Friday, 2 September 2016

அம்மம்மா


நமது வாழ்வில் பிறப்பாலும் திருமண பந்தத்தாலும் இணையும் உறவுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பார்கள்.  சில உறவுகள் வாழ்க்கைப்  பயணத்தில் இடைநடுவில் நம்மை விட்டு பிரிந்தாலும், நாம் சாகும் வரை நம் மனதை விட்டகலாதவை, காலங்கள் கடந்தும் நம்மோடு பயணிப்பவை.


அம்மம்மா என்ற உறவு, என்றைக்குமே மனதை விட்டகலாத ஒரு அற்புதமான அழகிய உறவு. அம்மம்மாமார்  பேரன்மாரிடம் அளவுக்கதிகமாக அன்பு செலுத்துவார்கள், அதுவும் மூத்த பேரன் என்றால் சொல்லி விளக்க தேவையில்லை. என்னுடைய அம்மம்மாவும் அப்படித்தான்..


1977 இனக்கலவரத்திற்கு பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற, பாடசாலை விடுமுறைகளிற்கு கொழும்பு வரும்போது அம்மம்மாவின் அன்பில் திளைத்த காலங்கள் இனிமையானவை. கிழமையில் இரண்டு மூன்று தரம் வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு மரக்கறியும் மீனும் வாங்க போவதும், அம்மம்மா பேரம் பேசி வாங்குவதும் சுவாரசியமான அனுபவங்கள். மரக்கறியும் மீனும் வாங்கி முடிய, வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு வெளியிலிருக்கும் சிவப்பு வெள்ளை நிறங்களில் பெயின்ட் அடித்த Milk Board கடையில் அம்மம்மா வாங்கித்தரும் பக்கெற்றில் வரும் குளிரூட்டிய இனிப்புப் பாலை இன்றைக்கு நினைத்தாலும் இனிக்கும். 


1983 இனக்கலவரம் வரை எங்கள் பாடசாலை விடுமுறை நாட்கள் வெள்ளவத்தையில் அம்மம்மாவோடு கழிந்தன. பின்னேரங்களில் , இரு பக்கமும் ட்ரெய்ன் வருகிறதா என்று அவதானமாகப் பார்த்து, தண்டவாளங்களை கவனமாக கடந்து, கடற்கரைக்கு கூட்டி போய், அம்மம்மா சூரிய அஸ்தமனம் காண்பித்த பொழுதுகள்,  இன்றும் வெள்ளவத்தை கடற்கரை போகும் போது நினைவுகளில் நிழலாடும். சிறு வயதில் அம்மம்மாவின் கையை பிடித்துகொண்டு சூரியன் கடலுக்குள் இறங்கி மறையும் கணங்களை பரவசத்தோடு பார்த்த நினைவுகளை, அதே கடற்கரையில் நின்று இன்று நினைக்கும் போது கண்கள் பனிக்கும்.


இரவுச் சாப்பாடு அநேகமாக  சதோசவில் வாங்கின கோதுமை மாவில் செய்த நீத்துப் பெட்டி  புட்டும், உரலில் இடித்த உறைப்பு சம்பலும் தான். அம்மம்மா யாழ்ப்பாணத்து மனுஷி, கலியாணம் கட்டி கொழும்பில் கனகாலம் வாழ்ந்தாலும், சாப்பாட்டில் மண்வாசனை மணக்கும். கறியோ குழம்போ ஏன் சம்பலோ, எதுவென்றாலும் சாப்பாட்டில் உறைப்பு  தூக்கலாக இருக்கும். 


கொதி கொதி வெள்ளைப் புட்டில், மாசி மீன் துகள்கள் கலந்த செத்தல் மிளகாய் சம்பலை குழைத்து சாப்பிட...கண்ணால கண்ணீர் வரும். "உறைக்க உறைக்க சாப்பிடாதே என்று எத்தனை தரம் சொல்லுறது" என்று கூறியபடி அம்மம்மா தண்ணி கொண்டு வந்து தருவா . சாப்பிட்டு முடிய தன்ட கையால சீனி அள்ளி என்னுடைய வாய்க்குள் போட்டு விடுவா.


பின்னேரம் ஆறுமணியாகி விட்டால், இன்னொருக்கா குளித்து விட்டு, சாமி கும்பிட சாமியறைக்குள் போவா. அதே நேரம் குசினிக்குள் சித்தி சமையலை தொடங்குவா. சாமியறைக்குள் சூளமங்கலம் சகோதரிகளுக்கு சற்றும் சளைக்காமல் சத்தமாக அம்மம்மா கந்தசஷ்டி பாட தொடங்குவா. 


"காக்க காக்க கனகவேல் காக்க, 
நோக்க நோக்க நொடியில் நோக்க
குணா.. கறிக்கு முதல்பால் விட்டியா...
பார்க்க பார்க்க பாவம் பொடி பட,
தாக்க தாக்க தடையற தாக்க
உப்பு உறைப்பையும் ஒருக்கா பார்..
பார்க்க பார்க்க பாவம் பொடி பட.."
பாவம் முருகன், அம்மம்மா எந்த இடத்தில் இடைவேளை விடுவா என்றறியாமல் அந்தரப்படுவார். 


மாமாவின் திருமணத்திற்கு ஆறு மாதங்கள் ஒஸ்ரேலியா வந்துவிட்டு வந்து அம்மம்மா செய்த அலப்பறை தாங்க முடியவில்லை. அம்மம்மா ஆறு மாதங்கள் ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து  அவதானித்த விடயங்கள் இருபது வருடங்கள் வாழ்ந்தும் நாங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை. 


அம்மம்மா ஒரு தேத்தண்ணி பிரியை. அவ போடுற தேத்தண்ணியை ரசித்து ருசித்து குடிக்கிற ஒரே ஆள் நான் தான். பாட்டு பாடிக்கொண்டே காஸ் அடுப்பில் தண்ணி கொதிக்க வைத்து, தேயிலை வடியில் லாவகமாக வடித்து டம்ளரில் ஆத்தி, சுடச்சுட தேத்தண்ணி படிக்கிற மேசைக்கு வரும். டம்ளரில் குடித்தால் தான் தேத்தண்ணி சுவை கெடாது என்ற சூட்சுமம் சொல்லித் தந்தது அம்மம்மா. நான் இரவிரவா படித்த காலங்களில், கேட்காமலே தானே எழும்பி ரெண்டு மூன்று தரம் தேத்தண்ணி போட்டு தாறதும் அம்மம்மா. 


உயர்தர பரீட்சை பாஸ் பண்ண, நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல், ஒரு பவுண் தங்கத்தில் மோதிரம் செய்து தந்து அம்மம்மா மகிழ்ந்தா. நான் CIMA பாஸ் பண்ண அவக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. வேலை கிடைத்ததும் முதல் சம்பளத்தை கொம்பனி என்வலப்பில் போட்டுத் கையில் தர, அதை அப்படியே அம்ம்மாவின் கையில் கொடுத்தேன். கட்டியணைத்து அம்மம்மா முகர்ந்த முத்தம் இன்னும் என் நெற்றியில் ஈரலிப்பாக பதிந்திருக்கிறது. 


"ஆனை கறுத்தாலும் ஆயிரம் பொன் பெறுமடா, ஆம்பளை கறுப்பா இருந்தால் தான் வடிவடா, உனக்கு நல்ல வடிவான வெள்ளை பெட்டையா பார்த்து நான் கலியாணம் கட்டி வைப்பன்" என்று நான் பதின்மம் தாண்டி இருபதுக்குள் நுளைய அம்மம்மா பிரசங்கம் வைக்க தொடங்கினா. கலியாண வீட்டில் அந்த வடிவான வெள்ளைப் பெட்டை "காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டும் வைத்து, தேவதை போல் அவள் நடந்து வரவேண்டும்" என்று பாட்டாகவே படித்து என்னை படுத்துவா.


அம்மம்மாவிற்கு காதலில் நம்பிக்கையில்லை. எனக்கு தான் தான் பொம்பள பார்க்கோணும், கலியாணம் செய்து வைக்கோணும் என்று அம்மம்மா கனவுலகில் வாழ, நனவுலகில் காதல் என்னை கவர்ந்தது. நான் காதலிக்கிறேன் என்றறிந்ததும் "கண்டறியாத லவ்வும் கிவ்வும்" என்று என்னை செல்லமாக திட்டிக் கொண்டு அம்மம்மா திரிந்தா.


கொழும்பில் நடந்த என்னுடைய திருமணத்திற்கு அம்மம்மாவால்
வரமுடியவில்லை என்ற கவலை என்னை வெகுவாக பாதித்தது. 
அந்த நேரம் அம்மம்மா படுத்த படுக்கையாக இருந்தா. திருமணம் முடித்து அம்ம்மாவிடம் ஆசி வாங்க போகும் போது மறக்காமல் மனிசியை காஞ்சிபுரம் பட்டுடுத்தி, பொட்டு வைத்து கூட்டிக் கொண்டு போனேன்.
வாசலில் எங்களைக் கண்டதும், "காஞ்சிப் பட்டுடுத்தி..." அம்மம்மா பாடத் தொடங்கினா.


அதற்கடுத்த வருடம் அம்மம்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்து, கந்தசஷ்டி பாடிக்கொண்டே, முருகனடி சேர்ந்தா. அம்மம்மாவிற்கு தும்பளையில் குடும்ப காணி இருக்கிறது. அந்த காணியை எனக்கு எழுதி தரச்சொல்லி அவாவின் கடைசிக் காலங்கள் வரை பகிடிக்கு அலுப்பு கொடுத்து கொண்டேயிருந்தேன். 2002ல் யாழ்ப்பாணம் போன போது அந்த காணியிலிருக்கும் பங்குக் கிணற்றில் கால் கழுவி அம்மம்மாவின் ஆத்மாவை மகிழ்வித்தேன். 

அம்மம்மா
வாழ்வை என்றும்  மகிழ்விக்கும் அழகான உறவு !

No comments:

Post a Comment