Friday, 23 September 2016

அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,


அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,

நமது நாடும் நம் மக்களும் நலமின்றி வாடும் போது உங்கள் ஆத்மா இன்னும் சாந்தியடைந்திராது. ஆதலால், நலமறிய ஆவல் என்று மொக்குத்தனமாக கேட்டு, எங்களை பேயன்களாக்கும் எங்களது இன்றைய தலைவர்கள் போல், உங்களை முட்டாளாக்க விரும்பவில்லை


இந்த ஆண்டுடன் நீங்கள் காவியமாகி 29 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு இன்னும் நனவாகவில்லை. நீங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய பிரச்சினைகளும்  இன்று வரை தீரவில்லை. 


உண்மைய சொல்ல போனால், பிரச்சினை இன்னும் பெரிசாகி விட்டது. ஆனால் உங்களை போல எங்களுக்காக போராட இன்று யாருமில்லை. எங்கள் தலைவர்கள் பதவிகளிற்காக தங்களுக்குள் தான் போராடினம், மக்களிற்காக போராட யாரும் முன்வருவதில்லை.

செப்டம்பர் 15, 1987 அன்று காலையில் பிரதித்தலைவர் மாத்தையா அழைத்து வர, நல்லூர் கந்தன் முன்றலில் வயதான அம்மா ஒருவர் நெற்றி திலகமிட்டு ஆசி வழங்க, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகால சட்டம் நீக்கல், ஊர்காவல் படையினரின் ஆயுத களைவு மற்றும் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் என்ற ஜந்து கோரிக்கைகளை முன் வைத்து நீங்கள் உண்ணாவிரத மேடையேறினீர்கள். 


உண்ணாவிரத்தின் இரண்டாம் நாள் நீங்கள் ஆற்றிய உரை தமிழர் தேசமெங்கும் பாரிய உணர்வலையை ஏற்படுத்தியது. "எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன், அதுவே எனது இறுதி ஆசை" என்று அன்று நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் எங்கள் நெஞ்சங்களை இன்றும் பிழிகின்றது. 


அந்த பன்னிரு நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை நல்லூர் முன்றலில் ஒன்று கூடவைத்த பெருமை உங்களின் போராட்டத்திற்கு இருந்தது. அன்று உங்களது உண்ணாவிரத பந்தலிற்கு முன் மண்ணில் அமர்ந்திருந்து ஏக்கத்துடன் உங்களையே பாரத்துக் கொண்டிருந்த மக்களில், படுத்திருந்து கொண்டே நீங்கள் செலுத்திய இனஉணர்வு எனும் பாய்ச்சல் இன்றுவரை தணியவில்லை.


அண்ணா, உங்களிற்கு பின் ஆயிரமாயிரம் மறவர்களை விதைத்தும் நமது மண்ணில் விடுதலை விருட்சம் முளைவிடவில்லையே என்ற ஏக்கம் மரணத்திலும் எம்முடன் பயணிக்கும். "திலீபனின் பசியடங்க, செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்" என்றான் ஒரு ஈழத்து கவிஞன்.. உண்மைதான், அன்று தான் தீரும் எங்கள் சுதந்திர தாகம்..


திலீபன் அண்ணா, உங்களது உண்ணாவிரத மேடைக்கருகில் அன்று பலர் உணர்ச்சி பொங்க பேசினார்கள், உணர்வு நிறைந்த கவிதை படைத்தார்கள். உதயன், முரசொலி, ஈழநாதம், ஈழமுரசு பேப்பர் எல்லாம் நீங்கள் தான். யாழ்ப்பாண மக்களின் மையப்புள்ளியாக நீங்கள், உங்களை இந்தியா சாகவிடாது என்ற நப்பாசையுடன் எங்கட சனம். 


அதனால் தான் என்னவோ "சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகிலும் சுளீரிட்டதுபோல, திலீபனின் சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது" என்று அண்மையில் வெளிவந்த பார்த்தீனியம் புத்தகத்தில் தமிழ்நதி அக்கா உங்கள் சாவுச் செய்தியை உள்வாங்கிய தமிழர் தேசத்தின் உணர்வலையை படிமப்படுத்துகிறார்.


அந்த நாட்களில் வெளிவந்த பலநூறு கவிதைகளில் இன்றும் எனது நினைவை விட்டகலா ஆரம்ப வரிகளிவை...

"தேச பிதாவே, தேசபிதாவே
பாரதத்தின் தேசபிதாவே 
எங்களூர் திலீபனை 
உங்களுக்கு தெரியுமா" 


செப்டெம்பர் 26, 1987 ஒரு சனிக்கிழமை, புரட்டாசி சனி விரத நாள். காலை 10.58 மணிக்கு உங்கள் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் சிவகுமரன் உங்கள் பாதம் தொட்டு வணங்க, 265 மணித்தியாலங்கள் நீங்கள் நிகழ்த்திய யாகம் முழுமையடைந்தது. 


அந்த சனிக்கிழமை எங்களிற்கு பாடசாலை நடந்தது. உங்களது தியாகச் சாவு பற்றிய செய்தி வந்ததும், உடனடியாக பாடசாலை மூடப்பட்டு நாங்கள் வீடுகளிற்கு அனுப்பப்பட்டோம். அன்றிரவு நண்பர்களுடன் நல்லை முன்றலில் உங்கள் வித்துடலிற்கு இறுதி மரியாதை செலுத்தியதும் சுதுமலையில் நடந்த மாபெரும் இறுதி அஞ்சலி கூட்டமும் இன்னும் நினைவிலிருக்கிறது. 


அலையென மக்கள் திரண்ட
அஞ்சலிக் கூட்டத்தின் இறுதியில் உங்கள் விருப்பத்திற்கமைய உடல் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்திற்கு கையளிக்கப்பட்டது.  நீங்கள் உயிரோடு உலாவியிருக்க வேண்டிய மருத்துவ பீடம், உங்கள் புகழுடலை தனதாக்கிக்கொண்டது. மருத்துவக் கல்லூரி அனுமதி கிடைத்தும், அதனை உதறி விட்டு இயக்கத்தில்  இணைந்த உங்களைப் போன்ற பலரால் தான் எமது போராட்டம் உத்வேகம் பெற்றது.


உங்கள் முதலாவது ஆண்டு நினைவு நாள் வரும்போது, யாழ்ப்பாணம் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மூச்சுவிடக்கூட முடியாது திணறிக்கொண்டு இருந்தது. உங்கள் நினைவுப் பாடல்களை சுமந்து கொண்டு வெளிவந்த  cassetteஐ இயக்கம் இரகசியமாக வீட்டுக்கு வீடு அனுப்பியது. கரண்ட் வாற நேரம், ரோட்டால் ரோந்து போகும் இந்திய ஜவான்களிற்கும் ஈபிகாரன்களிற்கும் கேட்காமலிருக்க, volumeஐ குறைத்து விட்டு கேட்ட பாடல்கள் இன்றும் நினைவலைகளில் ஒலிக்கின்றன. 


"மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன் முகமே ஞாபகம்.." என்ற காலத்தால் அழியாத புதுவையின் வரிகளும், "பாடும் பறவைகள் வாருங்கள், புலி வீரன் திலீபனை பாருங்கள்" என்ற காசி ஆனந்தனின் பாடலை பாடி கொடுத்துவிட்டு அழுதபடியே ஸ்டூடியோவை விட்டு வெளியேறிய வாணி ஜெயராமின் குரலும், உண்ணாவிரத மேடையில் ஒலித்த "திலீபன் அழைப்பது சாவையா" பாட்டும், இன்று கேட்டாலும் கண் கலங்க வைக்கும். 


திலீபன் அண்ணா, நீங்கள் உங்கள் இன்னுயிரை நீங்கள் உயிரினும் மேலாக நேசித்த தேசத்திற்காக ஆகுதியாக்கிய போது உங்களுக்காக எம்மினமே தலைவணங்கியது. உங்கள் உயிரை தியாகம் செய்து இனத்தை காப்பாற்ற முன்வந்த தியாகத்தின் சிகரம் நீங்கள். இலட்சிய வேட்கையோடும் தளராத மனவுறுதியோடும் தேச விடுதலைக்காக போராடிய எங்கள் தலைமுறையின் நிஜ ஹீரோ நீங்கள். கடந்த வருடம் நல்லூரில் உங்கள் நினைவுதூபி இருந்த இடத்திலிருந்து தம்பி ஜேகே எழுதிய பதிவில் "சிதைக்கப்பட்ட திலீபன் நினைவுதூபியை பார்க்கும்  ஒவ்வொருவரும் அதை மனதில் ஸ்தாபித்து கொள்கிறார்கள்", என்றார். 
உண்மை தான்.. 29 ஆண்டுகளிற்கு முன்பு உங்களிற்கு எங்கள் மனங்களில் கட்டிய துயிலுமில்லத்தில் இன்றும் நாங்கள் சுடரேற்றுகின்றோம். 

காற்றலைகள் காலமெல்லாம் உங்கள் பெயரை கூறிடும் !
No comments:

Post a Comment