Friday, 10 June 2016

கோலாலம்பூர் குதூகலம் 2


கோலாலம்பூர் கொண்டாட்டத்திற்கு KL Birthday Bash என்று பெயர் சூட்டப்பட்டது. பரி யோவான் கல்லூரியின் சிவப்பு கறுப்பு நிறத்திலான சிறப்பு T'Shirt அடிக்கும் பொறுப்பு அருள்மொழியின் தலையில் சுமத்தப்பட்டது. கோலாலம்பூர் வரும் இளவல்களிற்கு நான்கே நான்கு கென்டிஷன் மட்டும் விதிக்கப்பட்டது. 


முதலாவது கென்டிஷன், ஆளுக்கொரு Scotch போத்தல் கொண்டு வரவேண்டும், அதுவும் Black Label அல்லது Glenfiddich மட்டும். சிரிலங்கன் பழஞ்சாராயம், ஒஸ்ரேலியன் wine, லண்டனிலிருந்து JD, கனடாவிலிருந்து Cognac எல்லாம் கொண்டுவர வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லியும், சில அன்புள்ளங்கள் அதையும் கொண்டுவந்து பரவசப்படுத்தினார்கள். "No bottle, No entry" என்ற இந்த முதலாவது நிபந்தனை கடுமையாக அமுல்படுத்தப்பட்டது. கேணல் ஆதியும் சத்தி மாஸ்டரும் இருந்த அறையில் போத்தலை ஒப்படைத்தவர்களிற்கு மட்டும் தான் சிறப்பு T'Shirt கையளிக்கப்பட்டது. 


இரண்டாவது கென்டிஷன், கோலாலம்பூர் கொண்டாட்டம் பசங்களுக்கு மட்டுமே, Strictly for Boys only. அதாவது பிள்ளை குட்டி, மனிசி, காதலி என்று யாரையும் காவிக்கொண்டோ கூட்டிக்கொண்டோ, கோலாலம்பூர் மாநகர எல்லைக்குள் நுழையக் கூடாது. குடும்பத்தோடு வந்த சிக்காகோ சிறி, இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு, மனிசியையும் பிள்ளைகளையும் சிங்கப்பூரில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.


மூன்றாவது கென்டிஷன், வியாழக்கிழமையிலிருந்து  3 நாட்களிற்கு Facebookல் நிகழ்வு சம்பந்தமான எந்த படங்களோ பதிவுகளோ பதிவேற்றக்கூடாது. No Facebook என்ற இந்த நிபந்தனையை அனைவரும் முழு மனதுடன் நடைமுறைப்படுத்தினார்கள். iPhoneலும் Nikonலும் பதிவேற்றிய படங்கள் அந்த மூன்று நாளும் முகநூலில் பதிவேற்றப்படவேயில்லை. 


நான்காவதும் முக்கியமானதுமான கென்டிஷன், What happens in KL, stays in KL. இன்றுவரை இந்த  கென்டிஷன் கடைப்பிடிக்கப்படுகிறது என்று நம்புவோமாக. இந்த பதிவு எழுதிறதும் இந்த நிபந்தனையை மீறும் போர்குற்றம் என்று குற்றம் சுமத்த ஒரு கூட்டம் ஜெனீவா நோக்கி புறப்படும். உள்ளக விசாரணையை எதிர்கொள்வது பெரிய பிரச்சினை இல்லைதானே.


-------------------------------------------------------------------------------------------------

கோலாலம்பூரின் தலைசிறந்த தாய் உணவகமான Rama Vயில் வியாழக்கிழமை இரவுக்கான விருந்து ஒழுங்கு செய்யப்பட்டது. எங்களை ஏற்றிச் செல்ல வேண்டிய பஸ், கோலாலம்பூரின் வாகன நெரிசலில் சிக்க, தூறிக்கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் நடு ரோட்டில் நின்ற பஸ்ஸில் ஏறினோம். பஸ்ஸின் பின் சீட்டை ஓடிப்போய் பிடித்த டொக்டர் கோபி, "அடிடா மச்சான் மேளத்தை" என்று சொல்லிவிட்டு, பாட்டு பாட தொடங்கினான். 

"காலங்களில் அவள் வசந்தம்"

ரமோவுடன் பகிர்ந்த எனது அறைக்கு திரும்ப வந்து உடுப்பை மாற்றிவிட்டு வெளில வர, சாரம் அணிந்த சிலர் எங்களுடைய அறைக்குள் புகுந்தார்கள். "என்னடா மச்சான்" என்று கேட்க, "நாங்க இரவிரவா 304 விளையாடப் போறம்" என்றார்கள். லிப்டில் இறங்கி கீழே வந்தால் Cappuccinoவும் Latteயும் குடித்து கொண்டு "she is playing nicely" என்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு Piano வாசிக்கும் சீனத்து பைங்கிளியின் இசையை (?) வேறு சிலர் ரசித்து கொண்டிருந்தார்கள். 


புரூஸ் சுதாவை கூப்பிட அவனின் அறைக்கதவை தட்டினால், டுபாய் கணேஷ்குமாரின் குறட்டை கதவுக்கு வெளியே கேட்டது. ஹோட்டலின் பெரிய கண்ணாடி கதவைத் தாண்டி வெளியே வர, வாழ்வை அனுபவித்து வாழத்தெரிந்த கொசப்பு கூட்டம் நிற்குது. 

என் இனமே என் சனமே !

"மச்சான், என்னமாதிரி, எங்கேயடா போகப் போறாய்" வலு அக்கறையாய் விசாரித்தான் டிலாஷ் மாமா. 

"எ...எ..எனக்கு கோ கோ கோலாலம்பூர் தெரியாதுடா" நா நா நாக்கு நர்த்தனமாடியது.

"Don't worry.. These are your choices" கனேடிய இங்கிலீஷ் கோலாலம்பூரில் தவிழ்ந்தது.

"சொல்லுடா".. பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்த பாடத்தை கூட இவ்வளவு கவனமாக கேட்டதில்லை.

"அவங்கள் மின்னல் night clubற்கு போறாங்கள், இவங்கள் beach clubற்கு போறாங்கள்.. ரெண்டும் பிடிக்காட்டி, சிக்காகோ சிறியோடு Bollywood club போ" டிலாஷ் மாமாடா.

"மச்சான்.. எனக்கு மூன்றுக்கும் போகணுமடா" பம்மினேன்.

----------------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக்கிழமை காலை, Port Dickson எனும் இடத்திலிருந்த resortற்கு மீண்டும் பஸ்ஸில் பயணித்தோம். சிவப்பு கறுப்பு T'Shirt அணிந்த வண்டிகளும் தொந்திகளும் இருக்கைகளை ஆக்கிரமிக்க, பாட்டு கச்சேரி களைகட்டியது. இடையில் பஸ்ஸிலிருந்த ஒலிவாங்கியை கைப்பற்றிய நந்தீஸ், பாடசாலை வகுப்பு registerஐ அதே ஒழுங்கில் ஒப்புவித்து, ஒவ்வொருவரை பற்றியும் ஓரிரு வரிகள் சொல்லி நனவிடை தோய்தலை அரங்கேற்றினான்.


Port Dickson கடற்கரையில் எல்லோருமாக நின்று குறூப் படம் எடுத்த கணம் கலாதியானது. எல்லோரும் மாறி மாறி தங்கட கமராவையும் ஃபோனையும் கொடுத்து அந்த அற்புத கணத்தை பதிவு செய்தார்கள். அந்த கணத்திற்காகவே, அன்று காலை மலேசியாவில் வந்திறங்கிய கிரிஷாந்தன், சந்தோஷத்தில் ஏதோ கத்திக் கொண்டே இருந்தான். 


கொஞ்ச பேர் swimming poolல் நீந்திக்கொண்டே கடிபட, உடலை திடமாய் வைத்திருந்தவர்கள், வெறுமேலோடு மைதானத்தில் soccer விளையாடினார்கள். கோபி கொண்டு வந்திருந்த றால் பொரியலும் மரை வத்தலும் சூடேற்றப்பட்டு, swimming poolல் மிதந்தவர்களிற்கு ஜனாவும் அம்மானும் பரிமாறினார்கள். தண்ணியில் மிதந்து கொண்டு மரை வத்தலை மென்று கொண்டு தண்ணியடிக்க...ப்பா.. சொர்க்கம் மலேசியாவில் இருப்பதாக நம்பினோம்.வெள்ளிக்கிழமை இரவும் அதே சாரம் உடுத்திய 304 காரன்கள், Latte குடிக்கும் பால்குடிகள், வாழத்தெரிந்த கொசப்பர்கள் கடந்து வந்து போனோம். 

---------------------------------------------------------------------------------------------------------

சனிக்கிழமை காலை Battuk Cave முருகனிடம் ஆசி பெற்றோம். ஆதி மட்டும் முருகனை விட்டு விட்டு, வந்திருந்த வெள்ளைக்கார தேவயானிகளோடு படம் எடுத்து எல்லோருடைய வயிற்றெரிச்சலையும் கிளப்பினான். ஏஞ்சல் பஸ் ஓட்டுனரின் சீட்டில் அமர்ந்து ஃபிலிம் காட்ட, நந்தீஸ் பஸ்ஸின் ஒலிவாங்கியில் எமது கல்லூரிக் கால நினைவுகளை நினைவூட்டிக் கொண்டேயிருந்தான். 


சனியிரவு, எங்கட யாழ்ப்பாணப் பெடியன்களால் நடாத்தப்படும் Aliya Restaurantன் மேல்மாடி எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் SJC 92 என்ற இலச்சினை பொறிக்கப்பட்ட Cakeஓடும் நாங்கள் பாவித்த போத்தல்களோடும் ஒவ்வொருவருக்கும் தனித்தனிய படம் எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கேர்ஷன் மட்டும் போத்தல்களோடு படம் எடுக்க மாட்டேன் என்று பிகு பண்ணினான், நல்லவராம். 
எங்கட DJ Swamyயை பாட்டு போடு என்று விட, அவன் சூப்பர் சிங்கர் போட்டி வைத்து நிகழ்வை கலகலப்பாக்கினான். நடுவர்களாக செயல்பட்ட என்ஜினியர் ரவிச்சந்திரனும் என்ஜினியர் நவத்தாரும், நிரூபனிற்கு சிறந்த பாடகருக்கான விருதை அளித்தார்கள். பாட்டுப் போட்டி முடிந்தாப்பிறகும், மைக் பிடித்து சிலர் பாட வெளிக்கிட, டென்ஷனான சத்தி மாஸ்டர் DJ Swamayயின் காதில் ஏதோ சொன்னான். உடனடியாக, மைக்கை கைப்பற்றிய DJ Swamy, அரங்கத்தை அதிர வைக்கும் இசையை ஒலிக்க விட்டான்.


கணாவும் ஏஞ்சலும் போட்டிக்கு ஆட, மற்றப் பக்கத்தால யாழ்ப்பாண ஒடியல் கூழ் entreக்கு பரிமாறப்பட்டது. அருளின் தொப்பையும் வாதுலனின் வண்டியும் Belly Dance ஆட, டிலாஷ் மாமா சிலுக்கு டான்ஸ் ஆடினான். என்றுமே ஆடாத சஞ்சீவனும் களத்தில் இறங்க, சிறிபிரகாஷ் தன்னுடைய நாட்டிய கலையை உலகிற்கு வெளிக்காட்டினார். அந்த இரவு எவ்வாறு கழிந்தது என்று யாருக்குமே தெரியவில்லை, DJ Swamyயின் அட்டகாச இசை அனைவரையும் ஆடவைத்தது.
வாழ்வில் என்றுமே மறக்க முடியாத மூன்று நாட்களின் இறுதி பஸ் பயணம் மீண்டும் ஹோட்டலை நோக்கி புறப்பட மழை தூவி எங்களை வாழ்த்தியது. வேலைப் பளுவையும் குடும்ப பாரத்தையும் மறந்து, பம்பலடித்து திரிந்த பாடசாலை நண்பர்களுடன் கழித்த இனிய பொழுதுகள் மனதை ஆக்கிரமிக்க பஸ் நகரத்தொடங்கியது. கடைசி சீட்டில் கோபி, பாட்டு கோஷ்டியை மீண்டும் வழிநடத்திக்கொண்டிருந்தான்.  மூன்றாவது நாளாக மேளம் கணாவின் கையில் அடி வாங்கிக் கொண்டிருந்தது. 


"மச்சான்மார்.. ஹோட்டல் கிட்ட வந்திட்டுது.. இது தான் கடைசி பாட்டு.. கவனமா ஊர் போய் சேருங்கடா" கோபியின் குரல் தழுதழுத்தது.

"பசுமை நிறைந்த நினைவுகளே 
பாடித் திரிந்த பறவைகளே 
பழகிக் களித்த தோழர்களே 
பறந்து செல்கின்றோம்"

வரிகளை வாழ்ந்து கழித்த மகிழ்வுடன் கண்களில் ஈரத்துடன் ஆளை ஆள் ஆரத்தழுவி விடை பெற்றோம்.. மீண்டுமொருமுறை சந்திப்போம் என்ற அசையாத உறுதியுடன்.


No comments:

Post a Comment