Friday, 15 July 2016

கந்தசாமியும் கலக்சியும்2014ம் ஆண்டு, சென் ஜோன்ஸில் படித்தவனென்றால் முள்ளுக்கரண்டியால் chicken சாப்பிட்டுக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி Johnians always play the game என்று பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டம் என்ற மாயையை தகர்த்து.. யாழ் பரியோவானில் எமக்கு செந்தமிழும் தமிழ் பற்றும் தமிழ் தேசிய சிந்தனையும் ஊட்டியே வளர்க்கப்பட்டோம் என்பதற்கு சான்றாக ஜேகேயின் "கொல்லைப்புறத்து காதலிகள்" புத்தகம் மலர்ந்தது.


1990களின் யாழ்ப்பாண வாழ்க்கையை, கடுமையான யுத்தத்திற்குள்ளும் கொடுமையான பொருளாதார தடைக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை உணர்வு மாறாமல், சுவாரசியமாக பதிந்த நனவிடை தோய்தல் பதிவாக "கொல்லைப்புறத்து காதலிகள்" வெளிவந்தது.


இரு ஆண்டுகள் கழித்து, ஜேகேயின் இரண்டாவது புத்தகம் பிறிதொரு தளத்தில், ஈழத்து எழுத்தாளர்கள் இதுவரை காணாத புதிய களத்தில், "கந்தசாமியும் கலக்சியும்" என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கலக்சியும் என்ற சொல்லில் "சி" பாவித்தது சரியா இல்லை "ஸி" பாவித்திருக்க வேண்டுமா என்ற பஞ்சாயத்தை இப்போதைக்கு தள்ளி வைப்போம். 


"கந்தசாமியும் கலக்சியும்" ஜேகேயின் படலையில் தொடராக வந்த போது வாசிக்கவில்லை, அதனால் நூலுருவில் நாவலாக வாசிக்கும் போது ஏற்பட்ட வாசிப்பனுபவம் நிறைவானது என்று நம்புகிறேன். அறிவியல் கதைகளினூடு சமூக நையாண்டிகளை புதுமையாக கொடுத்த Douglas Adamக்கு அகவணக்கம் சொல்லி நாவலை ஜேகே அரப்பணிக்கிறார். கந்தசாமி நாவல் Adamsன் நாவல்களின் தாக்கத்தால் வந்த வினை என்று  தம்பி ஜேகே முன்னுரையிலேயே வெள்ளைக் கொடி காட்டி சரணடைந்து விடுகிறார். Douglas Admas யாரென்று தெரியாத நாங்கள், Douglas (தேவானந்தா அல்ல) ஜெயகுமரன் போட்ட வீதியில் பயணிக்க தொடங்குகிறோம்.


நாவலின் முதலாவது அத்தியாயம் 'பூமி அழிதல் படலம்'. இந்த அத்தியாத்தில், சுவாரசியமாக நக்கல் கலந்து நனவிடை தோய்தல் பதிவுகள் எழுதி நமக்கு அறிமுகமான ஜேகே, "பயப்பிடாம வாங்கோண்ணே" என்று கூட்டிக்கொண்டு நாவலுக்குள் எங்களை அழைத்து செல்கிறார். காலை ஐந்து மணிக்கு கந்தர்மடத்தில் நாவல் ஆரம்பிக்க, யாழ்ப்பாணத்தின் காலைப் பொழுதை தனக்கேயுரிய பாணியில் படிமங்களாக படைக்கிறார் ஜேகே. 


கதாபாத்திரங்களை சம்பவங்களோடு அறிமுகப்படுத்தும் போதே நமக்குள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பெரிசா ஏதோ ஒன்று நடக்கப்போகுது என்ற பரபரப்பு எழுத்துக்களிலிருந்து வாசிப்பவரிற்கு தொற்றிக்கொள்கிறது. கந்தர்மடம், தின்னவேலி, நல்லூர், நாசா என்று கதைக்களம் ரஜினிகாந்த் பேசும் வசனங்களை போல் அவசரமாக நகர்ந்து, தண்ணி குடிக்க எழும்ப முதல் பூமி அழிந்து விடுகிறது.


"கொட்டியா கொட்டியா என்று எல்லாப்பக்கமும் சுட ஆரம்பித்து விட்டருந்தனர்"

போட்ட தேத்தண்ணியை ஒரு வாய் உறிஞ்சாமல், கொடியிலிருந்த துவாயோடு கந்தசாமி, மிகிந்தர்களின் கலத்தில் ஏற, கதை வேறு தளத்திற்கு தாவுகிறது. 'தப்பியோடும் படலம்' எனும் இரண்டாவது அத்தியாத்திலிருந்து அறிவியல் எழுத்தாளன் ஜேகே எனும் புதிய கபாலி நம்முன் அவதாரம் எடுக்கிறார்.


"அதாவது கடவுள் இருக்கிறார் என்று தீர்க்கமாக நிரூபித்து விட்டால் கடவுள் நம்பிக்கை அற்றுப் போய்விடும் அல்லவா"


பள்ளிக்கூடத்தில் படித்த விஞ்ஞான பதங்கள் புத்தகத்தில் மீண்டும் வந்து மிரட்ட, ஈர்ப்பு சக்தியும் பிரபஞ்சமும் பூமியாண்டும் கனவிலும் கலைத்துக் கொண்டு வந்தது. சயன்ஸ் படிப்பித்த சரா மாஸ்டர், பிரபாகரன் மாஸ்டர், செல்வவடிவேல் எல்லோரையும் நினைத்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தான் மூன்றாம் அத்தியாயமான "விடைகாண் படலத்திற்குள்" நுழைந்தேன். 

"ஐயோ என்ர கடவுளே"

விஞ்ஞான படலம் முடிந்து கடைசியாக "கேள்வி தேடும் படலத்திற்குள்" சோக்ரடீஸ் ஜேகே நிற்கிறார். சோக்ரடீஸ் தனது மாணவர்களுடன் உரையாடிய உரையாடல்கள் பற்றி அறிந்திருக்கிறேன். யாழ்ப்பாணத் தமிழில் அத்தகைய தத்துவ உரையாடல்களை இந்த அத்தியாயத்தில் வாசித்தனுபவம் உண்மையிலேயே புதுமையானது. 


இருநூறு பக்கங்களுக்குள் எங்களை கந்தர்மடத்திலிருந்து கூட்டிக்கொண்டு, போய் பிரபஞ்சத்தை சுற்றிவந்து பால்வெளியில் பயணம் செய்து எலிகளோடு உரையாடி, கடைசியில் நயினாதீவு நாகம்மாள் கோயிலில் முருகனிற்கும் குவேனிக்கும் நடக்கும் கலியாணத்தை தரிசித்து, அவர்களின் முதலிரவு குடிசைக்குள்ளும் எங்களை எட்டிப்பார்க்க வைக்க ஜேகேயால் மட்டுமே முடியும். 

ஜேகேயின் மண்டை எப்போதும் எதையோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கும், அவரது எழுத்துக்களிலும் அந்த தேடல் பிரதிபலிக்கும். அவரது பதிவுகளையும் நாவல்களையும் வாசிக்கும் எம்மையும் அந்த தேடல், உந்தும். கந்தசாமியின் கலக்சியும் வாசித்தனுபவமும் அப்படித்தான். பக்கம் பக்கமாய் தேடல், தேடல் தேடல் தான். முதலில் பதிலிற்கான தேடல், பின்னர் கேள்விக்கான தேடல். தேடல் முடிந்ததா என்றால், அது தான் இல்லை. இன்னுமொரு தேடலிற்கு களம் திறந்துவிட்டு இந்த தேடல் விடைபெறுகிறது, அவ்வளவு தான். 

கந்தசாமியும் கலக்சியும்
தேடல் விரும்பும் வாசகனிற்கு

வாங்கிப்படியுங்கோ, இரவலாக அல்ல.
இணையத்தில் வாங்க 

http://www.padalay.com/2016/07/blog-post_6.html?m=1

No comments:

Post a Comment