Monday, 15 February 2016

1990 Big Match.......பரி யோவான் பொழுதுகள் :மார்ச் மாதம், 1990

அமைதி காக்கவென இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய இராணுவத்தினதும் அதன் அராஜக ஒட்டு குழுக்களினதும் கொடூர பிடியிலிருந்து மீண்டு, யாழ்ப்பணம்  நிம்மதியாக மூச்சு விட்டு கொண்டிருந்தத காலம். விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுபாட்டில் யாழ்ப்பாணம் மீண்டுமொரு யுத்தங்களிற்கிடையிலான தற்காலிக இயல்பு வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருந்த காலப்பகுதி. விடுதலை புலிகளிற்கும் பிரேமதாச அரசிற்குமிடையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று கொண்டிருந்த காலங்கள்.


பிள்ளைபிடி (ஈபி)காரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பால் தடைபட்டிருந்த பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியிருந்தது. 1984ம் ஆண்டிற்கு பின்னர் நடைபெறாத, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ் பரி யோவான் கல்லூரிக்கும் இடையிலான "வடக்கின் பெரும் போர்" (Battle of the North) கிரிக்கட் ஆட்டத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. "வடக்கின் பெரும் போர்" இடம்பெறும் மத்திய கல்லூரி மைதானம், யாழ் கோட்டையை அண்டிய இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்ததால், 1984ம் ஆண்டிற்கு பின்னர் இந்த போட்டி இடம்பெறவில்லை. 1904ல் ஆரம்பிக்கப்பட்ட Central-St.John's Big Match, இலங்கையின் நாலாவது பழம்பெரும் பாடசாலைகளிற்கிடையிலான கிரிக்கட் போட்டியாகும். Royal-Thomian, Dharmaraja-Kingswood, St.Thomas(Matara)-St.Servatius ஆகியவை, "வடக்கின் பெரும் போரை" விட பழமையானவை. Trinity-St.Anthony's, St.Joseph's-St.Peter's, Ananda-Nalanda எல்லாம் Central-St.John'sற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டவை. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை "பொன் அணிகளின் மோதல்" என்று வர்ணிக்கப்படும் St.Patrick's-Jaffna Collegeன் "Battle of the Golds" Big Matchம் பிரசித்தி பெற்றதென்றாலும் யாழ்ப்பாணத்தின் வரலாற்றிலும் கலண்டரிலும் முக்கியத்துவம் பெறுவது Central-St.John's Big match தான். இரு நாட்கள் இடம்பெற்று வந்த Central-St.John's Big Match, இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்பிரதாயப்படி 2004ம் ஆண்டு நூற்றாண்டு ஆட்டத்திற்கு பின்னர் மூன்று நாள் ஆட்டமாக பரிணமித்தது.


1980களில் இடம்பெற்ற அனைத்து ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தன. 1981ம் ஆண்டு ஆட்டத்தில் ரட்ணராஜா தலைமையிலான பரி யோவான் அணியின் கை ஓங்கியிருக்க, 1982ல் விக்னபாலன்-விஜயராகவன் கூட்டணியாலும் 1983ல் நிஷ்யந்தன்-ஜெயேந்திரனாலும், பரி யோவான் அணி தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டிருந்தது. 1990ல் T.சதீசன் தலைமையிலான பரி யோவான் அணி பலமான அணியாக திகழ்ந்ததால், இந்த முறை எப்படியும் Big Match வெல்லுவோம் என்ற எதிர்பார்ப்பு பரி.யோவான் வளாகத்தினுள் பரவியிருந்தது. 1982,83 ஆட்டங்களை பார்த்தவர்கள், இந்தமுறை Centralகாரருக்கு "முறையை குடுக்கோணுமடா" என்ற வீறாப்புடன் உலா வந்தார்கள்.


T.சதீசன் அந்த வருஷம் Senior Prefect (SP) வேற, அதாவது பரி யோவானின் காவல்துறை பொறுப்பாளர். பரி யோவானில் Prefectsஜ Police என்று தான் கூப்பிடுவோம். சதீசன் அண்ணா ஒரு கண்டிப்பான SP, அவரை கண்டால் பெடியளிற்கு கிடு நடுக்கம். Big Match வரப்போகுது என்றதும், கல்லூரியில் அவரை காணும் சின்ன பெடியள் சிலர் "அண்ணா, எப்படியும் Big Match அடிக்கோணும்" என்று தூர நின்று கத்துவாங்கள், கிட்ட போனா குட்டு விழும் என்று பயம். ஒரு சிறு தலையாட்டல், அரும்பிய புன்னகை பாதியில் காணாமல் போக, முகத்தில் செயற்கையாக வரவழைக்கப்பட்ட கடுமையோடு "நீர் முதல்ல classற்கு போம் ஜசே" பதிலாக கிடைக்கும். 


Big Matchற்கு முந்திய வாரம் வீதிகளில் ஊர்வலமாக சென்று தங்கள் பாடசாலை அணிக்கு உற்சாகமூட்ட cheering sqaud களமிறங்கும். கல்லூரியின் சிவப்பு கறுப்பு நிற கொடிகளுடன் மிடுக்காக களமிறங்கும் பரி யோவான் கல்லூரியின் cheering squad யாழ்ப்பாண வீதிகளை ஒரு கலக்கு கலக்கும். வீதியோரங்களில் நின்று சிரித்து கொண்டே சனம் வேடிக்கை பார்க்கும்.  பரி. யோவானின் cheering squad, தனக்கேயுரித்தான தனித்துவமான பம்பலால் முழு யாழ்ப்பாணத்தையே தன்பால் கவர்ந்திழுக்கும்.  பரி யோவான் வாழ்க்கையில் இந்த முத்தான பொழுதுகள் ஜந்தாண்டுகள் எம்மிடமிருந்து பறிக்கப்பட, 1990ல் வலு மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் பரி.யோவானின் cheering squad களமிறங்குகிறது. 

"College College.. 
St. John's College"


Big Match வாரத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற assemblyயில் அந்த வாரத்தில் மாணவர்கள் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குமுறைகள் பற்றி அறிவுறுத்தப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கல்லூரி வளாகத்துக்குள் மேளம் அடிக்க கூடாது, சத்தம் போடக்கூடாது, பொதுமக்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கக்கூடாது, போட்டி நடக்கும்போது மைதானத்திற்குள் ஓடக்கூடாது, என்று பலவித கட்டுபாடுகள். பரி. யோவானின் ஒழுக்கநெறிகள் எந்த நேரத்திலும் கைக்கொள்ளப்பட வேண்டும், பரி.யோவானின் காவல்துறைக்கு, Prefects, கண்ட இடத்தில் தண்டிக்க சிறப்பு அதிகாரங்கள் என்று அதிபர் தேவசகாயம் ஆங்கிலத்தில் முழங்கினார்.

"சென்றலால ஏலாது..
ஏலுமேன்றா பண்ணிப்பார்"


பாடசாலை முடிய, பாடசாலை வாயிலிற்கு வெளியே cheering squad அணி சேரத் தொடங்கும். வெள்ளை சேர்ட் களைந்து, சிவப்பு கறுப்பு டீஷேர்ட் அணிந்து, காலில் சோலாப்பொரி செருப்போடு சைக்கிள் பாரில் ஒருத்தன் கல்லூரி கொடியை கம்பீரமாக பிடிக்க, மற்றவன் சைக்கிள் உலக்க, தகர பீப்பாக்கள், விசில்கள், பீப்பீக்கள் சகிதம்  cheering squad, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி நோக்கி தனது முதலாவது நகர்வை மேற்கொள்ளும். சுண்டுக்குளி வாசலில் பெட்டைகள் வெருள, மேளங்கள் கொட்ட தொடங்க, விசில்கள் பறக்க, சைக்கிளிலிருந்து இறங்கும் அணி, நடு வீதியில் ஆட தொடங்கும். 


"காலாலே தாளம் போடுடா..
சுண்டுக்குளி மேல St.Johns போடுடா"


சுண்டுக்குளி "அம்மனிடம்" ஆசி வாங்கிய அணியின் அடுத்த இலக்கு பஸ்தியான் சந்தி. ஒரு பக்கம் Tulipsற்கு முன்னால் ஆட்டம் களைகட்ட மறுபக்கத்தில் hat collection, நிதி சேகரிப்பு, மும்முரமாக தொடங்கும். வர்த்தக நிலையங்களும் வீதியால் போவோரும் சிரித்து கொண்டே நிதிப்பங்களிப்பு செய்வார்கள். ஏந்தும் தொப்பியில் குவியும் தாள்களும் நாணயங்களும் சின்ன பெடியளின் குளிர்பானங்களிற்கும் பெரிய அண்ணாமாரின் உற்சாக பானத்திற்கும் செலவிடப்படும். 

"போடு மச்சான் பொல்லு பறக்க
அடிடா மச்சான் பவுண்டரி சிக்ஸர்"


பிரதான வீதியால் முன்னேறும் அணி, கொன்வென்ட் அடியில் ஒரு குட்டி ஆட்டம் போட்டு விட்டு, வேம்படி வாசலில் வந்திறங்கும். வொட்சர் ஓடி வந்து வேம்படியின் பெரிய கேட்டை இழுத்து மூட, வாசலிற்கு வந்த பெட்டைகள் வெருண்டடித்து பாடசாலைக்குள் திரும்ப பறப்பார்கள். சத்தம் கேட்டு மற்ற பக்கத்தால் சென்றல்காரர் வந்திறங்க காற்றில் கொஞ்சம் tension கலக்கும். சில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் முறுகல், மேளங்கள் கொட்ட ஆட்டமாக மாற, வேம்படி வாசலில் போட்டி நடனம் அரங்கேறும். மேளக்காரருக்கு உரு வந்து ஆட்டக்காரரை ஆட்டுவித்ததாங்களா இல்லை ஆட்டக்காரரிற்கு வந்த விசரை பார்த்து மேளக்காரன்கள் சதிராடினாங்களா என்று தெரியாதளவிற்கு தார் வீதியில் புழுதி பறக்கும். ஆடி முடிய  சென்றல்காரர் கையசைத்து விட்டு சுண்டுக்குளி பக்கம் போவாங்கள்.. பாவம், சனம் இல்லாத யாழ்ப்பாணத்தை ஆமி பிடித்தது போல், அங்கு வெறுமையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அவங்களுக்கு காத்திருக்கும். 

"வேம்படி வேம்படி
போங்கடி.. போங்கடி"


வேம்படியால வெளிக்கிட்டு, ஆஸ்பத்திரி வீதியில் இறங்கும் அணி நோயாளர்களிற்காக அமைதி காக்க, நிதி சேகரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆஸ்பத்திரி வீதி நெடுக நிதி சேகரித்து, பூபாலசிங்கம் புத்தக கடை தாண்டி விமாகியடியில் சுழன்று அப்படியே மின்சார நிலைய வீதியால் சுத்தி ஞானம்ஸ் ஹோட்டல் தாண்டி பருத்தித்துறை வீதியில் மிதந்து, தண்டவாளத்தை ஒட்டி ஓடும் ஒழுங்கைக்கால் குறுகி யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை cheering squad வந்தடையும்.

"பாஸே பஸியலடே
பூம் பூம் பூம்"


கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் தபால் ரயிலை வரவேற்க யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, புகையிரத நிலையத்திற்கு வெளியே மேளங்கள் முழங்க, மீண்டும் பரி.யோவானின் பிரபுதேவாக்கள் களமிறங்குவார்கள்.

 "டேய், ஸ்டேஷனுக்குள்ள போவமடா"  சத்தமாய் ஒரு குரல் கேட்கும், 

"சனத்திற்கு இடைஞ்சல் கொடுக்க கூடாது" cheering squadஐ வழிநடத்தும் நல்ல Police கட்டளை பிறப்பிக்கும். 


புகையிரத நிலையத்தின் நிலத்தடி கடவையால் ரயில் வராத platform நோக்கி தாரை தப்பட்டைகாரரும் ஆட்டக்காரரும் இரகசியமாய் நகர்ந்து நிலையெடுக்க, பயணிகள் நிற்கும் platformற்கு எதிர் பக்கம் பொதுமக்களுக்கு சேதம் வராமல் தாக்குதல் தொடங்கும். பயணிகள் நிற்கும் platformல் நிதிப்பிரிவு, தொப்பிகள் ஏந்தி பயணிகளிடம் வசூலில் இறங்கும். கொழும்பார் மனமா கொடுப்பார்கள். ஜொனியன்ஸின் தாரை தப்பட்டை சத்தத்தில் கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயில் அமைதியாக வந்து நிற்கும்.

"பனை மரத்தில வெளவாலா
ஜொனியன்ஸிற்கே சவாலா"

தொடரும்...

--------------------------------------------------------------------------------------------------------------------------

கொசுறு
ஒரு நாள் காலை யாழ் தேவி ரயில் என்ஜினின் முன்பக்கம் பரி யோவான் கல்லூரி கொடியை கட்டிவிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை பரி யோவானின் 1990 A/L batch பெடியள் போனார்கள். போகும் வழியில் இடையில் யாரோ ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க ரயில் நடுகாட்டிற்குள் நிறுத்தப்பட்டது. பரி யோவான் காவல்துறை நடாத்திய உள்ளக விசாரணை பொறிமுறையில் போர்க்குற்றவாளி அம்பிட்டார்.

"என்ட தொப்பி காத்துக்கு வெளில பறந்திட்டுது, அதால தான் சங்கிலியை இழுத்தனான்" என்று ஒரு 90 batchகாரன் குற்றத்தை ஒப்புகொண்டதால், சர்வதேச சமூகத்திற்கு அவனை காட்டி கொடுக்காமல், குற்றம் மூடி மறைக்கப்பட்டது. 

--------------------------------------------------------------------------------------------------------------------------


பின்னிணைப்பு
யாழ்ப்பாணம் வானவில் இசைக்குழுவினர் 2014ல் வடக்கின் பெரும்போரை முன்னிட்டு தயாரித்த அருமையான வீடியோ பாடல்.. Big Match, Cheering Squad காணொளிகளுடன்


--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment