரசாதம் என்பது உண்மையிலும் உண்மை. வேலை தேடிக்கொண்டு இருக்கும் போதும், விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கும் போதும், நேர்முகத் தேர்வுகளிற்கும் aptitude testகளிற்கும் தோன்றும் போதும், இந்த வேலை தான் எனக்கு வாய்க்க போகிறதா என்று மனம் அல்லாடும். அல்லல் நிறைந்த அந்த பயணத்தின் இறுதியில் கிடைக்கும் வேலை, ஆண்டவன் அளித்த வரப்பிரசாதம் என்று மனம் ஏற்றுக் கொண்டால், வாழ்வு வளம் பெறும். 


கொழும்பில் உயர்தர சோதனை எழுதிவிட்டு, CIMA படிக்க தொடங்கின காலம் முதல் வேலை தேடும் படலமும் ஆரம்பமாகியது. 80களின் இறுதியில் நடந்த ஜேவிபி பிரச்சினையால் கம்பஸ் தொடங்க எப்படியும் இரண்டு வருடமாவது ஆகும்.  அந்த இருவருட இடைவேளைக்குள் வேலை ஒன்றை தேடி CIMAவும் முடிக்க வேண்டும் என்று மனக்கணக்கு போட்டேன்.  வேலை எடுப்பதற்கு  influenceம் அதிர்ஷ்டமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்த கொடிய காலங்கள் அவை.


Daily Newsல் வந்த Holiday Inn ஹோட்டலில் Accounts Assistant வேலைக்கு, கையால் எழுதிய curricualam vitaeயும் பள்ளிக்கூடத்தில்  வாங்கிய character certificateஐயும் சேர்த்து அனுப்பி விண்ணப்பிக்க, interviewற்கு வரச் சொல்லி கடிதம் வந்தது. Interviewற்கு போனேன், வந்தேன், வேலை கிடைக்கவில்லை, refereeயா போட்டது எங்கட கொழும்பு இந்து பினாவை (பிரன்ஸிபல்).


Coopersல் auditற்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்று அறிந்து விண்ணப்பிக்க, மீண்டும் interview. இந்த முறை வலு நம்பிக்கையோடு interviewஐ கையாள, "கம்பஸ் தொடங்க என்ன செய்ய உத்தேசம்" என்ற கண்ணிவெடிக் கேள்வியில் Coopers கனவு தகர்ந்தது. Coopersன் Management Consulting பிரிவில் வேலை செய்த எங்களுடன் படித்த அருண் மூலம், அந்தப் பிரிவில் இணைய ஒரு case study பரீட்சைக்கு தோற்றி, தோற்றுப் போனேன். 


HNBயில் Banking course செய்தால் Bankல் சுளையாய் சம்பளத்தோடு வேலை கட்டாயம் கிடைக்கும் என்று கேள்விப்பட, பொரளையில் கணத்தைக்கு பக்கத்தில் அமைந்திருந்த HNB training centreல், நண்பன் வாதுலனோடு Banking course செய்தேன். Course முடித்து நடந்த இறுதிப் பரீட்சையின் முடிவில் எனக்கு வெற்றிக்கிண்ணமும் வாதுலனிற்கு வேலையும் கிடைத்தது. வெற்றிக்கிண்ணம் தந்த வங்கி, எனக்கு ஏன் வேலை தரவில்லை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. 


வேலை தேடும் படலம் தொடர்ந்து தோல்வியை தழுவிக்கொண்டிருக்க, CIMA பரீட்சைகளில் கிருஷாந்தனின் தோளில் தொற்றிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தேன். CIMA Stage 4ற்கு வர, வேலை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற டென்ஷன் பரீட்சை டென்ஷனிற்கு இணையாக வாட்டியது. CIMA Finals முடித்ததும் பஞ்சிகாவத்தையில் உள்ள ஒரு இரும்புக்கடை ஒன்றில்  Bookkeeper  வேலை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்து அங்கிள் ஒருத்தர் கடுப்பேற்றியிருந்தார். MBBS கடைசிப் பரீட்சை எழுதினவனிற்கு,  நர்ஸ் வேலை எடுத்து தாரன் என்று சொன்னால் எப்படியிருக்குமோ, அதே மாதிரி தான் இதுவும். 


CIMA Stage 4 பரீட்சைக்கு சில கிழமைகளிற்கு முன்னர், Ernst & Youngல் தோற்றிய interviewல் வெற்றி கிடைத்தது. நவம்பரில் பரீட்சை முடிய, யாழ்ப்பாணம் போய் விட்டு வந்து, புத்தாண்டில் தம்மை தொடர்பு கொள்ளுமாறும், மாதம் 2,000 ரூபாய் சம்பளம் என்றும் Ernst & Young நிறுவனத்தினர் வாக்குறுதி அளித்தார்கள். 


யாழப்பாணம் போற உற்சாகத்தோடும், வேலை கிடைத்த நிம்மதியோடும் CIMAவின் கடைசிப் பரீட்சை பரவசமாய் எழுதினேன். ஒரு மாதம் யாழ்ப்பாணம் போய் திரும்ப, CIMA விரிவுரையாளர் சமன் கிரிவத்துடவ உருவில் குழப்பம் காத்திருந்தது. சமன் ஒரு நல்ல விரிவுரையாளர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதரும் கூட. முன்னாள் ஜேவிபிகாரனான சமன், யாழ்ப்பாண பெடியளில் அதீத அக்கறையும் அன்பும் பாராட்டுவார். 


"I say, don't go to this stupid audit job, I will get you a job with 10,000 rupees salary, give me a copy of your CV" என்று சமன் மண்டைக்குள் பேராசையை விதைத்தார். 


வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு எதிரிலுள்ள ஒரு கொமியூனிகேஷனில், சுதர்ஷன் அண்ணாவோடு போய், 100 ரூபாய் கொடுத்து, ஒரு CVஐ கொம்ப்பியூடரில் type பண்ணினோம். அதை ரெண்டு போட்டோ கொப்பி எடுத்து,  CR கொப்பிக்குள் மடியாமல் வைத்துக்கொண்டு, சமனிடம் CV கொடுக்க IASற்கு போனோம். IAS staff roomல் சமன் இல்லை, முரளி மட்டும் நின்றார். 


முரளி, ரஞ்சனின் அண்ணா, எங்களின் CIMA விரிவுரையாளர். "என்ன இங்கால பக்கம்" என்று முரளி பம்பலா விசாரிக்க, நசுங்கிக் கொண்டே வந்த நோக்கத்தை சொன்னோம். "ஓ அப்படியா, அப்ப எனக்கும் ஒரு CV தாரும், ஏதாவது வேலை வந்தா சொல்லுறன்". Aitken Spenceல் வேலை செய்யும் முரளி தானாக உதவிக்கு வந்தார். "இவர் எங்க கிழிக்கப் போறார், சமன் சிங்கன் 10,000 ரூவாய் வேலை வாங்கித் தரப் போறான்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, போட்டோ கொப்பி ஒன்றை முரளியிடம் கொடுத்தேன். கொம்புயூட்டர் ஒரிஜினல் சமனிற்கு சமர்ப்பித்தேன்.


அடுத்த கிழமை ஒரு நாளிரவு மோட்டார் சைக்கிளில் வீட்ட வந்த ஒருத்தர், Aitken Spence நிறுவன கடிதம் ஒன்றை தந்துவிட்டு சென்றார். அந்த கடிதத்தில் அடுத்த நாள் காலை Vauxhall வீதியில் அமைந்திருந்த அவர்களது Finance Departmentல் interviewற்கு  வருமாறு அழைத்திருந்தார்கள். என்ன வேலை, யார் மூலம் அழைத்தார்கள் என்ற விபரம் ஒன்றும் தெரியாது, தொலைபேசி வசதி பரவாத அந்த காலத்தில் யாரையும் தொடர்பு கொண்டு அறியவும் வாய்ப்பிருக்கவில்லை 


அடுத்த நாள் காலை, என்னிடம் இருந்த ஒரே திறமான ஷேர்ட்டான, டுபாயிலிருந்து பபா சித்தப்பா கொண்டுவந்த இளநீல ஷேர்ட்டையும், யாழ்ப்பாணம் போன போது கொண்டு வந்திருந்த அப்பாவின் பழைய நீல நிற டையையும் கட்டிக் கொண்டு, ஆறு தரம் சப்பாத்து பொலிஷ் பண்ணிவிட்டு ரெண்டு பஸ் ஏறி, வியர்க்க விறுவிறுக்க Aitken Spence அலுவலகத்தை அடைந்தேன்.  கண்களை குறுக்கிக் கொண்டும் மீசையை தடவிக் கொண்டும் வில்லத்தனமான பார்வையோடும், தேவன் டீ மெல்லின் வலு கடினமான கேள்விகளை எங்கிருந்தோ வந்து குடிகொண்ட அசட்டு நம்பிக்கையுடன் எதிர்கொண்டேன்.


Aitken Spenceல் புதிதாக உருவாகியிருக்கும் Corporate Plannig Unitல், Management Trainee வேலைக்கு தான், என்னை நேர்முகம் கண்டு கொண்டிருந்தார் தேவன் டீ மெல்.  முரளியின் டீமில் அமைந்திருந்த அந்த வேலைக்கு  முரளியின் சிபார்சிற்கமையவே என்னை interviewற்கு அழைத்திருந்தார்கள். CIMA முடிக்கும் யாருக்கும் அது ஒரு Dream Job. 


நேர்காணல் முடிவில் தேவன் கேட்டார் "how do you know Mr. Thurairajah?". துரைராஜா IASல் எங்களிற்கு Financial Management படிப்பித்த
 CIMA விரிவுரையாளர், இலங்கை வங்கியின் முன்னாள் DGM, சந்திரிக்காவிற்கு கணித ட்யூஷன் கொடுத்தவர், பல நிறுவனங்களில் இயக்குனர், வகுப்பிலும் வெளியிலும் தமிழ் பொடியளோடு மட்டும் அன்பாக பழகுவார், என்னுடைய CVயில் அவர் referee. 


"My dad used to work for Mr. Thurairajah, he is a fine gentleman" தேவனின் வார்த்தைகளில் முதல் தடவையாக கொஞ்சம் கனிவு தெரிந்தது. 


அடுத்த கிழமை அதே மோட்டார் சைக்கிள், இன்னுமொரு Aitken Spence கடிதம், இம்முறை இரண்டாவது நேர்முகம் Aitken Spenceன் Finance Director லலித் விஜயரத்னவுடன். லலித் அவருடைய இளமை காலங்களில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரன்.  கிரிக்கட் பற்றி கன நேரமும் கதைத்து விட்டு, கம்பஸ் படிப்பை கட்டாயம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி, தோளில் தட்டி வாசலிற்கு வந்து வழியனுப்பும் போது சொன்னார்

 "Son, you have been selected for the third interview with the Board, you will soon get a letter from our HR director" கண்களில் வடிந்த கண்ணீரை
துடைக்காமலே அவர் கரம் பற்றினேன் "thank you Mr. Wijeratne"


சனாதிபதி மாளிகைக்கு அருகில் இருந்த Aitken Spenceன் தலைமையகத்தில் Board roomற்குள் நுழைய புல்லரித்தது. பத்திரிகைகளில் வாசித்தறிந்த வியாபார ஜாம்பாவான்களான MA Mack, R சீவரட்ணம், GC விக்கிரமசிங்கவுடன் கைகுலுக்கிய அந்த பொழுது, ஆண்டவன் கொடுத்த வரம் அல்லாமல் வேறொன்றுமில்லை. Aitken Spence நிறுவனத்தின் சம்பிரதாயத்திற்கிணங்க நடந்த அந்த மூன்றாவது நேர்முகத் தேர்வு, பத்து பதினைந்து நிமிடங்களே நீடித்தது. 


February 6, 1995ம் ஆண்டு இலங்கையில் அந்த காலப்பகுதியில் trend setter ஆக அமைந்த Corporate Plannnit Unitல் பந்தாவான Management Trainee என்ற  titleஓடும் சுளையாய் மாதம் 7,500 சம்பளத்துடனும் வேலையில் இணையும் போது, கடந்த வந்த தோல்விகள் தந்த வேதனையும், பட்ட அவமானங்கள் தந்த வலிகளையும் நினைவில் நிறுத்திக் கொண்டேன், குறிப்பாக அந்த பஞ்சிக்காவத்தை இரும்புக்கடை வேலையை மறக்க மனம் மறுத்தது. 


எங்கிருந்தோ வந்து CV கேட்டு வாங்கிய முரளியும்,  என்னைப்பற்றி தேவனிற்கு நாலு நல்ல வார்த்தை சொல்லி வேலை கிடைக்க வைத்த துரைராஜாவும், கடவுள் அனுப்பிவைத்த தூதுவர்களாகவே இன்றுவரை எனக்கு தெரிகிறார்கள்.

"வேலை அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்"


Friday, 4 November 2016

டுபாயில்..
போன வருஷம் மகர ராசிகாரன்களிற்கு சனிபகவான் பதினொன்றாம் வீட்டிற்கு இடம்பெயர, இந்த வருடம் எனக்கு சில அருமையான பயணங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்தது. வேலை நிமித்தம் டுபாய்க்கு இது இரண்டாவது பயணம், போன மார்ச் மாதம் போன போது அப்படியே சுத்தி, கொழும்பு தொட்டு, யாழ்ப்பாணத்தில் இறங்கி Big Match பார்த்து, பம்பலடித்து விட்டு வந்தாச்சு.


எங்கட கம்பனியின் டுபாய் பிரிவிற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட பாக்கிஸ்தான்காரனான நிதிக் கட்டுப்பாட்டாளரை  பயிற்றுவிக்க போனமுறையும், அவர் சில குழப்படிகள் விடுவதால், "அவரை ஒருக்கா போய் வெருட்டி விட்டு வா" என்று இந்த முறையும் என்னுடைய பொஸ்,  ப்ளேன் ஏற்றி அனுப்பி வைத்தார். பாக்கிஸ்தான் சிங்கன் ஒரு சோம்பேறி, போனமுறை போன போது அவரை வேலை வாங்க நான் பட்டபாடு வையகம் அறியாது.---------------------------------------

நவம்பர் மாதத்தின் முதலாவது நாளை கிறிஸ்தவர்கள் அனைத்து புனிதர்கள் தினமாக கொண்டாடுவார்கள். அதற்கடுத்த நாள் இறந்தவர்களை நினைவு கூறும் மரித்த விசுவாசிகளின் தினம் (All souls Day). நவம்பர் மாதம் முழுக்க நம்மை விட்டு பிரிந்தவர்களின் நினைவுகளை நினைவு கூறும் மாதம் தான். 


நவம்பர் 2, பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவுதினம். நவம்பர் 11  (Armistice Day) முதலாவது உலகயுத்தத்தம் நிறைவடைந்த நாளில், யுத்தங்களில் மரித்த இராணுவ வீரர்களின் நினைவு நாள், அதன் ஞாபகார்த்தமாக பொப்பி மலர்களை சட்டையில் அணிவார்கள். நவம்பர் 27ல்,  தேச விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்த மறவர்களை நினைவேந்த,  தமிழர் தேசம் கண்ணீர் மல்க எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்.


மரித்த விசுவாசிகளிற்காக ஒருக்கா சேர்ச்சிற்கு தலையை காட்டிவிட்டு,  இரவு ஷோவாக நயன்தாராவின் "காஷ்மேரா" படம் பார்க்கப் போக திட்டம் தயாரானது. ஹோட்டலிற்கும் தியேட்டருக்கும் இடையில் டுபாய் மரியன்னையின் ஆலயம் இருப்பதை கூகிள் ஆண்டவர் காட்டிக்கொடுக்க, டாக்ஸிக்காரனிடம் சேர்ச் இருக்கும் கூகிள் mapஐ காட்டினேன். "Oh St. Mary's Church... I know I know" டாக்ஸிக்காரன் பறந்தான். சேர்ச்சை அண்மித்ததும் டாக்ஸிக்காரனை ஒரு பத்து நிமிஷம் waitingல் நிற்க சொல்லி கேட்க, அவன் பணிவாக மறுத்து விட்டான். 


ஒரு பெரிய மதிலிற்கு பின்னாலும் ஒரு பள்ளிவாசலுக்கு அடுத்தும் இருந்த ஆலயத்தை நோக்கி நடக்க தொடங்க, ஆராதனை முடிந்து பெருந்திரளாக மக்கள், ஆலயத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஆலயத்தின் பின்கதவால் உள்நுளைய ஆலயம் நிறைய மக்கள், எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. அமைதி நிறைந்த அந்த பெரிய ஆலயத்தில் இருக்கை நிறைய பக்தர்கள். வெள்ளை உடையணிந்த தொண்டர்கள் ஆங்காங்கே இருந்த வெற்றிடங்களில் புதிதாய் வந்தவர்களை அமரச்செய்து கொண்டிருந்தார்கள். ஒரு தூண் மூலையில் நிற்க மட்டும் இடம் கிடைத்தது. கொஞ்ச நேரத்தில் ஆங்கிலத்தில் செபமாலை சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லோரும் சத்தமாக செபிக்க அந்த ஆலயத்தில் ஒருவித தெய்வீகத்தனம் குடிகொண்டது. "அருள்நிறைந்த மரியாயே" செபம் ஆங்கிலத்தில் சொல்ல சாத்தான் நாவைத் தடுக்க, கூகிள் ஆண்டவரை துணைக்கழைத்து ஜெபத்தில் இணைந்தேன். 


டுபாய் மரியன்னை ஆலயத்தின் சூழல், 1980களில் பீட்டர் மாமா வீட்டு முன்றலில் செபமாலை சொல்வதை நினைவுபடுத்தியது. பீட்டர் ரட்னசபாபதி ஒரு ஜொனியன், 40களில் பரி யோவான் கிரிக்கட் அணித்தலைவர், யாழ்ப்பாணத்தில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர். இரவு நேரங்களில் அவரது வீட்டு முன்றலில் செபமாலை சொல்லப்படும், செபமாலை சொல்ல தொடங்க முதல் ஆளனுப்பி எங்களை கூப்பிடுவார்.  


டுபாய் மரியன்னை ஆலயத்தில் செபமாலை சொல்லி முடிய யாரும் அசையவில்லை, புதிதாய் வந்தவர்களால் ஆலயம் நிரம்பிக் கொண்டே இருந்தது, எனக்குள் இருந்த சாத்தான் விளையாட்டைக் காட்டத் தொடங்கியது. "டேய் எட்டரைக்கு நயன்தாராப் படம், இப்ப போனியென்றாத் தான் படம் பார்க்கலாம்" என்று சாத்தான் மனதை குழப்பத் தொடங்கியது. 


ஓரிரு இருமல் சத்தங்களும், aircondition இயங்கும் சத்தத்தையும் தவிர அமைதி குடிகொண்ட அந்த ஆலயத்தில், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு "சாத்தானே அப்பாலே போ" என்று ஜெபிக்க தொடங்கினேன். சரியாக 7:30ற்கு வழிபாடு தொடங்கியது. வழிபாட்டின் வரவேற்பு பாடல் மனதை கட்டிப் போட, சாத்தானும் அப்பாலே போனது.
  1. I’ve wasted many precious years,
    Now I’m coming home;
    I now repent with bitter tears,
    Lord, I’m coming home.

வழிபாட்டை பக்திமயமாக நெறிபடுத்திய அருட்தந்தை, வேதாகமம் வாசித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த பள்ளிவாசலிலிருந்து ஒலிபெருக்கியினூடாக ஒலித்த இஸ்லாமிய பிரார்த்தனையின் ஒலி  ஆலயத்தை நிறைத்தது. அதை சற்றும் பொருட்படுத்தாது, அருட்தந்தை வேதாகமம் வாசிக்க, பக்தர்களும் அமைதியாக செவிமடுத்தார்கள். வழிபாட்டில் டுபாயின் மன்னரிற்காகவும் பிரார்த்திர்கள். 


"ஒருவருக்கொருவர் சமாதானத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்" என்ற ஃபாதர் சொல்ல, ஒஸ்ரேலிய ஞாபகத்தில் பக்கத்தில் நின்ற மலையாள சேட்சிக்கு கைலாகு கொடுக்க கையை நீட்டினேன். அவர் புன்முருவலுடன் கையை கூப்பினார். நற்கருணைக்கான நேரம் வர, மீசை வைத்த மலையாள சோட்டான்கள் நற்கருணை கிண்ணத்தை இரு கைகளாலும் பொத்தி பிடித்துக் கொண்டு வரிசையாக சென்று ஆலயம் முழுவதும் பரந்து நின்று பக்தர்களிற்கு நற்கருணை பரிமாறினார்கள்.

போனவருடம் பாலித் தீவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மயூரனும் மைக்கலும் கொலைக்களத்திற்கு செல்லும் போது பாடிய  Amazing Grace என்ற பிரபல கிறிஸ்தவ துதிப்பாடலை பாடினார்கள். அதே பாடலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு மரணச் சடங்கில் பாட, Amazing Grace மீண்டும் ஒரு வலம் வருகிறது. டுபாய் மரியன்னை ஆலய வழிபாட்டிலும், Amazing Grace இறுதிப் பாடலாக அமைந்தது.

Amazing Grace, how sweet the sound,
That saved a wretch like me.
I once was lost but now I'm found,
Was blind, but now I see.

ஒரு இஸ்லாமிய நாட்டில், ஒரு கிறிஸ்தவ வழிபாட்டில் கலந்து கொண்ட அனுபவம் மெய்யாகவே மெய்சிலிர்க்க வைத்தது. அதுவும் ஆலயம் நிறைந்த மக்களுடன், பக்தி மயான சூழலில், பக்கத்திலிருந்த பள்ளிவாசலிலிருந்து சத்தமாக ஒலித்த இஸ்லாமிய ஆராதனைக்கு மத்தியில், இறந்த அனைத்து ஆத்துமாக்களிற்கான வழிபாட்டில் கலந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம், ஆசீர்வாதம்.