Friday, 29 July 2016

ஜூலை மாதம்...


"ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு" என்ற பாடல் 90களில் வெளிவந்த புதியமுகம் என்ற படத்தில் வரும். AR ரஹ்மானின் ஆரம்பகாலங்களில் வந்த இந்த பாடலை "கபாலி தோல்வி" புகழ் வைரமுத்துவே எழுதியிருந்தார். "அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு" போன்ற புரட்சிகர வரிகளை தாங்கிய இந்த பாடலை SPB பாடியிருந்தார்.


இலங்கைத் தமிழர்களிற்கு ஜூலை மாதம் வந்தால், நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்கிவிடும். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல சம்பவங்கள் ஜூலை மாதத்திலேயே இடம்பிடித்தன. விடுதலைப் புலிகள் இயங்கிய காலத்தில், நவம்பர் மாதத்திற்கு அடுத்தபடியாக இலங்கை இராணுவம் உச்சபட்ச உஷார் நிலையிலிருந்த மாதம் ஜூலை மாதம் தான். அவயள் எவ்வளவு உஷாரா இருந்தும்.. வேண்டாம் விடுவம்.

கறுப்பு ஜூலை என வர்ணிக்ப்பபடும் தமிழர்களிற்கெதிரான இனக்கலவரம் இடம்பெற்ற 1983ம் ஆண்டு ஜூலை மாதத்தை, இலங்கைத் தமிழர்கள் மறந்தும் மறக்கமாட்டார்கள். 23 ஜூலை 1983ல் தின்னவேலியில் வெடித்த கண்ணிவெடி சத்தம், யாழ்ப்பாணத்தை இன்னும் உலுக்கிக் கொண்டேயிருக்கிறது. ஜூலை 25, 1983ல் கொழும்பு டமில்ஸை சிங்கள காடையர்கள் கொல்லாமலும் அடிக்காமலும் விட்டிருந்தால்.. வேண்டாம் விடுவம். ஜூலை 5, 1987ல் கப்டன் மில்லர் முதலாவது தற்கொடை போராளியாக விடுதலை வேள்வியில் ஆகுதியாக, ஜூலை 5, கரும்புலிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.


“நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்” என்று கூறிவிட்டு வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச் சென்றான் மில்லர் என்று, தனது உண்ணாவிரத மேடையிலிருந்து ஆற்றிய உரையில் திலீபன் குறிப்பிடுவார். ஜூலை 29, 1987ல் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு கொழும்பு வந்த ரஜீவ் காந்தி, குள்ளநரி ஜேஆரோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அடுத்த நாள் ஜூலை 30, 1987 சிங்கள கடற்படை சிப்பாய், ரஜீவை இராணுவ அணிவகுப்பில் வைத்து தாக்க, வெக்கையால் மயங்கி விழுந்தவனின் துப்பாக்கி ரஜீவில் லேசாக பட்டு விட்டது என்று சிங்களம் புளுடா விட்டது. அன்றைக்கு மட்டும் சிங்கள சிப்பாய் அடித்த அடியில் ரஜீவ் மண்டையை போட்டிருந்தால்... வேண்டாம் விடுவம்.


13வது அரசியல் திருத்த சட்டத்திற்கு வழிகோலிய இந்த ஒப்பந்தம், தற்காலிக வடகிழக்கு இணைப்பிற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கலிற்கும் வழிகோலியது. "அன்றைக்கு இந்தியன் தந்ததை எடுத்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திராது" என்று புலம்பும் பழசுகளை யாழ்ப்பாணத்தில் இன்றும் காணலாம். இதை வாசித்துவிட்டு தம்பி குருபரன் கட்டு கட்டா பொய்ன்ட்ஸ் எடுத்து கொண்டு எனக்கு வெளுக்க போறார். 1987ல் விடுதலைப் புலிகள் மட்டும் இடைக்கால அதிகாரசபையை எடுத்து நடத்தியிருந்தால்.. வேண்டாம் விடுவம். ஜூலை 13, 1989ல் கொழும்பில் வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் படுகொலை செய்யப்படுகிறார்கள். வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடனம் செய்து, இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளிய தலைவர்கள், அதே ஆயுதங்களால் மெளனிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தேறியதும் ஜூலை மாதம் தான். தந்தை செல்வாவின் மறைவிற்கு பின் அமிர் & கோ மட்டும் பொறுப்புணர்வோடு தமிழ் மக்களை  வழிநடத்தியிருந்தால்.. வேண்டாம் விடுவம்.


மூன்று தினங்கள் கழித்து, ஜூலை 16, 1989ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஸ்தாபக தலைவரும், பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்று PLOTE அமைப்பை நிறுவியவருமான உமாமகேஸ்வரனின் குண்டுகள் துளைக்கப்பட்ட சடலம் பம்பலப்பிட்டி கடற்கரையில் கண்டெடுக்கப்படுகிது. உமாமகேஸ்வரன் ஊர்மிளாவை காதலிப்பது தவறு என்ற தூய்மைவாத சிந்தனையால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அன்று அந்த பிளவு மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால்... வேண்டாம் விடுவம்.


யாழ்ப்பாணத்தை ஆமி கைப்பற்றியதுடன் சோர்வு நிலையை அடைந்த போராட்டத்திற்கு புத்தெழுச்சி தந்த "ஓயாத அலைகள் நடவடிக்கை" ஜூலை 18, 1996ல் முல்லைத்தீவை மீட்டது. ஜூலை 23, 2001ல் கட்டுநாயக்கா விமானத்தளம் மீது புலிகள் நடாத்திய அதிரடித் தாக்குதல், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மத்தியஸ்துடனான பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தது. ரணில் - புலிகள் பேச்சுவார்த்தையை மட்டும் அன்று சந்திரிக்கா குழப்பாமல் விட்டிருந்தால்.. வேண்டாம் விடுவம்.

22 ஜூலை 2016 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கபாலி திரைப்படம், கொள்ளை விலையில் டிக்கட் விற்கப்பட்டும், ஃபேஸ் புக்கையும் வட்ஸப்பையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. மலேசிய தமிழர்களை மீட்கவந்த மீட்பராக ரஜினிகாந்த், கபாலியில் கலக்குவார். கபாலியின் கதைக்களம் மட்டும் இலங்கைத் தமிழரை மையமாக கொண்டிருந்தால்.. வேண்டாம் விடுவம்

ஜூலை மாதம் வந்தால்..
வேண்டாம் விடுவம்..


Friday, 22 July 2016

ஜயோ என்ர Bat (ஜூலை 83 சிறுகதை)"டேய் திலீபன் எழும்புடா, பள்ளிக்கூடத்திற்கு நேரமாச்சு" அம்மா வழமைபோல் தட்டி எழுப்பினா. கண்ணை கசக்கி, சோம்பல் முறித்து, கட்டிலால் இறங்கி, அறை மூலையில் இருக்கும் எனது cricket batல் வழமைபோல் கண்விழித்தேன். 

போனவருஷம் என்னுடைய பிறந்தநாளிற்கு அப்பா வாங்கித்தந்த bat. Astra margarine பக்கெட்டோட வாற Roy Dias சிரித்துக் கொண்டிருக்கும் sticker ஒட்டி வைத்திருந்தேன். Roy Dias என்னுடைய favourite player, அவரை மாதிரி விளையாடி சிரிலங்கா கிரிக்கட் அணிக்கு விளையாட வேண்டும் என்பது எனது கனவு, நம்பிக்கை, இலட்சியம், வெறி.


நேற்று பின்னேரம் எங்கட இராமகிருஷ்ண லேனுக்குள் நடந்த மேட்சில் அந்த batஆல் அடித்த குட்டி சிக்ஸர் நினைவில் வர, batஜ தூக்கி முத்தமிட்டுவிட்டு, Roy Dias போல மிடுக்காக straight driveஜ ப்ராக்டீஸ் பண்ணினேன், மேசையில் காலை 6.45 செய்தி ஒலிபரப்பிக்கொண்டிருந்த National Panasonic radio அருந்தப்பு தப்பியது.  

"டேய், வான் வரப் போகுது, ஏமாந்து கொண்டிராமல் வெளிக்கிடு" அம்மா கத்தினா. படுக்கை அறையால வெளில வந்து பாத்ரூமுக்கு போகும் வழியில், ஹோலிலிருந்த  மெய்கண்டான் கலண்டரின் தாளை அப்பா கிழித்துக் கொண்டிருந்தார்.

ஜூலை 25, 1983

------------------------------------------------------

நிஸாம் அங்கிளின் ஸ்கூல் வானில் கொழும்பு இந்துக் கல்லூரி வாசலில் வந்திறங்க, சன நடமாட்டம் வழமையை விட வெகு குறைவாக இருந்தது. அன்று தவணை இறுதி சோதனையின் ஆரம்ப நாள் . யாழ்ப்பாணத்தில் ஏதோ பிரச்சினையாம் அது கொழும்பிற்கும் பரவலாம் என்ற பயத்தில் தான் மாணவர் வரவு குறைவாக இருக்கிறது என்று ராஜரட்னம் மாஸ்டர் கலக்கம் நிறைந்த முகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தது கேட்டது.


வகுப்பிற்குப் வந்து அமர்ந்து சிறிது நேரத்தில், பதற்றத்துடன் ஓடிவந்த பத்மா டீச்சர் "வெள்ளவத்தை பக்கம் கலவரமாம், எண்ணெய்க்கடை எல்லாம் எரியுதாம், எல்லோரும் வீட்ட போங்கோடா" என்று உரக்க கத்தினார். 


வழமைபோல் பாடசாலைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நிஸாம் அங்கிள், பதற்றத்துடன் என்னுடைய வகுப்புக்கு ஓடிவந்து என்னுடைய கையை இறுகப்பிடித்துக் கொண்டு, விடுவிடு என்று ஓடிப்போய் வாகனத்தின் பின்கதவை திறந்துவிட்டு விட்டு, என்னை ஏறச்சொன்னார்.


"மவன், இந்த ஸீட்டுக்கு கீல நீங்க இருங்க சரியா.. நான் வந்து சொல்ல மட்டும் ஒலுவ வெளில காட்ட வேணாம்.. சரியா மவன்" நிஸாம் அங்கிள் ஏன் அப்படி சொன்னார் என்று விளங்கும் வயதில்லை, ஆனால் அவரின் கண்களில் தெரிந்த கலக்கமும் குரலில் தொனித்த நடுக்கமும் என்னை பயத்தில் ஆழ்த்த, நான் ஸீட்டுக்கடியில் சரிந்தேன்.


பம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதியிலிருந்து காலி வீதியில் இடப்பக்கம் வாகனம் திரும்ப, யாரோ ஒரு பொம்பிள "ஜயோ என்னை ஒன்டும் செய்யாதீங்கோ" என்று கத்துவதும் அழுவதும் கேட்டது. நிஸாம் அங்கிள் வாகனத்தை சென்.பீட்டர்ஸ் கல்லூரி வாசலில் நிறுத்தி, எங்களுடைய வாகனத்தில் வரும் அந்த பாடசாலை மாணவர்களை ஏற்றினார். 


சென். பீட்டர்ஸில் படிக்கும் எனது நண்பன் பார்த்திபனும் என்னோடு பின் ஸீட்டுக்கடியில் இணைந்து கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம், சிரிக்கவில்லை, சிரிக்க முடியவில்லை. 


முன் ஸீட்டிலும் பின் ஸீட்டுகளிலும் சிங்கள பெடியங்கள் ஏறிக் கொண்டார்கள். பின் ஸீட்டில் அமர்ந்திருந்த அவங்களின் கால்களிற்கடியில் நாங்கள் ஒளிந்திருந்தோம். நிஸாம் அங்கிள் அவங்களுக்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டும், அவங்கள் எல்லோரும் ஒருவித இறுக்கத்துடன் வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். 


வாகனம் மீண்டும் நகரத் தொடங்க, படாரென்று ஒரு சத்தம் கேட்டது. சளாரென்று கண்ணாடி நொறுக்கும்  சத்தமும் கேட்டது.

"அம்மட்ட சிரி.. அற காரெக்கட்ட கினி தியலா.. அதுல மினிஸு இன்னவா வகே (அந்த காரை எரித்து விட்டார்கள், காருக்குள் ஆக்கள் இருக்கினம் போல இருக்கு) வாகனத்திலிருந்த சிங்கள பெடியனொருவன் பதறியது கேட்டது. 


"ஈயே ரா அபே ஹமுதா ரணவருண் தஹதுன்தெனெக் கொட்டி மரா தம்மாளு" (நேற்றிரவு எங்கள் ராணுவ வீரர்கள் பதின்மூன்று பேரை புலி கொன்றுவிட்டதாம்) இன்னொரு சிங்கள மாணவன் சொல்வதும் கேட்டது.


"புலி அடித்து ஆமியை கொன்றதற்கு இவங்கள் ஏன் ஆக்களை அடிக்கிறாங்கள், காரோடு கொளுத்துறாங்கள், எண்ணெய் கடையை எரிக்கிறாங்கள்" எனக்குள் நானே கேட்டு கொண்டேன், அவங்கள் கதைத்த புலி, எங்கட தமிழ் புலிப்படை என்றறியாத காலமது.


மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. நிஸாம் அங்கிளின் குரல் கேட்கிறது "அதுலே சிங்கள லமய் வித்தராய் இன்னே (உள்ளே சிங்கள பிள்ளைகள் மாத்திரம் தான் இருக்கினம்). வெளியே யாரோ அழும் சத்தமும் கண்ணாடிகள் நொறுங்கும் சத்தமும் கேட்கிறது. 


"அபிட பொறு கியன்ட எப்பா ஹரித (எங்களுக்கு பொய் சொல்ல வேண்டாம்) யாரோ ஒருத்தன் நிஸாம் அங்கிளை வெருட்டுவது கேட்குது.


"மங் பொறு கிய்வ நஹா மஹாத்தையா"(நான் பொய் சொல்லவில்லை ஜயா) நிஸாம் அங்கிளின் பணிவான பதில் அவனை சாந்தப்படுத்தியிருக்க வேண்டும், வாகனம் மீண்டும் நகருகிறது. வாகனம் இராமகிருஷ்ண லேனிலிருந்த எங்கள் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட, நானிறங்கி வீட்டிற்குள் போனேன். 

வேலையிலிருந்து திரும்பிய அப்பா, பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அக்காமார், அம்மா எல்லோரும் பதற்றத்தோடு இருக்க, டெலிபோன் அடிக்கிறது. அப்பா தான் டெலிபோனை எடுக்கிறார். "ஹலோ"...மறுமுனையில் யாரோ பதற்றத்துடன் கதைப்பது புரிகிறது. "ஜயோ அப்படியா" என்று சொல்லிவிட்டு அப்பா போனை படாரென்று வைத்துவிட்டு கத்துகிறார் "ராமகிருஷ்ண ரோட்டை அடிக்க சிங்களவங்கள் வாறான்களாம், வெள்ளவத்தை பொலிஸிலிருக்கும் என்னுடைய ஃபெரன்ட் ரிஸ்வான் தான் கதைத்தவர், எங்களை அவரின்ட வீட்ட உடனடியாக போகச் சொன்னார்" அப்பா சொல்லி முடிக்க முதல் நாங்கள் படிகளில் இறங்கி ஓடினோம்.

"அம்மா, என்ட batஜ எடுத்துக்கொண்டு வாறன்" லேனில் இறங்கி காலடி வைத்துவிட்டு, திரும்பி போக வெளிக்கிட்டேன். பளார், அம்மா கன்னத்தில் விட்ட அறையில் அழுதுகொண்டே ராமகிருஷ்ண ரோட்டை நோக்கி ஒடினேன். ராமகிருஷ்ண லேன் முடக்கில் இடப்பக்கம் திரும்பி, ராமகிருஷ்ண மடத்திற்கருகில் இருக்கும் ரிஸ்வான் அங்கிளின் வீட்டை நோக்கி ஓட திரும்ப, அந்த சத்தம் என் காதில் கேட்டது 

"அடோ பற தெமலா"

திரும்பிப் பார்க்க, ராமகிருஷ்ண வீதி முகப்பில் இருக்கும் பெற்றோல் நிலையத்தடியிலிருந்து சிவப்புக் கலர் பெனியனும் நீல கலர் சாரமும் அணிந்த ஒருத்தன், பெரிய வாளோடு எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.

"ஜயோ என்ர cricket bat"


கபாலி..அனுபவப்பகிர்வு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் அன்றிலிருந்து இன்றைவரை hypeம் பில்டப்பும் அதிகமாகவே இருக்கும். படம் பூஜை போடமுதலே யாருடைய டிரக்ஷனில் ரஜினி அடுத்த படம் நடிக்க போகிறார் என்பதில் ஆரம்பமாகி எந்தெந்த டிரக்கடர்ஸிடம் கதைகேட்டார் என்று பில்டப் எகிறி, hype படலம் இறக்கை கட்டிப் பறக்கும். 


படம் எடுக்க தொடங்க, ஷூட்டிங் ஸ்பொட் படங்கள் லீக்காகி, பாடல்கள் வெளிவந்து, டீஸர் யூடியூப்பில் ஏற, hype உச்சக்கட்டத்தை நெருங்கும். படம் ரிலீஸாகும் திகதி அறிவிக்கப்பட, பில்டப் ச்சும்மா அதிரும். இந்த ஓவர் hype படத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாவதத்திற்கு அப்பால், இந்த hypeஐயும் பில்டப்பும் அனுபவித்து அடையும் ஆனந்தம் உண்மையிலேயே அளவில்லாதது தான். 


ஜூலை 22, 2016 காலையில் அடித்த அலார்ம் "கபாலிடா.. எழும்புடா" என்று தான் அடித்தது. நேற்றிரவு முழுக்க கபாலி பற்றிய பேட்டிகள், தலைவரின் பழைய படங்களின் முக்கிய காட்சிகள், பாடல்கள் என்று பார்த்து கபாலி படம் பார்க்க warm up எடுத்திருந்தேன். காலம்பற தேத்தண்ணி குடித்துக்கொண்டு WhatsAppஜ திறக்க வாழ்க்கை வெறுத்திச்சு.


கபாலியை அமெரிக்காவில் காட்டுறாங்கள், லண்டனில் காட்டுறாங்கள், கோலாலம்பூரில் காட்டுறாங்கள், இழவு டொரோன்டோவில் கூட காட்டுறாங்கள், மெல்பேர்ணில் திரை விலக இன்னும் 11 மணித்தியாலம் இருக்கு என்று நினைக்க, கடுப்பு விசராக்கியது. 


காரில் "நெருப்புடா" பாட்டு கேட்டுக் கொண்டு வேலைக்கு போனா, மண்டை வேலை செய்ய மறுத்தது. Earphoneஜ காதில் செருகி, சூடாக கோப்பி குடித்துக்கொண்டே "மாய நதியின்று" கேட்க, கபாலி பார்த்துவிட்டு கனடாவிலிருந்து நகு கோல் பண்ணுறான், என்னை வெறுப்பேற்ற. "Can't talk right now" என்று message அனுப்பினாலும் விடாமல் திரும்ப கோல் பண்ணி "படம் ஓகே, போய் பார், don't go with high expectations" என்று அறிவுரை சொல்லிவிட்டுத் தான் வைத்தான். லண்டனிலிருந்து செந்தில், ரஜினியின் entry scene அடங்கிய கள்ளமாக சுட்ட ஒரு நிமிட காட்சியை FBல் போட்டு வெறுப்பேற்றினான். 


பின்னேரம் 5.30க்கு வீட்டை விட்டு வெளிக்கிடோணும், என்னை டென்ஷனாக்காமல் ரெடியா இருங்கோடா மக்காள்ஸ் என்று மனிசிக்கும் பெடியளுக்கும் ஓரு கிழமையாக தொடர்ச்சியாக அன்புக்கட்டளை இட்டுக்கொண்டேயிருந்தேன். சரியா 5.12க்கு கபாலி பாட்டுகள் கேட்டுக் கொண்டே வேலையால வீட்ட வந்து சேர, மேசையிலிருந்த டம்ளரில் தேத்தண்ணி சிரிக்குது. 


ஒரு bathroomல் மூத்தவன் iPad பார்த்துக் கொண்டே கக்காக்கு போக, மற்றதில் இளையவன் iPhoneல் footy பாரத்துக் கொண்டே ஷவர் எடுத்துக்கொண்டிருந்தான். "டேய் பொடியள், இன்றைக்கு வேண்டாமடா, கபாலிடா, ரஜினிடா, வெளிக்கிடுங்குடா" என்று மென்வலு பிரயோகித்து அவங்களை காரில் ஏற்ற 5.36.


5.40க்கு மனிசியும் வந்து ஏற, Knox நோக்கி கார் பறந்தது. "அப்பா, I have never seen you driving so fast" சந்தோஷ் பின் சீட்டிலிருந்து விமர்சித்தான். "Thanks to Rajinikanth" மனிசி வசனத்தை முடித்து வைத்தா. சண்டைக்கு இது நேரமில்லை, கதம் கதம் சொல்லி, அவயளை தியேட்டர் வாசலில் இறக்கி விட்டு, மினக்கிடாமல் போய் pop cornம் cokeம் கெதியா வாங்குங்கோ செல்லங்கள் , இப்ப வாறன் என்று சொல்லிவிட்டு carஜ park பண்ண பறந்தேன்.


5.56..ஓட்டமும் நடையுமாய் தியேட்டருக்குள் நுழைய மேல்மூச்சு வாங்கிச்சு, மனிசியும் பெடியளும் popcorn queவில் இன்னும் நிற்கினம், என்னில் டென்ஷன் எட்டிபார்க்குது. "அம்மா said she wants a coffee" சந்தோஷ் சொல்ல,  டென்ஷனை அடக்க மாடிப்படிகளில் ஓடிப்போய் "Latte with one sugar" சொல்லி, டிக்கெட் கவுண்டரில் ராஜன் அண்ணேக்கு வணக்கம் சொல்லி, தியேட்டர் கண்டுபிடித்து, ஸீட் தேடி, ஸீட்டில் போய் இருக்க 5.59, "we made it boys", நிம்மதி பெருமூச்சு விட்டேன்.


தியேட்டர் நிரம்பி விட்டது, 6.06 ஆகியும் படம் தொடங்கவில்லை. "Why are they late" பிரவீன் கேட்க "they lost the DVD" சந்தோஷ் நக்கலடிக்க, இருவரையும் முறைத்துப் பார்த்தேன், அவங்கள் ஹா ஹா என்று சிரித்தார்கள். 


6.12க்கு திரைவிலக திருவிழா ஆரம்பமாகியது. Super Star ரஜினி என்ற அந்த name card திரையில் வர பரவசம் பற்றிக்கொள்ள விசில் சத்தமும் கூ சத்தமும் மெய்சிலிர்க்க வைத்தது. எழுத்தோட்டத்தில் கதை தொடங்க, மலாய் மொழியில் கதைத்த நீண்ட அந்த ஆரம்பக்காட்சி பரவசத்தை பஞ்சராக்கியது. 


சிறைச்சாலையை காட்டி, புத்தகம் வாசிக்கும் தலைவரை சாதுவாக காட்டி, சிறை கதவில் தொங்கிய ரஜினியை பின்பக்கம் காட்டி, நடந்து போகும் சூப்பர் ஸ்டாரை லோங் ஷொட்டில் காட்டி, கோர்ட் போட்டு, ஷூ அணிந்து என்று மெல்ல மெல்ல பில்டப் ஏற்றி, sliding door விலகி தலைவரை முழுசாக காட்ட... Hype ஓடு பில்டப்பும் இணைந்து பரவத்தை உச்சத்தில் கொண்டு போய் நிற்பாட்ட, தொண்டை கிழிய கத்தினேன்.. தலைவா !


அறுபது வயது கதாபாத்திரமாக திரையில் வலம் வரும் ரஜினியின் ஸ்டைலும் கெத்தும் கொஞ்சமும் குறையவில்லை. காந்த கண்களில் மிளிரும் கம்பீரமும், அந்த ஹ ஹ ஹா சிரிப்பும், தலையை லேசாக ஆட்டிக்கொண்டே சொல்லும் மகிழ்ச்சியும், டென்ஷனான காட்சிகளில் அலட்சியமாக சோபாவில் உட்கார்ந்து காலிற்கு மேல் கால் போடும் மிடுக்கும், ரஜினியை ரசிக்க வைக்கின்றன. வழமையான ரஜினி என்றால் ஒரு வேகம் இருக்கும், சக்கு சக்கு என்று நடந்து போவது, கண்ணாடியை திருப்பி மாட்டுவது, கதைப்பது என்று வேகம் ரஜினியோடு கூடப்பிறந்தது. கபாலியில்  வேகத்தடை போடப்பட்ட ரஜினி, வித்தியாசமாய் தெரிந்தார்.  


பின்னனி இசையின் பலத்திலும், பரபரப்பான திரைக்கதையாலும் திரைப்படம் அலுப்படிக்காமல் நகருகிறது. இயக்குனர் ரஞ்சித்தின் சமூக கருத்துகளை ரஜினியினூடாக வெளிப்படும் திரைப்படமாக கபாலி அவதாரம் எடுத்திருக்கிறது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் தனது நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். வழமையான அவரது ஸ்டைல்களை எந்த குறைகளுமின்றி வழங்கியிருந்தாலும், படத்தில் நகைச்சுவை இல்லாதது ஒரு பெருங்குறையாக வெளிப்படுகிறது. 


இரண்டு காட்சிகளில் ரஜினி அழ, நம்மையும் கலங்க வைக்கிறார். ரஜினியை சுற்றி நடிக்கும் நடிகர் நடிகையர்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். பாடல் காட்சிகளை எடுத்த விதமும் சண்டைக் காட்சிகளில் மிளிரும் ரஜினியின் நடிப்பும், ரஜினிகாந்த் பேசும் "மகிழ்ச்சி" உட்பட்ட அழகான தமிழ் வசனங்களும் படத்திற்கு மேலும் மெருகேற்றுகின்றன.


ஷங்கர், ரஹ்மான், வைரமுத்து, சுஜாதா, மணிரத்னம், ரவிக்குமார் போன்ற ஜாம்பான்களை விட்டு வெளியே வந்து, நயன்தாராவோடும் அனுஷ்காவோடும் கட்டிப்பிடித்து டூயட் பாடி ஆடாமல், ரஜினி எனும் இமேஜை கழற்றி வைத்து விட்டு, அடுத்த தலைமுறை திரைப்பட தொழில்நுட்பவியலாளர்களோடு இணைந்து, நடித்த ரஜினிகாந்த் எனும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் பாராட்டப்படவேண்டியவரே. 


கபாலி
ரஜினிகாந்த் நடித்த படம், 
நடித்த என்ற சொல்லை அழுத்தி வாசிக்கவும். 

கபாலி...மகிழ்ச்சி ! 

Friday, 15 July 2016

கந்தசாமியும் கலக்சியும்2014ம் ஆண்டு, சென் ஜோன்ஸில் படித்தவனென்றால் முள்ளுக்கரண்டியால் chicken சாப்பிட்டுக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி Johnians always play the game என்று பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டம் என்ற மாயையை தகர்த்து.. யாழ் பரியோவானில் எமக்கு செந்தமிழும் தமிழ் பற்றும் தமிழ் தேசிய சிந்தனையும் ஊட்டியே வளர்க்கப்பட்டோம் என்பதற்கு சான்றாக ஜேகேயின் "கொல்லைப்புறத்து காதலிகள்" புத்தகம் மலர்ந்தது.


1990களின் யாழ்ப்பாண வாழ்க்கையை, கடுமையான யுத்தத்திற்குள்ளும் கொடுமையான பொருளாதார தடைக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை உணர்வு மாறாமல், சுவாரசியமாக பதிந்த நனவிடை தோய்தல் பதிவாக "கொல்லைப்புறத்து காதலிகள்" வெளிவந்தது.


இரு ஆண்டுகள் கழித்து, ஜேகேயின் இரண்டாவது புத்தகம் பிறிதொரு தளத்தில், ஈழத்து எழுத்தாளர்கள் இதுவரை காணாத புதிய களத்தில், "கந்தசாமியும் கலக்சியும்" என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கலக்சியும் என்ற சொல்லில் "சி" பாவித்தது சரியா இல்லை "ஸி" பாவித்திருக்க வேண்டுமா என்ற பஞ்சாயத்தை இப்போதைக்கு தள்ளி வைப்போம். 


"கந்தசாமியும் கலக்சியும்" ஜேகேயின் படலையில் தொடராக வந்த போது வாசிக்கவில்லை, அதனால் நூலுருவில் நாவலாக வாசிக்கும் போது ஏற்பட்ட வாசிப்பனுபவம் நிறைவானது என்று நம்புகிறேன். அறிவியல் கதைகளினூடு சமூக நையாண்டிகளை புதுமையாக கொடுத்த Douglas Adamக்கு அகவணக்கம் சொல்லி நாவலை ஜேகே அரப்பணிக்கிறார். கந்தசாமி நாவல் Adamsன் நாவல்களின் தாக்கத்தால் வந்த வினை என்று  தம்பி ஜேகே முன்னுரையிலேயே வெள்ளைக் கொடி காட்டி சரணடைந்து விடுகிறார். Douglas Admas யாரென்று தெரியாத நாங்கள், Douglas (தேவானந்தா அல்ல) ஜெயகுமரன் போட்ட வீதியில் பயணிக்க தொடங்குகிறோம்.


நாவலின் முதலாவது அத்தியாயம் 'பூமி அழிதல் படலம்'. இந்த அத்தியாத்தில், சுவாரசியமாக நக்கல் கலந்து நனவிடை தோய்தல் பதிவுகள் எழுதி நமக்கு அறிமுகமான ஜேகே, "பயப்பிடாம வாங்கோண்ணே" என்று கூட்டிக்கொண்டு நாவலுக்குள் எங்களை அழைத்து செல்கிறார். காலை ஐந்து மணிக்கு கந்தர்மடத்தில் நாவல் ஆரம்பிக்க, யாழ்ப்பாணத்தின் காலைப் பொழுதை தனக்கேயுரிய பாணியில் படிமங்களாக படைக்கிறார் ஜேகே. 


கதாபாத்திரங்களை சம்பவங்களோடு அறிமுகப்படுத்தும் போதே நமக்குள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பெரிசா ஏதோ ஒன்று நடக்கப்போகுது என்ற பரபரப்பு எழுத்துக்களிலிருந்து வாசிப்பவரிற்கு தொற்றிக்கொள்கிறது. கந்தர்மடம், தின்னவேலி, நல்லூர், நாசா என்று கதைக்களம் ரஜினிகாந்த் பேசும் வசனங்களை போல் அவசரமாக நகர்ந்து, தண்ணி குடிக்க எழும்ப முதல் பூமி அழிந்து விடுகிறது.


"கொட்டியா கொட்டியா என்று எல்லாப்பக்கமும் சுட ஆரம்பித்து விட்டருந்தனர்"

போட்ட தேத்தண்ணியை ஒரு வாய் உறிஞ்சாமல், கொடியிலிருந்த துவாயோடு கந்தசாமி, மிகிந்தர்களின் கலத்தில் ஏற, கதை வேறு தளத்திற்கு தாவுகிறது. 'தப்பியோடும் படலம்' எனும் இரண்டாவது அத்தியாத்திலிருந்து அறிவியல் எழுத்தாளன் ஜேகே எனும் புதிய கபாலி நம்முன் அவதாரம் எடுக்கிறார்.


"அதாவது கடவுள் இருக்கிறார் என்று தீர்க்கமாக நிரூபித்து விட்டால் கடவுள் நம்பிக்கை அற்றுப் போய்விடும் அல்லவா"


பள்ளிக்கூடத்தில் படித்த விஞ்ஞான பதங்கள் புத்தகத்தில் மீண்டும் வந்து மிரட்ட, ஈர்ப்பு சக்தியும் பிரபஞ்சமும் பூமியாண்டும் கனவிலும் கலைத்துக் கொண்டு வந்தது. சயன்ஸ் படிப்பித்த சரா மாஸ்டர், பிரபாகரன் மாஸ்டர், செல்வவடிவேல் எல்லோரையும் நினைத்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தான் மூன்றாம் அத்தியாயமான "விடைகாண் படலத்திற்குள்" நுழைந்தேன். 

"ஐயோ என்ர கடவுளே"

விஞ்ஞான படலம் முடிந்து கடைசியாக "கேள்வி தேடும் படலத்திற்குள்" சோக்ரடீஸ் ஜேகே நிற்கிறார். சோக்ரடீஸ் தனது மாணவர்களுடன் உரையாடிய உரையாடல்கள் பற்றி அறிந்திருக்கிறேன். யாழ்ப்பாணத் தமிழில் அத்தகைய தத்துவ உரையாடல்களை இந்த அத்தியாயத்தில் வாசித்தனுபவம் உண்மையிலேயே புதுமையானது. 


இருநூறு பக்கங்களுக்குள் எங்களை கந்தர்மடத்திலிருந்து கூட்டிக்கொண்டு, போய் பிரபஞ்சத்தை சுற்றிவந்து பால்வெளியில் பயணம் செய்து எலிகளோடு உரையாடி, கடைசியில் நயினாதீவு நாகம்மாள் கோயிலில் முருகனிற்கும் குவேனிக்கும் நடக்கும் கலியாணத்தை தரிசித்து, அவர்களின் முதலிரவு குடிசைக்குள்ளும் எங்களை எட்டிப்பார்க்க வைக்க ஜேகேயால் மட்டுமே முடியும். 

ஜேகேயின் மண்டை எப்போதும் எதையோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கும், அவரது எழுத்துக்களிலும் அந்த தேடல் பிரதிபலிக்கும். அவரது பதிவுகளையும் நாவல்களையும் வாசிக்கும் எம்மையும் அந்த தேடல், உந்தும். கந்தசாமியின் கலக்சியும் வாசித்தனுபவமும் அப்படித்தான். பக்கம் பக்கமாய் தேடல், தேடல் தேடல் தான். முதலில் பதிலிற்கான தேடல், பின்னர் கேள்விக்கான தேடல். தேடல் முடிந்ததா என்றால், அது தான் இல்லை. இன்னுமொரு தேடலிற்கு களம் திறந்துவிட்டு இந்த தேடல் விடைபெறுகிறது, அவ்வளவு தான். 

கந்தசாமியும் கலக்சியும்
தேடல் விரும்பும் வாசகனிற்கு

வாங்கிப்படியுங்கோ, இரவலாக அல்ல.
இணையத்தில் வாங்க 

http://www.padalay.com/2016/07/blog-post_6.html?m=1

இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்..
'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' மனம் உறுதிமொழி எடுத்துக்கொண்டது.

'டேய், இது நூத்தி தொண்ணூத்தி ஒம்பதாவது உறுதிமொழி..பார்க்கலாம் பார்க்கலாம், நீயும் உன்ட உறுதிமொழியும்' மூன்று முடிச்சு ரஜினிகாந்தோடு கதைத்த அதே மனசாட்சி, ரோசா மினிபஸ்ஸின் கண்ணாடியில் என்னைப் பார்த்து கதைத்தது, நக்கலடித்தது.


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


அவள் ஒரு கொழும்புக்காரி, அதுவும் மண்டைக்காரி, உயர்தரத்தில் மட்ஸ் படிக்கும் மண்டைக்காரி. கொழும்புக்காரிகளுக்கு கொழுப்பு அதிகம், அதுவும் மண்டைக்காரி வேறு என்பதால் எடுப்பும் கனக்க கூட. கொழும்பு லேடீஸ் கல்லூரியில் படிப்பதால் தடிப்புக்கும் குறைவில்லை. ஆக மொத்தம் அவள் ஒரு எடுப்பும் தடிப்பும் கொழுப்பும் மிகுந்த கொழும்பு மட்ஸ் மண்டைக்காரி.


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


நானோ ஒரு யாழ்ப்பாணத்தான், அதுவும் கொமர்ஸ் படிக்கிற மொக்கன். கொழும்பு இந்துவில் அமலன் "பனங்கொட்டை, பனங்கொட்டை" என்று அடிக்கடி கூப்பிட்டு கடுப்பேத்துவான். கொழுப்பு, தடிப்பு எதுவுமே இல்லாத ஒல்லிப்பிச்சான் தேகம், முகத்தின் அரைவாசியை மறைத்து கண்ணாடி. ஆக மொத்தம் நானொரு கொழுப்பு, தடிப்பு எடுப்பு யாதுமற்ற மொக்கு கொமர்ஸ்காரன்.


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


"படிக்கிறது ஹின்டு கொலிஜ், பார்க்கிறது லேடீஸ் கொலிஜ்"  ரஜினிகாந்த் மனசாட்சி வேற, காலங்காத்தால பொங்கும் பூம்புனல் தீம் மியூசிக் ஒலிக்கிற நேரத்தில் மறக்காமல் ஞாபகப்படுத்தும். "ஆமிட்ட அடிவாங்காமல், இயக்கத்திற்கு பிடிபடாமல், கொம்படி வெளியால ஓடிவந்த நாதாரி உனக்கு காதல் கேட்குதோ" பின்னேரங்களில் மக்கள் குரலில் ஒலிக்கும் கே.எஸ் ராஜாவின் மொடியுலேஷனில் ரஜினிகாந்த் மனசாட்சி வெருட்டும்.


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


கொழும்புக்காரியில் இருந்த ஏதோ ஒன்றில் மயங்கிவிட்டேன், இல்லை தொலைந்து விட்டேன், ச்சா ச்சா கிறங்கிவிட்டேன். வட்டமுகத்தில் காந்த விழிகள், விழிகளிற்கு மேல் நெளியும் புருவங்கள். புருவங்களிற்கு மேல் படரும் மேகங்களாய் நெற்றி, நெற்றியில் அந்த குட்டி கறுப்பு பொட்டு. இதயம் படமும் பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டும் வந்த காலம் அது. பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டு, இவள் இந்தியா போன போது வைரமுத்துவின் கண்ணில் பட, வைரமுத்து இவளை வைத்து எழுதின பாட்டு என்று கூட நினைத்தேன். 


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


கொழும்புக்காரி லேசில் சிரிக்க மாட்டாள், மண்டைக்காரிகள் லேசில் சிரிக்க மாட்டினம். நடந்து போகும் போது அவளின் பின்னால் போனால், அவளின் குறும்பின்னல் தகதிமிதா என்று ஆடும், வாசுகி சண்முகம்பிள்ளையிடம் பரதநாட்டியம் பழகிறளவாம்.  நீல நிற ஸ்கர்ட் அணிந்து வந்தாளென்றால், இடை தான் கொடியா என்று அன்றிரவு கனவில் கவிதை வரும். அவளின் நடையில் நளினம் இருக்காது, நடனம் பயிலும் கால்களுக்கு நடைப்பயிற்சி தேவையில்லை என்று என்னுடைய இகனொமிக்ஸ் கொப்பியின் கடைசி பக்கத்தில் எழுதிய ஞாபகம். 


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


அவளின் நண்பிகளோடு கதைக்கும் போது காத்து பலமாக வீசும், அதாவது இங்கிலீஷில் தான் கதைப்பினம். 

"Today Premnath didn't explain இடைமதிப்பு தேற்றம் properly, no" 

"Ya ya..hope he will do a better job with மைய எல்லை. Because அது very very கஷ்டமாமடி"

காற்றடித்தால் மரம் ஆடும், ஆனால் சாயாது. சென். ஜோன்ஸ் காற்றுப் பட்டு படித்த இங்கிலீஸு, இவளவயின்ட இங்லீஷ் ஷெல்லடிக்கு பங்கருக்குள் பதுங்கும். நாங்கள், "கரிக் கதை கதைக்காதே ஹரித" என்று கொழும்புத் தமிழும் "மங் ருபியல் தஹயக் துண்ணா, இதுரு சல்லி தென்ட" என்று தத்தி தத்தி சிங்களமும் பழகிக் கொண்டிருந்த காலம் வேற, இதுக்க இங்கிலீஸ் எங்க பழகிறது. 


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


செவ்வாய்க்கிழமைகளில், பின்னேரம் நாலேகாலுக்கு அவளிற்கு பிரேம்நாத்திடம் புயோர் மட்ஸ் க்ளாஸ், எனக்கு நாலரைக்கு செல்வநாயகத்திடம் புயோர் கொமர்ஸ் க்ளாஸ். அவள் ஏறி இறங்கிற பஸ் ஹோல்டுகள், நேரங்கள், வாற போற ஆக்கள் எல்லாம் ஏழு கிழமைகளாக ரெக்கி பார்த்தாச்சு, பக்காவா ப்ளான் பண்ணியாச்சு. 


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


செவ்வாய்க்கிழமைகளில் பின்னேர வகுப்புக்கு வரும் போது அவள் தனியத்தான் வருவாள், பாரதிராஜாவின் டான்ஸிங் கேர்ள்ஸ் பிரேம்நாத்திடம் வருவதில்லை. அவள் பஸ் ஏறும் நேரம், பஸ் ஹோல்டில் ஒரேயொரு பிச்சைக்காரன் மட்டும் தான் இருப்பான், அவனும் நித்திரை கொண்டு கொண்டு இருப்பான். 


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


அவளுடைய வீடு இருக்கும் லேனுக்கால அவள் பச்சைக் கலர் குடை பிடித்து கொண்டு வரும்போது, பக்கத்து வீட்டு அன்டியோடு கதைத்து கொண்டு வருவாள். இருவரும் ஒன்றாக காலி வீதி கடந்து, அன்டி சிட்னியிலிருக்கும் அங்கிளிற்கு கோல் எடுக்க கொமியுனிகேஷனிற்குள் போக, அவள் பஸ் ஹோல்ட் வருவாள் கொமியுனிகேஷனிற்கும் பஸ் ஹோல்டிற்கும் இடையில் இருக்கும் தூரம், எழுபத்தியேழு அடிகள், நடந்து பார்த்து அளந்து கணித்தது.


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


அவள் சீஸன் டிக்கெட் வைத்திருக்கிறாள். அடிக்கடி வாற பாணந்துறை மினிபஸ்ஸில் ஏற மாட்டாள், கஞ்ச பிசினாறி. 155 ரத்மலான CTB பஸ் வந்தாலும் ஏறமாட்டாள். அவள் ஏறும் CTB பஸ் இலக்கங்கள்:  100 பாணந்துறை, 101 மொறட்டுவ, 154 கல்கிஸை. இந்த எண் பஸ்களை பிடிக்கவென கொஞ்சம் வெள்ளனவே வந்து நின்று, மினி பஸ்ஸின் கொந்தா "என்ட நங்கி என்ட" என்று கெஞ்சி கூப்பிட்டும் போகாமல், சீஸன் டிக்கட்டை கைக்குள் பொத்தி பிடித்துகொண்டு சராசரியாக ஏழு முதல் பதினொரு நிமிடங்கள் பஸ் ஹோல்டில் நிற்பாள்.


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' 


அந்த ஹோல்டில் நிற்கிற 100, 101, 154 CTB பஸ்களில், சீட் இருக்கிற பஸ்ஸாக பார்த்து ஏறி, யன்னல் பக்கம் இருக்காமல் மற்றப் பக்கம் இருப்பாள். தலை குழம்பிடும் என்று பயமாகவோ முகத்தில் புழுதி படக்கூடாது என்ற தற்காப்பாகவோ இருக்கலாம். கொந்தா வந்து சீஸன் டிக்கெட் கேட்டாலொழிய தானாக போய் சீஸன் டிக்கெட் கொடுப்பதில்லை என்ற வைராக்கியம், தடிப்பு என்றும் சொல்லலாம். 


'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'


இன்றைக்கு...
செவ்வாய்கிழமை 
பச்சைக் கலர் குடை
நீல நிற ஸ்கேர்ட்
கறுப்புப் பொட்டு
பக்கத்துவீட்டு அன்ரி
கொமியுனிகேஷன்
பிச்சைக்காரன் நித்திரை

'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்

Friday, 8 July 2016

செவ்வாய்கிழமை மனிதர்கள்"கிட்டடியில் நானொரு கதை கேள்விப் பட்டேன்" மொரி சொன்னார். மொரி கண்ணை ஒரு கணம் மூட, நான் காத்திருந்தேன்.

"ஓகே, அந்தக் கதை ஒரு குட்டி அலையைப் பற்றியது. சமுத்திரத்தில் துள்ளி குதித்து மகிழ்கிறது அந்த குட்டி அலை. வீசும் தென்றலில் தவழ்ந்து, அடிக்கும் காற்றில் மிதந்து, குதூகலிக்கும் குட்டி அலையின் மகிழ்ச்சி, தனக்கு முன்னாள் செல்லும் அலைகள் கரையில் மோதுவதைக் கண்டதும் முடிவிற்கு வருகிறது." 

"கர்த்தரே, என்ன கொடுமை,' குட்டி அலை கதறியது. 'எனக்கும் அதே கதிதான் நடக்கப் போகிறது !'

"அப்பொழுது இன்னொரு அலை குட்டி அலையின் பின்னால் வந்தது. குட்டி அலையின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தைக் கண்ட புதிய அலை, குட்டி அலையை கேட்டது 'ஏன்டா மச்சான், உனக்கு என்ன பிரச்சினை?'

"குட்டி அலை சொல்லியது 'உனக்கு பிரச்சினை விளங்கேலேடாப்பா! நாங்களெல்லாம் கரையில் மோதி நாசமாகப் போகிறோம்! நாங்கள் இல்லாமல் போகப் போகிறோம்! என்ன கொடுமை மச்சான்'

"புதிய அலை சொல்லியது, 'மச்சான், உனக்குத் தான்டா விளங்கேல்ல, நீ ஓரு அலை அல்ல, நீ சமுத்திரத்தின் ஒரு பகுதி' "

நான் சிரித்தேன். மொரி மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறார்.

"சமுத்திரத்தின் ஒரு பகுதி" மொரி முணுமுணுக்கிறார், "சமுத்திரத்தின் ஒரு பகுதி." அவர் மூச்சு விடுவதை நான் அவதானிக்கிறேன், உள்ளே வெளியே, உள்ளே வெளியே.

------------------------------------------------

சில வாரங்களுக்கு முன்னர் மெல்பேர்ணில் இடம்பெற்ற செங்கை ஆழியானின் நிகழ்வு அரங்கில் தம்பி ஜேகே செங்கை ஆழியானின் நினைவுரை வழங்கினார். ஜேகே, கோர்வையாக பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது, "எனக்கு கோர்வையாக பேச வராது" என்று சபையோரை எச்சரிப்பார், அதை அவையடக்கமாக சபை கருதும்.


ஜேகேயின் பேச்சு கோர்வையாக இருக்காது, ஆனால் ஒரு சம்பாஷணையாக இருக்கும். ஜேகே பேசிக் கொண்டிருக்கும் போது நாங்களும் அவருடன் மெளனமாக உரையாடுவோம், அவரின் பேச்சு கோர்வையா இல்லையா என்பதை விட, அது எங்களை கோர்த்து இழுத்து உள்வாங்கி எங்களையும் அவரைப் போல் தேடலிற்குள் தள்ளிவிடும் வன்மை வாய்ந்தது.


செங்கை ஆழியான் இருக்கும் போது அவருக்கு கெளரவம் செய்யாமல் அவர் இறந்த பின்பு என்ன மண்ணாங்கட்டிக்கு நினைவு நிகழ்ச்சி என்று கோபாக்கினை கக்க முன்பு, அவர் warm up பண்ண அறிமுகப்படுத்திய புத்தகம் "Tuesdays with Morrie",  Mitch Albom எழுதியது.

-----------------------------------------------------------

ஓகே, நான் ஒரு கேள்வி கேட்கலாமா, மொரியை கேட்கிறேன். மொரியின் எலும்பும் தோலுமான விரல்கள் அவரின் கண்ணாடியை அவரின் நெஞ்சருகில் பிடித்திருக்கின்றன, மொரி கஷ்டப்பட்டு மூச்செடுக்கும் போது விரல்களும் மேலெழுந்து கீழிறங்குகின்றன. 

"என்ன கேள்வி"  அவர் கேட்கிறார்.

யோபுவின் அதிகாரம் ஞாபகமிருக்கிறதா ?

"பைபிளில்?"

ஓம். யோபு ஒரு நல்ல மனிதன், ஆனால் அவனின் விசுவாசத்தை சோதிக்க, கடவுள் அவனை துன்பத்தில் தள்ளுகிறார். 

"எனக்கு ஞாபகமிருக்கிறது."

அவனிடமிருந்து அனைத்தையும் பறிக்கிறார், அவனது வீடு, அவனது பணம், அவனது குடும்பம்...

"அவனது ஆரோக்கியம்."

அவனை நோயாளியாக்குகிறார்.

"அவனது விசுவாசத்தை சோதிக்க."

ஓம், அவனது விசுவாசத்தை சோதிக்க. எனது கேள்வி என்னவென்றால்....

"உன்னுடைய கேள்வி.."

அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மொரி பயங்கரமாக இருமுகிறார். 
கைகள் உதறலெடுத்து ஓய்கின்றன.

"நான் நினைக்கிறேன்" அவர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்

 "கடவுள் கொஞ்சம் ஓவரா செய்துவிட்டார்"

----------------------------------------------------------------

மொரியை தாக்கிய ALS எனும் அதே கொடிய நோய் 1930களில் New Yorks Yankees baseball அணியின் மிகப்பிரபலமான ஆட்டக்காரனான Lou Gehrigஜ தாக்குகிறது. இந்த நோயிலிருந்து மீட்சி இல்லை, மரணம் இனி நெருங்கும் என்ற நிலையில், Louஜ நினைத்து அமெரிக்க மக்கள் பரிதாபப்படுகிறார்கள், கண்ணீர் வடிக்கிறார்கள்.

July 4, 1939ம் ஆண்டு தனது New Yorks Yankees அணிக்காக தனது இறுதி ஆட்டத்தை ஆடி முடித்துவிட்டு Lou உரையாற்றுகிறான். 

"ரசிகர்ளே, கடந்த இரு கிழமைகளாக எனக்கு ஏற்பட்ட கொடிய நிகழ்வு பற்றி நீங்கள் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இன்று, நான் இந்த உலகில் வாழும் மிகவும் அதிர்ஷ்டமான மனிதனாக என்னை கருதுகிறேன்

Yet today I consider myself the luckiest man on the face of the earth

----------------------------------------------------------

தசை நார்கள் படிப்படியாக வலுவிழந்து ALS அல்லது Lou Gehrig's disease எனப்படும் கொடிய நோயின் தாக்கத்தால் மரணப்படுக்கைக்கு தள்ளப்படும் ஒரு சமூகவியல் பேராசிரியர் Morrie Scwartzக்கும், பிரபல விளையாட்டுத்துறை ஊடகவியலாளரான Mitch Albomற்கும் இடையில், பதினான்கு செவ்வாய்க்கிழமைகள் இடம்பெறும் சம்பாஷணைகள் தான் Tuesdays with Morrie. 


Mitch Albom, மொரியின் முன்னாள் மாணவன், மொரியின் சிறந்த மாணவர்களில் ஒருவன். கல்லூரி காலங்களிலேயே இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள். Mitch கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய பின்னர், இருவரும் மீண்டும் சந்திக்கும்போது, மொரி மரணப்படுக்கையில், மிட்ச் ஒரு பிரபல ஊடகவியலாளர்

"We are Tuesdays people"

மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராயும், மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு பேராசிரியரின் கண்ணோட்டம் புத்தகமாக விரிகிறது. மரணம், மன்னிப்பு, பயம், எரிச்சல், அன்பு, சமுதாயம், பணம், திருமணம் என ஒரு மனிதன் வாழ்வில் கடந்து செல்லும் வாழ்வின் முக்கிய நிலைகளின் முக்கியத்துவத்தை, இந்தப் புத்தகம், வாசிப்பவரின் மனதில் எளிமையாக பதிய வைக்கிறது.

192 பக்கங்களேயான சிறிய புத்தகமேயானாலும் அதிலுள்ள கருத்துக்கள் கனமானவை. வாழ்க்கையின் அருமையை உணர்த்தும் கருத்துக்கள் பொதிந்த  அருமையான புத்தகம். Fishpond.comல் $12ற்கு வாங்கலாம்.

Tuesday's with Morrie
வளமாக வாழ்க்கையை 
வாழ விரும்புபவர்களிற்கு !