Thursday, 28 January 2016

வருவது காதல்....


உயர்தரம் படிக்க தொடங்க பெடியளிற்குள் ஒரு மாற்றம் வரும். அரும்பு மீசை துளிர்விட காதல் அரும்பும் மனதிற்குள் துளிர்விடும். அந்த வயதில் எல்லா பெடியளும் யாரோ ஒரு பெட்டையை கட்டாயம் மனதிற்குள் காதலித்திருப்பார்கள். 


சிலர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த உணர்வை மனதிற்குள் வைத்து பூட்டி சாகடிப்பார்கள். வேறு சிலர் அந்த பெட்டைக்கு காதலை தெரிய வைக்க சுழற்ற தொடங்குவார்கள். சுழற்ற தொடங்கும் சிலர் காதலை பெட்டையிடம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவார்கள். காதலை அறிவித்தவர்களில் அரிதாய் ஓரிருவருக்கு பச்சை சிக்னலும் சிலரிற்கு சிவப்பு சிக்னலும் காட்டப்பட, பலரிற்கு மஞ்சள் சிக்னல் தான் வரமாய் கிடைக்கும்.


ஒரு பெட்டையை மனதிற்குள் காதலிக்கும் உணர்வு அற்புதமானது.  ஜம்புலன்களிற்கும் விடுமுறை அறிவித்து விட்டு மனதை இளக்கி மேகத்தில் நீச்சலடிப்பது போன்ற ஒரு உணர்வு. திரைப்படங்களில் வரும் அபரிதமான வர்ணணைகள் சிலநேரங்களில் அந்த பரிசுத்தமான உணர்வை கொச்சைபடுத்தும்.  அதேவேளை சில திரையிசை பாடல்கள் பெடியளின் காதல் உணர்வை அப்படியே தத்ரூபமாக பதிவுசெய்வது மட்டுமன்றி அரும்பும் காதலெனும் செடியை தண்ணீரூற்றி செழிப்பாக்கும்.


1990களில் நாங்கள் உயர்தரம் படிக்கும் போது வெளிவந்த இரு பாடல்கள் காதல் உணர்விற்கு தண்ணீர் மட்டுமல்ல நல்ல பசளை போட்டும் வளர்த்து விட்டவை. ஒன்று வாலி-இளையராஜா-ஜேசுதாஸ் கூட்டணியில் இதயம் படத்தில் அமைந்த "பொட்டு வைத்த வட்ட நிலா" பாடல், அடுத்தது வைரமுத்து-ரஹ்மான்-உன்னிகிருஷ்ணன் படைப்பில் காதலன் படத்தில் மலர்ந்த "என்னவளே அடி என்னவளே" என்ற பாடல். 


இந்த இரண்டு பாடல்களையும் படத்தில் காட்சியமைத்த விதம் அநியாயத்திலும் அநியாயம். இதயம் படத்திலாவது ஹீராவை கொஞ்சம் ரசிக்கலாம். "என்னவளே" பாட்டு வரும்போது நக்மாவை பார்க்க சகிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேட்டு ரசிக்கலாம். 


அந்த வயதில் கண்களின் பார்வைக்குள் வந்து போகும் பல நூற்றுக்கணக்கான பெட்டைகளில் அந்த ஒருத்தியை சுற்றி தான் மனம் மையல் கொள்ளும், சுழன்றடிக்கும். வாலி அதை வடிவாய் சொல்லுவார் 

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா"


மனதை எட்ட நின்று தொட்ட அந்த வட்ட நிலவை எப்படி நெருங்குவது என்று மனம் பதைபதைக்கும். 

நெருங்க ஒரு காரணம் வேண்டாமா ? 
நிலவு கடுப்பாகி எங்கட நெற்றியில் பொட்டு வைத்துவிட்டால் என்னாகும் ? 
எட்ட நிற்கும் நிலவிற்கு கிட்டபோக "ஈழகாவியன்" வைரமுத்து ஒரு ஐடியா தருவார் 

"எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்"வைரமுத்து காலடி தேடி வந்ததோடு நிற்பாட்டியிருந்தால் பரவாயில்லை. நிலவின் காலடி தேடி வந்த பெடியளை இன்னும் உசுப்பேத்துவார். உலகத்தமிழின துரோகி கலைஞரின் காலை கட்டிப்பிடித்துகொண்டு " ஈழகாவியம் படைப்பேன் படைப்பேன்"  என்று திரும்ப திரும்ப வெட்கம், மானம், ரோசம் எல்லாத்தையும் காற்றில் பறக்கவிட்டு சொல்வது போல், பெடியளிற்கும் வெட்கத்தையெல்லாம் விட்டு விட்டு இன்ன இன்னதெல்லாம் செய்யுங்ககோடா என்று ஒரு லிஸ்ட் போட்டு தருவார்

"கும்பிட்டு கண்ணடியுங்கோடா
கூந்தலில் மீன் பிடியுங்கோடா
விரலுக்கு சுடக்குகெடுங்கோடா"

ச்சா.. காதல் வந்தா மானம் காற்றில் பறந்திடுமோ ?


அந்த பெட்டை வாற வழியை பார்த்து பெடியள் மணித்தியால கணக்காக காவல் இருப்பதற்கும் இந்த மானங்கெட்ட வைரமுத்துவைத்தான் குற்றவாளி கூண்டில் ஏற்றவேண்டும்

"காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி"


கால்கடுக்க நின்ற பெடியன், பெட்டை வந்திறங்கியதும், அவளிற்கு பின்னால போகத் தொடங்குவான். அந்த நேரத்தில் வாலி வந்து நிற்பார் 

"அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்னாளும்"


விழியில் விழுந்து இதயம் நுழைந்த காதல், உடலிலும் உள்ளத்திலும் camp அடிக்க, நாக்கு மட்டும் அடங்க மறுக்கும். காதலை சொல்ல இந்த நாக்கு ஏனோ பின்வாங்கும்.

"வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி"

என்று அகிம்சாவாதி வாலி அதை விபரிக்க, வைரமுத்து வன்முறையில் இறங்குவார்

"மெளனம் பாதி 
மோகம் பாதி 
என்னை கொல்லும் 
என்னாளும்"

காதலை சொல்ல தில் வேண்டும் என்பார்கள். அந்த தில் வராததால் அந்த ஏக்கத்தை அந்த தவிப்பை அந்த சோகத்தையும் வைரமுத்து பதிவு செய்வார்

"யாப்போடு சேராதோ பாட்டு
தோப்போடு சேராதோ காற்று"

யாப்பையும் தோப்பையும் இழுத்த வைரமுத்து, உயர்தரம் படிக்கிற பெடியனை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஒரு வரி இழுத்து விடுவார்..

"வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை"

பரீட்சையை ஞாபகப்படுத்தியதும் பெடிக்கு வாழ்க்கையின் முக்கியத்துவம் முன்னுரிமை பெற காதல் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படும். 


"நான்
வாழ்வதும் 
வீழ்வதும்

உந்தன்
வார்த்தையில் 
உள்ளதடி"

என்ற வாலியின் வேதாங்கம் வெற்று கோஷமாய் விளங்க, யாழ்ப்பணாம் உயர்கல்வி பதிப்பகத்தின் நீல நிற "கடந்த கால பரீட்சை வினாக்களும் விடைகளும்" புத்தகம் விடிவெள்ளியாய் துலங்கும்.

கண்மூடி கர்த்தரே என்று ஜெபித்துவிட்டு, புத்தகத்தை திறந்து முதல் கேள்வி வாசிக்க தொடங்க, வைரமுத்து என்ற சாத்தான் துரத்தி கொண்டு வரும்.

"ஒன்றாய் கூடும் 
ஒன்றாய் பாடும் 
பொன்னாள் இங்கு 
என்னாளோ"

பதின்மத்தில் வரும் காதல் வெற்றி பெற்றதா தோல்வியடைந்ததா என்பது ஒரு விஷயமேயில்லை. காதல் வந்தது அதை அணுவணுவாய் வாழ்ந்து உணர்ந்தோம் அந்த காலகட்ட பாடல்கள் அந்த உணர்வுகளிற்கு வலுசேர்த்தது என்ற படிமங்களில் தான் பதின்ம வயதின் நினைவுகள் செழுமையடையும். 


Thursday, 21 January 2016

ஒரு படம், ஒரு புத்தகம், ஒரு Matchசனிக்கிழமையிரவு பாலாவின் தாரை தப்பட்டை படம்  இரவு 9.30 காட்சி பார்க்க தியேட்டருக்கு போய் இறங்க 9.36 ஆகிவிட்டது. எனக்கு எழுத்தோட்டத்திலிருந்து படம் பார்க்க வேண்டும். காரால் இறங்கினதும் தனக்கு ஓரு " skinny latte" வேண்டும் என்று மனிசி அடம்பிடிக்க, வந்த டென்ஷனிற்கு கதம் கதம் சொன்னேன். வெள்ளக்காரி கதை அலம்பி முடிச்சு கோப்பி போட்டு தந்து, டிக்கட் கிழித்து, சரியான தியேட்டர் தேடி, இருட்டில் சீட் கண்டுபிடித்து போய் அமர....சசிகுமார் குரல் "புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்" என்று ஒலிக்குது. 
...........................................................................................................................................................

ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் ஓஸ்ரேலிய இந்திய அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டி MCGயில் அரங்கேறியது. அன்றைக்கென்று பார்த்து ஒரு family lunch, அது சுணங்க.. மீண்டும் டென்ஷன், கதம் கதம்.  அடிச்சு பிடிச்சு காரை எடுத்து கொண்டு பறந்து மைதானத்திற்குள் நுழைந்தால் கோஹ்லியும் தவானும் களத்தில் நிற்கிறாங்கள், ஷர்மா அவுட். MCGயிலும் தாரை தப்பட்டை சத்தம் முழங்குது. 
...........................................................................................................................................................

இயக்குனர் பாலாவின் ஏழாவது படம், முதன் முறையாக குருவின் இயக்கத்தில் சிஷ்யன் சசிகுமார் நடிக்கும் படம், இளையராஜாவின் ஆயிரமாவது படம் போன்ற பீத்தல்களுடன் திரைக்கு வந்த தாரை தப்பட்டை படத்தின் ஆரம்பம், உண்மையிலேயே அட்டகாசம். அதிலும் கதாநாயகனின் அறிமுக இசையிலும் "வதன வதன வடிவேலனே" என்ற முதல் பாடலிலும் இளையராஜா தமிழ் இசையின் தனித்துவத்தை மிளிரவைக்க, நம்மையறியாமல் கால்கள் தாளம் போடும். 
..........................................................................................................................................................

முன்னூறு ரன்கள் அடித்தும் கடந்த இரு போட்டிகளிலும் தோல்விகளை தழுவிய இந்திய அணி மெல்பேர்ணில் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் என்னுடைய லக்கி இந்தியன் ஜெர்ஸியோடும் ட்ராவிட் தொப்பியோடும் ஆசனத்தில் அமர்ந்தால் என்னை சுத்தி box அடிச்சிட்டாங்கள். வலப்பக்கம் ஒஸி கொடியோடு என்ட பொடியள், பின்பக்கம் சிங்களவங்கள், இடப்பக்கம் வெள்ளைக்காரன்கள் முன்னால இந்தியாகாரன்கள்.  சர்வதேச வலைபின்னலால் தோற்கடிக்கப்பட்ட எமது ஆயுதபோராட்டம் ஏனோ நினைவில் வந்து சென்றது.

.........................................................................................................................................................

சில புத்தகங்கள் வாசிக்க தொடங்கினால் முடிக்கும் வரை திரும்ப வைக்க முடியாது. ஷோபா சக்தியின் Box கதைப்புத்தகமும் இந்தவகையில் அடங்கும். எளிமையான வரிகளுடன், உண்மைச் சம்பவங்களின் தழுவலாக கற்பனை முலாம் பூசி எழுதப்பட்ட இந்த நாவலை ஒருவித கோப உணர்வுடன் இரு நாட்களில் வாசித்து முடித்தேன். 

எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்ததை மீள வாசிக்க வந்த கோபம் ஒரு புறம், மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை உண்மை சம்பவங்களாக சித்தரித்த புலி எதிர்ப்பாளரான எழுத்தாளரின் மீதான கோபம் மறுபுறம் என்று நெஞ்சில் கோபக்கனலை மூட்டிய புத்தகம் Box கதைப்புத்தகம்.

..................................................................................................................................................................

தாரை தப்பட்டை படத்தின் முதல்பாதியை வரலட்சுமி ஆக்கிரமிக்கிறார். மாமனாருடன் தண்ணியடிப்பதாகட்டும், "லவுசடி" என்று கத்துவதாகட்டும், அந்தமானில் அடிதடியாகட்டும், ஆற்று படிக்கட்டில் சசிகுமாருக்கு உதைவதாகட்டும், வரலட்சுமி திரைப்படத்தை தனியொருத்தியாக நகர்த்தி செல்கிறார். நடிப்பிற்கு மேலாக வரலட்சுமியின் ஆட்டமும் அசத்தல். 
..............................................................................................................................................................

MCGயில் தவானின் தாரையும் கோஹ்லியின் தப்பட்டையும் பட்டையை கிளப்பி கொண்டிருந்தது. கொளுத்தும் வெய்யிலில், கறுத்தாலும் பரவாயில்லை ஆட்டத்தை ரசிக்க வேண்டும் என்ற கங்கணம்துடன் sun cream அள்ளி பூசிக்கொள்கிறேன். இருவரின் ஆட்டத்திலும் ஒரு ரிதம் இருந்தது, ரன்களை அடித்தும் ஓடியும் குவிக்க தொடங்க ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. தவான் அடித்து ஆட வெளிக்கிட்டு 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ரஹானே களமிறங்கினார். 

ரஹானேயின் straight drivesல் ட்ராவிட் நினைவில் வந்து போனார். ரஹானேயின் ஜம்பதும் தோனியின் அதகளமும் கை கொடுத்தாலும் கிங் கோஹ்லியின் சதம் தான் இந்தியாவை 295 எட்ட வைத்தது. 

.............................................................................................................................................................

இடைவேளைக்கு பின்னர் வில்லன் திரைக்கதைக்குள் நுழைகிறான். வில்லனின் நுழைவோடும் திரைக்கதைக்கு தேவையற்ற ஆபாச வார்த்தைகளும் அளவிற்கு மீறிய குரூர வன்முறையும் படத்தை தோல்வியை நோக்கி அழைத்து செல்கிறது. இசைஞானியின் திருவாசக "பாருருவாயும்", "இடறினும்" தேவாரமும் மெய்சிலிர்க்க வைத்தன. இளையராஜாவின் மெட்டுகளில் புதுமையில்லை தான், ஆனால் அதை கேட்கும் போது மனதில் எழும் புத்துணர்ச்சி விபரிப்புற்கு அப்பாற்பட்டது. 

............................................................................................................................................................

ஓஸ்ரேலிய விக்கட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் தப்பி தவறி கைபற்றியது ஓரு பக்கம் நம்பிக்கையை துளிர்க்க வைத்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் மோட்டுத்தனமான பந்துகள் அந்த நம்பிக்கையை அரும்பிலேயே கிள்ளி எறிந்தன. "வில்லன்" மக்ஸ்வெல் வருகையும் அவரின் நிதானமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியை நோக்கி அழைத்து சென்றது. 

..............................................................................................................................................................

"இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா ? ஆம் இருண்ட காலங்களைப் பற்றி பாடுவது இருக்கும்" என்ற அறிமுக வாசகங்களிற்கும் "பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளை காப்பாற்ற தவறிய இரத்தப்பழி நம் சந்ததியோடு இருக்கும்" என்ற காணிக்கை பத்திர வரிகளிற்கும் Box புத்தகம் அநியாயம் (துரோகம் என்ற மலிவான வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து) இழைத்திருக்கிறது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. குறிப்பாக பாலச்சந்திரனை நினைவுறுத்திய பாத்திரமும் தென்பகுதியில் இயங்கும் விபச்சார விடுதி பற்றிய பகுதியும் புத்தகத்தில் அடிக்கடி வந்து போகும் நிர்வாணமும் அபத்தம். 

................................................................................................................................................................

ஒரு படம்.......தாரை தப்பட்டை
ஒரு புத்தகம்...Box கதைப்புத்தகம்
ஒரு Match....இந்திய v ஒஸ்திரேலியா

முதல் பாதி அசத்தல்
மறு பாதி சொதப்பல்

Thursday, 14 January 2016

விஜயபாலவின் Chit.....CIMA காலங்கள்நாங்கள் CIMA படிக்கிற காலங்களில் ஒரு சில லண்டன்காரன்கள் எங்களுடன் படித்தார்கள். இவயள் லண்டனில் CIMA படித்து கொண்டிருக்கீனமாம், vacationல் இலங்கைக்கு வந்து நிற்கீனமாம்,  விடுமுறையிலும் தவம் போல் CIMA படிக்க ஆர்வத்தில் வகுப்பிற்கு வருகீனமாம் என்று கதை விடுவார்கள். ஆனால் இவர்களின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பது காலம் போக போகத்தான் தெரியவரும். 


தமிழ் மொழியில் பாடசாலை கல்வியை முடித்துவிட்டு வாழ்வில் முதல்முறையாக ஆங்கில மூலத்தில் படிக்க தொடங்கிய எங்களிற்கு இந்த லண்டன்காரன்கள் accent போட்டு சரளமாக ஆங்கிலம் கதைக்கிறதும் எழுதிறதும் கடுப்பாக்கும். கொழும்பில் படித்த சில தமிழ் பெட்டைகள் வேற இவங்களோடு ஆங்கிலத்தில் கதைக்கும் போது எங்கள் வயிறு பற்றி எரியும். மொத்ததில் இவங்கள் தமிழ் படத்தில் வாற அமெரிக்க மாப்பிள்ளைகள் மாதிரி என்று சொல்லலாம். 


CIMA வகுப்புகளில் ஏதாவது சந்தேகம் வந்தால் பள்ளிக்கூடத்தில் கேட்ட மாதிரி கை உயர்த்தி கேட்க முடியாது. ஒன்று கேள்வி கேட்கிற அளவிற்கு ஆங்கிலம் தெரிய வேண்டும். இரண்டு, இருநூறு முந்நூறு பேர் இருக்கிற வகுப்பறையில் சத்தமாக கேள்வி கேட்க கொஞ்சம் தில்லும் வேண்டும். இது இரண்டும் இல்லாதபடியால் வகுப்பு முடியும் வரை காத்திருந்து விரிவுரையாளரை தனியாக சந்தித்து கேட்க வேண்டும், இல்லாட்டி ஒரு chitல் (சின்ன காகித துண்டு) கேள்வியை எழுதி மடித்து விட்டு முன்னால இருக்கிறவர்களினூடாக விரிவுரையாளரிற்கு அனுப்ப வேண்டும். விரிவுரையாளரை குழப்பவும் இந்த chit பயன்படும். இளம் விரிவுரையாளரென்றால் பெட்டையள் எழுதிறமாதிரி எழுதி அனுப்புவது வழமை, சில வாத்திமார் அதை வாசித்துவிட்டு வழிவினம்.


ஒரு நாள் விஜயபால என்ற ஒரு மூத்த விரிவுரையாளரின் costing வகுப்பு IAS மேல்மாடியில் இருக்கும் பெரிய விரிவுரை மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. விஜயபால கதைக்கிறது தாலாட்டு பாடுற மாதிரி இருக்கும். Costing பாடம் வேற கொஞ்சம் கடிபாடம், இந்தாள் வேற ஆசுவாசமாய் கதைக்க நித்திரை கண்ணை முட்டும், மணிக்கூட்டு முள் நகர மறுக்கும்.  வகுப்பின் நடுப்பகுதியில் இருந்த வாங்கில் லண்டன்காரன், லக்கி, துவாரகன், தவத்தார் இருக்கிறாங்கள். அவங்களிக்கு முன் வாங்குகளில் பெட்டைகள், பின்வாங்கில் சிங்கள பெடியள்....துட்டகைமுனுவிற்கு ஒரு பக்கம் தமிழர் மறுபக்கம் கடல் போல. 


லண்டன்காரனிற்கு நித்திரை கண்ணுக்குள் மின்ன, லக்கி கொட்டாவி விட்டு கொண்டிருக்க, துவாரகன் மேசையில் விழுந்து படுத்தே விட்டான், தவத்தார் மட்டும் சீரியஸாக பாடத்தை கவனித்து கொண்டிருக்கிறான்.  லண்டன்காரனிற்கு கை துறுதுறுக்க, ஒரு chitஐ எழுதி லக்கியிடம் காட்டுறான். லக்கி அதை வாசித்து கொடுப்பிற்குள் சிரித்துவிட்டு துவாரகனை தட்டி எழுப்பி காட்டுகிறான். பிறகு லக்கி முன்னால் இருந்த பெட்டையிடம் chitஐ கொடுக்க, கைமாறி மாறி chit விரிவுரையாளரை எட்டுகிறது. 


மூக்கு கண்ணாடியை மேலுயர்த்தி chitஐ வாசித்த விஜயபாலவின் முகம் கடுப்பாகிறது. மேடையின் மறுபுறத்திற்கு நகர்ந்து "I am going to let this go this time, if it happens again ..." வசனத்தை முடிக்காமலே எச்சரிக்கை விடுகிறார் விஜயபால. கடுமையாக எச்சரிக்கை விடுத்துவிட்டு தனது தாலாட்டை விஜயபால தொடர்கிறார். 


கொஞ்ச நேரத்தில் லக்கி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கிறான். லண்டன்காரன் எழுதின அதே வசனத்தை தன்னுடைய கையெழுத்தை மாற்றி எழுதி முன்னிற்கு இருந்த  பெட்டையிடம் chitஐ கொடுக்க, மீண்டும் chit மேடையேறுகிறது. ஏற்கனவே அனல் மூட்டிய அடுப்பில் பெற்றோல் ஊத்தினால் என்ன நடக்குமோ அதுதான் விஜயபாலவிற்கு நடந்தது. விஜயபால ஆங்கிலத்தில் ஏசுறார் ஏசுறார் ஏசிக்கொண்டே இருக்கிறார். லக்கியை தவிர மிச்ச எல்லோருக்கும் என்ன நடந்தது ஏன் விஜயபால குய்யோ முய்யோ என்று கத்திறார் என்று விளங்கவில்லை. 


"Alright.. I had enough.. I want to know who wrote this chit" என்று அந்த chitஐ தனக்கு தந்த முன்வரிசை கெட்டிக்காரியிடம் கொடுத்து chit வந்த வழியே திருப்பி அனுப்புமாறு பணிக்கிறார். Chit வந்த வழியே கைமாறி கைமாறி திரும்ப வருது, லண்டன்காரன் மட்டும் டென்ஷனிலிருக்கிறான். வந்த துண்டு லக்கிக்கு முன்னால இருந்த பெட்டையிடம் வந்துவிட்டது. லக்கி திரும்பி லண்டன்காரனை பார்க்க, அவனிற்கு ஜந்தும் கெட்டு ஆறும் கெட்டிச்சு.


முன்னால இருந்த பெட்டை திரும்பி chitஜ லக்கியிடம் கொடுக்கிறாள். லண்டன்காரனிற்கு இதயம் படபடக்குது. லண்டனிலுந்து ப்ளேனில வந்த எனக்கு மானம் கப்பலேற போகுது என்று நினைத்து பதைபதைக்கிறான். கம்பவாரிதி ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் 
"இல்லாத மானத்தை இரைந்து பெறுதல்". லக்கி மட்டும் பதற்றப்படவேயில்லை.


முன்னாளிருந்த பெட்டை திரும்பி லக்கியிடம் chitஜ கொடுக்க, எந்தவித உணர்ச்சிகளும் வெளிப்படுத்தாது, அதை லக்கி வாங்குகிறான். லண்டன்காரன் ஏதோ சொல்ல வாயை திறக்க, லக்கி மற்றபக்கம் திரும்பி பின்னாளிருந்த சிங்கள பெடியனிடம் chitஐ நீட்டுகிறான். தமிழனிற்கெதிராகவென்றால் UNP என்ன JVP என்ன SLFP என்ன, எல்லா சிங்களவனும் ஓரணியில் நிற்பாங்கள். அன்றைக்கு IASலும் அது நடந்தது. பின்வாங்கிலிருந்த எல்லா சிங்கள பெடியளும் கத்தி கொண்டு எழும்ப, 83 கலவரம் மாதிரி இன்றைக்கும் அடிவிழும், காயம் வரும், காயத்தை காட்டி திரும்ப ஓஸ்ரேலியாவில் அகதி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று லண்டன்காரன் கணக்கு போட்டான். 


IAS நிர்வாகம் உடனடியாக செயற்பாட்டிலிறங்கி நிலைமையை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தது. ASM பெரேரா மாணவர்களிற்கு சிறப்புரையாற்றினார், அந்த காலத்தில் அவர் Additional Solicitor General வேற. அந்த chitஐ எழுதியவர் உரிமை கோரி விஜயபாலவிடம் மன்னிப்பு கேட்கும்வரை வகுப்புகள் எதுவும் நடக்காது என்று அதிரடியாக அறிவித்தார்.


இரண்டு மூன்று நாள் வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை. சிங்கள பெடியள் முறைத்து கொண்டு திரியிறாங்கள். எங்கட பெடியள் சிலரிற்கு அவர்கள் மாட்டிய மற்றும் சுழற்றும் சரக்குகளிடமிருந்தும் இந்த பிரச்சினையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. CIMA libraryயில் இதைப்பற்றி தான் கதை. 


அன்றைக்கு பின்னேரம் மத்திய குழு வெள்ளவத்தை ஊத்தைகடையில் கூடியது. ப்ளேன் டீயும் ரொட்டியும் மேசைக்கு வர விவாதம் சூடுபிடித்தது. யாராவது ஒருத்தனை பலிக்கடாவாக்கி பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று கிரிஷாந்தன் உணர்ச்சிவசப்பட்டான். தவத்தார் வேற கோபத்தில் குமுறினான். பலிக்கடா, CIMA படிக்காத ஒருத்தன் அதுவும் சிங்களம் நல்லா கதைக்கிற ஒருத்தனா இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. எப்படியும் தமிழ் பொடியளின் மானம் போகக் கூடாது என்பதில் மத்திய குழு உறுதியாகவிருந்தது. ஒரு புரியாணியோ கொத்துரொட்டியோ செலவானாலும் பரவாயில்லை, திறமான ஆளை பிடி என்று கிரிஷாந்தனிடம் அந்த பொறுப்பு அளிக்கப்பட்டது.


நண்பர்களிற்காக,  நட்பிற்காக புரியாணியோ கொத்துரொட்டியோ வேண்டாமென்று உதறிவிட்டு உதவ முன்வந்தான் "சதோச" ஜெயந்தன். "சதோச" ஜெயந்தன் எங்களோடு கொழும்பு இந்துவில் படித்தவன். சிங்களத்தில் பிச்சு உதறுவான். இந்துவில் படிக்கும் காலங்களில் கரும்பலகையில் எங்கள் பெயரோடு பெட்டைகளின் பெயரை இணைத்து கிசுகிசு உருவாக்குவான். ஆனால் நல்லவன், நட்பிற்காக அவன் செய்தவை பல.


ஒரு நாள் இரவு IASற்கு வந்த ஜெயந்தன், இருட்டில் தன்னுடைய கார் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த விஜயபாலவை அணுகினான்

"சேர் மாத் எக்க சமாவென்ட, மம தமாய் ஏ chit எக்க லியுவ்வே" (என்னை மன்னித்து கொள்ளுங்கள், நான் தான் அந்த chitஜ எழுதினான்)

"கமக் நஹா புத்தே.." என்று தொடங்கி தோளில் ஜெயந்தனின் தோளில் கைபோட்டு விஜயபால தன்னுடைய அறிவுரையை  வழங்கிக்கொண்டிருக்க, தண்டவாளத்தில் மொரட்டுவ நோக்கி செல்லும் கடுகதி ரயில் போய்க்கொண்டிருந்தது.

எல்லாம் சரி அப்படி இவ்வளவு களேபரத்திற்கு காரணமான அந்த chitல் என்ன தான் எழுதியிருந்தது ?

"Time is not at all moving. Let's have a fxxx"

Thursday, 7 January 2016

ஜீவானந்தம் மாஸ்டர்........பரி யோவான் பொழுதுகள்:1999ம் ஆண்டு, யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தின் கிடுங்கு பிடிக்குள் சிக்கியிருந்த காலம். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அளித்த சாட்சியத்தில், செம்மணியில் மனித புதைகுழி இருப்பது உலகின் கவனத்திற்கு வருகிறது. இன்றுபோல் அன்றும் இலங்கை அரசு சர்வதேச கண்காணிப்புடன் உள்ளக விசாரணை எனும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது. உள்ளக விசாரணையை நெறிப்படுத்த 
பரி யோவான் பழைய மாணவன் நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்படுகிறார். 


பவள் கவசவாகனங்கள், ஆர்மி ட்ரக்குகள், பொலிஸ் ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ சைரன் பூட்டிய காரில் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் செம்மணி வீதியூடாக செம்மணிக்கு அழைத்துவரப்படுகிறார். செம்பாட்டு புழுதி கிளப்பிக்கொண்டு பறக்கும் வாகன அணியை வீதியோரத்தில் நின்ற சனம் பயம் கலந்த கண்களோடு வேடிக்கை பார்க்க, சைக்கிளில் பயணிப்போர் ஓரமாக இறங்கி மிரட்டும் வாகன அணியில் சிக்காமல் தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள்.


வாகன அணி அரியாலையை அண்மித்தபோது நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவிற்கமைய வாகன அணி சடுதியாக நடுவீதியில் நிற்பாட்டப்படுகிறது. ஆமிக்காரன்கள் வாகனங்களிலிருந்து பாய்ந்து வீதியில் நிலையெடுக்க, வீதியோரத்தில் நின்ற சனத்திற்கு கதிகலங்குகிறது. கம்பீரமாக தனது வாகனத்தை விட்டு இறங்கிய இளஞ்செழியன் வீதியில் தனது சைக்கிளுடன் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து ஒதுங்கி நின்ற ஒரு பெரியவரை நோக்கி செல்கிறார்,  குனிந்து அவர் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெறுகிறார். தமிழ் சனமும் சிங்கள ஆமிக்காரன்களும் திகைத்து நிற்க, தனது குருவின் ஆசிபெற்ற நீதிபதி புதிய உற்சாகத்துடன் மிடுக்காக தனது வாகனத்தில் ஏறி வாகன அணியை செம்மணி நோக்கி புறப்படுமாறு உத்தரவிடுகிறார்.


நீதிபதி இளஞ்செழியன் ஆசி பெற்ற குரு, அண்மையில் நம்மை விட்டுப்பிரிந்த யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் பிரபல ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டர்.

நான் படித்த ஸ்கூலில் அவர் ஹெட்மாஸ்டர்.

..................................................................................................................................................................

ஆறு ஆண்டுகள் துரைச்சாமி மாஸ்டரின் கண்டிப்பு நிறைந்த Lower school அந்தப்புரத்திலிருந்து Middle schoolற்கு வந்தால், பரியோவானின் ஒழுக்கத்தை பேணும் சிறப்பு தளபதி ஜீவானந்தம் மாஸ்டரின் பாசறை காத்திருந்தது. ஆண்டு 7Bயில் அருள்தாசன் மாஸ்டர் தான் வகுப்பாசிரியர், அவர் கற்பிக்க தொடங்கிய முதலாவதாண்டு. ஆங்கிலம் படிப்பிக்க ஜெயவீரசிங்கம் மிஸ், அவாவும் புதுவரவு. Middle schoolற்கு வந்த த்ரிலில் முதல் மாதம் எங்கட அட்டகாசம் கட்டுமீறி போய்க்கொண்டிருந்தது. கந்தசாமி மாஸ்டரதும் ஜெயவீரசிங்கம் மிஸ்ஸினதும் வகுப்புகளில் அட்டகாசமாய் பொடியள் குழப்படி செய்வாங்கள். அவர்களிருவரும் என்ன செய்வதென்றறியாமல் திணறுவார்கள். 


ஒரு நாள் ராஜசிங்கம் blockல் அமைந்திருந்த வகுப்பறையில் ஜெயவீரசிங்கம் மிஸ்ஸின் வகுப்பும் பொடியளின் அட்டகாசமும் நடந்து கொண்டிருக்கிறது. அதிரடியாக வகுப்புக்குள் நுழைந்த ஜீவானந்தம் மாஸ்டர் பத்து குழப்படிகாரன்களை கைது செய்து அருளானந்தம் blockல் அமைந்திருந்த அவரின் ஒஃபிஸிற்கு அழைத்து செல்கிறார். பத்துக்குள் அடியேனும் அடக்கம். பத்து பேரும் அணிவகுத்து நடந்து போகும்போது பக்கத்து வகுப்புகாரன்களின் நெளிப்புகள் வரப்போகும் வினையை கட்டியம் கூறுகிறது. 


வரிசையா ஒவ்வொருத்தரா கூப்பிட்டு சுவரை பார்த்து நிற்க சொல்லிவிட்டு விசாரணை ஆரம்பமாகிறது 

"தம்பி எந்த மண் ?"

"அப்பா என்னிடம் படித்தவர். அப்பாவினுடைய பெயரை 
மண்ணாக்காதே."

"வந்த விடயத்தை மறந்துபோகவேண்டாம்"

விசாரணையும் அறிவுரையும் முடிய சளார்.. சளார்.. சளார். குxxயை தடவிக்கொண்டு வகுப்பிற்கு திரும்பினோம், ஜெயவீரசிங்கம் மிஸ் நக்கலா சிரித்த மாதிரி இருந்தது. 

...............................................................................................................................................................

வெள்ளை வேட்டியும் முழுக்கை நீள சட்டையும் அணிந்து சைக்கிளில் பாடசாலைக்கு வரும் ஜீவானந்தம் மாஸ்டரில் தமிழ் மணம் கமழும். பரி யோவான் காற்றிலேயே ஆங்கிலம் கலந்திருக்கும், ஆனால் ஜீவானந்தம் மாஸ்டரிற்கு சுட்டு போட்டாலும் ஆங்கிலம் வராது என்பார்கள்.  


ஜீவானந்தம் மாஸ்டர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு அற்புத ஆசிரியர். பம்பலா பாடம் நடாத்துவார், பிரம்பால விளாசுவதில் சூரன். மாணவர்கள் அவரில் அபரிதமான மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பார்கள். இந்த பாசம் அளவு மீறி ஜீவானந்தம் மாஸ்டரை கருவாக வைத்து பல பகிடி கதைகளை புனைவார்கள். ஜீவானந்தம் மாஸ்டர் எனும் ஜாம்பாவானை எந்த விதத்திலும் கேவலப்படுத்தும் நோக்கமில்லாத அந்த ஜீவானந்தம் மாஸ்டர் ஜோக்ஸ் பரி யோவான் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.

.............................................................................................................................................................


ஒரு நாள் காலை, தேவதாசன் மாஸ்டர் சைக்கிளில் தனது இளைய மகன் டிலானை ஏற்றிக்கொண்டு கண்டி வீதியிலிருந்து பழைய பூங்கா வீதியில் திரும்புகிறார். அந்த திருப்பத்தில் வீதியில் இருந்த ஏதோ ஒன்றில் சறுக்கி சைக்கிள் சரிய இருவரும் விழுகிறார்கள், காயம் ஏதும் படவில்லை ஆனால் உடுப்பில் புழுதி படுகிறது. திரும்ப வீடு சென்று உடுப்பு மாற்ற நேரமில்லை, சரி பரவாயில்லை என்று தேவதாசன் மாஸ்டர் புழுதி படர்ந்த காற்சட்டையுடன் பாடசாலை வருகிறார். 

Staff சைக்கிள் Parkல் சைக்கிளை நிறுத்தவும் ஜீவானந்தம் மாஸ்டர் வரவும் சரியாய் இருந்தது.

"என்ன தேவதாசன் என்ன நடந்தது ?"

"ஒன்றுமில்லை சேர், I lost my balance"

"ஓ அப்படியா.. உங்கனேக்க தேடிப்பாரும்.. கிடைச்சிடும்"

............................................................................................................................................................


ஜீவானந்தம் மாஸ்டர் படிப்பிக்கும் வகுப்புகளில் மொனிட்டருக்கு இரு வேலைகளிருக்கும். "மொனிட்டர்... ஓடிப்போய், நடந்து வா" என்றாரென்றால் மொனிட்டர் ஓடி அவருடைய ஒஃபிஸிற்கு போய் அவரின் தண்ணி கிளாஸை எடுத்துக்கொண்டு நடந்து வரவேண்டும்.


ஜீவானந்தம் மாஸ்டர் வலக்கையை முழுசாய் நீட்டி இடக்கையால் வலப்பக்க கையின் தோள்மூட்டை தொட்டு "மொனிட்டர்...."என்று சிக்னல் கொடுத்தால், ஆட்டிலெறிகள் முன்னரங்கிற்கு நகரத்தப்படும், அதாவது பிரம்பு ஒஃபிஸிலிருந்து வகுப்பிற்கு கொண்டுவரப்படும். அடிவாங்கும் அப்புகாமியிடம் "பாகை என்ன வேணுமென்று சொல்லும்", அதான் ஆட்டிலெறி ரேஞ், கேட்டு அடி போடும் வல்லவர் ஜீவானந்தம் மாஸ்டர்.

இயக்கம் பிணை சிஸ்டம் அறிமுகப்படுத்த முதலே பரி யோவானில் பிணை சிஸ்டம் அமுல்படுத்தியவர் ஜீவானந்தம் மாஸ்டர். குழப்படிகாரனை அவனது நண்பர்கள் யாராவது பிணையெடுத்தால், குழப்படிகாரனிற்கு அந்தமுறை தண்டனை கிடைக்காது. குழப்படிகாரன் மறுமுறை குற்றமிழைத்தால், பிணை கொடுத்தவரிற்கு பிரம்பு கதை சொல்லும். 

...............................................................................................................................................................


ஒரு மத்தியான நேரம் ஏதோ ஒரு அவசர விஷயமாக staff meeting நடந்து கொண்டிருக்கிறது. அலெக்ஸ் தம்பிராஜா மாஸ்டர் சீரியஸாக ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருக்க, பலாலி பக்கமிருந்து வந்த இரு பொம்மர்கள் பழைய பூங்காவில் அமைந்திருந்த இயக்கத்தின் பயிற்சி முகாமை குறிவைத்து வானில் வட்டமடிக்கின்றன. 

பதறியடித்து எழும்பிய ஜீவானந்தம் மாஸ்டர் "Alex, bomber is bombing" என்று குறுக்கிடுகிறார்.

ஜீவானந்தம் மாஸ்டரின் குறுக்கீட்டை சகிக்காத Alex மாஸ்டர் "Jeevanantham, Be silent" என்று ஜீவானந்தம் மாஸ்டரை அமைதி காக்கும்படி கேட்கிறார்.

ஆங்கில வாத்தியாரான அலெக்ஸ்  மாஸ்டர் தான் ஆங்கிலத்தில் Bomber is Bombing என்று சொன்ன உச்சரிப்பில் B எழுத்தின் ஒலி silentஆக இருக்க வேண்டும் என்று தனது ஆங்கிலத்தை திருத்துகிறார் என்று கருதிய ஜீவானந்தம் மாஸ்டர் சொன்னார் 

"Omber is ombing"  

............................................................................................................................................................


1985களின் ஆரம்பம்..யாழ்ப்பாணம் இராணுவ கட்டுபாட்டில் இருக்க, இயக்கங்கள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கிய காலப்பகுதி. குருநகர் தொடர்மாடி இராணுவ முகாமில் தரையிறங்கிய ஹெலியை புலிகள் துப்பாக்கியால் சுட்டு சேதமாக்க, கச்சேரியடியில் நின்ற ஆமிக்காரன்களிற்கு விசர் வந்து பழைய பூங்கா வீதியால் கண்டபடி சுட்டுக்கொண்டு குருநகர் நோக்கி போகத் தொடங்கினாங்கள்.

"எல்லோரும் மேசைக்கு கீழ படு" என்று உரக்க கத்தியபடி ஜீவானந்தம் மாஸ்டர் தன்னுயிரை மதியாது வகுப்பு வகுப்பாக ஓடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறார்.

..............................................................................................................................................................


ஜீவானந்தம் மாஸ்டர் தான் பரி யோவான் கன்டீன் பொறுப்பாளர். கல்லூரிக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதும் கல்லூரி விழாக்களிற்கு தின்பண்டங்கள் பரிமாறுவதும் ஜீவானந்தம் மாஸ்டரின் ஆளுகைக்குள் அடங்கும். பரி யோவானின் விருந்தோம்பல் விழுமியம், ஜீவானந்தம் மாஸ்டர் விட்டுச்சென்ற மரபு.

..............................................................................................................................................................


ஒருமுறை லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்காரன் பரி யோவானிற்கு வருகை தந்திருந்தார். அதிபர் ஆனந்தராஜாவுடனான சந்திப்பு முடிந்தவுடன், அதிபர் ஆனந்தராஜா ஜீவானந்தம் மாஸ்டரை அழைத்து லண்டன் வெள்ளைக்கார விருந்தாளியை உபசரிக்குமாறு பணிக்கிறார்.


லண்டன் வெள்ளைக்கார விருந்தாளியை கன்டீனிற்கு அழைத்து சென்ற ஜீவானந்தம் மாஸ்டர், விருந்தாளிக்கு குளிர்பானமும் மட்டன் ரோல்ஸும் பரிமாறுகிறார். விருந்தாளி Fantaவும் ஜீவானந்தம் மாஸ்டர் Cokeம் பருகுகிறார்கள். கொளுத்தும் வெய்யிலிற்கு இதமாக இருந்த குளிரூட்டிய Fantaவை குடித்துவிட்டு லண்டன் வெள்ளைக்காரன் "Fantastic" என்றார்.

ஜீவானந்தம் மாஸ்டரும் தன்னுடைய Cokeஜ மடமடவென குடித்துவிட்டு சொன்னார்..

"Cokastic"
............................................................................................................................................................

ஜீவானந்தம் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும் போது யாராவது பொடியள் நாடியில் கைவைத்து யோசித்து கொண்டிருந்தால்

"கப்பலே கவிழ்ந்தாலும்
கட்டின மனைவியே கைவிட்டாலும்
நாடியில் கை வைக்காதே"

என்று ஒரு பொன்மொழியை உதிர்த்துவிட்டு அடுத்த வகுப்பிற்கு நகர்வார்.

...............................................................................................................................................................

சேர், 

நீங்கள் அணைத்தும் அடித்தும் வளர்த்த மூன்று தலைமுறை பொடியளும் நீங்கள்  கேட்டு கொண்டது போல் அப்பரின் பெயரையும் மண்ணாக்கவில்லை, பரி யோவானிற்கு வந்த விஷயத்தையும் மறக்கவில்லை. 

எங்களை எங்களாக வளர்த்து
எங்களை ஆளாக்கிய உங்களுக்கு
எங்கள் சிரம் சாய்த்து  உங்களை வணங்குகிறோம். 
எங்கள் பிரார்த்தனைகளில் உங்கள் ஆத்மா இறைவனடி சேரும்.