Friday, 21 October 2016

பரி யோவானின் மைதானம்

பரி யோவான் கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்லூரியின் கிரிக்கட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று இலட்சிய கனவை சுமந்து கொண்டு தான்  நுழைவாயில் தாண்டுவார்கள். யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் என்றால் பரி யோவான் கல்லூரி தான்.யாழ்ப்பாணத்தின் ஒஸ்ரேலிய கிரிக்கட் அணி, பரி யோவான் கல்லூரி கிரிக்கட் அணி என்றும் சொல்லலாம். 


பரி யோவான் கல்லூரியினரின் எடுப்புக்கும் கனவான்களின் விளையாட்டான கிரிக்கட்டுக்கும் நல்ல பொருத்தம். கிரிக்கட்டில் பரி யோவான் அணியை வெல்ல வேண்டும் என்று பிற கல்லூரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார்கள்.  பரி யோவான் கல்லூரிக்கு கிரிக்கட் விளையாட வேண்டும் என்ற கனவோடு பிரதான வாயிலை கடந்து உள்நுழையும் மாணவர்களை பரி யோவானின் அழகிய மைதானம் வரவேற்கும்.


நாங்கள் படிக்கும் காலங்களில் முதலாவது தவணை வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் U19 கிரிக்கட் ஆட்டங்கள் தொடங்கி, சனிக்கிழமை முழு நாளும் நடக்கும். பள்ளிக்கூடம் முடிய மைதானத்தில் மட்ச் பார்க்க மாணவர்கள் ஓடி வருவார்கள். வெள்ளைத் தொப்பி அணிந்து ஸ்டைலாக பரி யோவான் அணி களமிறங்க, தாங்களும் களமிறங்கும் நாளை எண்ணி, மைதானத்திற்கு வெளியே மரங்களிற்கு கீழ் இருந்தும் நின்றும் மட்ச் பார்க்கும் மாணவர்கள் அங்கலாயப்பார்கள். 


பரி யோவானின் மைதானம் மிகவும் அழகானது. உண்மையில் சொல்லப் போனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே மிக அழகான மைதானங்கள் வரிசையில் பரி யோவான் மைதானம் நிட்சயமாக இடம்பிடிக்கும். மைதானத்தை சூழ இருக்கும் பெரிய மரங்களும், பழமையான கட்டிடங்களும் ஏன் பாசி படிந்த குட்டிச்சுவர் கூட மைதானத்திற்கு மெருகேற்றும். 


பரி யோவானின் பெருமைமிகு வரலாற்றுச் சின்னமான Robert Williams மண்டபத்தின் வகுப்பறைகள் தான் எதிரணியினரின் dressing room. Robert Williams மண்டபத்திற்கு முன்பாக மூன்று பெரிய இலந்தை மரங்களும் தனியனாக புளியமரமும் பார்வையாளர்களுக்கு நிழல் தரும். மண்டபத்திற்கும் மரங்களிற்கும் இடையில் ஒரு சிறிய வீதி, அந்த வீதியிலிருந்து சைக்கிள் மைதானத்திற்குள் இறங்கினால் மாணவர்களிற்கு கன்னம் மின்னும், மைதானம் ஒரு புனித பிரதேசம் போல் காப்பாற்றப்படும்.


அப்படியே சுத்தி நவீன Peto Hall தாண்டி physics lab பக்கம் வந்தால், முன்று அழகிய கஷுரீனா மரங்கள் கண்களைக் கவரும். உடைந்த தண்டவாள துண்டும் ஒரு பெரிய இரும்புக் கம்பியையும் மணியாக கொண்ட dining hallம் அதைத் தாண்டி Fleming hostelம் மைதானத்தின் அந்த கரையை அலங்கரிக்கும். Fleming hostelற்கு முன்னால் long jump பிட்சடியில் இரண்டு பெரிய மரங்கள் நிற்கும். இந்த இடங்கள் ஹொஸ்டல் காரன்களின் ஏரியா.


மைதானத்தின் மறுமுனையில், "ஏலுமென்றா பண்ணிப்பார்" என்று எதிரணியினரிற்கு சவால் விடுவது போல், கம்பீரமாக score board  நிமிர்ந்து நிற்கும்.  Score boardற்கும் Fleming hostelற்கும் இடையில் இருந்த சின்னக் கட்டிடம்  St. John's Ambulance அறை என்று ஞாபகம். மைதானத்தின் பழைய பூங்கா பக்கமாக சிவப்பு நிற தீந்தடித்த  பரி யோவானின் இரண்டு மாடி Principal Bungalow மைதானத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும். Principal Bungalowவிற்கு முன்னாலிருக்கும் கொட்டாங்காய் மரத்திற்கு, காய் பறிக்க கல்லெறிந்த மறவர்களையும், பிடிபட்டு அடிவாங்கி விழுப்புண்ணடைந்த சிங்கங்களையும் பரி யோவான் வரலாறு பெருமையுடன் நினைவு கூறும்.


கிழமை நாட்களில் பின்னேரங்களில், வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த சூரியகுமார் மாஸ்டர் U13ற்கு, பழைய பூங்கா பக்கமிருந்த netsல் பயிற்சி வழங்குவார். இலவசமாக பரி யோவான் கல்லூரி வழங்கிய இந்த பயிற்சி பாசறையில் இருந்து தான் எங்கள் வகுப்பின் கிரிக்கட் புலிகள் வெளிவந்தார்கள்.  அதைத் தாண்டினால் இப்ப இருக்கும் EM Ponnudurai Pavillion இருந்த இடத்தில் பாசி படிந்த குட்டிச்சுவர் தான் இருந்தது. பழைய பூங்கா வீதியால் போவோர் வருவோர், மதவோரம் சாய்ந்து நின்று சைக்கிளில் இருந்தவாறே மட்ச் பார்ப்பார்கள். 


போதகரின் வாசஸ்தலத்திற்கும் கம்மாலை கம்பஸிற்கும் இடையில் ஒரு மாமரம். கம்மாலை கம்பஸிற்கு மேல்மாடியில் wood workshop, அதைத்தாண்டி நிமிர்ந்து நிற்கும் உயரமான தண்ணீர் தாங்கியும் பஞ்சலிங்கம் மாஸ்டரின் வீடும் மைதானத்தின் ஒரு கோடியின் எல்லைகள். தண்ணீர் தாங்கியிற்கு முன்னால் ஒரு பெரிய மரமும் அதற்கு கீழ் exercise barsம் இருந்தன. அந்த பெரிய மரத்திற்கு கீழ்தான் கச்சான் விற்கும் ஆச்சியும் ஐஸ்கீரீம் விற்கும் சிவகுருவும் வியாபாரம் செய்வார்கள். 


மட்ச் நடக்கும் வெள்ளிக்கிழமை பின்னேரமும் சனிக்கிழமையும் கச்சான் விற்கும் ஆச்சிக்கும் ஐஸ்கிரீம் விற்கும் சிவகுருவிற்கும் வியாபாரம் களைகட்டும். ஒருமுறை அப்பாவோடு மட்ச் பார்க்க வர, அப்பா சிவகுருவிடம் ஐஸ்கிரீம் வாங்கித் தந்து, இனி எனக்கு ஐஸ்கிரீம் கொடுக்க சொல்லியும் தன்னிடம் அதற்கான காசை கேட்கச் சொல்லியும் சொன்னார். அதற்குப் பிறகு சிவகுருவிடம் ஐஸ்க்ரீம் வாங்கிவிட்டு "அப்பாட்ட காசு வாங்குங்கோ" என்பேன். சிவகுரு அப்பாட்ட காசு வாங்கினாரா? எவ்வளவு வாங்கினார்? என்று இன்றுவரை தெரியாது. அண்மையில் சுதர்ஷன் அண்ணாவோடு கதைக்கும் போது தானும் சிவகுருவிடம் கடனிற்கு ஐஸ்கிரீம் வாங்கினதாக சொன்னார். பார்க்கப் போனா சிவகுரு கனபேருக்கு கடனிற்கு தான் ஐஸ்கிரீம் விற்றிருக்கிறார். பிற்காலத்தில் இடம்பெற்ற ஷெல்வீச்சில் சிவகுரு பலியானதாக அறிந்தேன். 


பஞ்சலிங்கம் மாஸ்டரின் வீட்டிற்கும் Robert Williams மண்டபத்திற்கும் இடையில்,  Robert Williams மண்டபத்தின் மறுபக்கமாக Games Roomம் சைக்கிள் Parkம் இருந்தன. மட்ச் நடக்கும் நாட்களில் Games room தான் பரி யோவான் அணியினரின் dressing room. அந்த அறையின் சுவர்களிலும் அந்த அறையிலிருந்த உபகரணங்களிலும் பல சுவையான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். Robert Williams மண்டபத்திலிருந்து நீண்ட இளநீல நிற வாங்குகளை தூக்கிக் கொண்டுவந்து cycle park பக்கம் போடுவார்கள். அந்த வாங்குகளை கிரிக்கட் அணியும்  பயிற்சியாளரும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் தான் அமர்வார்கள். அந்த வாங்குகளில் எப்போதும் ஒருவித இறுக்கம் குடிகொண்டிருப்பது போலிருக்கும். மாணவர்கள் அமர்ந்திருந்தால் மேற்கூறியவர்களிற்கு எழுந்து இடம் விடவேண்டும் என்பது எழுதப்படாத நடைமுறை. 


பரி யோவான் மைதானம் என்றவுடன் நினைவிற்கு வருபவர் எங்கட Grounds Boy மணி. சுறுசுறுப்பாக ஓடியாடி கொளுத்தும் வெய்யிலிலும் மைதானத்தில் வேலை செய்யும் மணி, எல்லோரோடும் அன்பாகவும் நட்போடும் பழகுவார். Games room திறப்பும் மணியிடம் தான் இருக்கும், பரி யோவானின் பெறுமதி வாய்ந்த விளையாட்டு உபகரணங்களிற்கு அவர்தான் காவலாளி. 1987  ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த இந்திய இராணுவத்தின் தாக்குதலில், தான் பணியாற்றிய பரி யோவான் மைதானத்தடியிலேயே மணி பலியானார். 

தொடரும்..
3 comments:

  1. கிரிக்கெட்டை மட்டும் வளர்த்து பிரயோசனம் இல்ல .மத்த விளையாடயும் கொஞ்சம் விரிவுபடுத்துங்கள் .....big match மாதிரி please...

    ReplyDelete
  2. Appappa Kingsly,ummidam ivvalavu ezhuththu thiramaiya?hats off.ground Patti sollum podhu neer discus al adipattu vizhundadhu marakkamudiyadha sambavam.

    ReplyDelete