Friday, 22 July 2016

கபாலி..அனுபவப்பகிர்வு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் அன்றிலிருந்து இன்றைவரை hypeம் பில்டப்பும் அதிகமாகவே இருக்கும். படம் பூஜை போடமுதலே யாருடைய டிரக்ஷனில் ரஜினி அடுத்த படம் நடிக்க போகிறார் என்பதில் ஆரம்பமாகி எந்தெந்த டிரக்கடர்ஸிடம் கதைகேட்டார் என்று பில்டப் எகிறி, hype படலம் இறக்கை கட்டிப் பறக்கும். 


படம் எடுக்க தொடங்க, ஷூட்டிங் ஸ்பொட் படங்கள் லீக்காகி, பாடல்கள் வெளிவந்து, டீஸர் யூடியூப்பில் ஏற, hype உச்சக்கட்டத்தை நெருங்கும். படம் ரிலீஸாகும் திகதி அறிவிக்கப்பட, பில்டப் ச்சும்மா அதிரும். இந்த ஓவர் hype படத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாவதத்திற்கு அப்பால், இந்த hypeஐயும் பில்டப்பும் அனுபவித்து அடையும் ஆனந்தம் உண்மையிலேயே அளவில்லாதது தான். 


ஜூலை 22, 2016 காலையில் அடித்த அலார்ம் "கபாலிடா.. எழும்புடா" என்று தான் அடித்தது. நேற்றிரவு முழுக்க கபாலி பற்றிய பேட்டிகள், தலைவரின் பழைய படங்களின் முக்கிய காட்சிகள், பாடல்கள் என்று பார்த்து கபாலி படம் பார்க்க warm up எடுத்திருந்தேன். காலம்பற தேத்தண்ணி குடித்துக்கொண்டு WhatsAppஜ திறக்க வாழ்க்கை வெறுத்திச்சு.


கபாலியை அமெரிக்காவில் காட்டுறாங்கள், லண்டனில் காட்டுறாங்கள், கோலாலம்பூரில் காட்டுறாங்கள், இழவு டொரோன்டோவில் கூட காட்டுறாங்கள், மெல்பேர்ணில் திரை விலக இன்னும் 11 மணித்தியாலம் இருக்கு என்று நினைக்க, கடுப்பு விசராக்கியது. 


காரில் "நெருப்புடா" பாட்டு கேட்டுக் கொண்டு வேலைக்கு போனா, மண்டை வேலை செய்ய மறுத்தது. Earphoneஜ காதில் செருகி, சூடாக கோப்பி குடித்துக்கொண்டே "மாய நதியின்று" கேட்க, கபாலி பார்த்துவிட்டு கனடாவிலிருந்து நகு கோல் பண்ணுறான், என்னை வெறுப்பேற்ற. "Can't talk right now" என்று message அனுப்பினாலும் விடாமல் திரும்ப கோல் பண்ணி "படம் ஓகே, போய் பார், don't go with high expectations" என்று அறிவுரை சொல்லிவிட்டுத் தான் வைத்தான். லண்டனிலிருந்து செந்தில், ரஜினியின் entry scene அடங்கிய கள்ளமாக சுட்ட ஒரு நிமிட காட்சியை FBல் போட்டு வெறுப்பேற்றினான். 


பின்னேரம் 5.30க்கு வீட்டை விட்டு வெளிக்கிடோணும், என்னை டென்ஷனாக்காமல் ரெடியா இருங்கோடா மக்காள்ஸ் என்று மனிசிக்கும் பெடியளுக்கும் ஓரு கிழமையாக தொடர்ச்சியாக அன்புக்கட்டளை இட்டுக்கொண்டேயிருந்தேன். சரியா 5.12க்கு கபாலி பாட்டுகள் கேட்டுக் கொண்டே வேலையால வீட்ட வந்து சேர, மேசையிலிருந்த டம்ளரில் தேத்தண்ணி சிரிக்குது. 


ஒரு bathroomல் மூத்தவன் iPad பார்த்துக் கொண்டே கக்காக்கு போக, மற்றதில் இளையவன் iPhoneல் footy பாரத்துக் கொண்டே ஷவர் எடுத்துக்கொண்டிருந்தான். "டேய் பொடியள், இன்றைக்கு வேண்டாமடா, கபாலிடா, ரஜினிடா, வெளிக்கிடுங்குடா" என்று மென்வலு பிரயோகித்து அவங்களை காரில் ஏற்ற 5.36.


5.40க்கு மனிசியும் வந்து ஏற, Knox நோக்கி கார் பறந்தது. "அப்பா, I have never seen you driving so fast" சந்தோஷ் பின் சீட்டிலிருந்து விமர்சித்தான். "Thanks to Rajinikanth" மனிசி வசனத்தை முடித்து வைத்தா. சண்டைக்கு இது நேரமில்லை, கதம் கதம் சொல்லி, அவயளை தியேட்டர் வாசலில் இறக்கி விட்டு, மினக்கிடாமல் போய் pop cornம் cokeம் கெதியா வாங்குங்கோ செல்லங்கள் , இப்ப வாறன் என்று சொல்லிவிட்டு carஜ park பண்ண பறந்தேன்.


5.56..ஓட்டமும் நடையுமாய் தியேட்டருக்குள் நுழைய மேல்மூச்சு வாங்கிச்சு, மனிசியும் பெடியளும் popcorn queவில் இன்னும் நிற்கினம், என்னில் டென்ஷன் எட்டிபார்க்குது. "அம்மா said she wants a coffee" சந்தோஷ் சொல்ல,  டென்ஷனை அடக்க மாடிப்படிகளில் ஓடிப்போய் "Latte with one sugar" சொல்லி, டிக்கெட் கவுண்டரில் ராஜன் அண்ணேக்கு வணக்கம் சொல்லி, தியேட்டர் கண்டுபிடித்து, ஸீட் தேடி, ஸீட்டில் போய் இருக்க 5.59, "we made it boys", நிம்மதி பெருமூச்சு விட்டேன்.


தியேட்டர் நிரம்பி விட்டது, 6.06 ஆகியும் படம் தொடங்கவில்லை. "Why are they late" பிரவீன் கேட்க "they lost the DVD" சந்தோஷ் நக்கலடிக்க, இருவரையும் முறைத்துப் பார்த்தேன், அவங்கள் ஹா ஹா என்று சிரித்தார்கள். 


6.12க்கு திரைவிலக திருவிழா ஆரம்பமாகியது. Super Star ரஜினி என்ற அந்த name card திரையில் வர பரவசம் பற்றிக்கொள்ள விசில் சத்தமும் கூ சத்தமும் மெய்சிலிர்க்க வைத்தது. எழுத்தோட்டத்தில் கதை தொடங்க, மலாய் மொழியில் கதைத்த நீண்ட அந்த ஆரம்பக்காட்சி பரவசத்தை பஞ்சராக்கியது. 


சிறைச்சாலையை காட்டி, புத்தகம் வாசிக்கும் தலைவரை சாதுவாக காட்டி, சிறை கதவில் தொங்கிய ரஜினியை பின்பக்கம் காட்டி, நடந்து போகும் சூப்பர் ஸ்டாரை லோங் ஷொட்டில் காட்டி, கோர்ட் போட்டு, ஷூ அணிந்து என்று மெல்ல மெல்ல பில்டப் ஏற்றி, sliding door விலகி தலைவரை முழுசாக காட்ட... Hype ஓடு பில்டப்பும் இணைந்து பரவத்தை உச்சத்தில் கொண்டு போய் நிற்பாட்ட, தொண்டை கிழிய கத்தினேன்.. தலைவா !


அறுபது வயது கதாபாத்திரமாக திரையில் வலம் வரும் ரஜினியின் ஸ்டைலும் கெத்தும் கொஞ்சமும் குறையவில்லை. காந்த கண்களில் மிளிரும் கம்பீரமும், அந்த ஹ ஹ ஹா சிரிப்பும், தலையை லேசாக ஆட்டிக்கொண்டே சொல்லும் மகிழ்ச்சியும், டென்ஷனான காட்சிகளில் அலட்சியமாக சோபாவில் உட்கார்ந்து காலிற்கு மேல் கால் போடும் மிடுக்கும், ரஜினியை ரசிக்க வைக்கின்றன. வழமையான ரஜினி என்றால் ஒரு வேகம் இருக்கும், சக்கு சக்கு என்று நடந்து போவது, கண்ணாடியை திருப்பி மாட்டுவது, கதைப்பது என்று வேகம் ரஜினியோடு கூடப்பிறந்தது. கபாலியில்  வேகத்தடை போடப்பட்ட ரஜினி, வித்தியாசமாய் தெரிந்தார்.  


பின்னனி இசையின் பலத்திலும், பரபரப்பான திரைக்கதையாலும் திரைப்படம் அலுப்படிக்காமல் நகருகிறது. இயக்குனர் ரஞ்சித்தின் சமூக கருத்துகளை ரஜினியினூடாக வெளிப்படும் திரைப்படமாக கபாலி அவதாரம் எடுத்திருக்கிறது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் தனது நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். வழமையான அவரது ஸ்டைல்களை எந்த குறைகளுமின்றி வழங்கியிருந்தாலும், படத்தில் நகைச்சுவை இல்லாதது ஒரு பெருங்குறையாக வெளிப்படுகிறது. 


இரண்டு காட்சிகளில் ரஜினி அழ, நம்மையும் கலங்க வைக்கிறார். ரஜினியை சுற்றி நடிக்கும் நடிகர் நடிகையர்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். பாடல் காட்சிகளை எடுத்த விதமும் சண்டைக் காட்சிகளில் மிளிரும் ரஜினியின் நடிப்பும், ரஜினிகாந்த் பேசும் "மகிழ்ச்சி" உட்பட்ட அழகான தமிழ் வசனங்களும் படத்திற்கு மேலும் மெருகேற்றுகின்றன.


ஷங்கர், ரஹ்மான், வைரமுத்து, சுஜாதா, மணிரத்னம், ரவிக்குமார் போன்ற ஜாம்பான்களை விட்டு வெளியே வந்து, நயன்தாராவோடும் அனுஷ்காவோடும் கட்டிப்பிடித்து டூயட் பாடி ஆடாமல், ரஜினி எனும் இமேஜை கழற்றி வைத்து விட்டு, அடுத்த தலைமுறை திரைப்பட தொழில்நுட்பவியலாளர்களோடு இணைந்து, நடித்த ரஜினிகாந்த் எனும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் பாராட்டப்படவேண்டியவரே. 


கபாலி
ரஜினிகாந்த் நடித்த படம், 
நடித்த என்ற சொல்லை அழுத்தி வாசிக்கவும். 

கபாலி...மகிழ்ச்சி ! 

No comments:

Post a Comment