Thursday, 30 June 2016

கபாலிடா...அடிக்கிற மெல்பேர்ண் கடுங்குளிரையே அடங்க வைக்கிறது கபாலி படத்தின் பாடல், நெருப்புடா . காலங்காத்தால காரில் படர்ந்திருக்கும் பனியையே உருக வைக்கும் சூட்டை கிளப்பும் பாடல், நெருப்புடா. நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றி, மயிர்கூச்செரியும் நிலையை அடைய வைக்கும் சந்தோஷ் நாராயணணின், டுவைங் டுவைங் கிடார் இசையிலமைந்த கபாலியின் theme song, நெருப்புடா. பாடலின் இடையில் வரும் ரஜினிகாந்தின் காந்தக் குரல், கொளுந்து விட்டெரியும் பாடலுக்கு இன்னும் தீ மூட்டிகிறது. 

"விடுதலை அடை
விடையென நினை
பயத்தையே முறை 
பகல் கனவை உடை"

தளபதி படத்தில் இடம்பெறும் "இது சூர்யா சார், உரசாதீங்க"  என்ற மணிரத்தினத்தின் ஒற்றை வசனமும், அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் படிகளில் மேலேறி, "மலைடா.. அண்ணாமலைடா" என்று  படிகளில் கீழிறங்கிய சரத்பாபுவை பார்த்து கர்ஜிக்கும் வசனமும் தான் நெருப்புடா பாடல் வரிகளின் கரு என்கிறார், இந்தப் பாடலை எழுதி பாடியிருக்கும் அருண் ராஜா காமராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 41 வருட திரைத்துறை வரலாற்றில், முதல் முறையாக பாடலெழுதி பாடிய பெருமையை அருண் ராஜா காமராஜ் பெறுகிறார். 

"நான் வந்துட்டேன்னு சொல்லு
திரும்ப வந்துட்டேன்னு"


1975ம் ஆண்டு பாலச்சந்தரின் அபூர்வராகங்களில், கேட்டை உதைத்து திறந்து கொண்டு தமிழ் சினிமாவில் புயலென புகுந்த ரஜினிகாந்த், 70களின் இறுதியிலுருந்து 90களின் மத்தி வரை வருடத்திற்கு பத்து இருபது என படங்கள் நடித்து வந்தார். தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் சேனையையே உருவாக்கிய ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில், அரசியல் நுழைவு எனும் தேவையற்ற பில்டப், வேகத்தடையாக அமைந்தது. 

"பயமா... ஹ ஹ ஹ ஹ"


1995ல் நக்மா என்ற சொதப்பல் கதாநாயகி நடித்தும், பாட்ஷா திரைப்படத்தை தமிழ்த்திரையுலகின் இன்னுமொரு மாபெரும் வெற்றிப்படமாக்கியது ரஜினிகாந்த்-சுரேஷ் கிருஷ்ணா-பாலகுமாரன் கூட்டணிதான். அதே ஆண்டில் ரவிக்குமாரின் இயக்கத்தில் க்யூட் மீனாவோடு ரஜினிகாந்த் தில்லாலானா தில்லானா ஆட, படம் தியேட்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது. பாட்ஷாவின் மாபெரும் வெற்றியும் முத்துவில் ரஜினி பேசிய வசனங்களும் அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்க, ரஜினிகாந்த் இமையமலைக்கு ஓடினார். 

"எப்படி போனேனோ
அப்படியே வந்திட்டேன்னு
சொல்லு... கபாலிடா"


மலையிறங்கி வந்து, ரம்பாவோடு நடித்த அருணாச்சலம் அம்போ என்றாக, மீண்டும் வனவாசம். 1999ல் ரவிக்குமாரின் படையப்பாவில், சிவாஜி கணேசன் மற்றும் "நீலாம்பரி" ரம்யா கிருஷ்ணாவுடன் மீளவதாரம் எடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படையப்பாவின் வெற்றி புத்துயிரளித்தது. படையப்பா வெற்றிக்களிப்பில் மூன்றாடுகள் ஓய்வெடுத்துவிட்டு 2002ல், ரஜினிகாந்த் பாபா அவதாரம் எடுக்க, சனம் பெப்பே காட்டி அனுப்பியது. 

"பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே"


இன்னுமொரு மூன்றாடுகள் கழித்து 
ஜோதிகாவுடன் சந்திரமுகியில் லக்க லக்க என்று கலக்கினார் ரஜினிகாந்த். சந்திரமுகியில் ரஜினிகாந்தோடு கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசி நயன்தாராவும் முக்திபேறடைந்தார். அந்த ஆண்டே குசேலனில், ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்தாலும், படம் முழுக்க வியாபித்திருந்தார். குசேலனில் ரஜினியின் முன்னாள் நாயகி மீனா, அம்மா வேடம் தரிக்க,  இந்நாள் நாயகி நயன்தாரா வடிவேலுவின் மீசையை நிமிரத்தினார்.

"வலி தீர்க்கும் வலியாய்
வாஞ்சை தர வா"


2007ல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்திலும் சுஜாதாவின் வசனத்திலும் சிவாஜியில் பழைய ரஜினியை மீண்டும் பார்த்தோம். சிவாஜி படத்திற்கு ஸ்ரேயா கண்ணூறு கழிக்க, மொட்டை பாஸாக ரஜினி அதகளமாடினார். பல்லேலக்காவிற்கு நயன்தாரா தோன்றி கண்களை குளிர்வித்தார்.

"நெஞ்சமெல்லாம் வண்ணம் பல
வண்ணம் ஆகுதே
கண்களெல்லாம் இன்பம் கூடி
கண்ணீர் ஆகுதே"


சிவாஜியில் ஸ்ரேயாவை போட்டதற்கு பிராயச்சித்தமாக, 2010ல் எந்திரனில் ஷங்கர், ஜஸ்வர்யா ராயை ரஜினியோடு இணைக்க, காதல் அணுக்களை கிளிமஞ்சரோவில் ரஹ்மான் எண்ண வைத்தார். வில்லன் ரஜினி, மூன்று முடிச்சை ஞாபகப்பபடுத்த "maah maah..black sheep" காட்சி YouTubeல் 12 மில்லியன் க்ளிக் வாங்கியது. 2011ல் ரஜினிகாந்த் சுகவீனமடைய, இன்னுமொரு ரஜினி படமில்லாத மூன்று கொடிய வருடங்கள்.

"நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்"


2014ல் கார்ட்டூன் ரஜினியை ரசிகர்கள் வெறுத்தொதுக்க, அவசர அவசரமாக அதே ஆண்டில் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் லிங்காவில் நடித்தார். அனுஷ்காவும் சொனாக்ஷியும் பலூன் சண்டையும் லிங்காவை கவிழ்க்க, இமயமலை ரஜினியை மீண்டும் அழைத்தது. 

"ஏமாறும் காலம் 
இனி வேண்டாமடி
கை சேரடி....
வானம் பார்த்தேன்"

2016ல் கபாலி... இரண்டே இரண்டு படங்களை இயக்கிய, இளைய தலைமுறை இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், இளமை கொஞ்சும் ராதிகா ஆப்தேயோடு ஜோடி போட்டுக்கொண்டு அதே ரஜினிகாந்த். மலேசியா கதையின் களமாக, அதே அரண பழைய தாதா கதை. ஆனால் இந்த முறை ரஜினி படத்தை தரப்போவது இளைய தலைமுறை ரஜினிகாந்த் ரசிகர்கள். இசையமைப்பிலிருந்து, பாடியவர்கள் தொடக்கம் நடிகர்கள் வரை எல்லோருமே சூப்பர் ஸ்டாரை எட்ட நின்று பார்த்து மலைத்தவர்கள். மலைத்து நின்றவர்கள் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத மலையுடன் இணைந்து படைக்கும் படைப்பு, கபாலி. 

"கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காது"


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் பூஜை போட்ட நாளிலிருந்து உருவாக்கும் அதிர்வு, படம் ஓடி வருடங்கள் கடந்தும் ஓயாது. ரஜினிகாந்த் படங்கள் தன்னிலை மறந்து ரசிகர்களை உள்வாங்கும் வல்லமை வாய்ந்தவை. திரையில் தோன்றும் ரஜினிகாந்தோடு படம் பார்க்கும் ரசிகன் ஒன்றிப் போய்விடுவான். ரஜினிகாந்த் தோன்றும் அந்த முதல் காட்சியில், கமராவை நோக்கி ஒரு வணக்கமோ சலூட்டோ ஏன் ஒரு பார்வையையோ வீச, படம் பார்க்கப்போன ரசிகன் தன்னை மறந்து திரைக்குள் ஈர்க்கப்படுவான். 


"When you watch a Rajini movie, you let you go of yourself. If you could somehow peel your eyes from the screen and watch others in the theatre silently you will realise everybody...male, female, young, old alike will have a smile on their face, connecting to the hero on the screen" 
Kushboo in "The Name is Rajinikanth

ரஜினிகாந்த் எனும் சூப்பர் ஸ்டாரை, வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரத்தை, நடிகனாக மட்டும் பார்க்கும் கோடானு கோடி ரசிகர்களில் அடியேனும் அடக்கம். ரஜினிகாந்த் எனும் மனிதர், திரைக்கு வெளியே தமிழீழத்திற்கு கொடி பிடித்தாரா, காவேரிக்கு அணை கட்டினாரா, நயன்தாராவிற்கு கல்யாணம் கட்டி வைத்தாரா என்ற ஆராய்ச்சியை ஜேகேயின் கந்தசாமியிடம் விட்டு விட்டு, இன்னுமொரு first day first show ரஜினிகாந்த் படம் பார்க்க நாங்க தயார்.

மேகம் பார்த்து
பூமி கேட்க 
நான் பாடினேன்

மகிழ்ச்சி ❗️பின்னூட்டம்  1 :
ஐசே, படம் எப்ப வருமாம் ❓
எருமைக்கும் பொறுமை வேணும், ஐசே.


பின்னூட்டம்  2 :
அண்ணே, சிங்களத்தில் கபாலி டீசர் டப்பிங் செய்யப்பட்டது பற்றிய உங்கள் கருத்து ?

சதுடுய் (மகிழ்ச்சி).No comments:

Post a Comment