Thursday, 4 February 2016

CIMA காலங்கள்: அந்த முதல் நாள்

பெப்ரவரி 6, 1995, திங்கட்கிழமை

ஓஸ்ரேலியாவிலிருந்து மாமா கொண்டுவந்து தந்த வெள்ளைநிற கோடு போட்ட இளநீல முழுக்கை சேர்ட், ஹமீடியாஸில் அளவெடுத்து தைத்த trouser, அன்று காலை மீண்டும் துடைத்த புத்தம்புது Bata சப்பாத்து அணிந்து வாழ்வில் முதல்முறையாக வேலைக்கு புறப்படுகிறேன். அம்மம்மாவிடம் ஆசி வாங்கி, வத்தளை அல்விஸ் டவுண் வீதியில் இருக்கும் பரிச்சயமான குழிகளையும் பரபரப்பான நீர்கொழும்பு வீதியையும் கடந்து பஸ் நிலையத்தை அடைகிறேன்.


"பாலியகொட, பஞ்சிகாவத்த, கொட்டுவா...கொட்டுவா..கொட்டுவா" என்று முழங்கும் 187 மினிபஸ்ஸில் ஏறி, சேர்ட் கசங்காமல் இருக்க தலையை குனிந்து ஓட்டுனர் பக்கமிருக்கும் சிறிய பகுதிக்குள் என்னுடலை குறுக்கி கொள்கிறேன். ஜா-எல 187 Rosa மினிபஸ்கள் அநேகமானவை புதியவை, முக்கிய தரிப்பிடங்களில் மட்டுமே நிறுத்துவதாலும் வேகமாக பயணிப்பதாலும் கொழும்பு கோட்டையை விரைவாக அடைந்து விடும். கொழும்பு கோட்டை புகையிரதம் நிலையத்திற்கு முன்பாக மினிபஸ்ஸால் இறங்கி நிமிர்ந்து புகையிரத நிலையத்தை பார்க்கிறேன். ஐந்தாண்டுகளிற்கு முன் அதே புகையிரத நிலையத்தில் அம்மாவோடு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து ரயிலில் வந்திறங்கியது ஞாபகம் வருகிறது. கண்களில் ஏனோ ஈரம்..


மீண்டும் பஸ், 138 மஹரகம மினி பஸ். கொழும்பு கம்பஸை ஊடறுத்து பயணிக்கும் பஸ். இந்த பஸ்ஸில் போய் வரும் போது கம்பஸில் கண்ட நெடிய மரங்களையும் அதன் கீழிருந்த வாங்குகளையும் அதிலமர்ந்திருந்த காதல் ஜோடிகளையும் பார்த்து தான் எப்படியாவது உயர்தரம் பாஸ் பண்ணி கொழும்பு கம்பஸ் போக வேண்டும் என்று எனக்கு நானே உறுதிமொழி எடுத்து கொண்டேன். கொழும்பு கம்பஸிற்குள் எல்லோரும் சந்தோஷமாக தெரிவார்கள். எப்பவும் ஏதோ சிரித்து பேசிக்கொண்டு இருப்பார்கள். கம்பஸ் கனவு அந்த காட்சிகளை பார்த்து பார்த்து பொழுதொரு வண்ணம் உருப்பெற்று மெருகேறியது. 


1992ல் ஓகஸ்டில் உயர்தர பரீட்சை எழுதி, சித்தி எய்தி, கொழும்பு கம்பஸும் கிடைத்தது. ஆனால் 1995 ஆகியும் எங்களிற்கு இன்னும் கம்பஸ் தொடங்கின பாடில்லை.  ஜேவிபி பிரச்சினையால் ஏற்பட்ட backlog அதற்கு காரணம். அந்த இரண்டு வருடங்களில் CIMA படித்து வேலையும் கிடைத்து விட்டது.  இன்று அந்த கம்பஸ் கனவு கனவாகவே நிற்க, முழுநேர கம்பஸ் வாழ்க்கையை கைவிட்டு கைநிறைய சம்பளத்தோடு வேலைக்கு போகிறேன். நான் செய்வது சரியா என்று 138 பஸ்ஸின் முன்னிருக்கையில் இருந்து மீண்டுமொருமுறை யோசித்து பார்க்கிறேன். அந்த நெடிய மரமும் அதற்கு கீழிருந்த வாங்கும்...


"Union place பகின்ட" என்று கொந்தா (அதான் நடத்துனர்) கத்த சிந்தனை கலைந்து பாய்ந்தடித்து இறங்குகிறேன். Hyde Park தாண்டி Vauxhall வீதியில் இறங்க நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க தொடங்குது. பழம்பெரும் Vauxhall வீதி இலங்கையின் மிகப்பெரும் வர்த்தக ஸ்தாபனங்கள் சிலவற்றிற்கு முகவரி. அந்த வீதியின் முதலாவது முடக்கில் திரும்ப வலப்பக்கத்தில் இருந்த வெள்ளைநிற நீண்ட இரண்டு மாடி கட்டிடம் என்னை பார்த்து சிரித்தது.  Aitken Spence Ltd.. என்ற தங்கநிற பெயர்ப்பலகையை பார்வையால் ஒற்றி கும்பிட்டுவிட்டு, கனமான கறுப்பு கதவை வலக்கையால் திறந்து வலக்கால் வைத்து உள்நுழைகிறேன். அதே வெள்ளை கட்டிடத்தின் மறுகோடியில் எனக்கு வேலை தரமறுத்த Coopers & Lybrand அலுவலகம். 


"Welcome Mr. Prakash" ஒரு பெண்குரல், தேன் கலந்த பெண்குரல், ராஜேஷ் வைத்தியாவின் வீணையாக ஒலிக்கிறது. 

CIMA காலங்களில் பெட்டைகள் எங்களோடு கதைக்க வெட்கப்படுவதைவிட எங்களுக்கு பெட்டைகளோடு கதைக்க நாங்கள் படுற கூச்சம் தான் அதிகம்.

"I am Geetha... Good morning and welcome aboard" வாவ் என்று திறந்த வாயை மூடி அவள் நீட்டிய கையை பற்றி குலுக்குகிறேன். சிக்கென்ற skirt & blouseல் ஒரு தேவதை என்னை corporate உலகத்திற்கு வரவேற்கிறாள், நல்ல முழுவியலமடா ராசா என்று மனம் மகிழ்ந்தது. 
.....................................................................................................................................................

கீதாஞ்சலி முதியான்சிலாகே ராஜபக்ஷ குமாரசிங்க is her full name.. Short and sweetஆ நாங்க கீதா கீதா என்று கூப்பிடுவம். கீதா நடந்தால் ஒபிஸ் அசையாது.. கீதா நின்றாலென்றால் ஒபிஸ் சுழறும்..அவ்வளவு வடிவு.. நயன்தாராவை விட கொஞ்சம் கம்மி.. அழகில.. ஆனா சமந்தாவை விட தூக்கல்..
......................................................................................................................................................

"Hello..."மீண்டும் ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை கேட்க, திடுக்கிட்டு பற்றியிருந்த அவள் கையை விட்டேன்.

"Ah.. Thank you... Ah... Nice to meet you" இயல்புநிலைக்கு வர கொஞ்சம் நேரம் எடுத்தது. நக்கல் கலந்த புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு அவள் நகர்ந்தாள். வந்திறங்கினதுமே bouncer போட்டா என்னென்று அடித்து விளாயாடுறது ?


எனக்கு பிரம்பால் இருக்கை பின்னப்பட்ட மர நாற்காலியும் ஆதிகால மரமேசையும் ஒதுக்கப்பட்டிருந்தது. மேசையின் வலப்புறத்தில் சத்தமாக இரையும் வெள்ளை நிற கம்பியூட்டர், அதற்கு பக்கத்தில் சுத்தி சுத்தி டயல் பண்ணுற பழங்காலத்து பச்சை நிற தொலைபேசி, மேசையின் மற்ற பக்கத்தில் புத்தம் புது Reynolds பேனாக்கள், CR கொப்பி, stapler, hole punch என ஆயுதங்களின் அணிவகுப்பு அசத்தலாக இருந்தது.

எங்களுடைய டிபார்ட்மெண்டிற்கு ஒரு "ட" வடிவ இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. "ட" வடிவத்தின் ஆரம்பத்தில்  Department Head தேவன் டி மெல்லின் அறை. மொட்டைத் தலையுடன் மீசையை முறுக்கிகொண்டும் கறாரான பார்வை பார்க்கும் அவரை பார்த்தால் தமிழ்ப்பட வில்லன்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். எனக்கு வலப்பக்கம் என்னுடைய வயதை ஒத்த, அசேல என்ற பெளத்த சிங்கள பேரினவாதி. அப்பரின் காசில் லண்டனில் பொருளியல் படித்துவிட்டு வந்து போன மாதம் தான் வேலையில் இணைந்திருந்தான். 1995 டிசம்பர் 5ம் திகதி யாழ்ப்பாணம் ஆமிட்ட விழ அவன் என்னை பார்த்த கேவலமான பார்வையை மறக்க முடியாது.


அவனுக்கு அங்கால தயந்தி என்ற ஒரு சிங்கள மனிசி, இன்னுமொரு லண்டன் ரிடர்ன். வெள்ளைக்காரிகள் மாதிரி இங்கிலீஷ் பேசுவா, ஆளை பார்த்தாலும் வெள்ளைக்காரி மாதிரிதான். இனக்கலவரத்தில் அடிவிழுந்தா வீடு திறந்து தமிழர்களிற்கு அடைக்கலம் கொடுக்கிற சிங்கள சகோதரி.  தயந்திக்கு முன்னால் தனிகா என்ற யாழ்ப்பாண தமிழ் அக்கா, இராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வேறொரு வேலைக்கு போக காத்திருந்தவ. அறையின் மூலையில் மென்டிஸ் என்கிற மெந்தா, கம்பியூட்டர் ஒபரேடர். பியூனாக இருந்து கம்பியூட்டர் ஒபரேடராக பதவி உயர்வு பெற்றவர், துண்டர ஆங்கிலம் பேச மாட்டார்.


"ஒயாட கம்பியூட்டர் தன்னவாத (உமக்கு கம்ப்யூட்டர் தெரியுமா)" மெந்தா மென்மையாக கேட்டார்.

"நஹா..(இல்லை)" அதற்கு மேல் சிங்களம் வாய்க்குள் வரவில்லை. 

"பய வென்ட எப்பா.. மங் கியலா தென்னங் (பயப்பிட வேண்டாம், நான் சொல்லித்தருகிறேன்)". வார்த்தைகளோடு மட்டும் நிற்காமல் இதயசுத்தியோடு மினக்கெட்டு பின்னாட்களில் மெந்தா எனக்கு Lotus 123, Word Perfect, dBase, Harvard Graphisc எல்லாம் சிங்களத்தில் சொல்லித் தந்தார். 


எனக்கு இடப்பக்கம் எனக்கு வேலை எடுத்து தந்த முரளி, என்னுடைய முதல் Manager, CIMA விரிவுரையாளர், அன்றும் இன்றும் என் குரு. நடிகர் சூர்யா போல எடுப்பாக இருப்பார்,  வேலை வாங்குவதில் கறார் பேர்வழி. வேலை நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் திறமாக
போதித்தவர். அன்று அவர் போட்ட அத்திவாரத்தில் தான் என்னுடைய career எனும் கட்டிடம் கட்டப்பட்டது. வேலை முடிய அவரின் Nissan Sunny காரில் வெள்ளவத்தை ஊத்தைகடையடியில் கொண்டு வந்து இறக்கிவிடுவார். காரில் வாழ்க்கை, காதல், கிரிக்கட் என்று அலசுவார். 


சரியாக பத்துமணிக்கு சுடச்சுட தேத்தண்ணி, cup & saucerல் வைத்து  செந்தளிப்பான முகத்தோடு மேசையில் கொண்டு வந்து வைத்தார் பியதாச என்கிற எங்கட Tea boy. 


21 ஆண்டுகள் கடந்தும் கண்டம் தாண்டி வந்தும் பல்வேறு நிறுவனங்களிற்கு வேலை செய்தும் அந்த முதல் வேலையும் அந்த முதல் நாளும் இன்றும் மனதில் பசுமையாய் நினைவில் நிழலாடுகிறது. எல்லா முதலிற்கும் ஒரு முதன்மை, ஒரு முக்கியத்துவம், ஒரு மகத்துவம் உண்டு. ஏனெனில் அந்த முதல்படி தான் இனி எடுத்து வைக்கப்போகும் படிகளிற்கு ஆதாரமாய், வழிகாட்டியாய் அமையும். சிலரிற்கு அந்த முதல்படி சறுக்கும், அந்த சறுக்கலிலிருந்து கிடைக்கும் பாடமும் மகிமையானது தான். கடவுளின் கிருபையால் எனக்கமைந்த முதல்வேலை "அந்த மாதிரி", அந்த முதல் வேலையில் நான் கற்ற விடயங்கள் காலத்தால் அழியாதவை.


காதலும் மனைவியும் மட்டுமல்ல, 
முதல் வேலை அமைவதும் 
இறைவன் கொடுத்த வரம் !

6 comments:

 1. டிகிரியை விட CIMA, ACCA போன்ற professional courses-ஐச் செய்தால் வேலைக்கு நிறைய opportunities கிடைக்கும் என்று பிறகு தான் தெரியவந்தது. டிகிரி இருந்து, 15 வருட அனுபவம் இருந்தும் (Microsoft-இற்கு எல்லாம் ப்ட்ஜட் போட்டுக் கொடுத்த டீமின் லீடர், அதைவிட prestigious விருதுகள் பலதும் கிடைச்ச குழுவை தலைமை தாங்கிய அனுபவம் எல்லாம் இருந்தும்) கூட ACCA இல்லாததால் என்ட ஒன்றுவிட்ட அக்காவை manager ஆக‌ promote பண்ணாமல் லண்டன்காரன் அராஜகம் பண்ணுறான். (CIMA செய்பவர்களைப் பாத்து எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்று ஏளனமாக நினைத்ததுக்கு நல்ல செருப்படி. In my defense, அப்ப நான் சின்னப்பிள்ளை ஆக்கும்)


  எங்கட கல்வி முறையைக் குறை சொல்லும் போது எவ்வளவோ சப்போட் பண்ணி வாதாடி இருக்கிறன். ஆனால் இப்படி எல்லாம் professional courses இருக்கு என்பதும் அதன் முக்கியத்துவமும் அதிகம் தெரியாமல் இருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கும். (சும்மா எல்லாரும் செய்யினம் என்று செய்தவர்கள் தான் என்ட சித்தி ஆக்களின் ஜெனரேஷன் 90s-batches. என்ட ஜெனரேஷன் ஆட்கள் பற்றி அதிகம் தெரியாது).

  போன வருச கடைசியில தான் ஒரு பெரிய கம்பனி (ஒடிட் கம்பனி என்று நினைக்கிறன்) டிகிரி இல்லாட்டியும் பரவாயில்லை அனுபவமும் நொலேஜ்சும் இருந்தால் போது என்று ஏதோ சொன்னார்கள். எத்தனை பேருக்குப் அந்த விசயம் போய் சேர்ந்ததோ தெரியாது.


  என்ட படிப்பு முடிய அக்கடமியாவில தான் வேலை வந்தாலும் (படிப்பிக்கிறதைத் தவிர ஒரு மண்ணும் தெரியாது என்ற உண்மையை எவ்வளவு வடிவா மறைச்சிட்டன் ஹாஹா) நியாயமான consultation firm ஒன்று நடத்தி அடுத்த‌ சந்ததியினருக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.

  ReplyDelete
 2. I presume, you carried on with your job offer. You made the right choice without wasting your time on a degree.

  or did you quit the job to join the university?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 3. So beautifully written. Dare I say, the life I had in university of Colombo was one of the precious period in my life. However, I sure equally we all will have different experiences at different places. Thank you

  ReplyDelete