Thursday, 26 May 2016

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்
இரு வேறு நிலங்களை பற்றிய இரு புத்தகங்களை வாசித்தனுபவம் வித்தியாசமானது. முதலாவது புத்தகம், சிந்துவெளி என்று அறியப்பட்ட மெலூஹா என்ற, இன்றைய இந்தியா பற்றியது. உலகின் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய அற்புதமான சூர்யவம்சிகளின் சாம்ராஜ்ஜியம் பற்றியது அமிஷ் எழுதிய "மெலூஹாவின் அமரர்கள்".  அமிஷ் ஒரு வங்கியியலாளராக இருந்து எழுத்தாளராக மாறியவர், இது அவரின் முதல் புத்தகம். 
இராமபிரானிற்கு பிற்பட்ட காலத்தில் சூர்யவம்சிகளின் எதிரிகளான, சந்திரவம்சிகளிடமிருந்தும் அவர்களுடன் கைகோர்த்த அற்புத சக்திகள் படைத்த நாகர்களிடமிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கும் சூர்யவம்சிகளை காப்பாற்ற அவதாரம் எடுக்கும் சிவபெருமான் எனும் கற்பனை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது "மெலூஹாவின் அமரர்கள்" நாவலின் கதைக்களம்.

"தீமை தலைவிரித்தாடும் போது, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள், இனி போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும் போது ஒரு வீரன் வருவான்"


அவ்வாறான ஒரு காவிய புருஷன் நிஜமாகவே நம்மத்தியில் பிறந்து வாழ்ந்த எமது தாயக நிலம் பற்றியது பிரான்ஸிஸ் அமல்ராஜின் "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". பிரபாகரன் ஒரு வரலாற்று விபத்து, என்கிறான் நண்பன் ரஜீஷன். சாதி ரீதியாக, பிரதேசவாரியாக, மத ரீதியாக, வர்க்க ரீதியாக பிளவுண்டு கிடக்கும் தமிழ் இனத்தில் பிறந்த வரலாற்று விபத்து பிரபாகரன் என்று ரஜீஷன் உரத்து சொல்கிறான். 


அடிமைத்தனத்தை துடைத்தெறிய வீறுகொண்டெழுந்த ஒரு சிறுபான்மையினத்தை, அதன் எதிரிகளோடு, உலகின் அதீத பலம்பொருந்திய வல்லரசுகள் கைகோர்த்து தோற்கடித்த வரலாற்றின் பதிவு "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". 

"ஒரு சமூகத்தின் துன்பியல் வடுக்களை எழுத்துக்களாக விட்டுச்செல்லும் ஏடுகள் நாளைய அந்த சமூகத்தின் காத்திரமான வரலாற்றை தோற்றுவிக்க ஏதுவாக அமைகின்றன".கொடிய இறுதி யுத்தத்தின் போதும் அந்த பாழாய்ப்போன யுத்தம் முடிந்த பின்னரும் அவலப்படும் அன்றாட மனிதர்களை பற்றிய, இன்றைய எமது தாயக மண்ணின்  நிலைக்கண்ணாடி "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". சர்வதேச தொண்டு நிறவனமொன்றில் பணியாற்றும் போது தான் சந்தித்த மண்ணின் மனிதர்களின் கதையை மிகைப்படுத்தாமல் உணர்வுகள் மாறாமல் பதிவு செய்திருக்கிறார் அமல்ராஜ்.

"இரத்தக் கறை காய்ந்து, வெள்ளையாகி, ஆரவாரமின்றி அம்மணமாய் கிடக்கும் மணலைக் கொண்ட முல்லையின் கடற்கரை, பல்லாயிரம் நினைவுகளை சுமந்து வரும்.."


ஆரம்ப பக்கங்களை வாசிக்கும் போது புத்தகத்தின் வலிமை உண்மையிலேயே புரியவில்லை. பாலியல் கொடுமை, வெளிநாட்டு மாப்பிள்ளை, புலம்பெயர்தல், வெளிநாட்டிலிருந்து வரும் நண்பன் என பக்கங்கள் நகர, புத்தகத்தை வாசிப்பதை நிறுத்தி விடுவோமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன். ஆனாலும் ஏதோ ஒன்று என்னை தொடந்து வாசிக்க உந்தியது. ஒரு வாசகனாக என்னை நிமிர்ந்து உட்கார வைத்த குறிப்பு "மிதிவெடியும் நாவற்குழி மயானமும்". 

"மச்சான் இந்தப் பாலம் சூப்பரா இருக்கில்ல"

"ஓமோம் மோனே.. இப்ப நல்லாத்தானிருக்கு.. இந்த நாசாமாப் போன கடலில தான் என்ற மருமகனை கொண்ணுபோட்டாங்க" எனும்போது நிகழும் அபிவிருத்திகளிற்கு பின்னால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களின் வரலாற்றை அமல்ராஜ் எமக்கு நினைவூட்டுகிறார். 


தமிழ் மண்ணை இன்னும் விட்டகலாத தன்னம்மிக்கையை எடுத்துக்காட்டும்  கவிதாவின் கதையும் மாறன் பற்றிய குறிப்புகளும், சஞ்சயனின் சாதனையும் நாமெல்லோருக்கும் தேவையான வாழ்க்கைப் பாடங்கள். 


சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வளரும் குழந்தைகள் பற்றியதாக அமைந்த "கவிதா என் காதலி"யிலும் 
பெற்றோரை இழந்த தமது பேரப்பிள்ளைகளை வளர்க்கும் தெய்வானை அம்மா பற்றிய குறிப்பிலும் யுத்தம் அழித்துவிட்டுப் போன அடுத்த தலைமுறையின் பராமரிப்பாளர்களின் அவலங்களை அமல்ராஜ் காட்சிப்படுத்துகிறார்.

"நாங்க சாகாம இருக்கோணும் தம்பி, இல்லேன்னா இதுகள் ரெண்டும் நடுரோட்டிலதான்".


"அரசியல் துறை பெண்டாட்டி" மற்றும் "கனகராயன்குளம் சிவம் அங்கிள்" போன்ற குறிப்புகளில், புலிகள், தமிழீழம் போன்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் நழுவும் போது எழுத்தாளரை நோக்கி உயரும் புருவங்கள் உயர, "நம்மினம் பட்ட துன்பங்களின் வெளிப்படுத்துகை என்ற நோக்கில் நான் எழுதும் இந்த குறிப்புக்கள் புலி சார்பு - புலி எதிர்ப்பு சாயம் பூசப்படுவதற்கு தான் பதில் சொல்வது தனது நேரத்தையும் சக்தியையும் தானே நாசப்படுத்திக்கொள்ளும் முட்டாள்தனம்" என்று நெத்தியடி தந்து அடக்குகிறார், அமல்ராஜ். 

"உண்மைக்கும் அரசியலுக்கும் என்றுமே நல்லிணக்கம் இருந்ததில்லை"

"கணவனை அறியாத தாலிகள்" எனும் பதிவில் எமது சமூகத்தில் இதுவரை பெரிதாக அறியப்படாத ஒரு சமூக பிரச்சினையை அமல்ராஜ்  நம்முன் கொண்டுவந்துள்ளார்.  யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்ப நடந்த அவசர கலியாணங்களாலும் தங்களை திருமணமானவர்களாக காட்ட தங்கள் தாய்மார்களின் தாலிகளை அணிந்து திரிந்த பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த குறிப்புகள் வரையப்பட்டுள்ளன. 

"கலாச்சாரத்தை கண்ணியமாய் காப்பாற்றிய 'அவர்கள்' இறுதியில் இந்த மிகப்பெரிய கலாச்சார சீரழிவை நிகழ்த்திப்போனார்கள்"


சமுதாயத்தின் செயற்பாடுகள் மீதான எழுத்தாளரின் கோபம் "ஸ்கைப்", "புதுமாத்தாளன் கொல்லாமல் விட்ட தமிழர்கள்" போன்ற பதிவுகளில் வெளிப்படுகிறது. ஒரு கொடிய யுத்தத்தில் அனைத்தையும் இழந்த இனம் இன்னும் தனது வறட்டு கெளரவங்களை காக்க முனைவதையும் உறவுகளிற்கு முன்னுரிமை கொடுக்காமையையும் காணும் போது ஏற்பட்ட கொதிப்பு குறிப்புகளில் உணர்வு மாறாமல் பதிவாகிறது. 


"இரத்தத்தால் கழுவப்பட்ட மண் எங்களுடையது. சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும் இன்றும் எங்கள் உணர்வுகளில் சொட்டு சொட்டாய் கசிந்து கொண்டு தானிருக்கிறது"


நமது மண்ணில் வீழாமல் வாழும் எம்முறவுகளின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வந்து "கருகிய காலத்தின் நாட்குறிப்புகளாய்" தவழவிட்டதில் அமல்ராஜ் வெற்றி கண்டுள்ளார். கோபம், ஆற்றாமை, நெகிழ்ச்சி, சோகம் என பல்வேறுபட்ட உணர்வுகளை உணரவைத்த எங்கள் உறவுகளின் உண்மை கதை "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". 

"அந்த தொடரில் கனக்க உங்கட கற்பன சம்பவங்கள் என்ன.. நல்லா இருக்கு" எனக்கேட்ட மூத்த எழுத்தாளரைப் போல் நம்மத்தியில் இருக்கும் பலருக்கும் இந்த புத்தகம் அவர்தம் கண்களை திறக்க உதவும் என்பது நம்பிக்கையின் உச்சக்கட்டம்.


"கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்"
உணர்வுள்ள தமிழர்களிற்கு மட்டும்


"ஐ ஆம் நொட் ஓகே"


No comments:

Post a Comment