Thursday, 24 March 2016

அனுபவித்ததிலிருந்து 2....2016 Big Matchயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில், 110வது வடக்கின் பெரும் போரிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2014லும் 2015லும் பரி யோவான் அணியின் கை ஓங்கியிருந்த வேளையில் மைதானத்திற்குள் புகுந்த குழப்பவாதிகளால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அவ்வாறான சம்பவம் இம்முறையும் இடம்பெறுவதை தடுக்க, குழப்பவாதிகளை கட்டுப்படுத்தவென யாழ்ப்பாண நீதிவான் இளஞ்செழியனின் உத்தரவிற்கமைய பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். 


பரி யோவானில் படிக்கும் காலங்களில் மாணவர்கள் மைதானத்திற்குள் இறங்குவது கல்லூரி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. மாணவர்களை மைதானத்திற்குள் இறங்கவிடாமல் பரி யோவானின் காவல்துறை, இயக்கம் முகமாலை எல்லையை காப்பதுபோல், மைதானத்தின் எல்லை கோட்டை காவல் காக்கும். விக்கெட்டுகள் விழும் போதும், துடுப்பாட்டகாரர்கள் ஜம்பது, நூறு அடிக்கும் போதும் பழைய மாணவர்கள் கொடிகளோடு மைதானத்திற்குள் இறங்குவதை நாங்கள் பொறாமையோடு பார்ப்போம். 


1990ல் சுரேன் நூறடிக்க, முன்னாள் பரி யோவான் காவல்துறை அதிகாரியான சுதர்ஷன் அண்ணா மைதானத்துக்குள் ஓடி எங்களை வெறுப்பேத்தினார். மெல்பேர்ணில் வாழத்தொடங்கிய பிறகு தான் மைதானத்திற்குள் ஓடியதை அடிக்கடி பெருமையாக சொல்லி சொல்லி எங்களை கடுப்பேத்துவார்.
கடந்த நவம்பரில் Big Matchற்கு போவோம் என்று சுரேன் பிரேரிக்க ஆதியும் ஆமோதிக்க, மைதானத்திற்குள் ஓடும் காட்சி கண்முன் விரிந்தது.


இந்த முறை நாங்களும் மைதானத்திற்குள் ஓடி, பழைய மாணவர்காளாக எமக்கு கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதை ஆட்கொண்டது. பயணிப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் இந்த ஆசையை தம்பி கோபிகிருஷ்ணாவுடன் பகிர, அவன் inboxல் ஒரு இடியை தூக்கி போட்டான்.

"No. Strictly prohibited".. பரி யோவானில் இங்கிலீஷ் காற்று பலமாக வீசும்.


யாழ்ப்பாணம் வந்திறங்க, உதயனில் மூன்றாம் பக்கத்தில் "வடக்கின் பெரும்போர்: மைதானத்திற்குள் நுழைவோருக்கு மூன்று நாள் சிறை - இளஞ்செழியன் அதிரடி" என்று செய்தி வாசிக்க, வந்த விசர் அடங்கி விட்டது..இல்லை அடக்கப்பட்டு விட்டது. 

நோட் திஸ் பொயின்ட், யுவர் ஒனர்


மைதானத்திற்குள் ஓடவேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற ஆட்டத்தின் பிரதான அனுசரணையாளரான Airtelன் வடமாகாண பொறுப்பாளரும் எனதருமை நண்பனுமான ரோய் பிரதீபன் ஒரு திட்டம் வகுத்தான். இரு அணிகளும் கல்லூரி கொடிகள் ஏற்றவும் அர்ஜுனவுடன் கை குலுக்கவும் மைதானத்திற்குள் இரு புறமும் அணிவகுத்து நிற்க..

"மச்சான், இப்ப ரெண்டு டீமுக்கும் நடுவால் ஓடு.. ஆதியை விட்டு படம் எடுத்திட்டு, Facebookல், கனவு நனவானது என்று status போடு" தளபதி ரோய் தாக்குதல் திட்டத்தை விபரித்தான். 

"மச்சான், பொலிஸ் பிடிக்காதே ? " அத்திவாரம் ஆட்டங்கான பில்டிங் பலமாக நின்றது.

"பிடிச்சா உன்னை சுமா எடுத்து விடுவார்.. நீ ஓடு" ரணகளத்திலும் ரோய் அரசியல் பேசினான். 


மத்திய கல்லூரி மைதானத்தின் மெதடிஸ்ட் தேவாலய முனையில் இரு கல்லூரி அணிகளிற்குமான கூடாரம் அருகருகே அமைந்திருக்க, யாழ் பொது நூலக மூலையில் யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சுப்ரமணிய பூங்கா பக்கமிருக்கும் வாசலிற்கு வலப்புறம், அணிகளின் கூடாரத்திற்கும் பரி யோவான் மாணவர்களின் கூடாரத்திற்குமிடையில் சூனிய பிரதேசம் (No Man's land), பாதுகாப்பு ஏற்பாடாம். 


பரி யோவான் மாணவர்களின் பாசறையில் நாங்கள் படித்த காலங்களுடன் ஒப்பிடும் போது மாணவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவாகவே இருந்தார்கள். பாடசாலை சீருடை அணிந்து வர பணிக்கப்பட்ட, மாணவர்களிடம் உற்சாகமாமும் வலு குறைவாகவே காணப்பட்டது. 1990ல் சிவப்பு கறுப்பு நிற ஆடைகளணிந்து அட்டகாசத்தால் நிறைந்து வழிந்த பரி யோவான் பாசறை நினைவில் நிழலாட, 2016ல் நாம் கண்ட காட்சி கவலையளித்தது. பரி யோவான் பாசறையில், பரி யோவானின் காவல்துறை அன்று போல் இன்றும் மிடுக்காக அணிவகுத்து நின்றது கண்கொள்ளா காட்சி.

யாழ்ப்பாணம் மாறிவிட்டது... 


பரி யோவான் மாணவர்களின் பாசறை தாண்டி மணிகூட்டு கோபுரம் பக்கம் நகர, யாழ்ப்பாண வெக்கையிலும் கண்கள் குளிர்ச்சியடைந்தன. மாணவர்களிற்கு அந்த பக்கம், பரி யோவான் ஆசிரியர்களின் கூடாரம், கூடாரத்தில் பரி யோவானின் Primary schoolல் கற்பிக்கும் இளம் ஆசிரியைகள், சிவப்பு கறுப்பு நிற சேலைகளணிந்து அமரந்திருந்தார்கள். 


பரி யோவானின் Primary school மிகவும் குளிர்ச்சியானது...அங்கு இருக்கும் பெரிய மரங்களால் மட்டுமல்ல, அங்கு கற்பிக்கும் இளம் ஆசிரியைகளாலும் தான். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் AL முடிக்கும் மாணவிகள் அடுத்த வருடம் பரி யோவானில் அழகிய பாலர் வகுப்பு ஆசிரியைகளாக அவதாரம் எடுப்பார்கள். 


ஆசிரியர்களின் பாசறையில் அமர்ந்திருந்த அமெரிக்காவிலிருந்து வந்து பரி யோவானில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் வெள்ளைக்கார டீச்சர்களுடன் எங்கட ஆணழகன் ஆதி ஸ்டைலாக இங்கிலீஷில் கடலை போட்டது பலரின் வயிற்றெரிச்சலை கிளப்பியது. 

டேய் ஆதி, உன்ட அட்டூழியங்களுக்கு அளவேயில்லையா ?


கண்களில் குளிர்ச்சியை ஏற்றிக்கொண்டு நகர, பரி யோவான் பழைய மாணவர்களிற்கான கூடாரம் நம்மை வரவேற்றது. ஷண்டி அண்ணா கொண்டு வந்து இறக்கியிருந்த Paparae band முழங்க, பம்பல் கோஷ்டிகள் குழுமி கும்மாளம் அடித்த மைதானத்தின் ஒரே பகுதி இந்த உயர் குதூகல வலயம் மட்டுமே. எந்நேரமும் Paparae வாத்தியங்கள் இசையும் அதற்கு ஆடிக்கொண்டேயிருந்த ஆதிகால ஜொனியன்ஸும், பல ஆண்டுகளிற்கு பின்னர் சந்தித்த நண்பர்களை கண்டதும் "மச்சாஆஆஆன்" என்று கத்தி கட்டித்தழுவி சத்தமாய் சிரித்து எழுப்பிய ஆனந்த ஒலிகளும் என்று, பரி யோவான் பழைய மாணவர் பாசறையில் உற்சாகமும் நட்பும் கரைபுரண்டோடியது. 


பரி யோவான் பழைய மாணவர் பாசறை தாண்டினால், மீண்டும் சூனிய பிரதேசம், (No man's land) பந்தோபஸ்தாம். மணிக்கூட்டு கோபுரத்தடியில் இருந்த scoreboard தாண்டி மற்றப்பக்கத்தில் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் பாசறை. மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மத்திய கல்லூரி பழைய மாணவர்களால், அந்த பாசறை நிறைந்து வழிந்தது. 


வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த மத்திய கல்லூரி மாணவர்கள் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாகவும் சிநேகபூர்வமாகவும் பழகியது, இந்த முறை மைதானத்தில் எந்தவித குழப்பங்களும் ஏற்படாமல் விட்டதற்கு ஒரு பிரதான காரணம். அதனால் தான், இந்த முறை நடந்த போட்டி "most friendliest big match ever" என்று வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது.


மத்திய கல்லூரி முன்றலில், பொது மக்களிற்கான கூடாரமும் வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவிகளிற்கான கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தது. மகளிர் கல்லூரி கூடாரங்களிலும் ஒரு வித அமைதி குடிகொண்டிருந்தது, ஏமாற்றமளித்தது. அந்த கூடாரங்களின் நடுவில், விசேஷ விருந்தினர்களிற்கான கூடாரத்தில் கோட் சூட் அணிந்த நீதிபதி இளஞ்செழியனும் சாரம் கட்டிய அமைச்சர் அர்ஜனா ரணதுங்காவும் இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள்.

Relax boys.. சிரிங்க பாஸ்


மத்திய கல்லூரி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அணிகள் களமிறங்க தயாராக, மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் கொடிகளுடன் மைதானத்திற்குள் இறங்கி விக்கெட்டுகளின் முன் நின்று கற்பூரம் கொளுத்தி மணியடித்து பூஜை செய்தார்கள். நாங்களும் இறங்கி பரலோகத்தில் இருக்கிற பிதாவை நோக்கி ஜெபிப்போமா என்று சிந்திக்கவும் நீதிபதி இளஞ்செழியன் ஒருக்கா எழும்பி தனது இருப்பை காட்டிவிட்டு இருக்கவும் சரியாகவிருந்தது. 

பரி யோவான் மாணவர்கள் ஒழுக்கசீலர்கள், பழைய மாணவர்களும் 


மூன்றாவது ஓவரில் மத்திய கல்லூரி அணி தனது முதலாவது விக்கெட்டை இழக்க, நாங்கள் ஆரவாரித்து கொண்டு பரி யோவான் ஆசிரியைகள் இருந்த பக்கம் தாண்டி மாணவர்கள் இருக்கும் பாசறை நோக்கி புறப்பட, பொலிஸாரால் தடுக்கப்பட்டோம். சிங்கள பொலிஸோடு சிநேகமாகி "மொகத பொஸ்" என்று அளவுளாவ, பரி யோவான் நிர்வாகம் தான் அந்த கட்டுபாட்டை விதித்ததாகவும் பழைய மாணவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து யாரும் வேறு பகுதிகளிற்கு போக தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் சிங்கள பொலிஸ் தமிழர்களிற்குள் பிரச்சனை தீயை மூட்டி விட்டான். 

கருணா அம்மானில் வெற்றிகண்ட சூட்சுமம், நம்மிடம் வேகாது.


தடையை அகற்ற நாங்கள் பரி யோவான் நிர்வாகத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பரி யோவான் நிர்வாகத்தின் அணுகுமுறை வேதனையளிக்க, வெறுத்து போய் மைதானத்தை விட்டு வெளியேறி, சூடாற இளநீர் குடிக்க றீகல் தியேட்டரடிக்கு போனோம். இளநீர் குடித்துவிட்டு திரும்பிவர, ஒரு சின்ன ட்ரக்கில் பரி யோவான் மாணவர்கள் கொடிகளோடும் பீப்பிகளோடும் தாரை தப்பட்டைகளோடும் நிற்கிறாங்கள்.

என் இனமே என் சனமே

"தம்பி நாங்களும் வரட்டோ" பம்மினோம், ஆட்டத்திற்கு எங்களையும் சேர்ப்பாங்களோ என்ற சந்தேகம்.

"அண்ண.. என்ன விசர்க்கதை.. ஏறுங்கோ" .. தம்பிடா

"ஏத்திவிடுங்கோடா" முக்கி தக்கி ட்ரக்கில் ஏறினோம், இல்லை தம்பிமார் ஏற்றி விட்டார்கள்.


தொடரும்...

அனுபவித்ததிலிருந்து 1....2016 Big Match
http://kanavuninaivu.blogspot.com.au/2016/03/2016-big-match.html

அனுபவித்ததிலிருந்து 3....2016 Big Match
http://kanavuninaivu.blogspot.com.au/2016/04/3-big-match-2016.html

1 comment:

  1. Well written Anna.
    Waiting for part 3.

    Cheers,
    Bobby

    ReplyDelete