Thursday, 21 January 2016

ஒரு படம், ஒரு புத்தகம், ஒரு Matchசனிக்கிழமையிரவு பாலாவின் தாரை தப்பட்டை படம்  இரவு 9.30 காட்சி பார்க்க தியேட்டருக்கு போய் இறங்க 9.36 ஆகிவிட்டது. எனக்கு எழுத்தோட்டத்திலிருந்து படம் பார்க்க வேண்டும். காரால் இறங்கினதும் தனக்கு ஓரு " skinny latte" வேண்டும் என்று மனிசி அடம்பிடிக்க, வந்த டென்ஷனிற்கு கதம் கதம் சொன்னேன். வெள்ளக்காரி கதை அலம்பி முடிச்சு கோப்பி போட்டு தந்து, டிக்கட் கிழித்து, சரியான தியேட்டர் தேடி, இருட்டில் சீட் கண்டுபிடித்து போய் அமர....சசிகுமார் குரல் "புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்" என்று ஒலிக்குது. 
...........................................................................................................................................................

ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் ஓஸ்ரேலிய இந்திய அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டி MCGயில் அரங்கேறியது. அன்றைக்கென்று பார்த்து ஒரு family lunch, அது சுணங்க.. மீண்டும் டென்ஷன், கதம் கதம்.  அடிச்சு பிடிச்சு காரை எடுத்து கொண்டு பறந்து மைதானத்திற்குள் நுழைந்தால் கோஹ்லியும் தவானும் களத்தில் நிற்கிறாங்கள், ஷர்மா அவுட். MCGயிலும் தாரை தப்பட்டை சத்தம் முழங்குது. 
...........................................................................................................................................................

இயக்குனர் பாலாவின் ஏழாவது படம், முதன் முறையாக குருவின் இயக்கத்தில் சிஷ்யன் சசிகுமார் நடிக்கும் படம், இளையராஜாவின் ஆயிரமாவது படம் போன்ற பீத்தல்களுடன் திரைக்கு வந்த தாரை தப்பட்டை படத்தின் ஆரம்பம், உண்மையிலேயே அட்டகாசம். அதிலும் கதாநாயகனின் அறிமுக இசையிலும் "வதன வதன வடிவேலனே" என்ற முதல் பாடலிலும் இளையராஜா தமிழ் இசையின் தனித்துவத்தை மிளிரவைக்க, நம்மையறியாமல் கால்கள் தாளம் போடும். 
..........................................................................................................................................................

முன்னூறு ரன்கள் அடித்தும் கடந்த இரு போட்டிகளிலும் தோல்விகளை தழுவிய இந்திய அணி மெல்பேர்ணில் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் என்னுடைய லக்கி இந்தியன் ஜெர்ஸியோடும் ட்ராவிட் தொப்பியோடும் ஆசனத்தில் அமர்ந்தால் என்னை சுத்தி box அடிச்சிட்டாங்கள். வலப்பக்கம் ஒஸி கொடியோடு என்ட பொடியள், பின்பக்கம் சிங்களவங்கள், இடப்பக்கம் வெள்ளைக்காரன்கள் முன்னால இந்தியாகாரன்கள்.  சர்வதேச வலைபின்னலால் தோற்கடிக்கப்பட்ட எமது ஆயுதபோராட்டம் ஏனோ நினைவில் வந்து சென்றது.

.........................................................................................................................................................

சில புத்தகங்கள் வாசிக்க தொடங்கினால் முடிக்கும் வரை திரும்ப வைக்க முடியாது. ஷோபா சக்தியின் Box கதைப்புத்தகமும் இந்தவகையில் அடங்கும். எளிமையான வரிகளுடன், உண்மைச் சம்பவங்களின் தழுவலாக கற்பனை முலாம் பூசி எழுதப்பட்ட இந்த நாவலை ஒருவித கோப உணர்வுடன் இரு நாட்களில் வாசித்து முடித்தேன். 

எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்ததை மீள வாசிக்க வந்த கோபம் ஒரு புறம், மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை உண்மை சம்பவங்களாக சித்தரித்த புலி எதிர்ப்பாளரான எழுத்தாளரின் மீதான கோபம் மறுபுறம் என்று நெஞ்சில் கோபக்கனலை மூட்டிய புத்தகம் Box கதைப்புத்தகம்.

..................................................................................................................................................................

தாரை தப்பட்டை படத்தின் முதல்பாதியை வரலட்சுமி ஆக்கிரமிக்கிறார். மாமனாருடன் தண்ணியடிப்பதாகட்டும், "லவுசடி" என்று கத்துவதாகட்டும், அந்தமானில் அடிதடியாகட்டும், ஆற்று படிக்கட்டில் சசிகுமாருக்கு உதைவதாகட்டும், வரலட்சுமி திரைப்படத்தை தனியொருத்தியாக நகர்த்தி செல்கிறார். நடிப்பிற்கு மேலாக வரலட்சுமியின் ஆட்டமும் அசத்தல். 
..............................................................................................................................................................

MCGயில் தவானின் தாரையும் கோஹ்லியின் தப்பட்டையும் பட்டையை கிளப்பி கொண்டிருந்தது. கொளுத்தும் வெய்யிலில், கறுத்தாலும் பரவாயில்லை ஆட்டத்தை ரசிக்க வேண்டும் என்ற கங்கணம்துடன் sun cream அள்ளி பூசிக்கொள்கிறேன். இருவரின் ஆட்டத்திலும் ஒரு ரிதம் இருந்தது, ரன்களை அடித்தும் ஓடியும் குவிக்க தொடங்க ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. தவான் அடித்து ஆட வெளிக்கிட்டு 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ரஹானே களமிறங்கினார். 

ரஹானேயின் straight drivesல் ட்ராவிட் நினைவில் வந்து போனார். ரஹானேயின் ஜம்பதும் தோனியின் அதகளமும் கை கொடுத்தாலும் கிங் கோஹ்லியின் சதம் தான் இந்தியாவை 295 எட்ட வைத்தது. 

.............................................................................................................................................................

இடைவேளைக்கு பின்னர் வில்லன் திரைக்கதைக்குள் நுழைகிறான். வில்லனின் நுழைவோடும் திரைக்கதைக்கு தேவையற்ற ஆபாச வார்த்தைகளும் அளவிற்கு மீறிய குரூர வன்முறையும் படத்தை தோல்வியை நோக்கி அழைத்து செல்கிறது. இசைஞானியின் திருவாசக "பாருருவாயும்", "இடறினும்" தேவாரமும் மெய்சிலிர்க்க வைத்தன. இளையராஜாவின் மெட்டுகளில் புதுமையில்லை தான், ஆனால் அதை கேட்கும் போது மனதில் எழும் புத்துணர்ச்சி விபரிப்புற்கு அப்பாற்பட்டது. 

............................................................................................................................................................

ஓஸ்ரேலிய விக்கட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் தப்பி தவறி கைபற்றியது ஓரு பக்கம் நம்பிக்கையை துளிர்க்க வைத்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் மோட்டுத்தனமான பந்துகள் அந்த நம்பிக்கையை அரும்பிலேயே கிள்ளி எறிந்தன. "வில்லன்" மக்ஸ்வெல் வருகையும் அவரின் நிதானமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியை நோக்கி அழைத்து சென்றது. 

..............................................................................................................................................................

"இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா ? ஆம் இருண்ட காலங்களைப் பற்றி பாடுவது இருக்கும்" என்ற அறிமுக வாசகங்களிற்கும் "பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளை காப்பாற்ற தவறிய இரத்தப்பழி நம் சந்ததியோடு இருக்கும்" என்ற காணிக்கை பத்திர வரிகளிற்கும் Box புத்தகம் அநியாயம் (துரோகம் என்ற மலிவான வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து) இழைத்திருக்கிறது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. குறிப்பாக பாலச்சந்திரனை நினைவுறுத்திய பாத்திரமும் தென்பகுதியில் இயங்கும் விபச்சார விடுதி பற்றிய பகுதியும் புத்தகத்தில் அடிக்கடி வந்து போகும் நிர்வாணமும் அபத்தம். 

................................................................................................................................................................

ஒரு படம்.......தாரை தப்பட்டை
ஒரு புத்தகம்...Box கதைப்புத்தகம்
ஒரு Match....இந்திய v ஒஸ்திரேலியா

முதல் பாதி அசத்தல்
மறு பாதி சொதப்பல்

1 comment:

  1. ஷோபா சக்தியின் சில ஆக்கங்களைப் பார்த்திருக்கிறேன். எவ்வளவு வக்கிரம். அருவருப்பு, கோபம், ஆற்றாமை எல்லாம் வந்தது. இதில என்ன ஆச்சரியம் என்டால், இவர்களுக்கு எப்படி புத்தகம் வெளியிடவும் படம் வெளியிடவும் காசு வருகிறது என்று தான். எழுத்தாளர்கள் அதிகம் காசு சம்பாதிப்பதில்லை. எனக்கென்னவோ ஜெ*ராஜாவுக்கு காசு கொடுத்து எழுத வைத்தது போல இவர்களுக்கு காசு கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எங்களவர்கள் விட்ட பெரிய பிழை. தமிழ் தமிழ் என்று தமிழ் சொற்களைத் தேடித் தேடி வைச்ச நேரத்துக்கு நடந்த வரலாற்றை ஆங்கிலத்தில் பதிய ஆட்களைத் தேடி பதிந்து வைச்சிருந்திருக்க வேணும். அதை நினைக்கும் போது சில வேளைகளில் தமிழின் மேல் வெறுப்பே வருகிறது. தமிழில் எழுதி என்னத்த செய்யிறது. இத்தனை காலம் ஊரில வாழ்ந்தவர்களுக்குத் தெரியாதையா எழுதப் போறோம் என்று விசனமாக இருக்கும். அதனால் தான் வரலாற்று சம்பவங்கள் எழுதும் போது ஆங்கிலத்திலும் பதிஞ்சு வையுங்கோ என்று பாக்கிறவர்களிடம் எல்லாம் கேட்பேன். அப்படியாவது, வேற நாட்டவர்களுக்கும் எங்கள் வரலாறு போய்ச்சேரும் என்ற நப்பாசை தான்.

    //பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளை காப்பாற்ற தவறிய இரத்தப்பழி நம் சந்ததியோடு இருக்கும்"//

    முதல் வரியைப் படித்தவுடனேயே நேர்மையானவன்னையா அவன் என்று முட்டாள் தனமாக இவர்களில் Trapல் விழுந்துவிடும் அளவுக்கு இன்னும் முட்டாளகாளாகவா இருக்கிறோம் என்று கோவம் வருகிறது. எவ்வளவு exposure கிடைத்தாலும் நாங்கள் கிணற்றுத் தவளைகள் தானா? அல்லது முட்டாள்களா? யூதர்களுக்கு அடுத்த புத்திசாலிகளாம் நாங்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete