Friday, 24 June 2016

மீண்டும் மீட்பர் (சிறுகதை 2)வெள்ளை நிற அரைக்கை ஷேர்ட்டும் கறுப்பு நிற ட்ரவுசரும் அணிந்த மீட்பரும் அவரது பன்னிரு தளபதிகளும் மேடையில் ஏற,  கரகோஷமும் உற்சாக குரல்களும் அரங்கத்தை அதிர வைத்தன. மீட்பரின் குழுவில் மீட்பரிற்கு அருகில் நின்ற வயதான ஓருவர் மட்டும் நீல நிறத்தில் ஷேர்ட் அணிந்திருந்தார். 


மீட்பரின் கண்கள் அரங்கில் பறந்து கொண்டிருந்த சிங்கக் கொடியை நோக்கிய மறுகணம், அதை அகற்ற அவரது தளபதிகளில் ஒருவர் அரங்கின் முகப்பில் ஏறிக்கொண்டிருந்தார். கொடியோடு, சிரிக்கும் ரணிலின் படமும் கீழிறங்க, மீண்டும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. 


மீட்பரிற்கு வலப்பக்கம் சிரித்த முகத்துடன் இருந்தவர், தான் அணிந்திருந்த Headset Micல் பேச தொடங்கினார். மீட்பரின் பின்னால், ஆஜானுபாகுவான இருவர் விறைப்பாக நின்றிருந்தார்கள். புன்முறுவலுடன் பேசத்தொடங்கிய மீட்பரின் வலதுகரமானவர், "இந்த மண்ணில் இடம்பெற்ற தாயக மீட்புப்போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்துவோம்" என்றார்.


"அகவணக்கம் என்றால் என்ன ?" பக்கத்தில் நின்ற பெரியவரிடம், சாந்த கேட்க, அவர் தனது ஒரு விரலை உதட்டில் வைத்து மெளனாமாயிருக்கும்படி காட்டி விட்டு தனது விழிகளை மூடி விறைப்பாக நின்றார். சாந்தவிற்கு அதன் அர்த்தம் புரிய, அவனும் அகவணக்கத்தில் இணைந்தான். அரங்கத்தின் நிசப்தத்தில் உணர்வுகள் நிறைந்திருந்தன.


அகவணக்கம் முடிய, Bluetoothல் ஒலித்த குரலை கேட்ட சாந்தவிற்கு மெய்சிலிர்த்தது. "என் அன்பான தமிழ் மக்களே, இந்த நாள் எமது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.." என்று தொடங்கி, தனக்கு முன்னால் விரிந்த சிறிய டிஜிட்டல் திரையை பார்த்து உரையாற்ற தொடங்கிய மீட்பரின் குரல் மிருதுவாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது. 


மீட்பருடன் வந்திருந்த வயதானவர் மேடையில் கதிரை ஒன்றில் அமர்ந்திருந்து மீட்பரின் உரையை உன்னிப்பாக கவனிக்க, மேடையின் வலப்பக்க மூலையில் நின்ற உயரம் குறைந்த கறுவலான தளபதி வானத்தையே பார்த்து கொண்டிருந்தார்.


"இற்றைக்கு நூறாண்டுகளிற்கு முன்னர், இந்த மண்ணில் எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று, இன்று, உலக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது" என்று மீட்பர் அறிவிக்க, அரங்கமே ஓவென்று சத்தமாக குரல் எழுப்பி அழத்தொடங்கியது. 


"என்ர அப்பனே முருகா... நல்லூரானே.. என்ர தெய்வமே" என்று கதறியழுத கிழவி, சாந்தவை அரவணைத்த கணத்தில் சாந்தவின் விழிகளில் கண்ணீர் பிரவாகித்தது. மேடையின் இடப்பக்க மூலையில் நின்ற உயரமான சிவலை தளபதி கூட்டத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததார்.


3005ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபை என்ற அமைப்பு கலைக்கப்பட்டு, உலகின் வல்லமை வாய்ந்த நாடுகள் இணைந்து புதிதாக உலக அரசு (Global Government) எனும் அமைப்பை நிறுவியிருந்தன. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைத்தது, மத்திய கிழக்கில் நிகழ்ந்த அநியாயங்களை தடுக்காமை, ஜரோப்பாவில் நிகழ்ந்த பாரிய பொருளாதார சரிவுக்கு வழிகோலியது, ஜப்பான் மீது சீனா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை கண்டிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜநா பொதுமன்றம் செயலிழக்க, அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, இஸ்ரேல், ஈரான் மற்றும் ஒஸ்ரேலியா தலைமையில் உலக அரசாங்கம் எனும் சர்வதேச அமைப்பு மலர்ந்திருந்தது. 


புதியதாக அமைக்கப்பட்ட உலக அரசின் முதற்பணிகளில் ஒன்றாக இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பபட்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டது. நான்காண்டுகள் நடந்த விசாரணை முடிவில், தமிழர்கள் மீது சிங்கள அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது, இனப்படுகொலை தான் என்று நிறுவப்பட்டது. 


"எனது உயிரிலும் மேலான உறவுகளே" மீட்பரின் குரல் தழுதழுத்தது. "இன்று எங்கள் மேல் ஒரு வரலாற்று கடமை சுமத்தப்பட்டுள்ளது" அரங்கத்தில் உறுதி நிறைந்த அமைதி குடிகொண்டது. "உலக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்போவதாக எமது அமைப்பிற்கு இன்று காலை உறுதி வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் இணையத்தளங்களில் வெளிவரும்" மீட்பர் கூறி முடிக்க முன்னரே சனம் ஆரவாரிக்க தொடங்கியது. 


"எதிர்வரும் கார்த்திகை மாதம் 27ம் நாள், எமது தாயகத்திலும் வெளிநாடுகளில் வதியும் எமது உறவுகளிற்குமான ஒரு கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும். இந்த வாக்கெடுப்பு நாங்கள், இந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள், பிரிந்து சென்று எமக்கென்றொரு தனியரசு அமைக்க வழிகோலும் " மீட்பர் பேசிக் கொண்டிருக்க மண்டைதீவு கரையோரத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த நீல நிற கொடியுடன் இராணுவ படகுகள் பண்ணை கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன.


உலக அரசாங்கம் விடுத்த ஆணைக்கமைய சிரிலங்காவின் ஆயுதப்படைகள் தமது முகாம்களில் முடக்கப்பட்டுள்ளதாகவும், சமாதானத்தை நிலைநிறுத்தி சுமூகமாக கருத்தறியும் வாக்கெடுப்பை நடாத்த, தமது அமைப்பின் மனப்பூர்வமான ஆதரவுடன் உலக அரசாங்கத்தின் படையணிகள் தமிழர் தாயகப்பிரதேசத்தில் நிலைகொள்ளும் என்றும் மீட்பர் உரையாற்றி முடித்தார். 


நினைவு நிகழ்வு முடிந்து மீண்டும் பருத்தித்துறை செல்ல பேரூந்தில் ஏறிய சாந்த, Facebookல் தனது பெயரை மாற்றினான்

Santhan Kumarasingham.. 

Nஜயும் ம் Mஜயும் type பண்ணும் பெருமிதப்பட்டவன்,  தமிழிலும் தனது பெயரை பதிவேற்றினான்.

சாந்தன் குமாரசிங்கம் !

நிகழ்வு முடிந்து வரும்போது கொடுக்கப்பட்ட T'shirtஐ அணிந்து ஒரு selfie எடுத்து அதை தனது profile pic ஆக மாற்றிக் கொண்டான். 

அந்த டீஷேர்ட்டின் வாசகம் தமிழனின் வரலாற்றை பறைசாற்றது.


No comments:

Post a Comment