Friday, 27 May 2016

கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்
இரு வேறு நிலங்களை பற்றிய இரு புத்தகங்களை வாசித்தனுபவம் வித்தியாசமானது. முதலாவது புத்தகம், சிந்துவெளி என்று அறியப்பட்ட மெலூஹா என்ற, இன்றைய இந்தியா பற்றியது. உலகின் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய அற்புதமான சூர்யவம்சிகளின் சாம்ராஜ்ஜியம் பற்றியது அமிஷ் எழுதிய "மெலூஹாவின் அமரர்கள்".  அமிஷ் ஒரு வங்கியியலாளராக இருந்து எழுத்தாளராக மாறியவர், இது அவரின் முதல் புத்தகம். 
இராமபிரானிற்கு பிற்பட்ட காலத்தில் சூர்யவம்சிகளின் எதிரிகளான, சந்திரவம்சிகளிடமிருந்தும் அவர்களுடன் கைகோர்த்த அற்புத சக்திகள் படைத்த நாகர்களிடமிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கும் சூர்யவம்சிகளை காப்பாற்ற அவதாரம் எடுக்கும் சிவபெருமான் எனும் கற்பனை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது "மெலூஹாவின் அமரர்கள்" நாவலின் கதைக்களம்.

"தீமை தலைவிரித்தாடும் போது, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள், இனி போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும் போது ஒரு வீரன் வருவான்"


அவ்வாறான ஒரு காவிய புருஷன் நிஜமாகவே நம்மத்தியில் பிறந்து வாழ்ந்த எமது தாயக நிலம் பற்றியது பிரான்ஸிஸ் அமல்ராஜின் "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". பிரபாகரன் ஒரு வரலாற்று விபத்து, என்கிறான் நண்பன் ரஜீஷன். சாதி ரீதியாக, பிரதேசவாரியாக, மத ரீதியாக, வர்க்க ரீதியாக பிளவுண்டு கிடக்கும் தமிழ் இனத்தில் பிறந்த வரலாற்று விபத்து பிரபாகரன் என்று ரஜீஷன் உரத்து சொல்கிறான். 


அடிமைத்தனத்தை துடைத்தெறிய வீறுகொண்டெழுந்த ஒரு சிறுபான்மையினத்தை, அதன் எதிரிகளோடு, உலகின் அதீத பலம்பொருந்திய வல்லரசுகள் கைகோர்த்து தோற்கடித்த வரலாற்றின் பதிவு "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". 

"ஒரு சமூகத்தின் துன்பியல் வடுக்களை எழுத்துக்களாக விட்டுச்செல்லும் ஏடுகள் நாளைய அந்த சமூகத்தின் காத்திரமான வரலாற்றை தோற்றுவிக்க ஏதுவாக அமைகின்றன".கொடிய இறுதி யுத்தத்தின் போதும் அந்த பாழாய்ப்போன யுத்தம் முடிந்த பின்னரும் அவலப்படும் அன்றாட மனிதர்களை பற்றிய, இன்றைய எமது தாயக மண்ணின்  நிலைக்கண்ணாடி "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". சர்வதேச தொண்டு நிறுவனமொன்றில் பணியாற்றும் போது தான் சந்தித்த மண்ணின் மனிதர்களின் கதையை மிகைப்படுத்தாமல் உணர்வுகள் மாறாமல் பதிவு செய்திருக்கிறார் அமல்ராஜ்.

"இரத்தக் கறை காய்ந்து, வெள்ளையாகி, ஆரவாரமின்றி அம்மணமாய் கிடக்கும் மணலைக் கொண்ட முல்லையின் கடற்கரை, பல்லாயிரம் நினைவுகளை சுமந்து வரும்.."


ஆரம்ப பக்கங்களை வாசிக்கும் போது புத்தகத்தின் வலிமை உண்மையிலேயே புரியவில்லை. பாலியல் கொடுமை, வெளிநாட்டு மாப்பிள்ளை, புலம்பெயர்தல், வெளிநாட்டிலிருந்து வரும் நண்பன் என பக்கங்கள் நகர, புத்தகத்தை வாசிப்பதை நிறுத்தி விடுவோமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன். ஆனாலும் ஏதோ ஒன்று என்னை தொடந்து வாசிக்க உந்தியது. ஒரு வாசகனாக என்னை நிமிர்ந்து உட்கார வைத்த குறிப்பு "மிதிவெடியும் நாவற்குழி மயானமும்". 

"மச்சான் இந்தப் பாலம் சூப்பரா இருக்கில்ல"

"ஓமோம் மோனே.. இப்ப நல்லாத்தானிருக்கு.. இந்த நாசாமாப் போன கடலில தான் என்ற மருமகனை கொண்ணுபோட்டாங்க" எனும்போது நிகழும் அபிவிருத்திகளிற்கு பின்னால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களின் வரலாற்றை அமல்ராஜ் எமக்கு நினைவூட்டுகிறார். 


தமிழ் மண்ணை இன்னும் விட்டகலாத தன்னம்மிக்கையை எடுத்துக்காட்டும்  கவிதாவின் கதையும் மாறன் பற்றிய குறிப்புகளும், சஞ்சயனின் சாதனையும் நாமெல்லோருக்கும் தேவையான வாழ்க்கைப் பாடங்கள். 


சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வளரும் குழந்தைகள் பற்றியதாக அமைந்த "கவிதா என் காதலி"யிலும் பெற்றோரை இழந்த தமது பேரப்பிள்ளைகளை வளர்க்கும் தெய்வானை அம்மா பற்றிய குறிப்பிலும் யுத்தம் அழித்துவிட்டுப் போன அடுத்த தலைமுறையின் பராமரிப்பாளர்களின் அவலங்களை அமல்ராஜ் காட்சிப்படுத்துகிறார்.

"நாங்க சாகாம இருக்கோணும் தம்பி, இல்லேன்னா இதுகள் ரெண்டும் நடுரோட்டிலதான்".


"அரசியல் துறை பெண்டாட்டி" மற்றும் "கனகராயன்குளம் சிவம் அங்கிள்" போன்ற குறிப்புகளில், புலிகள், தமிழீழம் போன்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் நழுவும் போது எழுத்தாளரை நோக்கி உயரும் புருவங்கள், "நம்மினம் பட்ட துன்பங்களின் வெளிப்படுத்துகை என்ற நோக்கில் நான் எழுதும் இந்த குறிப்புக்கள் புலி சார்பு - புலி எதிர்ப்பு சாயம் பூசப்படுவதற்கு தான் பதில் சொல்வது தனது நேரத்தையும் சக்தியையும் தானே நாசப்படுத்திக்கொள்ளும் முட்டாள்தனம்" என்று நெத்தியடி தந்து அடக்குகிறார், அமல்ராஜ். 

"உண்மைக்கும் அரசியலுக்கும் என்றுமே நல்லிணக்கம் இருந்ததில்லை"

"கணவனை அறியாத தாலிகள்" எனும் பதிவில் எமது சமூகத்தில் இதுவரை பெரிதாக அறியப்படாத ஒரு சமூக பிரச்சினையை அமல்ராஜ்  நம்முன் கொண்டுவந்துள்ளார்.  யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்ப நடந்த அவசர கலியாணங்களாலும் தங்களை திருமணமானவர்களாக காட்ட தங்கள் தாய்மார்களின் தாலிகளை அணிந்து திரிந்த பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த குறிப்புகள் வரையப்பட்டுள்ளன. 

"கலாச்சாரத்தை கண்ணியமாய் காப்பாற்றிய 'அவர்கள்' இறுதியில் இந்த மிகப்பெரிய கலாச்சார சீரழிவை நிகழ்த்திப்போனார்கள்"


சமுதாயத்தின் செயற்பாடுகள் மீதான எழுத்தாளரின் கோபம் "ஸ்கைப்", "புதுமாத்தாளன் கொல்லாமல் விட்ட தமிழர்கள்" போன்ற பதிவுகளில் வெளிப்படுகிறது. ஒரு கொடிய யுத்தத்தில் அனைத்தையும் இழந்த இனம் இன்னும் தனது வறட்டு கெளரவங்களை காக்க முனைவதையும் உறவுகளிற்கு முன்னுரிமை கொடுக்காமையையும் காணும் போது ஏற்பட்ட கொதிப்பு குறிப்புகளில் உணர்வு மாறாமல் பதிவாகிறது. 


"இரத்தத்தால் கழுவப்பட்ட மண் எங்களுடையது. சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும் இன்றும் எங்கள் உணர்வுகளில் சொட்டு சொட்டாய் கசிந்து கொண்டு தானிருக்கிறது"


நமது மண்ணில் வீழாமல் வாழும் எம்முறவுகளின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வந்து "கருகிய காலத்தின் நாட்குறிப்புகளாய்" தவழவிட்டதில் அமல்ராஜ் வெற்றி கண்டுள்ளார். கோபம், ஆற்றாமை, நெகிழ்ச்சி, சோகம் என பல்வேறுபட்ட உணர்வுகளை உணரவைத்த எங்கள் உறவுகளின் உண்மை கதை "கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்". 

"அந்த தொடரில் கனக்க உங்கட கற்பன சம்பவங்கள் என்ன.. நல்லா இருக்கு" எனக்கேட்ட மூத்த எழுத்தாளரைப் போல் நம்மத்தியில் இருக்கும் பலருக்கும் இந்த புத்தகம் அவர்தம் கண்களை திறக்க உதவும் என்பது நம்பிக்கையின் உச்சக்கட்டம்.


"கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்"
உணர்வுள்ள தமிழர்களிற்கு மட்டும்


"ஐ ஆம் நொட் ஓகே"


Friday, 20 May 2016

குஷ்பூ... வருஷம் 16லிருந்து


1990, ஏப்ரல் மாதம்

சனாதிபதி பிரேமதாச விதித்த காலக்கெடுவிற்கமைய, இலங்கை மண்ணை விட்டு கடைசி இந்திய இராணுவ ஜவான் 31 மார்ச் 1990ல் வெளியேற, தமிழர் தாயக பகுதிகள் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரலாற்றில் முதல்தடவையாக வந்தன. 1990 மார்ச் மாதம் Big Match வென்ற உற்சாகத்தோடு, O/L சோதனை எழுதி முடித்துவிட்டு, அரைக்காற்சட்டைக்கு விடை கொடுத்து, முழு நீள காற்சட்டைக்கும் Baggy Shirtக்கும் upgrade ஆகியிருந்த காலம். 


1989 ஆண்டு முழுவதும் ஈபிகாரன்களின் பிள்ளைபிடி கொடுமைக்கு பயந்து வீட்டில் குமர்ப்பிள்ளைகளை போல் ஒதுங்கியிருந்தும், O/L சோதனைக்கு படிப்பதிலும் மெதுவாக கழிந்தது. O/L சோதனை முடிய கிடைத்த அரிய சமாதான கால விடுமுறையை தியேட்டரிலும், நண்பர்களின் வீடுகளில் டெக்கில் திரைப்படம் பார்ப்பதிலும், கிரிக்கட் மட்ச்கள் ஆடுவதிலும், சைக்கிளில் சுழற்றி கொண்டு திரிவதிலும் பிரயோசனமாக்கினோம். 


கடைசி O/L சோதனை முடிந்த அன்றிரவு யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் பார்த்த படம் Lady Chatterley's Lover. அதற்கடுத்த கிழமை வெலிங்டன் தியேட்டரில் வருஷம் 16 படம் பார்க்க, பதினாறே வயது நிரம்பிய நாங்கள் பதினாறு பேர் படம் பார்க்க போனோம். நண்பர்களுடன் பதின்மங்களில் படம் பார்த்த இனிமையான அனுபவங்களை மறக்கேலாது. 


வருஷம் 16 படம் தொடங்கி, கார்த்திக் பழமுதிர்ச்சோலை பாட்டெல்லாம் பாடி எங்களை அசத்தினாலும், குஷ்பூவின் அந்த ஃபேமஸ் முதல் ஸீன் பார்க்க நாங்கள் ரெடியானோம். மாடிப்படியில் குட்டையான இரட்டைப் பின்னலோடு  இறங்கி வந்த குஷ்பூ, அப்படியே எங்கள் மனதில் ஆக்கிரமிக்க, மூச்செடுக்க கஷ்டப்பட்டோம். 


கார்த்திக் குஷ்பூவை Chinese Butler என்று கலாய்த்து, கமரா குஷ்பூவின் கழுத்தில் தொங்கிய Radhika என்ற பென்டனில் உலாவ, நாங்கள் சீட் நுனுக்கு வந்திட்டோம். "மச்சான், இப்பத்தான் அந்த ஸீன்டா" படத்தை இரண்டாம் முறையாக பார்க்கும் இளங்கோ கிசு கிசுத்தான். மாடிப்படியடியிலுருந்து குஷ்பூ ஓட, கார்த்திக் குஷ்பூவை துரத்த, பக்கத்து சீட்டிலிருந்த சுதர்ஷனின் இதயத்துடிப்பு எனக்கு கேட்டது. என்னுடைய இதயத்துடிப்பும் வரிசை கடைசியில் இருந்த யசிக்கு கேட்டிருக்கும்.


முதலாவது ரெளண்டில் கார்த்திக் குஷ்பூவை குறுக்கு வழியாக வந்து எதிர்கொள்ள, இரண்டாவது ரெளண்ட் ஓடி பிடித்தல் தொடங்கியது. வேகமாக ஓடிய குஷ்பூ கார்த்திக்குடன் மோதாமல் மோதி காலிடறி கீழே விழ, குஷ்பூவின் சட்டை பீப் பீப் ....இளங்கோ கதிரையின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்தான், கார்த்திக் வடிவா பார்த்துவிட்டு அங்கால பக்கம் பார்வையை திருப்ப நாங்க மட்டும் இமைகொட்டாமல் பார்த்து கொண்டேயிருந்தோம். 


இளமைத்துள்ளலுடன் கார்த்திக் குஷ்பூவை சுழற்றுவதும் நக்கலடிப்பதும் என்று வருஷம் 16 அழகாக நகர, எங்களுக்கும் இப்படி அமையாதா என்ற ஏக்கதுடன் திரைக்கதையில் சங்கமமாகினோம். தலைவரின் "தர்மத்தின் தலைவனில்" பிரபுவோடு "வெள்ளிமணி கிண்ணத்திலே" பாட்டுக்கு ஆடிய குஷ்பூ வருஷம் 16 படத்தோடு தமிழ்திரையுலகின் புதிய கனவுக்கன்னியாக அவதாரம் எடுத்தார்.


"பூ பூக்கும் மாசம்" பாடலின் ஆரம்பத்தில் குஷ்பூவின் தலைமயிர் மறைவில் கார்த்திக் கிஸ் அடித்து எங்களை வெறுப்பேற்ற, இளையராஜாவின் அருமையான பாட்டை ரசிக்க மறுத்து நாங்கள் புரட்சி செய்தோம். வருஷம் 16ன் க்ளைமாக்ஸில், "கங்கைக்கரை மன்னனடி" என்று ஜேசுதாஸ் முழங்க, நவீன நாட்டிய பேரொளி குஷ்பூ ஆடிய ஆட்டம், சரித்திரப் புத்தகங்களில் இடம்பெறும் என்று அன்று நாங்கள் நம்பினோம். 


1990 மே மாதம் மீண்டும் யுத்தம் தொடங்கி, ஒக்டோபரில் Open Pass நாட்களில், ஹெலியடியின் மத்தியில் கொம்படி வெளியால், கொழும்பு வந்து சேர, பாமன்கடை ஈரோஸில் கமலின் "வெற்றிவிழா" படம் ஓடுது. மீண்டும் பிரபு-குஷ்பூ ஜோடி "சீவி சினுக்கெடுத்தார்கள்". கிழக்கு வாசலில் மீண்டும் "தளுக்கி தளுக்கி" கார்த்திக்கோடு ஜோடி சேர்ந்தார் குஷ்பூ. கார்த்திக், ரேவதிக்கு "பச்சை மலை பூவு,  நீ உச்சி மலை தேனு" என்று படத்தில் பாடினாலும், நமக்கென்னவோ தெரிந்தது குஷ்பூவின் முகம் தான்.


1990ல் மட்டும் எட்டு படங்களிலும் 1991ல் ஆறு படங்களிலும் நடித்து குஷ்பூ, தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கினார். "நடிகனில்" சத்யராஜோடு "தேவமல்லிகை" குஷ்பூ ஆட்டம் போட, சத்தியராஜின் ஜொள்ளிலும் குஷ்பூவின் அழகிலும் படம் பிய்த்துக் கொண்டு ஓடியது. ஷாலினி சிவராமனாக "மைக்கல் மதன கமராஜனில்" கமலோடு "பேர் வைச்சாலும் வைக்காமல் போனாலும்" என்று குஷ்பூ கட்டிபிடிக்க, தமிழ்நாட்டில் குஷ்பூவிற்கு கோயில் கட்ட அத்திவாரம் போட்டார்கள். 

1991, 1992 கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடந்த வருஷங்கள். தலைவரோடு பாண்டியன், அண்ணாமலை, மன்னன் என்று முத்தான மூன்று படங்கள், இளையராஜாவின் பாட்டுக்களிற்காவே ஓடித்தள்ளய "சின்னத்தம்பி" என தமிழ் திரையுலகை குஷ்பூ கோலோச்சிய காலங்கள்.

குஷ்பூவோடு "போவோமா ஊர்கோலம்" 

தொடரும்...

Friday, 13 May 2016

மறக்கேலாது


காலை எழுந்ததும் முதல் வேலையாக, யுத்த களத்தில் வெற்றி செய்தி வந்ததா என்றறிய ஏக்கத்துடன் புதினம், தமிழ்நாதம், Tamilnet இணையத்தளங்களை துலாவிய நாட்களை மறக்கேலாது. 


இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் இருக்கும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குறிக்கும் வரைபடத்தையும், சுருங்கிக்கொண்டிருக்கும் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளையும், பார்க்க பார்க்க நெஞ்சம் பதறியதையும் மறக்கேலாது.


பகலிலும் இரவிலும், வேலையிலும் பயணத்திலும், மணித்தியாலத்திற்கு பலமுறை இணையத்தில் நுளைத்து நல்ல செய்தி வராதா என்று அங்கலாய்த்த கணங்களின் வேதனையை மறக்கேலாது.


வேலை முடிந்து ரெயிலேறி cityக்கு போய் பங்குபற்றிய ஆர்பாட்டங்கள், காரேறி கன்பரா போய் கலந்து கொண்ட ஊர்வலங்கள், இணையத்தில் கலந்து கொண்ட பெட்டிசன்கள் என்று ஒவ்வொரு நாளும் நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும், சனத்தையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் கழிந்த பொழுதுகளையும் மறக்கேலாது.


ஜநா மன்றம் முதல் அமெரிக்க காங்கிரஸ் தொட்டு ஒஸ்ரேலிய பாராளுமன்றம் வரை பதறியடித்து புலம்பெயர் தமிழர் தட்டிய கதவுகள் எதுவும் திறக்கப்படாததை மறக்கேலாது.

நியூயோர்க், டொரொன்டோ, லண்டன், சென்னை, கோலாலம்பூர், மெல்பேர்ண், சிட்னி, ஓக்லண்ட் என்று வீதி வீதியாய் நாங்கள் கதறிய ஒலக் குரல்களை இந்த உலகம் உதாசீனப்படுத்தியதையும் மறக்கேலாது.

முத்துக்குமாரின் தியாகத்தால் எழுந்த உணர்வலையை திசை திருப்பி, முள்ளிவாய்க்காலில் தத்தளித்த தலைமைக்கு, தேர்தல் கணக்கு பார்த்து, தவறான நம்பிக்கையளித்த தமிழகத்தின் உணர்வாள அரசியல்வாதிகளை மறக்கேலாது. 


திரைக்கதை வசனம் எழுதி கலைஞர் அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகத்தை, தேர்தல் திருவிழாவிற்கு ஜெயலலிதா எடுத்த ஈழத்தாய் அவதாரத்தை காலங்கள் கடந்தாலும் மறக்கேலாது.


GTV தொலைக்காட்சி, வன்னியின் அவலங்களை அன்றாடம் ஓளிபரப்ப, அந்த காட்சிகள் அகத்திரையில் விரிய, நித்திரையும் இல்லாமல் நிம்மதியின்றி உழன்ற நீண்ட இரவுகளையும் மறக்கேலாது.


இன்பத்தமிழ் வானொலியில் வன்னியிலிருந்து உறவுகள் கொடுத்த நெஞ்சை உருக்கும் செவ்விகளையும், தேவையற்ற நீண்ட விவாதங்களையும் போராட்ட அறைகூவல்களையும் மறக்கேலாது. 


பிள்ளைகளிற்கு பால்மா வாங்க நின்ற சனத்தை குறிவைத்து தாக்கிய சம்பவம் உட்பட பலநூறு கொடுமைகளை கேட்டறிந்து மனம் வெதும்பியதை மறக்கேலாது.


பாடசாலை சீருடையில் பதுங்கு குழிகளில் அலறும் சிறுவர்களையும், எறிகணைகளிலிருந்து தப்ப பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரையும் நினைத்து நிம்மதியிழந்திருந்தையும் மறக்கேலாது. 

முன்னெப்போதும் அறிந்திராத சுதந்திரபுரமும் மாத்தளனும் முள்ளிவாய்க்காலும் பழகிய பக்கத்து ஊர்கள் போல் அறிய வந்ததை மறக்கேலாது.

பசிக்கொடுமையில் இலைக்கஞ்சி குடிக்க தள்ளப்பட்ட உறவுகளின் பரிதாபத்தையும் மருத்துவ தடையால் குற்றுயிராய் பரிதவித்து உயிர்நீத்த கொடுமையையும் காட்சிகளாய் கண்டு கண்ணீர் விட்டழுத நினைவுகளை மறக்கேலாது.


புதுக்குடியிருப்பு மாத்தளன் வைத்தியசாலைகள் தாக்கப்பட்ட போதும் கொத்து குண்டுகள் எறியப்பட்ட போதும் பொஸ்பரஸில் மக்களோடு நிலமும் கருகிய போதும் செவிடாக்கிய சர்வதேசத்தின் மெளனத்தை மறக்கேலாது. 


பதைபதைத்த முகத்தோடு மூட்டை முடிச்சுகளுடன் குஞ்சு குருமானோடு மழையிலும் வெய்யிலிலும் சனம் கிராமம் கிராமமாக இடம்பெயர்ந்த காட்சிகளை மறக்கேலாது. 


இரத்தமும் கண்ணீரும் உழைப்பும் அளவுக்கதிகமாய் இட்டு வளர்த்த விடுதலை போராட்டம் மெளனிக்கப்பட்ட பொழுதுகளில் தலை விறைத்து நின்ற நிமிடத்தையும் மறக்கேலாது. 


கடற்கரையில் பரந்து நிறைந்த வெள்ளை நிற தறப்பாள் கொட்டகைகளில் எங்கள் இனம் கேட்பார் யாருமின்றி அநாதரவாய் விடுபட்டு கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை மறக்கேலாது.

மறக்கேலாது
மறக்கேலாது
மறக்கேலாது

மறக்கவே மறக்கேலாது
Thursday, 5 May 2016

CIMA காலங்கள்ஏப்ரல் 1, 1994
பெரிய வெள்ளிக்கிழமை (Good Friday)

அமெரிக்காவில் பில் கிளின்டன் 1993, 20 ஜனவரியில் ஆட்சிகட்டிலேற அதே ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, மே தின ஊர்வலத்தை ஆமர் வீதி சந்தியில் முன்னின்று நடாத்திக் கொண்டிருந்த இலங்கையின் ஜனாதிபதி மோசம் போனார். பிரேமதாசவிற்கு பின் ஜனாதிபதியான டி.பி. விஜயதுங்க, பெரும்பான்மையினத்தினர் மரமென்றும் சிறுபான்மையினர் மரத்தை சுற்றி வளரும் கொடிகள் என்றும் இனவாதம் கக்கி கொண்டிருக்க, நாங்கள் முழு மூச்சாக CIMA படித்து கொண்டிருந்தோம்.


நம்புங்கடா.. புத்தகத்தை விட்டு கண்ணெடுக்கவில்லைCIMA வகுப்புகளில், stage 1 மற்றும் 2 தாண்டி stage 3க்கு வர, இளையராஜாவின் "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை, காய்ஞ்சு
போச்சுடா" பாட்டு தான் நினைவுக்கு வரும். Stage 1,2ல் இருக்கும் அழகிய சரக்குகளை 3ல் காண கிடைக்காது. அநேகமாக கையெடுத்து கும்பிட வைக்கும் அக்காமாரும், கண்டவுடன் தலைதெறிக்க ஓட வைக்கும் அன்டிமாரும் தான் stage 3 வகுப்புகளின் முன் வாங்கை அலங்கரிப்பார்கள்.

என்ன கொடுமை சரவணா


காய்ஞ்சு போன stage 3 வகுப்புகளிலிருந்து மீண்டு, கண்களை குளிர்வித்து உள்ளத்தை உற்சாகப்படுத்த, நாங்கள் ஒரு உத்தி வகுத்தோம். Stage 1,2 வகுப்புகள் தொடங்கும் நேரம் நாங்களும் எங்கள் Stage 3 வகுப்புகளிற்கு போவது, அவர்களிற்கு break விடும் நேரம் நாங்களும் break எடுத்து கொள்வது, என்ற சிம்பிள் டெக்னிக். வாத்திமாரை உசுப்பேத்தும் இந்த உத்தியை செயற்படுத்த, கொஞ்சம் துணிவும், வாத்தி ஏசினால் அதை தாங்கும் பக்குவப்பட்ட மனதும் வேண்டும்.

பீலாக்கு ஒரு அளவே இல்லையாடா


பெரிய வெள்ளி அன்று மத்தியானம் எங்களுக்கு மட்டும் special class. ருஷ்டி அஸீஸ் என்ற விரிவுரையாளரின் சிறப்பு வகுப்பு. மத்தியானம் சாப்பிட்டு விட்டு, பம்பலப்பிட்டியில் இறங்கினால் வெயில் கொளுத்தி தள்ளுது. மன்னம்பெரும டீலர்ஸுக்கு பக்கத்தால போற ஜெயா ரோட்டிற்குள் இறங்கி, ரோட்டோர மரங்களின் நிழலில் நடக்க வெயிலின் கொடுமை கொஞ்சம் தணிந்தது. வழமையாக பூத்து குலுங்கும் ஜெயா ரோட், அன்று காய்ந்து போய் இருந்தது. கொளுத்தும் வெயிலில், எங்களுக்கு மட்டும் வகுப்பு வைத்து IAS நிர்வாகம் பெரும் குற்றமிழைத்திருந்தது.

சும்மா குற்றமில்லை.. மாபெரும் குற்றம்.


ருஷ்டி அஸீஸ், ஒரு திறமையான விரிவுரையாளர். ஸ்டைலா கதைத்து அழகா விளங்கப்படுத்தி வகுப்பு நடாத்துவார். இடையில் எங்களுக்கு சந்தேகம் வந்து, பேனையால் டொக் டொக் என்று மேசையில் தட்டினால், நிறுத்தி ஒரு பார்வை பார்ப்பார். கேட்கும் கேள்விக்கு விளங்குற மாதிரி பதில் தருவார். CIMA முடித்து அவரைப்போல் Hayleys மாதிரி ஒரு பெரிய கொம்பனியில் காரோடு வேலைக்கு போக வேண்டும் என்று எங்களை கனவு காண வைத்தவர்.

அப்படியே  அந்த வடிவான வெள்ளை பெட்டையும்..


வகுப்பு தொடங்க முதல், IAS கன்டீனில் ரஜீவ் எல்லோருக்கும் ப்ளேன் டீ வாங்கித்தந்தான். ரஜீவ், உழைக்கும் வர்க்கம், எங்களைப் போல் முழு நேரமாய் படிக்கிற நண்பர்களிற்கு எப்பவும் அன்னதானம் போட்டு புண்ணியம் தேடிக் கொள்வான். வழமையாக வகுப்புகளிற்கு நேரத்திற்கு வராத ரஜீவ், அன்று நேரத்திற்கு வந்ததால் எங்களுக்கு ஓஸியில் ப்ளேன் டீ கிடைத்தது. நாங்கள் பாக்கியநாதனிடம் AL படிக்கிற காலங்களில் full sleeve shirt அணிந்து, briefcase தூக்கி கொண்டு, ரஜீவ் வேலைக்கு போவதை பார்த்து இருக்கிறோம்.

"எங்கட வவுனியா பொடியன் மச்சான். பெரிய கொம்பனியில் எக்கவுண்டனா வேலை செய்யுறான்" கிரிஷாந்தன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.


இரண்டு மணிக்கு சரியாக IAS ஒஃபிஸிற்கு பக்கத்திலிருக்கும் வகுப்பறைக்குள் ருஷ்டி அஸீஸ் நுழைய, நாங்களும் போய் பின்வாங்கில் அமர்ந்தோம். எனக்கு பக்கத்தில் ரஜீவ் அமர, அவனுக்கு பக்கத்தில் ரொபர்ட்ஸ். எங்களுக்கு சரி முன் வாங்கில் கிரிஷாந்தன், தேவா, யோக்ஸ் அமர்ந்தார்கள். கிராச்சு கிராச்சு என்று மின் விசிறிகள் இயங்கி, சித்திரை வெக்கையுடன் நேரடி சமரில் இறங்க, ருஷ்டி ஒரு தரம் கனைத்து தொண்டையை சீராக்கி விட்டு தனது ஆட்டத்தை ஆரம்பித்தார்.


அன்று அவரது ஆட்டம் Accounting Standards (கணக்கியல் கோட்பாடுகள்) பற்றியதாக அமைய போவதாக ருஷ்டி முன்னுரை வழங்கினார். சித்திரை வெயிலிலும் தாலாட்டி நித்திரை கொள்ள வைக்கக்கூடிய கடும் Theory  பகுதிகள்.  கொளுத்தும் வெயிலிலை மிஞ்சி மண்டையை காய வைக்க போகும் அடுத்த சில மணி நேரங்களை நினைக்க எனக்கு தலை சுத்தியது.  


கொப்பியை திறந்து, பேனா மூடியை கழற்றி, Accounting Standards என்று புதிய ஒரு பக்கத்தில் தலையங்கம் எழுதி, என்னுடைய rulerஜ எடுத்து தலையங்கத்திற்கு கீழ் அழகாக கோடடித்து விட்டு பாடத்தை கவனித்து கொண்டிருந்த ரஜீவை காலால் தட்டினேன்.

"மச்சான், படம் பார்க்க போவமே" கிசு கிசுத்தேன்

"டேய்.." ரஜீவ் முறைத்தான்..

"அலுப்படிக்குதடா" கெஞ்சினேன் 

"என்ன படம்".. ரஜீவ் கொஞ்சம் இளகினான்.

என்னுடைய கொப்பியின் பின் பக்கத்தில் எழுதி அவனுக்கு காட்டினேன்.

Silver (strictly for adults only). 
Sharon Stone 
Liberty 

ரஜீவ் தலையில் கை வைத்தான். ஒரு கணம் யோசித்தான். 

"சனியன், என்னை படிக்க விடமாட்டாய். சரி வா..."என்றான், நண்பேன்டா

மற்றவர்களையும் அழைக்க நாங்கள் chit எழுதி அனுப்பினோம். Chitஜ பார்த்து விட்டு கிரிஷாந்தன் திரும்பி முறைத்து பார்த்து வாய்க்குள் ஏதோ சொன்னான். கெட்ட வார்த்தையால் திட்டியிருப்பான் என்று நினைத்து கொண்டேன். நாங்கள் கதைக்கிறதை கண்ட ருஷ்டி

 " Are you ok, Prakash" என்றார். மானம் போச்சுது

"Ah.. Yes sir" தெரிந்த ஆங்கிலம் அவ்வளவுதான்.

"அடுத்த முறை ருஷ்டி, blackboardல் எழுத திரும்பும் போது, பாயோணும்" ரஜீவிற்கு தாக்குதல் திட்டத்தை விபரித்தேன். ரஜீவை தவிர வேறு யாரும் படம் பார்க்க வர விரும்பவில்லை. 


ருஷ்டி கரும்பலகையில் எழுத திரும்ப, நான் பாய்ந்து கதவுக்கு வெளியே வந்துவிட்டேன். ரஜீவ் வரவில்லை. விறாந்தையில் தனிய நிற்கிறேன். ஒவ்வொரு கணமும் யுகமாக கழிகிறது. படம் தொடங்க போகுது என்ற டென்ஷன் ஒரு பக்கம், ரஜீவ் காலை வாரி விட்டானோ என்ற கோபம் மறுபக்கம் திரும்ப வகுப்புக்குள் போவதா விடுவதா என்ற எண்ணம் இன்னொரு பக்கம் என்று மனம் அல்லாடுது. 

சில நிமிடங்களில் கதவை திறந்து கொண்டு ரஜீவ் வந்தான்.

"கெதியா வாடா.. படம் போட போறாங்கள்" நான் அந்தரப்பட்டேன்.

"டேய் மச்சான், இன்றைக்கு பெரிய வெள்ளிடா" பற்றிக்ஸில் படித்த ரஜீவிற்கு அப்ப தான் கர்த்தர் கண்ணுக்கு தெரிந்தார்.

"பரவாயில்லை வாடா..பிறகு பாவ மன்னிப்பு கேட்கலாம்".. ஜெயா ரோட்டில் வேகமாக நடக்கத் தொடங்கியிருந்தோம்.

"சாத்தானே.. பின்னேரம் பூசைக்கு வேற போகணும்" ரஜீவ் அழ தொடங்கினான்.

"ஜஞ்சரைக்கு முடிஞ்சிடும்.. ஆறு மணி பூசைக்கு போகலாம்" காலி வீதியை அடைந்து விட்டோம்.

"பெரிய வெள்ளி அதுவுமா.. கெட்ட படத்தை பார்க்க வைக்கிறாய்.. இந்த முறை எக்ஸாமில் பெயிலாகப் போறனடா" ரஜீவின் அழுகை தொடர்ந்தது.

HFCஅடியில் புறக்கோட்டை நோக்கிப் போன 100 இலக்க பஸ்ஸை நடு ரோட்டில் நிற்பாட்டி, ஓட ஓட footboardல் தாவி ஏறினோம். 

"மச்சான், படம் அந்த மாதிரியாம், விபீஷ்ணா பார்த்தவனாம்" பஸ்ஸுக்குள் ரஜீவை சமாதானப்படுத்தி முயன்றேன்.

"கெட்ட சாத்தானே.. Good Friday.. அதுவுமா என்னை பாவம் செய்ய வைத்து விட்டாய்.. கடவுள் எக்ஸாமில் என்னை தண்டிக்க போறார்" அழுகை தியேட்டரில் போய் அமர்ந்து  திரை விலகும் வரை தொடர்ந்தது.

ரஜீவ் அந்த முறை எக்ஸாம் பாஸ் பண்ணினான் 😀
Sunday, 1 May 2016

ஓர் கூர்வாளின் நிழலில்


துன்முகி தமிழ்ப்புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த இளைய தளபதி விஜய்யின் தெறி திரைப்படம் பற்றி விமர்சிக்க முடியாது. ஏனெனில், தெறி திரைப்படத்தின் கதை சத்திரியன் படத்திலிருந்து உருவிய  காட்சிகளையும் பாட்ஷா படத்திலிருந்து செருகிய கதை களத்தையும் ராஜா ராணி படத்தை தழுவிய வசனங்களையும் கலந்து உருவாக்கிய படையல். தனித்துவமற்ற எந்த படைப்பும் விமர்சனத்திற்கு தகுதியானதல்ல.


விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எழுதியதாக வெளிவந்திருக்கும் "ஓரு கூர்வாளின் நிழலில்" புத்தகமும், தெறி படத்தை போன்று விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. வாசிக்கும் போது எங்கே செருகல் இருந்தது எங்கே உருவல் நடந்தது என்று ஜயம் ஏற்படவைத்த வித்தியாசமான வாசிப்பனுபவத்தை "ஓர் கூர்வாளின் நிழலில்" தந்தது. புத்தகத்தை சுற்றி எழும் விமர்சனங்களிற்கு பதிலளிக்க வேண்டிய புத்தகத்தை எழுதிய தமிழினியும் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.


கடந்த மாதம், தம்பி தமிழ்ப்பொடியன் வீட்ட வந்து (அவசரத்தில் தேத்தண்ணி கூட கொடுக்கவில்லை, மன்னிக்கவும்) "கூர்வாளை" தந்துவிட்டு "ஆதிரையை" கடத்தி கொண்டு போனார். அன்றிரவே புத்தகத்தை புரட்ட தொடங்க, தமிழினி புத்தகத்தின் தலைப்பிலும் பின்பக்கத்திலும் வைத்து விட்டு சென்ற சங்கேத செய்திகள் தெளிவாக புலப்பட்டன. எதிரியின் நிழலில் இருந்து தான் இந்த புத்தகம் எழுதப்பட்டது என்பதை மக்களிற்கு உணர்த்த அவர் தெரிவு செய்த தலைப்பு "ஓர் கூர்வாளின் நிழலில்".


புத்தகத்தின் பின்அட்டையில் “புலிகளின் வீர வரலாறு புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையே தான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் இல்லங்களில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப் படுத்திவிட முடியாது” என்ற வசனங்கள், தமிழினி தடுப்பில் இருந்த போது காலச்சுவடு இதழில் "நலமா தமிழினி" என்ற தலைப்பில் பிரேமா ரேவதி என்ற இந்திய எழுத்தாளர் எழுதிய ஆக்கத்திலிருந்து உருவப்பட்டவை. ஒரு புத்தகத்தையே எழுதியவர், பின்னட்டையில் வரும் வசனங்களை மட்டும் இன்னோருவர் எழுதிய ஆக்கத்திலிருந்து சுட்டிருப்பாரா ?


அட்லியின் அர்ப்பணிப்பான பங்களிப்பில் எவ்வாறு தெறி திரைப்படம் உருவானதோ, அதே போல் தமிழினியின் கைவண்ணத்தில் தான் "ஓர் கூர்வாளின் நிழலில்" புத்தகம் படைக்கப்பட்டது என்பதை நம்பத்தான் வேண்டும். ஆதிரை, நஞ்சுண்டகாடு போன்ற போரிலக்கியமாகவோ பாலா அண்ணை எழுதிய "போரும் சமாதானமும்" புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் என் சாட்சியம்" போன்ற போராட்ட வரலாற்று ஆவணமாகவோ தமிழினியின் "ஓர் கூர்வாளின் நிழலில்" தகுதி பெறாமல் போவதற்கு அதில் இடம்பெற்றிருப்பதாக சந்தேகப்படும் உருவல்களும் செருகல்களும் காரணமாக அமைகின்றன. எல்லாவற்றையும் விட, தமிழினியின் இறப்பிற்குப் பின் இந்த புத்தகம் வெளிவந்ததால் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களின் நம்பகத்தன்மை வெகுவாக பாதிப்புக்குள்ளாகிறது.


தமிழினி எழுதியதாக தலைவரைப் பற்றி புத்தகத்தில் இடம்பிடிக்கும் நேர்மறையான விமர்சனங்கள், ஒன்றும் புதியன அல்ல. தலைவருக்கு எதிராக இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கும் முதலாவது போராளியும் தமிழினியும் அல்ல. தலைவரையும் இயக்கத்தையும் நேசித்தவர்கள், இயக்கத்தின் தவறுகளை அறிந்திருந்தார்கள். அறிந்தும் ஏன் நேசித்தார்கள் தெரிந்தும் ஏன் கேள்வி கேட்கவில்லை என்று எழும் குரல்களிற்கு பதில், தலைவரையும் இயக்கத்தையும் நேசித்தவர்களின் உணர்வுகளில் புதைந்திருக்கிறது.


தமிழினி போரட்டத்தில் இணைந்ததற்கான  அடிப்படையான காரணங்களை, எமது விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமான கோட்பாடுகளை, விவரிக்காததிலிருந்து தொடங்கும் உருவல், இறுதிப் போரின் ஒரு நேரடி சாட்சியான தமிழினி, அந்த இருண்ட இறுதி மாதங்களில், நாட்களில், கணங்களில் இடம்பெற்ற மனித பேரவலத்தை பதிவு செய்யாதது வரை தொடர்கிறது. 


தமிழினியை வரலாறு பதிவுசெய்யயும் போது, அவர் எழுதியதாக வெளிவந்திருக்கும் "ஓர் கூர்வாளின் நிழலில்" புத்தகம், ஒரு அளவுகோலாக அமையாது என நம்புவோமாக. 

 "ஓர் கூர்வாளின் நிழலில்" 
வாசிக்காமல் விட்டிருக்கலாம்