Thursday, 10 March 2016

யாழ்ப்பாணத்தில்.....


நாற்பது சொச்ச வருட வாழ்க்கையில் மிகக் குறைந்தளவு வருடங்களே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்தாலும், யாழ்ப்பாணத்தில் கொண்ட காதல், கொழும்பிலோ மெல்பேர்ணிலோ வரவில்லை. யாழ்ப்பாணத்தை நான் அன்றும் காதலித்தேன், இன்றும் காதலிக்கிறேன். யாழ்ப்பாணம் மட்டும் என் காதலை என்றும் ஏற்றதில்லை, ஆனாலும் ஒரு தலை காதலாக என் காதல் தொடர்கிறது. அவள் என் காதலை ஏற்க விடாப்பிடியாக மறுக்க மறுக்க, யாழ்ப்பாணத்தில் எனக்கிருக்கும் காதலும் வீறாப்பாய் தொடர்கிறது.


யாழ்ப்பாணம்..
என்றென்றும் என் காதலி
என்னை காதலிக்காத காதலி


டுபாயிலிருந்து கொழும்புக்கு விமானம் ஏற ஆயத்தமாக "யாழ்ப்பாணம் போகப் போகிறேன்" என்று மனம் உற்சாகமாக, கண்கள் பனித்தன. சென்னை தாண்டி, இலங்கைத் தீவிற்கு மேல் விமானம் பறக்க, ஒரு சிறுவனை போல் யன்னலில் முகம் புதைத்து யாழ்ப்பாணத்தை தேடுகிறேன். மறைத்த முகில் அகழ, நாங்கள் கோலோட்சிய  நீல நிற ஆழக்கடலில், யாழ்ப்பாணத்தை தேடுகிறேன். பார்வைக்குள் வர அவள் மறுக்கிறாள். விமானத்தின் வலப் பக்கத்தில் நான், விமானத்தின் இடப் பக்கத்தில் யாழ்ப்பாணம், தொடர்ந்தும் என்னை யாழ்ப்பாணம் தவிக்க வைத்தது.


யாழ்ப்பாணம்..
என்றென்றும் என் காதலி
என்னை காதலிக்காத காதலி


சிவராத்திரி விடுமுறை தினத்தில், கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்க, கட்டுநாயக்கா மண்ணில் 2001ல் வீரசரிதம் படைத்த மறவர்களை நினைவில் நிறுத்தி, கண் மூடி ஜெபிக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறை கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்கும் போதும், அந்த மறவர்கள் நினைவில் நிழலாடுவார்கள். தோளில் Backpackஐசுமந்து கொண்டும் மற்ற கையில் Bagஐ இழுத்து கொண்டும் விமானத்திலிருந்து பரபரப்பாக இறங்குகிறேன்.


விமான நிலையத்தில் முந்தைய தடவைகளில் நம்மை பயமுறுத்திய மகிந்தவின் மாபெரும் படம் இருந்த இடத்தில் குட்டியாய் My3 சிரித்தார். அந்த இடத்தில் ஒருக்கா நின்று,  முஷ்டி மடக்கி கையை முன்னும் இழுத்து "yes we did it" என்று ஆட்டம் போட்டது மனது. பம்மடிக்க போன இடத்தில், என்னுடைய சிங்களத்தை பரிசோக்க பாத்ரூமில் ஒருத்தன் தனியா மாட்டினான்.


"அத நிவாடு தவசத, பொஸ்" (இன்று விடுமுறை நாளா ?) சிங்களத்தில் கன்னியுரையாற்றினேன்.

"ஓவ் (ஓம்)" துடைப்பத்தை வைத்துவிட்டு அவன் பதிலளித்தான்.

"மொகடத நிவாடு" (எதுக்கு விடுமுறை). வாவ்...சிங்களம் புகுந்து விளையாட, நானே ஆச்சரியப்பட்டு கொண்டு, மல்லியை பரிசோதித்தேன்.


தலையை சொரிந்து கொண்டே "மொகத..மெஹே... மே... அற.. மங் தன்னஹா" (எனக்கு தெரியாது). சிவராத்திரிக்கு விடுதலையென்று தெரியாத குடிமகன் இருக்கும் வரை நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட தூரபயணமாய் தானிருக்கும்.


குடிவரவு பகுதியில் நாவல் கலர் சீலை அணிந்த பெண் அதிகாரிகள் இறுக்கமான முகத்துடன் பாஸ்போர்ட்டை வாங்கினார்கள். 2002ல் திமிராய் சொன்ன "வணக்கம்" நினைவில் வர "ஆயு..." வரமறுக்க, "Good morning" .


"ஓயா டுவள் சிட்டிசன் த (நீங்கள் dual citizen ஆ)... நாவல் சேலை பெண் அதிகாரி வினா தொடுத்தாள். ஒஸ்ரேலியன் பாஸ்போர்ட், பார்த்தும் இங்கிலீஷ் வர மறந்ததோ ? மறுத்ததோ ?


"நஹா (இல்லை)", பதில் பக்கென்று வந்தது, நாங்களும் நாகவிகாரைக்கு போகாமலே நல்லிணக்க சமிக்ஞை காட்டினோம்.

"என சரை எனகொட கண்ட" (அடுத்த முறை வரும் போது எடுங்கோ) ஆஹா.. சாணக்கியமாய் கவித்திடுவீங்களோ ? இது தான் நல்லாட்சியோ ?


கொழும்பிலிருந்து மழை தூறி ஆசிர்வதிக்க, பரி யோவான் நண்பர்களுடன் யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் தொடங்கியது. காதலியை காணப்போகும் படபடப்பு தொற்றிக்கொள்ள, சூரியன் FMல் "என்னவென்று சொல்லுவது வஞ்சியவள் பேரழகை" பாட்டு ஒலித்தது. அநுராதபுரத்தில் நிற்பாட்டி இஞ்சி போட்ட ப்ளேன் டீ குடித்துவிட்டு, மதவாச்சி தாண்டி, வவுனியா எல்லைக்கோடு கடக்க, மண் மணம் மணக்க தொடங்கியது.

யாழ்ப்பாணம்..
என்றென்றும் என் காதலி
என்னை காதலிக்காத காதலி


தாண்டிக்குளத்திலும் ஓமந்தையிலும் பஸ் நிற்காமல் போக, இல்லாமல் போன ஒன்றை ஏனோ மனம் தேடியது. புளியங்குளம் தாண்ட விடிய மூன்று மணியாகிவிட்டது. நித்திரை வர மறுக்க, பஸ்ஸின் முன்படியில் இருந்து, ஓயாமல் அலையடித்த ஏ9 வீதியை பார்த்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது.

புளியங்குளம்...கனகராயன்குளம்..மாங்குளம்.


"முருகண்டி நவத்தண்ட" ( முருகண்டியில் நிற்பாட்டுங்கோ) ஓட்டுனரிற்கு கட்டளை பறந்தது. வன்னி காத்து பட்டதும் அண்ணருக்கு வீரம் வந்திட்டுதோ ? முருகண்டியில் கற்பூரம் ஏத்தி, தேங்காய் உடைத்து, டீ குடித்து கொண்டே ஒரு உதயன் பேப்பரை வாங்கி நாலு பேர் சுத்தி நின்று வாசிக்க.. அன்று நாம் வாழ்ந்த வாழ்க்கை மீண்டது போலிருந்தது.


கிளிநொச்சி நகர் தாண்ட இதயம் கனத்தது. இதில தான் அது இருந்தது அதில தான் இது இருந்தது என்று நித்திரையால் எழும்பின பெடியள் கதைத்தது காதில் விழுந்தது. பரந்தன் தாண்டி ஆனையிறவு நெருங்க, இராணுவத்தின் வெற்றி சின்னத்தை பற்றி ட்ரைவர் தனது கோலயாவிற்கு பெருமையாக பீத்தி என்னை வெறுப்பேத்தினான்.


இத்தாவில் கடந்து முகமாலை தாண்டி தென்மராட்சியில் பஸ் பயணிக்க தொடங்க, நினைவுகள் இழப்புகள் தோல்விகள் என மனம் அசைபோட்டது.  சாவகச்சேரி, கைதடி, நாவற்குளி பாலம் கடந்து போக, காதலியை காணப்போவதை நினைத்து இதயத்துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.


அதோ அவள்.. கண்டுவிட்டேன்..
அதோ யாழ்ப்பாணம்.. கண்டுவிட்டேன்..
காலை சூரிய ஒளியில் அவளை காண கண்கோடி வேண்டுமே. கட்டபிடித்து முத்தம் கொடுக்க விடமாட்டாள், அவள் காதலிக்கவே இல்லை, இதுக்குள் முத்தமும் மண்ணாங்கட்டியும். சரி தொட்டு தான் பார்க்கலாம் என்றால், கன்னத்தில் அறை விழும் என்று பயம். எட்ட நின்றே அவளை தரிசிப்பேன், எட்ட நின்றே அவளை காதலிப்பேன்.


ஆஹா.... அவள் சிரிக்கிறாள்.. நான் சிலிர்க்கிறேன். அவள் பார்வையால் என்னை வரவேற்க நான் அவள் பாதம் தொட்ட மண்ணை கையில் எடுத்து நெற்றியில் ஒற்றி கொண்டேன்.

யாழ்ப்பாணம்..

என்றென்றும் என் காதலி
என்னை காதலிக்காத காதலி

என்றாவது என்னை விரும்புவாள்
அதுவரை..
காத்திருப்பேன்..
காதலோடு காத்திருக்கிறேன்

No comments:

Post a Comment