Friday, 30 September 2016

Sportstar
வியாழக்கிழமை மத்தியானம்  தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.

"டேய்.. என்ன செய்யிறாய்?"

"வேலை தான்டா செய்யுறன்"

"அதை தான் எப்பவும் செய்யுறாய்"

"உனக்கு இப்ப என்னடா பிரச்சினை?"

"வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய சம்பவம் பற்றி கேள்வி கேட்கோணும்.. வடிவா யோசிச்சு சொல்லு"

"கொஞ்சம் பொறு கதவை பூட்டிட்டு வாறன்... ம் இப்ப சொல்லுடா"

"அந்த காலத்தில யாழ்ப்பாணத்தில் நான் சேர்த்து அடுக்கி வைத்திருந்த Sportstar மகஸினுகளிற்கு என்னடா நடந்தது?

"அது வந்து.. நீ கொழும்புக்கு போனா பிறகு.."

"பிறகு..."

"சொன்னா எனக்கு அடிக்க வருவாய்..அம்மாவை கேள் "

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

-----------------------------------


1980களில் கிரிக்கெட்டை விரும்பிய எவரும் Sportstar magazineஐ மறந்திருக்க மாட்டார்கள்.  சென்னையிலிருந்து பதிப்பாகும் The Hindu குழுமத்தின் வாராந்த விளையாட்டுத்துறை சஞ்சிகை Sportstar. 'For a ringside view of the world of sport’ என்ற தலைப்பு வாசகங்களைத் தாங்கி வெளிவந்த Sportstar, இன்டர்நெட்டும் டீவியும் இல்லாத காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எங்களுக்கு விளையாட்டு உலக செய்திகளை அறிய கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.


அப்பா கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், வாரா வாரம் பொலித்தீன் பேப்பரில் சுற்றி தபாலில் Sportstar வீடு தேடி வரும். பிரச்சினை தொடங்கி, தபால் ரயில் ஓடுவது தடைபட, கிழமை தோறும் Sportstar வாறதும் தடைபட்டு போனது. பூபாலசிங்கத்திற்கு வரும் Sportstar வந்து ஓரிரு நாட்களிலேயே விற்று முடிந்துவிடும். மகஸினுற்குள் என்ன இருக்கு, நடுப்பக்க போஸ்டரில் யாருடைய படம் வந்திருக்கு என்று விடுப்பு பார்க்க வாறவர்களை எதிர்கொள்ள, பூபாலசிங்கத்தார் புத்தகத்திற்கு நாலு பக்கமும்  ஸ்டேப்பில் அடித்து வைத்திருப்பார். பரி யோவான் நூலகத்தில் Sportstarக்கு ஆமைப்பூட்டு போட்டு பூட்டாத குறையாக பந்தோபஸ்து போடப்பட்டிருக்கும். புதுசாக வாற Sportstar மகஸின்கள் அநேகமாக லைப்ரரியனிடம் தான் இருக்கும். லைப்ரரியன் மிஸ் நங்கை வித்தியானந்தன் கொஞ்சம் கோபக்காரி, வலு கண்டிப்பானவ கூட. ரமோ போன்ற நல்லவன்கள் போய் கேட்டா டக்கென்று கிடைக்கும், எங்களுக்கு ஏகப்பட்ட எச்சரிக்கைகளுடன் தான் Sportstar கையில் வரும். பழைய Sportstar மகஸின்களிற்கும் நடுவில் ஒரு பலகை வைத்து lock அடித்திருப்பார்கள், திருட்டு போகமலிருக்கவாம். லைப்ரரியன் நங்கை அக்கா இப்போ மெல்பேர்ணில் தான் வசிக்கிறா, பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் கண்டு கதைப்பா. 


1978ல் முதல் பதிப்பை தொடங்கிய Sportstarன் பக்கங்கள் அந்த காலத்திலேயே glossyயாக இருந்தது அதன் கவர்ச்சியை அதிகரித்தது. பார்வைக்கு விருந்தாகும் கிரிக்கெட் வீரர்களின் அக்‌ஷன் வண்ணப்படங்கள்  Sportstarன் தனித்துவம். படங்களிற்கு வலுச்சேரக்கும் ஆழமான வர்ணணைகளும் விமர்சனங்களும் ஸ்கோர்கார்ட்டுகளும் Sportstarஐ எல்லோரும் கொண்டாட வைத்தது. Sportstar வாசித்து ஆங்கில மொழியாற்றலை பெருக்கிய தலைமுறை ஒன்றும் யாழ்ப்பாணத்தில் உருவானது.


யாழ்ப்பாணத்தில் பலரை இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்களாக உள்வாங்கிய பெருமையும் Sportstarயே சாரும். ரஞ்சி கோப்பை, டுலீப் ட்ரோஃபி என்று இந்தியாவின் மாநில கிரிக்கெட் செய்திகளும் Sportstarல் இடம்பிடிக்க, எம்மையறியாமல் நாங்கள் இந்தியாவின் பால் ஈர்க்கப்பட்டோம். 


1980களின் இறுதியில் ஜேவிபிகாரன்கள் இந்திய சஞ்சிகைகளை தடைசெய்ய, கொழும்பில் க்ரீன்லன்ட்ஸிலும் இந்தோ சிலோன் கஃபேயிலும் ப்ரவுண் பேப்பர் பாக்கில் சுற்றி கள்ளமாக Sportstarஐ ஆனை விலைக்கு விற்றார்கள்.   இந்தியன் ஆமி சென்னையிலிருந்து விமானத்தில் பலாலிக்கு Sportstar கொண்டுவந்து  பூபாலசிங்கம் பொத்தகசாலைக்கு சப்ளை பண்ணியதாக ஊரில் வதந்தி உலாவியது. 


அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிகாரன்கள் தமிழ் தேசிய இராணுவம் என்ற TNAக்கு கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்க, நாங்க குமர்பிள்ளைகள் போல் வீடுகளில் அடைக்கப்பட்டோம். பெட்டைகள் ரோட்டில் விலாசமாக சுத்த, நாங்க  Sportstar வாங்க பழசுகளில் தங்கியிருந்த கொடிய காலங்கள். டவுணிற்கு போன பழசுகள் Sportstar வாங்க மறந்து வந்த நாட்களில் ஏற்பட்ட ஏமாற்றமும் ஆற்றாமையும் கலந்த உணர்வை பின்னாட்களில் காதலில் தோல்வியடையும் போது தான் மீள உணர்ந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நண்பன் ஒருவன் சொல்லி கலங்கினான்.


Sportstarஐ வரிக்கு வரி வாசித்து, டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் என்ன நடந்தது என்று வாசித்தறியும் பரவசம் அலாதியானது. R.Mohan தான் அப்போ பிரபலமான விமர்சகர், அவர் எழுதும் பாணி அப்படியே ஆட்டத்தை கண்முன் கொண்டுவரும். வழமையாக அவருடைய விமர்சனத்தை வாசித்து விட்டு தான் ஆட்டத்தின் scorecard பார்ப்பது எனது பழக்கம்.


வாசித்த sportstar எங்கட ரோட்டிலிருக்கும் சுப்ரமணி அண்ணே உட்பட சிலருக்கு மட்டும் இரவல் கொடுப்பேன். பரி யோவானில் யசிக்கும் யாதவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தான். இரவல் கொடுத்தை கவனமாக திரும்ப வாங்கி அலுமாரியில் அடுக்கி வைத்திருப்பேன். மகஸிற்குள் இருக்கும் படங்களை வெட்டுவது, அதுவும் நடுப்பக்க போஸ்டரை கிழிப்பது போன்ற பாதகங்களை அடியேன் செய்வதில்லை. பின்னாட்களில் காதலியை கண்ணும் கருத்துமாக கவனிப்பதற்கான பயிற்சி எடுத்தது  Sportstarல் தான் என்றும் சொல்லலாம்.


Sportstarல் வரும் படங்களிற்கு யாழ்ப்பாணத்தில் ஒரு தனி மார்க்கெட்டே இருந்தது. பரி யோவானில் எங்கள் வகுப்பில் முருகேந்திரன் தான் பெரிய Sportstar வியாபாரி. பண்டமாற்று அடிப்படையிலும் காசிற்கும் முருகேந்திரனிடம் Sportstar படங்கள் வாங்கி விற்கலாம். Sportstar படங்களை வெட்டி CR கொப்பிகளில் ஒட்டி ஒரு albumஆக அமைத்து சிலர் காவிக்கொண்டு திரிவார்கள். பாடசாலை விடுமுறை காலத்தில் கிரிஷாந்தனின் Sportstar அல்பத்தை இரவல் வாங்கிக்கொண்டு போன "நைனா" சிவக்குமரன் (சேரலாதன்), ஊருக்கு போகும் போது அதை கடலில் விழுத்தி விட்டதாக கிரிஷாந்தன் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறான். 


கிரிக்கெட் படங்களிற்கு இருந்த மார்கெட்டை விட, Sportstarல் வரும் டென்னிஸ் வீராங்கனைகளின் படங்களிற்கும் தனியான பாதாள சந்தை பரி யோவானில் இயங்கியது. அந்த பாதாள சந்தையை இயக்கிய மர்ம நபரின் பெயரை இன்றுவரை அந்த இயக்கத்தினர் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். Gabriela Sabatiniயின் படங்ளிற்கு தான் அதிக கிராக்கி இருந்ததாம். அவரை தொடர்ந்து Steffi Grafற்கும் Monica Selesற்கும் தான் மவுசு அதிகமாம்.  Chris Evert அன்டியின் படம் பெரிசாக விலைபோகாதாம். Martina Navratilovaவின் படத்தை பொடியள் கண்டு கொள்ளமாட்டார்களாம்.
Sportstarன் வண்ண பக்கங்கள் பாடசாலையில் புத்தகங்கள் கொப்பிகளின் கவராக மிளிரும். தமிழ் புத்தகத்திற்கு ப்ரவுண் பேப்பர் கவர் போட்டு அதற்கு மேல் ஶ்ரீகாந்தும் செபடானியும் சிரிக்கும் Sportstar பக்கங்களால் கவர் போட்டு அதற்கும் மேலே  பொலித்தீன் கவர் போட்டு கொண்டு வருவாங்கள். பிரபாகரன் மாஸ்டரின் சயின்ஸ் நோட்ஸ் கொப்பியின் முன்மட்டை மூலையில் விவியன் ரிச்சர்டஸ் சிக்ஸ் அடிப்பார், பின்பக்கத்தில் மல்கம் மார்ஷல் முறைப்பார். 


கிரிஷாந்தன் அந்த காலத்தில் ஒரு ரவிசாஸ்திரி விசிறி. ரமோ ஒரு பெரிய கபில் தேவ் ஃபேன். கபில்தேவின் முழுப்பெயர் கபில் தேவ் ராம்லால் நிகன்ஞ் என்பது முதற்கொண்டு எல்லா பயோடேட்டாவும் சுண்டு விரலில் ரமோ வைத்திருப்பான்.  முருக்கரிடம் கபில்தேவ் படம் வந்தால் விழுந்தடித்து ரமோ வாங்குவான். அருள்மொழி ஒரு புயரிஸ்ட், படம் விற்பது வாங்குவது எல்லாம் பிடிக்காது. உதயன் பேப்பரிற்கு அந்த காலத்திலேயே ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட் எழுதுவான், தான் வளரந்து பெரியாளாக வந்து Sportstarல் எழுதோணும் என்ற கனவுடன் திரிந்தவன்.


Sportstarல் வந்த சில படங்கள் இன்றும் கண்முன் நிழலாடுகின்றன. 1982ல் பதினேழு வயது சிறுவனாக West Indies போன சிவராமகிருஷ்ணனின் படம், 1983 உலகக்
கோப்பையை இணைந்து தூக்கிபிடிக்கும் கபில்தேவ் - மொஹிந்தர் அமரநாத்தின் படம் மற்றும் உலகக்கோப்பையை வென்ற பின்னர் கொலரை தூக்கிவிட்டு போஸ் கொடுக்கும் கபில்தேவின் படம் உட்பட பல படங்கள் இன்றும் மனதை விட்டகலவில்லை. 


1985ல் ஒஸ்ரேலியாவில் நடைபெற்ற Benson & Hedges வென்ற இந்திய அணியின் போஸ்டரும், கபில்தேவின் போலிங் அக்‌ஷனை ஆறேழு படங்களாக பிரித்து நடுப்பக்கத்தை அலங்கரித்ததும் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. இங்கிலாந்தை கலக்கிய வெங்சக்காரின் கவர் ட்ரைவ் படத்தைப் பற்றி கிரிஷாந்தன் நினைவுபடுத்தினான். விவியன் ரிசர்ட்ஸின் 56 பந்து சென்சரி அருள்மொழிக்கு இன்றும்கூட நினைவில் நிற்க Sportstar தான் காரணமாம். 


ஒரு காலத்தில் விளையாட்டு ரசிகர்களின் இதயநாதமாக ஒலித்த Sportstar, இணையத்தளங்களும் தொலைகாட்சிகளும் விரிவாகத் தொடங்க மெல்ல மெல்ல மழுங்கத் தொடங்கியது. 1990களில் Magazineஆக இருந்த Sportstarஐ tabloid ஆக மாற்றியதிலிருந்து தொடங்கிய சரிவு, கடந்த பத்தாண்டுகளில் இருமுறை relaunch பண்ணியும் உயிர்பெற மறுத்து, இன்று Sportstar இணையத்தளமாக இயங்குகிறது.

Sportstar: Ringside view of our past

-------------------------------------

"அம்மா.. நான் முந்தி சேர்த்து வைத்த Sportstar மகஸின்களை நான் கொழும்பு வர என்ன செய்தனீங்கள்?"

"தூக்கி குப்பையில் போட்டிட்டன்"

--------------------------------------

No comments:

Post a Comment