Friday, 29 July 2016

ஜூலை மாதம்...


"ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு" என்ற பாடல் 90களில் வெளிவந்த புதியமுகம் என்ற படத்தில் வரும். AR ரஹ்மானின் ஆரம்பகாலங்களில் வந்த இந்த பாடலை "கபாலி தோல்வி" புகழ் வைரமுத்துவே எழுதியிருந்தார். "அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு" போன்ற புரட்சிகர வரிகளை தாங்கிய இந்த பாடலை SPB பாடியிருந்தார்.


இலங்கைத் தமிழர்களிற்கு ஜூலை மாதம் வந்தால், நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்கிவிடும். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல சம்பவங்கள் ஜூலை மாதத்திலேயே இடம்பிடித்தன. விடுதலைப் புலிகள் இயங்கிய காலத்தில், நவம்பர் மாதத்திற்கு அடுத்தபடியாக இலங்கை இராணுவம் உச்சபட்ச உஷார் நிலையிலிருந்த மாதம் ஜூலை மாதம் தான். அவயள் எவ்வளவு உஷாரா இருந்தும்.. வேண்டாம் விடுவம்.

கறுப்பு ஜூலை என வர்ணிக்ப்பபடும் தமிழர்களிற்கெதிரான இனக்கலவரம் இடம்பெற்ற 1983ம் ஆண்டு ஜூலை மாதத்தை, இலங்கைத் தமிழர்கள் மறந்தும் மறக்கமாட்டார்கள். 23 ஜூலை 1983ல் தின்னவேலியில் வெடித்த கண்ணிவெடி சத்தம், யாழ்ப்பாணத்தை இன்னும் உலுக்கிக் கொண்டேயிருக்கிறது. ஜூலை 25, 1983ல் கொழும்பு டமில்ஸை சிங்கள காடையர்கள் கொல்லாமலும் அடிக்காமலும் விட்டிருந்தால்.. வேண்டாம் விடுவம். ஜூலை 5, 1987ல் கப்டன் மில்லர் முதலாவது தற்கொடை போராளியாக விடுதலை வேள்வியில் ஆகுதியாக, ஜூலை 5, கரும்புலிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.


“நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்” என்று கூறிவிட்டு வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச் சென்றான் மில்லர் என்று, தனது உண்ணாவிரத மேடையிலிருந்து ஆற்றிய உரையில் திலீபன் குறிப்பிடுவார். ஜூலை 29, 1987ல் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு கொழும்பு வந்த ரஜீவ் காந்தி, குள்ளநரி ஜேஆரோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அடுத்த நாள் ஜூலை 30, 1987 சிங்கள கடற்படை சிப்பாய், ரஜீவை இராணுவ அணிவகுப்பில் வைத்து தாக்க, வெக்கையால் மயங்கி விழுந்தவனின் துப்பாக்கி ரஜீவில் லேசாக பட்டு விட்டது என்று சிங்களம் புளுடா விட்டது. அன்றைக்கு மட்டும் சிங்கள சிப்பாய் அடித்த அடியில் ரஜீவ் மண்டையை போட்டிருந்தால்... வேண்டாம் விடுவம்.


13வது அரசியல் திருத்த சட்டத்திற்கு வழிகோலிய இந்த ஒப்பந்தம், தற்காலிக வடகிழக்கு இணைப்பிற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கலிற்கும் வழிகோலியது. "அன்றைக்கு இந்தியன் தந்ததை எடுத்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திராது" என்று புலம்பும் பழசுகளை யாழ்ப்பாணத்தில் இன்றும் காணலாம். இதை வாசித்துவிட்டு தம்பி குருபரன் கட்டு கட்டா பொய்ன்ட்ஸ் எடுத்து கொண்டு எனக்கு வெளுக்க போறார். 1987ல் விடுதலைப் புலிகள் மட்டும் இடைக்கால அதிகாரசபையை எடுத்து நடத்தியிருந்தால்.. வேண்டாம் விடுவம். ஜூலை 13, 1989ல் கொழும்பில் வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் படுகொலை செய்யப்படுகிறார்கள். வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடனம் செய்து, இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளிய தலைவர்கள், அதே ஆயுதங்களால் மெளனிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தேறியதும் ஜூலை மாதம் தான். தந்தை செல்வாவின் மறைவிற்கு பின் அமிர் & கோ மட்டும் பொறுப்புணர்வோடு தமிழ் மக்களை  வழிநடத்தியிருந்தால்.. வேண்டாம் விடுவம்.


மூன்று தினங்கள் கழித்து, ஜூலை 16, 1989ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஸ்தாபக தலைவரும், பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்று PLOTE அமைப்பை நிறுவியவருமான உமாமகேஸ்வரனின் குண்டுகள் துளைக்கப்பட்ட சடலம் பம்பலப்பிட்டி கடற்கரையில் கண்டெடுக்கப்படுகிது. உமாமகேஸ்வரன் ஊர்மிளாவை காதலிப்பது தவறு என்ற தூய்மைவாத சிந்தனையால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அன்று அந்த பிளவு மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால்... வேண்டாம் விடுவம்.


யாழ்ப்பாணத்தை ஆமி கைப்பற்றியதுடன் சோர்வு நிலையை அடைந்த போராட்டத்திற்கு புத்தெழுச்சி தந்த "ஓயாத அலைகள் நடவடிக்கை" ஜூலை 18, 1996ல் முல்லைத்தீவை மீட்டது. ஜூலை 23, 2001ல் கட்டுநாயக்கா விமானத்தளம் மீது புலிகள் நடாத்திய அதிரடித் தாக்குதல், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மத்தியஸ்துடனான பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தது. ரணில் - புலிகள் பேச்சுவார்த்தையை மட்டும் அன்று சந்திரிக்கா குழப்பாமல் விட்டிருந்தால்.. வேண்டாம் விடுவம்.

22 ஜூலை 2016 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கபாலி திரைப்படம், கொள்ளை விலையில் டிக்கட் விற்கப்பட்டும், ஃபேஸ் புக்கையும் வட்ஸப்பையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. மலேசிய தமிழர்களை மீட்கவந்த மீட்பராக ரஜினிகாந்த், கபாலியில் கலக்குவார். கபாலியின் கதைக்களம் மட்டும் இலங்கைத் தமிழரை மையமாக கொண்டிருந்தால்.. வேண்டாம் விடுவம்

ஜூலை மாதம் வந்தால்..
வேண்டாம் விடுவம்..


No comments:

Post a Comment