Friday, 19 August 2016

கிரிக்கட், சிலோன், சதாசிவம்

(படத்தில் Don Bradmanம் மகாதேவன் சதாசிவமும்)


ஒஸ்ரேலியாவிற்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வென்று, அஞ்சலோ மத்தியூஸின் இலங்கை கிரிக்கட் அணி சரித்திரம் படைக்க, சமூக வலைத்தளங்களிலும் வேலைத்தளத்திலும் ஏற்படுத்திய அதிர்வலை, என் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எண்பதுகளின் இறுதியில், அஞ்சலோ மத்தியூஸ் வத்தளையில் நான் வசித்த என் சித்தி வீட்டிற்கு பின் வீட்டில் தான் பிறந்தார் வளர்ந்தார். சிறுவனான அஞ்சலோவிற்கு கிரிக்கட்....வேண்டாம் விடுவம். 


ஒஃபிஸில் ஒஸிக்காரன் என்னை சிரிலங்கனாக பார்க்க, கூடித்திரிந்த நண்பர்கள் வெடி கொளுத்தாத குறையாக கொண்டாட, ஃபேஸ்புக்கில் Mynthan Siva, Kishoker, Jeevatharshan மூவரும் அலப்பறை திருவிழா நெறிப்படுத்த, நான் மட்டும்.....ஏன் ? எதற்கு ? எப்படி ?


இந்த கேள்விகளுக்கு விடை தேடி, நடந்து வந்த பாதையை திரும்பி ஒருக்கா பார்ப்போம். அந்த பாதையில் பயணிக்கும் போது, "கறுப்பு Bradman" என்று வர்ணிக்கப்பட்ட மகாதேவன் சதாசிவம் என்ற சிலோன் கிரிக்கெட்டரையும் நினைவுறுத்திக் கொண்டே செல்வோம்.

----------------------------------------------------

பெப்ரவரி 17, 1982ல் சிரிலங்கா தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியை ஆடியபோது எனக்கு பத்து வயதும் ஆகவில்லை. கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடந்த இந்த போட்டிக்கு ஹற்றன் நஷனல் வங்கி அனுசரணை வழங்கியது. பந்துல வர்ணபுர தலைமை தாங்கிய இலங்கை அணியில் சிதத் வெத்துமுனி, ரோய் டயஸ், டுலீப் மென்டிஸ், ரஞ்சன் மடுகல்ல, அர்ஜுன ரணதுங்க, DS டீ சில்வா, அஷந்தா டீ மெல், லலித் களுபெரும, மகேஷ் குணதிலக, அஜித் டீ சில்வா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். 


சர்வதேச கிரிக்கட் பற்றி அறிய தொடங்கிய பருவமது. அரசியல் அறியாத அறியாப் பருவமது. அஸ்ட்ரா மார்ஜரீனோட வந்த ரோய் டயஸின் ஸ்டிக்கரை Batல் ஒட்டி அழகு பார்த்த காலமது. டெஸ்ட் போட்டியின் விபரங்களை, பின்னேரம் 3:45ற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் விளையாட்டு செய்திகளில் எழில்வேந்தனின் குரலில் கேட்டறிந்த காலமது. காலை எழுந்ததும் வாசிகசாலைக்கு ஓடிப்போய் Daily Newsன் கடைசிப் பக்கத்தில் ஆங்கில எழுத்துக்களை எழுத்து கூட்டி வாசித்து ஆட்டத்தின் விபரம் வாசித்த காலமது. 


இங்கிலாந்தோடு ஆடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு கெளரவமான தோல்வியை தழுவியது. 19 வயதேயான அர்ஜுன ரணதுங்கவும் ரோய் டயஸ் மற்றும் ரஞ்சன் மடுகல்ல அடித்த அரைச்சதங்களும் அஷந்தா டீ மெல்லின் 4 விக்கட்டுகளும் இலங்கை அணி, ஒரு பலமான போட்டியை ஆட வழிவகுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் John Embureyயினதும் Derek Underwoodனதும் சுழல் பந்துவீச்சில் இலங்கை 175 ஓட்டங்களுக்கு சுருள, இங்கிலாந்து அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

-------------------------------------------------

இலங்கை சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து பெறமுதல் உலக அளவில் பேசப்பட்ட ஒரே ஒரு இலங்கை கிரிக்கட் துடுப்பாட்டக்காரன் மகாதேவன் சதாசிவம். இலங்கையை மட்டுமல்லாது மலேயா மற்றும் சிங்கப்பூர் நாட்டு அணிகளிற்கும் தலைமைதாங்கி ஆடிய சதாசிவத்தை, 1971ம் ஆண்டு, கிரிக்கட்டின் தாய்கழகமான இங்கிலாந்தின் MCC, ஒரு கெளரவ உறுப்பினராக இணைத்துக்கொண்டது. இந்த பெருமையை தனதாக்கிய முதலாவது இலங்கையர் சதாசிவம் தான்.


2011ம் ஆண்டு அதே MCCயின் வருடாந்த Collin Cowdrey நினைவுரை வழங்கிய முதலாவது இலங்கையரான குமார் சங்கக்கார, தனது பிரசித்தி பெற்ற உரையில் சதாசிவத்தை பற்றி சில வரிகள் குறிப்பிட்டது சங்காவின் ஆளுமையின் வெளிப்பாடு.

"Even after gaining Test Status in 1981, Sri Lanka’s cricket suffered from an identity crisis and there was far too little “Sri Lankan” in the way we played our cricket. Although there were exceptions, one being the much-talked about Sathasivam, who was a flamboyant and colourful cricketer, both on and off the field. He was cricketer in whose hand they say the bat was like a magic wand" Kumar Sangakkara.

------------------------------------------------------

சர்வதேச அந்தஸ்து பெற்ற இலங்கையின் முதலாவது வெளிநாட்டு பயணம் இந்தியா நோக்கி அல்லாது பாக்கிஸ்தான் நோக்கி அமைந்தது அன்றைய ஜேஆர் அரசின் இந்திய எதிர்ப்புக்கொள்கையை பிரதிபலித்தது. ஜாவிட் மியன்டாட்டின் பாக்கிஸ்தான் அணியிடம் 2-0 கணக்கில் மரண அடி வாங்கிக் கொண்டு திரும்பியது சிரிலங்கா அணி. ஃபைசலாபாத்தில் வெத்துமுனியின் 157, ஆட்டத்தை ட்ரோவாக்க, லாகோரில் டயஸின் சதம் வீணாகிப்போனது.


செப்டெம்பர் 17, 1982ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய கிரிக்கட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி களமிறங்கியது. இரு அணிகளும் தங்களது துடுப்பாட்ட திறமையை வெளிக்காட்டிய இந்த போட்டியில் டுலீப் மென்டிஸ் இரு இன்னிங்ஸிலும் அடித்த அதிரடி சதங்களும், ரோய் டயஸின் இரண்டாவது இன்னிங்ஸ் 97ம் இலங்கை அணியை திரும்பிப் பார்க்க வைத்தன. 


இந்திய அணிக்கு கவாஸ்கர் அடித்த 25வது சதமும் சந்தீப் பட்டீலின் சதமும் மானம் காத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 137/7 என்ற நிலையில் ஐந்தாம் நாள் முடிவுற, ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. 

--------------------------------------------------------------------------------

டுலீப் மென்டிஸிற்கு முன்னர் சேப்பாக்கத்தை அதிர வைத்த இலங்கையர், மகாதேவன் சதாசிவம். 1947ம் ஆண்டு சிலோன் அணிக்கும் தென்னிந்திய அணிக்குமிடையிலான போட்டியில் சதாசிவம் அடித்த 215, இன்றுவரை பேசப்படுகிறது.  MJ கோபாலன், CR ரங்காச்சாரி, குலாம் அஹமட், NJ வெங்கடேசன் போன்ற இந்திய அணி வீரர்களை உள்ளடக்கிய தென்னிந்திய அணிக்கெதிராக சதாசிவம் ஆடிய அதகளம், கிரிக்கட் வரலாற்றில்  இடம்பிடிக்கும் முக்கிய இன்னிங்ஸ்களில் ஒன்று. 

" a slim figure glided to the centre of the wicket with a ‘bewitching elegance’, his cap worn at a rakish angle, a white handkerchief tied around his neck, and proceeded to dispatch the ball to all parts of the ground while making 215. If the old timers are to be believed, that knock from Mahadevan Sathasivam, the legendary and flamboyant Ceylonese batsman, was the finest innings ever played at Chepauk.” Mumbai Mirror (1947)

---------------------------------------------------

1983ம் ஆண்டு எல்லாத்தையும் தலை கீழாக மாற்றிப் போட்டு விட்டது. ஜூன் 25, 1983 இரவிரவா அப்பாவோடு இருந்து, சிற்றலைகளில் BBCயில் இந்தியா உலக கோப்பையை வென்ற நேரடி வர்ணனை கேட்டதும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை சேர்ச்சிற்கு போகாமல் மத்தியானம் வரை நித்திரை கொண்டதும் இன்னும் நினைவில் நிற்கிறது. சரியாக ஒரு மாதம் கழித்து, ஜூலை 25, 1983ல் இனக்கலவரம் வெடித்து, சரவணமுத்து விளையாட்டரங்கு எரிக்கப்பட்டதும், இலங்கை அணி ஆடிய முதலாவது டெஸ்ட் பிட்ச் கொத்தப்பட்டு நாசமாக்கப்பட்டதும் கூட இன்னும் நினைவில் நிற்கிறது. 


சிரிலங்கா ஆமிக்காரனோடு எங்கட அண்ணாமார் துவக்கு சண்டை பிடிக்க தொடங்க, நாங்கள் விடுமுறைக்கு ரயிலேறி அம்மம்மாவிடம் கொழும்புக்கு வாறதும் தடைபட்டு போனது. ஆஹாசவாணி செய்தியும், சேப்பாக்கத்திலிருந்து மணியின் தமிழ் வர்ணணையும், பரி யோவான் நூலகத்திலிருந்த Sports Starம் மெல்ல மெல்ல என்னைப் போல் பலரை இந்திய கிரிக்கட் அணியின் பக்கம் நோக்கி தள்ள தொடங்கியது.

யாழ்ப்பாண கோட்டையிலிருந்து ஆமி ஷெல்லடிக்க அடிக்க எங்களையறியாமல் எங்கள் மனங்கள் பாக்குநீரீணையை தாண்டிக் கொண்டிருந்தது. இந்திய அணியில் தமிழ்நாட்டவரான கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தின் வருகையும் இந்திய கிரிக்கட் அணியின் பால் எம்மை ஈர்த்ததில் பெரும் பங்கு வகித்தது.

அடுத்த பதிவில்...
இலங்கை கிரிக்கட் அணியின் முதலாவது டெஸ்ட் வெற்றி, அலாப்பல், அம்பயர் பொன்னுத்துரை

No comments:

Post a Comment