Thursday, 17 March 2016

அனுபவித்ததிலிருந்து.. 2016 Big Match
மார்ச் 10, 2016.. வியாழக்கிழமை 

அத்தியடி பிள்ளையார் கோயிலின் காண்டாமணி சத்தம் கேட்டு  விழித்து எழும்ப, ஒரு வித பரபரப்பு பற்றிக் கொண்டது. மீண்டும் Big Match பார்க்க போகிறேன் என்ற நினைப்பு, கொட்டாவியை கலைத்து, சோம்பலை முறித்து, குளியலறைக்கு வீறுநடை போடவைத்தது. குளியலறைக்குள் நண்பன் அருள், கதவு மூடியிருக்க, ஃபோனில் டைப் பண்ணும் டிக் டிக் சத்தம் மட்டும் கேட்டது.


அருள், கணா, ஆதி, ரகு என்னோடு வீட்டில் தங்க லண்டனிலிருந்து வந்திருந்த சுரேன், இன்பன், சிறிபிரகாஷ், ஜெய், டோனி, அரவிந்தன் ஆகியோர் Jet Wingsலும் கஜன் தன்ட வீட்டிலும் சுது சிறி, அம்மான் ரோயோடும் டாக்டர் விஜயன் தன்னுடைய மாமி வீட்டிலும் தங்கியிருந்தார்கள். 


"டேய்.. மொழி.. அன்டிமாரோடு அலட்டிறதை நிற்பாட்டி போட்டு கெதியா குளிடா.."


ராணி சோப் போட்டு குளித்து முடித்து எங்கட batchற்கு என்று பிரத்தியேகமாக தைத்த big match tshirt அணிந்து, விறாந்தையிலுருந்து தேத்தண்ணி குடிக்கிறோம். யாழ்ப்பாண காலைகளிற்கு ஒரு தனித்துவமிருக்கும். காற்றில் ஒரு தெய்வீக மணம் கமழ காலை சூரியன் மண்ணை தழுவ தொடங்கும் கணங்கள் ரம்மியமானது.  தேத்தண்ணி குடித்து முடித்து, முதல் நாள் தம்பி Akarsanனிடம் வாங்கிய சிவப்பு கறுப்பு ஒலைத்தொப்பி, Nike சப்பாத்து அணிந்து தயாராகவும் ஓட்டோ குமாரின் ஓட்டோ வந்து நிற்கவும் சரியாகவிருந்தது.


ஓட்டோ குமார், எங்களை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார். யாழ்ப்பாணத்தின் ஆதிகால வாசிகளை கண்டால் நவீன யாழ்ப்பாணத்தானுக்கு நக்கல் வரும் தானே. ராசாவின் தோட்ட வீதியில் மிதந்து, ஓட்டோ ஆஸ்பத்திரி வீதியில் இடப்பக்கம் திரும்ப வெளிக்கிட..

"குமார், கொன்வென்ட் பக்கமாய் விடுங்கோ".


பிரதான வீதியில் வெள்ளை சீருடையில் சிவப்பு வெள்ளை, சிவப்பு கறுப்பு, மஞ்சள் கறுப்பு கழுத்து பட்டிகள் அணிந்த பெட்டைகளை காண நாங்களும் பதின்மத்திற்குள் மீண்டும் சங்கமமானோம். பஸ்தியான் சந்தியில் காக்கி சீருடையில் பொலிஸ்காரன் வெறுப்பேத்தினான். பரி யோவானின் Primary school gate அடியை எட்டி பார்த்து சவக்காலை தாண்டி பரி யோவானின் பிரதான வாயிலில் ஓட்டோ குமார் ஓட்டோவை நிறுத்த, ஓட்டோவிலிருந்து குதித்து இறங்கினோம். 


நடையில் ஒரு துள்ளலுடன், கம்பீரம் மாறத Church, நவீன Office கடந்து மிடுக்கான Handy library தாண்டி பழமை மாறாத Robert Williams மண்டபம், புதிய யுகத்தின் Peto Hall கடந்து பரி யோவான் மைதானத்தை அண்மிக்கிறோம். மைதானத்தின் மறுபுறம் பரி யோவானின் Score board நம்மை வரவேற்றது. அன்று காலை பரி யோவானின் கிரிக்கட் அணியினருடனும் விடுதி மாணவர்களுடனும் காலை உணவு அருந்த 1992 உயர்தர பிரிவு மாணவர்களாகிய நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோம், உபயம் சிட்னி பழைய மாணவர் சங்கம். முதல் நாள்,  Peto Hallல் பரி யோவானின் கிரிக்கட் அணியுடன் எங்கட batchஐ பிரத்தியேக படம் எடுக்க வைத்து எங்கள் batchன் யாழ்ப்பாண குறூப் அசத்தியிருந்தார்கள். 


Dining Hallல் 1982 batch அண்ணாமாரும் இணைந்து கொள்ள பம்பல் களைகட்டியது. சென்னையிலிருந்து வந்திருந்த ஷண்டி அண்ணா யாழ்ப்பாண தோசையை ஒரு பிடிபிடித்து கொண்டு தான் ஆம்பூர் பிரியாணி சாப்பிட்ட கதையை சொன்னார். "பசைவாளி" விக்னபாலன் அண்ணா, Dr. Peter Selvararnam, Dr. Theivendra என்று மண்டபம் நிறைய தொடங்க, பரி யோவான் மாணவ தலைவர்கள் விடுதி மாணவர்களை ஒழுங்கமைத்து பழைய மாணவர்களிற்கு இடம் ஒதுக்கித் தந்தார்கள். 


"கண்ணன்.. இவரை யார் என்று தெரியுதா" கை கழுவ போன இடத்தில் விக்கி அண்ணா கேட்டார்.

நாங்கள் படித்த காலத்தில் Libraryயில் கடைமையாற்றிய கண்ணன் தான் இப்ப பரி யோவானின் சமையல்துறை பொறுப்பாளர். செந்தளிப்பு மாறாத முகத்தோடும் என்றும் மாறாத புன்னகையோடும்

"இஞ்ச பாருங்கோ.. யாரை பாரத்து, தெரியுமோ என்று கேட்டனீங்கள்"

யாழ்ப்பாணத் தமிழில் கண்ணன் முகமனிற்காக பொய் சொல்ல, ஈரமான கைகள் பற்றிக்கொண்டன.

"கண்ணன்.. முந்தி library மிஸ்ஸிற்கு ஒரு பட்டம் வைத்திருந்தனாங்கள்.. ஞாபகம் இருக்கோ"

கண்ணனுக்கு வந்தது வெட்கமா சங்கடமா என்று கணிக்க நிதானிக்காமல்

"கடிநாய்" 

வாய் பொத்திக்கொண்டு கண்ணன் பலமாய் சிரிக்கிறார். 

காலையுணவு அருந்திய பரி யோவானின் கிரிக்கட் அணி, தேவாலயம் நோக்கி நகர தொடங்க வழியெங்கும் உற்சாகம் ததும்பும் பழைய மாணவர்கள். கறுப்பு சிவப்பு நிற வேட்டியும் சேர்ட்டும் அணிந்து 2006 batchகாரன்கள் பரி யோவானில் தமிழை நினைவுறுத்தினார்கள். 

"Come on boys"

"All the best".

தோளில் தட்டியும் கைலாகு கொடுத்தும் கிரிக்கட் அணியை உற்சாகப்படுத்தினார்கள். 

"ஐசே, நீர் அஞ்சு விக்கெட் எடுத்தீரென்றால் ஒரு லட்சம்"

"தம்பி, 146 ரன்கள் அடிச்சா அம்பதாயிரம் தாறன்"

பரி யோவான் அணியின் கப்டன் கானமித்திரனும் வைஸ் கப்டன் ஜெனின் ஃபெளிமிங்கும் சிரித்து கொண்டே தலை குனிந்தார்கள்... பரி யோவானில் அவையடக்கம் ? 


பரி யோவானின் தேவாலத்தின் Altarல் பரி யோவானின் கிரிக்கட் அணி வரிசையாக முழுந்தாளிட்டு பணிய, தேவாலயத்தின் போதகர் ஆங்கிலத்தில் ஜெபிக்கத்தொடங்கினார். 

"We pray for both teams"

"Let these boys carry Jaffna and St John's..."

போதகரைத் தொடரந்து பரி யோவானின் அதிபர் வணக்கத்திற்குரிய ஞானபொன்ராஜா தமிழில் இறைவனை நோக்கி மன்றாடினார். 

"இறைவனின் அருள் என்றும் எம்மோடு இருப்பதாக"


எமது Batchற்கு கல்லூரி கொடி தைக்கும் பொறுப்பை ஏற்றிருந்த வாதுலன் அதில் தனித்துவமாக 92 என்ற இலச்சினையையும் சேர்த்து தைத்திருந்தான். யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவரும் எமது batch நண்பனுமாகிய கோபிசங்கரின் வாகனத்தில் paparae இசை முழங்க கல்லூரி கொடி பட்டொளி வீசி பறக்க பரி யோவான் அணியை களத்திற்கு அழைத்து போகும் வாகன தொடரணி அணிவகுக்க தொடங்கியது. 


1990ல் கண்ட நூற்றுக்கணக்கணக்கான சைக்கிள்கள் காணாமல் போக, வேட்டி கட்டிய 2006 batch காரன்கள் மோட்டார் சைக்கிள்களில் உறுமினார்கள். பஸ்தியான் சந்தியில் தொடங்கிய மோட்டார் வாகனங்களின் அணிவகுப்பு கல்லூயின் மைதானம் வரை நீண்டது. எங்கும் சிவப்பு கறுப்பு கொடிகள் அசைந்தாடின.


"வெளிக்கிடட்டாம்".. எங்கேயோவிருத்து யாரோ சொல்ல, யாழ்ப்பாணத்தின் பிரதான வீதி வழியாக பரி யோவானின் கிரிக்கட் அணி, யாழ் மத்திய கல்லூரியின் மைதானத்தை நோக்கி அழைத்து வரப்படுகிறது. வழிநெடுக சனம் நின்று வேடிக்கை பார்க்க, பொலிஸ்காரனும் சிரித்து கொண்டே வழி அமைத்து கொடுக்க, பரி யோவானின் வாகன பேரணி இருபுறமும் பெரிய மரங்கள் நிறைந்த பிரதான வீதியில் கம்பீரமாக நகர்கிறது.


"கெதிபடுத்தட்டாம்".. தண்ணீர் தாங்கியடியில் கட்டளை வர, வாகன அணி வேகம் பிடித்தது. யாழ் ஹோல், பிலிப்பரின் நேர்ஸிங் ஹோம், பொம்மர் அடித்த சென் ஜேம்ஸ் தேவாலயம் கடந்து பரி யோவானின் வாகன அணி அட்டகாசமாய் முன்னேறுகிறது. முதலாம் குறுக்கு தெரு தாண்ட, திடீரென்று சத்தங்கள் நிறுத்தப்பட, ஆர்ப்பாட்ட ஊர்வலம் மெளனமாகிறது.

"ஏன்டா மச்சான், ஏதும் சிக்கலோ" கோபியை கேட்டேன்

"கோர்ட்ஸ் (நீதிமன்றம்) மச்சான்" கோபி.


யாழ் மாநகர சபை கட்டிடம் இருந்த காணி கடந்து, தந்தை செல்வா நினைவுத்தூபி இருக்கும் வளைவில் திரும்புகிறோம். தமிழ் தேசியத்தின் தந்தையையும் தலைவரையும் தமிழ் தேசம் என்றும் மறவாது. அங்கால 1981ல் இலங்கை அரசபடைகளால் எரிக்கப்பட்ட யாழ் நூலகம், இன்று புதுப்பொலிவுடன் மீண்டாலும், அந்த சம்பவம் ஏற்படுத்திய மனக்காயம் மட்டும் ஆறவில்லை. நூலகத்திற்கு முன்னால் போகும் வீதியில் கோபி, காரை லாவகமாக திருப்பி சுப்ரமணிய பூங்காவிற்கு முன்னாள் நிறுத்துகிறான். மத்திய கல்லூரி வாசலடியில் பரி யோவான் அணியை வரவேற்க, மத்திய கல்லூரியின் கிரிக்கட் அணி வரிசையாய் நிற்க, வெள்ளை மற்றும் நீல நிற சீருடையணிந்த மத்திய கல்லூரியின் பாண்ட் அணி வரவேற்பு இசை முழங்க கம்பீரமாக தனது அணிவகுப்பை  தொடங்கியது.  இரு கல்லூரி அணிகளுடன் நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் இன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவும் யாழ்ப்பாண நீதிபதியும் பரி யோவானின் பழைய மாணவனுமாகிய இளஞ்செழியனும் மைதானத்திற்குள் அழைத்து வரப்பட்டார்கள்.

தொடரும்....No comments:

Post a Comment