Friday, 14 October 2016

தேவி.. Rock on
பிரபுதேவா என்ற ஆட்டக்காரனை, நடன இயக்குனரை, நடிகனை பிடிக்காதவர்களை இதுவரை சந்தித்ததேயில்லை. பிரபுதேவாவின் ஆடும் ஆட்டத்திலும், நெறிப்படுத்தும் நடனங்களிலும் ஒரு குறும்புத்தனம் குடிகொண்டிருக்கும், எல்லோரையும்
மயக்கும் வன்மை நிறைந்திருக்கும். பிரபுதேவாவில் கிறங்கி நயன்தாராவே அவருடன் குடும்பம் நடாத்திய வரலாற்று சம்பவத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம்  பார்த்து ரசித்தது. பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சைக் குத்துமளவிற்கு நயன்தாராவின் காதல் தீவிரமாக இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.


போன ஞாயிற்றுக்கிழமை மத்தியானம், வழமையாக கொள்ளும் குட்டித்தூக்கத்தை தியாகம் பண்ணிவிட்டு, குடும்பத்தோடு பிரபுதேவா பன்னிரு ஆண்டுகளிற்கு பின்னர் நடிக்கும் "தேவி" படம் பார்க்க Knox Village தியேட்டரிற்கு போனேன். இந்தக் கிழமை Knoxல் மூன்று தமிழ்ப் படங்கள் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் curry facesம் "படம் பார்க்கவோ வந்தனியள்" என்ற வழமையான விசாரிப்புகளும். படம் தொடங்கும் வரை இங்கிலீசில் புளிப்பு கதை கதைக்கும் அன்டிமாரின் தொல்லை. படம் தொடங்கினாப் பிறகு தங்கள் பிள்ளைகளிற்கு  ரன்னிங் கொமன்ட்ரி கொடுக்கும் அம்மாமாரின் அலுப்பு. கெதியில் Village cinemaவில் தமிழ் பேசத்தெரிந்த  டிக்கெட் பரிசோதகர்  தேவை என்ற விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. வடையும் தேத்தண்ணியும் வருங்காலத்தில் விற்கப்பட்டாலும் விற்கப்பட்டலாம்.  


1994ம் ஆண்டில் வெளிவந்த "காதலன்" படத்தை பற்றிய பசுமையான நினைவுகள் இன்றும் நம்மை விட்டகலவில்லை. நக்மா என்ற மகா சொதப்பல் கதாநாயகி நடித்தும், திரையுலகை அதிரவைத்த வெற்றிக் காவியமாக "காதலன்" வலம் வந்தான். ஷங்கரின் இரண்டாவது படம், வளர்ந்து வந்த ரஹ்மானின் சூப்பர் இசை, வைரமுத்துவின் வைரவரிகள், நகைச்சுவையில் தடம்பதிக்கத் தொடங்கியிருந்த வடிவேலுவின் கலகல, மறைந்த ஜீவாவின் ஒளிப்பதிவு என்று திறமையான கலைஞர்களின் கைவண்ணத்தில்  உருவான "காதலனை", தெஹிவளை கொன்கோர்ட்டில் பார்த்த ஞாபகம் இன்றும் நினைவில் நிழலாடுகிறது.  மாதுரி திக்‌ஷித்தின் கால்ஷீட் கிடைக்காதபடியால் தான் நக்மா நடித்ததாக பின்னாட்களில் ஷங்கர் சப்பைக்கட்டு கட்டினார். சிவகார்த்தியேனின் "ரெமோ"விற்கு இருந்த பில்டப்பும், விஜய் சேதுபதியின் "ரெக்கை"யிற்கு இருந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் "தேவி" திரைப்படம் திரையில் மலர்ந்தது. மொடர்ண் பெண்ணை காதலித்து கலியாணம் கட்ட கங்கணம் கட்டியிருக்கும் பிரபுதேவாவின் சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளோடு திரைக்கதை அலுப்புத் தட்டாமல் நகரத் தொடங்கியது. இந்த வயதிலும் வண்டியும் தொந்தியுமில்லாமல் ஸ்லிம்மாக இருக்கும் பிரபுதேவாவை பார்க்க அம்மாவாண எரிச்சல் தான் வந்தது. நயன்தாராவையே மயக்கிய போக்கிரி கில்லாடி அல்லவா.


படம் தொடங்கி பத்தாம் நிமிஷத்தில் "சல்மார்" பாட்டுக்கு பிரபுதேவா ஆடும் ஆட்டத்தோடு கொடுத்த டிக்கட் காசு தீர்ந்துவிடுகிறது. கட்டைச் சட்டை போட்டு எமி ஜாக்சன், இடுப்பை ஆட்டி ஆட்டி cat walk நடந்து, பாடல் முழுவதும் வலம் வந்தாலும் , பிரபுதேவாவின் ஆட்டத்தில் கட்டுண்ட கண்கள் அவரை விட்டு அகலவேயில்லை. பாடலின் இறுதியில் ராஜுசுந்தரத்தின் நுழைவும், "சிக்கு புக்கு" பாடலை நினைவூட்டியதும் அட்டகாசம். காதலனின் "டேக் இட் ஈஸி ஊர்வசி" பாடலைப் போல் "சல்மார்" பாட்டும் இனிவரும் காலங்களிலும் பேசப்படும். "சல்மார்" என்ற ஹிந்தி வார்த்தைக்கு rock on என்று ஆங்கிலத்தில் அர்த்தமாம் என்று whatsappல் ஹிந்தி தெரிந்த நிமலன் பீத்தினான். தமிழில் என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்க தமிழ்ப்பொடியன் பம்பாய்க்கு பறந்திருப்பதாக வதந்தி ஒன்று உலாவுது.


மொடர்ண் பெண்ணை கட்டும் பிரபுதேவாவின் கனவு கானலாகி, மாடு மேய்க்கும் தமன்னாவை கலியாணம் கட்டும் காட்சிகள் கலகலப்பு. கலியாணத்தை குழப்ப பாலாஜி போடும் சொதப்பல் திட்டங்களும், பாலாஜியின் ஒற்றை வரி express modulation காமெடிகளும் சிரிக்க வைக்கின்றன. மரணப் படுக்கையில் கிடக்கும் பாட்டியை சுத்தி நடக்கும் ஒப்பாரிகளும் பெண் பார்க்கும் படலமும் சுவாரசியம். 


நடிகையாகாமல் செத்தவரின் ஆவி தமன்னாவிற்குள் புகுந்து அவரை ஆடவும் நடிக்கவும் வைக்கும் இடத்தில் லாஜிக், உதயன் பத்திரிகையின் எள்ளெண்ணெயில் எரிந்து சாம்பலாகிறது. நடிக்க விரும்பிய ஆத்மா இன்னொருவரின் உருவத்தில் தன்னை வெளிக்காட்டுவது சரியா என்று ஒரு சாரார் ஆவேசப்பட, "ஐசே, இது இயக்குனர் விஜய், அமலாபாலின் கதையை படமாக்கியிருக்கிறார்" என்று ஒரு குசும்பர் கொடுப்பிற்குள் சிரித்து அவர்களை சாந்தப்படுத்தினார். புத்திஜீவிகள், இது அந்நியன் படம் மாதிரி Split personality கதை, சனத்திற்கு விளங்க வைக்க இயக்குனர் விஜய், பேயை வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார் என்று FBல் கருத்துத் தெரிவித்தார்கள்.


தமன்னாவிற்கு இந்த படத்திற்கு முதல் "கடுப்பாக்கும் நடிகைகள்" பட்டியலில் தான் இடமளித்திருந்தேன். கிளாமர் பேயாகவும் அப்பாவி மாட்டுக்கார பெண்ணாகவும் அவதாரங்கள் எடுத்து, "தேவி"யில் தமன்னா கண்களுக்குள் நிறைந்துவிட்டார். அட்டகாசமான ஆட்டத்திலும் அலட்டிக்கொள்ளாத காமெடியிலும் அசத்தலான நடிப்பிலும் பிரபுதேவாவிற்கு சற்றும் சளைக்காமல் தமன்னா "தேவி"யில் கலக்கியிருக்கிறார். 


பிரபுதேவா, பேயோடு சமாதான உடன்படிக்கை (agreement) எட்டும் காட்சிகள் அருமை. ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இந்தப் படம் எடுக்கப்பட்டதால் பல இடங்களில் ஹிந்தி படச்சாயல் எட்டிப்பார்த்து வெறுப்பேற்றுகிறது. "சல்மார்" பாடலைத் தவிர பிற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டாமல் போனதிற்கும் இந்த ஹிந்திப் பாதிப்பே காரணமாயிருக்கலாம். இசையமைப்பாளர் யாரென்று யாருக்காவது தெரிந்தால் இன்பொக்ஸில் சொல்லுங்கோ.


தமிழ் சினிமாவிற்கு இது பேய்ப்பட ஸீஸன். முனி, பிஸ்ஸா, அரண்மனை, மாஸ், மாயா, ஜாக்சன்துரை என்று வரிசையாக பேய்ப்படங்கள் வந்து தமிழ் ரசிகர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் காலம். போதாக் குறைக்கு ஜீவி பிரிகாஷ் வேற பேய்ப்படம் நடிக்கிறாராம், கொடுமைடா சாமி. "தேவி"யில் வரும் பேயோ எந்தவித அச்சமூட்டலுமில்லாமல் பதைபதைப்புமில்லாமல் நம்மை பேயை ரசிக்க வைக்கிறது. காதை கிழிக்கும் பேய்ச் சத்தங்களும் கிராபிக்ஸ் பம்பரத்துக்களும் இல்லாமல் ஒரு பேய்ப் படத்தை இயக்கிய இயக்குனர் விஜயை பாராட்டியே ஆகவேண்டும். கோரமான பேய்களை திரையில் பார்த்து வாழ்க்கை வெறுத்துப் போனவர்களிற்கு "தேவி"யில் கிளுகிளுப்பூட்டும் தமன்னாப் பேய் ஒரு நல்ல மாறுதல். 

தேவி.. குடும்பத்தோடு பேய் தரிசனம். 

No comments:

Post a Comment