Friday, 8 July 2016

செவ்வாய்கிழமை மனிதர்கள்"கிட்டடியில் நானொரு கதை கேள்விப் பட்டேன்" மொரி சொன்னார். மொரி கண்ணை ஒரு கணம் மூட, நான் காத்திருந்தேன்.

"ஓகே, அந்தக் கதை ஒரு குட்டி அலையைப் பற்றியது. சமுத்திரத்தில் துள்ளி குதித்து மகிழ்கிறது அந்த குட்டி அலை. வீசும் தென்றலில் தவழ்ந்து, அடிக்கும் காற்றில் மிதந்து, குதூகலிக்கும் குட்டி அலையின் மகிழ்ச்சி, தனக்கு முன்னாள் செல்லும் அலைகள் கரையில் மோதுவதைக் கண்டதும் முடிவிற்கு வருகிறது." 

"கர்த்தரே, என்ன கொடுமை,' குட்டி அலை கதறியது. 'எனக்கும் அதே கதிதான் நடக்கப் போகிறது !'

"அப்பொழுது இன்னொரு அலை குட்டி அலையின் பின்னால் வந்தது. குட்டி அலையின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தைக் கண்ட புதிய அலை, குட்டி அலையை கேட்டது 'ஏன்டா மச்சான், உனக்கு என்ன பிரச்சினை?'

"குட்டி அலை சொல்லியது 'உனக்கு பிரச்சினை விளங்கேலேடாப்பா! நாங்களெல்லாம் கரையில் மோதி நாசமாகப் போகிறோம்! நாங்கள் இல்லாமல் போகப் போகிறோம்! என்ன கொடுமை மச்சான்'

"புதிய அலை சொல்லியது, 'மச்சான், உனக்குத் தான்டா விளங்கேல்ல, நீ ஓரு அலை அல்ல, நீ சமுத்திரத்தின் ஒரு பகுதி' "

நான் சிரித்தேன். மொரி மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறார்.

"சமுத்திரத்தின் ஒரு பகுதி" மொரி முணுமுணுக்கிறார், "சமுத்திரத்தின் ஒரு பகுதி." அவர் மூச்சு விடுவதை நான் அவதானிக்கிறேன், உள்ளே வெளியே, உள்ளே வெளியே.

------------------------------------------------

சில வாரங்களுக்கு முன்னர் மெல்பேர்ணில் இடம்பெற்ற செங்கை ஆழியானின் நிகழ்வு அரங்கில் தம்பி ஜேகே செங்கை ஆழியானின் நினைவுரை வழங்கினார். ஜேகே, கோர்வையாக பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது, "எனக்கு கோர்வையாக பேச வராது" என்று சபையோரை எச்சரிப்பார், அதை அவையடக்கமாக சபை கருதும்.


ஜேகேயின் பேச்சு கோர்வையாக இருக்காது, ஆனால் ஒரு சம்பாஷணையாக இருக்கும். ஜேகே பேசிக் கொண்டிருக்கும் போது நாங்களும் அவருடன் மெளனமாக உரையாடுவோம், அவரின் பேச்சு கோர்வையா இல்லையா என்பதை விட, அது எங்களை கோர்த்து இழுத்து உள்வாங்கி எங்களையும் அவரைப் போல் தேடலிற்குள் தள்ளிவிடும் வன்மை வாய்ந்தது.


செங்கை ஆழியான் இருக்கும் போது அவருக்கு கெளரவம் செய்யாமல் அவர் இறந்த பின்பு என்ன மண்ணாங்கட்டிக்கு நினைவு நிகழ்ச்சி என்று கோபாக்கினை கக்க முன்பு, அவர் warm up பண்ண அறிமுகப்படுத்திய புத்தகம் "Tuesdays with Morrie",  Mitch Albom எழுதியது.

-----------------------------------------------------------

ஓகே, நான் ஒரு கேள்வி கேட்கலாமா, மொரியை கேட்கிறேன். மொரியின் எலும்பும் தோலுமான விரல்கள் அவரின் கண்ணாடியை அவரின் நெஞ்சருகில் பிடித்திருக்கின்றன, மொரி கஷ்டப்பட்டு மூச்செடுக்கும் போது விரல்களும் மேலெழுந்து கீழிறங்குகின்றன. 

"என்ன கேள்வி"  அவர் கேட்கிறார்.

யோபுவின் அதிகாரம் ஞாபகமிருக்கிறதா ?

"பைபிளில்?"

ஓம். யோபு ஒரு நல்ல மனிதன், ஆனால் அவனின் விசுவாசத்தை சோதிக்க, கடவுள் அவனை துன்பத்தில் தள்ளுகிறார். 

"எனக்கு ஞாபகமிருக்கிறது."

அவனிடமிருந்து அனைத்தையும் பறிக்கிறார், அவனது வீடு, அவனது பணம், அவனது குடும்பம்...

"அவனது ஆரோக்கியம்."

அவனை நோயாளியாக்குகிறார்.

"அவனது விசுவாசத்தை சோதிக்க."

ஓம், அவனது விசுவாசத்தை சோதிக்க. எனது கேள்வி என்னவென்றால்....

"உன்னுடைய கேள்வி.."

அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மொரி பயங்கரமாக இருமுகிறார். 
கைகள் உதறலெடுத்து ஓய்கின்றன.

"நான் நினைக்கிறேன்" அவர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்

 "கடவுள் கொஞ்சம் ஓவரா செய்துவிட்டார்"

----------------------------------------------------------------

மொரியை தாக்கிய ALS எனும் அதே கொடிய நோய் 1930களில் New Yorks Yankees baseball அணியின் மிகப்பிரபலமான ஆட்டக்காரனான Lou Gehrigஜ தாக்குகிறது. இந்த நோயிலிருந்து மீட்சி இல்லை, மரணம் இனி நெருங்கும் என்ற நிலையில், Louஜ நினைத்து அமெரிக்க மக்கள் பரிதாபப்படுகிறார்கள், கண்ணீர் வடிக்கிறார்கள்.

July 4, 1939ம் ஆண்டு தனது New Yorks Yankees அணிக்காக தனது இறுதி ஆட்டத்தை ஆடி முடித்துவிட்டு Lou உரையாற்றுகிறான். 

"ரசிகர்ளே, கடந்த இரு கிழமைகளாக எனக்கு ஏற்பட்ட கொடிய நிகழ்வு பற்றி நீங்கள் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இன்று, நான் இந்த உலகில் வாழும் மிகவும் அதிர்ஷ்டமான மனிதனாக என்னை கருதுகிறேன்

Yet today I consider myself the luckiest man on the face of the earth

----------------------------------------------------------

தசை நார்கள் படிப்படியாக வலுவிழந்து ALS அல்லது Lou Gehrig's disease எனப்படும் கொடிய நோயின் தாக்கத்தால் மரணப்படுக்கைக்கு தள்ளப்படும் ஒரு சமூகவியல் பேராசிரியர் Morrie Scwartzக்கும், பிரபல விளையாட்டுத்துறை ஊடகவியலாளரான Mitch Albomற்கும் இடையில், பதினான்கு செவ்வாய்க்கிழமைகள் இடம்பெறும் சம்பாஷணைகள் தான் Tuesdays with Morrie. 


Mitch Albom, மொரியின் முன்னாள் மாணவன், மொரியின் சிறந்த மாணவர்களில் ஒருவன். கல்லூரி காலங்களிலேயே இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள். Mitch கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய பின்னர், இருவரும் மீண்டும் சந்திக்கும்போது, மொரி மரணப்படுக்கையில், மிட்ச் ஒரு பிரபல ஊடகவியலாளர்

"We are Tuesdays people"

மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராயும், மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு பேராசிரியரின் கண்ணோட்டம் புத்தகமாக விரிகிறது. மரணம், மன்னிப்பு, பயம், எரிச்சல், அன்பு, சமுதாயம், பணம், திருமணம் என ஒரு மனிதன் வாழ்வில் கடந்து செல்லும் வாழ்வின் முக்கிய நிலைகளின் முக்கியத்துவத்தை, இந்தப் புத்தகம், வாசிப்பவரின் மனதில் எளிமையாக பதிய வைக்கிறது.

192 பக்கங்களேயான சிறிய புத்தகமேயானாலும் அதிலுள்ள கருத்துக்கள் கனமானவை. வாழ்க்கையின் அருமையை உணர்த்தும் கருத்துக்கள் பொதிந்த  அருமையான புத்தகம். Fishpond.comல் $12ற்கு வாங்கலாம்.

Tuesday's with Morrie
வளமாக வாழ்க்கையை 
வாழ விரும்புபவர்களிற்கு !

No comments:

Post a Comment