Friday, 3 June 2016

கோலாலம்பூர் குதூகலம்

June 5, 2013 புதன்கிழமை இரவு
மெல்பேர்ண் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு உயர்தர பிரிவினரின் (SJC 92) 40வது பிறந்ததாள் கொண்டாட்டத்திற்கு, கோலாலம்பூர் நோக்கி பயணிக்கும் ஒஸ்ரேலிய படையணி அணித்திரள தொடங்கியது. சிட்னியிலிருந்து சிறப்பு விமானத்தில் சத்தி மாஸ்டர் வந்திறங்கவும் மெல்பேர்ண் குறூப் விமானநிலையத்தை அடையவும் கணக்காக இருந்தது. கன்பராவிலிருந்து பறந்துவந்த கணாவின் விமான
சுணங்கி இறங்கியது. Air Asiaவில் Check-in முடித்துவிட்டு, விமான நிலையத்தின் McDonaldsல் Glenfiddchம் Cokeம் கலக்க, "Cheers மச்சான்", ஆட்டம் தொடங்கியது. 


அதேநேரம் வெள்ளவத்தையிலிருந்து சிறப்பு Rosa மினிபஸ், கொழும்பாரையும் யாழ்ப்பாணிகளையும், லண்டன் கனடாவிலிருந்து வந்திருந்த சில புலம்பெயர் தமிழர்களையும் ஏற்றிக்கொண்டு கொட்டகேன ஊடாக கொழும்பு விமான நிலையம் நோக்கி புறப்படுவதாக Facebookல் status வந்தது. ஜந்து நாட்களிற்கு முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்ட ஷெல்டனோடு, மட்டக்களப்பு இறால் பொரியல், மன்னார் மரை வத்தல், புலோலியூர் புழுக்கொடியல், பலாலி பயிற்றம் பணியாரம்,  பருத்தித்துறை வடை எல்லாம் வாகனத்தின் பின்பக்கத்தில் ஏற்றப்பட்டன. 


முதல் நாளிரவு, ரெக்கி பார்க்க அனுப்பப்பட்ட வேவு அணியின் சிறப்பு தளபதிகள் கேணல் ஆதியும் டிலாஷ் மாமாவும் கோலாலம்பூர் ஹோட்டல் இஸ்தானாவின் சுற்றுபுறங்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். ரமோ மட்டும் ஹோட்டலையும் அறைகளையும் படம்பிடித்து FBல் போட்டு, கடும் இங்கிலீஷில் ஏதோ எழுதினான், யாருக்கும் விளங்கவில்லை. டொரோன்டோ, சிக்காகோ, டுபாய், புரூணாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் மாவட்ட தாக்குதல் பிரிவுகள் விமானத்தில் ஏறிவிட்டோம் என்று தகவல் பரிமாறினார்கள். 

KL here we come !


ஒரு வருடத்திற்கு முன்...

1990 ஜூலை மாதம் கல்லூரி வளாகத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளை பெற வந்தபோது சந்தித்தது தான் நம்மில் பலர் ஒருவரை ஒருவர் கடைசியாக சந்தித்தது. திலீபனின் மூன்றாவது நினைவு நாளான 26 செப்டெம்பர் 1990ல் தளபதி பானு யாழ்ப்பண கோட்டையில் கொடியேற்றிய,  மறுகிழமை,  Open Pass உபயத்தில், எம்மில் பலர் கொம்படிவெளி தாண்டினோம். 


கொழும்பில் பலர் அடைக்கலம் தேட, சிலர் டொரோன்டோ, லண்டன், பிரிஸ்பேர்ண், சிட்னி என்று பறந்தார்கள். உன்னதமான நோக்கத்திற்காக மறவர்களோடு இணைந்து எங்களின் சிவகுமரனும் (சேரலாதன்) களமாட, நாங்கள் குற்ற உணர்வுடன் தப்பியோடினோம். தாயக மீட்பிற்கான புனித போரில், எங்களின் நட்பும் ஆகுதியாகியது. 


2009ல் யுத்தம் முடிய, மீண்டும் நாங்கள் ஒன்றுகூட நல்ல பெடியன்கள் சிலர் எடுத்த இரு முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. பாடசாலை ஆசிரியர்களுக்கு பண உதவி செய்வது, யாழ் ஆஸ்பத்திரி புனருத்தாரணம் உட்பட உன்னத செயற்திட்டங்கள் அடங்கிய அவர்களின் நன்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. 

2012ல் இரு ஊத்தைவாளிகள் தங்களுக்குள் கதைத்து ஒரு ஸ்கெட்ச் போட்டாங்கள். தமிழிற்கு ஆடிமாதம் தொடங்க முதல், ஒரு சனிக்கிழமை, தெரிந்தெடுத்த பிற 15 ஊத்தைவாளிகளை தொலைபேசியில் தொடர்பெடுத்தார்கள்.

"மச்சான்.. எப்பிடிடா இருக்கிறாய்" ஸ்கெட்ச் போட்ட ஊத்தைவாளி.

"ஏதோ இருக்கிறன் மச்சான்.. Life is going on" மறுமுனை  அலுத்து கொண்டது.

"டேய்.. அடுத்த வருஷம் ஜூன் 6ம் திகதி பம்பலடிக்க நாங்க மலேசியா போவோமா.. எங்கட 40 வேற வருது" ஊத்தைவாளி தூண்டில் போட்டான்.

"Sounds great மச்சான்..எத்தனை நாள்.. என்ன ப்ரோக்ராம்" மறுமுனையில் உற்சாகம் பீறிட தொடங்கியது.

"மூன்று நாள்.. ப்ரோகிராம்....போறம், சாப்பிடுறம், தண்ணியடிக்கிறம், பம்பலிடிக்கிறம், திரும்ப வாறம்" ஊத்தைவாளி தாக்குதல் திட்டத்தை விபரித்தது.

"நான் வாறன்டா" மறுமுனையில் உற்சாகம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

"மனிசிட்ட கேட்க தேவையில்லையோ..மச்சி" ஊத்தைவாளி யதார்த்தத்தின் குரலாய்
ஒலித்தது.

"ஓ... ஓ...ஓமென்ன" மனிசி என்ற ஒற்றைச்சொல்லை கேட்டதும், பீறிட்ட உற்சாகம் ஆடி அடங்க, மறுமுனை கிசுகிசுத்தது "நான் எப்படியும் வருவன்டா.. அவவை நான் சமாளித்திடுவன்" சரண் அடைவதற்கு சமாளிப்பு எனும் புதிய வரைவிலக்கணம் தந்தது மறுமுனை.

"சரி... அப்ப.. வெளிநாட்டுகாரன்களுக்கு கொஞ்சம் கூட தான் charge பண்ணோணும்.. அப்பதான் யாழ்ப்பாண பெடியளை குறைந்த செலவில் கூப்பிடலாம்....முதலில் ஒரு $100 Deposit.. தா.. PayPal விபரம் அனுப்புறன்.. நாளைக்கு அனுப்பு.. அப்ப தான் உன்ட பெயர் லிஸ்டில் வரும்.. கையில காசு வாயில தோசை.." ஊத்தைவாளி புக்கிங்கை உறுதிப்படுத்தியது. 

"காசு பிரச்சினையல்லையடா..எல்லாரும் வரோணும்.. எல்லாரையும் பார்த்து எவ்வளவு காலமாச்சடா..." மறுமுனையில் உற்சாகம் உணர்ச்சி வசப்பட்டது.

"வருவாங்களடா.. 25 பேர் வந்தாலே.. வெற்றி தான்டா.." ஊத்தைவாளி அடக்கி வாசித்தது.

"அதுசரி.. நீ உன்ட மனிசியிடம் permission வாங்கி விட்டீயா" மறுமுனை ஊத்தைவாளியை மாவீரனாக்க பார்த்தது.

"இனித்தான் மச்சான்.. கால்ல கையில விழுந்தாவது வருவேன்டா.. சரி.. நகுவிற்கு கோல் அடிக்கோணும்.. நீ காசு அனுப்பு" உணர்ச்சி வசப்பட்ட ஊத்தைவாளி, கதையை மாற்றி, தொடர்பை துண்டித்தது.

அந்த திங்கட்கிழமை 15 பேரிடமிருந்தும்  $100 deposit கிடைக்க, உற்சாகமாக கோலாலம்பூர் கொண்டாட்ட விபரங்கள் ஈமெயிலூடாகவும் FB ஊடாகவும் அறிவிக்கப்பட்டன. கனடாவிற்கு நகுவும் லண்டனிற்கு ஜித்தும் இலங்கைக்கு அருளும் நிதிதிரட்டும் பொறுப்பை சுமக்க, எல்லோரும் எல்லாரையும் தொடர்பெடுத்து "KLக்கு வாடா மச்சான்" சொன்னாங்கள். 

டொக்டர் ஜெய்மன் கிளுகிளுப்பான போஸ்டர் வடிவமைக்க, ரமோ எழுதிய இளமையான வரிகளிற்கு சிக்காகோ சிறி துள்ளலாக இசையமைத்து பாடல் வெளியிட, டொக்டர் கோபியின் கவிதையில் கண்ணீர் எட்டி பார்க்க, 53 இளைஞர்கள் களம் காண வீறுடன் கோலாலம்பூர் புறப்பட்டார்கள்.


June 6, 2013 வியாழக்கிழமை 

கோலாலம்பூர் இஸ்தானா ஹோட்டலை யாழ்ப்பாண தமிழும், அமெரிக்க, கனேடிய, லண்டன், ஒஸ்ரேலிய வாடையுடன் ஆங்கிலமும் பேசிய எங்கட பொடியள் ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினவனை இறுக்க கட்டிபிடித்து வரவேற்று நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார்கள். ரமோ கண்ணும் கருத்துமாக, எல்லோரையும் அவரவர்களிற்கு ஒதுக்கப்பட்ட அறைகளிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். 

எந்தப் பக்கம் திரும்பினாலும் சிரிப்பும் மகிழ்ச்சியும் மடைதிறந்தோடியது. அநேகமானோர் வந்திறங்கிவிட, நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இஸ்தானாவின் அழகிய courtyardல் பின்னேரம் 4.00 மணிக்கு
ஆரம்பமானது.  சாத்தான்களோடு ஒன்றாக படித்த பாவத்திற்கு விமோசனம் தேட தேவ ஊழியம் செய்யும், பார்வைவலு குறைந்த போதகர் ஸ்டீபன் அருளம்பலத்தின் உணர்வுபூர்வமான ஜெபம், கண்களை ஈரமாக்கியது. ஸ்டீபனை கொழும்பிலிருந்து அழைத்து வந்து அவனை பராமரித்ததில் அருள்மொழி பெரும்பங்கு வகித்தான். 


ஸ்டீபனின் ஜெபித்தை தொடர்ந்து, தேசத்திற்காய் இன்னுயிரை அர்ப்பணித்த சிவக்குமரன் (சேரலாதன்) மற்றும் உதயதாஸ் (புகழவன்), ஈபிகாரன்களின் துப்பாக்கிச்சுட்டில் பலியான கஜேந்திரன் (கொல்லர்), விபத்தில் பலியான நிஷாந்தன் (நீக்ரோ) ஆகியோரை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தினோம். கல்லூரி கீதத்தை பார்த்து பாடி முடி முடிய,  ஆதி தலைமையில் ஒன்றுகூடிய பத்துபேர் Hakka நடனமாடி, SJC 92ன் 40th Birthday Bashஐ அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தார்கள்.

ஆட்டம் தொடரும்...


கோலாலம்பூர் குதூகலம் 2

No comments:

Post a Comment