Friday, 13 May 2016

மறக்கேலாது


காலை எழுந்ததும் முதல் வேலையாக, யுத்த களத்தில் வெற்றி செய்தி வந்ததா என்றறிய ஏக்கத்துடன் புதினம், தமிழ்நாதம், Tamilnet இணையத்தளங்களை துலாவிய நாட்களை மறக்கேலாது. 


இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் இருக்கும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குறிக்கும் வரைபடத்தையும், சுருங்கிக்கொண்டிருக்கும் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளையும், பார்க்க பார்க்க நெஞ்சம் பதறியதையும் மறக்கேலாது.


பகலிலும் இரவிலும், வேலையிலும் பயணத்திலும், மணித்தியாலத்திற்கு பலமுறை இணையத்தில் நுளைத்து நல்ல செய்தி வராதா என்று அங்கலாய்த்த கணங்களின் வேதனையை மறக்கேலாது.


வேலை முடிந்து ரெயிலேறி cityக்கு போய் பங்குபற்றிய ஆர்பாட்டங்கள், காரேறி கன்பரா போய் கலந்து கொண்ட ஊர்வலங்கள், இணையத்தில் கலந்து கொண்ட பெட்டிசன்கள் என்று ஒவ்வொரு நாளும் நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும், சனத்தையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் கழிந்த பொழுதுகளையும் மறக்கேலாது.


ஜநா மன்றம் முதல் அமெரிக்க காங்கிரஸ் தொட்டு ஒஸ்ரேலிய பாராளுமன்றம் வரை பதறியடித்து புலம்பெயர் தமிழர் தட்டிய கதவுகள் எதுவும் திறக்கப்படாததை மறக்கேலாது.

நியூயோர்க், டொரொன்டோ, லண்டன், சென்னை, கோலாலம்பூர், மெல்பேர்ண், சிட்னி, ஓக்லண்ட் என்று வீதி வீதியாய் நாங்கள் கதறிய ஒலக் குரல்களை இந்த உலகம் உதாசீனப்படுத்தியதையும் மறக்கேலாது.

முத்துக்குமாரின் தியாகத்தால் எழுந்த உணர்வலையை திசை திருப்பி, முள்ளிவாய்க்காலில் தத்தளித்த தலைமைக்கு, தேர்தல் கணக்கு பார்த்து, தவறான நம்பிக்கையளித்த தமிழகத்தின் உணர்வாள அரசியல்வாதிகளை மறக்கேலாது. 


திரைக்கதை வசனம் எழுதி கலைஞர் அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகத்தை, தேர்தல் திருவிழாவிற்கு ஜெயலலிதா எடுத்த ஈழத்தாய் அவதாரத்தை காலங்கள் கடந்தாலும் மறக்கேலாது.


GTV தொலைக்காட்சி, வன்னியின் அவலங்களை அன்றாடம் ஓளிபரப்ப, அந்த காட்சிகள் அகத்திரையில் விரிய, நித்திரையும் இல்லாமல் நிம்மதியின்றி உழன்ற நீண்ட இரவுகளையும் மறக்கேலாது.


இன்பத்தமிழ் வானொலியில் வன்னியிலிருந்து உறவுகள் கொடுத்த நெஞ்சை உருக்கும் செவ்விகளையும், தேவையற்ற நீண்ட விவாதங்களையும் போராட்ட அறைகூவல்களையும் மறக்கேலாது. 


பிள்ளைகளிற்கு பால்மா வாங்க நின்ற சனத்தை குறிவைத்து தாக்கிய சம்பவம் உட்பட பலநூறு கொடுமைகளை கேட்டறிந்து மனம் வெதும்பியதை மறக்கேலாது.


பாடசாலை சீருடையில் பதுங்கு குழிகளில் அலறும் சிறுவர்களையும், எறிகணைகளிலிருந்து தப்ப பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரையும் நினைத்து நிம்மதியிழந்திருந்தையும் மறக்கேலாது. 

முன்னெப்போதும் அறிந்திராத சுதந்திரபுரமும் மாத்தளனும் முள்ளிவாய்க்காலும் பழகிய பக்கத்து ஊர்கள் போல் அறிய வந்ததை மறக்கேலாது.

பசிக்கொடுமையில் இலைக்கஞ்சி குடிக்க தள்ளப்பட்ட உறவுகளின் பரிதாபத்தையும் மருத்துவ தடையால் குற்றுயிராய் பரிதவித்து உயிர்நீத்த கொடுமையையும் காட்சிகளாய் கண்டு கண்ணீர் விட்டழுத நினைவுகளை மறக்கேலாது.


புதுக்குடியிருப்பு மாத்தளன் வைத்தியசாலைகள் தாக்கப்பட்ட போதும் கொத்து குண்டுகள் எறியப்பட்ட போதும் பொஸ்பரஸில் மக்களோடு நிலமும் கருகிய போதும் செவிடாக்கிய சர்வதேசத்தின் மெளனத்தை மறக்கேலாது. 


பதைபதைத்த முகத்தோடு மூட்டை முடிச்சுகளுடன் குஞ்சு குருமானோடு மழையிலும் வெய்யிலிலும் சனம் கிராமம் கிராமமாக இடம்பெயர்ந்த காட்சிகளை மறக்கேலாது. 


இரத்தமும் கண்ணீரும் உழைப்பும் அளவுக்கதிகமாய் இட்டு வளர்த்த விடுதலை போராட்டம் மெளனிக்கப்பட்ட பொழுதுகளில் தலை விறைத்து நின்ற நிமிடத்தையும் மறக்கேலாது. 


கடற்கரையில் பரந்து நிறைந்த வெள்ளை நிற தறப்பாள் கொட்டகைகளில் எங்கள் இனம் கேட்பார் யாருமின்றி அநாதரவாய் விடுபட்டு கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை மறக்கேலாது.

மறக்கேலாது
மறக்கேலாது
மறக்கேலாது

மறக்கவே மறக்கேலாது
No comments:

Post a Comment