Friday, 1 April 2016

அனுபவித்ததிலிருந்து 3.. Big Match 2016இளநீர் குடித்துவிட்டு திரும்பிவர, ஒரு சின்ன ட்ரக்கில் பரி யோவான் மாணவர்கள் கொடிகளோடும் பீப்பிகளோடும் தாரை தப்பட்டைகளோடும் நிற்கிறாங்கள்.

என் இனமே என் சனமே

"தம்பி நாங்களும் வரட்டோ" பம்மினோம், ஆட்டத்திற்கு எங்களையும் சேர்ப்பாங்களோ என்ற சந்தேகம்.

"அண்ண.. என்ன விசர்க்கதை.. ஏறுங்கோ" .. தம்பிடா

"ஏத்தி விடுங்கோடா" முக்கி தக்கி ட்ரக்கில் ஏறினோம், இல்லை தம்பிமார் ஏற்றி விட்டார்கள்.


கஜன், உரும்பிராய் அரா, ஜெய், நகு என்கிற ரகு, கணாவோடு நானும் இளம் பொடியளோடு சேர்ந்து ஏற ட்ரக் நிறைந்து விட்டது. ஒரு மூச்சு பிடித்து இழுத்து ட்ரக் நகர தொடங்கியது. மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள யாழ் மணிக்கூட்டு கோபுரத்தையும் அதை சூழ அமைக்கப்பட்டுள்ள தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், சங்கிலியன் ஆகியோரது உருவச்சிலைகளையும் ஒரு முறை வலம் வந்து வேம்படி மகளிர் கல்லூரி நோக்கி ட்ரக் பயணிக்கிறது. வழியில் மத்திய கல்லூரி மாணவர்கள் பாசறையிலிருந்து கூய் சத்தங்கள் ட்ரக்கை குறிவைக்கின்றன. 


வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் சில நிமிடங்கள் தரித்து நின்று வாத்தியங்கள் முழங்க, ட்ரக்கிலிருந்தவாறே பொடியள் ஆய் ஊய் என்று கத்த, நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம். 


நாங்க இன்னும் ஃபோர்மிற்கு வரவில்லை.


ஒரு u turn அடித்து திருப்பி, மீண்டும் மைதானம் நோக்கி வந்து, மத்திய கல்லூரி காரன்களின் பலத்த எதிர்ப்பை முறியடித்து, தமிழ் மன்னர்களின் சிலைகளை மறுமுறை வலம் வந்து, மணிக்கூட்டு கோபுர வீதியில் ட்ரக் மிதக்க தொடங்குகிறது. 


1980களின் இறுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டையன் குழு கோலோச்சிய அசோக் ஹோட்டலில் இன்று சிரிலங்கா பொலிஸ் நிலையம். பொலிஸ் நிலையத்தடியில் ஆயுதங்கள் முறுக்கேற்றப்பட, புதிதாக திறக்கப்பட்ட வெள்ளை நிற ஜந்து மாடி Jetwings ஹோட்டலை தாண்டுகிறோம்.


"ஆஸ்பத்திரி தாண்டு மட்டும், சத்தம் போட வேண்டாம்" சிவப்பு கறுப்பு ஷேர்ட் அணிந்த சிறப்பு தளபதி தம்பி தீபன் கட்டளையிடுகிறார், மூத்த போராளிகளான நாங்கள் கட்டுப்படுகிறோம். மணிக்கூட்டுகோபுர வீதியிலிருந்து இடப்பக்கம் திரும்பி ஆஸ்பத்திரி வீதியில் ட்ரக் பயணிக்கிறது. பூபாலசிங்கம் பொத்தக சாலையடியில்

"தம்பி, மேளத்தை ஓஸ்ரேலியாகாரனிட்ட குடுங்கோடா, அடி தூள் கிளப்புவான்"


கொஞ்சம் தெம்பு கலந்து உரத்து குரல் கொடுக்க, மேளமடிக்கும் தடி கணாவின் கையில் ஏறுகிறது. யாழ்ப்பாணத் தம்பி மேளத்தை பிடிக்க ஒஸி கணா தன்னுடைய வித்தையை யாழ் நகரின் மத்தியில் அரங்கேற்றுகிறான்.


College... College 
St. John's College

எங்கட College 
St. John's College

உங்கட College
St. John's College

அப்பாட college
St. John's College

அம்மாட College
St. John's College

டேய் சுண்டுக்குளிடா..


வாகனத்தில் சிரிப்பலை அதிர அந்த காலத்து நாங்களும் இந்த காலத்து அவங்களும் அன்னியமானோம். ட்ரக் காங்கேசன்துறை வீதியில் வலப்பக்கம் திரும்பி யாழ் இந்துக் கல்லூரி நோக்கி பயணிக்க தொடங்கியது. பரி யோவானின் கொடிகள் வானத்தில் அசைத்தாட யாழ் நகர வீதிகளில் நாங்கள் பயணிக்கும் தருணங்கள் மெய் சிலிர்க்க வைத்தன.

"மச்சான், this is the best part, glad that I made it" லண்டன் ஜெய் நெகிழ்ந்தான். 

ட்ரக்கின் நடுவில், ஒரு கையில் கொடியோடும் மறுகை யாரோ ஒரு தம்பியின் தோளைபிடித்துக் கொண்டும், தொத்துபொறியில் ஜெய்யின் உணர்வை உள்வாங்கிக்கொள்கிறேன். ஒரு கரையில் கஜன் ரோட்டோரம் போவோரை பார்த்து கொடியசைத்து கொண்டிருந்தான். நகு ஒரு மூலையில் கம்பியை இறுக்கமாக பிடிக்க, அரா மட்டும் கண்ணும் கருத்துமாக வீடியோ எடுத்து கொண்டிருந்தான்.

"மச்சான், படங்களை WhatsApp பண்ணு, foruத்தில் போட்டு விசரை கிளப்போணும்"


மிளிரும் நீல வெள்ளை,யாழ்ப்பணாத்தின் அறிவுக்களஞ்சியமாம்,  இந்துக்கல்லூரியின் கட்டிடங்களையும் மைதானத்தையும் தாண்டி, இந்து மகளிர் கல்லூரியடியில் வாகனத்தை நிறுத்தினார்கள். வாகனத்தில் வந்த ஒரு தம்பியின் சரக்கு இந்து மகளிர் கல்லூரியில் படிக்கிறாவாம். 

வாழ்க வளமுடன்

90 big match நடந்த போது, வீட்டிலிருந்து தேற்றம் நிறுவி பழகின, மண்டைக்காய் கணா, வீதியில் இறங்கி, இந்து மகளிர் கல்லூரி வாசலில் அட்டகாசமாய் மேளம் அடித்த அந்த காட்சியை காண, கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ட்ரக்கை திருப்பிக் கொண்டுவந்த தம்பிமார், ஏதோ ஒரு ரோட்டால போட்டு திருப்பி பலாலி வீதியில் ஏத்தினாங்கள். திருநெல்வேலி சந்தை தாண்ட பக்கத்தில் நின்ற ஒரு தம்பி, இன்னொருத்தனை தட்டி 

"டேய், உன்ட கொப்பரடா"

அவன் படக்கென்று ட்ரக்கிற்குள் பதுங்க நாங்கள் அவனை கல்லூரி கொடியால் மறைத்தோம். ஆரியகுள சந்தியில் வாகனம் இடப்பக்கம் திரும்பி ஸ்டான்லி வீதியில் ஏறும் வரை, "கொப்பர் கண்ட அம்பி", குழம்பியடித்து "என்னை அப்பர் கண்டிருப்பாரா மச்சான்" என்று ஆயிரம் தடவை கேட்டு எல்லோரையும் வெறுப்பேத்தினான்.


ஸ்டான்லி வீதியில் அத்தியடி வீதி கடக்க, வீதியோரத்தில் விபத்தில் அடிபட்ட ஒரு இளைஞன் வீதியில் விழுந்து கிடக்க, சுற்றிவர சனம். முகத்தில் ரத்தம் வழிய வீதியில் விழுந்து கிடந்த இளைஞனை கண்டதும், மேளதாளங்களை உடனடியாக நிறுத்தி வாகனத்தை ஓரங்கட்டினார்கள், பரி யோவானின் மாணவர்கள்.

"மச்சான் ஓட்டோவை மடக்கு"

வீதியில் வந்த ஓட்டோவை மறித்து, காயப்பட்ட இளைஞனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, வீதியில் குழுமியிருந்த சனத்தின் மத்தியில் எழுந்த சலசலப்பை சமாளித்து, வாகனத்தில் மீண்டும் ஏறிய பரி யோவான் மாணவர்களை பார்க்க உண்மையிலேயே பெருமையாக இருந்தது. 

"Lux in tenebris luce
Light shines in the darkness"


இராசாவின்தோட்ட வீதியில் வளைந்து, தண்டவாளம் தாண்டி, மடத்தடி வீதியில் மிதந்து, பிரதான வீதியை அடைய, பழையபடி தாரை தப்பட்டைகள் முழுங்க தொடங்கியிருந்தன. ரோட்டோரம் சனம் சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்க, பஸ்தியான் சந்தி, ஆளில்லா பரி யோவான் வளாகம், பழைய பூங்கா வீதி சந்தி தாண்டி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் முன் வாகனம் நிறுத்தத்திற்கு வந்தது. 


1990 Big Match மூட்டம் எம்மோடு பம்பலடித்து, அண்மையில் எம்மை விட்டு பிரிந்த Michael, சிவகுமரன் (சேரலாதன்) அதே இடத்தில் ஆடிய காட்சி கண்முன் விரிய, இளமைக்கால நினைவுகளுடனும் உற்சாகத்துடனும் நாங்கள் களத்தில் இறங்கி ஆட, தம்பிமார் மேளம் கொட்டினார்கள்.


இருபதில் அனுபவிக்காதது
நாற்பதில் அனுபவித்தோம்


மீண்டும் வாகனமேறி, வியர்வை கொட்ட கொட்ட, யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியூடாக, பயணிக்க தொடங்கினோம். வழிநெடுக கணாவின் மேளதாளத்திற்கு கால்கள் தானாக ஆட பரி யோவானின் சிவப்பு கறுப்பு நிற கொடி காற்றில் கம்பீரமாக அசைந்தாடியது. யாழ் நீதிமன்ற வளாகத்தடியில் மெளனம் காத்து, தந்தை செல்வா நினைவுத்தூபியடியில் திரும்பி, யாழ் நூலகத்தை அண்ணாந்து பார்த்து முடிய, ட்ரக் மைதானத்தடியில் வந்து நின்றது.

"தாங்கஸடா தம்பிமார், சந்தோஷமடா"

"அண்ணே, நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லோணும்"

நாங்கள் பாசமழையில் நனைய, பழைய மாணவர்களிற்கான வாசலில் cowboy hatம் விஜயகாந்த் sunglassesம் அணிந்து முறுக்கின மீசையோடும் body languageல் கடுப்போடும் மிடுக்கோடும் சிரிக்காமல் கிரிக்காமல் வரவேற்றார், தம்பி கோபிகிருஷ்ணா, பரி யோவானின் ஒழுக்கத்துறை பொறுப்பாளர்.

"கோபி,  என்ன ஸ்கோர் தம்பி"தொடரும்

அனுபவித்ததிலிருந்து 1
http://kanavuninaivu.blogspot.com.au/2016/03/2016-big-match.html

அனுபவித்ததிலிருந்து 2


2 comments: