Thursday, 14 April 2016

யாழ்ப்பாண விருந்துகள்... அனுபவித்ததிலிருந்து 5தாயகத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் சிதறுண்டு உலகின் பல்வேறு நாடுகளிற்கும் புலம்பெயர்ந்த பாடசாலை நண்பர்கள் மீண்டும் ஒன்றுகூடி பம்பலடித்து நட்பை புதுப்புக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலங்களில் அரங்கேறி வருகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் ஒன்று கூடல் நிகழ்வுகள் முகநூலில் லைக்குகளை அள்ளி வாங்கும். நாங்கள் படித்த பரி. யோவானின் 92 batchம் கோலாலம்பூரில் 2013ல் ஒன்று கூடி, வாழ்வில் மறக்க முடியாத முத்தான மூன்று நாட்களை வாழ்ந்து மகிழ்ந்தோம்.


யாழ்ப்பாணத்தில் Big Match பார்க்க மீண்டும் ஒன்று கூடுவோம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதும் "யாழ்ப்பாணத்தில் போய் என்னத்தை செய்யுறது" என்று ஒரு கூட்டம் பின்னடிக்க "அங்க சனம் கஷ்டப்படுது, அதுக்க நாங்க போய் அட்டகாசம் செய்யுறது சரியில்லை" என்று இன்னொரு குறூப் உணர்ச்சிவசப்பட்டது.


உண்மைதான்.. பாங்கொக்கில் விளையாடுற விளையாட்டை கோலாலம்பூரில் ஆடமுடியாது, கோலாலம்பூரில் போடுற கூத்தை கொழும்பில் அரங்கேற்றேலாது, கொழும்பில் விடுற சேட்டையை யாழ்ப்பாணத்தில் விட முடியாது.

எங்கட யாழ்ப்பாணமடா.. 

--------------------------------------------------------------------------------------------------------------------------

யாழ்ப்பணாத்தில் மீண்டும் கால்பதித்த புதன்கிழமையிரவு நண்பன் டொக்டர் கோபி வீட்டில் பார்ட்டி. ஏழரை மணியளவில் கோபி வீட்டில் போய் இறங்கினோம். யாழ்ப்பணாத்தின் பாரம்பரிய கட்டிடக்கலை மரபைத் தழுவி, நவீனம் கலந்து கட்டப்பட்ட கோபியின் இல்லத்தின் மொட்டை மாடியில் எங்கள் ஒன்றுகூடல் களை கட்டத்தொடங்கியது. 


வெளிநாடுகளிலிருந்து பயணித்திருந்த பத்து டயஸ்போராகாரன்கள் கொழும்பிலிருந்து வந்திருந்த எட்டுப்பேரோடு யாழ்ப்பாணத்தில் வாழும் எங்கள் Batchன் எழுவர் ஒன்றுசேர யாழ்ப்பாணத்து மொட்டை மாடி குதூகலித்தது. யாழ்ப்பாணம் இந்துவின் டாக்டர் சிவநேசன் சிறப்பு பாடகராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அவருக்கும் எங்கட ஜொனியன்ஸ் ஜேர்ஸி அணிவித்து எங்களில் ஒருவராக்கினோம். எங்களுடன் பயணித்த கொக்குவில் இந்து நண்பன், துவாவும் அன்று இரவு மட்டும் ஜொனியனானான்.

யாவரும் கேளீர் !


நாட்டுக் கோழி முட்டை பொரியல் மேலே வரவர ஆதியும் சிறிபிரகாஷும் முழுசா எடுத்து வாய்க்குள் திணித்தாங்கள். மற்றவர்களிற்கு போய் சோர விடாமல் இவங்கள் சாப்பிட்ட விதம், கல்லூரி காலங்களில் மற்றவன் பறிக்க முதல் கன்டீனில் ரோல்ஸ் சாப்பிட்டதை நினைவுபடுத்தியது. இறால் பொரியல் வரத்தொடங்க சிவனேசன் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" பாடத்தொடங்கவும் சரியாக இருந்தது.


நாட்டுக்கோழி முட்டைப் பொரியல் அமோகமாக விற்பனையாக, நாட்டுக்கோழி முட்டை கையிருப்பு தீர்ந்து நோர்மல் கோழி முட்டைக்கு மாறியிருந்தார்கள். கோபி தானும் பாடப்போகிறேன் என்று மைக்கை பிடித்து "மன்றம் வந்த தென்றலிற்கு" பாடிக்கொண்டிருக்க, மொட்டை மாடிக்கு வந்த யாழ்ப்பாணத்து கணவாய் பொரியல் எங்கட வாய்க்குள் வந்து அசை போட்டது.

யாழ்ப்பாண கணவாயை அடிக்க ஏலாது, மச்சான்.


டொக்டர் சிறிகிருஷ்ணா தலைமையில் ஒரு டீசன்ட் குறூப் ஓரமாயிருந்து வேடிக்கை பார்க்க, குழப்படிகாரன்கள் அட்டகாசம் பண்ணினாங்கள். சிவனேசன் இளையராஜாவின் பாட்டுகளை அள்ளி வழங்க, யாழ்ப்பாண சமையலின் சுவையை கனகாலத்திற்கு பின்னர் கோபி வீட்டில் ருசித்தோம்.பொட்டு வைத்த வட்ட நிலா பாடினவர்... நல்லா செய்தார், பாட்டை.  அந்தப் பாட்டிற்கு பக்கவாத்தியமாய் மிருதங்கம் வாசித்த வித்துவான் கணா, பாடகரின் தாளத்திற்கு மிருதங்கம் வாசிக்க திணறினதாக ரசிகர்கள் குறைபட்டார்கள். தேவாலயத்தில் அல்லேலூயா பாடும் ரோய் பிரதீபனும் ஒரு காதல் பாட்டை இழுத்து அந்தக்கால காதல் பருவத்தை மீள நினைவுறுத்தினான்.


அன்றைக்கு காலம்பற கல்லூரி அசெம்ப்ளியில் லண்டன் இங்கிலீஷில் முழங்கிய சுரேன், தனக்கும் தமிழ்ப்பாட்டு பாட தெரியும் என்பதை நிரூபிக்க "கண்ணே கலைமானே" பாட்டை ஆரம்பித்து வைத்தான். சுட்டுப்போட்டாலும் பாட்டு வராத நகுவும் கஜனும்,  விஜயனையும் மொழியனையும் பேட்டி கண்டு,  கலாய்த்து இரவை கலகலப்பாக்கினார்கள். 


இரவு சாப்பாட்டிற்கு புட்டு, இடியப்பம், பாண்டியன்தாழ்வு பேக்கரி ரோஸ்ட் பாண், சோறு இவற்றோடு நண்டு குழம்பு, கோழி பொரியல், அவித்த முட்டை, ஆட்டுக்கறி, இறால் வறுவல் என்று நிறைந்த சாப்பாட்டு மேசை எங்களை அழைத்தது.

"மச்சான் நான் டயட்டில இருக்கிறன்டா"

--------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழக்கிழமை மத்தியானம், வாதுலன் வீட்டில் விருந்து. Big Matchற்கு lunch break விட, மைதானத்திலிருந்து பஸ்ஸில் ஏறி சுண்டுக்குளியில் அமைந்திருந்த வாதுலன் வீடு நோக்கி புறப்பட்டோம். வாதுலன் வீட்டிற்கு போக, ட்ரைவரிற்கு வழிகாட்ட நாங்கள் வெளிக்கிட, யோகதாஸ் தலையிட்டு தான் காட்டுறன் என்று முரண்டு பிடித்தான். பிரதான வீதியில் ஏறி நேராக போக வேண்டிய பஸ், வேம்படி கொன்வென்ட் எல்லாம் தாண்டி போகுது.

எங்களுக்கு யாழ்ப்பாணம் காட்டுறாராம்.


நல்ல உறைப்பான எலும்பு போட்ட ஆட்டிறைச்சி குழம்பு, வத்தின கோழி கறி, கீரை, கத்தரிக்காய் பால்கறி, மோர் மிளகாய், பப்படம், ஊறுகாய், ரசம், சிவப்பரிசி சோறு, என்று யாழ்ப்பாண மத்தியான சாப்பாட்டை ஒரு பிடிபிடித்தோம். குழப்படிகார வாதுலனிற்கு தனது இளைய மகளை திருமணம் செய்து கொடுத்த கணபதிப்பிள்ளை மாஸ்டரின் முகத்தில், தனது பழைய மாணவர்களை கண்டதும் ஏற்பட்ட சந்தோஷத்தை காண முடிந்தது.


கடைசியா ரசத்தை கோப்பையில் விட்டு வழித்து வழித்து சாப்பாட்டு விட்டு, கோப்பையில் மிச்சமிருந்த ரசத்தை உறிஞ்சி குடிக்க... சொல்லி வேலையில்லை.  வயிறு முட்ட இறுக்கிவிட்டு ஈஸிசேயரில் ஓய்வெடுக்க, பாயாசம் பரிமாறினார்கள்.

"தங்கச்சி, இன்பனிற்கு இன்னொரு கப் பாயாசம் வேணுமாம்.. அப்படியே எனக்கும் இன்னொன்று"

-----------------------------------

வியாழக்கிழமை இரவு, அல்லைப்பிட்டி கடற்கரையில் ஒன்றுகூடலிற்கு ஏற்பாடாகியிருந்தது. "மச்சான், என்னென்டா.. சூரிய அஸ்தமனம் அல்லைப்பிட்டி கடற்கரையில் இருந்து பார்த்தா சூப்பரா இருக்குமடா" கோபி எத்தனையோ தடவை சொல்லியும், ஆளை ஆள் இழுத்து பஸ்ஸில் ஏத்தி, பண்ணை பாலம் தாண்ட சூரியன் கடலுக்குள் இறங்கிக் கொண்டிருக்கும்  ரம்மியத்தை ரசித்தோம். வேலணை தாண்ட பனை மரங்களிற்கிடையில் சூரியன் அஸ்தமிக்கும் அந்த அற்புத கணம் கண்கொள்ளா காட்சியாக மனதில் பதிந்தது. 


"சூரியன் அவசரப்பட்டு விட்டது, நாங்கள் அல்லைப்பிட்டி போய்
சேரும் வரை பொறுத்திருக்கலாம்"


கடற்கரையில் டவலை சுத்தி காற்சட்டையை மாத்திக்கொண்டு தண்ணிக்குள் இறங்க சில்லிட்டுது, கல்லு காலில் குத்தியது. பாசிகளில் வழுக்காமல் மெல்ல மெல்ல அடிவைத்து கடலில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கடல் தண்ணிக்குள் அமர்ந்து அலட்ட தொடங்கினோம்.


அன்னப்பறவை வடிவிலான ஒரு Peddle Boatல் கடலில் கதையலம்பும் நண்பர்களிற்கு இறால் பொரியலும் குளிர்பானங்களும் ஆதியும் இரு அரவிந்தன்களும் மாறி மாறி கொண்டு வந்தார்கள். கடற்கரையில் இருந்த ஒலிபெருக்கியில் "ஆயிரம்.. மல்ரகளே மலருங்கள்" பாட்டு இசைக்கத் தொடங்கியது.

"மச்சான், இது அந்த மாதிரி இருக்கடா..சொர்க்கமடா"


கரையேறி உடல் கழுவி உடுப்பு மாத்தி கடற்கரை கதிரைகளில் அமர யாழ்ப்பாணத்து ஸ்டைல் BBQ வரவும் சரியாகவிருந்தது. உள்ளியை BBQல் போட்டு கொண்டு வந்தார்கள். பிறகு  கோழி, இறால், கணவாய், முட்டை, ஆடு என்று சாப்பாடு வந்து கொண்டேயிருந்தது. கதிரைகளை சுத்தி போட்டு இருந்து ஆளை ஆள் கடிக்க தொடங்கினோம்.


"மச்சான் கணா, நீ தமிழில் தூஷணம் கதைத்து நாங்க கேட்டதில்லையடா.. ஒருக்கா பேசிக்காட்டு செல்லம்"
கணா எழும்பி, காற்சட்டையை இழுத்து விட்டு விட்டு.. பேசினான், கணாவை பேசக் கேட்டவன் சொந்த செலவில் சூனியம் வைத்தான்.


"சொர்க்கத்தின் வாசல்படி" ஜேசுதாஸ் பாட, இளையராஜாவின் பாடல்கள் மீளவும் உருவாக்கிய பதின்ம பருவ சூழ்நிலையில், கதை காதல் நோக்கி திரும்பியது. அந்த காலத்தில் சுழற்றிய சரக்குகள் பற்றியும் சுழற்றாத சிஸ்டர்மார் பற்றியும் சுவை ததும்புப பெடியள் கதை கதையா சொன்னாங்கள். அன்று நெஞ்சை பிளந்து கண்ணீர் வரவழைத்த காதல் கதைகள் இன்று சிரிப்பை பரிசளித்தன. 

காதல் காயங்கள் ஆறிவிட்டன..--------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக்கிழமை இரவு உடுப்பிட்டியில் நவத்தார் வீட்டில் பார்ட்டி. நவத்தார், எங்கட இன்னுமொரு மண்டைக்காய், இன்று யாழ்ப்பாணத்தில் சிரிலங்கா டெலிகொம்மின் பெருந்தலை. நவத்தாரின் பழைய நாச்சார் வீட்டின் முற்றத்தில், மாமரத்திற்கு கீழ் மேசை கதிரை போட்டு, நுளம்பு வராமல் புகையும் அடித்திருந்தார்கள்.  தம்பி ஜேகே அண்மையில் எழுதிய யாழ்ப்பாணத்து நாச்சார் வீடுகள் பற்றிய பதிவின் அருமை, அந்த வீடுகளை நேரில் தரிசிக்கும் போது இன்னுமொரு படி மெருகேறியது. 


வெள்ளிக்கிழமை, கோயில் திருவிழா என்று சில கெட்ட சாமான்கள் "ஒரு நாள் நல்லவன்"களாக மாறினாலும் பம்பலுக்கு குறைவிருக்கவில்லை. விஜயன் வந்திறங்கி தனது சக Orthopaedics வைத்தியர்களுடன் மட்டும் படம் எடுக்க, நக்கல் உச்சத்தை தொட்டது. அதே பழைய அரண பரண கதைகள் வலம்வர, ஆயிரத்தெட்டாவது தடவையும் அந்த கதைகளை முதல் முதலாக கேட்ட போது சிரித்த அதே சிரிப்ப்பு மீண்டும் எதிரொலித்தது. 


இரவுச்சாப்பாட்டிற்கு, நவத்தார் அடுத்த ஒழுங்கையில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கும் இன்னொரு விதவிதமான சுவைமிகு யாழ்ப்பாண சமையல் நமக்காக காத்திருந்தது. அன்றிரவு புட்டை கணவாய்க் குழம்போடும் இடியப்பத்தோடு பால் சொதியில் பிசைஞ்சு இறால் பொரியலோடு சேரத்தடிக்க..சொல்லி வேலையில்லை பாஸ்...

எங்கட யாழ்ப்பாணமடா

அடுத்த பதிவில் முடிவுறும்..

2 comments:

 1. Excellent narrating Anna!
  Many thanks for sharing.
  I'm glad you had a wonderful time.

  Quick question:
  I really like the Johnian jersey in the pictures. Any chances you have an extra one? I'm willing to pay. Please let me know.
  Cheers,
  Bobby
  bobby.gajendra@gmail.com

  ReplyDelete
 2. கேட்கவே இப்பிடி இருக்கென்டா நேரில அனுபவித்த நீங்கள் லக்கீஸ்

  ReplyDelete