Thursday, 30 June 2016

கபாலிடா...அடிக்கிற மெல்பேர்ண் கடுங்குளிரையே அடங்க வைக்கிறது கபாலி படத்தின் பாடல், நெருப்புடா . காலங்காத்தால காரில் படர்ந்திருக்கும் பனியையே உருக வைக்கும் சூட்டை கிளப்பும் பாடல், நெருப்புடா. நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றி, மயிர்கூச்செரியும் நிலையை அடைய வைக்கும் சந்தோஷ் நாராயணணின், டுவைங் டுவைங் கிடார் இசையிலமைந்த கபாலியின் theme song, நெருப்புடா. பாடலின் இடையில் வரும் ரஜினிகாந்தின் காந்தக் குரல், கொளுந்து விட்டெரியும் பாடலுக்கு இன்னும் தீ மூட்டிகிறது. 

"விடுதலை அடை
விடையென நினை
பயத்தையே முறை 
பகல் கனவை உடை"

தளபதி படத்தில் இடம்பெறும் "இது சூர்யா சார், உரசாதீங்க"  என்ற மணிரத்தினத்தின் ஒற்றை வசனமும், அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் படிகளில் மேலேறி, "மலைடா.. அண்ணாமலைடா" என்று  படிகளில் கீழிறங்கிய சரத்பாபுவை பார்த்து கர்ஜிக்கும் வசனமும் தான் நெருப்புடா பாடல் வரிகளின் கரு என்கிறார், இந்தப் பாடலை எழுதி பாடியிருக்கும் அருண் ராஜா காமராஜ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 41 வருட திரைத்துறை வரலாற்றில், முதல் முறையாக பாடலெழுதி பாடிய பெருமையை அருண் ராஜா காமராஜ் பெறுகிறார். 

"நான் வந்துட்டேன்னு சொல்லு
திரும்ப வந்துட்டேன்னு"


1975ம் ஆண்டு பாலச்சந்தரின் அபூர்வராகங்களில், கேட்டை உதைத்து திறந்து கொண்டு தமிழ் சினிமாவில் புயலென புகுந்த ரஜினிகாந்த், 70களின் இறுதியிலுருந்து 90களின் மத்தி வரை வருடத்திற்கு பத்து இருபது என படங்கள் நடித்து வந்தார். தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் சேனையையே உருவாக்கிய ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில், அரசியல் நுழைவு எனும் தேவையற்ற பில்டப், வேகத்தடையாக அமைந்தது. 

"பயமா... ஹ ஹ ஹ ஹ"


1995ல் நக்மா என்ற சொதப்பல் கதாநாயகி நடித்தும், பாட்ஷா திரைப்படத்தை தமிழ்த்திரையுலகின் இன்னுமொரு மாபெரும் வெற்றிப்படமாக்கியது ரஜினிகாந்த்-சுரேஷ் கிருஷ்ணா-பாலகுமாரன் கூட்டணிதான். அதே ஆண்டில் ரவிக்குமாரின் இயக்கத்தில் க்யூட் மீனாவோடு ரஜினிகாந்த் தில்லாலானா தில்லானா ஆட, படம் தியேட்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது. பாட்ஷாவின் மாபெரும் வெற்றியும் முத்துவில் ரஜினி பேசிய வசனங்களும் அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்க, ரஜினிகாந்த் இமையமலைக்கு ஓடினார். 

"எப்படி போனேனோ
அப்படியே வந்திட்டேன்னு
சொல்லு... கபாலிடா"


மலையிறங்கி வந்து, ரம்பாவோடு நடித்த அருணாச்சலம் அம்போ என்றாக, மீண்டும் வனவாசம். 1999ல் ரவிக்குமாரின் படையப்பாவில், சிவாஜி கணேசன் மற்றும் "நீலாம்பரி" ரம்யா கிருஷ்ணாவுடன் மீளவதாரம் எடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படையப்பாவின் வெற்றி புத்துயிரளித்தது. படையப்பா வெற்றிக்களிப்பில் மூன்றாடுகள் ஓய்வெடுத்துவிட்டு 2002ல், ரஜினிகாந்த் பாபா அவதாரம் எடுக்க, சனம் பெப்பே காட்டி அனுப்பியது. 

"பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே"


இன்னுமொரு மூன்றாடுகள் கழித்து 
ஜோதிகாவுடன் சந்திரமுகியில் லக்க லக்க என்று கலக்கினார் ரஜினிகாந்த். சந்திரமுகியில் ரஜினிகாந்தோடு கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசி நயன்தாராவும் முக்திபேறடைந்தார். அந்த ஆண்டே குசேலனில், ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்தாலும், படம் முழுக்க வியாபித்திருந்தார். குசேலனில் ரஜினியின் முன்னாள் நாயகி மீனா, அம்மா வேடம் தரிக்க,  இந்நாள் நாயகி நயன்தாரா வடிவேலுவின் மீசையை நிமிரத்தினார்.

"வலி தீர்க்கும் வலியாய்
வாஞ்சை தர வா"


2007ல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்திலும் சுஜாதாவின் வசனத்திலும் சிவாஜியில் பழைய ரஜினியை மீண்டும் பார்த்தோம். சிவாஜி படத்திற்கு ஸ்ரேயா கண்ணூறு கழிக்க, மொட்டை பாஸாக ரஜினி அதகளமாடினார். பல்லேலக்காவிற்கு நயன்தாரா தோன்றி கண்களை குளிர்வித்தார்.

"நெஞ்சமெல்லாம் வண்ணம் பல
வண்ணம் ஆகுதே
கண்களெல்லாம் இன்பம் கூடி
கண்ணீர் ஆகுதே"


சிவாஜியில் ஸ்ரேயாவை போட்டதற்கு பிராயச்சித்தமாக, 2010ல் எந்திரனில் ஷங்கர், ஜஸ்வர்யா ராயை ரஜினியோடு இணைக்க, காதல் அணுக்களை கிளிமஞ்சரோவில் ரஹ்மான் எண்ண வைத்தார். வில்லன் ரஜினி, மூன்று முடிச்சை ஞாபகப்பபடுத்த "maah maah..black sheep" காட்சி YouTubeல் 12 மில்லியன் க்ளிக் வாங்கியது. 2011ல் ரஜினிகாந்த் சுகவீனமடைய, இன்னுமொரு ரஜினி படமில்லாத மூன்று கொடிய வருடங்கள்.

"நதியென நான் ஓடோடி
கடலினை தினம் தேடினேன்"


2014ல் கார்ட்டூன் ரஜினியை ரசிகர்கள் வெறுத்தொதுக்க, அவசர அவசரமாக அதே ஆண்டில் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் லிங்காவில் நடித்தார். அனுஷ்காவும் சொனாக்ஷியும் பலூன் சண்டையும் லிங்காவை கவிழ்க்க, இமயமலை ரஜினியை மீண்டும் அழைத்தது. 

"ஏமாறும் காலம் 
இனி வேண்டாமடி
கை சேரடி....
வானம் பார்த்தேன்"

2016ல் கபாலி... இரண்டே இரண்டு படங்களை இயக்கிய, இளைய தலைமுறை இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், இளமை கொஞ்சும் ராதிகா ஆப்தேயோடு ஜோடி போட்டுக்கொண்டு அதே ரஜினிகாந்த். மலேசியா கதையின் களமாக, அதே அரண பழைய தாதா கதை. ஆனால் இந்த முறை ரஜினி படத்தை தரப்போவது இளைய தலைமுறை ரஜினிகாந்த் ரசிகர்கள். இசையமைப்பிலிருந்து, பாடியவர்கள் தொடக்கம் நடிகர்கள் வரை எல்லோருமே சூப்பர் ஸ்டாரை எட்ட நின்று பார்த்து மலைத்தவர்கள். மலைத்து நின்றவர்கள் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத மலையுடன் இணைந்து படைக்கும் படைப்பு, கபாலி. 

"கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காது"


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் பூஜை போட்ட நாளிலிருந்து உருவாக்கும் அதிர்வு, படம் ஓடி வருடங்கள் கடந்தும் ஓயாது. ரஜினிகாந்த் படங்கள் தன்னிலை மறந்து ரசிகர்களை உள்வாங்கும் வல்லமை வாய்ந்தவை. திரையில் தோன்றும் ரஜினிகாந்தோடு படம் பார்க்கும் ரசிகன் ஒன்றிப் போய்விடுவான். ரஜினிகாந்த் தோன்றும் அந்த முதல் காட்சியில், கமராவை நோக்கி ஒரு வணக்கமோ சலூட்டோ ஏன் ஒரு பார்வையையோ வீச, படம் பார்க்கப்போன ரசிகன் தன்னை மறந்து திரைக்குள் ஈர்க்கப்படுவான். 


"When you watch a Rajini movie, you let you go of yourself. If you could somehow peel your eyes from the screen and watch others in the theatre silently you will realise everybody...male, female, young, old alike will have a smile on their face, connecting to the hero on the screen" 
Kushboo in "The Name is Rajinikanth

ரஜினிகாந்த் எனும் சூப்பர் ஸ்டாரை, வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரத்தை, நடிகனாக மட்டும் பார்க்கும் கோடானு கோடி ரசிகர்களில் அடியேனும் அடக்கம். ரஜினிகாந்த் எனும் மனிதர், திரைக்கு வெளியே தமிழீழத்திற்கு கொடி பிடித்தாரா, காவேரிக்கு அணை கட்டினாரா, நயன்தாராவிற்கு கல்யாணம் கட்டி வைத்தாரா என்ற ஆராய்ச்சியை ஜேகேயின் கந்தசாமியிடம் விட்டு விட்டு, இன்னுமொரு first day first show ரஜினிகாந்த் படம் பார்க்க நாங்க தயார்.

மேகம் பார்த்து
பூமி கேட்க 
நான் பாடினேன்

மகிழ்ச்சி ❗️பின்னூட்டம்  1 :
ஐசே, படம் எப்ப வருமாம் ❓
எருமைக்கும் பொறுமை வேணும், ஐசே.


பின்னூட்டம்  2 :
அண்ணே, சிங்களத்தில் கபாலி டீசர் டப்பிங் செய்யப்பட்டது பற்றிய உங்கள் கருத்து ?

சதுடுய் (மகிழ்ச்சி).Friday, 24 June 2016

மீண்டும் மீட்பர் (சிறுகதை 2)வெள்ளை நிற அரைக்கை ஷேர்ட்டும் கறுப்பு நிற ட்ரவுசரும் அணிந்த மீட்பரும் அவரது பன்னிரு தளபதிகளும் மேடையில் ஏற,  கரகோஷமும் உற்சாக குரல்களும் அரங்கத்தை அதிர வைத்தன. மீட்பரின் குழுவில் மீட்பரிற்கு அருகில் நின்ற வயதான ஓருவர் மட்டும் நீல நிறத்தில் ஷேர்ட் அணிந்திருந்தார். 


மீட்பரின் கண்கள் அரங்கில் பறந்து கொண்டிருந்த சிங்கக் கொடியை நோக்கிய மறுகணம், அதை அகற்ற அவரது தளபதிகளில் ஒருவர் அரங்கின் முகப்பில் ஏறிக்கொண்டிருந்தார். கொடியோடு, சிரிக்கும் ரணிலின் படமும் கீழிறங்க, மீண்டும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. 


மீட்பரிற்கு வலப்பக்கம் சிரித்த முகத்துடன் இருந்தவர், தான் அணிந்திருந்த Headset Micல் பேச தொடங்கினார். மீட்பரின் பின்னால், ஆஜானுபாகுவான இருவர் விறைப்பாக நின்றிருந்தார்கள். புன்முறுவலுடன் பேசத்தொடங்கிய மீட்பரின் வலதுகரமானவர், "இந்த மண்ணில் இடம்பெற்ற தாயக மீட்புப்போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்துவோம்" என்றார்.


"அகவணக்கம் என்றால் என்ன ?" பக்கத்தில் நின்ற பெரியவரிடம், சாந்த கேட்க, அவர் தனது ஒரு விரலை உதட்டில் வைத்து மெளனாமாயிருக்கும்படி காட்டி விட்டு தனது விழிகளை மூடி விறைப்பாக நின்றார். சாந்தவிற்கு அதன் அர்த்தம் புரிய, அவனும் அகவணக்கத்தில் இணைந்தான். அரங்கத்தின் நிசப்தத்தில் உணர்வுகள் நிறைந்திருந்தன.


அகவணக்கம் முடிய, Bluetoothல் ஒலித்த குரலை கேட்ட சாந்தவிற்கு மெய்சிலிர்த்தது. "என் அன்பான தமிழ் மக்களே, இந்த நாள் எமது வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.." என்று தொடங்கி, தனக்கு முன்னால் விரிந்த சிறிய டிஜிட்டல் திரையை பார்த்து உரையாற்ற தொடங்கிய மீட்பரின் குரல் மிருதுவாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது. 


மீட்பருடன் வந்திருந்த வயதானவர் மேடையில் கதிரை ஒன்றில் அமர்ந்திருந்து மீட்பரின் உரையை உன்னிப்பாக கவனிக்க, மேடையின் வலப்பக்க மூலையில் நின்ற உயரம் குறைந்த கறுவலான தளபதி வானத்தையே பார்த்து கொண்டிருந்தார்.


"இற்றைக்கு நூறாண்டுகளிற்கு முன்னர், இந்த மண்ணில் எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று, இன்று, உலக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது" என்று மீட்பர் அறிவிக்க, அரங்கமே ஓவென்று சத்தமாக குரல் எழுப்பி அழத்தொடங்கியது. 


"என்ர அப்பனே முருகா... நல்லூரானே.. என்ர தெய்வமே" என்று கதறியழுத கிழவி, சாந்தவை அரவணைத்த கணத்தில் சாந்தவின் விழிகளில் கண்ணீர் பிரவாகித்தது. மேடையின் இடப்பக்க மூலையில் நின்ற உயரமான சிவலை தளபதி கூட்டத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததார்.


3005ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபை என்ற அமைப்பு கலைக்கப்பட்டு, உலகின் வல்லமை வாய்ந்த நாடுகள் இணைந்து புதிதாக உலக அரசு (Global Government) எனும் அமைப்பை நிறுவியிருந்தன. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைத்தது, மத்திய கிழக்கில் நிகழ்ந்த அநியாயங்களை தடுக்காமை, ஜரோப்பாவில் நிகழ்ந்த பாரிய பொருளாதார சரிவுக்கு வழிகோலியது, ஜப்பான் மீது சீனா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை கண்டிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜநா பொதுமன்றம் செயலிழக்க, அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, இஸ்ரேல், ஈரான் மற்றும் ஒஸ்ரேலியா தலைமையில் உலக அரசாங்கம் எனும் சர்வதேச அமைப்பு மலர்ந்திருந்தது. 


புதியதாக அமைக்கப்பட்ட உலக அரசின் முதற்பணிகளில் ஒன்றாக இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பபட்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டது. நான்காண்டுகள் நடந்த விசாரணை முடிவில், தமிழர்கள் மீது சிங்கள அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது, இனப்படுகொலை தான் என்று நிறுவப்பட்டது. 


"எனது உயிரிலும் மேலான உறவுகளே" மீட்பரின் குரல் தழுதழுத்தது. "இன்று எங்கள் மேல் ஒரு வரலாற்று கடமை சுமத்தப்பட்டுள்ளது" அரங்கத்தில் உறுதி நிறைந்த அமைதி குடிகொண்டது. "உலக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்போவதாக எமது அமைப்பிற்கு இன்று காலை உறுதி வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் இணையத்தளங்களில் வெளிவரும்" மீட்பர் கூறி முடிக்க முன்னரே சனம் ஆரவாரிக்க தொடங்கியது. 


"எதிர்வரும் கார்த்திகை மாதம் 27ம் நாள், எமது தாயகத்திலும் வெளிநாடுகளில் வதியும் எமது உறவுகளிற்குமான ஒரு கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும். இந்த வாக்கெடுப்பு நாங்கள், இந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள், பிரிந்து சென்று எமக்கென்றொரு தனியரசு அமைக்க வழிகோலும் " மீட்பர் பேசிக் கொண்டிருக்க மண்டைதீவு கரையோரத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த நீல நிற கொடியுடன் இராணுவ படகுகள் பண்ணை கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன.


உலக அரசாங்கம் விடுத்த ஆணைக்கமைய சிரிலங்காவின் ஆயுதப்படைகள் தமது முகாம்களில் முடக்கப்பட்டுள்ளதாகவும், சமாதானத்தை நிலைநிறுத்தி சுமூகமாக கருத்தறியும் வாக்கெடுப்பை நடாத்த, தமது அமைப்பின் மனப்பூர்வமான ஆதரவுடன் உலக அரசாங்கத்தின் படையணிகள் தமிழர் தாயகப்பிரதேசத்தில் நிலைகொள்ளும் என்றும் மீட்பர் உரையாற்றி முடித்தார். 


நினைவு நிகழ்வு முடிந்து மீண்டும் பருத்தித்துறை செல்ல பேரூந்தில் ஏறிய சாந்த, Facebookல் தனது பெயரை மாற்றினான்

Santhan Kumarasingham.. 

Nஜயும் ம் Mஜயும் type பண்ணும் பெருமிதப்பட்டவன்,  தமிழிலும் தனது பெயரை பதிவேற்றினான்.

சாந்தன் குமாரசிங்கம் !

நிகழ்வு முடிந்து வரும்போது கொடுக்கப்பட்ட T'shirtஐ அணிந்து ஒரு selfie எடுத்து அதை தனது profile pic ஆக மாற்றிக் கொண்டான். 

அந்த டீஷேர்ட்டின் வாசகம் தமிழனின் வரலாற்றை பறைசாற்றது.


Thursday, 16 June 2016

மீண்டும் மீட்பர் (சிறுகதை)
மே 18, 2109


ஓடக்கரை வீதி, 
பருத்தித்துறை,  
யாப்பாபடுன மாவட்டம், 
ரஜரட்ட பிராந்தியம் 
சிரிலங்கா


"அம்மே.. டக் சொல்லி என்ட சாப்பாட்டை தென்ட.. வெலாவ போகுது" சாந்த அவசரப்படுத்தினான். குசினிக்குள் சாந்தவின் அம்மா கீதா குமாரசிங்க,  அவனது lunch boxஜ தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.


"தம்பி, போக முதல் அம்மப்பாட படத்தை Facebookல் போட்டு அகவணக்கம் status போட்டிட்டு  போடா" சாந்தவின் அம்மப்பாவான மேஜர் சாந்தன், இற்றைக்கு நூறாண்டுகளிற்கு முன்னர் தமிழர் படையில் போராடி மரணித்தவர். தன்னுடைய தகப்பனார் சாந்தனின் ஞாபகமாக தான் தன்னுடைய மகனிற்கு சாந்த என்று பெயரிட்டிருந்தாள் கீதா. 


சாந்தன் என்று தமிழ் பெயர் வைக்க பயத்தில் "ன்"ஐ வெட்டி எறிந்து விட்டு நல்லிணக்க திருவிழாவில் சங்கமமாகிய தமிழர்களில் கீதாவும் ஒருத்தி. கீதாவின் கணவன் குமாரசிங்கமும், "ம்"க்கு விடை கொடுத்து விட்டு குமாரசிங்க ஆகியதால் தான் அவனிற்கு பருத்தித்துறை நகரசபையில் வேலை கிடைத்தது. 


"அம்மே, சரியா ஆறு மணிக்கு பட்டங்கண்ணவாலு" 2009ல் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நாளின் நூற்றாண்டு நினைவுநாளில் பங்குபற்றதான் சாந்த பதறியடித்து புறப்பட்டு கொண்டிருந்தான். யாப்பாபடுன ரணில் திறந்தவெளி அரங்கில் இடம்பெறும் நினைவு நாளில் தமிழர்களை மீட்க மீண்டும் அவதரித்திருக்கும் மீட்பர் பங்குபற்ற போவதாக அரசல் புரசலாக செய்தி பரவியிருந்தது. 


"இப்பவாவது இவனுக்கு இன உணர்வு வந்ததே, பாட்டனின் ரத்தம் எங்க போறது" கீதா முணுமுணுத்தது சாந்தவிற்கு கேட்டது. சாந்தவின் backpackல் lunchbox ஓடு, தண்ணிப் போத்தலும் Coke canம் வைத்து zip buttonஐ அமத்த, backpack மூடிக்கொண்டது.


"அம்மே, நான் போய்ட்டு என்னங்" கையசைத்து விட்டு, வாசலில் வந்து நின்ற மஞ்சள் நிற பேரூந்தில் ஏறிக்கொண்டான் சாந்த. நினைவுநாளிற்கு யாப்பாபடுன போக பருத்தித்துறையிலிருந்து போவோருக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு பேரூந்து சாந்தவையும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. மஞ்சள் நிற பேரூந்தின் பின்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களை பார்த்த கீதா அதிர்ந்து போனாள்

த.போ.க

-----------------------------------

இற்றைக்கு ஜம்பதாண்டுகளிற்கு முன்னர் இருந்த வட மாகாண சபையை, வட மத்திய மாகாணத்துடன் இணைத்து ரஜரட்ட பிராந்தியம் உருவாக்கப்பட்ட பின்னர், நல்லிணக்க முயற்சியாக தமிழ் பெயர்கள் ஒரே தேசிய மொழியான சிங்களத்தில் உள்வாங்கப்பட்டன. தமிழர்கள் சிங்களம் படிக்க வேண்டும் என்று அன்றிருந்த வடமாகாண முதலமைச்சர் ஊக்குவித்தது, இந்த முயற்சிக்கு பேருதவியாக இருந்தது. 


யாழ்ப்பாணம் யாப்பாபடுனவாக மாற, பருத்தித்துறை மட்டும் தப்பி பிழைத்தது. பாணந்துறை என்பது சிங்கள பெயர் என்றால் பருத்தித்துறையும் சிங்கள பெயர் தான் என்று வாதாடிய சாணக்கிய அரசியல்வாதியால், பருத்தித்துறையின் பெயர் மட்டும் தப்பிப் பிழைத்தது. 


பருத்தித்துறை வீதியால் பயணித்த பேரூந்து, யாப்பாபடுன விசாகா வித்தாயாலத்தடியில் நிறுத்தப்பட்டது. சாந்த பேரூந்திலிருந்து இறங்கி யாப்பாபடுன ஆனந்தா கல்லூரியை கடந்து நடந்தான். கடந்த வாரம் இடம்பெற்ற, வேம்படி மகளிர் கல்லூரி விசாகா வித்தாயாலமாகவும் மத்திய கல்லூரி ஆனந்தா கல்லூரியாகவும் பெயர் மாறிய வெள்ளிவிழா கொண்டாட்ட பதாகைகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தன. 


யாப்பாபடுனவின் மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி மகிந்த, மைத்ரி, சந்திரிக்கா எனும் மூன்று சனாதிபதிகளின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. "அந்த காலத்தில் நாங்க Big Match பார்க்க போகும் போது அந்த இடத்தில சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் என்ற தமிழ் மன்னர்களின் சிலை இருந்ததடா" என்று சாந்தவின் அப்பா குமாரசிங்க சொன்னது அவனிற்கு நினைவிலைகளில் வந்து சென்றது. 


மங்கள ஞாபகார்த்த பொது நூலகத்திற்கு அருகில் ரணில் திறந்தவெளி அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எப்படியாவது இன்று மீட்பரை பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தான் சாந்த. தன்னுடைய அம்மப்பாவின் காலத்தில் அவதரித்த முந்தைய மீட்பரின் வழிநடத்தலில் அம்மப்பா உட்பட பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்து போராடிய கதையை அம்மே அவனுக்கு ஆயிரம் தடவை சொல்லியிருப்பா.


"அம்மே.. அம்மே என்று கூப்பிடாதே.. அம்மா என்று கூப்பிடுடா" என்று கீதா பல சமயங்களில் அன்பாகவும் சில சமயங்களில் அடித்து சொல்லியும் அவளை அம்மே என்று தான் சாந்த அழைத்தான். பள்ளிக்கூட பாடப்புத்தகம் எல்லாம் அம்மே என்று இருக்க, ஊரில் எல்லா பிள்ளைகளும் அம்மே என்று கூப்பிட, TVயில் காட்டிற "சரத்தும் மீனாவும்" சீரியலிலும் அவங்கள் அம்மே என்று கதைக்க, அம்மேயை அம்மா என்று கூப்பிட நானென்ன "மோடயாவா" என்று ஒரு விறுமத்தில் திரிந்தான் சாந்த. 


Backpackல் தொங்கிய தனது earphoneஜ காதில் மாட்டிய சாந்த, சுற்றி ஒருமுறை பார்த்தான். நிகழ்வு முழுவதும் Bluetooth earphone மூலாமாக தான் ஒலிபரப்பப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒலிபெருக்கிகளை மீட்பரின் அமைப்பு தடைசெய்திருந்தது. நிகழ்வு ஆரம்பமாக இன்னும் 20 நிமிடங்களே இருக்க, கூட்டத்திற்குள் புகுந்து நெருக்கியடித்துக் கொண்டு அரங்கத்தின் அண்மையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சாந்தவின் earphoneல் ஒலித்த பாடல், அவனது மண்டைக்குள் ஏதோ செய்தது. 

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"

1990களில் வெளியான இளையராஜா என்ற இசையமைப்பாளரின் பாடல் என்று முகவுரை தந்திருந்தார் அறிவிப்பாளர். அந்த பாடல் வரிகளின் அர்த்தம் முழுமையாக சாந்தவிற்கு புரியாவிட்டாலும், அந்த பாடலில் கலந்திருந்த ஒருவித தெய்வீகத்தனம் அவனை ஏதோ செய்தது.


"வீட்ட போனதும், அம்மேயை.. ச்சீ.. அம்மாவை அம்மா என்று கூப்பிடோணும்" உறுதி பூண்டுகோண்டே, அரங்கத்தின் முன்வரிசைக்கு வந்து விட்டான். Backpackஜ திறந்து Cokeஜ எடுத்து ஒரு மிடாய் குடித்துக் கொண்டிருக்க, அறிவிப்பாளர் அடுத்த பாடலை ஒலிக்க விட்டிருந்தார்.

"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே"


பொக்கற்றுக்குள் வைத்திருந்த சின்ன துவாயை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு நிமிர்ந்து அரங்கத்தின் முகட்டை பார்த்த சாந்தவிற்கு, அரங்கத்தின் முகப்பில் சிரித்து கொண்டிருந்த சிரிக்கும் ரணிலின் படமும் பிரமாண்டமான சிங்கக்கொடியும் ஏனோ அந்நியமாய் தெரிய ஆரம்பித்த வேளையில், earphoneல் அறிவிப்பாளர் முழங்கினார்

"இதோ மீட்பர் வந்து கொண்டிருக்கிறார், அவரோடு அவரின் பன்னிரு தளபதிகளும் வருகிறார்கள்"

தொடரும்...

Friday, 10 June 2016

கோலாலம்பூர் குதூகலம் 2


கோலாலம்பூர் கொண்டாட்டத்திற்கு KL Birthday Bash என்று பெயர் சூட்டப்பட்டது. பரி யோவான் கல்லூரியின் சிவப்பு கறுப்பு நிறத்திலான சிறப்பு T'Shirt அடிக்கும் பொறுப்பு அருள்மொழியின் தலையில் சுமத்தப்பட்டது. கோலாலம்பூர் வரும் இளவல்களிற்கு நான்கே நான்கு கென்டிஷன் மட்டும் விதிக்கப்பட்டது. 


முதலாவது கென்டிஷன், ஆளுக்கொரு Scotch போத்தல் கொண்டு வரவேண்டும், அதுவும் Black Label அல்லது Glenfiddich மட்டும். சிரிலங்கன் பழஞ்சாராயம், ஒஸ்ரேலியன் wine, லண்டனிலிருந்து JD, கனடாவிலிருந்து Cognac எல்லாம் கொண்டுவர வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லியும், சில அன்புள்ளங்கள் அதையும் கொண்டுவந்து பரவசப்படுத்தினார்கள். "No bottle, No entry" என்ற இந்த முதலாவது நிபந்தனை கடுமையாக அமுல்படுத்தப்பட்டது. கேணல் ஆதியும் சத்தி மாஸ்டரும் இருந்த அறையில் போத்தலை ஒப்படைத்தவர்களிற்கு மட்டும் தான் சிறப்பு T'Shirt கையளிக்கப்பட்டது. 


இரண்டாவது கென்டிஷன், கோலாலம்பூர் கொண்டாட்டம் பசங்களுக்கு மட்டுமே, Strictly for Boys only. அதாவது பிள்ளை குட்டி, மனிசி, காதலி என்று யாரையும் காவிக்கொண்டோ கூட்டிக்கொண்டோ, கோலாலம்பூர் மாநகர எல்லைக்குள் நுழையக் கூடாது. குடும்பத்தோடு வந்த சிக்காகோ சிறி, இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு, மனிசியையும் பிள்ளைகளையும் சிங்கப்பூரில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.


மூன்றாவது கென்டிஷன், வியாழக்கிழமையிலிருந்து  3 நாட்களிற்கு Facebookல் நிகழ்வு சம்பந்தமான எந்த படங்களோ பதிவுகளோ பதிவேற்றக்கூடாது. No Facebook என்ற இந்த நிபந்தனையை அனைவரும் முழு மனதுடன் நடைமுறைப்படுத்தினார்கள். iPhoneலும் Nikonலும் பதிவேற்றிய படங்கள் அந்த மூன்று நாளும் முகநூலில் பதிவேற்றப்படவேயில்லை. 


நான்காவதும் முக்கியமானதுமான கென்டிஷன், What happens in KL, stays in KL. இன்றுவரை இந்த  கென்டிஷன் கடைப்பிடிக்கப்படுகிறது என்று நம்புவோமாக. இந்த பதிவு எழுதிறதும் இந்த நிபந்தனையை மீறும் போர்குற்றம் என்று குற்றம் சுமத்த ஒரு கூட்டம் ஜெனீவா நோக்கி புறப்படும். உள்ளக விசாரணையை எதிர்கொள்வது பெரிய பிரச்சினை இல்லைதானே.


-------------------------------------------------------------------------------------------------

கோலாலம்பூரின் தலைசிறந்த தாய் உணவகமான Rama Vயில் வியாழக்கிழமை இரவுக்கான விருந்து ஒழுங்கு செய்யப்பட்டது. எங்களை ஏற்றிச் செல்ல வேண்டிய பஸ், கோலாலம்பூரின் வாகன நெரிசலில் சிக்க, தூறிக்கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் நடு ரோட்டில் நின்ற பஸ்ஸில் ஏறினோம். பஸ்ஸின் பின் சீட்டை ஓடிப்போய் பிடித்த டொக்டர் கோபி, "அடிடா மச்சான் மேளத்தை" என்று சொல்லிவிட்டு, பாட்டு பாட தொடங்கினான். 

"காலங்களில் அவள் வசந்தம்"

ரமோவுடன் பகிர்ந்த எனது அறைக்கு திரும்ப வந்து உடுப்பை மாற்றிவிட்டு வெளில வர, சாரம் அணிந்த சிலர் எங்களுடைய அறைக்குள் புகுந்தார்கள். "என்னடா மச்சான்" என்று கேட்க, "நாங்க இரவிரவா 304 விளையாடப் போறம்" என்றார்கள். லிப்டில் இறங்கி கீழே வந்தால் Cappuccinoவும் Latteயும் குடித்து கொண்டு "she is playing nicely" என்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு Piano வாசிக்கும் சீனத்து பைங்கிளியின் இசையை (?) வேறு சிலர் ரசித்து கொண்டிருந்தார்கள். 


புரூஸ் சுதாவை கூப்பிட அவனின் அறைக்கதவை தட்டினால், டுபாய் கணேஷ்குமாரின் குறட்டை கதவுக்கு வெளியே கேட்டது. ஹோட்டலின் பெரிய கண்ணாடி கதவைத் தாண்டி வெளியே வர, வாழ்வை அனுபவித்து வாழத்தெரிந்த கொசப்பு கூட்டம் நிற்குது. 

என் இனமே என் சனமே !

"மச்சான், என்னமாதிரி, எங்கேயடா போகப் போறாய்" வலு அக்கறையாய் விசாரித்தான் டிலாஷ் மாமா. 

"எ...எ..எனக்கு கோ கோ கோலாலம்பூர் தெரியாதுடா" நா நா நாக்கு நர்த்தனமாடியது.

"Don't worry.. These are your choices" கனேடிய இங்கிலீஷ் கோலாலம்பூரில் தவிழ்ந்தது.

"சொல்லுடா".. பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்த பாடத்தை கூட இவ்வளவு கவனமாக கேட்டதில்லை.

"அவங்கள் மின்னல் night clubற்கு போறாங்கள், இவங்கள் beach clubற்கு போறாங்கள்.. ரெண்டும் பிடிக்காட்டி, சிக்காகோ சிறியோடு Bollywood club போ" டிலாஷ் மாமாடா.

"மச்சான்.. எனக்கு மூன்றுக்கும் போகணுமடா" பம்மினேன்.

----------------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக்கிழமை காலை, Port Dickson எனும் இடத்திலிருந்த resortற்கு மீண்டும் பஸ்ஸில் பயணித்தோம். சிவப்பு கறுப்பு T'Shirt அணிந்த வண்டிகளும் தொந்திகளும் இருக்கைகளை ஆக்கிரமிக்க, பாட்டு கச்சேரி களைகட்டியது. இடையில் பஸ்ஸிலிருந்த ஒலிவாங்கியை கைப்பற்றிய நந்தீஸ், பாடசாலை வகுப்பு registerஐ அதே ஒழுங்கில் ஒப்புவித்து, ஒவ்வொருவரை பற்றியும் ஓரிரு வரிகள் சொல்லி நனவிடை தோய்தலை அரங்கேற்றினான்.


Port Dickson கடற்கரையில் எல்லோருமாக நின்று குறூப் படம் எடுத்த கணம் கலாதியானது. எல்லோரும் மாறி மாறி தங்கட கமராவையும் ஃபோனையும் கொடுத்து அந்த அற்புத கணத்தை பதிவு செய்தார்கள். அந்த கணத்திற்காகவே, அன்று காலை மலேசியாவில் வந்திறங்கிய கிரிஷாந்தன், சந்தோஷத்தில் ஏதோ கத்திக் கொண்டே இருந்தான். 


கொஞ்ச பேர் swimming poolல் நீந்திக்கொண்டே கடிபட, உடலை திடமாய் வைத்திருந்தவர்கள், வெறுமேலோடு மைதானத்தில் soccer விளையாடினார்கள். கோபி கொண்டு வந்திருந்த றால் பொரியலும் மரை வத்தலும் சூடேற்றப்பட்டு, swimming poolல் மிதந்தவர்களிற்கு ஜனாவும் அம்மானும் பரிமாறினார்கள். தண்ணியில் மிதந்து கொண்டு மரை வத்தலை மென்று கொண்டு தண்ணியடிக்க...ப்பா.. சொர்க்கம் மலேசியாவில் இருப்பதாக நம்பினோம்.வெள்ளிக்கிழமை இரவும் அதே சாரம் உடுத்திய 304 காரன்கள், Latte குடிக்கும் பால்குடிகள், வாழத்தெரிந்த கொசப்பர்கள் கடந்து வந்து போனோம். 

---------------------------------------------------------------------------------------------------------

சனிக்கிழமை காலை Battuk Cave முருகனிடம் ஆசி பெற்றோம். ஆதி மட்டும் முருகனை விட்டு விட்டு, வந்திருந்த வெள்ளைக்கார தேவயானிகளோடு படம் எடுத்து எல்லோருடைய வயிற்றெரிச்சலையும் கிளப்பினான். ஏஞ்சல் பஸ் ஓட்டுனரின் சீட்டில் அமர்ந்து ஃபிலிம் காட்ட, நந்தீஸ் பஸ்ஸின் ஒலிவாங்கியில் எமது கல்லூரிக் கால நினைவுகளை நினைவூட்டிக் கொண்டேயிருந்தான். 


சனியிரவு, எங்கட யாழ்ப்பாணப் பெடியன்களால் நடாத்தப்படும் Aliya Restaurantன் மேல்மாடி எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் SJC 92 என்ற இலச்சினை பொறிக்கப்பட்ட Cakeஓடும் நாங்கள் பாவித்த போத்தல்களோடும் ஒவ்வொருவருக்கும் தனித்தனிய படம் எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கேர்ஷன் மட்டும் போத்தல்களோடு படம் எடுக்க மாட்டேன் என்று பிகு பண்ணினான், நல்லவராம். 
எங்கட DJ Swamyயை பாட்டு போடு என்று விட, அவன் சூப்பர் சிங்கர் போட்டி வைத்து நிகழ்வை கலகலப்பாக்கினான். நடுவர்களாக செயல்பட்ட என்ஜினியர் ரவிச்சந்திரனும் என்ஜினியர் நவத்தாரும், நிரூபனிற்கு சிறந்த பாடகருக்கான விருதை அளித்தார்கள். பாட்டுப் போட்டி முடிந்தாப்பிறகும், மைக் பிடித்து சிலர் பாட வெளிக்கிட, டென்ஷனான சத்தி மாஸ்டர் DJ Swamayயின் காதில் ஏதோ சொன்னான். உடனடியாக, மைக்கை கைப்பற்றிய DJ Swamy, அரங்கத்தை அதிர வைக்கும் இசையை ஒலிக்க விட்டான்.


கணாவும் ஏஞ்சலும் போட்டிக்கு ஆட, மற்றப் பக்கத்தால யாழ்ப்பாண ஒடியல் கூழ் entreக்கு பரிமாறப்பட்டது. அருளின் தொப்பையும் வாதுலனின் வண்டியும் Belly Dance ஆட, டிலாஷ் மாமா சிலுக்கு டான்ஸ் ஆடினான். என்றுமே ஆடாத சஞ்சீவனும் களத்தில் இறங்க, சிறிபிரகாஷ் தன்னுடைய நாட்டிய கலையை உலகிற்கு வெளிக்காட்டினார். அந்த இரவு எவ்வாறு கழிந்தது என்று யாருக்குமே தெரியவில்லை, DJ Swamyயின் அட்டகாச இசை அனைவரையும் ஆடவைத்தது.
வாழ்வில் என்றுமே மறக்க முடியாத மூன்று நாட்களின் இறுதி பஸ் பயணம் மீண்டும் ஹோட்டலை நோக்கி புறப்பட மழை தூவி எங்களை வாழ்த்தியது. வேலைப் பளுவையும் குடும்ப பாரத்தையும் மறந்து, பம்பலடித்து திரிந்த பாடசாலை நண்பர்களுடன் கழித்த இனிய பொழுதுகள் மனதை ஆக்கிரமிக்க பஸ் நகரத்தொடங்கியது. கடைசி சீட்டில் கோபி, பாட்டு கோஷ்டியை மீண்டும் வழிநடத்திக்கொண்டிருந்தான்.  மூன்றாவது நாளாக மேளம் கணாவின் கையில் அடி வாங்கிக் கொண்டிருந்தது. 


"மச்சான்மார்.. ஹோட்டல் கிட்ட வந்திட்டுது.. இது தான் கடைசி பாட்டு.. கவனமா ஊர் போய் சேருங்கடா" கோபியின் குரல் தழுதழுத்தது.

"பசுமை நிறைந்த நினைவுகளே 
பாடித் திரிந்த பறவைகளே 
பழகிக் களித்த தோழர்களே 
பறந்து செல்கின்றோம்"

வரிகளை வாழ்ந்து கழித்த மகிழ்வுடன் கண்களில் ஈரத்துடன் ஆளை ஆள் ஆரத்தழுவி விடை பெற்றோம்.. மீண்டுமொருமுறை சந்திப்போம் என்ற அசையாத உறுதியுடன்.


Friday, 3 June 2016

கோலாலம்பூர் குதூகலம்

June 5, 2013 புதன்கிழமை இரவு
மெல்பேர்ண் சர்வதேச விமான நிலையம்

யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு உயர்தர பிரிவினரின் (SJC 92) 40வது பிறந்ததாள் கொண்டாட்டத்திற்கு, கோலாலம்பூர் நோக்கி பயணிக்கும் ஒஸ்ரேலிய படையணி அணித்திரள தொடங்கியது. சிட்னியிலிருந்து சிறப்பு விமானத்தில் சத்தி மாஸ்டர் வந்திறங்கவும் மெல்பேர்ண் குறூப் விமானநிலையத்தை அடையவும் கணக்காக இருந்தது. கன்பராவிலிருந்து பறந்துவந்த கணாவின் விமான
சுணங்கி இறங்கியது. Air Asiaவில் Check-in முடித்துவிட்டு, விமான நிலையத்தின் McDonaldsல் Glenfiddchம் Cokeம் கலக்க, "Cheers மச்சான்", ஆட்டம் தொடங்கியது. 


அதேநேரம் வெள்ளவத்தையிலிருந்து சிறப்பு Rosa மினிபஸ், கொழும்பாரையும் யாழ்ப்பாணிகளையும், லண்டன் கனடாவிலிருந்து வந்திருந்த சில புலம்பெயர் தமிழர்களையும் ஏற்றிக்கொண்டு கொட்டகேன ஊடாக கொழும்பு விமான நிலையம் நோக்கி புறப்படுவதாக Facebookல் status வந்தது. ஜந்து நாட்களிற்கு முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்ட ஷெல்டனோடு, மட்டக்களப்பு இறால் பொரியல், மன்னார் மரை வத்தல், புலோலியூர் புழுக்கொடியல், பலாலி பயிற்றம் பணியாரம்,  பருத்தித்துறை வடை எல்லாம் வாகனத்தின் பின்பக்கத்தில் ஏற்றப்பட்டன. 


முதல் நாளிரவு, ரெக்கி பார்க்க அனுப்பப்பட்ட வேவு அணியின் சிறப்பு தளபதிகள் கேணல் ஆதியும் டிலாஷ் மாமாவும் கோலாலம்பூர் ஹோட்டல் இஸ்தானாவின் சுற்றுபுறங்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். ரமோ மட்டும் ஹோட்டலையும் அறைகளையும் படம்பிடித்து FBல் போட்டு, கடும் இங்கிலீஷில் ஏதோ எழுதினான், யாருக்கும் விளங்கவில்லை. டொரோன்டோ, சிக்காகோ, டுபாய், புரூணாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் மாவட்ட தாக்குதல் பிரிவுகள் விமானத்தில் ஏறிவிட்டோம் என்று தகவல் பரிமாறினார்கள். 

KL here we come !


ஒரு வருடத்திற்கு முன்...

1990 ஜூலை மாதம் கல்லூரி வளாகத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளை பெற வந்தபோது சந்தித்தது தான் நம்மில் பலர் ஒருவரை ஒருவர் கடைசியாக சந்தித்தது. திலீபனின் மூன்றாவது நினைவு நாளான 26 செப்டெம்பர் 1990ல் தளபதி பானு யாழ்ப்பண கோட்டையில் கொடியேற்றிய,  மறுகிழமை,  Open Pass உபயத்தில், எம்மில் பலர் கொம்படிவெளி தாண்டினோம். 


கொழும்பில் பலர் அடைக்கலம் தேட, சிலர் டொரோன்டோ, லண்டன், பிரிஸ்பேர்ண், சிட்னி என்று பறந்தார்கள். உன்னதமான நோக்கத்திற்காக மறவர்களோடு இணைந்து எங்களின் சிவகுமரனும் (சேரலாதன்) களமாட, நாங்கள் குற்ற உணர்வுடன் தப்பியோடினோம். தாயக மீட்பிற்கான புனித போரில், எங்களின் நட்பும் ஆகுதியாகியது. 


2009ல் யுத்தம் முடிய, மீண்டும் நாங்கள் ஒன்றுகூட நல்ல பெடியன்கள் சிலர் எடுத்த இரு முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. பாடசாலை ஆசிரியர்களுக்கு பண உதவி செய்வது, யாழ் ஆஸ்பத்திரி புனருத்தாரணம் உட்பட உன்னத செயற்திட்டங்கள் அடங்கிய அவர்களின் நன்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. 

2012ல் இரு ஊத்தைவாளிகள் தங்களுக்குள் கதைத்து ஒரு ஸ்கெட்ச் போட்டாங்கள். தமிழிற்கு ஆடிமாதம் தொடங்க முதல், ஒரு சனிக்கிழமை, தெரிந்தெடுத்த பிற 15 ஊத்தைவாளிகளை தொலைபேசியில் தொடர்பெடுத்தார்கள்.

"மச்சான்.. எப்பிடிடா இருக்கிறாய்" ஸ்கெட்ச் போட்ட ஊத்தைவாளி.

"ஏதோ இருக்கிறன் மச்சான்.. Life is going on" மறுமுனை  அலுத்து கொண்டது.

"டேய்.. அடுத்த வருஷம் ஜூன் 6ம் திகதி பம்பலடிக்க நாங்க மலேசியா போவோமா.. எங்கட 40 வேற வருது" ஊத்தைவாளி தூண்டில் போட்டான்.

"Sounds great மச்சான்..எத்தனை நாள்.. என்ன ப்ரோக்ராம்" மறுமுனையில் உற்சாகம் பீறிட தொடங்கியது.

"மூன்று நாள்.. ப்ரோகிராம்....போறம், சாப்பிடுறம், தண்ணியடிக்கிறம், பம்பலிடிக்கிறம், திரும்ப வாறம்" ஊத்தைவாளி தாக்குதல் திட்டத்தை விபரித்தது.

"நான் வாறன்டா" மறுமுனையில் உற்சாகம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

"மனிசிட்ட கேட்க தேவையில்லையோ..மச்சி" ஊத்தைவாளி யதார்த்தத்தின் குரலாய்
ஒலித்தது.

"ஓ... ஓ...ஓமென்ன" மனிசி என்ற ஒற்றைச்சொல்லை கேட்டதும், பீறிட்ட உற்சாகம் ஆடி அடங்க, மறுமுனை கிசுகிசுத்தது "நான் எப்படியும் வருவன்டா.. அவவை நான் சமாளித்திடுவன்" சரண் அடைவதற்கு சமாளிப்பு எனும் புதிய வரைவிலக்கணம் தந்தது மறுமுனை.

"சரி... அப்ப.. வெளிநாட்டுகாரன்களுக்கு கொஞ்சம் கூட தான் charge பண்ணோணும்.. அப்பதான் யாழ்ப்பாண பெடியளை குறைந்த செலவில் கூப்பிடலாம்....முதலில் ஒரு $100 Deposit.. தா.. PayPal விபரம் அனுப்புறன்.. நாளைக்கு அனுப்பு.. அப்ப தான் உன்ட பெயர் லிஸ்டில் வரும்.. கையில காசு வாயில தோசை.." ஊத்தைவாளி புக்கிங்கை உறுதிப்படுத்தியது. 

"காசு பிரச்சினையல்லையடா..எல்லாரும் வரோணும்.. எல்லாரையும் பார்த்து எவ்வளவு காலமாச்சடா..." மறுமுனையில் உற்சாகம் உணர்ச்சி வசப்பட்டது.

"வருவாங்களடா.. 25 பேர் வந்தாலே.. வெற்றி தான்டா.." ஊத்தைவாளி அடக்கி வாசித்தது.

"அதுசரி.. நீ உன்ட மனிசியிடம் permission வாங்கி விட்டீயா" மறுமுனை ஊத்தைவாளியை மாவீரனாக்க பார்த்தது.

"இனித்தான் மச்சான்.. கால்ல கையில விழுந்தாவது வருவேன்டா.. சரி.. நகுவிற்கு கோல் அடிக்கோணும்.. நீ காசு அனுப்பு" உணர்ச்சி வசப்பட்ட ஊத்தைவாளி, கதையை மாற்றி, தொடர்பை துண்டித்தது.

அந்த திங்கட்கிழமை 15 பேரிடமிருந்தும்  $100 deposit கிடைக்க, உற்சாகமாக கோலாலம்பூர் கொண்டாட்ட விபரங்கள் ஈமெயிலூடாகவும் FB ஊடாகவும் அறிவிக்கப்பட்டன. கனடாவிற்கு நகுவும் லண்டனிற்கு ஜித்தும் இலங்கைக்கு அருளும் நிதிதிரட்டும் பொறுப்பை சுமக்க, எல்லோரும் எல்லாரையும் தொடர்பெடுத்து "KLக்கு வாடா மச்சான்" சொன்னாங்கள். 

டொக்டர் ஜெய்மன் கிளுகிளுப்பான போஸ்டர் வடிவமைக்க, ரமோ எழுதிய இளமையான வரிகளிற்கு சிக்காகோ சிறி துள்ளலாக இசையமைத்து பாடல் வெளியிட, டொக்டர் கோபியின் கவிதையில் கண்ணீர் எட்டி பார்க்க, 53 இளைஞர்கள் களம் காண வீறுடன் கோலாலம்பூர் புறப்பட்டார்கள்.


June 6, 2013 வியாழக்கிழமை 

கோலாலம்பூர் இஸ்தானா ஹோட்டலை யாழ்ப்பாண தமிழும், அமெரிக்க, கனேடிய, லண்டன், ஒஸ்ரேலிய வாடையுடன் ஆங்கிலமும் பேசிய எங்கட பொடியள் ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினவனை இறுக்க கட்டிபிடித்து வரவேற்று நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார்கள். ரமோ கண்ணும் கருத்துமாக, எல்லோரையும் அவரவர்களிற்கு ஒதுக்கப்பட்ட அறைகளிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். 

எந்தப் பக்கம் திரும்பினாலும் சிரிப்பும் மகிழ்ச்சியும் மடைதிறந்தோடியது. அநேகமானோர் வந்திறங்கிவிட, நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இஸ்தானாவின் அழகிய courtyardல் பின்னேரம் 4.00 மணிக்கு
ஆரம்பமானது.  சாத்தான்களோடு ஒன்றாக படித்த பாவத்திற்கு விமோசனம் தேட தேவ ஊழியம் செய்யும், பார்வைவலு குறைந்த போதகர் ஸ்டீபன் அருளம்பலத்தின் உணர்வுபூர்வமான ஜெபம், கண்களை ஈரமாக்கியது. ஸ்டீபனை கொழும்பிலிருந்து அழைத்து வந்து அவனை பராமரித்ததில் அருள்மொழி பெரும்பங்கு வகித்தான். 


ஸ்டீபனின் ஜெபித்தை தொடர்ந்து, தேசத்திற்காய் இன்னுயிரை அர்ப்பணித்த சிவக்குமரன் (சேரலாதன்) மற்றும் உதயதாஸ் (புகழவன்), ஈபிகாரன்களின் துப்பாக்கிச்சுட்டில் பலியான கஜேந்திரன் (கொல்லர்), விபத்தில் பலியான நிஷாந்தன் (நீக்ரோ) ஆகியோரை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தினோம். கல்லூரி கீதத்தை பார்த்து பாடி முடி முடிய,  ஆதி தலைமையில் ஒன்றுகூடிய பத்துபேர் Hakka நடனமாடி, SJC 92ன் 40th Birthday Bashஐ அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தார்கள்.

ஆட்டம் தொடரும்...


கோலாலம்பூர் குதூகலம் 2