Thursday, 28 January 2016

வருவது காதல்....


உயர்தரம் படிக்க தொடங்க பெடியளிற்குள் ஒரு மாற்றம் வரும். அரும்பு மீசை துளிர்விட காதல் அரும்பும் மனதிற்குள் துளிர்விடும். அந்த வயதில் எல்லா பெடியளும் யாரோ ஒரு பெட்டையை கட்டாயம் மனதிற்குள் காதலித்திருப்பார்கள். 


சிலர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த உணர்வை மனதிற்குள் வைத்து பூட்டி சாகடிப்பார்கள். வேறு சிலர் அந்த பெட்டைக்கு காதலை தெரிய வைக்க சுழற்ற தொடங்குவார்கள். சுழற்ற தொடங்கும் சிலர் காதலை பெட்டையிடம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவார்கள். காதலை அறிவித்தவர்களில் அரிதாய் ஓரிருவருக்கு பச்சை சிக்னலும் சிலரிற்கு சிவப்பு சிக்னலும் காட்டப்பட, பலரிற்கு மஞ்சள் சிக்னல் தான் வரமாய் கிடைக்கும்.


ஒரு பெட்டையை மனதிற்குள் காதலிக்கும் உணர்வு அற்புதமானது.  ஜம்புலன்களிற்கும் விடுமுறை அறிவித்து விட்டு மனதை இளக்கி மேகத்தில் நீச்சலடிப்பது போன்ற ஒரு உணர்வு. திரைப்படங்களில் வரும் அபரிதமான வர்ணணைகள் சிலநேரங்களில் அந்த பரிசுத்தமான உணர்வை கொச்சைபடுத்தும்.  அதேவேளை சில திரையிசை பாடல்கள் பெடியளின் காதல் உணர்வை அப்படியே தத்ரூபமாக பதிவுசெய்வது மட்டுமன்றி அரும்பும் காதலெனும் செடியை தண்ணீரூற்றி செழிப்பாக்கும்.


1990களில் நாங்கள் உயர்தரம் படிக்கும் போது வெளிவந்த இரு பாடல்கள் காதல் உணர்விற்கு தண்ணீர் மட்டுமல்ல நல்ல பசளை போட்டும் வளர்த்து விட்டவை. ஒன்று வாலி-இளையராஜா-ஜேசுதாஸ் கூட்டணியில் இதயம் படத்தில் அமைந்த "பொட்டு வைத்த வட்ட நிலா" பாடல், அடுத்தது வைரமுத்து-ரஹ்மான்-உன்னிகிருஷ்ணன் படைப்பில் காதலன் படத்தில் மலர்ந்த "என்னவளே அடி என்னவளே" என்ற பாடல். 


இந்த இரண்டு பாடல்களையும் படத்தில் காட்சியமைத்த விதம் அநியாயத்திலும் அநியாயம். இதயம் படத்திலாவது ஹீராவை கொஞ்சம் ரசிக்கலாம். "என்னவளே" பாட்டு வரும்போது நக்மாவை பார்க்க சகிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேட்டு ரசிக்கலாம். 


அந்த வயதில் கண்களின் பார்வைக்குள் வந்து போகும் பல நூற்றுக்கணக்கான பெட்டைகளில் அந்த ஒருத்தியை சுற்றி தான் மனம் மையல் கொள்ளும், சுழன்றடிக்கும். வாலி அதை வடிவாய் சொல்லுவார் 

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா"


மனதை எட்ட நின்று தொட்ட அந்த வட்ட நிலவை எப்படி நெருங்குவது என்று மனம் பதைபதைக்கும். 

நெருங்க ஒரு காரணம் வேண்டாமா ? 
நிலவு கடுப்பாகி எங்கட நெற்றியில் பொட்டு வைத்துவிட்டால் என்னாகும் ? 
எட்ட நிற்கும் நிலவிற்கு கிட்டபோக "ஈழகாவியன்" வைரமுத்து ஒரு ஐடியா தருவார் 

"எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்"வைரமுத்து காலடி தேடி வந்ததோடு நிற்பாட்டியிருந்தால் பரவாயில்லை. நிலவின் காலடி தேடி வந்த பெடியளை இன்னும் உசுப்பேத்துவார். உலகத்தமிழின துரோகி கலைஞரின் காலை கட்டிப்பிடித்துகொண்டு " ஈழகாவியம் படைப்பேன் படைப்பேன்"  என்று திரும்ப திரும்ப வெட்கம், மானம், ரோசம் எல்லாத்தையும் காற்றில் பறக்கவிட்டு சொல்வது போல், பெடியளிற்கும் வெட்கத்தையெல்லாம் விட்டு விட்டு இன்ன இன்னதெல்லாம் செய்யுங்ககோடா என்று ஒரு லிஸ்ட் போட்டு தருவார்

"கும்பிட்டு கண்ணடியுங்கோடா
கூந்தலில் மீன் பிடியுங்கோடா
விரலுக்கு சுடக்குகெடுங்கோடா"

ச்சா.. காதல் வந்தா மானம் காற்றில் பறந்திடுமோ ?


அந்த பெட்டை வாற வழியை பார்த்து பெடியள் மணித்தியால கணக்காக காவல் இருப்பதற்கும் இந்த மானங்கெட்ட வைரமுத்துவைத்தான் குற்றவாளி கூண்டில் ஏற்றவேண்டும்

"காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி"


கால்கடுக்க நின்ற பெடியன், பெட்டை வந்திறங்கியதும், அவளிற்கு பின்னால போகத் தொடங்குவான். அந்த நேரத்தில் வாலி வந்து நிற்பார் 

"அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்னாளும்"


விழியில் விழுந்து இதயம் நுழைந்த காதல், உடலிலும் உள்ளத்திலும் camp அடிக்க, நாக்கு மட்டும் அடங்க மறுக்கும். காதலை சொல்ல இந்த நாக்கு ஏனோ பின்வாங்கும்.

"வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி"

என்று அகிம்சாவாதி வாலி அதை விபரிக்க, வைரமுத்து வன்முறையில் இறங்குவார்

"மெளனம் பாதி 
மோகம் பாதி 
என்னை கொல்லும் 
என்னாளும்"

காதலை சொல்ல தில் வேண்டும் என்பார்கள். அந்த தில் வராததால் அந்த ஏக்கத்தை அந்த தவிப்பை அந்த சோகத்தையும் வைரமுத்து பதிவு செய்வார்

"யாப்போடு சேராதோ பாட்டு
தோப்போடு சேராதோ காற்று"

யாப்பையும் தோப்பையும் இழுத்த வைரமுத்து, உயர்தரம் படிக்கிற பெடியனை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஒரு வரி இழுத்து விடுவார்..

"வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை"

பரீட்சையை ஞாபகப்படுத்தியதும் பெடிக்கு வாழ்க்கையின் முக்கியத்துவம் முன்னுரிமை பெற காதல் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படும். 


"நான்
வாழ்வதும் 
வீழ்வதும்

உந்தன்
வார்த்தையில் 
உள்ளதடி"

என்ற வாலியின் வேதாங்கம் வெற்று கோஷமாய் விளங்க, யாழ்ப்பணாம் உயர்கல்வி பதிப்பகத்தின் நீல நிற "கடந்த கால பரீட்சை வினாக்களும் விடைகளும்" புத்தகம் விடிவெள்ளியாய் துலங்கும்.

கண்மூடி கர்த்தரே என்று ஜெபித்துவிட்டு, புத்தகத்தை திறந்து முதல் கேள்வி வாசிக்க தொடங்க, வைரமுத்து என்ற சாத்தான் துரத்தி கொண்டு வரும்.

"ஒன்றாய் கூடும் 
ஒன்றாய் பாடும் 
பொன்னாள் இங்கு 
என்னாளோ"

பதின்மத்தில் வரும் காதல் வெற்றி பெற்றதா தோல்வியடைந்ததா என்பது ஒரு விஷயமேயில்லை. காதல் வந்தது அதை அணுவணுவாய் வாழ்ந்து உணர்ந்தோம் அந்த காலகட்ட பாடல்கள் அந்த உணர்வுகளிற்கு வலுசேர்த்தது என்ற படிமங்களில் தான் பதின்ம வயதின் நினைவுகள் செழுமையடையும். 


1 comment:

  1. Very nice and very true.....heart touching lines......not only boys dream about girls.....girls too dreamt about boys....but no one gets to know it. they just supress their feelings.....

    ReplyDelete