Friday, 8 April 2016

மீண்டும் பள்ளிக்கு.... அனுபவதித்ததிலிருந்து 4
மீண்டும் பள்ளிக்கு போகலாம் 
நம்மை நாம் அங்கு காணலாம்

"பள்ளிக்கூடம்" படத்தில் இடம்பிடித்த அந்த அருமையான பாடல் வரிகளை கேட்கவே உள்ளம் கூத்தாட தொடங்கும்.  துள்ளித்திரிந்த காலத்தில் ஓடித்திரிந்த பாடசாலை வளாகத்தை மீண்டும் தரிசிக்கும் போது ஏற்படும் உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது, அனுபவதித்து தான் உணரவேண்டும். அதே மீள்தரிசனம், பம்பலடித்து திரிந்த நண்பர்களுடன் என்று அமையும் போது விபரிக்க விளையும் சொற்களே பிடறியில் குதிக்கால் அடிக்க ஓடி ஒளியும். 


யாழ்ப்பாண வரவேற்பு வளைவில் நடுவீதியில் நின்று குறூப் படம் எடுக்க, ஏ9 வீதியில் சென்ற வாகனங்கள் சற்று நேரம் தரித்து நின்று எங்களுக்கு வழிவிட்டன. சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மினிவானின் ஓட்டுனர் கையசைத்து தனது மகிழ்வை வெளிப்படுத்தினார்.
"மச்சான், கணக்கர் சந்தியில் என்னை இறக்கி விடுங்கோ" லண்டன் ஜெய் நாவற்குழி பாலத்தடியில் கோரிக்கை வைக்க, கண்டி வீதியில் புங்கன்குளம் சந்தியை யார் கண்டுபிடிப்பது என்று எமக்குள் சிறு போட்டி. சுண்டுக்குளி மாணவி கிரிஷாந்தி உட்பட பலர் கொலை செய்து புதைக்கப்பட்ட செம்மணி வெளி தாண்டினோம். மாம்பழம் சந்தியை விஜயனும் நெடுங்குளம் சந்தியை அம்மானும் இதுதான் புங்கன்குளம் சந்தி என்று காட்டி மொக்கன் ஆனாங்கள். கடைசியில் எல்லாருமா சேர்ந்து ஒடுங்கிய புங்கன்குள வீதியில் பஸ்ஸிற்கு வழிகாட்ட, ரயில்வே கடவையை கடந்தோம்.


"இதான்டா யசியர்ட வீடு" நெடுங்காலம் எம்மோடு தொடர்பெடுக்காத ஆத்ம நண்பனொருவனை நினைவில் நிறுத்தினோம்.
லண்டன் ஜெய்யை கணக்கர் சந்தி தாண்டி நாகராஜா ஒழுங்கையில் இறக்கி விட்டிட்டு,  நீண்ட ஈச்சமோட்டை வீதிவழியே பஸ் பயணித்து, பழைய பூங்கா வீதியில் திரும்பி, பிரதான வீதியில் வளைந்து பரி யோவான் கல்லூரியின் பிரதான வாசலில் வந்து நின்றது. 

தாய் மண்ணே வணக்கம் !

எங்களை வரவேற்க வந்திருந்த ரோய் பிரதீபனுடன் சேர்ந்து நாங்கள் கல்லூரியின் பிரதான வாயிலில் படம் எடுக்க, பிள்ளைகளை கல்லூரியில் இறக்கி விட வந்திருந்த பெற்றோரும் மாணவர்களும் வீதியால் போவோரும் வேடிக்கை பார்த்தார்கள்.


-------------------------------------------------------------------------------------------------------------------------

"மச்சான், பதினொரு மணிக்கு பிரின்ஸிபலோடு அப்போய்ண்ட்மண்ட்" நூற்றி நாற்பத்து ஒன்பதாவது தடவையாக ஆதி இம்சை படுத்தினான்.

"மச்சான், நீ ஓட்டோல போ, நாங்க பிறகு வாறம்" டொல்ஃபின் வானில் நல்லூருக்கு போய் கும்பிட்டுவிட்டு உரும்பிராய்க்கு போகும் வழியில் ஆதிக்கு உபாயம் சொன்னோம்.

"கோர்ட் சூட் போட்டுக் கொண்டு, அவனை ஓட்டோல போகச் சொல்லுறியா ?" கஜன் உசுப்பேத்தினான்.

அடப்பாவிகளா


--------------------------------------------------------------------------------------------------------------------------

பத்தரைக்கு ஆதியை  டொல்ஃபினில் அனுப்பிவிட்டு, நாங்கள் பதினொன்றரைக்கு ஓட்டோ குமாருடன் கல்லூரியில் போய் இறங்கினோம். Cotton trouser, shirt, sun glass அணிந்து சின்ன கேட்டால் உள்ளிட்ட எங்களை கண்ட வொட்ச்சர் கண்களால் விசாரிக்க

"Old boys" புன்னகையுடன் வொட்சர் வரவேற்றார்.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்த சில நிமிடங்களில் எங்களோடு யாழ்ப்பாண படையணியும் இணைந்து கொள்ள எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குடியேறுகிறது. சிதைவடைந்த Robert Williams மண்டபம் கடந்து Male staff roomற்குள் எட்டி பார்க்கிறோம், எமக்கு படிப்பித்த ஆசிரியர் யாராவது தென்படுவார்களா என்ற நப்பாசையுடன்.

" மச்சான், எல்லாம் புது வாத்திமாரா இருக்கீனமடா"

பழைய சைக்கிள் பார்க் தாண்டி, மைதானத்திற்குள் காலடி வைக்கவும், இடைவேளை மணியடிக்கவும் சரியாகவிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த மாணவர்கள், சூட்கேஸை விக்கெட்டுகளாக வைத்து பிட்ச் பிடித்து, கிரிக்கட் விளையாட தொடங்கினார்கள். சில நிமிடங்களில் மைதானம் நிறைய மாணவர்கள், ஒரே நேரத்தில் ஆறேழு கிரிக்கட் மட்ச்கள்.

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே

"டேய் ஜூட், ஏலுமேன்றா என்னை அவுட்டாக்கு" ஆதி சவால் விட்டான்.

"தம்பி, ஒருக்கா எங்களை விளையாட விடுங்கோ" ரோய் பிரதீபன் மிரட்டலாக வேண்டுகோள் வைத்தான்.

"இந்தாங்கோ அங்கிள்" 

"அங்கிளோ, அடி....அண்ணாவென்று சொல்லடா" பந்து தந்த தம்பி பயந்தே போனான்.

பந்தை கையில் எடுத்து கொண்டு திரும்பி பார்த்தால், அந்த நெடிய மரமும், தண்ணீர் தாங்கியும், தண்ணீர் குடிக்கும் பைப்புகளும், பஞ்சலிங்கம் மாஸ்டர் வீடும் நினைவில் நிழலாட, மரத்திற்கு கீழே கச்சான் விற்கும் ஆச்சியும், ஜஸ்கிரீம் விற்கும் சிவகுருவும் கண்முன் தெரிந்தார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------


அருளானந்தம் ப்ளொக் நெடுக நடந்து ராஜசிங்கம் ப்ளொக் மூலையில் இருந்த குறுகிய படிக்கட்டில் ஏறி 1989ல் நாங்கள் படித்த Year 11Bஐ அடைந்தோம்.  இடைவேளை நேரம் விளையாடப் போகாமல் வகுப்புக்குள் இருந்த லூசுப்பயலுகள் பிரமித்து பார்க்க, வகுப்பறை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

"டேய், நான் தான் மொனிட்டர், எல்லாம் போய் இரு" நகு அன்று தான் வகிக்காத பதவியை இன்று தனதாக்கிக்கொண்டான். 

மண்டைக்காய் கணா, பழைய ஞாபகத்தில் முன்வரிசையில் அமர, முன்னாள் குழப்படிகாரன் வாதுலனும் அவனுக்கு பக்கத்தில் இடம்பிடித்தான்.
கடைசி வாங்கிலிருந்து கள்ளமாக Sports Star வாசித்த அருள்மொழியும் முன்வாங்கில் தன் உடலை திணிக்க, சிரித்து கொண்டே கப்டன் இன்பனும் அமர்ந்தான்.


தம்பிமாரின் கையில் அண்ணாமாரின் நவீன தொலைபேசிகள் அண்ணாமாரை படமெடுக்க, வாழ்வில் மறக்க முடியாத ஜந்தே ஜந்து நிமிடங்கள் இதயத்திலும் கமராவிலும் பதிவாகின்றன. பசுமை நிறைந்த நினைவுகள் என்று கடந்த காலத்தை ஏன் வர்ணிக்கிறார்கள் என்பதை நாங்கள் அனுபவித்து உணர்ந்தோம். 


"ஐசே.. ஏன் நிற்கிறீஈஈஈர்" பின்வாங்கில் எழுந்து நின்றவர்களை பார்த்து அந்த காலத்தில் எங்கள் வகுப்பை மேய்த்த சின்ன டொங்கரின் பாணியில், பழைய பொலிஸ் ரோய் பிரதீபன் அதட்டினான்.

-----------------------------------

அருளானந்தம் ப்ளொக்கின் மேல்மாடியில் நடக்க தொடங்க, 
தேவையே இல்லாமல் தேவராசா மாஸ்டரிடம் அடி வாங்கி படித்த, இல்லை நேரத்தை வீணாக்கிய, ஆர்ட் ரூம் வகுப்புகளாக உருமாறியிருந்தது.

"இதில தான் முந்தி ஆர்ட் ரூம் இருந்ததா சொல்லினம்" புதிதாக வந்த ஆசிரியர் எங்களுக்கு பரி யோவான் வரலாறு போதித்தார்.

காலமடா சாமி !

--------------------------------------------------------------------------------------------------------------------------

படியால இறங்க சந்திரமெளலீசன் மாஸ்டர் எங்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது. 1981ல் எங்களுக்கு 2ம் வகுப்பில் வகுப்பாசிரியராக தனது ஆசிரியப்பணியை தொடங்கிய மெளலீசன் மாஸ்டருக்கு இந்தாண்டு ஆசிரியப்பணியில் வெள்ளிவிழா ஆண்டு.

எங்களை கண்டதும், அடையாளம் கண்டு கொண்டு, முகம் மலர்ந்து, நெற்றியில் கை வைத்து

"இஞ்ச பாருங்கோடா.. எல்லா குழப்படி கோஷ்டிகளும் வந்திறங்கியிருக்கு" மெளலீசன் மாஸ்டர் மெய்சிலிர்த்தார்.


"சேர், காதல் பொங்க நீங்கள் நளவெண்பா படிப்பித்தது மறக்கேலாது" பக்கத்து வகுப்பில் படித்த நகு கலாய்த்தான்.


"சேர், ரெண்டாம் வகுப்பில் நீங்கள் போட்ட, விசுவாமித்திரன் நாடகம் ஞாபகம் இருக்கா" யோகதாஸ் நினைவுபடுத்தினான்


"அதை எப்படி மறக்கேலும், யாதவன், இறைவன் நடித்தவங்கள், எங்கட விஜயனும்" மெளலீசன் மாஸ்டருக்கு ஞாபகம் இருந்தது.


"சேர், நானும் நடித்தனான். மரமாக.. ஜ மீன் ஒரு பெரிய மரக்கொப்பை பிடித்து கொண்டு விசுவாமித்திரனுக்கு பின்னால நின்றனான்" நானும் இணைந்து கொண்டேன்.


பக்கத்தால போன டீச்சர்மார், "சேருக்கு இன்றைக்கு பிறந்தநாள்" என்று சொல்ல, நாங்கள் எல்லோரும் சேர்ந்து சத்தமாக Happy Birthday பாடினோம். அசெம்பிளிக்கு அணிவகுத்து சென்ற பொடியள் சிரித்தார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------


Principalலோடு நடந்து போய், Peto Hallல் முன்வரிசையில் assemblyயில் இருக்க, வித்தியாசமாய் இருந்தது. அன்றைய Assemblyயில் 1990 Big Matchல் 145 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்த எங்கள் batch நண்பன் சுரேன் சிறப்புரையாற்றினான். இன்றுவரை வடக்கின் பெரும் போரில் highest individual scorer எனும் பெருமையை சுரேன் தக்கவைத்துள்ளான்.


எங்களோடு பக்கத்திலிருந்து பம்பல் அடிக்கும் சுரேன், எடுப்பாக மேடையில் ஏறி விலாசமாக பேச, பெருமை கொண்டோம். கிரிக்கட்டும் பரி யோவானும் தனக்கு கற்று தந்த வாழ்க்கை பாடங்கள் பற்றி கருத்தாழமிக்க உரையாற்றினான் சுரேன். சுரேனின் துடுப்பாட்டம் போலவே, அவனது உரையாற்றிய பாணியிலும் வேகமும் ஸ்டைலும்
இருந்தது.  சுரேன் தனது உரையை தன் சொந்த வாழ்வனுபவத்தையும் Alex Ferguson போன்றோரின் சுயசரிதை புத்தகங்களையும் மையப்படுத்தி வடிவமைத்திருந்தான்.

எழும்பி நின்று கைதட்டியிருக்கோணும்யோகதாஸின் மகனிற்கு அன்று பரி யோவான் U13 கிரிக்கட் அணியின் சிறந்த fielderற்கான விருது கிடைத்தது சந்தோஷத்தை தந்தது.

புலிக்கு பிறந்தது...

--------------------------------------------------------------------------------------------------------------------------

அசெம்ப்ளியில் பழைய மாணவர்களின் பிறந்த நாளிற்கு கேக் வெட்ட தொடங்க, பரி யோவான் பிரதான வாயில் பக்கம் தாரை தப்பட்டை சத்தங்கள் கேட்க தொடங்கின. நகுவிற்கும் எனக்கும் இருப்பு கொள்ளவில்லை. ஆளுக்காள் கண்ணை காட்டி விட்டு இருவரும் எழுந்து மண்டபத்தை விட்டு வெளியேறினோம்.


"பயந்த மாதிரி காட்டாதே, நெஞ்ச நிமிர்த்தி நடந்து வா" பிரதான வாயிலிற்கு வெளியே மத்திய கல்லூரி மாணவர்கள் அவர்களின் கல்லூரி கொடிகளோடு ஆடுக்கொண்டிருக்க, நகு தைரியமளித்து என்னை கூட்டிக்கொண்டு போனான்.


ஆடுற மத்திய கல்லூரி பொடியளிற்கு கிட்ட போய் நாங்க வேடிக்கை பார்க்க, அவங்களுக்கு உற்சாகம் பிறந்து வெறித்தனமாக ஆடினாங்கள். ஒரு சுற்று ஆடிமுடிய, நகு சொன்னான்


"ஏன்டா இங்க நின்டு மினக்கிடுறீங்கள், சுண்டுக்குளிக்கு முன்னால போய் ஆடுங்கோவன்"

"மணி ஐடியா அண்ணே" பொடியள் பறந்திட்டாங்கள். பிரதான வாயிலிற்கு வெளியே ஆடிய மத்திய கல்லூரி கோஷ்டியை சாணக்கியமாய் கலைத்த நகு, அதை பார்த்துக்கொண்டிருந்த பரி யோவான் அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் பிரபலமானான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------


நகுவும் நானும் திரும்ப வரவும் அசெம்ப்ளி முடிந்து தம்பி கோபி வெளில வரவும் சரியாக இருந்தது.

"அண்ணே என்ன விலாசமா, அசெம்ப்ளி நடுவில எழும்பி போனீங்கள், சென்ரல்காரன்களிட்ட அடி கிடி வாங்கினீங்களோ" கோபியின் கேள்வியில் மேலோங்கியது நக்கலா நளினமா என்று மூளை பட்டிமன்றம் நடாத்த..


"இங்க பாரும் ஜசே, பொடியள் லைன்னில் போகாமல் கண்ட பாட்டுக்கு போறாங்கள், அதை முதலில் கவனியும்" நாங்கள் திருப்பி தாக்கினோம்.


"உங்கட காலம் போல இல்லை அண்ணே இப்ப, சொல்லி பாருங்கோவன், உங்களுக்கே விளங்கும்" கோபி அங்கலாய்த்தான்.


"தம்பிமார், லைனில் போங்கோடா.. ஐசே உமக்கு சொல்லுறது விளங்கேல்லயோ" எங்களை வெருட்டி வழிநடத்திய Prefectsஐ போல் நாங்கள் கட்டளை பிறப்பித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம்.


சில நிமிடங்களில் பாடசாலை மணி அடிக்க அன்றைய நாள் பாடசாலை முடிவுக்கு வந்தது. சைக்கிள்களை எடுத்துக்கொண்டு கல்லூரியின் பிரதான வாயிலை நோக்கி படையெடுத்த தம்பிமாருடன் நாங்களும் சங்கமித்து, பசுமை நிறைந்த நினைவுகளை மீண்டுமொருமுறை வாழ்ந்து அனுபவித்தோம்.


பரி யோவான் வாசலிற்கு வெளியே, பிரதான வீதியை கடக்க, வாகனங்களை நிறுத்தி எமக்கு வழிசமைத்து தந்த சிரிக்கும் சிரிலங்கா பொலிஸ்காரன் மட்டும் ஏனோ அந்நியமாய் தெரிந்தான். 

மீண்டும் பள்ளிக்கு போகலாம் 
நம்மை நாம் அங்கு காணலாம்

4 comments:

  1. Take maximum photos. .. its give you stories again. ..enjoy the rest of the day..

    ReplyDelete
  2. Take maximum photos. .. its give you stories again. ..enjoy the rest of the day..

    ReplyDelete
  3. When dream comes true you have no words. Superb your script is emotional expression of words . Each word and photo have a story behind it.

    ReplyDelete