Thursday, 18 February 2016

Michaelவாழ்வு எனும் ரயில் பயணத்தில் பலர் வந்து போவார்கள், அதில் சிலர் எம்மோடு தொடர்ந்தும் பயணிப்பார்கள். வேறு சிலர் இடையில் ஏறி இறங்குவார்கள், ஆனாலும் அவர்களின் நினைவுகள் மட்டும் தொடர்ந்து எம்மோடு பயணிக்கும். 


Michael நவரட்ணராஜா..பரி யோவான் கல்லூரி 1990 உயர்தர பிரிவின் நட்சத்திரங்களில் ஒருவர், Prefect, Leo Club தலைவர், Handy House Captain, பரி யோவானின் London பழைய மாணவர் சங்க தலைவர் என்று  இப்படி கல்லூரி வாழ்க்கையிலும் அதற்கு பின்னரும் மின்னிய நட்சத்திரம் மறைந்து விட்டது என்ற செய்தி அவரது குடும்பத்தையும் பரி யோவான் சமுகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

_________________________________________________________________________________


1990 Big Match பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்ததும், அந்த கிரிக்கட் அணிக்கு தலைமை தாங்கிய சதீசனுடன் கதைத்தேன். 


"ஜசே, matchற்கு முதல் நடந்த அட்டாகசம் எல்லாம் எனக்கு தெரியாது. Michael தான் உதுக்கெல்லாம் லீடர், Michaelஐ கேளும் நிறைய கதை சொல்லுவார்" என்று சதீசன் நழுவினார். 


FB messengerல்  Michaelஐ தொடர்பெடுத்தேன். இரண்டுமுறை தொடர்பு கொண்டும் ஆளை பிடிக்க முடியவில்லை. 

Feb 5, 2016

" Machi very sorry. Had a bad migraine so came home early and slept. Can you call tonight or tomorrow around 8.30 our time"


அன்றிரவும் ஆளை பிடிக்க முடியவில்லை. அடுத்த நாள் மாலை, அவரது பெற்றோரின் இல்லத்திற்கு சென்றிருந்த போது, அங்கு அழைப்பெடுக்குமாறு கேட்டு கொண்டார்.


"மச்சான் JP... எப்பிடிடா.." என்று தொடங்கி 1990 Big Matchற்கு முதல் நடந்த அட்டாகசங்கள் அனைத்தையும் அழகாக நினைவு கூர்ந்தார். தங்களுக்கு A/L withdrawals exam நடந்து கொண்டிருந்த காலம் அதுவென்றும், ஜந்து வருடங்கள் நடக்காத big match நடக்கும் போது எப்படி அதை விடுறது என்று தாங்கள் பரீட்சையை பொருட்படுத்தாது வீட்டிற்கு தெரியாமல் சைக்கிள், ரயில் என்று சுத்தி திரிந்து அட்டகாசம் செய்தது பற்றி மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.


தற்போது வைத்தியராக இருக்கும் தங்களது சக Prefect ஒருத்தர் அப்போது cheering squadற்கு வராமல் tuitionக்கு போக, அவரிற்கு tuition வாசலில் வைத்து முட்டை அடித்தது பற்றி கூறிவிட்டு சிரித்தார். சதீசனிற்கே ஞாபகமில்லாத ஒரு அழகிய Big Match தருணத்தை Michael அழகாக விபரித்தார். அந்த அற்புத கணம் 1990 Big Match பற்றிய அடுத்த பதிவில் இடம்பிடிக்கும்.


Big match அன்று நடந்த ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு

 "Machan, you know what to write and what not to write...right, we are Johnians, we always play the game" என்றார். 

Michael சொன்ன தொனியில் பரி யோவான் பொலிஸின் வெருட்டல் எனக்கு ஏனோ ஞாபகம் வந்தது, Michaelம் பழைய பொலிஸ் தானே. 
_________________________________________________________________________________


1988ம் ஆண்டு என்று நினைக்கிறன், கல்லூரியின் Sports Meet ஒரு சனிக்கிழமை மத்தியானம் நடைபெற்றது. காலையில் பாடசாலையின் வழமையான வகுப்புகள் இடம்பெற்றன. Michael, Handy Houseன் சிறந்த ஓட்டகாரன், நம்பிக்கை நட்சத்திரம். 


அஞ்சல் ஓட்டத்திற்கான அணிகள் தயாராகி கொண்டிருக்க, Handy House Captainஆக இருந்த ஶ்ரீபாலகுமார் அண்ணாவும் பார்த்திபன் அண்ணாவும் POGயாக இருந்த தனபாலன் மாஸ்டருடன் வாக்குவாதப்படுகிறார்கள். அன்று காலை பாடசாலைக்கு வராத Michael அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற முடியாது என்ற பாடசாலை ஒழுக்க விதி கடுமையான தொனியில் தனபாலன் மாஸ்டரால் அறிவுறுத்தப்படுகிறது. 


Michaelன் இடத்தில் எந்த போட்டிகளில் பங்கேற்காத ஒருவர், அவரின் வயது பிரிவிலும் குறைந்தவராயிருந்தாலும், பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தப்பட, இரண்டாவது lap ஓட Robert Williams மண்டபத்திற்கருகில் நான் நிலையெடுத்தேன். 

_________________________________________________________________________________


1990 Sports Meet, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் Medley relay. ஒவ்வொரு வயது பிரிவினரும் ஒரு lap ஓட, கடைசி 100m lap, over 19 பிரிவினர் ஓடுவார்கள். Dining hall அடியில் over 19 ஓட்டகாரன்கள் தயாராகிறார்கள். Johnstonற்கு சதீசன் Handyக்கு Michael என்று எல்லாம் சூப்பர் காய்கள். 

Handyயின் அஞ்சல் ஓட்ட அணி முன்னனியில் திகழ, மைக்கலிற்கு முதலாவதாக baton கிடைக்கிறது. Spikes அணிந்த  Michael பிச்சு கொண்டு பறக்கிறார். போட்டியை காண வந்த சுண்டுக்குளி பெட்டைகளின் பக்கமிருந்தும் ஆரவாரம் கேட்கிறது. பின்னால் கலைத்து கொண்டு சதீசன் புளுதி கிளப்பி கொண்டு ஓடுகிறார். அன்று அந்த ஓட்டத்தை பார்த்த யாரும் அந்த கடைசி 15 செக்கன்களை மறக்கவே மாட்டார்கள். 

கடைசி 50m...
Shot put இருக்கும் வளைவில் மைக்கல் திரும்ப, சதீசன் கலைத்து கொண்டு கிட்ட வந்துவிட்டார். ... மைதானமே ஆரவாரிக்கிறது,  Michaelம் சதீசனும் neck to neck ஓடுகிறார்கள். மயில்வாகனம் மாஸ்டரின் வர்ணனையை யாரும் கவனிக்கவில்லை. சுண்டுக்குளி பெட்டையள் வாங்கிலிருந்து எழும்பியே விட்டார்கள்.


கடைசி 25m.. 
பூர்ணம்பிள்ளை பவிலியன் மற்றும் lab பக்கமிருந்த பெடியள் எல்லாம் Prefectsஜ தள்ளிகொண்டு மைதானத்திற்குள் வந்திட்டாங்கள். Handyயின் பச்சை நிற கொடியையும் Johnstonன் நீல நிற கொடியையும் அட்டகாசமாய் ஆட, ஒரு பரவச   ஓட்டம் பரி யோவான் மைதானத்தில் அரங்கேறுகிறது. சதீசனும் Michaelம் முடிவு கோட்டிற்கு ஒரே தூரத்தில்..


கடைசி 1m...
முடிவு கோட்டை நெருங்கிவிட்டார்கள்.. நெஞ்சை நிமிர்த்தி கயிற்றை தொட்டு Michael ஸ்டைலாக ஓட்டத்தை வெல்ல முயற்சிக்க, சதீசன் ஒரே பாய்ச்சலில் முடிவுக்கயிற்றை தாண்டி போய் நிலத்தில் படாரென்று விழுகிறார். கையில் சிராய்ப்பு காயங்களுடன் வெற்றியை தழுவிய சதீசனை  Michael கைகொடுத்து தூக்கி விடுகிறார். 

_________________________________________________________________________________


Michael பரி யோவான் கல்லூரியில் மிகப்பிரபலமான மாணவன், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் கூட. பரியோவானின் ரோமியோ என்றும் சொல்லலாம். ஒவ்வொரு மாதமும் Michael பற்றிய ஏதாவது கிசு கிசு கல்லூரியில் உலாவும். தியேட்டரில், ரோட்டில் என்று Michaelஐ கண்டால் ஏதோ ஒரு பெட்டையின் பெயரை சொல்லி கத்திவிட்டு ஓடி ஒளிந்த சின்ன பெடியங்கள் நாங்கள். 


1990களில் Michaelடன் Oxoniaவில் AAT படித்த நாட்கள் இனிமையானவை. நாங்கள் கொழும்பு வாழ்விற்கு பழக திணற,  Michael மட்டும் சுண்டுக்குளியில் விட்ட இடத்திலிருந்து தனது வாழ்வை எந்தவித கஷ்டமுமின்றி தொடர்ந்தார். சிங்கள பெடியளோடு நாங்கள் பயமின்றி பழகவும் வெட்கப்படாமால் English பேசவும் பழக  Michael ஒரு role modelஆக திகழ்ந்தார். CIMA stage 2 படிக்கும் போது IASல் ஆனந்தகுமார் IFM பாடத்தை சொதப்ப, Oxoniaவில் கிருஷ்ணகுமாரின் Notesஜ எங்களுக்கு தந்துவினார் Michael.


பின்னாட்களில் CTC Insuranceல் வேலைசெய்யும் போதும், வலு ஸ்டைலாக வெளிக்கிட்டு தனித்துவமான ஸ்டைலில் சிங்களமும் Englishம் பேசிக்கொண்டு  கொம்பனி வீதியில்  Michael நடந்து செல்வதும், பஸ்ஸில் கண்டு கதைத்ததும் நினைவலைகளில் இன்று கடந்து செல்கின்றன. 

_________________________________________________________________________________

கடந்த பெப்ரவரி 6ம் திகதி தொலைபேசி உரையாடலின் இறுதியில், 1990 big match பற்றிய வேறு நினைவுகளையும் அடுத்த கிழமை பகிர்ந்து கொள்வதாக சொல்லிவிட்டு விடை பெற்றார். பின்னர் FB messengerல் அனுப்பிய குறுந்தகவல்.

"College college St Johns college"

"St Johns ale ellum 
Central ale elaathu"

"More to come soon"

Machan, I am waiting....No comments:

Post a Comment