Thursday, 3 March 2016

1990 Big Match.......பரி யோவான் பொழுதுகள் :கடினமான சமூக பொருளாதார  நெருக்கடிகளை எதிர்தோக்கும் நாடுகள், அதிலிருந்து மீள அந்த தேசத்தின் விளையாட்டு அணிகள் ஈட்டும் வெற்றிகள் தேசத்தின் மீள் எழுச்சிக்கான அடித்தளமாக அமையும். 70களில் கரீபியன் தீவுகளில் Clive Lloydன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியும்  80களில் இங்கிலாந்தில் Ian Bothamன் கிரிக்கட் அணியும் தங்கள் தங்கள் தேசத்தின் மீளெழுச்சியில் பெரும்பங்காற்றின.


1985ல் அதிபர் ஆனந்தராஜாவை இழுந்ததுடன் ஆரம்பித்த பரி யோவான் கல்லூரியின் இருண்ட காலங்கள், 1980களின் இறுதி வருடங்களில் பரி யோவானை உலுப்பி எடுத்ததன. 1988 டிசம்பரில் யாழ்ப்பாண கச்சேரியடி கார் குண்டு வெடிப்பில் பலியான ஹரிசுதன், திருத்தணிகேசன், 1989ல் யாழ் தேவியில் ஈபிகாரன்களின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட கஜேந்திரன், மண்டையன் குழுவால் கொல்லப்பட்ட அகிலன் மற்றும் தேவகுமார், கடலில் மூழ்கி இறந்த ரஞ்சித், என சாவுகளும் இழப்புகளும் பரி யோவான் வளாகத்தை ஆக்கிரமித்த கொடிய வருடங்கள் அவை.


வாகீசன் (86,87) சஞ்சீவன் (88,89) தலைமை தாங்கிய பரி யோவானின் பலமான கிரிக்கட் அணிகளின் ஆட்டங்கள் யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்த ஆண்டுகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடனான Big Matchம் நடக்காமல் போனது காலக்கொடுமை. இழப்புகளால் துவண்டு போயிருந்த பரி யோவான் வளாகத்திற்கு ஒரு புத்துணர்ச்சி, moral boost அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்பட்டது. 


1990ன் T. சதீசன் தலைமைதாங்கிய பரி யோவானின் கிரிக்கட் அணி உத்வேகத்துடன் ஆடிய ஆட்டங்கள் கல்லூரிக்குள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. பரியோவான் கிரிக்கட் அணியின் தலைசிறந்த பயிற்சியாளர் Xavier மாஸ்டர் காலமாக, அவரின் இடத்தில் பரி யோவானின் பழைய மாணவன் சூரியகுமார் கிரிக்கட் அணியை சிறப்பாக வழிநடத்த தொடங்கியிருந்தார். 


1990ன் பரி யோவான் அணியில் விளையாடிய அநேகமானோர் பம்பல்காரன்கள். பரி யோவானிற்கே தனித்துவமான "எடுப்பு" இல்லாத சாதாரண "ஊத்தைவாளிகள்". அணியின் இந்த நடத்தைக்கு சதீசனின் தலைமைத்துவ முன்மாதிரி பிரதான காரணமாக, 1990ன் பரி யோவான் கிரிக்கட் அணி பரி யோவான் வரலாற்றில் மிகப் பிரபலமான அணிகளில் ஒன்றாக  இடம்பிடித்தது. 


1990 பரியோவானின் Big Match அணியில் சுரேன், ஜெகேந்திரன், பிரஷாந்தன், முரளி, சதீசன், விபீஷ்ணா, காண்டீபன், நிரூபன், புஷ்பவினோதன், போல்ராஜ் மற்றும் லக்கி இடம்பெற்றிருந்தார்கள். சிவகுமரன், ஆனந்தபுர சமரில் வீரமரணமடைந்த கேணல் சேரலாதன், அணியின் ஆஸ்தான 12th man. இன்பன், அருள்மொழி, ஏஞ்சல், திருமாறன் எல்லோரும் reserves. கேர்ஷன் O/L சோதனையை காரணம் காட்டி முட்டாள்தனமாக அந்த வருடம் விளையாடவில்லை. 


நூற்றுக்கணக்கான மாணவர்கள் சைக்கிள்களில் ஊர்வலமாக சிவப்பு கறுப்பு நிற கொடிகளுடன் முன்னும் பின்னும் செல்ல, கல்லூரியின் கொடி கம்பீரமாக பறந்த மினி பஸ்ஸில் பரி யோவான் கல்லூரி அணி பிரதான வீதியூடாக மத்திய கல்லூரி மைதானத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். எங்கட batchக்கு அடுத்த கிழமை O/L சோதனை. வீட்டில் அழுது குழறி நாங்களும் Big Match திருவிழாவில் சங்கமமாக, சில பேய்க்கூட்டங்கள் வீட்டிலிருந்து தேற்றம் நிறுவி பழகினாங்கள். 


முகுந்தன் தலைமையிலான மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாட தயாராக, நடுவர்களை தொடர்ந்து வெள்ளை தொப்பிகள் அணிந்து விண்ணதிரும் கரகோஷத்துடனும் தாரை தப்பட்டை ஒலிகளோடும் பரி யோவான் அணி  மிடுக்காக களமிறங்குகிறது. 

கல்லூரி கல்லூரி 
பரி யோவான் கல்லூரி 


மணிகூட்டு கோபுர முனையில் முதலாவது ஓவரை போட, முழுக்கை நீள வெள்ளை ஷேர்ட் அணிந்து லக்கி நிலையெடுக்க, சுப்ரமணிய பூங்கா முனையில் பரி யோவான் கல்லூரி மாணவர்களின் கூடாரத்தில் உற்சாகம் கரைபுரள்கிறது. 

"போடு மச்சான் 
பொல்லு பறக்க"


மூன்றாவது ஓவர்.....மத்திய கல்லூரி 4 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில்... லக்கி வீசிய பந்தில் bails பறக்க மத்திய கல்லூரியின் 
முதலாவது விக்கெட் விழுகிறது. பரி யோவான் பாசறையில் மகிழ்ச்சி காம்ப் அடிக்க தொடங்கிவிட்டது. தண்ணியையும் ஜூஸையும் குடித்து விட்டு மைதானத்தின் எல்லை கோட்டிற்கு வெளியே மாணவர்கள், எல்லை கோட்டில் பரி யோவானின் காவல்துறை. 

-–-------------------------------
லக்கி, பரி யோவானில் கடைசி துடுப்பாட்டகாரன். யாழ்ப்பாண கல்லூரிக்கெதிராக அவன் அடித்த ஒற்றை சிக்கஸரை பார்த்து அதிபர் தேவசகாயமே ஆச்சரியப்பட்டார். இன்று ஓஸ்ரேலியாவில் லக்கி battingல் கலக்குகிறான். எந்தவித உணர்ச்சிகளும் காட்டாமல் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் அதிரடி ஆட்டக்காரன். Bowlingம் அப்படிதான், பந்து பட்டு bails பறக்கும்....Australia's Best Tamil cricketer.

-----------------------------------

அந்த வருடம் பரி யோவான் அணியில் நாலு வேக பந்துவீச்சாளர்கள், லக்கி, முரளி, பிரஷாந்தன் மற்றும் சதீசன். மத்திய கல்லூரி 33/1 ஓட்டங்களை எட்ட பிரஷாந்தனும் சதீசனும் மாறி மாறி விக்கெட்டுகளை சரித்து மத்திய கல்லூரியை 33/4 எனும் இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறார்கள். மத்திய கல்லூரி ஜந்தாவது விக்கெட்டுக்கு ஒரு பலமான partnershipஐ போட, முதலாவது நாள் மதிய இடைவேளை வருகிறது. 


இடைவேளைக்கு பின், அந்த வருடம் அதிகம் பந்து வீசியிராத புஷ்பீயை சதீசன் களமிறக்க, ஐந்தாவது விக்கட் சரிகிறது...92/5. ஏழாவது விக்கெட்டுக்கு பரி யோவான் மீண்டும் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. இறுதியில் மத்திய கல்லூரி அணி 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க மதியம் 2 மணியாகிவிட்டது. சதீசன் 4, லக்கி 2, முரளி 2, விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

சென்ரலால ஏலாது
ஏலுமேன்றா பண்ணிப்பார்


பரி யோவானின் நம்பிக்கைக்குரிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சுரேனும் ஜெகேந்திரனும் அடித்து ஆட தொடங்கினார்கள். வழமையாக நொட்டி தட்டி விளையாடும் ஜெகேந்திரன் leg sideல் six அடிக்க, சுரேனிற்கு அன்றைக்கு cut shot வளமா வாய்த்தது. சுரேனின் ஆட்டத்திற்கு field set பண்ண மத்திய கல்லூரி திணற, பரியோவான் அணி 111/0 என்ற நிலையில் தேத்தண்ணி குடிக்க சென்றது. 


தேநீர் இடைவெளிக்கு பிறகான முதலாவது ஓவரில் ஜெகேந்திரன் ஆட்டமிழக்க, பேயை கலைக்க பிசாசு வந்திறங்கின மாதிரி, ஜெகே போக பிரஷாந்தன் களமிறங்கினார். ஒரு பக்கத்தில் சுரேன் நூறை கண்வைத்து நிதானமாக ஆட மற்ற பக்கம் பிரஷாந்தன் மத்திய கல்லூரியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். பவுண்டரி சிக்கஸர் என்று விளாசி தள்ளி 57 ஓட்டங்களுடன் பிரஷாந்தன் களத்தை விட்டகலும் போது அணியின் ஓட்டங்கள் 207/2.

----------------------------------
பின்னாட்களில் Tamil Union அணிக்கு விளையாடிய பிரஷாந்தன், இலங்கை கிரிக்கட் அணி தேர்வில் தமிழன் என்றபடியால் புறக்கணிக்கப்பட்டார். இலங்கை அணித்தேர்வில் அவரிற்கு இழைக்கப்பட்ட அநியாயத்தால் மனமுடைந்து நாட்டை விட்டு வெளியேறினார்.

----------------------------------


தீசன் தீசன்...சதீசன் 
Johnian தீசன்...சதீசன் 

Batஜ சுழற்றி கொண்டு சதீசன் களமிறங்க பரி யோவான் மாணவர்கள் மத்தியில் உற்சாகம். "இன்றைக்கு நல்ல அடி பார்க்கலாமடா" என்று சொல்லி வாய் மூடவில்லை, சதீசன் ஆட்டமிழக்கிறார்...207/3. மத்திய கல்லூரி மாணவர்களிடம் காணாமல் போயிருந்த உற்சாகம், திரும்ப வருகிறது. 


பரி யோவான் பாசறையில் குடிகொண்ட தற்காலிக அமைதி, முரளி அடித்த மாட்டு சிக்ஸரால் கலைகிறது. சுப்ரமணிய பூங்கா பக்கமிருந்து முரளி அடித்த சிக்ஸ், நூலக வளவில் போய் விழ, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

அடிடா மச்சான்
பவுண்டரி சிக்ஸர்


1990 Big Matchன் கதாநாயகன் சுரேன், நூறு ஓட்டங்களை எட்ட, மைதானமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகிறது. பரி யோவானின் பழைய மாணவர்கள் மைதானத்திற்குள் இறங்கி சோடா கொடுக்க, மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் "Paulன்ட ரெக்கோர்டை உடைக்க விடாதீங்கோடா" என்று தங்கள் அணியை எச்சரிக்கிறார்கள். Paul பிரகலாதன் 1982ல் அடித்த 125 ஓட்டங்கள் தான் அதுவரை தனி நபரொருவர் Big Marchல் எடுத்த அதிக பட்ச ஓட்டங்கள். 

What's the colour
Red & Black


பரி யோவான் அணி 263 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முரளி 27 ஓட்டங்களிற்கு ஆட்டமிழுக்க அணியின் baby of the team விபீஷ்ணா களமிறங்குகிறான். சுரேனும் விபீஷ்ணாவும் பரி யோவானின் பிரசித்தி பெற்ற 1992 batch காரன்கள். சுரேனும், விபீஷ்ணாவும், கல்வியிலும் விளையாட்டு மைதானத்திலும் கலக்கிய, இன்று அகிலமெங்கும் கலக்கும் 1992 batchன் சூப்பர் காய்களில் இருவர். இருவரும் முதல் நாள் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடுகிறார்கள். சுரேன் Paul பிரகலாதனின் சாதனையை முறியடித்து 127ல் முதலாவது நாளை முடிவிற்கு கொண்டு வருகிறார்.


இரண்டாவது நாள் களமிறங்கிய இருவரது ஆட்டத்திலும் ஒரு அவசரம் தெரிகிறது. விபீஷ்ணா cover drivesல் கலக்க பவுண்டரிகள் விண் கூவுகின்றன. 145 ஓட்டங்களை பெற்ற நிலையில் சுரேன் ஆட்டமிழக்க 311/5 என்ற நிலையில் பரி யோவான் அணி தனது முதலாவது இன்னிங்ஸை முடிவிற்கு கொண்டு வருகிறது. விபீஷ்ணா ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களை பெற்றிருந்தான்.

----------------------------------

சுரேன், படிப்பிலும் கிரிக்கெட்டிலும் கலக்கிய ஒரு சகலதுறை மாணவன். "ஆளுக்கு கொஞ்சம் லெவலடா" என்று கல்லூரியில் கதை இருந்தாலும், எல்லோருடனும் நட்பு பாராட்டி பம்பலாக பழகுவான்....லெவல் இல்லாத ஜொனியன்ஸ் யாரும் உண்டோ ?

யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல இலங்கையையே கலக்க வேண்டிய சுரேனின் கிரிக்கட் பயணம், 1990ல் மீண்டும் தொடங்கிய யுத்தத்தால் தடைபட்டது, வேதனை, கவலை. சுரேன் இன்றும் லண்டனில் மிகச்சிறப்பாக கிரிக்கட் ஆடிவருகிறான்.

-----------------------------------


இரண்டாவது இன்னிங்ஸில் ஆடதொடங்கிய மத்திய கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்கள் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவிக்க, பரி யோவான் பாசறையில் பொறுமை சோதனைக்குள்ளாகிறது. பிரஷாந்தனும் சதீசனும் ஆளுக்கொரு விக்கெட் எடுத்து Openersஐ வீட்டுக்கனுப்ப..36/2. மற்றபக்கத்தால லக்கியும் புஷ்பீயும் விளையாட்டை காட்ட.. 67/4. 

பாஸே பஸியலடே
பூம் பூம் பூம்


அந்த நாள்வரை Big Match ஒன்றில் பரி யோவான் அணி வெற்றி பெற்றதை பார்த்திராத ஒரு தலைமுறை பரி யோவான் மாணவர்கள் மத்தியில் இனம்புரியாத ஒரு உற்சாக உணர்வு ஆட்கொள்கிறது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, சரிய வெற்றி கண்ணுக்கெட்டிய தூரத்தில்...


எட்டாவது விக்கெட் விழ, மைதானத்திற்குள் நுழைந்த பரி யோவான் பழைய மாணவர்கள், "கடைசி விக்கெட் விழுந்ததும், dressing roomக்கு ஓடுங்கடா, அடி விழும்" என்று பரி யோவான்  அணியை எச்சரிக்கிறார்கள். இதை கேட்டு பயந்த விபீஷ்ணா கையை காட்டி சிவகுமரனை field பண்ண வர சொல்லி விட்டு மைதானத்தை விட்டு அகல்கிறான். ஆட்டம் தொடங்க முதலே எல்லோரிடமும் தன்னை field பண்ண விடுமாறு சிவகுமரன் கேட்டிருந்தான். மிகச்சிறந்த களத்தடுப்பாளரான சிவகுமரன் அணியை உற்சாகமாக வைத்திருந்ததில் பெரும் பங்காற்றியிருந்தான்.


கடைசி விக்கட்.. சுப்ரமணிய பூங்கா முனையிலிருந்து முரளி வீசிய பந்தை மத்திய கல்லூரியின் ரகுதாஸ் உயர்த்தி அடிக்க, பந்து mid onல் நின்ற சதீசனை நோக்கி வருகிறது. அதுவரை கட்டுகோப்பு காத்த பரி யோவான் மாணவர்கள் எல்லை கோட்டை தாண்டி மைதானத்துக்குள் ஓடவும் சதீசன் பந்தை பிடிக்கவும் சரியாக இருந்தது. அந்த காட்சி, சதீசனோடு இணைந்து முழு பரி யோவான் மாணவர்களுமே பிடித்த catch மாதிரி இருந்தது என்று இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, Michael நவரட்ணராஜா விபரித்தது, இன்றும் காதில் ஒலிக்கிறது. 


பிறகென்ன.. பரி யோவான் அணியை தோள்களில் மாணவர்கள் சுமக்க, மைதானத்தில் சாதாரண உடையில் பிஸ்டலோடு நின்ற இரண்டே இரண்டு போராளிகள் கலவரம் வராமல் தடுத்தார்கள். கடந்த வருடங்களில் இருபதிற்கு மேற்பட்ட இலங்கை பொலிஸ்காரரால் அடக்க முடியாத கலவரத்தை அன்று இரு போராளிகள் அடக்கினார்கள் என்று நினைக்கும் போது நாம் வாழ்ந்த காலத்தை நினைத்து பெருமையாகவும் நாம் இழந்த ஆளுமையை நினைத்து ஏக்கமாவும் உணர்கிறேன். 

வெற்றி வெற்றி வெற்றி..

மைதானத்தில் அன்றிருந்த பழைய மாணவர்களாகட்டும் மாணவர்களாகட்டும் ஆசிரியர்களாகட்டும் யாருக்கும் அந்த வெற்றி என்ற மகிழ்வை எப்படி உணர்ந்து உள்வாங்குவது என்று தெரியவில்லை. பிட்சில் புரண்டு எழும்பியவர்கள் ஒரு புறம், கல்லூரி கொடியை தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி ஓடியவர்கள் மறுபுறம், ஆனந்த கண்ணீரோடு குந்தி இருந்து அனைத்தையும் உள்வாங்கியவர்கள் ஒருபுறம் என்று உணர்வின் வெளிப்பாடு பல வடிவங்களில் அரங்கேறியது.

1990 Big Matchன் Best Bowler விருதை சதீசனும் Best Allrounder விருதை பிரஷாந்தனும் Best Batsmen மற்றும் Man of the Match விருதுகளை சுரேனும் தமதாக்கிக்கொண்டார்கள்.


மத்திய கல்லூரியிலிருந்து பிரதான வீதி வழியாக வெற்றி பெற்ற பரி யோவான் அணி ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறது. வெற்றி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உற்சாகம் கரை புரண்டோட கலந்து கொள்கிறார்கள். ஆடி பாடிக்கொண்டே பரி யோவானின் வெற்றி உலா மெதுவாக நகர, யாழ் பிரதான வீதி ஒரு சில மணித்தியாலங்களிற்கு முடக்கப்படுகிறது. பரி யோவான் கல்லூரியின் பிரதான வாயில் திறக்கப்பட, அணியின் ஒவ்வொரு வீரனும் தோள்களில் தூக்கி கொண்டு வரப்படுகிறார்கள். Peto Hallற்கு முன்பாக வெற்றி விழா களை கட்டுகிறது. பரி யோவானின் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக தளர்த்தப்பட, கல்லூரி வளாகத்தினுள்
தாரை தப்பட்டைகள் முழங்க பரி யோவான் மாணவர்கள் யாவரும் ஆட தொடங்கினார்கள்...


1990 Big Match தந்த வெற்றியோடும் 1989 A/L சோதனையில், கச்சேரியடி குண்டு வெடிப்பில் கண்ணில் காயம்பட்ட சுபநேசன் Bio பிரிவில் அகில இலங்கையில் முதலாவது இடத்தை பிடிக்கவும், அந்த வருடம் நடந்த O/L சோதனையில் 1992 A/L Batch யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகப்படியான 8Dகளை பெறவும், பரி யோவான் மீண்டும் தலை நிமிர்ந்து நடை போட தொடங்கியது..

Lux in tenebris lucet 
Light shines in the darkness

-----------------------------------

சதீசன் பந்தை பிடிக்கமுதலே மாணவர்கள் மைதானத்திற்குள் பாய்ந்த கணத்தை, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தனக்கே உரித்தான  ஸ்டைலில் பம்பலாக விபரித்த  Michaelற்கும், தேசத்திற்காக  
தன்னுயிரை அர்ப்பணித்த நண்பன் சிவகுமரனிற்கும் இந்த நினைவுகளை காணிக்கையாக்குவோம். 
-----------------------------------1 comment:

  1. //சில பேய்க்கூட்டங்கள் வீட்டிலிருந்து தேற்றம் நிறுவி பழகினாங்கள்.//

    ஹாஹா. சுண்டுக்குளி பாதி நாள் லீவு விட்டும், Centralல் boxல் இருந்து பார்க்கலாம் என்று கூப்பிட்டும் வீம்புக்கு போகாமல் வீட்டில் இருந்து நாளைக்கு exam இல் கேள்வி வரும் மாதிரி கதைப் புத்தகம் படிச்ச பிசாசு கூட்டமும் இருக்கு.


    கிளியில் ஒரு அக்கா இருந்தவா. பிறப்பால் சிங்களவர். எப்படித் தான் அந்த தமிழ் குடும்பம் அவவை தத்தெடுத்தவையோ தெரியாது. எங்களவர்களின் தடிப்புக் குணம் தெரியும் தானே. இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர். ஆனால் தமிழ் ஆள் என்று அவவை Asian Gamesஇற்கு அனுப்பவில்லை. How unfortunate she was. She is a Sinhalese by birth. Adopted by Tamil parents. Could not go to Asian games cos she was Tamil. :/

    இந்தியாவில் ஒரு வகை ஊழல் என்றால் எங்கள் நாட்டில் ஒரு வகை discrimination. *sighs*

    ReplyDelete