Friday, 22 April 2016

2016 Big Match.. அனுபவித்ததிலிருந்து 6


வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 110வது கிரிக்கட் ஆட்டம் மார்ச் 10, 2016ல் ஆரம்பமாகியது. கொழும்பில் Battle of the Blues என வர்ணிக்கப்படும் Royal Thomian கிரிக்கட் ஆட்டம் ஆரம்பமான அதே நாளில் யாழில் Battle of the North ஆரம்பமாகியது. இரு ஆட்டங்களும் Paparae TVயில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

நாங்களும் ஏலும்...

முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 75 ஓவர்கள் ஆடி 161 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பரி யோவானின் பந்து வீச்சு அபாரமாக இருந்தாலும் களத்தடுப்பில் இருந்த பலவீனம் மத்திய கல்லூரியை 161 ஓட்டங்களை எட்ட வழிசமைத்தது. பரி யோவானின் ஜதுஷன் 39 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளையும் நிலோஷன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


பரி யோவானின் ஆரம்பத்துடுப்பாட்டக்காரர்கள் நொட்டி விளையாட தொடங்க எங்களுக்கு கொட்டாவி வர தொடங்கியது. 14வது ஓவரில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதலாவது பரி யோவான் விக்கட் சரிந்தது. 27ல் இரண்டாவது விக்கெட்டும் 33வதில் மூன்றாவது விக்கெட்டும் சரிய வந்த கொட்டாவி பறந்து, நாடியில் கை வைத்தோம்.


களத்தில் பரி யோவானின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜெனின் ப்ளெமிங்கும் கபில்ராஜும் மத்திய கல்லூரியின் பந்து வீச்சை எதிர்கொண்டார்கள்.  ஜெனின் ப்ளெமிங் கடந்த ஆண்டு Big Matchல் நூறடித்தவர், முந்தைய வாரம் St. Patricksற்கு எதிராகவும் நூறடித்தவர். ஆனால் அன்றைய அவரது ஆட்டத்தில் ஏனோ தடுமாற்றம் தெரிந்தது. 42வது ஓட்டத்தில்  ஜெனின் ப்ளெமிங் ஆட்டமிழக்க மத்திய கல்லூரி அணியினரும் ஆதரவாளர்களும் ஆரவாரிக்க நாங்கள் சோபையிழந்தோம்.

என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களேம்மா..


அடுத்து வந்த பதினைந்து நிமிடங்களும் பரி யோவான் அணி அதிரடியாக அடித்தாடத் தொடங்கியது. கபில்ராஜுடன் இணைந்த கிஷன்துஜன் பவுண்டரிகளும் சிக்ஸரும் அடிக்க, காணாமல் போயிருந்த உற்சாகம் எங்களுக்குள் மீண்டும் வந்தது.  முதல்நாள் ஆட்ட முடிவில் பரி யோவான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்களை பெற்றிருந்தது.


இரண்டாம் நாள் காலை பரி யோவான் அணியின் வெற்றிக்காக பிரார்த்திக்க நாங்கள் கீரிமலை நோக்கி பயணமானோம். ஒவ்வொரு ஜந்து நிமிஷமும் SJC92 WhatsApp குறூப்பில் அருள்மொழியும் ஆதியும் மாறி மாறி நேரடி update தந்து கொண்டிருந்தார்கள். 78ல் கபில்ராஜ் ஆட்டமிழக்க நாங்கள் நகுலேஸ்வரத்தில் காலடி எடுத்து வைத்தோம். நகுலேஸ்வரத்தில் கும்பிட்டுவிட்டு வந்து ஜயர் கடையில் சோடா குடிக்க, 108/8. 

ஆண்டவா.. என்ன சோதனை இது.


WhatsAppஐ மூடிவிட்டு கீரிமலை கேணித்தண்ணி கடலில் கலக்கும் இடத்தில் இறங்கி, முக்கி முழுகி பாவங்களை கழுவினோம். காலில் கல்லு குத்த பாசியில் வழுக்கி விழாமல் ஆளை ஆள் பிடித்து கொண்டு கடலில் இறங்கி மூச்சு பிடித்து படம் எடுத்தோம். கரையிலிருந்து ஜனா கத்தினான் 133/9. மீண்டும் மூன்றுமுறை கடல் தண்ணீரில் தலை முழுகி, மிச்ச பாவத்தையும் கரைத்தோம். 

மச்சான், இங்க பார்டா.. யாரோ செய்த பிதிர்கடன் மிதந்து வருது


மறைவாய் நின்று துடைத்து களுசாண் மாற்றி பஸ்ஸில் ஏற, மைதானத்தில் மதிய உணவு இடைவேளை என்று செய்தி வந்தது. மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மைதானத்திற்குள் நுழைய பரி யோவானின் கடைசி துடுப்பாட்ட வீரன் ஜோசப்புடன் அணியின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரன் ஜதுஷன் இணைந்து களமாடுகின்றனர். இருவரும் இணைந்து ஒவ்வொரு ஓட்டங்களாக எடுத்து மத்திய கல்லூரி அடித்த ஓட்டங்களை தாண்டி 163 என்ற இலக்கை எட்ட, ஜோசப் ஆட்டமிழக்கிறார். 53 ஓவர்களில் 163 ஓட்டங்களை எடுத்த பரி யோவான் அணிக்கு கிஷன்துஜன் 31, ஜதுஷன் 28, கபில்ராஜ் 22, நிலோஷன் 15 ஓட்டங்களை அடித்து பலம் சேர்த்தார்கள். 


இரண்டாவது இன்னிங்ஸில் ஆடத்தொடங்கிய மத்திய கல்லூரி மீண்டும் மந்த கதியில் ஓட்டங்களை எடுக்க ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பரி யோவான் அணியினர், அதன்பின் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் கடுமையாக போராட வேண்டியிருந்தது. களத்தடுப்பில் இருந்த பலவீனமும் கோட்டை விட்ட கட்ச்களும் பரி யோவானின் பந்து வீச்சாளர்களை உற்சாகமிழக்க செய்தன. மத்திய கல்லூரி 164/4 எனும் பலமான நிலையில் இருக்க இரண்டாவது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. 


மூன்றாவது நாள் ஆரம்பமே பரி யோவான் அணியினருக்கு கோணலாக அமைந்தது. முதல் ஜந்து ஓவர்களில் பிடிக்க வேண்டிய இரு கட்ச்கள் தவறவிடப்பட மத்திய கல்லூரியின் ஒட்ட எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. மூன்றாவது நாள் ஆரம்பத்திலேயே தவறவிட்ட கட்சால் பயனடைந்த கிருபாகரன், அதன்பின் திறமையாக ஆடி 103 ஓட்டங்களை அடித்து மத்திய கல்லூரி அணியை ஒரு பலமான நிலைக்கு கொண்டு வந்தார். 


இரண்டாவது இன்னிங்ஸை declare பண்ணி ஆட்டத்தை விறுவிறுப்பாக்குவார்கள் என்று பார்வையாளர்கள் ஏங்க, மத்திய கல்லூரி அணியினரோ எந்த வித அவசரமும் காட்டாமல் ஆடிக்கொண்டே இருந்தார்கள். 200வது ஆண்டை கொண்டாடும் மத்திய கல்லூரி அணி ஆட்டத்தில் வெல்வதை விட தோல்வியை தவிர்ப்பதில் குறியாக இருந்தது. மதிய இடைவேளைக்கு சற்று முன்னர்
அனைத்து விக்கெட்டுகளும் இழக்கப்பட 94 நீண்ட ஓவர்களில் 264 ஓட்டங்களுடன் மத்திய கல்லூரியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஒருவாறு முடிவிற்கு வந்தது. பரி யோவான் அணிக்கு கபில்ராஜும் ஜதுஷனும் தலா மூன்று விக்கெட்டுகளையும் நிலோஷனும் அணித்தலைவர் ஞானமித்ரனும் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.


வெற்றிபெற 63 ஓவர்களில் 263 ஓட்டங்கள் என்ற இலக்கு நோக்கி பரி யோவான் அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது, ஓவரிற்கு 4.2 ரன்கள் எடுத்தாக வேண்டும். பரி யோவான் அணிக்கும் மத்திய கல்லூரி அணியின் சோம்பல் தொற்றிக் கொள்ள, அடித்தாட வேண்டிய அணி, நின்று நிதானித்து ஆடத்தொடங்கியது. 22 ஆவது ஓவரில் 40 ஓட்டங்கள் எடுத்த வேளை முதலாவது விக்கெட் விழ, களமிறங்கினார் ஜெனின் ப்ளெமிங். 


பத்தொன்பது வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தேர்வில் இடம்பிடித்த ஜெனின் அடித்தாடுவார் என்று பார்த்தால், பசையலில் விக்னபாலனை விஞ்சினார். கொளுத்தும் வெயில் ஒரு பக்கம், வெறுப்பேற்றும் பரி யோவான் அணியின் துடுப்பாட்டம் மறுபுறம் என்று பார்வையாளர்கள் வாடி வதங்கினார்கள். தேநீர் இடைவேளையில் பரி யோவான் 64/2 எனும் நிலையில் இருந்து. 30 ஓவர்களில் 200 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். 

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி...


மூன்றாவது விக்கெட் 91 ஓட்டங்களில் விழுத்தப்பட களமிறங்கிய நிலோஷன் விளாசத் தொடங்கினார். 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட 24 ஓட்டங்களை 20 பந்துகளில் அடித்து நிலோஷன் ஆட்டமிழக்கும் போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 124/4. பரி யோவான் அணி 130 ஓட்டங்கள் எடுத்தவேளை ஜெனின் ப்ளெமிங் 107 பந்துகளில் அடித்த 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கபில்ராஜ் ஜதுஷன் கூட்டணி களத்தில் ஒன்றிணைந்தது. 


கடைசி 7 ஓவர்களில் 49 ஓட்டங்களை குவித்து பார்வையாளர்களை பரவசப்படுத்திய இந்த இரு துடுப்பாட்டக்காரர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கபில்ராஜ் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கிய 31 ஓட்டங்களையும், ஜதுஷன் 2 பவுண்டரிகள் அடங்கிய 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் அடிக்க, பரி யோவான் அணி 179/5  என்ற நிலையில், 110வது வடக்கின் பெரும் போர் இரு அணியினருக்கும் வெற்றி தோல்வியுற்ற நிலையில் முடிவிற்கு வந்தது. 


பரி யோவான் அணியில் மாணவர்களிற்கிடையில் மிகப்பிரபலமான ஆட்டக்காரனாக திகழ்ந்தவர் நிலோஷன். நிலோஷன் களமிறங்கும் போதும் பந்து வீசும் போதும் மாணவர்கள் பகுதியில் ஆரவாரம் கேட்கும். நிலோஷன், வன்னி மண்ணிலிருந்து பரி யோவான் 
2009ம் ஆண்டு உள்வாங்கிய 620 மாணவர்களில் ஒருவன். 


இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, மெனிக் முகாமில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களிலிருந்து 620 பேரை,  பரி யோவானின் அதிபர் வண.ஞானபொன்ராஜா பொறுப்பெடுத்து விடுவித்து, பாடசாலையின் விடுதியில் இலவசமாக தங்க வைத்து, கல்லூரியில் இணைத்து கொண்டார். பரி யோவான் கல்லூரியின் இந்த செயற்பாட்டிற்கு,   லண்டன், மெல்பேர்ண், கனடா, சிட்னியில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள் பாரியளவில் நிதிப்பங்களிப்பு செய்தன.


2016ன் Big Match ஆட்டம் விறுவிறுப்பு அற்றதாக அமைந்தது ஏமாற்றமளித்தாலும், மீண்டும் எங்கள் யாழ் மண்ணில் தடம் பதித்து, பழைய நண்பர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்த பசுமையான நினைவுகளுடன் எங்கள் யாழ்ப்பாண பயணம் இனிதே நிறைவுற்றது. 

அனுபவித்ததிலிருந்து
http://kanavuninaivu.blogspot.com.au/2016/03/2016-big-match.html


அனுபவித்ததிலிருந்து 2
http://kanavuninaivu.blogspot.com.au/2016/03/22016-big-match.html


அனுபவித்ததிலிருந்து 3
http://kanavuninaivu.blogspot.com.au/2016/04/3-big-match-2016.html


மீண்டும் பள்ளிக்கு...அனுபவித்ததிலிருந்து 4
http://kanavuninaivu.blogspot.com.au/2016/04/4.html

அனுபவித்ததிலிருந்து 5
http://kanavuninaivu.blogspot.com.au/2016/04/5.html


No comments:

Post a Comment