Friday, 26 August 2016

1985: இலங்கையில் இந்தியாஜூலை 13, 1985ல் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை ஆகிய கோட்பாடுகளடங்கிய திம்பு பிரகடனத்தை தமிழ் இயக்கங்கள் ஒற்றுமையாக வெளியிட, இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் இந்திய அணுசரணையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை முறிகிறது.  அதே காலப்பகுதியில் லண்டனில் நடந்த ICCயின் கூட்டத்தில், 1987 உலக கிரிக்கட் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்ற வாக்களிப்பில், இந்தியாவிற்கு ஆதரவாக இலங்கை வாக்களிக்கிறது.


இலங்கை அளித்த வாக்கிற்கு பிரதியுபகாரமாக, இந்திய கிரிக்கட் அணியின் முதலாவது இலங்கை விஜயம் 1985 ஓகஸ்ட் இறுதியில் ஆரம்பமாகும்  என்று BCCI வாக்குறுதியளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயத்தை பகீஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. முதலில் விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்த இந்தியா, இலங்கையின் இராஜதந்திர அழுத்தங்களிற்கு அடிபணிந்து, ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில்  பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்துகிறது. 


இலங்கை விஜயம் நடைபெறாது என்று நம்பி இங்கிலாந்தில் county cricket விளையாட போன அமரநாத், வெங்சக்கார், சாஸ்திரி போன்ற இந்திய வீரர்கள் அவரச அவசரமாக நாடு திரும்புமாறு பணிக்கப்படுகிறார்கள். சென்னையில் நடைபெறவேண்டிய பயிற்சி பாசறை, தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பால் பம்பாய்க்கு மாற்றப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் கிர்மானி நீக்கப்பட்டு சதானந் விஷ்வநாத் அணியில் இடம்பிடிக்கிறார். கிர்மானியோடு Madan Lalற்கும் Roger Binnyக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இரு தமிழர்களிற்கும் இடம் கிடைக்கிறது, ஶ்ரீகாந்த் மற்றும் சிவராமகிருஷ்ணன். 


1983 ஜூனில் லண்டனில் வென்ற உலக கோப்பை, 1985 மார்ச்சில் மெல்பேர்ணில் வென்ற Benson & Hedges கோப்பை, 1985 ஏப்ரலில் ஷார்ஜாவில் வென்ற Rothmans கோப்பை என்று வெற்றி மமதையிலும், சரியாக திட்டமிடாமலும், முறையான தயார்படுத்தலில்லாமலும் இலங்கை மண்ணில் கால் பதித்த இந்திய கிரிக்கெட் அணியை எதிர்பார்த்து, பலமான தயார்படுத்தலுடனும் அதியுச்ச உத்வேகத்துடனும் இலங்கை கிரிக்கட் அணி காத்திருந்திருந்தது.


அன்றைய இலங்கையின் முன்னணி அம்பயர்களான, பொன்னுத்துரையும் KT ஃபிரான்ஸிஸும்  தாங்கள் அரங்கேற்றப்போகும் வரலாற்று நிகழ்வை அறியாமல், அலெக்ஸாண்ரா ரோட் கச்சான் கடையில் வாங்கிய உறைப்பு கடலையை கொரித்துக் கொண்டு வெள்ளவத்தை கடற்கரையை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

------------------------------------------------------------------------------------------------------

ஓகஸ்ட் 25, 1985 அன்று SSC மைதானத்தில் முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெறுகிறது. கொக்காவில் டவர் அடிக்க முற்பட்ட காலமாகையால், யாழ்ப்பாணத்திலும் ரூபவாஹினியூடாக ஆர்வத்துடன் போட்டியை மக்கள் பார்க்கிறார்கள். 
யாழ் குடாநாட்டில் ஆமிக்காரன்கள், கோட்டை, காரைநகர், பலாலி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நாவற்குழி முகாம்களிற்குள் முடக்கப்பட்டிருந்த காலமது.


ஷியா மார்ஷெட்டியும் ஹெலியும் ஷெல்லும் சனத்தை பதம்பார்க்க, ஆனையிறவில் ஆமிக்காரன், போறவாற சனத்தை ஏற்றி இறக்கி, துலைத்தெடுத்து அலுப்பு கொடுத்துக்கொண்டிருந்த காலம். வவுனியாவிற்கு வடக்கே இலங்கை அரசு விதித்திருந்த பொருளாதாரத்தடை அமுலிலிருந்த காலகட்டம்.  "எங்களிற்கு வலி தந்த சிங்கள தேசத்திற்கு கிரிக்கெட் ஆடுகளத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும்" என்ற எண்ணமே யாழ்ப்பாணத்தில் பரவலாக உணரப்பட்டது.


முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை அணிக்கு அமால் சில்வாவும் ரவி ரட்ணாயக்காவும் ஒரு நல்ல ஆரம்பத்தை கொடுத்தார்கள். மொஹிந்தர் அமரநாத், ரவி சாஸ்திரி, ஷேதன் ஷர்மா இணைந்து விக்கெட்டுக்களை சாய்க்க, இலங்கை 82/3ல் தத்தளித்தது. 


ரோய் டயஸும் (80) அர்ஜுண ரணதுங்கவும் (64) இணைந்து நாலாவது விக்கெட்டுக்கிற்கு 110 ஓட்டங்களை சேர்த்து, இலங்கையை ஒரு பலமான நிலைக்கு இட்டுச்சென்றார்கள். நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர் முடிவில் இலங்கை அணி 241/8 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மா 3/50 கைப்பெற்றினார்.


ஒஸ்ரேலியாவில் கலக்கிய இந்தியாவின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தும் ரவி சாஸ்திரியும் களமிறங்க, யாழ்ப்பாணம் உற்சாகமாகியது. வழமைக்கு மாறாக ஶ்ரீகாந்த் நிதானமாக ஆட, சாஸ்திரி வழமை போல் பசைஞ்சு நொட்டி நொட்டி ஆடினார். இந்திய அணி 69 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ரொஜர் விஜயசூரியவின் பந்துவீச்சில் ஶ்ரீகாந்த் (29) ஆட்டமிழக்கிறார். 


அடுத்தது அஸாருதீன், போன வருஷம் இந்திய அணியில் நுழைந்து, தானாடிய முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்திற்கெதிராக சதங்கள் அடித்த அஸார்தீன் (8), இந்திய அணி 81 ஓட்டங்கள் எடுத்த வேளை ஆட்டமிழக்க, சிரிலங்கா அணியின் கை மேலோங்குகிறது.


டுலீப் வெங்சக்கார் மடமடவென ரன்களை குவிக்க இந்திய அணியின் run chase வேகம் பிடிக்கிறது. அணியின் எண்ணிக்கை 135ல் சாஸ்திரி ஆட்டமிழக்க, Batஜ சுழற்றிக்கொண்டு கபில்தேவ் களமிறங்குகிறார். "இனித் தான் விளாயாட்டு இருக்கு" முன் கதிரையிலிருந்த பழசு, சாரத்தை அட்ஜஸ்ட் பண்ணி விட்டு சாய்ந்து உட்காருது. வெங்சக்காரும் கபிலும் அடித்து ஆட, அணியின் ஓட்ட எண்ணிக்கை 185ஜ சொற்ப நேரத்தில் தொடுகிறது. அந்த இடத்தில் கபில் (24) ருமேஷ் ரட்னாயக்கவின் பந்தில் பலியாக, பசையல் மன்னன் கவாஸ்கர் களமிறங்கினார்.


196ல் கவாஸ்கர் (0) ரன் அவுட்டாக களமிறங்கிய இந்தியாவின் உலக கோப்பை நாயகன் மொஹிந்தர் அமரநாத்தும் (2), அணியின் எண்ணிக்கை 200ல் ஆட்டமிழக்க, இந்திய அணியில் டென்ஷன் எட்டிப்பார்க்க தொடங்கியது. "நாசமா போவார், தோக்க போறாங்கள், உதுக்குத் தான் வடக்கத்தியாரை நம்பக் கூடாது என்றுறது" பக்கத்து வீட்டு அன்டி உணர்ச்சிவசப்பட்டார்.


200/6ல், சேடம் இழுக்கத் தொடங்கியிருந்த இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மாவாலும் (8) உயிர் கொடுக்க முடியவில்லை. டுலிப் வெங்சக்கார் மட்டும் மற்றப் பக்கத்தில் நம்பிக்கையின் உருவமாய் ஆடிக்கொண்டிருந்தார். 


அம்பாந்தோட்டை மகிந்த மாமா திருப்பதி வெங்கட்டிற்கு நேர்த்தி வைக்க, RJ ரட்னாயக்கா வீசிய பந்தை, DB வெங்சக்கார் (89) ஓங்கி அடிக்க, JR ரட்னாயக்க ஓடிப்போய் catch பிடிக்க, 234/8. யாழ்ப்பாணம் தலையில் கைவைத்து விட்டது. 


பத்தொன்பது வயதேயான தமிழ்நாட்டு அம்பி சிவராமகிருஷ்ணன், அடுத்து வந்த 44வது ஓவரில் முதல் மூன்று பந்துகளை வீணடிக்க, டென்ஷன் ஈஸி சேயரில் சம்மணமிட்டு குந்தியது. நாலாவது பந்தை தட்டிவிட்டு அம்பி அங்கால ஓட, ஜந்தாவது பந்தை விஷ்வநாத் பவுண்டரிக்கு அனுப்பினார், 239/8. 


"நல்லூரானே இந்தியா எப்படியாவது வெல்லோணும், ரெண்டு தேங்காய் அடிப்பன்" மகிந்தவிற்கு எதிராக மாவை அண்ணன் போராட்டத்தில் குதித்தார். கடைசி பந்தை விஷ்வநாத் அடித்து விட்டு ஓட, சிவராமகிருஷ்ணன் மற்றப்பக்கம் நோக்கி பறந்தார். 


கடைசி ஓவர், இந்திய அணி வெற்றி பெற மூன்று ஓட்டங்கள் தேவை. டுலீப் மென்டீஸ் உட்பட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் கூடி கதைத்து அஷந்தா டீ மெல்லிடம் பந்தை கொடுக்கிறார்கள். அஷந்தா டீ மெல், ஒரு ஸ்டைலிஷ் bowler. முதலாவது பந்தை போட அஷந்தா ஓடி வருகிறார்... "முருகா முருகா முருகா"... மாவை அண்ணன் முணுமுணுப்பது கேட்கிறது. 


முதலாவது பந்தை விஸ்வநாத் அழகாக ஒரு cover drive அடிக்க, தலை தெறிக்க இரு ஓட்டங்களிற்கு ஓடிய அம்பி சி.ரா.கிருஷ்ணனிற்கு மூச்சு வாங்கியது, யாழ்ப்பாணத்தாருக்கோ அப்பத்தான் மூச்சு திரும்ப வந்தது, 241/8. இரண்டாவது பந்து outside the off stump விழ, விஸ்வநாதன் துலாவ, வந்த மூச்சு திரும்ப போனது, நல்ல காலம் batல் படவில்லை. 


மூன்றாவது பந்திற்கு மென்டீஸ் எல்லா fieldersஜயும் கிட்ட கொண்டுவர, விஸ்வநாத் மீண்டும் ஒருக்கா guard எடுத்தார். "Padல மட்டும் பட விட்டுடாதேடா, அம்பயர் அவங்கட ஆள், கள்ளப்பயல், தூக்கி குடுத்திடுவான்" மாவை அண்ணன் tips கொடுத்தார். Leg stumpல் விழுந்த பந்தை விஷ்வநாத்  glance பண்ண, சி.ரா.கி பறந்து வர, அரவிந்தா பந்தை பிடித்து ஸ்டம்ஸை  நோக்கி எறிய, நாங்கள் எம்பி எழும்ப...

"நல்லூரானே ரெண்டு தேங்காயை நாலா தாறன், அடுத்த மேட்சையும் வெல்லப் பண்ணு" மாவை அண்ணன் வாக்குறுதியை நிறைவேற்றுவதை பின் தள்ளினார்.

அடுத்த மேட்ச்.. 
இலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் மேட்ச் ! அன்றைக்கு மட்டும் மாவை அண்ணன் அந்த ரெண்டு தேங்காயை நல்லூரானுக்கு அடித்திருந்தால்.. ச்சா.. அடுத்த மேட்சில் அந்த துன்பியல் சம்பவம் நடந்திராது.

Friday, 19 August 2016

கிரிக்கட், சிலோன், சதாசிவம்

(படத்தில் Don Bradmanம் மகாதேவன் சதாசிவமும்)


ஒஸ்ரேலியாவிற்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வென்று, அஞ்சலோ மத்தியூஸின் இலங்கை கிரிக்கட் அணி சரித்திரம் படைக்க, சமூக வலைத்தளங்களிலும் வேலைத்தளத்திலும் ஏற்படுத்திய அதிர்வலை, என் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எண்பதுகளின் இறுதியில், அஞ்சலோ மத்தியூஸ் வத்தளையில் நான் வசித்த என் சித்தி வீட்டிற்கு பின் வீட்டில் தான் பிறந்தார் வளர்ந்தார். சிறுவனான அஞ்சலோவிற்கு கிரிக்கட்....வேண்டாம் விடுவம். 


ஒஃபிஸில் ஒஸிக்காரன் என்னை சிரிலங்கனாக பார்க்க, கூடித்திரிந்த நண்பர்கள் வெடி கொளுத்தாத குறையாக கொண்டாட, ஃபேஸ்புக்கில் Mynthan Siva, Kishoker, Jeevatharshan மூவரும் அலப்பறை திருவிழா நெறிப்படுத்த, நான் மட்டும்.....ஏன் ? எதற்கு ? எப்படி ?


இந்த கேள்விகளுக்கு விடை தேடி, நடந்து வந்த பாதையை திரும்பி ஒருக்கா பார்ப்போம். அந்த பாதையில் பயணிக்கும் போது, "கறுப்பு Bradman" என்று வர்ணிக்கப்பட்ட மகாதேவன் சதாசிவம் என்ற சிலோன் கிரிக்கெட்டரையும் நினைவுறுத்திக் கொண்டே செல்வோம்.

----------------------------------------------------

பெப்ரவரி 17, 1982ல் சிரிலங்கா தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியை ஆடியபோது எனக்கு பத்து வயதும் ஆகவில்லை. கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடந்த இந்த போட்டிக்கு ஹற்றன் நஷனல் வங்கி அனுசரணை வழங்கியது. பந்துல வர்ணபுர தலைமை தாங்கிய இலங்கை அணியில் சிதத் வெத்துமுனி, ரோய் டயஸ், டுலீப் மென்டிஸ், ரஞ்சன் மடுகல்ல, அர்ஜுன ரணதுங்க, DS டீ சில்வா, அஷந்தா டீ மெல், லலித் களுபெரும, மகேஷ் குணதிலக, அஜித் டீ சில்வா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். 


சர்வதேச கிரிக்கட் பற்றி அறிய தொடங்கிய பருவமது. அரசியல் அறியாத அறியாப் பருவமது. அஸ்ட்ரா மார்ஜரீனோட வந்த ரோய் டயஸின் ஸ்டிக்கரை Batல் ஒட்டி அழகு பார்த்த காலமது. டெஸ்ட் போட்டியின் விபரங்களை, பின்னேரம் 3:45ற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் விளையாட்டு செய்திகளில் எழில்வேந்தனின் குரலில் கேட்டறிந்த காலமது. காலை எழுந்ததும் வாசிகசாலைக்கு ஓடிப்போய் Daily Newsன் கடைசிப் பக்கத்தில் ஆங்கில எழுத்துக்களை எழுத்து கூட்டி வாசித்து ஆட்டத்தின் விபரம் வாசித்த காலமது. 


இங்கிலாந்தோடு ஆடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு கெளரவமான தோல்வியை தழுவியது. 19 வயதேயான அர்ஜுன ரணதுங்கவும் ரோய் டயஸ் மற்றும் ரஞ்சன் மடுகல்ல அடித்த அரைச்சதங்களும் அஷந்தா டீ மெல்லின் 4 விக்கட்டுகளும் இலங்கை அணி, ஒரு பலமான போட்டியை ஆட வழிவகுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் John Embureyயினதும் Derek Underwoodனதும் சுழல் பந்துவீச்சில் இலங்கை 175 ஓட்டங்களுக்கு சுருள, இங்கிலாந்து அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

-------------------------------------------------

இலங்கை சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து பெறமுதல் உலக அளவில் பேசப்பட்ட ஒரே ஒரு இலங்கை கிரிக்கட் துடுப்பாட்டக்காரன் மகாதேவன் சதாசிவம். இலங்கையை மட்டுமல்லாது மலேயா மற்றும் சிங்கப்பூர் நாட்டு அணிகளிற்கும் தலைமைதாங்கி ஆடிய சதாசிவத்தை, 1971ம் ஆண்டு, கிரிக்கட்டின் தாய்கழகமான இங்கிலாந்தின் MCC, ஒரு கெளரவ உறுப்பினராக இணைத்துக்கொண்டது. இந்த பெருமையை தனதாக்கிய முதலாவது இலங்கையர் சதாசிவம் தான்.


2011ம் ஆண்டு அதே MCCயின் வருடாந்த Collin Cowdrey நினைவுரை வழங்கிய முதலாவது இலங்கையரான குமார் சங்கக்கார, தனது பிரசித்தி பெற்ற உரையில் சதாசிவத்தை பற்றி சில வரிகள் குறிப்பிட்டது சங்காவின் ஆளுமையின் வெளிப்பாடு.

"Even after gaining Test Status in 1981, Sri Lanka’s cricket suffered from an identity crisis and there was far too little “Sri Lankan” in the way we played our cricket. Although there were exceptions, one being the much-talked about Sathasivam, who was a flamboyant and colourful cricketer, both on and off the field. He was cricketer in whose hand they say the bat was like a magic wand" Kumar Sangakkara.

------------------------------------------------------

சர்வதேச அந்தஸ்து பெற்ற இலங்கையின் முதலாவது வெளிநாட்டு பயணம் இந்தியா நோக்கி அல்லாது பாக்கிஸ்தான் நோக்கி அமைந்தது அன்றைய ஜேஆர் அரசின் இந்திய எதிர்ப்புக்கொள்கையை பிரதிபலித்தது. ஜாவிட் மியன்டாட்டின் பாக்கிஸ்தான் அணியிடம் 2-0 கணக்கில் மரண அடி வாங்கிக் கொண்டு திரும்பியது சிரிலங்கா அணி. ஃபைசலாபாத்தில் வெத்துமுனியின் 157, ஆட்டத்தை ட்ரோவாக்க, லாகோரில் டயஸின் சதம் வீணாகிப்போனது.


செப்டெம்பர் 17, 1982ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய கிரிக்கட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி களமிறங்கியது. இரு அணிகளும் தங்களது துடுப்பாட்ட திறமையை வெளிக்காட்டிய இந்த போட்டியில் டுலீப் மென்டிஸ் இரு இன்னிங்ஸிலும் அடித்த அதிரடி சதங்களும், ரோய் டயஸின் இரண்டாவது இன்னிங்ஸ் 97ம் இலங்கை அணியை திரும்பிப் பார்க்க வைத்தன. 


இந்திய அணிக்கு கவாஸ்கர் அடித்த 25வது சதமும் சந்தீப் பட்டீலின் சதமும் மானம் காத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 137/7 என்ற நிலையில் ஐந்தாம் நாள் முடிவுற, ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. 

--------------------------------------------------------------------------------

டுலீப் மென்டிஸிற்கு முன்னர் சேப்பாக்கத்தை அதிர வைத்த இலங்கையர், மகாதேவன் சதாசிவம். 1947ம் ஆண்டு சிலோன் அணிக்கும் தென்னிந்திய அணிக்குமிடையிலான போட்டியில் சதாசிவம் அடித்த 215, இன்றுவரை பேசப்படுகிறது.  MJ கோபாலன், CR ரங்காச்சாரி, குலாம் அஹமட், NJ வெங்கடேசன் போன்ற இந்திய அணி வீரர்களை உள்ளடக்கிய தென்னிந்திய அணிக்கெதிராக சதாசிவம் ஆடிய அதகளம், கிரிக்கட் வரலாற்றில்  இடம்பிடிக்கும் முக்கிய இன்னிங்ஸ்களில் ஒன்று. 

" a slim figure glided to the centre of the wicket with a ‘bewitching elegance’, his cap worn at a rakish angle, a white handkerchief tied around his neck, and proceeded to dispatch the ball to all parts of the ground while making 215. If the old timers are to be believed, that knock from Mahadevan Sathasivam, the legendary and flamboyant Ceylonese batsman, was the finest innings ever played at Chepauk.” Mumbai Mirror (1947)

---------------------------------------------------

1983ம் ஆண்டு எல்லாத்தையும் தலை கீழாக மாற்றிப் போட்டு விட்டது. ஜூன் 25, 1983 இரவிரவா அப்பாவோடு இருந்து, சிற்றலைகளில் BBCயில் இந்தியா உலக கோப்பையை வென்ற நேரடி வர்ணனை கேட்டதும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை சேர்ச்சிற்கு போகாமல் மத்தியானம் வரை நித்திரை கொண்டதும் இன்னும் நினைவில் நிற்கிறது. சரியாக ஒரு மாதம் கழித்து, ஜூலை 25, 1983ல் இனக்கலவரம் வெடித்து, சரவணமுத்து விளையாட்டரங்கு எரிக்கப்பட்டதும், இலங்கை அணி ஆடிய முதலாவது டெஸ்ட் பிட்ச் கொத்தப்பட்டு நாசமாக்கப்பட்டதும் கூட இன்னும் நினைவில் நிற்கிறது. 


சிரிலங்கா ஆமிக்காரனோடு எங்கட அண்ணாமார் துவக்கு சண்டை பிடிக்க தொடங்க, நாங்கள் விடுமுறைக்கு ரயிலேறி அம்மம்மாவிடம் கொழும்புக்கு வாறதும் தடைபட்டு போனது. ஆஹாசவாணி செய்தியும், சேப்பாக்கத்திலிருந்து மணியின் தமிழ் வர்ணணையும், பரி யோவான் நூலகத்திலிருந்த Sports Starம் மெல்ல மெல்ல என்னைப் போல் பலரை இந்திய கிரிக்கட் அணியின் பக்கம் நோக்கி தள்ள தொடங்கியது.

யாழ்ப்பாண கோட்டையிலிருந்து ஆமி ஷெல்லடிக்க அடிக்க எங்களையறியாமல் எங்கள் மனங்கள் பாக்குநீரீணையை தாண்டிக் கொண்டிருந்தது. இந்திய அணியில் தமிழ்நாட்டவரான கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தின் வருகையும் இந்திய கிரிக்கட் அணியின் பால் எம்மை ஈர்த்ததில் பெரும் பங்கு வகித்தது.

அடுத்த பதிவில்...
இலங்கை கிரிக்கட் அணியின் முதலாவது டெஸ்ட் வெற்றி, அலாப்பல், அம்பயர் பொன்னுத்துரை

Friday, 12 August 2016

கணவாய்க் கறி"கணவாய்க் கறி ஆறப்போகுது, கெதியா குளிச்சிட்டு வாரும்"

ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மனிசி அன்பாய் கூப்பிட, பாத்ரூமுக்குள் பாய்ந்தேன். சுடுதண்ணி அளவா வருதா என்று பார்க்க மினக்கெட, "என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" பாட்டு  சூரியன் FMல் ஒலிக்க தொடங்கியிருந்தது. Lux சோப் நான் போட, சூரியன் FM, இளையராஜாவின் "நீ தானே என் பொன்வசந்தம்" பாட்டு போடுது. 80களில் ஶ்ரீதேவி, Lux சோப் போட்டு குளித்த நாளிலிருந்து.. விடுவம், அது தனிக்கதை.


குளித்து முடித்து, சாமி கும்பிட்டுவிட்டு வர, குத்தரிசி சோறும் கணவாய்க் கறியும் கோப்பையில் எனக்காக காத்திருக்குது. கோப்பையின் ஓரத்தில் கத்தரிக்காய் பால்கறி வேற இடம்பிடித்திருக்குது. கணவாய் கறியை மட்டும் அளவா கிள்ளி சோத்தில் குழைத்து அள்ளி வாயில் வைக்க....சொல்லி வேலையில்லை, சொர்க்கத்தின் வாசற்படி தெரிந்தது.

"எப்பிடியிருக்கு ?" மனிசி கேட்டா

"அந்த மாதிரி.. கணவாய் கறி வைத்த தங்க கைக்கு நித்யகல்யாணியில் ஒரு வைரமோதிரம் வாங்கி தாறன்" காதல் வாக்குறுதியொன்றை வாரி வழங்கினேன்.

"உந்த கதை வசனத்தை உம்மட blogல் வைத்து கொள்ளும்.. கதையை விட்டிட்டு, கத்தரிக்காயை சேர்த்து சாப்பிடும்" சமாதான காலத்திலும் ஆமி ஷெல்லடித்தது.

-----------------------------------

யாழ்ப்பாண சமையலில் ஒரு தனித்துவமான கறி, கணவாய்க் கறி. நல்ல கொழு மொழு கணவாயை வாங்கி, திறமான  உறைப்புக் கூடிய யாழ்ப்பாண கறித்தூள் போட்டு, கொஞ்சம் பிரட்டாலாக குழம்பு வைத்தால்.. அதை அடிக்க ஆளிருக்காது. தடிப்பான கறித்தூள் குழம்பில், கலாதியாக மிதக்கும் கணவாயை பார்க்கவே வாயூற தொடங்கும். அடுப்பில் கணவாய்க் கறி கொதிக்கும் போதே நைசா எடுத்து வாய்க்குள் போட்டு ருசி பார்த்து அம்மாட்ட ஏச்சு வாங்கிய காலமும் இருந்தது. 


கணவாய்க் கறிக்கு பொருத்தமான ஜோடி குத்தரிசி சோறு தான். சிவத்த சோற்றில், உறைப்புக் கணவாய் கறியை போட்டு, குழைத்து சாப்பிட... "என்னவென்று சொல்லுவது வஞ்சியவள் பேரழகை" பாட்டு மண்டைக்குள் கேட்கும்.  பாஸ்மதி, சம்பா, பொன்னி போன்ற ஹைஃபை அரிசிகள், கணவாய்க் கறிக்கு எடுபடாது. கணவாய்கறியில் இருக்கும் richnessற்கு தாக்கு பிடிக்க கூடிய ஒரே அரிசி, எங்கட குத்தரிசி தான்.


கணவாய்க் கறியும் புட்டும், நயன்தாராவும் கவர்ச்சியும் மாதிரி, நல்லா ஒத்துபோகும். அதிலும் அரசிமா புட்டு என்றால் இன்னும் விசேஷம். கோதுமை மா புட்டோடும் கணவாய்க் கறி திறமா தான் இருக்கும், ஆனாலும் அரிசிமா புட்டு மாதிரி வராது. எந்த புட்டாயிருந்தாலும், புட்டும் கணவாய்க் கறியும் மிதமான சூட்டோடு இருக்கும் போது சாப்பிடோணும். ஆறினாப்பிறகு microwaveல் போட்டு வறட்டி எடுத்து ருசியை கெடுக்கக் கூடாது. 


கணவாய்க் குழம்பில் கணவாயின் சினை மாட்டுப்பட்டால் அன்றைக்கு சனிதா வாசனாவ லொட்டரி அடித்த மாதிரி தான். சின்ன வெள்ளை கணவாய் முட்டையை வாயில் போட்டு மெல்ல...ப்பா, நினைத்தாலே என்னவோ செய்யும்.


கணவாய்க் கறியை மண்சட்டியில் வைத்து காய்ச்சினால், அதன் சுவை இன்னொரு லெவலிற்கு போய் விடும். மத்தியானம் சோறோடு கணவாய்க் கறி விளாசிவிட்டு, இரவு புட்டுக்கும் கணவாய்க் கறி இருந்தா திறமா இருக்கும் என்று மனம் ஏங்கும். புட்டை கொஞ்சமா கையில் எடுத்து, கணவாய்க் கறி காய்ச்சிய மண்சட்டிக்குள் மிஞ்சியிருக்கும் கறியில் பிரட்டி எடுத்து சாப்பிட...நாக்கில விண் கூவும்.கணவாய்க் கறியும் இடியப்பமும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு மாதிரி. எவ்வளவு குத்தி முறிஞ்சாலும் ஒத்து வராது. கணவாய்க் குழம்பு பிரட்டலா இருப்பதால் இடியப்பத்திற்கு ஒத்து வாரதில்லை என்று நினைக்கிறேன். பாண், ரொட்டி எல்லாம் கணவாய்க்கு கிட்டவும் கொண்டு வரக்கூடாது. தோசை, இட்லி எல்லாம் கணவாய்க் கறிக்கு கண்ணிலேயும் காட்ட கூடாது. 


கணவாயை சாதுவாக உப்பும் தூளும் போட்டு பிரட்டி பொரித்து சாப்பிட்டாலும் நல்லாயிருக்கும். வாயில் போட்டு கஷ்டப்பட்டு கடிக்க, கணவாயிலிருக்கும் அந்த ஜூஸ் வெளிப்பட்டு நாக்கில் நர்த்தனமாடும் கணம் அலாதியானது. வெள்ளைக்காரன், salt & pepper calamari என்று ஒரு பதார்த்தத்தை தயாரித்து, தமிழர்களின் கணவாய் பொரியலோடு Master chefல் போட்டிக்கு வருவார்கள். போட்டியில் அந்த salt & pepper calamariஐ எங்கட கணவாய் பொரியல் தூக்கி சாப்பிட்டு ஈசியாக வெற்றிவாகை சூடும்.  


90களில் வெள்ளவத்தை வாகீசன் சாப்பாடுக் கடையில் வேர்த்து விறுவிறுத்து உறைக்க உறைக்க கணவாய்க் கறி சாப்பிடுவோம். கடைசியாக கொழும்பு போனபோது Palmyraவில் ஏசி அறைக்குள் இருந்து கணவாய்க் கறி சாப்பிட்டோம். 

வாகீசன் 5-3 Palmyra.


ஒஸ்ரேலியாவில் கிடைப்பது calamari இல்லாட்டி squids. Squids கணவாய் போல இருக்கும் ஆனால் கணவாய் இல்லை. Calamari தான் எங்கட ஊர் கணவாய். கணவாயை விட அளவிலும் ருசியிலும் சிறிதான squids வாங்கிக்கொண்டு போய் ஏமாந்த நாட்களும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ஒஸி கணவாய் தாய்லாந்திலிருத்து இறக்குமதியாகிறது. தாய்லாந்து கணவாய் கொஞ்சம் மென்மையானது. எங்கட யாழ்ப்பாண கணவாய் மாதிரி தடிப்பு இல்லை. யாழ்ப்பாணத்தானின் தடிப்பு கணவாயிலும் தெரியும். 


ஒஃபிஸ்காரரோடு சாப்பிட போகும் போது விலாசமாக calamari saladஐ ஓடர் பண்ணி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நொந்து நூடில்ஸான பொழுதையும் வரலாறு மறக்காமல் பதிவு செய்யும். 


கணவாய் கறியை சாப்பிட்டு விட்டு எவ்வளவு தான் டெட்டோல் போட்டு கழுவினாலும் அந்த கணவாய்க் கறி மணம் கையை விட்டு போகாது. சாப்பிட்டு முடிச்சாப் பிறகு, எவ்வளவு கழுவியும் மணம் போகாத அந்த கையை,  யாரும் பார்காத போது, ஒருக்கா முகர்ந்து பார்த்து, கணவாய்க் கறி வாசத்தை மீண்டுமொரு முறை அனுபவித்து, தங்களுக்குள் சிரிக்காதார் யாரேனும் இந்த வையகத்துள் உண்டோ ?

கணவாய்க் கறி
யாழ்ப்பாண சமையலின் மகுடம் 

Friday, 5 August 2016

கொமர்ஸ்காரரும் கொமர்ஸ்காரிகளும்


கொமர்ஸ்காரர் ஒரு தனி ரகம், அவர்களும் ஒரு வகை மன்னர்கள் தான், சப்பலில் அல்ல, A/L வாழ்க்கையை அனுபவித்ததில் அவர்கள் தான் உண்மையான A/L மன்னர்கள். படிப்போடு நல்லா பம்பலடிக்கவும்,  ஸ்டைலா பெட்டையளை சுழற்றவும் தெரிந்த, சூப்பர்காய்கள். 

O/L முடித்து கொமர்ஸ் படிக்க வாற குறூப்புகள் பலவகை. 

முதலாவது குறூப் கொமர்ஸில் கண்டதும் கொண்ட காதலால்  படிக்கவாற கோஷ்டி. O/L ல் அநேகமா ஒகஸ்ரின் மாஸ்டர் மாதிரி ஆக்களிட்ட படிச்சு, கணக்கியலில் வசியப்பட்டு வாற சனம்.  இவர்கள் கண்ணும் கருத்துமாய் படிப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் tuitionலும் ஒரு சொல்லு விடாமல் notes எடுப்பார்கள், part 1 க்கு வேற part 2 க்கு வேற, schoolற்கு வேற tuitionற்கு வேற என்று கன கொப்பிகள் வைத்திருப்பார்கள். 


Management enter பண்ணோணும், அதுவும் meritல் J'puraவில் B.Sc in Accounting கிடைக்கோணும் என்ற இலட்சியத்தில் "எதையும் plan பண்ணி செய்யும்" ரகம். அநேகமாக இவர்கள் கள்ளமாக ஒரு வருடத்திற்கு முதலே syllabus cover பண்ணி, சோதனைக்கு ரெடியாகி private candidate ஆக சோதனையும் எடுத்து trial பார்த்திருப்பினம், வெளில சொல்லமாட்டினம்.


இரண்டாவது குறூப், ஒரு மாதத்திலிருந்து ஒரு வருஷம் வரை Maths அல்லது Bio படிச்சிட்டு, வெறுத்து போய், நொந்நு நூடில்ஸாகி கொமர்ஸ் படிக்க வாற கோஷ்டி. இவர்களிற்கு O/Lல் 4ற்கு மேற்பட்ட Dகள் கிடைச்சிருக்கும், prestige பார்த்து அல்லது அம்மா engineer ஆகோணும் என்று ஆசைப்பட, தேற்றம் நிறுவப்போய் குxxயில் சூடு வாங்கின குறூப். 


இவையல் கொமர்ஸில் crash course செய்யிற ஆக்கள். Past papers ஐ ஆராய்ந்து trend கண்டு பிடித்து predict பண்ணி examல் புகுந்து விளையாடும் கோஷ்டி. இவயலிட்ட மிஞ்சி மிஞ்சி போனா நாலு கொப்பி தான் இருக்கும். மிச்சம் ? அதுக்கு தான் உற்ற நண்பர்கள் இருப்பினம். இவர்களின் உற்ற நண்பர்கள் முதல் குறூப்பில் (கொமர்ஸை காதலிப்பவர்கள்) இருப்பினம். இவர்கள் ஆளவந்தான் மாதிரி, வாத்திமாரிடம் பாதி நண்பர்களிடம் பாதி என்று படித்து கொழும்பு universityயில் B.Com செய்ய துடிக்கும் குறூப்...அங்க தானே பெரிய மரங்களும் வடிவான வெள்ளை பெட்டையளும் இருப்பினம். 


இன்னொரு கோஷ்டி Maths, Bio படிக்க O/Lல் results காணாதவர்கள். படிப்பில் பயங்கர ஆர்வமுள்ள இவர்கள் வேறு வழியில்லாமல் கொமர்ஸ் படிக்க வருவார்கள். கஷ்டப்பட்டு படிப்பார்கள், வெற்றியும் பெறுவார்கள். அந்நியனில் வாற அம்பி குறூப்...பால்குடி.


பிறிதொரு குறூப் பள்ளிக்கூடம் வருவதிற்காக கொமர்ஸை சாக்காக வைத்து பள்ளிக்கூடம் வரும் கூட்டம். இவர்களிடம் மிஞ்சி மிஞ்சி போனால் 3 கொப்பி தான் இருக்கும். Schoolல் notes எடுக்க இவர்களிற்கு நேரம் இருக்காது, ஏனென்றால் இவர்கள் அநேகமாக cricket, soccer, Hockey அணிகளில் இடம்பிடித்திருப்பினம். அடிக்கடி practice அல்லது match என்று பறந்து திரிவினம். வேறு சிலர் தமிழ் சங்கம், மாணவர் ஒன்றியம், இந்து மன்றம் என்று ஏதாவது ஒரு அமைப்பிலாவது தலைமைப் பொறுப்பில் இருப்பினம், இல்லாட்டி ஏதாவது ஒரு பின்புலத்தில் Prefect ஆகியிருப்பினம். இவர்கள் எப்பவும் சங்க வேலைகளுக்காகவோ அல்லது பாடசாலை அலுவலாகவோ ஓடித்திரிந்து கொண்டிருப்பார்கள், கடும் உழைப்பாளிகள். 


இன்னும்  சிலர் tutionற்கு வருவார்கள், ஆனா வரமாட்டாங்கள் ரகம். அதாவது "எல்லோரும்" வரும் போது வருவார்கள், போவார்கள், ஆனா வகுப்புக்குள் வரமாட்டாங்கள், மானஸ்தன்கள். இவர்கள் cover பண்ணும் "syllabus" வேற பாருங்கோ. 


இன்னொரு குறூப் படிக்கிற மாதிரி நடிக்கிற குறூப். சீரியஸா வாத்திமாரிடம்...வகுப்புக்கு முன், வகுப்பில், வகுப்பிற்கு பின்..கேள்வி கேட்டு துளைத்து எடுப்பான்கள். மண்டைக்காய் ரேஞ்சிக்கு பில்டப் குடுப்பாங்கள், withdrawals examல் சாயம் வெளுக்கும். பிறகு "குதிரை" ஏறி கம்பஸ் வந்து "முதுகு" சொறிந்து பாராளுமன்றம் வரை செல்லக்கூடிய திறமைசாலிகள்.


பொதுவாக Commerce படிக்கிற பெடியளிட்ட commitment எதிர்பார்க்கலாம். Tution cut பண்ணி சந்திரன் மாஸ்டரிட்ட படம் பார்க்க போற ரகம் இல்லை. இவங்கள் படிக்கிறதே Tution வரத்தானே, ஆனபடியால் இவங்கள் school மதில் பாய்ந்து போய், அதுவும் கண்டிப்பாக school நேரத்தில் மட்டும் theatreல் "கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டும் படம்" பார்ப்பார்கள்.


....................................................................

கொமர்ஸ் படிக்க வாற கொழும்பு கொமர்ஸ்காரிகள் பற்றி ஆராய, படிக்கிற காலத்தில் அவகாசம் கிடைக்கவில்லை. ஒரு பக்கத்தால பொலிஸ் பிடிக்க, இன்னொரு பக்கம் ஈபிடிபிகாரன் துரத்த, மற்றப்பக்கத்தால புலிகளின் குண்டுகள் வெடிக்க, கொமர்ஸ்காரிகளை ஆராய அவகாசம் இல்லாமல் போனதில் ஆச்சரியமில்லை.

நிற்க....

உருத்திரா மாவத்தை தமிழ் சங்கத்தின் முதலாவது மாடியில்  நவ்ஃபலின் பொருளாதார வகுப்புகள் நடக்கும். மண்டபம் நிறைந்த மாணவர்களுடன் திருவிழாக்கள் போல் நவ்ஃபலின் வகுப்புகள் களைகட்டும். கடைசி வாங்கில் அமர்ந்திருக்கும் மாணவனுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக, மைக் வசதியில்லாத மண்டபத்தில், தொண்டை கிழிய, கத்தி கத்தி கற்பித்த நவ்ஃபல் உண்மையிலேயே ஒரு உன்னதமான ஆசிரியர்.


சங்கத்தின் மண்டபத்தில் இடப்புறம் முழுக்க கொமர்ஸ்காரிகள் அமர்ந்திருக்க வலப்புறமெங்கும் பெடியள் அமர்ந்திருப்பார்கள். வகுப்பு 
ஆரம்பாகும் நேரம் வரை பெடியளை மண்டபத்திற்குள் வரவிடமாட்டாங்கள். வகுப்பு தொடங்கும் நேரம் வந்ததும் அடித்துபிடித்து வகுப்பிற்குள் நுழையும்
சில பெடியள் சரியான இடம் பிடித்து அமர்ந்து, வகுப்பு நடக்கும் போது அடிக்கடி இடப்பக்கம் தலையை திருப்புவார்கள்.


பியூசியில் குமாரவடிவேலின் கணக்கியல் வகுப்புகளில், பெட்டைகள் முன் வாங்குகளிலிருக்க எங்களுக்கு பின்வாங்குகள் காத்திருக்கும். சங்கத்தில் நடக்கும் பாலேஸ்வரனின் கணக்கியல் வகுப்புகளிற்கு கொமர்ஸ்காரிகளே அதிகமாக போவார்கள். "பாலேஸ்வரன் பெட்டைகளிற்கு மட்டும் தான் ஐசே படிப்பிப்பார், எங்கட கொப்பிகளை பார்க்கவே மாட்டார்" என்று கஜோபன் கோபப்பட்டது ஞாபகமிருக்கிறது.
பாலேஸ்வரன் கொமர்ஸ்காரிகளின் Pied piper.


சனிக்கிழமை காலைகளில் உருத்திரா மாவத்தையில் குமாரவடிவேல் vs பாலேஸ்வரன் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடக்கும். குமாரவடிவேலின் வகுப்பிற்கு பியூசி வாசலில் காத்திருக்கும் பெடியள், பியூசி தாண்டி சங்கத்திற்கு பாலேஸ்வரனிடம் போகும் பெட்டைகளை "வாழ்த்தி" அனுப்புவார்கள். 


பாக்கியின் கணக்கியல் வகுப்புகளிற்கு பெடியள் மட்டும் போய்க் கொண்டிருந்த காலமொன்று இருந்தது. பாக்கியின் வகுப்பில் இணைய விரும்பிய இரு கொமர்ஸ்காரிகளை, பெடியள் ஓமென்றால் தான் எடுப்பன் என்று சொல்லி அனுப்பி வைத்தார் பாக்கி. அடுத்த நாள் பின்னேரம் அந்த இரு கொமர்ஸ்காரிகளும் கிரிஷாந்தனை வழிமறித்து ஏதோ கதைத்தார்களாம் சிரித்தார்களாம். அடுத்த நாள் பாக்கியின் வகுப்பில் முன்வாங்கில் அதே இரு கொமர்ஸ்காரிகள் இணைந்திருந்தார்கள். 


சைவ மங்கையர் கழகம், அதான் ஹிண்டு லேடீஸ் கொலிஜ், கொமர்ஸ்காரிகள் கண்ணில் நெருப்பேற்றிக் கொண்டு திரியிற ரகம். கொழும்பு இந்துவிற்கு ஏதாவது நிகழ்விற்கு வந்தால் "முறையாக" உபசரித்து அனுப்புவோம். விவாதப் போட்டிகளில் அனல் பறக்க மோதும் இரு கல்லூரிகளும் அரையிறுதியில் ரோயல் கல்லூரியிடமோ சென் தோமஸ் கல்லூரியிடமோ தோற்பது தொண்ணூகளின் ஆரம்பத்தில் வழமையாக இருந்தது. 


St. Bridgetsல் படிக்கும் கொமர்ஸ்காரிகளிற்கு நினைப்பு கொஞ்சம் அதிகம், தடிப்பு என்றும் சொல்லலாம். யாரையும் கணக்கெடுக்க மாட்டார்கள், அதிகமாக ஆங்கிலத்தில் பேசி கடுப்பேற்றுவார்கள். பெடியளும்
அவயளை கணக்கெடுப்பதில்லை, இவளவ கன்னியாஸ்திரியாக வரத்தான் லாயக்கு என்று நம்பினோம். 


மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி கொன்வென்ட் பெட்டைகள் கலகலப்பாக வலம் வருவார்கள். அவர்களிற்குள் பம்பலடித்து சிரிப்பார்கள், பெடியளிற்கு நக்கலடிப்பது அப்படியே விளங்கும். அவர்களின் சம்பாஷணையில் ஆங்கிலம் கோலோச்சும். டமிலில் கதைக்கும் பொட்டு வைத்த தமிழிச்சிகள்.  
கொன்வென்ட் கொமர்ஸ்காரிகள், Maths படிக்கும் ரோயல் அல்லது தோமியன் பெடியளோடு கதைத்து எங்களிற்கு வெறுப்பேற்றுவார்கள். 

-------------------------------

நவ்ஃபல் மைக் இல்லாமல் சங்கத்தில் கத்தி கத்தி படிப்பிக்கும் போதும் மைக் வைத்து tower hallல் படிப்பிக்க கத்தும் போதும் அலுங்காமல் கலங்காமல் கவனம் சிதறாமல் "அதோ மேக ஊர்வலம்" போவார்கள் கொமர்ஸ்காரர், வாழ்க்கையை அனுபவித்து வாழ தெரிந்த பேர்வழிகள்.

உயர்தரத்தில் கொமர்ஸ் படித்த காலம், இல்லை இல்லை அனுபவித்த காலம் இனிமையானது. காலங்கள் கடந்தும் மறக்க முடியாதது.

கொமர்ஸ்காரன்டா !