Thursday, 7 January 2016

ஜீவானந்தம் மாஸ்டர்........பரி யோவான் பொழுதுகள்:1999ம் ஆண்டு, யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தின் கிடுங்கு பிடிக்குள் சிக்கியிருந்த காலம். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அளித்த சாட்சியத்தில், செம்மணியில் மனித புதைகுழி இருப்பது உலகின் கவனத்திற்கு வருகிறது. இன்றுபோல் அன்றும் இலங்கை அரசு சர்வதேச கண்காணிப்புடன் உள்ளக விசாரணை எனும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது. உள்ளக விசாரணையை நெறிப்படுத்த 
பரி யோவான் பழைய மாணவன் நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்படுகிறார். 


பவள் கவசவாகனங்கள், ஆர்மி ட்ரக்குகள், பொலிஸ் ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ சைரன் பூட்டிய காரில் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் செம்மணி வீதியூடாக செம்மணிக்கு அழைத்துவரப்படுகிறார். செம்பாட்டு புழுதி கிளப்பிக்கொண்டு பறக்கும் வாகன அணியை வீதியோரத்தில் நின்ற சனம் பயம் கலந்த கண்களோடு வேடிக்கை பார்க்க, சைக்கிளில் பயணிப்போர் ஓரமாக இறங்கி மிரட்டும் வாகன அணியில் சிக்காமல் தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள்.


வாகன அணி அரியாலையை அண்மித்தபோது நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவிற்கமைய வாகன அணி சடுதியாக நடுவீதியில் நிற்பாட்டப்படுகிறது. ஆமிக்காரன்கள் வாகனங்களிலிருந்து பாய்ந்து வீதியில் நிலையெடுக்க, வீதியோரத்தில் நின்ற சனத்திற்கு கதிகலங்குகிறது. கம்பீரமாக தனது வாகனத்தை விட்டு இறங்கிய இளஞ்செழியன் வீதியில் தனது சைக்கிளுடன் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து ஒதுங்கி நின்ற ஒரு பெரியவரை நோக்கி செல்கிறார்,  குனிந்து அவர் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெறுகிறார். தமிழ் சனமும் சிங்கள ஆமிக்காரன்களும் திகைத்து நிற்க, தனது குருவின் ஆசிபெற்ற நீதிபதி புதிய உற்சாகத்துடன் மிடுக்காக தனது வாகனத்தில் ஏறி வாகன அணியை செம்மணி நோக்கி புறப்படுமாறு உத்தரவிடுகிறார்.


நீதிபதி இளஞ்செழியன் ஆசி பெற்ற குரு, அண்மையில் நம்மை விட்டுப்பிரிந்த யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் பிரபல ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டர்.

நான் படித்த ஸ்கூலில் அவர் ஹெட்மாஸ்டர்.

..................................................................................................................................................................

ஆறு ஆண்டுகள் துரைச்சாமி மாஸ்டரின் கண்டிப்பு நிறைந்த Lower school அந்தப்புரத்திலிருந்து Middle schoolற்கு வந்தால், பரியோவானின் ஒழுக்கத்தை பேணும் சிறப்பு தளபதி ஜீவானந்தம் மாஸ்டரின் பாசறை காத்திருந்தது. ஆண்டு 7Bயில் அருள்தாசன் மாஸ்டர் தான் வகுப்பாசிரியர், அவர் கற்பிக்க தொடங்கிய முதலாவதாண்டு. ஆங்கிலம் படிப்பிக்க ஜெயவீரசிங்கம் மிஸ், அவாவும் புதுவரவு. Middle schoolற்கு வந்த த்ரிலில் முதல் மாதம் எங்கட அட்டகாசம் கட்டுமீறி போய்க்கொண்டிருந்தது. கந்தசாமி மாஸ்டரதும் ஜெயவீரசிங்கம் மிஸ்ஸினதும் வகுப்புகளில் அட்டகாசமாய் பொடியள் குழப்படி செய்வாங்கள். அவர்களிருவரும் என்ன செய்வதென்றறியாமல் திணறுவார்கள். 


ஒரு நாள் ராஜசிங்கம் blockல் அமைந்திருந்த வகுப்பறையில் ஜெயவீரசிங்கம் மிஸ்ஸின் வகுப்பும் பொடியளின் அட்டகாசமும் நடந்து கொண்டிருக்கிறது. அதிரடியாக வகுப்புக்குள் நுழைந்த ஜீவானந்தம் மாஸ்டர் பத்து குழப்படிகாரன்களை கைது செய்து அருளானந்தம் blockல் அமைந்திருந்த அவரின் ஒஃபிஸிற்கு அழைத்து செல்கிறார். பத்துக்குள் அடியேனும் அடக்கம். பத்து பேரும் அணிவகுத்து நடந்து போகும்போது பக்கத்து வகுப்புகாரன்களின் நெளிப்புகள் வரப்போகும் வினையை கட்டியம் கூறுகிறது. 


வரிசையா ஒவ்வொருத்தரா கூப்பிட்டு சுவரை பார்த்து நிற்க சொல்லிவிட்டு விசாரணை ஆரம்பமாகிறது 

"தம்பி எந்த மண் ?"

"அப்பா என்னிடம் படித்தவர். அப்பாவினுடைய பெயரை 
மண்ணாக்காதே."

"வந்த விடயத்தை மறந்துபோகவேண்டாம்"

விசாரணையும் அறிவுரையும் முடிய சளார்.. சளார்.. சளார். குxxயை தடவிக்கொண்டு வகுப்பிற்கு திரும்பினோம், ஜெயவீரசிங்கம் மிஸ் நக்கலா சிரித்த மாதிரி இருந்தது. 

...............................................................................................................................................................

வெள்ளை வேட்டியும் முழுக்கை நீள சட்டையும் அணிந்து சைக்கிளில் பாடசாலைக்கு வரும் ஜீவானந்தம் மாஸ்டரில் தமிழ் மணம் கமழும். பரி யோவான் காற்றிலேயே ஆங்கிலம் கலந்திருக்கும், ஆனால் ஜீவானந்தம் மாஸ்டரிற்கு சுட்டு போட்டாலும் ஆங்கிலம் வராது என்பார்கள்.  


ஜீவானந்தம் மாஸ்டர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு அற்புத ஆசிரியர். பம்பலா பாடம் நடாத்துவார், பிரம்பால விளாசுவதில் சூரன். மாணவர்கள் அவரில் அபரிதமான மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பார்கள். இந்த பாசம் அளவு மீறி ஜீவானந்தம் மாஸ்டரை கருவாக வைத்து பல பகிடி கதைகளை புனைவார்கள். ஜீவானந்தம் மாஸ்டர் எனும் ஜாம்பாவானை எந்த விதத்திலும் கேவலப்படுத்தும் நோக்கமில்லாத அந்த ஜீவானந்தம் மாஸ்டர் ஜோக்ஸ் பரி யோவான் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.

.............................................................................................................................................................


ஒரு நாள் காலை, தேவதாசன் மாஸ்டர் சைக்கிளில் தனது இளைய மகன் டிலானை ஏற்றிக்கொண்டு கண்டி வீதியிலிருந்து பழைய பூங்கா வீதியில் திரும்புகிறார். அந்த திருப்பத்தில் வீதியில் இருந்த ஏதோ ஒன்றில் சறுக்கி சைக்கிள் சரிய இருவரும் விழுகிறார்கள், காயம் ஏதும் படவில்லை ஆனால் உடுப்பில் புழுதி படுகிறது. திரும்ப வீடு சென்று உடுப்பு மாற்ற நேரமில்லை, சரி பரவாயில்லை என்று தேவதாசன் மாஸ்டர் புழுதி படர்ந்த காற்சட்டையுடன் பாடசாலை வருகிறார். 

Staff சைக்கிள் Parkல் சைக்கிளை நிறுத்தவும் ஜீவானந்தம் மாஸ்டர் வரவும் சரியாய் இருந்தது.

"என்ன தேவதாசன் என்ன நடந்தது ?"

"ஒன்றுமில்லை சேர், I lost my balance"

"ஓ அப்படியா.. உங்கனேக்க தேடிப்பாரும்.. கிடைச்சிடும்"

............................................................................................................................................................


ஜீவானந்தம் மாஸ்டர் படிப்பிக்கும் வகுப்புகளில் மொனிட்டருக்கு இரு வேலைகளிருக்கும். "மொனிட்டர்... ஓடிப்போய், நடந்து வா" என்றாரென்றால் மொனிட்டர் ஓடி அவருடைய ஒஃபிஸிற்கு போய் அவரின் தண்ணி கிளாஸை எடுத்துக்கொண்டு நடந்து வரவேண்டும்.


ஜீவானந்தம் மாஸ்டர் வலக்கையை முழுசாய் நீட்டி இடக்கையால் வலப்பக்க கையின் தோள்மூட்டை தொட்டு "மொனிட்டர்...."என்று சிக்னல் கொடுத்தால், ஆட்டிலெறிகள் முன்னரங்கிற்கு நகரத்தப்படும், அதாவது பிரம்பு ஒஃபிஸிலிருந்து வகுப்பிற்கு கொண்டுவரப்படும். அடிவாங்கும் அப்புகாமியிடம் "பாகை என்ன வேணுமென்று சொல்லும்", அதான் ஆட்டிலெறி ரேஞ், கேட்டு அடி போடும் வல்லவர் ஜீவானந்தம் மாஸ்டர்.

இயக்கம் பிணை சிஸ்டம் அறிமுகப்படுத்த முதலே பரி யோவானில் பிணை சிஸ்டம் அமுல்படுத்தியவர் ஜீவானந்தம் மாஸ்டர். குழப்படிகாரனை அவனது நண்பர்கள் யாராவது பிணையெடுத்தால், குழப்படிகாரனிற்கு அந்தமுறை தண்டனை கிடைக்காது. குழப்படிகாரன் மறுமுறை குற்றமிழைத்தால், பிணை கொடுத்தவரிற்கு பிரம்பு கதை சொல்லும். 

...............................................................................................................................................................


ஒரு மத்தியான நேரம் ஏதோ ஒரு அவசர விஷயமாக staff meeting நடந்து கொண்டிருக்கிறது. அலெக்ஸ் தம்பிராஜா மாஸ்டர் சீரியஸாக ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருக்க, பலாலி பக்கமிருந்து வந்த இரு பொம்மர்கள் பழைய பூங்காவில் அமைந்திருந்த இயக்கத்தின் பயிற்சி முகாமை குறிவைத்து வானில் வட்டமடிக்கின்றன. 

பதறியடித்து எழும்பிய ஜீவானந்தம் மாஸ்டர் "Alex, bomber is bombing" என்று குறுக்கிடுகிறார்.

ஜீவானந்தம் மாஸ்டரின் குறுக்கீட்டை சகிக்காத Alex மாஸ்டர் "Jeevanantham, Be silent" என்று ஜீவானந்தம் மாஸ்டரை அமைதி காக்கும்படி கேட்கிறார்.

ஆங்கில வாத்தியாரான அலெக்ஸ்  மாஸ்டர் தான் ஆங்கிலத்தில் Bomber is Bombing என்று சொன்ன உச்சரிப்பில் B எழுத்தின் ஒலி silentஆக இருக்க வேண்டும் என்று தனது ஆங்கிலத்தை திருத்துகிறார் என்று கருதிய ஜீவானந்தம் மாஸ்டர் சொன்னார் 

"Omber is ombing"  

............................................................................................................................................................


1985களின் ஆரம்பம்..யாழ்ப்பாணம் இராணுவ கட்டுபாட்டில் இருக்க, இயக்கங்கள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கிய காலப்பகுதி. குருநகர் தொடர்மாடி இராணுவ முகாமில் தரையிறங்கிய ஹெலியை புலிகள் துப்பாக்கியால் சுட்டு சேதமாக்க, கச்சேரியடியில் நின்ற ஆமிக்காரன்களிற்கு விசர் வந்து பழைய பூங்கா வீதியால் கண்டபடி சுட்டுக்கொண்டு குருநகர் நோக்கி போகத் தொடங்கினாங்கள்.

"எல்லோரும் மேசைக்கு கீழ படு" என்று உரக்க கத்தியபடி ஜீவானந்தம் மாஸ்டர் தன்னுயிரை மதியாது வகுப்பு வகுப்பாக ஓடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறார்.

..............................................................................................................................................................


ஜீவானந்தம் மாஸ்டர் தான் பரி யோவான் கன்டீன் பொறுப்பாளர். கல்லூரிக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதும் கல்லூரி விழாக்களிற்கு தின்பண்டங்கள் பரிமாறுவதும் ஜீவானந்தம் மாஸ்டரின் ஆளுகைக்குள் அடங்கும். பரி யோவானின் விருந்தோம்பல் விழுமியம், ஜீவானந்தம் மாஸ்டர் விட்டுச்சென்ற மரபு.

..............................................................................................................................................................


ஒருமுறை லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்காரன் பரி யோவானிற்கு வருகை தந்திருந்தார். அதிபர் ஆனந்தராஜாவுடனான சந்திப்பு முடிந்தவுடன், அதிபர் ஆனந்தராஜா ஜீவானந்தம் மாஸ்டரை அழைத்து லண்டன் வெள்ளைக்கார விருந்தாளியை உபசரிக்குமாறு பணிக்கிறார்.


லண்டன் வெள்ளைக்கார விருந்தாளியை கன்டீனிற்கு அழைத்து சென்ற ஜீவானந்தம் மாஸ்டர், விருந்தாளிக்கு குளிர்பானமும் மட்டன் ரோல்ஸும் பரிமாறுகிறார். விருந்தாளி Fantaவும் ஜீவானந்தம் மாஸ்டர் Cokeம் பருகுகிறார்கள். கொளுத்தும் வெய்யிலிற்கு இதமாக இருந்த குளிரூட்டிய Fantaவை குடித்துவிட்டு லண்டன் வெள்ளைக்காரன் "Fantastic" என்றார்.

ஜீவானந்தம் மாஸ்டரும் தன்னுடைய Cokeஜ மடமடவென குடித்துவிட்டு சொன்னார்..

"Cokastic"
............................................................................................................................................................

ஜீவானந்தம் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும் போது யாராவது பொடியள் நாடியில் கைவைத்து யோசித்து கொண்டிருந்தால்

"கப்பலே கவிழ்ந்தாலும்
கட்டின மனைவியே கைவிட்டாலும்
நாடியில் கை வைக்காதே"

என்று ஒரு பொன்மொழியை உதிர்த்துவிட்டு அடுத்த வகுப்பிற்கு நகர்வார்.

...............................................................................................................................................................

சேர், 

நீங்கள் அணைத்தும் அடித்தும் வளர்த்த மூன்று தலைமுறை பொடியளும் நீங்கள்  கேட்டு கொண்டது போல் அப்பரின் பெயரையும் மண்ணாக்கவில்லை, பரி யோவானிற்கு வந்த விஷயத்தையும் மறக்கவில்லை. 

எங்களை எங்களாக வளர்த்து
எங்களை ஆளாக்கிய உங்களுக்கு
எங்கள் சிரம் சாய்த்து  உங்களை வணங்குகிறோம். 
எங்கள் பிரார்த்தனைகளில் உங்கள் ஆத்மா இறைவனடி சேரும்.3 comments: