Friday, 28 October 2016

பரி யோவானின் மைதானம் 2
பரி யோவானின் Primary school பொறுப்பாளராக துரைச்சாமி மாஸ்டர் இருந்த காலத்தில் இடைவேளை நேரத்தில் விளையாடக் கூடாது என்ற கொடுமையான விதி கடைபிடிக்கப்பட்டது. ஒளித்து பிடித்து விளையாடினவன், ஓடிபிடிச்சு விளையாடினவன், மாபிள்ஸ் அடிச்சவன் என்று சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே துரைச்சாமி மாஸ்டரின் அறையில் அடிவாங்க அணிவகுக்க, கிரிக்கெட் விளையாடி போர்க்குற்றம் இழைக்க யாரும் துணியவில்லை.


1980களின் ஆரம்ப காலங்களில் பாடசாலை பின்னேரம் மூன்றரை மணிவரை நடைபெற்றது. இடையில் பத்துமணிக்கு ஒரு சிறிய இடைவேளை, பின்னர் மதியம் ஒரு மணிநேரம் இடைவேளை விடப்படும். இந்த இரு இடைவேளைகளிலும் பரி யோவான் மைதானத்தில் மத்திய பிரிவு மாணவர்களின் வகுப்புகளிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அரங்கேறும்.  வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை கிடுகிடுவென சாப்பிட்டு விட்டு, பரி யோவானின் மைதானத்தில் மத்திய பிரிவு அண்ணாமார் விளையாடும் கிரிக்கெட் மட்ச் பார்க்க பறப்போம். 


ஒரே நேரத்தில் நாலைந்து மட்ச்கள் நடக்கும். ஒரு பக்கத்தில் சூட்கேஸுகள் விக்கெட்டுகளாக, அதை சுற்றி பார்வையாளர்கள் சூழ்ந்து நிற்க, மைதானம் நிரம்ப fielders சூழ, எங்கிருந்தோ வந்து போலர் பந்து வீச, பட்ஸ்மன் விளாசுவார். நாங்கள் Primary school படிக்கும் காலத்தில், சதீசனின் வகுப்பு விளாயாடும் பிட்சிலும், சஞ்சீவன்-அகிலன் விளையாடும் பிட்சிலும் தான் பார்வையாளர்கள் அதிகமாக இருப்பார்கள். 


நாங்கள் Middle schoolற்கு வர, நாட்டு பிரச்சினை காரணமாக பாடசாலை நேரம் சுருங்கி, இரண்டு மணிக்கே பாடசாலை முடிவடைய தொடங்கியது. 
எங்களிற்கு கிரிக்கெட் விளையாட கிடைத்த இடைவேளை நேரமும் சுருங்கியது. இடைவேளை மணியடித்ததும் ஓடி வந்து, பிட்ச் பிடித்து, சூட்கேஸ் வைத்து, பழையபடி field set பண்ணி, முதல்நாள் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தை தொடர்ந்து, இடைவேளை முடிய மணியடிக்க ஓடிப்போய் தண்ணி குடித்துவிட்டு, Prefect அண்ணா வரமுதல் வகுப்பிற்கு பறந்து, கதிரையில் இருக்க, பக்கத்திலிருக்கும் நல்லவன் ஸ்கோர் கேட்ப்பான். நாம் ஸ்கோர் சொல்லுவதை மட்டும் கண்ட மொனிட்டர் சனியன், பெயரை கரும்பலகையில் எழுதுவான். பிறகென்ன, அடுத்த வகுப்பெடுக்க வரும் சரா மாஸ்டரின் பிரம்பு குxxயை பதம்பார்க்கும்.

-----------------------------------------------------

அண்மையில் Big Match பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்த போது மீண்டும் பரி யோவான் மைதானத்தில், பாடசாலை இடைவேளை நேரம் கிரிக்கட் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நிகழ்வுகளைப் பதிவாக்கிய "மீண்டும் பள்ளிக்கு" என்ற பதிவிலிருந்து

"பழைய சைக்கிள் பார்க் தாண்டி, மைதானத்திற்குள் காலடி வைக்கவும், இடைவேளை மணியடிக்கவும் சரியாகவிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த மாணவர்கள், சூட்கேஸை விக்கெட்டுகளாக வைத்து பிட்ச் பிடித்து, கிரிக்கட் விளையாட தொடங்கினார்கள். சில நிமிடங்களில் மைதானம் நிறைய மாணவர்கள், ஒரே நேரத்தில் ஆறேழு கிரிக்கட் மட்ச்கள்.

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே..

"டேய் ஜூட், ஏலுமேன்றா என்னை அவுட்டாக்கு" ஆதி சவால் விட்டான்.

"தம்பி, ஒருக்கா எங்களை விளையாட விடுங்கோ" ரோய் பிரதீபன் மிரட்டலாக வேண்டுகோள் வைத்தான்.

"இந்தாங்கோ அங்கிள்" 

"அங்கிளோ, அடி....அண்ணாவென்று சொல்லடா" பந்து தந்த தம்பி பயந்தே போனான்.

பந்தை கையில் எடுத்து கொண்டு திரும்பி பார்த்தால், அந்த நெடிய மரமும், தண்ணீர் தாங்கியும், தண்ணீர் குடிக்கும் பைப்புகளும், பஞ்சலிங்கம் மாஸ்டர் வீடும் நினைவில் நிழலாட, மரத்திற்கு கீழே கச்சான் விற்கும் ஆச்சியும், ஜஸ்கிரீம் விற்கும் சிவகுருவும் கண்முன் தெரிந்தார்கள்."

------------------------------------------------------


இரண்டாம் தவணை ஆரம்பத்தில், பரி யோவான் மைதானம் மெய்வல்லுனர் போட்டிகளிற்கான களமாக அவதாரம் எடுக்கும். சேவியர் மாஸ்டரும், பின்னாட்களில் டோனி கணேஷன் மாஸ்டரும் வழிநடத்த மணியும் செபஸ்ரியம்பிள்ளையும், மைதானத்தை சுற்றி 300 மீட்டர் tracksற்கு சுண்ணாம்பு கோடு இடுவார்கள். Dining hall பக்கமிருந்து தொடங்கும் 100m track, கிரிக்கெட் பிட்சை ஊடறுத்து கம்மாலை கம்பஸடியில் முடியும்.  Scoreboardற்கு முன்னாள் high jump பிட்சும் Paul vault பிட்சும் உருவெடுக்கும். Physics labற்கு முன்னால்  shot putற்கும், Fleming hostelற்கு முன்னால் javelline throwவிற்கும், களங்கள் தயார்படுத்தப்படும். 


மூன்றாம் தவணை மழையில் சுண்ணாம்புக் கோடுகள் அழிய, உதைபந்தாட்டத்திற்கு goal postகள் நடப்படும்.  Robert Williams மண்டப பக்கமாகவும் Principal bungalow பக்கமாகவும் அவை எழுப்பப்படும். 3.30ற்கு u15ற்கு தொடங்கும் போட்டிகள் 5 மணியளவில் u19ற்கு தொடங்க ஆட்டம் சூடுபறக்கும். பற்றிக்ஸ் கல்லூரி அணியுடனான ஆட்டங்களில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும். பச்சை மஞ்சள் ஜேர்ஸி அணிந்து, நிலத்தை தொட்டு பிதா சுதன் போட்டு விட்டு, பற்றிக்ஸ் அணியினர் களமிறங்க, dining hall பக்கத்தில் நிரம்பி வழியும் பற்றிக்ஸ் அணியினரின் ஆதரவாளர்களின் ஆரவாரம் கச்சேரியடியில் கேட்கும். 


பாதுகாப்புக்கு காரணங்களிற்காக எங்களுக்கு Old Park பக்கம் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். சிவப்பு கறுப்பு வரிகள் நிறைந்த ஜேர்ஸி அணிந்து மிடுக்காக பரி யோவான் அணி களமிறங்கும். பரி யோவானின் புகழ்பூத்த பழைய மாணவர்களான அன்டனிப்பிள்ளை மாஸ்டரும் அருள்தாசன் மாஸ்டரும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்த  காலத்தில், பற்றிக்ஸ் அணியினருக்கு பரி யோவான் அணி சிம்ம சொப்பனமாக இருந்தது. அதன் உச்சக் கட்டமாக 1985ல் இயக்கம் நடாத்திய பாடசாலைகளிற்கிடையிலான பண்டிதர் கிண்ண கோப்பையை வென்று சாம்பியனானது பரி யோவான் உதைபந்தாட்ட அணி. பண்டிதர் கோப்பை வென்ற பரி யோவான் அணிக்கு பார்த்திபன் அண்ணா தலைமை தாங்க, அருள்தாசன் மாஸ்டர் பயிற்சியாளர்.


1983ல் ரோயல், சென் தோமஸ், ட்ரினிட்டி கல்லூரிகளிலிருந்து கலவரத்தால் இடம்பெயர்ந்து வந்து பரி யோவானில் இணைந்த மாணவர்களதும் ஆசிரியர்களதும் முன்னெடுப்பாக, கோல் போஸ்டிற்கு மேல் இரு நீண்ட மூங்கில் தடிகளை கட்டிவிட்டு, ஒரு கண்காட்சி ரக்பி ஆட்டமும் பரி யோவான் மைதானத்தில் அரங்கேறியது. கம்பஸ்காரன்களோடு ஹொக்கி மட்சும் அதே மைதானத்தில் நடக்கும். 
ஹொக்கி கோல் போஸ்டுகள் பழைய பூங்கா பக்கமும் Dinning Hall பக்கமும் நிறுவப்படும்.


1980களின் ஆரம்பத்தில் பழைய பூங்காவில் இராணுவ முகாம் இருந்த காலத்தில் பரி யோவான் மைதானத்தில் இராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்கும்.  காலை வேளைகளில் மைதானத்தை வட்டமிட்டு விட்டு புழுதி கிளப்பியவாறே தரையிறங்கும் ஹெலியை பார்த்த ஞாபகம் இன்றும் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஹெலியிலிருந்து இறங்கும் இராணுவ தளபதிகளை, பச்சை நிற ஜீப்புகள் காவிச் செல்லும். இயக்கம் பலம் பெற தொடங்க, ஹெலி இறங்கிறதும் நின்றுவிட்டது, பழைய பூங்கா இயக்கத்தின் பயிற்சி பாசறையாகியது.


பரி யோவானின் மைதானம் ஒரு புனித பிரதேசம் போல் பாதுகாக்கப்படும். கனெக்ஸ் அண்ணா SPயா இருந்த காலத்தில், ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிய ஏதோ practice இருந்தது, அது முடிய மூன்று மணியாகி விட்டது.  வெறிச்சோடியிருந்த middle school சைக்கிள் parkற்குக்கால சைக்கிளை எடுத்து, விலாசமாக வீதியை தாண்டி மைதானத்தின் ஓரத்தால சைக்கிளில் ஏறி மிதித்துக் கொண்டே பீட்டோ ஹோல் பக்கம் போனேன்.  பீட்டோ ஹோல் முடக்கில் கனெக்ஸ் அண்ணா நிற்கிறார், டக்கென்று சைக்கிளால் பாய்ந்து இறங்கினேன். "இங்க வாரும் ஐசே" கனெக்ஸ் அண்ணாவின் குரலில் கண்டிப்பு நிறைந்திருந்தது. சைக்கிளை உருட்டிக் கொண்டே கிட்ட போய் "அண்..." சொல்லி முடியவில்லை, பளார்.. பளார், கன்னத்தில் ரெண்டு அறை இடியாய் இறங்கியது, மின்னல் கண்ணுக்கு தெரிந்தது. கலங்கின கண்ணை கசக்குவதா, வலிக்கும் கன்னத்தை தடவுவதா என்று நான் யோசிக்க "க்ரவுண்டிற்குள் சைக்கிள் ஓடக் கூடாது, போம்", என்னுடைய கன்னத்தில் அறைந்த கனெக்ஸ் அண்ணா, தன்னுடைய ஹொஸ்டல் அறையை நோக்கி நடக்க தொடங்கினார். 


நாங்க சைக்கிள் ஓடக் கூடாது, ஆனா ஆமி ஹெலி இறக்கலாமா அண்ணா, என்று திருப்பி கேட்கிற துணிவு அன்றும் வரவில்லை, இன்றும் வராது. 

பரி யோவானின் மைதானம் 1Friday, 21 October 2016

பரி யோவானின் மைதானம்

பரி யோவான் கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்லூரியின் கிரிக்கட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று இலட்சிய கனவை சுமந்து கொண்டு தான்  நுழைவாயில் தாண்டுவார்கள். யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் என்றால் பரி யோவான் கல்லூரி தான்.யாழ்ப்பாணத்தின் ஒஸ்ரேலிய கிரிக்கட் அணி, பரி யோவான் கல்லூரி கிரிக்கட் அணி என்றும் சொல்லலாம். 


பரி யோவான் கல்லூரியினரின் எடுப்புக்கும் கனவான்களின் விளையாட்டான கிரிக்கட்டுக்கும் நல்ல பொருத்தம். கிரிக்கட்டில் பரி யோவான் அணியை வெல்ல வேண்டும் என்று பிற கல்லூரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார்கள்.  பரி யோவான் கல்லூரிக்கு கிரிக்கட் விளையாட வேண்டும் என்ற கனவோடு பிரதான வாயிலை கடந்து உள்நுழையும் மாணவர்களை பரி யோவானின் அழகிய மைதானம் வரவேற்கும்.


நாங்கள் படிக்கும் காலங்களில் முதலாவது தவணை வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் U19 கிரிக்கட் ஆட்டங்கள் தொடங்கி, சனிக்கிழமை முழு நாளும் நடக்கும். பள்ளிக்கூடம் முடிய மைதானத்தில் மட்ச் பார்க்க மாணவர்கள் ஓடி வருவார்கள். வெள்ளைத் தொப்பி அணிந்து ஸ்டைலாக பரி யோவான் அணி களமிறங்க, தாங்களும் களமிறங்கும் நாளை எண்ணி, மைதானத்திற்கு வெளியே மரங்களிற்கு கீழ் இருந்தும் நின்றும் மட்ச் பார்க்கும் மாணவர்கள் அங்கலாயப்பார்கள். 


பரி யோவானின் மைதானம் மிகவும் அழகானது. உண்மையில் சொல்லப் போனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே மிக அழகான மைதானங்கள் வரிசையில் பரி யோவான் மைதானம் நிட்சயமாக இடம்பிடிக்கும். மைதானத்தை சூழ இருக்கும் பெரிய மரங்களும், பழமையான கட்டிடங்களும் ஏன் பாசி படிந்த குட்டிச்சுவர் கூட மைதானத்திற்கு மெருகேற்றும். 


பரி யோவானின் பெருமைமிகு வரலாற்றுச் சின்னமான Robert Williams மண்டபத்தின் வகுப்பறைகள் தான் எதிரணியினரின் dressing room. Robert Williams மண்டபத்திற்கு முன்பாக மூன்று பெரிய இலந்தை மரங்களும் தனியனாக புளியமரமும் பார்வையாளர்களுக்கு நிழல் தரும். மண்டபத்திற்கும் மரங்களிற்கும் இடையில் ஒரு சிறிய வீதி, அந்த வீதியிலிருந்து சைக்கிள் மைதானத்திற்குள் இறங்கினால் மாணவர்களிற்கு கன்னம் மின்னும், மைதானம் ஒரு புனித பிரதேசம் போல் காப்பாற்றப்படும்.


அப்படியே சுத்தி நவீன Peto Hall தாண்டி physics lab பக்கம் வந்தால், முன்று அழகிய கஷுரீனா மரங்கள் கண்களைக் கவரும். உடைந்த தண்டவாள துண்டும் ஒரு பெரிய இரும்புக் கம்பியையும் மணியாக கொண்ட dining hallம் அதைத் தாண்டி Fleming hostelம் மைதானத்தின் அந்த கரையை அலங்கரிக்கும். Fleming hostelற்கு முன்னால் long jump பிட்சடியில் இரண்டு பெரிய மரங்கள் நிற்கும். இந்த இடங்கள் ஹொஸ்டல் காரன்களின் ஏரியா.


மைதானத்தின் மறுமுனையில், "ஏலுமென்றா பண்ணிப்பார்" என்று எதிரணியினரிற்கு சவால் விடுவது போல், கம்பீரமாக score board  நிமிர்ந்து நிற்கும்.  Score boardற்கும் Fleming hostelற்கும் இடையில் இருந்த சின்னக் கட்டிடம்  St. John's Ambulance அறை என்று ஞாபகம். மைதானத்தின் பழைய பூங்கா பக்கமாக சிவப்பு நிற தீந்தடித்த  பரி யோவானின் இரண்டு மாடி Principal Bungalow மைதானத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும். Principal Bungalowவிற்கு முன்னாலிருக்கும் கொட்டாங்காய் மரத்திற்கு, காய் பறிக்க கல்லெறிந்த மறவர்களையும், பிடிபட்டு அடிவாங்கி விழுப்புண்ணடைந்த சிங்கங்களையும் பரி யோவான் வரலாறு பெருமையுடன் நினைவு கூறும்.


கிழமை நாட்களில் பின்னேரங்களில், வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த சூரியகுமார் மாஸ்டர் U13ற்கு, பழைய பூங்கா பக்கமிருந்த netsல் பயிற்சி வழங்குவார். இலவசமாக பரி யோவான் கல்லூரி வழங்கிய இந்த பயிற்சி பாசறையில் இருந்து தான் எங்கள் வகுப்பின் கிரிக்கட் புலிகள் வெளிவந்தார்கள்.  அதைத் தாண்டினால் இப்ப இருக்கும் EM Ponnudurai Pavillion இருந்த இடத்தில் பாசி படிந்த குட்டிச்சுவர் தான் இருந்தது. பழைய பூங்கா வீதியால் போவோர் வருவோர், மதவோரம் சாய்ந்து நின்று சைக்கிளில் இருந்தவாறே மட்ச் பார்ப்பார்கள். 


போதகரின் வாசஸ்தலத்திற்கும் கம்மாலை கம்பஸிற்கும் இடையில் ஒரு மாமரம். கம்மாலை கம்பஸிற்கு மேல்மாடியில் wood workshop, அதைத்தாண்டி நிமிர்ந்து நிற்கும் உயரமான தண்ணீர் தாங்கியும் பஞ்சலிங்கம் மாஸ்டரின் வீடும் மைதானத்தின் ஒரு கோடியின் எல்லைகள். தண்ணீர் தாங்கியிற்கு முன்னால் ஒரு பெரிய மரமும் அதற்கு கீழ் exercise barsம் இருந்தன. அந்த பெரிய மரத்திற்கு கீழ்தான் கச்சான் விற்கும் ஆச்சியும் ஐஸ்கீரீம் விற்கும் சிவகுருவும் வியாபாரம் செய்வார்கள். 


மட்ச் நடக்கும் வெள்ளிக்கிழமை பின்னேரமும் சனிக்கிழமையும் கச்சான் விற்கும் ஆச்சிக்கும் ஐஸ்கிரீம் விற்கும் சிவகுருவிற்கும் வியாபாரம் களைகட்டும். ஒருமுறை அப்பாவோடு மட்ச் பார்க்க வர, அப்பா சிவகுருவிடம் ஐஸ்கிரீம் வாங்கித் தந்து, இனி எனக்கு ஐஸ்கிரீம் கொடுக்க சொல்லியும் தன்னிடம் அதற்கான காசை கேட்கச் சொல்லியும் சொன்னார். அதற்குப் பிறகு சிவகுருவிடம் ஐஸ்க்ரீம் வாங்கிவிட்டு "அப்பாட்ட காசு வாங்குங்கோ" என்பேன். சிவகுரு அப்பாட்ட காசு வாங்கினாரா? எவ்வளவு வாங்கினார்? என்று இன்றுவரை தெரியாது. அண்மையில் சுதர்ஷன் அண்ணாவோடு கதைக்கும் போது தானும் சிவகுருவிடம் கடனிற்கு ஐஸ்கிரீம் வாங்கினதாக சொன்னார். பார்க்கப் போனா சிவகுரு கனபேருக்கு கடனிற்கு தான் ஐஸ்கிரீம் விற்றிருக்கிறார். பிற்காலத்தில் இடம்பெற்ற ஷெல்வீச்சில் சிவகுரு பலியானதாக அறிந்தேன். 


பஞ்சலிங்கம் மாஸ்டரின் வீட்டிற்கும் Robert Williams மண்டபத்திற்கும் இடையில்,  Robert Williams மண்டபத்தின் மறுபக்கமாக Games Roomம் சைக்கிள் Parkம் இருந்தன. மட்ச் நடக்கும் நாட்களில் Games room தான் பரி யோவான் அணியினரின் dressing room. அந்த அறையின் சுவர்களிலும் அந்த அறையிலிருந்த உபகரணங்களிலும் பல சுவையான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். Robert Williams மண்டபத்திலிருந்து நீண்ட இளநீல நிற வாங்குகளை தூக்கிக் கொண்டுவந்து cycle park பக்கம் போடுவார்கள். அந்த வாங்குகளை கிரிக்கட் அணியும்  பயிற்சியாளரும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் தான் அமர்வார்கள். அந்த வாங்குகளில் எப்போதும் ஒருவித இறுக்கம் குடிகொண்டிருப்பது போலிருக்கும். மாணவர்கள் அமர்ந்திருந்தால் மேற்கூறியவர்களிற்கு எழுந்து இடம் விடவேண்டும் என்பது எழுதப்படாத நடைமுறை. 


பரி யோவான் மைதானம் என்றவுடன் நினைவிற்கு வருபவர் எங்கட Grounds Boy மணி. சுறுசுறுப்பாக ஓடியாடி கொளுத்தும் வெய்யிலிலும் மைதானத்தில் வேலை செய்யும் மணி, எல்லோரோடும் அன்பாகவும் நட்போடும் பழகுவார். Games room திறப்பும் மணியிடம் தான் இருக்கும், பரி யோவானின் பெறுமதி வாய்ந்த விளையாட்டு உபகரணங்களிற்கு அவர்தான் காவலாளி. 1987  ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த இந்திய இராணுவத்தின் தாக்குதலில், தான் பணியாற்றிய பரி யோவான் மைதானத்தடியிலேயே மணி பலியானார். 

தொடரும்..
Friday, 14 October 2016

தேவி.. Rock on
பிரபுதேவா என்ற ஆட்டக்காரனை, நடன இயக்குனரை, நடிகனை பிடிக்காதவர்களை இதுவரை சந்தித்ததேயில்லை. பிரபுதேவாவின் ஆடும் ஆட்டத்திலும், நெறிப்படுத்தும் நடனங்களிலும் ஒரு குறும்புத்தனம் குடிகொண்டிருக்கும், எல்லோரையும்
மயக்கும் வன்மை நிறைந்திருக்கும். பிரபுதேவாவில் கிறங்கி நயன்தாராவே அவருடன் குடும்பம் நடாத்திய வரலாற்று சம்பவத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம்  பார்த்து ரசித்தது. பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சைக் குத்துமளவிற்கு நயன்தாராவின் காதல் தீவிரமாக இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.


போன ஞாயிற்றுக்கிழமை மத்தியானம், வழமையாக கொள்ளும் குட்டித்தூக்கத்தை தியாகம் பண்ணிவிட்டு, குடும்பத்தோடு பிரபுதேவா பன்னிரு ஆண்டுகளிற்கு பின்னர் நடிக்கும் "தேவி" படம் பார்க்க Knox Village தியேட்டரிற்கு போனேன். இந்தக் கிழமை Knoxல் மூன்று தமிழ்ப் படங்கள் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் curry facesம் "படம் பார்க்கவோ வந்தனியள்" என்ற வழமையான விசாரிப்புகளும். படம் தொடங்கும் வரை இங்கிலீசில் புளிப்பு கதை கதைக்கும் அன்டிமாரின் தொல்லை. படம் தொடங்கினாப் பிறகு தங்கள் பிள்ளைகளிற்கு  ரன்னிங் கொமன்ட்ரி கொடுக்கும் அம்மாமாரின் அலுப்பு. கெதியில் Village cinemaவில் தமிழ் பேசத்தெரிந்த  டிக்கெட் பரிசோதகர்  தேவை என்ற விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. வடையும் தேத்தண்ணியும் வருங்காலத்தில் விற்கப்பட்டாலும் விற்கப்பட்டலாம்.  


1994ம் ஆண்டில் வெளிவந்த "காதலன்" படத்தை பற்றிய பசுமையான நினைவுகள் இன்றும் நம்மை விட்டகலவில்லை. நக்மா என்ற மகா சொதப்பல் கதாநாயகி நடித்தும், திரையுலகை அதிரவைத்த வெற்றிக் காவியமாக "காதலன்" வலம் வந்தான். ஷங்கரின் இரண்டாவது படம், வளர்ந்து வந்த ரஹ்மானின் சூப்பர் இசை, வைரமுத்துவின் வைரவரிகள், நகைச்சுவையில் தடம்பதிக்கத் தொடங்கியிருந்த வடிவேலுவின் கலகல, மறைந்த ஜீவாவின் ஒளிப்பதிவு என்று திறமையான கலைஞர்களின் கைவண்ணத்தில்  உருவான "காதலனை", தெஹிவளை கொன்கோர்ட்டில் பார்த்த ஞாபகம் இன்றும் நினைவில் நிழலாடுகிறது.  மாதுரி திக்‌ஷித்தின் கால்ஷீட் கிடைக்காதபடியால் தான் நக்மா நடித்ததாக பின்னாட்களில் ஷங்கர் சப்பைக்கட்டு கட்டினார். சிவகார்த்தியேனின் "ரெமோ"விற்கு இருந்த பில்டப்பும், விஜய் சேதுபதியின் "ரெக்கை"யிற்கு இருந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் "தேவி" திரைப்படம் திரையில் மலர்ந்தது. மொடர்ண் பெண்ணை காதலித்து கலியாணம் கட்ட கங்கணம் கட்டியிருக்கும் பிரபுதேவாவின் சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளோடு திரைக்கதை அலுப்புத் தட்டாமல் நகரத் தொடங்கியது. இந்த வயதிலும் வண்டியும் தொந்தியுமில்லாமல் ஸ்லிம்மாக இருக்கும் பிரபுதேவாவை பார்க்க அம்மாவாண எரிச்சல் தான் வந்தது. நயன்தாராவையே மயக்கிய போக்கிரி கில்லாடி அல்லவா.


படம் தொடங்கி பத்தாம் நிமிஷத்தில் "சல்மார்" பாட்டுக்கு பிரபுதேவா ஆடும் ஆட்டத்தோடு கொடுத்த டிக்கட் காசு தீர்ந்துவிடுகிறது. கட்டைச் சட்டை போட்டு எமி ஜாக்சன், இடுப்பை ஆட்டி ஆட்டி cat walk நடந்து, பாடல் முழுவதும் வலம் வந்தாலும் , பிரபுதேவாவின் ஆட்டத்தில் கட்டுண்ட கண்கள் அவரை விட்டு அகலவேயில்லை. பாடலின் இறுதியில் ராஜுசுந்தரத்தின் நுழைவும், "சிக்கு புக்கு" பாடலை நினைவூட்டியதும் அட்டகாசம். காதலனின் "டேக் இட் ஈஸி ஊர்வசி" பாடலைப் போல் "சல்மார்" பாட்டும் இனிவரும் காலங்களிலும் பேசப்படும். "சல்மார்" என்ற ஹிந்தி வார்த்தைக்கு rock on என்று ஆங்கிலத்தில் அர்த்தமாம் என்று whatsappல் ஹிந்தி தெரிந்த நிமலன் பீத்தினான். தமிழில் என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்க தமிழ்ப்பொடியன் பம்பாய்க்கு பறந்திருப்பதாக வதந்தி ஒன்று உலாவுது.


மொடர்ண் பெண்ணை கட்டும் பிரபுதேவாவின் கனவு கானலாகி, மாடு மேய்க்கும் தமன்னாவை கலியாணம் கட்டும் காட்சிகள் கலகலப்பு. கலியாணத்தை குழப்ப பாலாஜி போடும் சொதப்பல் திட்டங்களும், பாலாஜியின் ஒற்றை வரி express modulation காமெடிகளும் சிரிக்க வைக்கின்றன. மரணப் படுக்கையில் கிடக்கும் பாட்டியை சுத்தி நடக்கும் ஒப்பாரிகளும் பெண் பார்க்கும் படலமும் சுவாரசியம். 


நடிகையாகாமல் செத்தவரின் ஆவி தமன்னாவிற்குள் புகுந்து அவரை ஆடவும் நடிக்கவும் வைக்கும் இடத்தில் லாஜிக், உதயன் பத்திரிகையின் எள்ளெண்ணெயில் எரிந்து சாம்பலாகிறது. நடிக்க விரும்பிய ஆத்மா இன்னொருவரின் உருவத்தில் தன்னை வெளிக்காட்டுவது சரியா என்று ஒரு சாரார் ஆவேசப்பட, "ஐசே, இது இயக்குனர் விஜய், அமலாபாலின் கதையை படமாக்கியிருக்கிறார்" என்று ஒரு குசும்பர் கொடுப்பிற்குள் சிரித்து அவர்களை சாந்தப்படுத்தினார். புத்திஜீவிகள், இது அந்நியன் படம் மாதிரி Split personality கதை, சனத்திற்கு விளங்க வைக்க இயக்குனர் விஜய், பேயை வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறார் என்று FBல் கருத்துத் தெரிவித்தார்கள்.


தமன்னாவிற்கு இந்த படத்திற்கு முதல் "கடுப்பாக்கும் நடிகைகள்" பட்டியலில் தான் இடமளித்திருந்தேன். கிளாமர் பேயாகவும் அப்பாவி மாட்டுக்கார பெண்ணாகவும் அவதாரங்கள் எடுத்து, "தேவி"யில் தமன்னா கண்களுக்குள் நிறைந்துவிட்டார். அட்டகாசமான ஆட்டத்திலும் அலட்டிக்கொள்ளாத காமெடியிலும் அசத்தலான நடிப்பிலும் பிரபுதேவாவிற்கு சற்றும் சளைக்காமல் தமன்னா "தேவி"யில் கலக்கியிருக்கிறார். 


பிரபுதேவா, பேயோடு சமாதான உடன்படிக்கை (agreement) எட்டும் காட்சிகள் அருமை. ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இந்தப் படம் எடுக்கப்பட்டதால் பல இடங்களில் ஹிந்தி படச்சாயல் எட்டிப்பார்த்து வெறுப்பேற்றுகிறது. "சல்மார்" பாடலைத் தவிர பிற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டாமல் போனதிற்கும் இந்த ஹிந்திப் பாதிப்பே காரணமாயிருக்கலாம். இசையமைப்பாளர் யாரென்று யாருக்காவது தெரிந்தால் இன்பொக்ஸில் சொல்லுங்கோ.


தமிழ் சினிமாவிற்கு இது பேய்ப்பட ஸீஸன். முனி, பிஸ்ஸா, அரண்மனை, மாஸ், மாயா, ஜாக்சன்துரை என்று வரிசையாக பேய்ப்படங்கள் வந்து தமிழ் ரசிகர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் காலம். போதாக் குறைக்கு ஜீவி பிரிகாஷ் வேற பேய்ப்படம் நடிக்கிறாராம், கொடுமைடா சாமி. "தேவி"யில் வரும் பேயோ எந்தவித அச்சமூட்டலுமில்லாமல் பதைபதைப்புமில்லாமல் நம்மை பேயை ரசிக்க வைக்கிறது. காதை கிழிக்கும் பேய்ச் சத்தங்களும் கிராபிக்ஸ் பம்பரத்துக்களும் இல்லாமல் ஒரு பேய்ப் படத்தை இயக்கிய இயக்குனர் விஜயை பாராட்டியே ஆகவேண்டும். கோரமான பேய்களை திரையில் பார்த்து வாழ்க்கை வெறுத்துப் போனவர்களிற்கு "தேவி"யில் கிளுகிளுப்பூட்டும் தமன்னாப் பேய் ஒரு நல்ல மாறுதல். 

தேவி.. குடும்பத்தோடு பேய் தரிசனம். 

Friday, 7 October 2016

இரவு"இரவுக்கு ஆயிரம் கண்கள்"

இரவுகள் இனிமையானவை, இரவுகளை ரசிக்க தெரிந்தவர்களிற்கு இரவுகள் உறக்கத்திற்கு மட்டுமல்ல என்பதை அறிந்திருப்பார்கள்.  இரவுகள் நிம்மதியானவை, பகற்பொழுதின் பரபரப்பு இல்லாத அமைதியை தருபவை. இரவுகள் ஆனந்தமானவை, மனதிற்கு பரவசத்தையளிப்பவை.  இரவுகள் மகிழ்ச்சியானவை, கவலைகள் மறந்து கனவுகளுடன் கைகோர்க்கும் கணங்களுக்கானவை. "இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலிற்கு ஒன்றே ஒன்று" என்ற கண்ணதாசன் வரிகள் இரவுலாவிகளை (Nocturnals) மனதில் வைத்துத்  தான் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்.  


"காலம்பற எழும்பி படிடா, அப்பத்தான் மூளைக்குள் நிற்கும்" என்று எல்லா அம்மாமாரும் தங்கள் பிள்ளைகளிற்கு ஓதும் மந்திரம் எனக்கும் ஒதப்பட்டது. ஜந்து மணிக்கு அடிக்கும் அலார்ம் சத்தத்திற்கு எழும்பி, பேய் பிசாசுக்கு பயந்து செபம் சொல்லியபடியே ஓடிப்போய் கிணற்றடியில் முகம் கழுவி, அரை நித்திரையில் தேத்தண்ணி குடித்துவிட்டு, செல்வவடிவேலின் விஞ்ஞான விளக்கம் புத்தகத்தை திறக்க.. கொட்டாவி எட்டிப்பார்க்கும், படிப்பு மட்டும் ஏறாது.


நகுலேஸ்வரன் மாஸ்டர் காலையில் ஐந்து மணிக்கு வகுப்பு நடத்துவார். நடுங்கும் குளிரில், சைக்கிளிற்கு ஹெட்லைட் பூட்டி, பற்றிக்ஸ் சதாவோடு, சுவாமியார் வீதியிலிருந்த டெலோ காம்பில் நித்திரை கொள்ளும் சென்ரிக்கு "குட் மோர்னிங் அண்ணா" சொல்லி கடுப்பேத்தி, ஏச்சு வாங்கிய காலம் நினைவில் நிழலாடுகிறது.  பின்னர் மட்ஸ் ஒகஸ்ரின் மாஸ்டரின் காலை ஆறு மணி வகுப்பிற்கு, யாழ்ப்பாண winterற்கு Beanie தொப்பி அணிந்து, சுண்டுக்குளிக்கு முன்னால் இருக்கும் CRPF பொம்பள பொலிஸ் காம்பின் வீதி தடைகளை இளங்கோவோடு சேர்ந்து அகற்றிவிட்டு  போனதும் இன்னும் நினைவில் நிற்கிறது. 1988ம் ஆண்டு இப்படித்தான் ஒரு நாள் காலம்பற ஐந்து மணிக்கு எழும்பி தவணைப் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்க, இந்தியன் ஆமி பிடித்துக் கொண்டு போய்  சந்தியில் இருக்க வைத்து விட்டான். சுற்றிவளைப்பில் ஊர்ப்பெடியள் எல்லாம் சந்தியில் வந்துசேர, தலையாட்டியின் தரிசனம் பார்த்து விட்டுத் தான் பள்ளிக்கூடம் போனோம்.  வீட்டில் லைட் போட்டிருக்கிறதை கண்டுவிட்டு தான் இந்தியன் ஆமி வந்தவன் என்று அம்மாக்கு காரணம் சொல்லி காலையில் எழும்பிப் படிக்கும் அரியண்டத்தை சில காலங்கள் தவிர்த்தேன்.OLற்கு சீரியஸாக படிக்க தொடங்கின காலம் முதல், இரவில் படித்தால் தான் மண்டையில் நிற்கிறது என்பது புலப்பட தொடங்கியது. உயர்தர பரீட்சை நெருங்கும் காலங்களில் அதிகாலையில் கோழி கூவ மட்டும் படித்துவிட்டு, படுக்கப் போகும் நாட்களில், இரவுலாவியாக மாறிக்கொண்டிருந்தேன். காலம்பற முழுக்க நித்திரை கொண்டு எழும்பி, பின்னேரம் வெள்ளவத்தை தமிழ் சங்கத்திற்கு புத்துணர்ச்சியுடன் டியூஷனிற்கு போன காலத்தை இன்று நினைத்தாலும் இனிக்கும்.இரவு அமைதியானது என்ற பொதுவான அபிப்பிராயத்தை இரவுலாவிகள் மறுப்பார்கள். இரவின் சத்தங்கள் இனிமையானவை என்று சண்டைக்கு வருவார்கள். பகலின் இரைச்சல், இரவில் இல்லாமல் போக, இரவில் இயற்கையின் ஒலிகள் துல்லியமாக கேட்கும். மரங்களின் அசைவும், இலைகளின் சலசலப்பும், மழை மண்ணை முத்தமிடும் சத்தமும் இரவில் கேட்கும் போது அலாதியாக இருக்கும். இரவில் நிலவு மேகங்களை கடந்து உலாவரும் ஓசையையும் இரவுலாவிகள்  கேட்டு ரசித்திருப்பார்கள். பெளர்ணமி  நாட்களில் நட்சத்திரங்களின் சம்பாஷணைகளையும் கேட்டதாக கடும்போக்கு இரவுலாவிகள் கதையளப்பார்கள். 


ஜெயமோகனின் "இரவு" நாவல் இரவை மையமாக வைத்து பின்னப்பட்டது. நாவலில் இரவை ஒரு யானைக்கு ஒப்பிடுவார் ஜெமோ. "இரவு ஒரு யானை, சாமரக்காதுகள் அசைய, கொம்புகள் ஊசலாட, பொதிகள் போல் காலடி எடுத்து வைத்து, மெல்ல நடந்து வரும் யானை" என்று ஜெமோ மயக்ககுவார். பிறிதோரிடத்தில் "பகல் மறையும் போது தான் அழகு பிறக்கிறது" என்று ஜெமோ இரவின் துதி பாடுவார். 


சனிக்கிழமை 23 ஜூலை 1983, நள்ளிரவு,  யாழ்ப்பாணம் வரலாற்றில் முதல்முறையாக குண்டு சத்தத்தால் அதிர்ந்தது. அதற்கு பின் வந்த காலங்களில் இரவில் குண்டு சத்தங்கள் கேட்டால் "பொடியள் கோட்டைக்குள்  ஆமிக்கு விளையாட்டு காட்டுறாங்கள்" என்று சனத்திற்கு தெரியும். இரவில் பரா வெளிச்சத்தை அடித்துவிட்டு ஹெலிகள் பறந்து கண்டபாட்டிற்கு சுட, ஆமி கண்மண் தெரியாமல் ஷெல்லடிக்க, பொம்மரும் எட்டிப்பார்க்க, சனம் பங்கருக்குள் அடைக்கலம் தேடும். 


யாழ்ப்பாணத்தில் கரண்ட் வாறது தடைபட, இரவில் ஊரே அடங்கி விடும். இரவு எனும் கறுப்பு போர்வையை போர்த்தியபடி ஏழு மணிக்கெல்லாம் யாழ்ப்பாணம் உறக்கத்தை அணைக்க தொடங்கிவிடும். ஊரெல்லாம் இரவிற்கு அடிபணிய, மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து விட்டு யாழ்ப்பாணத்தின் மண்டைக்காய்கள் படிக்கத் தொடங்குவார்கள். குப்பி விளக்கில் படித்தும் உயர்தர சோதனையில் சாதனை புரிந்த மாணவர்களை நினைத்து யாழ்ப்பாண மண்ணோடு இணைந்து இரவும் பெருமை கொள்ளும். 

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்று வள்ளலார் சொன்னது கூட இரவை மனதில் வைத்துத்தான் என்று ஜெயமோகன் "இரவு" நாவலில் தர்க்கிக்கிறார். "தனித்திருன்னா சாதாரணமா மத்தவங்கள மாதிரி இருக்காதேன்னு அர்த்தம். பசித்திருன்னா உடலாலேயும் மனசாலேயும் பசியோட இருன்னு அர்த்தம்.  எதுக்கு விழித்திருன்னு சொன்னார்? விழிப்புன்னா என்ன? அகவிழிப்பைச் சொல்லலை. அது தியானம் மூலம் வரக்கூடியது. அகவிழிப்பு வர்ரதுக்கான வழியை… அவர் சொல்ற விழிப்புங்கிறது தூங்காம இருக்கிறதைத்தான்" என்கிறார் ஜெமோ. 


ஒஸ்ரேலிய தமிழர்களிற்கு வெள்ளிக்கிழமை இரவு என்றால் இன்பத்தமிழ் வானொலியின் ஆனந்த இரவு தான் ஞாபகம் வரும். பாலசிங்கம் பிரபாகரன் தொகுத்து வழங்கும் talkback நிகழ்ச்சி ஆனந்த இரவு. சுவாரசியமாகவும் சூடாகவும் அரங்கேறும் ஆனந்த இரவு,  அரசியல் சமூகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பற்றிய மக்கள் அரங்கமாக விடிய விடிய தொடரும். பாலா பிரபா அரசியல்வாதிகளையும் சமூக தலைவர்களையும் கேள்விகளால் துளைத்தெடுக்க, அழைப்பெடுக்கும் சனம் அவரோடு சண்டைக்கு போகும். போராட்ட காலத்தில் மக்களை ஒருங்கிணைத்த பெருமை இன்பத்தமிழ் வானொலியையே சாரும். 


காதலிற்கும் காமத்திற்கும் இரவு தான் பிடிக்கும்.  இரவின் இனிமையில் காதலில் லயிக்கும் கணங்கள் வர்ணணைகளிற்கு அப்பாற்பட்டவை. காதலியோடு கரம்கோர்த்துக் கொண்டு நிலவையும் மேகங்களையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தால் சொர்க்கத்தை மண்ணுலகில் உணரலாம். காதலியில்லா இரவுகள் நரகமாகத் தான் தோன்றும். 


சகலகலாவல்லவனில் சிலுக்கோடு கமல் ஆட்டம் போட்ட "நேத்து ராத்திரி.. யம்மா" பாட்டுத்தான் மிகப் பிரபலமான இரவுப்பாட்டு. "நேத்து ராத்திரியை" விட மைக்கல் மதன காமராஐனில் ரூபிணியோடு கமல் போட்ட "சிவராத்திரி" இரவுப் பாட்டு ஆட்டத்தில் கிளுகிளுப்பு அதிகமாக இருக்கும். ஆட்டத்தில் இருக்கும் கிளுகிளுப்பை பாடல் வரிகள் இன்னும் சூடேற்றும்.

சிவராத்திரி 
தூக்கம் ஏது... ஹோ
முதல் ராத்திரி 
தொடங்கும்போது…ஹோ
பனி ராத்திரி ஓ... 
பட்டு பாய் விரி
சுப ராத்திரி ஓ... 
புது மாதிரி விடிய விடிய
சிவராத்திரி தூக்கம் ஏது... ஹோ

காதலிற்கும் காமத்திற்கும் கற்பதற்கும் களிகூறுவதற்கும் களமமைத்திடும் இரவுகளை கொண்டாடுவோம். இரவுகளை ரசிக்கும் 
இரவுலாவிகளோடு களிகூறுவோம். 

இரவுகள்.. 

இனிமை
நிம்மதி
ஆனந்தம்
மகிழ்ச்சி