Friday, 30 September 2016

Sportstar
வியாழக்கிழமை மத்தியானம்  தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.

"டேய்.. என்ன செய்யிறாய்?"

"வேலை தான்டா செய்யுறன்"

"அதை தான் எப்பவும் செய்யுறாய்"

"உனக்கு இப்ப என்னடா பிரச்சினை?"

"வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய சம்பவம் பற்றி கேள்வி கேட்கோணும்.. வடிவா யோசிச்சு சொல்லு"

"கொஞ்சம் பொறு கதவை பூட்டிட்டு வாறன்... ம் இப்ப சொல்லுடா"

"அந்த காலத்தில யாழ்ப்பாணத்தில் நான் சேர்த்து அடுக்கி வைத்திருந்த Sportstar மகஸினுகளிற்கு என்னடா நடந்தது?

"அது வந்து.. நீ கொழும்புக்கு போனா பிறகு.."

"பிறகு..."

"சொன்னா எனக்கு அடிக்க வருவாய்..அம்மாவை கேள் "

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

-----------------------------------


1980களில் கிரிக்கெட்டை விரும்பிய எவரும் Sportstar magazineஐ மறந்திருக்க மாட்டார்கள்.  சென்னையிலிருந்து பதிப்பாகும் The Hindu குழுமத்தின் வாராந்த விளையாட்டுத்துறை சஞ்சிகை Sportstar. 'For a ringside view of the world of sport’ என்ற தலைப்பு வாசகங்களைத் தாங்கி வெளிவந்த Sportstar, இன்டர்நெட்டும் டீவியும் இல்லாத காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எங்களுக்கு விளையாட்டு உலக செய்திகளை அறிய கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.


அப்பா கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், வாரா வாரம் பொலித்தீன் பேப்பரில் சுற்றி தபாலில் Sportstar வீடு தேடி வரும். பிரச்சினை தொடங்கி, தபால் ரயில் ஓடுவது தடைபட, கிழமை தோறும் Sportstar வாறதும் தடைபட்டு போனது. பூபாலசிங்கத்திற்கு வரும் Sportstar வந்து ஓரிரு நாட்களிலேயே விற்று முடிந்துவிடும். மகஸினுற்குள் என்ன இருக்கு, நடுப்பக்க போஸ்டரில் யாருடைய படம் வந்திருக்கு என்று விடுப்பு பார்க்க வாறவர்களை எதிர்கொள்ள, பூபாலசிங்கத்தார் புத்தகத்திற்கு நாலு பக்கமும்  ஸ்டேப்பில் அடித்து வைத்திருப்பார். பரி யோவான் நூலகத்தில் Sportstarக்கு ஆமைப்பூட்டு போட்டு பூட்டாத குறையாக பந்தோபஸ்து போடப்பட்டிருக்கும். புதுசாக வாற Sportstar மகஸின்கள் அநேகமாக லைப்ரரியனிடம் தான் இருக்கும். லைப்ரரியன் மிஸ் நங்கை வித்தியானந்தன் கொஞ்சம் கோபக்காரி, வலு கண்டிப்பானவ கூட. ரமோ போன்ற நல்லவன்கள் போய் கேட்டா டக்கென்று கிடைக்கும், எங்களுக்கு ஏகப்பட்ட எச்சரிக்கைகளுடன் தான் Sportstar கையில் வரும். பழைய Sportstar மகஸின்களிற்கும் நடுவில் ஒரு பலகை வைத்து lock அடித்திருப்பார்கள், திருட்டு போகமலிருக்கவாம். லைப்ரரியன் நங்கை அக்கா இப்போ மெல்பேர்ணில் தான் வசிக்கிறா, பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் கண்டு கதைப்பா. 


1978ல் முதல் பதிப்பை தொடங்கிய Sportstarன் பக்கங்கள் அந்த காலத்திலேயே glossyயாக இருந்தது அதன் கவர்ச்சியை அதிகரித்தது. பார்வைக்கு விருந்தாகும் கிரிக்கெட் வீரர்களின் அக்‌ஷன் வண்ணப்படங்கள்  Sportstarன் தனித்துவம். படங்களிற்கு வலுச்சேரக்கும் ஆழமான வர்ணணைகளும் விமர்சனங்களும் ஸ்கோர்கார்ட்டுகளும் Sportstarஐ எல்லோரும் கொண்டாட வைத்தது. Sportstar வாசித்து ஆங்கில மொழியாற்றலை பெருக்கிய தலைமுறை ஒன்றும் யாழ்ப்பாணத்தில் உருவானது.


யாழ்ப்பாணத்தில் பலரை இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்களாக உள்வாங்கிய பெருமையும் Sportstarயே சாரும். ரஞ்சி கோப்பை, டுலீப் ட்ரோஃபி என்று இந்தியாவின் மாநில கிரிக்கெட் செய்திகளும் Sportstarல் இடம்பிடிக்க, எம்மையறியாமல் நாங்கள் இந்தியாவின் பால் ஈர்க்கப்பட்டோம். 


1980களின் இறுதியில் ஜேவிபிகாரன்கள் இந்திய சஞ்சிகைகளை தடைசெய்ய, கொழும்பில் க்ரீன்லன்ட்ஸிலும் இந்தோ சிலோன் கஃபேயிலும் ப்ரவுண் பேப்பர் பாக்கில் சுற்றி கள்ளமாக Sportstarஐ ஆனை விலைக்கு விற்றார்கள்.   இந்தியன் ஆமி சென்னையிலிருந்து விமானத்தில் பலாலிக்கு Sportstar கொண்டுவந்து  பூபாலசிங்கம் பொத்தகசாலைக்கு சப்ளை பண்ணியதாக ஊரில் வதந்தி உலாவியது. 


அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிகாரன்கள் தமிழ் தேசிய இராணுவம் என்ற TNAக்கு கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்க, நாங்க குமர்பிள்ளைகள் போல் வீடுகளில் அடைக்கப்பட்டோம். பெட்டைகள் ரோட்டில் விலாசமாக சுத்த, நாங்க  Sportstar வாங்க பழசுகளில் தங்கியிருந்த கொடிய காலங்கள். டவுணிற்கு போன பழசுகள் Sportstar வாங்க மறந்து வந்த நாட்களில் ஏற்பட்ட ஏமாற்றமும் ஆற்றாமையும் கலந்த உணர்வை பின்னாட்களில் காதலில் தோல்வியடையும் போது தான் மீள உணர்ந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நண்பன் ஒருவன் சொல்லி கலங்கினான்.


Sportstarஐ வரிக்கு வரி வாசித்து, டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் என்ன நடந்தது என்று வாசித்தறியும் பரவசம் அலாதியானது. R.Mohan தான் அப்போ பிரபலமான விமர்சகர், அவர் எழுதும் பாணி அப்படியே ஆட்டத்தை கண்முன் கொண்டுவரும். வழமையாக அவருடைய விமர்சனத்தை வாசித்து விட்டு தான் ஆட்டத்தின் scorecard பார்ப்பது எனது பழக்கம்.


வாசித்த sportstar எங்கட ரோட்டிலிருக்கும் சுப்ரமணி அண்ணே உட்பட சிலருக்கு மட்டும் இரவல் கொடுப்பேன். பரி யோவானில் யசிக்கும் யாதவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தான். இரவல் கொடுத்தை கவனமாக திரும்ப வாங்கி அலுமாரியில் அடுக்கி வைத்திருப்பேன். மகஸிற்குள் இருக்கும் படங்களை வெட்டுவது, அதுவும் நடுப்பக்க போஸ்டரை கிழிப்பது போன்ற பாதகங்களை அடியேன் செய்வதில்லை. பின்னாட்களில் காதலியை கண்ணும் கருத்துமாக கவனிப்பதற்கான பயிற்சி எடுத்தது  Sportstarல் தான் என்றும் சொல்லலாம்.


Sportstarல் வரும் படங்களிற்கு யாழ்ப்பாணத்தில் ஒரு தனி மார்க்கெட்டே இருந்தது. பரி யோவானில் எங்கள் வகுப்பில் முருகேந்திரன் தான் பெரிய Sportstar வியாபாரி. பண்டமாற்று அடிப்படையிலும் காசிற்கும் முருகேந்திரனிடம் Sportstar படங்கள் வாங்கி விற்கலாம். Sportstar படங்களை வெட்டி CR கொப்பிகளில் ஒட்டி ஒரு albumஆக அமைத்து சிலர் காவிக்கொண்டு திரிவார்கள். பாடசாலை விடுமுறை காலத்தில் கிரிஷாந்தனின் Sportstar அல்பத்தை இரவல் வாங்கிக்கொண்டு போன "நைனா" சிவக்குமரன் (சேரலாதன்), ஊருக்கு போகும் போது அதை கடலில் விழுத்தி விட்டதாக கிரிஷாந்தன் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறான். 


கிரிக்கெட் படங்களிற்கு இருந்த மார்கெட்டை விட, Sportstarல் வரும் டென்னிஸ் வீராங்கனைகளின் படங்களிற்கும் தனியான பாதாள சந்தை பரி யோவானில் இயங்கியது. அந்த பாதாள சந்தையை இயக்கிய மர்ம நபரின் பெயரை இன்றுவரை அந்த இயக்கத்தினர் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். Gabriela Sabatiniயின் படங்ளிற்கு தான் அதிக கிராக்கி இருந்ததாம். அவரை தொடர்ந்து Steffi Grafற்கும் Monica Selesற்கும் தான் மவுசு அதிகமாம்.  Chris Evert அன்டியின் படம் பெரிசாக விலைபோகாதாம். Martina Navratilovaவின் படத்தை பொடியள் கண்டு கொள்ளமாட்டார்களாம்.
Sportstarன் வண்ண பக்கங்கள் பாடசாலையில் புத்தகங்கள் கொப்பிகளின் கவராக மிளிரும். தமிழ் புத்தகத்திற்கு ப்ரவுண் பேப்பர் கவர் போட்டு அதற்கு மேல் ஶ்ரீகாந்தும் செபடானியும் சிரிக்கும் Sportstar பக்கங்களால் கவர் போட்டு அதற்கும் மேலே  பொலித்தீன் கவர் போட்டு கொண்டு வருவாங்கள். பிரபாகரன் மாஸ்டரின் சயின்ஸ் நோட்ஸ் கொப்பியின் முன்மட்டை மூலையில் விவியன் ரிச்சர்டஸ் சிக்ஸ் அடிப்பார், பின்பக்கத்தில் மல்கம் மார்ஷல் முறைப்பார். 


கிரிஷாந்தன் அந்த காலத்தில் ஒரு ரவிசாஸ்திரி விசிறி. ரமோ ஒரு பெரிய கபில் தேவ் ஃபேன். கபில்தேவின் முழுப்பெயர் கபில் தேவ் ராம்லால் நிகன்ஞ் என்பது முதற்கொண்டு எல்லா பயோடேட்டாவும் சுண்டு விரலில் ரமோ வைத்திருப்பான்.  முருக்கரிடம் கபில்தேவ் படம் வந்தால் விழுந்தடித்து ரமோ வாங்குவான். அருள்மொழி ஒரு புயரிஸ்ட், படம் விற்பது வாங்குவது எல்லாம் பிடிக்காது. உதயன் பேப்பரிற்கு அந்த காலத்திலேயே ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட் எழுதுவான், தான் வளரந்து பெரியாளாக வந்து Sportstarல் எழுதோணும் என்ற கனவுடன் திரிந்தவன்.


Sportstarல் வந்த சில படங்கள் இன்றும் கண்முன் நிழலாடுகின்றன. 1982ல் பதினேழு வயது சிறுவனாக West Indies போன சிவராமகிருஷ்ணனின் படம், 1983 உலகக்
கோப்பையை இணைந்து தூக்கிபிடிக்கும் கபில்தேவ் - மொஹிந்தர் அமரநாத்தின் படம் மற்றும் உலகக்கோப்பையை வென்ற பின்னர் கொலரை தூக்கிவிட்டு போஸ் கொடுக்கும் கபில்தேவின் படம் உட்பட பல படங்கள் இன்றும் மனதை விட்டகலவில்லை. 


1985ல் ஒஸ்ரேலியாவில் நடைபெற்ற Benson & Hedges வென்ற இந்திய அணியின் போஸ்டரும், கபில்தேவின் போலிங் அக்‌ஷனை ஆறேழு படங்களாக பிரித்து நடுப்பக்கத்தை அலங்கரித்ததும் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. இங்கிலாந்தை கலக்கிய வெங்சக்காரின் கவர் ட்ரைவ் படத்தைப் பற்றி கிரிஷாந்தன் நினைவுபடுத்தினான். விவியன் ரிசர்ட்ஸின் 56 பந்து சென்சரி அருள்மொழிக்கு இன்றும்கூட நினைவில் நிற்க Sportstar தான் காரணமாம். 


ஒரு காலத்தில் விளையாட்டு ரசிகர்களின் இதயநாதமாக ஒலித்த Sportstar, இணையத்தளங்களும் தொலைகாட்சிகளும் விரிவாகத் தொடங்க மெல்ல மெல்ல மழுங்கத் தொடங்கியது. 1990களில் Magazineஆக இருந்த Sportstarஐ tabloid ஆக மாற்றியதிலிருந்து தொடங்கிய சரிவு, கடந்த பத்தாண்டுகளில் இருமுறை relaunch பண்ணியும் உயிர்பெற மறுத்து, இன்று Sportstar இணையத்தளமாக இயங்குகிறது.

Sportstar: Ringside view of our past

-------------------------------------

"அம்மா.. நான் முந்தி சேர்த்து வைத்த Sportstar மகஸின்களை நான் கொழும்பு வர என்ன செய்தனீங்கள்?"

"தூக்கி குப்பையில் போட்டிட்டன்"

--------------------------------------

Friday, 23 September 2016

அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,


அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,

நமது நாடும் நம் மக்களும் நலமின்றி வாடும் போது உங்கள் ஆத்மா இன்னும் சாந்தியடைந்திராது. ஆதலால், நலமறிய ஆவல் என்று மொக்குத்தனமாக கேட்டு, எங்களை பேயன்களாக்கும் எங்களது இன்றைய தலைவர்கள் போல், உங்களை முட்டாளாக்க விரும்பவில்லை


இந்த ஆண்டுடன் நீங்கள் காவியமாகி 29 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு இன்னும் நனவாகவில்லை. நீங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய பிரச்சினைகளும்  இன்று வரை தீரவில்லை. 


உண்மைய சொல்ல போனால், பிரச்சினை இன்னும் பெரிசாகி விட்டது. ஆனால் உங்களை போல எங்களுக்காக போராட இன்று யாருமில்லை. எங்கள் தலைவர்கள் பதவிகளிற்காக தங்களுக்குள் தான் போராடினம், மக்களிற்காக போராட யாரும் முன்வருவதில்லை.

செப்டம்பர் 15, 1987 அன்று காலையில் பிரதித்தலைவர் மாத்தையா அழைத்து வர, நல்லூர் கந்தன் முன்றலில் வயதான அம்மா ஒருவர் நெற்றி திலகமிட்டு ஆசி வழங்க, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகால சட்டம் நீக்கல், ஊர்காவல் படையினரின் ஆயுத களைவு மற்றும் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் என்ற ஜந்து கோரிக்கைகளை முன் வைத்து நீங்கள் உண்ணாவிரத மேடையேறினீர்கள். 


உண்ணாவிரத்தின் இரண்டாம் நாள் நீங்கள் ஆற்றிய உரை தமிழர் தேசமெங்கும் பாரிய உணர்வலையை ஏற்படுத்தியது. "எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன், அதுவே எனது இறுதி ஆசை" என்று அன்று நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் எங்கள் நெஞ்சங்களை இன்றும் பிழிகின்றது. 


அந்த பன்னிரு நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை நல்லூர் முன்றலில் ஒன்று கூடவைத்த பெருமை உங்களின் போராட்டத்திற்கு இருந்தது. அன்று உங்களது உண்ணாவிரத பந்தலிற்கு முன் மண்ணில் அமர்ந்திருந்து ஏக்கத்துடன் உங்களையே பாரத்துக் கொண்டிருந்த மக்களில், படுத்திருந்து கொண்டே நீங்கள் செலுத்திய இனஉணர்வு எனும் பாய்ச்சல் இன்றுவரை தணியவில்லை.


அண்ணா, உங்களிற்கு பின் ஆயிரமாயிரம் மறவர்களை விதைத்தும் நமது மண்ணில் விடுதலை விருட்சம் முளைவிடவில்லையே என்ற ஏக்கம் மரணத்திலும் எம்முடன் பயணிக்கும். "திலீபனின் பசியடங்க, செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்" என்றான் ஒரு ஈழத்து கவிஞன்.. உண்மைதான், அன்று தான் தீரும் எங்கள் சுதந்திர தாகம்..


திலீபன் அண்ணா, உங்களது உண்ணாவிரத மேடைக்கருகில் அன்று பலர் உணர்ச்சி பொங்க பேசினார்கள், உணர்வு நிறைந்த கவிதை படைத்தார்கள். உதயன், முரசொலி, ஈழநாதம், ஈழமுரசு பேப்பர் எல்லாம் நீங்கள் தான். யாழ்ப்பாண மக்களின் மையப்புள்ளியாக நீங்கள், உங்களை இந்தியா சாகவிடாது என்ற நப்பாசையுடன் எங்கட சனம். 


அதனால் தான் என்னவோ "சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகிலும் சுளீரிட்டதுபோல, திலீபனின் சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது" என்று அண்மையில் வெளிவந்த பார்த்தீனியம் புத்தகத்தில் தமிழ்நதி அக்கா உங்கள் சாவுச் செய்தியை உள்வாங்கிய தமிழர் தேசத்தின் உணர்வலையை படிமப்படுத்துகிறார்.


அந்த நாட்களில் வெளிவந்த பலநூறு கவிதைகளில் இன்றும் எனது நினைவை விட்டகலா ஆரம்ப வரிகளிவை...

"தேச பிதாவே, தேசபிதாவே
பாரதத்தின் தேசபிதாவே 
எங்களூர் திலீபனை 
உங்களுக்கு தெரியுமா" 


செப்டெம்பர் 26, 1987 ஒரு சனிக்கிழமை, புரட்டாசி சனி விரத நாள். காலை 10.58 மணிக்கு உங்கள் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் சிவகுமரன் உங்கள் பாதம் தொட்டு வணங்க, 265 மணித்தியாலங்கள் நீங்கள் நிகழ்த்திய யாகம் முழுமையடைந்தது. 


அந்த சனிக்கிழமை எங்களிற்கு பாடசாலை நடந்தது. உங்களது தியாகச் சாவு பற்றிய செய்தி வந்ததும், உடனடியாக பாடசாலை மூடப்பட்டு நாங்கள் வீடுகளிற்கு அனுப்பப்பட்டோம். அன்றிரவு நண்பர்களுடன் நல்லை முன்றலில் உங்கள் வித்துடலிற்கு இறுதி மரியாதை செலுத்தியதும் சுதுமலையில் நடந்த மாபெரும் இறுதி அஞ்சலி கூட்டமும் இன்னும் நினைவிலிருக்கிறது. 


அலையென மக்கள் திரண்ட
அஞ்சலிக் கூட்டத்தின் இறுதியில் உங்கள் விருப்பத்திற்கமைய உடல் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடத்திற்கு கையளிக்கப்பட்டது.  நீங்கள் உயிரோடு உலாவியிருக்க வேண்டிய மருத்துவ பீடம், உங்கள் புகழுடலை தனதாக்கிக்கொண்டது. மருத்துவக் கல்லூரி அனுமதி கிடைத்தும், அதனை உதறி விட்டு இயக்கத்தில்  இணைந்த உங்களைப் போன்ற பலரால் தான் எமது போராட்டம் உத்வேகம் பெற்றது.


உங்கள் முதலாவது ஆண்டு நினைவு நாள் வரும்போது, யாழ்ப்பாணம் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மூச்சுவிடக்கூட முடியாது திணறிக்கொண்டு இருந்தது. உங்கள் நினைவுப் பாடல்களை சுமந்து கொண்டு வெளிவந்த  cassetteஐ இயக்கம் இரகசியமாக வீட்டுக்கு வீடு அனுப்பியது. கரண்ட் வாற நேரம், ரோட்டால் ரோந்து போகும் இந்திய ஜவான்களிற்கும் ஈபிகாரன்களிற்கும் கேட்காமலிருக்க, volumeஐ குறைத்து விட்டு கேட்ட பாடல்கள் இன்றும் நினைவலைகளில் ஒலிக்கின்றன. 


"மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன் முகமே ஞாபகம்.." என்ற காலத்தால் அழியாத புதுவையின் வரிகளும், "பாடும் பறவைகள் வாருங்கள், புலி வீரன் திலீபனை பாருங்கள்" என்ற காசி ஆனந்தனின் பாடலை பாடி கொடுத்துவிட்டு அழுதபடியே ஸ்டூடியோவை விட்டு வெளியேறிய வாணி ஜெயராமின் குரலும், உண்ணாவிரத மேடையில் ஒலித்த "திலீபன் அழைப்பது சாவையா" பாட்டும், இன்று கேட்டாலும் கண் கலங்க வைக்கும். 


திலீபன் அண்ணா, நீங்கள் உங்கள் இன்னுயிரை நீங்கள் உயிரினும் மேலாக நேசித்த தேசத்திற்காக ஆகுதியாக்கிய போது உங்களுக்காக எம்மினமே தலைவணங்கியது. உங்கள் உயிரை தியாகம் செய்து இனத்தை காப்பாற்ற முன்வந்த தியாகத்தின் சிகரம் நீங்கள். இலட்சிய வேட்கையோடும் தளராத மனவுறுதியோடும் தேச விடுதலைக்காக போராடிய எங்கள் தலைமுறையின் நிஜ ஹீரோ நீங்கள். கடந்த வருடம் நல்லூரில் உங்கள் நினைவுதூபி இருந்த இடத்திலிருந்து தம்பி ஜேகே எழுதிய பதிவில் "சிதைக்கப்பட்ட திலீபன் நினைவுதூபியை பார்க்கும்  ஒவ்வொருவரும் அதை மனதில் ஸ்தாபித்து கொள்கிறார்கள்", என்றார். 
உண்மை தான்.. 29 ஆண்டுகளிற்கு முன்பு உங்களிற்கு எங்கள் மனங்களில் கட்டிய துயிலுமில்லத்தில் இன்றும் நாங்கள் சுடரேற்றுகின்றோம். 

காற்றலைகள் காலமெல்லாம் உங்கள் பெயரை கூறிடும் !
Friday, 16 September 2016

CIMA காலங்கள்: பாணுதேவன்
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் கொழும்பில் CIMA படித்தவர்கள் எவரும் பாணுதேவனை மறந்திருக்க மாட்டார்கள். எண்பதுகளில் ICMA காலத்திலிருந்து தொண்ணூறுகளில் CIMAவாக பெயர் மாறிய போதும், Syllabusகள் மாறியபோதும், பாணுதேவன் அசராமல் தனது விரிவுரைப் பணி தொடர்ந்தார். 


எழுபதுகளில் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் உயர்தரத்தில் பொருளியல் கற்பிக்கும் ஆசிரியராக பாணுதேவன் பணியாற்றினார். கம்யூனிசத்தில் அதீத பற்று கொண்டிருந்த பாணுதேவன், பரி யோவான் நிர்வாகத்தோடு முரண்பட்டு, வேலையை இராஜினாமா செய்துவிட்டு, கல்லூரிக்கெதிராக இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கு விசாரணைக்கு வந்ந தினம், நீதிமன்றம் செல்ல பஸ்ஸிற்கு காத்திருந்த பாணுதேவனை கண்ட பிரதிவாதியான பரி யோவான் கல்லூரி அதிபர், பாணுதேவனை தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு நீதிமன்றம் சென்று வழக்கை எதிர்கொண்டார்.  பாணுதேவனின் மேல் பெருமதிப்பு கொண்டு அவரை தனது காரிலேயே அழைத்து சென்ற பரி யோவான் அதிபர், காலஞ்சென்ற ஆனந்தராஜா மாஸ்டர். வழக்கில் பாணுதேவன் வென்று இழப்பீடும் பெற்றாராம்.

-----------------------------

1990களில், கொழும்பில் மூன்று நிறுவனங்கள் CIMA கற்பித்தன. பம்பலப்பிட்டி Joseph laneல் கொட்டிலில் இயங்கி, பின்னர் வெள்ளவத்தையில் அரைகுறையாய் கட்டிமுடிக்கப்பட்ட நான்கு மாடிக்கட்டிடத்திற்கு குடிபெயர்ந்த Oxonia, பம்பலபிட்டி Jaya Roadல் தண்டவாளத்திற்கு அண்மையில் தடம்பதித்த IAS மற்றும் கொள்ளுபிட்டி சந்திக்கருகில் இயங்கிய CBS.  Oxoniaவிலிருந்து பிரிந்து போய் IASம், IASலிருந்து பிரிந்து போய் CBSம் உருவாகியிருந்தன.


IAS தமிழர்களின் கோட்டை. Stage 1&2க்கு தேர்த்திருவிழா மாதிரி சனம் அள்ளுபடும். பொட்டு வைத்த தமிழ் பெட்டைகள் சிரித்து கொண்டே CIMA படிக்க வந்து போற அழகே ஒரு தனியழகு தான். பாணுதேவன், ASM Perera, லோகநாதன், அப்துல் அஸீஸ், ருஷ்டி அஸீஸ் என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற விரிவுரையாளர்கள் IASல் வசீகரிப்பார்கள். நல்ல காற்றும், நல்ல இதயம் படைத்த ஆசான்களும் நிறைந்த புனிதபூமி..IAS.


Oxonia 50:50 பிரதேசம், கொஞ்சம் சீரியஸான இடம். கிருஷ்ணகுமார், நல்லன்துவன், வரதராஜன், ஆறுமுகம் என்ற பிரபல விரிவுரையாளர்களின் கோட்டை.  CBS நமக்கு சரிப்படாது, Ladies Collegeலும் Bridgetsலும் படித்த பெட்டையளின் English சூறாவளிக்கு தாக்குபிடிக்க முடியாது. 


----------------------------

IASற்கு மாணவர்கள் அதிகளவில் வருவதற்கு முக்கிய காரணங்களில் பிரதானமானது பாணுதேவன். Stage 1ல் Economicsம், Stage 2ல் Managementம், பாணுதேவன் கற்பிப்பார். இரண்டுமே செம செக்ஸியான பாடங்கள். ஆனால் பாணுதேவன், நயன்தாராவிற்கும் பர்தா போட்டு படம் எடுக்கும் இயக்குனர் மாதிரியான ஆள். இகனொமிக்ஸையும் மனேஜ்மென்டையும், சேர்ச்சில் ஃபாதர் பிரசங்கம் வைக்கிற மாதிரி தான் படிப்பிப்பார். பாணுதேவனின் வகுப்புகள் அநேகமாக தண்டவாளங்களை அண்மித்திருக்கும் ஹோல் 8ல் தான் நடக்கும். 5:45 வகுப்பிற்கு, கறுப்பு குடைபிடித்து கொண்டு நடந்து வந்து, 5:30ற்கே வகுப்பிற்குள் நுழைந்து விடுவார், பாணுதேவன். அன்று கற்பிக்க வேண்டி பாடத்தின் முக்கிய pointsஐ, கரும்பலகை நிறைத்து எழுதுவார். அதே points அச்சடித்த notes வடிவிலும் கிடைக்கும். சரியாக 5:45ற்கு பாணுதேவனின் கதா காலேட்சபம் தொடங்கும். ஒரு கையைல் மைக்கை பிடித்து கொண்டு மறு கையால் தனது காதை தடவிய படி, கரும்பலகையில் எழுதிய notes வழிநடத்த, கூட்டம் நிரம்பி வழிய, ஆட்டம் களைகட்டும். யாழ்ப்பாண இங்கிலீஷில் அறுத்து இறுத்து, பாணுதேவன் படிப்பிக்கும் போது அலுப்பு தட்டாது என்று பொய் சொல்ல விருப்பமில்லை. 


பாணுதேவன் கதைக்கும் போது ஏதோ ஒரு தாள கதியில் கதைப்பது போலிருக்கும். சிலர்அந்த தாளகதியில் லயிக்க, சிலர் கொட்டாவியோடு மல்லுக் கட்டுவார்கள்.  ரயில் சத்தத்திற்கு மட்டும் தடைபடும் பாணுதேவனின் பிரசங்கம், சரியாக ஒரு மணித்தியாலத்தில் இடைவேளை வரும் போது தான் நிற்கும். 


வகுப்பில் கேள்வி கேட்க கூடாது, இடைவேளை நேரங்களிலும் சந்தேகம் கேட்க முடியாது, இடைவேளை நேரம் தாண்டினால் டொக்கு டொக்கு என்று பேனையால் மேசையால் அடிக்கக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் தான் பாணுதேவனின் கச்சேரி அரங்கேறும். வகுப்பில் யாராவது பக்கத்தில் இருப்பவரோடு கதைத்தால் பாணுதேவனிற்கு பொல்லாத கோபம் வந்துவிடும். கடுமையாக ஆங்கிலத்தில் திட்டி, வகுப்பிற்கு வெளியே அனுப்பிவிடுவார். 


Oxoniaக்கு கிருஷ்ணகுமாரை வழிபட போகும் பக்தர்கள் சிலர், கள்ளமாக IASற்கு ASMடம் Law படிக்க வருவார்கள். IASன் செக்கி பத்மசிறி, உயரமான மேசையளவு உயரம் தான் இருப்பார். பாணுதேவனின் விரிவுரைகளிலும் ASMன் வகுப்புகளிலும் பத்மசிறி வகுப்புக்குள் வந்து, மேசைகளிற்கு நடுவில் நகர்ந்து card பரிசோதிப்பார், அவர் யாரையும் மறைக்க மாட்டார். இப்படித் தான் ஒருநாள் ASMன் வகுப்பில், Oxonia கோபால் மாட்டுப்பட, பெரிய ஸீனாகிவிட்டது. பத்மசிறியால் சிறைபிடிக்கப்பட்ட கோபாலை பிணையெடுக்க க்ரிஷாந்தனும் தேவாவும் முன்வந்தார்கள். 


CIMAகாரன் கொடுக்கிற Syllabusஜ முழுமையாக கவர் பண்ணி, மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்த பாணுதேவன் ஈடுபாட்டுடன் கற்பிப்பார். லண்டனிலிருந்து வந்த CIMA கண்காணிப்பு குழு, பாணுதேவனின் விரிவுரையை பாரத்து விட்டு "it is certainly not a lecture, it is truly a rock concert" என்று தங்களின் அறிக்கையில் எழுதினதாக, லோகநாதன் எங்களிற்கு சொன்னார்.
பரீட்சைக்கு சில கிழமைகளிற்கு முன்னரே Syllabus முடித்து, பழைய பரீட்சை தாள்களை அலசி, மாணவர்களின் நலனில் பாணுதேவன் காட்டும் அக்கறை போற்றுதலுக்குரியது. 


Stage 2 பரீட்சையில் சித்தியடைந்த போது, IAS கன்டீனில் ஒரு கப் தேத்தண்ணி வாங்கித் தந்து சில கணங்கள் பாணுதேவன் அளவளாவினார் . தேத்தண்ணி குடித்துவிட்டு, கன்டீனிற்கு வெளியே வரும்போது "ah.. what's your name son.....I want to remember it" என்று கேட்ட கணம், எனது வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய ஆசிர்வாதம். அந்த ஆசீர்வாதம் தான் இன்றுவரை எனக்கு சோறு போடுகிறது, அதுவும் கணவாய்க் கறியோடு. 

பாணுதேவன்.. CIMAவின்  விசுவாமித்திரர். Friday, 9 September 2016

உடுவிலில் ஏன் மைத்ரி ?1816ல் பிரித்தானிய மெதடிஸ்ட் திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட யாழ் மத்திய கல்லூரி, 1820ல் அமெரிக்க மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஆசியாவின் முதலாவது பெண்கள் பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி, 1823ல் பிரித்தானிய அங்கிலிக்கன் மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பரி யோவான் கல்லூரி உட்பட, வடகிழக்கில் இயங்கும் அனைத்து பாடசாலைகளும் தமிழர் அடைந்த கல்வி எனும் பலத்திற்கு வித்திட்ட பாசறைகள். 


1956ல் தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்து தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட தொடங்கிய சிங்களம், அடுத்து தமிழர்களின் கல்வியை குறிவைத்து நகர்ந்தது. 1960களின் ஆரம்பத்தில் சிறிமாவோ ஆட்சியில் கிறிஸ்தவ திருச்சபைகளால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகள் அரசுடைமையாக்கப் போவதாக அரசு அறிவித்தது. அரசுடைமையாக்கப்படாத பாடசாலைகளிற்கு ஆசிரியர்களின் சம்பளம் உட்பட எந்த நிதியுதவியும் அரசு வழங்காது என்றும் எச்சரித்தது.


சிங்கள அரசின் அறிவிப்பை எதிர்த்து நின்ற ஒரு சில பாடசாலைகளில் உடுவில் மகளிர் கல்லலூரியும் பரி யோவான் கல்லூரியும் அடக்கம். யாழ் மத்திய கல்லூரி அரசின் ஆணைக்கமைய அரசுடைமையாகியது.  அறுபதுகளில் பாடசாலை நடாத்த, வீடு வீடாக சென்று பெற்றோரும் ஆசிரியர்களும் நிதி சேகரித்ததையும், பள்ளிக்கூட வளாகத்தில் இருந்த மகோகனி மரங்கள் தறிக்கப்பட்டு விற்கப்பட்டதையும், சம்பளம் வாங்காமல் கல்விப் பணியாற்றிய ஆசிரியர்களின் வரலாற்றையும் உடுவில் மகளிர் கல்லூரியிலும் பரி யோவானிலும் படித்த மாணவ மாணவியர்கள் நன்கறிந்திருப்பார்கள். 


அன்று இந்த பாடசாலை சமூகங்களின் துணிச்சல் மிக்க செயற்பாட்டால் தான் இன்று வரை இந்த பாடசாலைகள் அரசின் முழுமையான கட்டுபாட்டிற்குள் இயங்குவதில்லை. தங்களது தனித்துவத்தை நிலைநாட்ட, ஆளுநர் சபையின் வழிநடத்தலில் அதிபர்கள் நியமிக்கப்பட்டு, பழைய மாணவர்களின் பங்களிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு, வெளிநாட்டு நிதியுதவியில் இன்றும் இந்த கல்லூரிகள் தன்னிகரில்லா கல்வி பணியாற்றி வருகின்றன.


உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி மில்ஸ், தற்பொழுது யாழ்ப்பாணத்தில் இயங்கும் பாடசாலை அதிபர்களில் தலைசிறந்தவர். உடுவில் மகளிர் கல்லூரி கடந்த சில வருடங்களில் அடைந்த அதீத முன்னேற்றத்திற்கு அதிபரின் அயராத பங்களிப்பே முதன்மையான காரணம். கல்வி செயற்பாடுகளிற்கப்பால் சென்று மாணவிகளின் ஆளுமையை வளர்க்க திருமதி மில்ஸ் எடுத்த முயற்சிகளை பழைய மாணவிகள் பெருமையாக புகழ்வார்கள்.


சில வருடங்களுக்கு முன்னர், கொழும்பில் இயங்கும் ஒரு பெரிய வர்த்தக நிறுவனமொன்று யாழ்ப்பாண பாடசாலையொன்றில் ஒரு தொழில்சார் பயிற்சி மையம் அமைக்க முன்வர, பரி யோவானின் பழைய மாணவர் ஒருவர் அதை தான் படித்த பாடசாலையில்  அமைக்க முயற்சி எடுக்க யாழ்ப்பாணம் சென்றார். பரி யோவான் நிர்வாகம் அந்த அரிய செயற்திட்டத்தை அலட்சியப்படுத்த, உடுவில் மகளிர் கல்லூரி அதிபருடன் தொடர்பு கொள்கிறார் அந்த பரி யோவான் பழைய மாணவர். செயற்திட்டத்தின் பலனை உடனடியாக உணர்ந்து கொண்ட உடுவில் அதிபர் திருமதி மில்ஸ்,  உடுவில் மகளிர் கல்லூரியில் அந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த இணங்குகிறார். 


இந்து கோயில்களில் நடக்கும் சண்டைகள் சச்சரவுகள் தமிழ் சமூகம் நன்கறிந்தது. ஆனால் "ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக" என்று தேவாலயத்தில் சொல்லிவிட்டு, திருச்சபைக்கு வெளியே வந்து கிறிஸ்தவ சமூகம் பிடிக்கும் சண்டைகள் பெரிதாக வெளியே வருவதில்லை. தமிழ்த் திருச்சபை சண்டைகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, மெல்பேர்ணிலும் லண்டனிலும் டொரோன்டோவிலும் இன்றும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. உடுவில் மகளிர் கல்லூரியில் நடந்த பிரச்சினைக்கும் இதுவே மூலகாரணம்.


2008ம் ஆண்டளவில் சர்ச்சைக்குரிய வகையில் யாழ்ப்பாண தென்னிந்திய திருச்சபையின் ஆயர் பதவியேற்ற தியாகராஜா ஆண்டகையின் செயற்பாடுகள் தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கின்றன.  ஆயரின் குழப்படிகளை நன்கறிந்திருந்தும், ஆயர் தலைமை வகிக்கும் உடுவில் மகளிர் கல்லூரி ஆளுநர் சபை, உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் விடயத்தில் அவருடன் இணைந்தது பயணித்தது கல்லூரியின் நலன் விரும்பிகளை ஆத்திரப்படுத்தியிருக்கிறது.


 மிக மிகத் திறமையாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கல்லூரி அதிபரை, தான் செயற்படுத்தியிருக்கும் செயற்திட்டங்களை நிறைவேற்ற இன்னும் ஜந்து ஆண்டுகள் பணியாற்ற அனுமதி தாருங்கள் என்று அந்த அதிபர் கேட்டும், அவரை அவமதித்தது வன்மையான கண்டனத்திற்குரியது. யாழ்ப்பாணத்தில் இன்று நிலவும் ஆளுமை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, திருமதி மில்ஸ் போன்ற ஆளுமையாளர்கள் தொடர்ந்து பணியாற்றியே ஆகவேண்டும்.


இந்த பிரச்சினையை, பெற்றோரும் பழைய மாணவர் சங்கங்களும் வடமாகாண கல்வி அமைச்சும் தென்னிந்திய திருச்சபையும் யாழ்ப்பாண கல்வியாளர்களும் இணைந்து பேசித் தீர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களின் எதிர்காலத்தையும் பழமை வாய்ந்த கல்லூரியின் பாரம்பரியத்தையும் இக்கட்டில் ஆழ்த்தியுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.


மேற்கூறிய அமைப்புக்கள் யாவும் தமிழர்களின் முழுமையான கட்டுபாட்டில் இயங்குபவை. தமிழர் கட்டமைப்புகளை மீறி இந்த பிரச்சினையை சிங்கள தேசத்தின் அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்ற செயற்பாடு, தமிழர்களின் சுயாட்சி கோரிக்கையை கேவலப்படுத்தும் செயற்பாடல்லவா ? ஒரு பாடசாலையை பிரச்சினையை தீர்க்க தெரியாத உங்களுக்கு எதுக்கு சமஷ்டி ? என்று நாளை அதே மைத்ரி கேட்கும் போது எங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்க போகிறோம் ?


உடுவில் மகளிர் கல்லூரி ஆளுநர் சபையில் சுமந்திரனும் அங்கம் வகிக்கிறார் என்றறிந்தவுடன் "உடுவில் பிள்ளைகளிற்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைத்தால் சரி" என்று, களமிறங்கிய அவரை அரசியலில் எதிர்க்கும் உணர்வாளர்கள் மெய்யாகவே மெய்சிலிர்க்க வைத்தார்கள். 


முதல்வர் விக்கினேஸ்வரன் தனக்குரிய அதிகாரங்களை தரச்சொல்லி மத்திய அரசுடன் மல்லு கட்டி நிற்க, மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட கல்வித்துறையை மீறி, ஜனாதிபதி மைத்ரியின் கவனத்திற்கு உடுவில் பிரச்சினையை கொண்டு போனதை பார்த்து கிலாகித்த உணர்வாளர்களை என்ன சொல்ல ?


யாருடைய காலிலும் விழாமல், யாருக்கும் அடங்காமல், தன்மானத்துடன், தன்னிகரில்லா தலைவன் வழிநின்று, போராடிய இனத்தின் பெண் பிள்ளைகளை, மன்னர் மைத்ரியின் காலில் விழுந்து அழவைத்த மானஸ்தன்களையும், அந்த வீடியோவை முகநூலில் பதிவேற்றி, மைத்ரிக்கு நன்றி சொன்ன தமிழுணர்வாளர்களையும் வரலாறு கவனித்து கொள்ளும்.


அடுத்த தேர்தலில் சைக்கிளிற்கு ஸீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கூட்டமைப்பிற்கு கிடைக்காமல் செய்ய, கைக்கு (SLFP) கை கொடுப்போம் என்று களமாடிய அரசியல் விற்பனர்களையும் தமிழினம் மறக்காது. கோர்ட்டு போட்ட லோயரை துரத்திவிட்டு, கோர்ட்டு போட்ட ரவுடியை பாஉ ஆக்க இந்த விற்பனர்கள் இட்ட அடித்தளம் அருமையானது.

ஆத்திரம் !

ஒபரேஷன் செங்கடல்


"தமிழர்கள் இங்கு நிம்மதியாகத் தான் வாழ்கிறார்கள்.. அவர்களிற்கு உண்ண கிரிபத்தும், தங்க தகர கொட்டகையும் கொடுத்துள்ளோம். இன்னும் என்ன வேணும்? எங்கள் கிரிக்கட் அணியில் இடம் வேணுமா?" பிரதமர் விக்ரமவின் பதிலில் நக்கல் எட்டிப் பார்க்கிறது. 


அலரி மாளிகையின் அரசவையில் மன்னர் சேனா அரியணையை அலங்கரிக்க, அவருக்கு வலப்புறம் வீற்றிருந்த பிரதம மந்திரியார் விக்ரம தான் மேற்கண்டவாறு கொக்கரித்திருந்தார். மன்னருக்கு இடப்புறம் அமர்ந்திருந்த டமில் தலைவர் சம்பு, அரை நித்திரையில் இருந்தவர் போலிருந்தாலும், கையிலிருந்த டப்பாவிலிருந்து எதையோ எடுத்து கொரித்துக் கொண்டிருந்தார்.


சற்று நேரத்திற்கு முன்னர் தான், "கபாலி எனவா.. பராக்...பராக்..பராக்" என்று வாயிற் காப்பாளன் கத்த, சபை பரபரப்பானது. மலேசிய தமிழர்களிற்காக போராடி விடுதலை வாங்கிக் கொடுத்த கபாலீஸ்வரன், விறுக் விறுக் என்று நடந்து அலரி மாளிகையின் அரசவைக்குள் நுழைகிறார். அவரோடு கூட அவரது உதவியாளராக, பில்லா புகழ் நயன்தாராவும்.


அரியணையை நோக்கி கிடு கிடுவென்று நடந்த கபாலி, எதையோ விட்டு விட்டு வந்தவர் போல, சட்டென திரும்பி நடந்தார். அவரோடு கூட வந்த நயன்தாரா என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நிற்க, அரசவை வாயிலில் தனது நீண்ட தடியை ஊன்றிக்கொண்டு யூதர்களை எகிப்திலிருந்து காப்பாற்றிய மோசஸ் மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார். மோசஸிற்கா சில கணங்கள் காத்து நின்ற கபாலி, அவரோடு இணைந்து நடந்து அரியணைக்கு அண்மையில் வந்தார்.


ஈழத் தமிழர்களின் அடிமை விலங்கொடிக்க, புலம்பெயர் தமிழர்களின் பிரதான அமைப்புக்களான நா.க.த.அ வும் உ.த.பே வும் இணைந்து செயற்படுத்தும் "ஒபரேஷன் செங்கடல்" கொழும்பில் அரங்கேறிக்கொண்டிருந்தது. மலேசியாவில் கபாலியை நா.க.த.அ வளைத்துப் போட, உ.த.பே மோசஸை இணங்க வைத்தது. மோசஸ் செங்கடலை பிளந்து யூதர்களை மீட்ட வரலாற்றை மையமாக வைத்து இந்த நடவடிக்கைக்கு ஓபரேஷன் செங்கடல் என்று பெயர் சூட்டப்பட்டது. 


ஒபரேஷன் செங்கடலிற்கு எதிராக போர் தொடுத்த முகமூடி மாயாவி இணையத்தளங்களையும், ஃபேஸ்புக் போராளிகளையும் வெற்றி கொண்டு,  நா.க.த.அ வும் உ.த.பே வும் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை முடுக்கி விட்டிருந்தார்கள். இலங்கை அரசருடனான கபாலியின் சந்திப்புக்கும் உ.த.பே ஒழுங்கு செய்திருந்தது


தனது இரு பெருவிரல்களையும் காற்சட்டையின் பெல்டுக்குள் விட்டு, கோர்ட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு, குறுக்கும் நெடுக்கும் நடந்து, கபாலி அரசவையை நோட்டம் விடுகிறார் . மன்னர் சேனாக்கு பதற்றம் பற்றிக் கொள்ள, அரியணையின் நுனிக்கு நகர்ந்து..


"மிஸ்டர் கபாலி, நீங்கள் யார், ஏன் இங்கு வந்தீர்கள்" என்று மன்னர் பதற்றம் கலந்த குரலில் கேட்க, பிரதமர் விக்கிரமவோ நயன்தாராவை விழுங்கி விடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தார்.


"ஹா.... ஹா...ஹா" அரசவை அதிர கபாலி சிரிக்க, அதிர்ச்சியில் விழித்தெழுந்த அரைத் தூக்க பெரியவரின் டப்பா கை தவறி விழுகிறது. டப்பாவிலிருந்து சிதறிய கடலை ஒன்று கபாலியின் காலடிக்கு உருண்டு வர, அதை குனிந்து எடுத்து, ஸ்டைலாக மேலே எறிந்து லபக்கென்று கபாலி வாய்க்குள்  போட, 


"வாவ்.." ஆவென வாயை பிளந்த மன்னர் சேனாவை பிரதம மந்திரி முறைத்துப் பார்க்கிறார்.


"கபாலி...க..பா..லி... கபாலிடா, தமிழ் மக்களை மீட்கவந்த நெருப்புடா" கபாலி முழங்க, மன்னர் சேனா கலவரம் கலந்த முகத்தோடு பிரதம மந்திரியாரை நோக்குகிறார்.


"மன்னர் சேனா அவர்களே, தமிழ் மக்களை போகவிடுங்கள், இது ஆண்டவன் கட்டளை" மோசஸ் சன்ன குரலில் ஆணித்தரமாக உரைக்கிறார்.


"போக விடா விட்டால்" பிரதம மந்திரி விக்கிரம ஒரு நரித்தனமான சிரிப்புடன் கபாலியை பார்த்து கேட்கிறார். மன்னர் சேனாவைப் பார்த்து "நான் பார்த்து கொள்கிறேன், நீர் சும்மா இரும்" என்ற தொனிப்பட கையை ஆட்டுகிறார் பிரதமர் விக்கிரம.


சக்கு சக்கு என வேகமாக நடந்து விக்ரமவின் ஆசனத்திற்கண்மையில் நெருங்கிய கபாலி, டக்கென்று தனது கூலிங் கிளாஸை கழற்றி, ஒருக்கா சுழற்றி தனது கோர்ட் பொக்கெற்றில் ஸ்டைலாக வைத்து விட்டு, விக்ரமவின் கண்களை ஊடறுத்து பார்த்து.


"மிஸ்டர் ரணில்.... நான் ரொம்ப கெட்டவன்... நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்... கெட்ட பயல் சார் இந்த கபாலி" கபாலி கடுப்பாகிறார்.


"தமிழர்கள் இங்கு நிம்மதியாக வாழ்கிறார்கள்.. அவர்களிற்கு உண்ண கிரிபத்தும், தங்க தகர கொட்டகையும் கொடுத்துள்ளோம். இன்னும் என்ன வேணும்? எங்கள் கிரிக்கட் அணியில் இடம் வேணுமா ? " பிரதமரின் பதிலில் நக்கல் எட்டிப் பார்க்கிறது. 


"வேணும்.. தமிழர்கள் சுயமரியாதையோடு வாழும் நிலை வேண்டும், வேணும்... தமிழர்களின் அடிமைத்தளை உடைய வேண்டும், வேணும்...தமிழர்கள் தங்களை தாங்களே ஆள வேண்டும்.. புரிகிறதா மிஸ்டர் விக்கிரம" கபாலி முழங்க, பெரியவர் சம்புவின் முகம் மலர்கிறது. 


"தமிழர்களை விட முடியாது, மரியாதையா நீங்க வந்த எயர் ஏசியா ப்ளைட்டில் ஏறி மலேசியாவிற்கே போய்டுங்க" விக்ரமவின் குரலில் கடுமை தொனிக்கிறது.


"இது தான் உங்கள் இறுதி முடிவா" மோசஸ் உறுதிப்படுத்துகிறார். 


"இறுதியும் அறுதியுமான முடிவு" மன்னர் சேனா கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன், கபாலியை பார்க்க பயந்து மோசஸை பார்த்து உறுமுகிறார்.


"எகிப்தியர்களிற்கு நடந்தது ஞாபகம் இருக்கிறதா" மோசஸின் குரலில் காரம் ஏறியிருந்தது. 


"எங்கள் மகாவம்சம் மற்றும் சூளவம்சம் தவிர வேறு எதைப் பற்றியும் எங்களுக்கு தெரியாது, அறியவும் விரும்பவில்லை" மன்னர் சேனாவின் துணிச்சல் உச்சத்தை தொட்டது. 

பெரியவர் சம்பு மீண்டும் கடலை கொரிக்க ஆரம்பித்திருந்தார், கடலை கொரிக்க மட்டும் வாயை திறந்து மூடினார். "பெரியவர் சம்பு இராஜதந்திரமா ஏதோ செய்யப்போறார், அதான் அமைதியாக இருக்கிறார்" என்று நயன்தாரா மனதுக்குள் கணக்கு போட்டார்.


"மோசஸ், இவங்கள் சரிப்பட மாட்டாங்கள், நாங்கள் எங்கள் ஆட்டத்தை தொடங்குவம்" கபாலி பொறுமையிழந்தார். 


"உண்மை தான்" மோசஸும் கபாலியுடன் உடன்பட்டார். தனது நீண்ட கோலை பிடித்துகொண்டு மோசஸ் ஜெபிக்கத் தொடங்கினார். முழங்காலிட்டு, கண்ணை மூடி, கைகளை விரித்து, வானத்தைப் பார்த்து, "பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே..." என்று மோசஸ் உரக்க ஜெபிக்க தொடங்க, நயன்தாரா மட்டும் முழங்காலிட்டு,  பிதா சுதன் போட்டு விட்டு, தலை குனிந்து ஜெபத்தில் இணைந்தார். 


ஜெபித்து முடித்து எழுந்த மோசஸின் இருமருங்கிலும் கபாலியும் நயன்தாராவும் இணைய, உறுதி நிறைந்த குரலில் "மன்னர் சேனா அவர்களே, தமிழர்களை போக விடுங்கள், இல்லா விட்டால்...உங்கள் நாட்டில்..." மோசஸ் சொல்லி முடிக்கவில்லை..


"நிறுத்துங்கோ, நிறுத்துங்கோ, அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதிங்கோ" என்று அதுவரை மெளனம் காத்த தலைவர் சம்பு ஆசனத்தை விட்டெழுந்து திருவாய் மலர்ந்தார்.


"ஏன்...ஏன்...ஏன்... உங்கட மக்களிற்கு விடிவு கிடைக்க போவது உங்களிற்கு மகிழ்ச்சி தரவில்லையா? "  உணர்ச்சி பொங்க கேட்ட கபாலி, தலைவர் சம்புவை எரித்து விடுவது போல் பார்த்தார்.


"இது எங்கட உள்நாட்டு விவகாரம், , இதில வெளியார் தலையிட வேண்டியதில்லை" தலைவர் சம்பு செப்பினார். 

கபாலி தலையில் கைவைக்க, மோசஸ் நம்முடியாமல் தலையை ஆட்ட, நயன்தாரா கண்ணீரை லேஞ்சியில் ஒற்றினார்.

"எங்களுக்கு அவங்களோடு இதயபூர்வமான இணக்கம் இருக்கு", சொல்லிவிட்டு டமில் தலைவர் சம்பு மீண்டும் கடலை கொரிக்க ஆரம்பித்தார்.

கபாலிக்காக எயர் ஏஸியா விமானம் 
கட்டுநாயக்காவில் காத்திருந்தது !

(பொறுப்பு துறப்பு: யாவும் கற்பனை, கற்பனையை தவிர வேறொன்றுமில்லை)


Friday, 2 September 2016

அம்மம்மா


நமது வாழ்வில் பிறப்பாலும் திருமண பந்தத்தாலும் இணையும் உறவுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பார்கள்.  சில உறவுகள் வாழ்க்கைப்  பயணத்தில் இடைநடுவில் நம்மை விட்டு பிரிந்தாலும், நாம் சாகும் வரை நம் மனதை விட்டகலாதவை, காலங்கள் கடந்தும் நம்மோடு பயணிப்பவை.


அம்மம்மா என்ற உறவு, என்றைக்குமே மனதை விட்டகலாத ஒரு அற்புதமான அழகிய உறவு. அம்மம்மாமார்  பேரன்மாரிடம் அளவுக்கதிகமாக அன்பு செலுத்துவார்கள், அதுவும் மூத்த பேரன் என்றால் சொல்லி விளக்க தேவையில்லை. என்னுடைய அம்மம்மாவும் அப்படித்தான்..


1977 இனக்கலவரத்திற்கு பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற, பாடசாலை விடுமுறைகளிற்கு கொழும்பு வரும்போது அம்மம்மாவின் அன்பில் திளைத்த காலங்கள் இனிமையானவை. கிழமையில் இரண்டு மூன்று தரம் வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு மரக்கறியும் மீனும் வாங்க போவதும், அம்மம்மா பேரம் பேசி வாங்குவதும் சுவாரசியமான அனுபவங்கள். மரக்கறியும் மீனும் வாங்கி முடிய, வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு வெளியிலிருக்கும் சிவப்பு வெள்ளை நிறங்களில் பெயின்ட் அடித்த Milk Board கடையில் அம்மம்மா வாங்கித்தரும் பக்கெற்றில் வரும் குளிரூட்டிய இனிப்புப் பாலை இன்றைக்கு நினைத்தாலும் இனிக்கும். 


1983 இனக்கலவரம் வரை எங்கள் பாடசாலை விடுமுறை நாட்கள் வெள்ளவத்தையில் அம்மம்மாவோடு கழிந்தன. பின்னேரங்களில் , இரு பக்கமும் ட்ரெய்ன் வருகிறதா என்று அவதானமாகப் பார்த்து, தண்டவாளங்களை கவனமாக கடந்து, கடற்கரைக்கு கூட்டி போய், அம்மம்மா சூரிய அஸ்தமனம் காண்பித்த பொழுதுகள்,  இன்றும் வெள்ளவத்தை கடற்கரை போகும் போது நினைவுகளில் நிழலாடும். சிறு வயதில் அம்மம்மாவின் கையை பிடித்துகொண்டு சூரியன் கடலுக்குள் இறங்கி மறையும் கணங்களை பரவசத்தோடு பார்த்த நினைவுகளை, அதே கடற்கரையில் நின்று இன்று நினைக்கும் போது கண்கள் பனிக்கும்.


இரவுச் சாப்பாடு அநேகமாக  சதோசவில் வாங்கின கோதுமை மாவில் செய்த நீத்துப் பெட்டி  புட்டும், உரலில் இடித்த உறைப்பு சம்பலும் தான். அம்மம்மா யாழ்ப்பாணத்து மனுஷி, கலியாணம் கட்டி கொழும்பில் கனகாலம் வாழ்ந்தாலும், சாப்பாட்டில் மண்வாசனை மணக்கும். கறியோ குழம்போ ஏன் சம்பலோ, எதுவென்றாலும் சாப்பாட்டில் உறைப்பு  தூக்கலாக இருக்கும். 


கொதி கொதி வெள்ளைப் புட்டில், மாசி மீன் துகள்கள் கலந்த செத்தல் மிளகாய் சம்பலை குழைத்து சாப்பிட...கண்ணால கண்ணீர் வரும். "உறைக்க உறைக்க சாப்பிடாதே என்று எத்தனை தரம் சொல்லுறது" என்று கூறியபடி அம்மம்மா தண்ணி கொண்டு வந்து தருவா . சாப்பிட்டு முடிய தன்ட கையால சீனி அள்ளி என்னுடைய வாய்க்குள் போட்டு விடுவா.


பின்னேரம் ஆறுமணியாகி விட்டால், இன்னொருக்கா குளித்து விட்டு, சாமி கும்பிட சாமியறைக்குள் போவா. அதே நேரம் குசினிக்குள் சித்தி சமையலை தொடங்குவா. சாமியறைக்குள் சூளமங்கலம் சகோதரிகளுக்கு சற்றும் சளைக்காமல் சத்தமாக அம்மம்மா கந்தசஷ்டி பாட தொடங்குவா. 


"காக்க காக்க கனகவேல் காக்க, 
நோக்க நோக்க நொடியில் நோக்க
குணா.. கறிக்கு முதல்பால் விட்டியா...
பார்க்க பார்க்க பாவம் பொடி பட,
தாக்க தாக்க தடையற தாக்க
உப்பு உறைப்பையும் ஒருக்கா பார்..
பார்க்க பார்க்க பாவம் பொடி பட.."
பாவம் முருகன், அம்மம்மா எந்த இடத்தில் இடைவேளை விடுவா என்றறியாமல் அந்தரப்படுவார். 


மாமாவின் திருமணத்திற்கு ஆறு மாதங்கள் ஒஸ்ரேலியா வந்துவிட்டு வந்து அம்மம்மா செய்த அலப்பறை தாங்க முடியவில்லை. அம்மம்மா ஆறு மாதங்கள் ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து  அவதானித்த விடயங்கள் இருபது வருடங்கள் வாழ்ந்தும் நாங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை. 


அம்மம்மா ஒரு தேத்தண்ணி பிரியை. அவ போடுற தேத்தண்ணியை ரசித்து ருசித்து குடிக்கிற ஒரே ஆள் நான் தான். பாட்டு பாடிக்கொண்டே காஸ் அடுப்பில் தண்ணி கொதிக்க வைத்து, தேயிலை வடியில் லாவகமாக வடித்து டம்ளரில் ஆத்தி, சுடச்சுட தேத்தண்ணி படிக்கிற மேசைக்கு வரும். டம்ளரில் குடித்தால் தான் தேத்தண்ணி சுவை கெடாது என்ற சூட்சுமம் சொல்லித் தந்தது அம்மம்மா. நான் இரவிரவா படித்த காலங்களில், கேட்காமலே தானே எழும்பி ரெண்டு மூன்று தரம் தேத்தண்ணி போட்டு தாறதும் அம்மம்மா. 


உயர்தர பரீட்சை பாஸ் பண்ண, நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல், ஒரு பவுண் தங்கத்தில் மோதிரம் செய்து தந்து அம்மம்மா மகிழ்ந்தா. நான் CIMA பாஸ் பண்ண அவக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. வேலை கிடைத்ததும் முதல் சம்பளத்தை கொம்பனி என்வலப்பில் போட்டுத் கையில் தர, அதை அப்படியே அம்ம்மாவின் கையில் கொடுத்தேன். கட்டியணைத்து அம்மம்மா முகர்ந்த முத்தம் இன்னும் என் நெற்றியில் ஈரலிப்பாக பதிந்திருக்கிறது. 


"ஆனை கறுத்தாலும் ஆயிரம் பொன் பெறுமடா, ஆம்பளை கறுப்பா இருந்தால் தான் வடிவடா, உனக்கு நல்ல வடிவான வெள்ளை பெட்டையா பார்த்து நான் கலியாணம் கட்டி வைப்பன்" என்று நான் பதின்மம் தாண்டி இருபதுக்குள் நுளைய அம்மம்மா பிரசங்கம் வைக்க தொடங்கினா. கலியாண வீட்டில் அந்த வடிவான வெள்ளைப் பெட்டை "காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டும் வைத்து, தேவதை போல் அவள் நடந்து வரவேண்டும்" என்று பாட்டாகவே படித்து என்னை படுத்துவா.


அம்மம்மாவிற்கு காதலில் நம்பிக்கையில்லை. எனக்கு தான் தான் பொம்பள பார்க்கோணும், கலியாணம் செய்து வைக்கோணும் என்று அம்மம்மா கனவுலகில் வாழ, நனவுலகில் காதல் என்னை கவர்ந்தது. நான் காதலிக்கிறேன் என்றறிந்ததும் "கண்டறியாத லவ்வும் கிவ்வும்" என்று என்னை செல்லமாக திட்டிக் கொண்டு அம்மம்மா திரிந்தா.


கொழும்பில் நடந்த என்னுடைய திருமணத்திற்கு அம்மம்மாவால்
வரமுடியவில்லை என்ற கவலை என்னை வெகுவாக பாதித்தது. 
அந்த நேரம் அம்மம்மா படுத்த படுக்கையாக இருந்தா. திருமணம் முடித்து அம்ம்மாவிடம் ஆசி வாங்க போகும் போது மறக்காமல் மனிசியை காஞ்சிபுரம் பட்டுடுத்தி, பொட்டு வைத்து கூட்டிக் கொண்டு போனேன்.
வாசலில் எங்களைக் கண்டதும், "காஞ்சிப் பட்டுடுத்தி..." அம்மம்மா பாடத் தொடங்கினா.


அதற்கடுத்த வருடம் அம்மம்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்து, கந்தசஷ்டி பாடிக்கொண்டே, முருகனடி சேர்ந்தா. அம்மம்மாவிற்கு தும்பளையில் குடும்ப காணி இருக்கிறது. அந்த காணியை எனக்கு எழுதி தரச்சொல்லி அவாவின் கடைசிக் காலங்கள் வரை பகிடிக்கு அலுப்பு கொடுத்து கொண்டேயிருந்தேன். 2002ல் யாழ்ப்பாணம் போன போது அந்த காணியிலிருக்கும் பங்குக் கிணற்றில் கால் கழுவி அம்மம்மாவின் ஆத்மாவை மகிழ்வித்தேன். 

அம்மம்மா
வாழ்வை என்றும்  மகிழ்விக்கும் அழகான உறவு !