Friday, 30 December 2016

விடைபெறும் 2016


யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பயணங்கள் எப்பவுமே உணர்வுபூரணமானவை. இந்து மாசமுத்திரத்தின் அலைகள் மோதும் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஒரு அதிகாலை வேளை யாழ்ப்பாணம் செல்லும் கடுகதி ரயிலில், பிதுங்கி வழியும் சூட்கேஸுகளைக் காவிக் கொண்டு, "வெளிநாட்டுக்காரர்" என்று ஊர்ச்சனம் பார்வையால் முத்திரை குத்த, ரயிலில் இருபத்தாறு ஆண்டுகளிற்கு பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பமாகியது. 


2016ம் ஆண்டு பறந்தோடியே விட்டது. எங்களிற்கு வயது ஏறுவதால் நாட்கள் வேகமாக நகர்கிறதா, இல்லை உலகம் இறக்கை கட்டி பறப்பதால், பொழுதுகளும் வேகமெடுக்கிறதா தெரியவில்லை. இந்தாண்டு உலக அரங்கில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள் 2016ஜ மறக்க முடியாத ஒரு ஆண்டாக பதிவு செய்துவிட்டன.


2016ம் ஆண்டில் வாசித்த முதல் புத்தகம் ஷோபா ஷக்தியின் "Box" கதைப்புத்தகம்".
விறுவிறுப்பான மொழிநடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை கோப உணர்வுடன் இரு நாட்களிலேயே வாசித்து முடித்தேன். எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து விலாசம் காட்டி கொண்டிருப்பதை கண்முன் கொண்டு வந்த மனசாட்சியின் மறுவுருவத்தை, வாசித்த அனுபவத்தை சயந்தனின் "ஆதிரை" நாவல் தந்தது. இந்தாண்டு வாசித்த மிகச் சிறத்த புத்தகம் ஆதிரை தான். 


திறக்க முடியாத யன்னலிற்கு வெளியே பச்சை வயல்வெளிகளும், புத்தர் சிலைகளும், தென்னை மரங்களும், ரயில் கடவைகளில் மனிதர்களும் வழியனுப்பி வைக்க, குருநாகலும் பொல்கஹவெலவும் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி ரயில் முன்னேறிக் கொண்டிருந்தது. பள்ளி விடுமுறையாதலால் வெள்ளைச் சீருடையணிந்து வரப்புகளில் அன்னநடை பயிலும் சிங்களக் குமரிகளை காணவில்லை.


பெப்ரவரி மாதம் மைக்கல் நவரட்ணராஜா எம்மை விட்டுப்பிரிந்தது, அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தது. வாழ்வு எனும் இந்த குறுகிய பயணத்தின் யதார்த்தத்தை மீண்டுமொரு உணர்வித்த நிகழ்வாக மைக்கலின் மரணம் அமைந்தது. 


மார்ச் மாதம் Big Match பார்க்க நண்பர்களுடன் யாழ்ப்பாணம் போனது என்றுமே மறக்கவே முடியாத ஒரு இனிய பயணமாக அமைந்தது. துள்ளித்திரிந்த காலத்தில் ஓடித்திரிந்த பாடசாலை வளாகத்தை,  பம்பலடித்து திரிந்த நண்பர்களுடன் மீண்டும் தரிசிக்கும் அனுபவத்தை விபரிக்க வார்த்தைகள் தேட கஷ்டப்பட்டேன்.


இந்தாண்டு நிறைய புத்தகங்கள் வாசித்த ஆண்டாக அமைந்தது. மெலூஹாவின் அமரர்கள், அமல்ராஜின் கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், ஜெயமோகனின் காடு, Gota's War, செங்கை ஆழியனின் மீண்டும் வருவேன் மற்றும் சங்கிலியன், Tuesdays with Morrie, குணா கவியழகனின் விடமேறிய கனவு, ஜேகேயின் கந்தசாமியும் கலக்சியும் என்று இந்தாண்டு வாசிப்பு பசிக்கு தீனி போட்ட ஆண்டாக அமைந்தது. 

வவுனியா ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, வடையும் வாழைப்பழமும் தந்து வரவேற்றான் பள்ளிக்கால நண்பன் சுது சிறி. வன்னிக்காடுகளிற்கூடாக A9 வீதியை கொஞ்சிக் கொண்டு ரயில் பயணிக்க, ஜயசிக்குரு கால இடங்கள் ஒவ்வொன்றாய் நினைவில் வந்து தொலைத்தன. பக்கத்து சீட்டிலிருந்த சிங்கள குடும்பம் வரைபடத்தை விரித்து வைத்து அடுத்து வரும் ஸ்டேஷனை எதிர்வுகூறி எரிச்சல் படுத்தினார்கள். 


இந்தாண்டு தலைவர் படம் வெளிவந்த சிறப்பாண்டாக அமைந்தது. 2016ல் பார்த்த படங்களில் குற்றமே தண்டனை, 24, தோழா, காதலும் கடந்து போகும், விசாரணை, இறுதிச் சுற்று,  என்பன சிறந்தவை. இந்தாண்டின் சிறந்த படம், சூப்பர் ஸ்டார் இயல்பாக நடித்து கலக்கிய கபாலி தான்.


கிளிநொச்சியை ரயில் அண்மிக்க பச்சை பசுமையான வயல்வெளிகள் கண்ணிற்கு விருந்தாகின. பாரிய சில தொழிற்சாலை கட்டிடங்களும் தெரிந்தன. கிளிநொச்சி ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் தரித்து நின்ற ரயில், யாழ்ப்பாணம் நோக்கி வேகமெடுத்தது. ஆனையிறவு வெளியை ரயில் கடந்து தென்மராட்சிக்குள் ரயில் நுழைய, மொட்டை தென்னை மரங்கள் இருந்த இடங்களில் புதிய மரங்கள் துளிர் விட தொடங்கியிருந்தன. 


AR ரஹ்மான், இளையராஜா, இமான், ஹரீஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பல சிறந்த பாடல்கள் வெளிவந்த ஆண்டாக 2016 அமைந்தது. அச்சம் என்பது மடமையமடாவில் வந்த பாரதிதாசனின் வரிகளிலமைந்த "நானும் அவளும்", 24ல் அமைந்த "நான் உன்னழகினிலே", கபாலியில் "வானம் பார்த்தேன்" பாடல்கள் மனதை கவர்ந்தன. 


சாவகச்சேரி தாண்டி நாவற்குழி பாலம் கடக்க, கதவை திறந்து யாழ்ப்பாண காற்றை ஆசை தீர சுவாசித்தேன். தண்டவாளத்தை தொட்டு விடும் தூரத்தில் இருந்த வீடுகளை கடந்து வீறுடன் ரயில் யாழ்ப்பாண ரயில் நிலையத்தை அடைந்தது. மீண்டும் மண்ணில் கால்பதிக்க உள்ளம் உவகையில் திளைக்க, கண்களின் ஓரத்தில் ஏனோ ஈரம் கசிந்தது. 

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்கள் உலக அரங்கில் செலுத்தப் போகும் தாக்கங்கள் 2017ம் ஆண்டு பதிவு செய்யும்.  ஈழத்தமிழர்களிற்கு கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தந்த வலியுடனும் அடுத்த ஆண்டில் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையற்ற எதிர்பார்ப்புடனும் தான் கடக்கும். 2016ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்த நம்பிக்கைகள் படிப்படியாக பொடி பொடியாகி, 2017ஜ ஏக்கத்துடன் தான் நாங்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அடுத்த ஆண்டிலாவது எங்களிற்கு விடிவும் நீதியும் கிடைக்க கர்த்தரும் கந்தனும் கருணை காட்டட்டும்.

Friday, 23 December 2016

பஹ்ரேய்ன் பசுபாரசீக வளைகுடாவில் அமைந்திருக்கும் முப்பது தீவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி இராஜ்ஜியம் தான் பஹ்ரேய்ன். மன்னராட்சி நடக்கும் ஒரு இஸ்லாமிய நாடு. பெற்றோலியத்தில் தங்கியிருந்த பொருளாதாரத்தை, அதிலிருந்து மீட்டு, நிதிச் சேவைகள் நோக்கி நகர்த்திய முதலாவது வளைகுடா நாடும் பஹ்ரேய்ன் தான். மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு தேடி எம்மவர்கள் கடல் கடக்க வெளிக்கிட்ட போது,  பஹ்ரேய்னையும் விட்டு வைக்கவில்லை.


எங்கட SJC92 பிரிவில் முதன்முதலாக மத்திய கிழக்கிற்கு போனவர் சியாமளராஜ். தொண்ணூறுகளின் மத்தியிலேலே மத்திய கிழக்கிற்கு பறந்து விட்டார். "டேய் நீங்க கொப்பி பேனையோடு தூக்கிக்கொண்டு திரிந்த நாட்களிலியே நான் தினாரில் உழைக்க தொடங்கிட்டன்" என்று லெவலடிப்பார். "எங்கட பட்சிலேயே மிடில் ஈஸ்டிற்கு முதல் முதலா வந்தது நான்தான்டா" என்று ஒரு நாள் ஸ்கைப்பில் பீத்தினார். "ஓமடா மச்சான், சந்திரனிற்கும் மனுசன் போக முதல் நாயைத் தான் அனுப்பினவங்கள்" என்று திருப்பி அடிக்க, சிரித்துவிட்டு கட் பண்ணினார்.


பத்தாண்டுகளிற்கும் மேலாக பஹ்ரேய்னில் பதுங்கியிருக்கும் இந்தப் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளாக Facebook மற்றும் WhatsApp சமூகவலைத் தளங்களில் உறுமிக் கொண்டு திரிகிறது. அன்டிமாரோடு பல குழுக்களில் கொட்டமடிக்கும் இந்த கன்னிப்புலியின் ரோதனையை ரசிப்பவர் பலர், சொல்லாலடித்து துரத்துபவர் சிலர். 


எதற்கெடுத்தாலும் "வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவன்" என்று தொடங்கி WhatsAppல் பிரசங்கம் வைப்பதும், "I am number 2" என்று பெருமையடிப்பதும், பாட்டு பாடுறன் என்று சொல்லி கல்பனா அக்காவையே அழ வைக்குமளவிற்கு கத்துவதும், அரசியல் மேதாவியாக அவதாரம் எடுத்து அலட்டுவதும், தத்துவம் சொல்லி அறுப்பதும் என்று, கடந்த சில ஆண்டுகளில் இவனின் அட்டகாசம் எல்லைக் கோட்டை தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.


இந்த ஆண்டு பல பயணங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்தது. அதற்கெல்லாம் பிள்ளாயார் சுழி போட்டது மார்ச் மாதம் Big Match பார்க்கப் போன பயணம் தான். போன நவம்பரில் சுரேன் Big Match போகும் எண்ணத்தை விதைத்தான், உடனடியாக ஆதியும் கணாவும் நானும் டிக்கட் போட்டு விட்டோம். டிக்கட் போட்டு விட்டு தான் மனிசியிடம் சொன்னோம். பெப்ரவரியில் டுபாய்க்கு வேலை விஷயமாக போகும் நிர்ப்பந்தம் எற்பட, டிக்கெட்டை மாற்றி டுபாய் போய் வேலையை முடித்துவிட்டு யாழ்ப்பாணம் போக பயணத்தை மாற்றினேன். 


டுபாயில் வசிக்கும், பரி யோவானில் பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த நண்பன் கணேஷ்குமாரும் இணைந்து கொள்ள, பஹ்ரேய்ன் புலியை பார்த்து வரும்  திட்டம் தயாரானது. "மச்சான், சனிக்கிழமை காலம்பற வாறம், குளிச்சு கிளிச்சு நில்.. சரியோ" என்று மெஸேஜ் அனுப்ப, சிங்கன் காத்தால எழும்பி தலை முழுகி விட்டு செல்ஃபி எடுத்து படத்தை குறூப்பில் போடுறார்.


சியாமள்ராஜ், ஒரு மண்டைக்காய், பரி யோவான் U15 opening batsman, யாழ்ப்பாணத்தின் தலை சிறந்த Table Tennis ஆட்டக்காரன். யுத்தம் என்ற கொடிய அரக்கன் எம்மல்லோரின் வாழ்வையும் உலுப்பி எடுத்தது. 1990ல் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றி நாங்கள் கல்வியில் கரையை தொட்டுவிட, சியாமளராஜ் யுத்தம் சிதைத்த வாழ்க்கைக் கடலில் இன்றும் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.


பத்தாம் ஆண்டு, முதல் தவணைப் பரீட்சையில் சியாமளிற்கு கணிதத்திற்கு கிடைத்த மதிப்பெண்கள் 35. அடுத்த தவணைப் பரீட்சைக்கு கடுமையாக உழைத்து, வகுப்பில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அந்தனிப்பிள்ளை மாஸ்டரை அசர வைத்தான். உயர்தரத்தில், பரீட்சைக்கு முதல் நாள்  கிரிஷாந்தனின் கொமர்ஸ் கொப்பியை வாங்கிக் கொண்டு போய், போட்டோ கொப்பி எடுத்து இரவிரவாக முழித்திருந்து படித்து விட்டு வந்து பரீட்சை எழுதினான். பரீட்சை பெறுபேறு வரும்போது இரண்டு வருடம் படித்த கிரிஷாந்தனிற்கும் B ஒரு நாளிரவு மட்டும் படித்த சியாமளராஜிற்கும் B. சியாமள்ராஜ், கொமர்ஸ் படித்த மண்டைக்காய். 


காலை 7 மணிக்கு டுபாயிலிருந்து பஹ்ரேய்ன் புறப்படும் விமானத்தில் கணேசும் நானும் பயணித்தோம். இரவிரவாக குறட்டை விட்டு என் நித்திரையை கெடுத்த கணேசை "மச்சான் ப்ளைட்டில் நித்திரை கொள்ளாதேடா, நான் ஒரு குட்டித் தூக்கம் அடிக்கப் போறன்" என்று எச்சரித்து விட்டு கண்ணயர்ந்தேன். டுபாய் விமான நிலையத்தில் குடித்த குப்பை கோப்பி வயிற்றுக்குள் விளையாட்டு காட்டியது.


யாழ்ப்பாண YMCAயில் சியாமளை எப்போதும் காணலாம், பக்கத்தில் தான் அவரின் வீடும். Table Tennisல் பல வெற்றிகளை ஈட்டிய சாம்பியன் சியாமள்ராஜ். அந்தக்காலத்தில் ஒல்லிப்பிச்சானான சியாமள் ஒரு ஸ்டைலா தான் விளையாடுவார், அவரோடு ஜோடி போட்டு ஆட, சுண்டுக்குளி பெட்டைகள் போட்டி போடுவார்களாம், அதையும் அவரே சொல்லுவார். சியாமள் பரி யோவான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது தனிக்கதை. அதை விபத்து என்பதா விபரீதம் என்பதா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.


பஹ்ரேய்ன் விமான நிலையத்தில் இறங்கிய எங்களை இம்மியளவும் சிரிக்காத தாடி வைத்த ஷேக் அப்துல்லா வரவேற்றார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தால், டானியலை காணவில்லை. பஹ்ரேய்னிற்கு போன சியாமளராசா என்ற சிவனடியார், பெந்தகோஸ்து திருச்சபையில் திருமுழுக்கு பெற்று டானியலாக புதிய பிறவி எடுத்திருந்தார். டானியல், பைபிளை கரைத்து குடித்து ஒரு அதி தீவிர கிறிஸ்தவனாக மாற்றம் கண்டிருந்தார். 


சியாமள் நல்லா கதை சொல்லுவான், கதை சொல்லும் பாணியிலேயே சிரிப்பு வரும்.1990ல் பலாலிக்கு பங்கர் வெட்ட இயக்கம் பிடித்துக் கொண்ட போன கதையை எவ்வளவு தரம் சொன்னாலும் கேட்கலாம், அலுக்காது. வெள்ளவத்தையில் மாலை நேரங்களில் ஊத்தைக்கடையடியில் சியாமள் வந்தா தான் கச்சேரி களைகட்டும். ஊத்தகடையின் கண்ணாடி அலுமாரியை தவறுதலாக உடைத்து நொறுக்கியதற்காக பொலிஸ் பிடித்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போகும் போதும் சிரித்துக் கொண்டே Bye சொன்ன வீரவேங்கை அவன்.


நாங்க பஹ்ரேய்ன் விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியால வெளியே வர, டானியல் உள்நுழையும் பகுதியின் வாசலில் போய் எங்களை வரவேற்க நிற்கிறான். எங்களைக் கண்டதும் ஓடி வந்து கட்டிபிடத்து அரவணைத்து சிரி சிரி என்று சிரிக்கிறான். "டேய் பயந்தாங்கொள்ளி, வந்து சேர்ந்து விட்டாய், உன்னை இன்றைக்கு போட போறன்" என்று ஆப்கானிஸ்தான் காரனின் பழைய காரில் எங்களை ஏற்றிக் கொண்டு போகும் போது காமெடி பண்ணினான். 


சியாமள் எங்களோடு CIMA படிக்கவும் வந்தான், முதலாவது stageஐ ஒரே ஷொட்டில் பாஸ் பண்ணினான். CIMA பாஸ் பண்ணினதற்கு Mt Lavinia கடற்கரையில் ஒரு பெரிய Partyயும் வைத்தான். அதற்கு பிறகு ஆளை CIMA பக்கம் காணவில்லை. 


"மச்சான் பசிக்குதடா, நல்ல தேத்தண்ணியா வாங்கித் தாடா" என்று கேட்டோம். எங்களை ஒரு மலையாள ஊத்தைக்கடைக்கு கொண்டு போய் தேத்தண்ணி என்ற பெயரில் களனித்தண்ணி வாங்கித் தந்தான். "நாயே இது நாறல் சாப்பாடு" என்று அலுப்பு கொடுக்க, எங்களை ஆனந்தபவனிற்கு கூட்டி போய் வயிறாற தோசை, கேசரி, கோப்பி எல்லாம் வாங்கித் தந்தான். அன்று பகல் முழுவதும் டானியலோடு பம்பலாக கதைத்து வயிறு வலிக்க சிரித்துவிட்டு அன்று பின்னேரமே டுபாய்க்கு திரும்பினோம். 


புலியைத் தேடி பஹ்ரேய்ன் போனால் அங்கே ஒரு பசுவைத் தான் தரிசித்தோம். சமூக வலைத்தளங்களில் ஐஃபோனிற்கு பின்னால் மறைந்திருந்து உறுமுவது புலியல்ல, டானியல் என்ற நல்ல மென்மையான உள்ளம் கொண்ட நல்ல பசு தான். 


முப்பது ஆண்டுகால கொடிய யுத்தம் எங்களில் இருந்த திறமையானவர்களை மட்டும் எங்களிடமிருந்து பறிக்கவில்லை, எங்களிடமிருந்த திறமைகளையும் மழுங்கடித்து விட்டது.  உலகத்திற்கு விடிவை கொண்டு வந்த கிறிஸ்துவின் பிறப்பு நெருங்கும் இந்த காலத்தில், எங்களதும் எம்மினத்தினதும் வாழ்விலும் ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திப்போம். 


குழந்தை யேசுவின் அழுகுரல் கேட்டதும், மீட்பர் அவதரித்து விட்டார் என்று உலகம் மகிழ்ந்ததாம் என்று போன கிழமை தேவாலயத்தில் போதகர் பிரசங்கித்தார்.  அன்று முள்ளிவாய்க்காலிலும் இன்று அலப்பாயிலும் அழும் குழந்தைகளினதும் மனிதர்களதும் அழுகுரல் ஏன் அந்த யேசுவிற்கு இன்னும் கேட்கவில்லை? 

Friday, 16 December 2016

பரி யோவான் பொழுதுகள்: ஓடு ராசா ஓடு


1984ம் ஆண்டு ஆரம்பப் பிரிவில் Thompson இல்லத்திற்கும் Johnstone இல்லத்திற்கும் தான் கடும் போட்டி. இரண்டு இல்ல அணிகளும் மிகச்சிறந்த ஓட்டக்காரன்களை கொண்டிருந்ததால், எல்லாவித ரேஸ்களும் விறுவிறுப்பாக இருந்தன.  Johnstone இல்ல அணியில் கேர்ஷன், கண்ணதாசன், அன்புச்செல்வன், "வெள்ளை" சத்தியேந்திராவும் Thompson Houseல் ஜெய்மன், வரேந்திரன், "அட்டாக்" சசி, யோகதாஸும் இருந்தார்கள். எங்கட Handy Houseல் ஏகாம்பரநாதன் (பிரபு) மட்டும் தான் திறமான ஓட்டக்காரன். 


ஆரம்பப் பிரிவின் கடைசி வருட Sports Meet ஒரு சனிக்கிழமை மத்தியானம் March Past உடன் ஆரம்பித்தது. Layden Garments தயாரித்த vest அணிந்து, swan polish போட்டு மினுக்கிய வெள்ளைச் சப்பாத்துக் காலால் அணிவகுப்பு கலாதியாக நடந்தது. எங்களிற்கு March Pastல் மூன்றாவது இடமும், அது முடிய நடந்த Ball passingல் நாலாவது இடமும் கிடைத்தது. 


"அந்த" ரேஸிற்கான நேரம் நெருங்க இதயம் படபடக்க தொடங்கியது. "மச்சான், நாங்க இந்தமுறை நாலாவதா வாறதா மூன்றாவதா வாறது என்றது உங்கட கையில் தான் இருக்கு" என்று எங்கள் இல்லத்தின் கேப்டன் பிரபு உற்சாகப்படுத்தினான். முதல் இரு இடங்களிற்கும் Johnstone இல்லமும் Thompson இல்லமும் தான் போட்டியிட்டன. மூன்றாவது இடத்திற்கு எங்களிற்கும் Peto இல்லத்திற்கும் தான் போட்டி. "அப்ப இன்னும் கொஞ்சம் குளுக்கோஸ் தாடா டேய்" சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். 


கையில் பிடித்திருந்த Handy houseன் பெரிய பச்சை நிறக் கொடியை நண்பன் சத்தியரூபனிடம் கொடுத்து விட்டு "வரத் திரும்பத் தரோணும்" என்று சாதுவா வெருட்டி விட்டு, "அந்த" ரேஸிற்கு ஆயத்தமாகிறேன்.  ஒலிபெருக்கியில் மயில்வாகனம் மாஸ்டரின் சிம்மக் குரலில், "அந்த" ரேஸ் பற்றிய அறிவிப்பு வர, shot put பிட்ச் இருக்கும் physics lab அடிக்கு நகர்கிறேன். 


"அந்ந" ரேஸின் இறுதிப் போட்டிக்கு தெரிவான ஜவரில் இருவர் எங்கட ஹவுஸ், இறைவனும் நானும். டொக்டர்இறைவன் தற்பொழுது கொழும்பில் பிரபல மருத்துவர், சக்தி டீவியில் வலம் வருவார். Johnstone இல்லத்திலிருந்து கோபியும் (பிரபல யாழ்ப்பாண Orthopaedic surgeon) Pargiterவிருந்து ஓருத்தனும் Petoவிலிருந்து இன்னொருத்தனும் தெரிவாகியிருந்தார்கள். 


வெள்ளை நிற cowboy தொப்பியணிந்த மகாலிங்கம் மாஸ்டர், "on your mark" சொல்ல, மூன்றாவது லேனில் ஓடத்தயாரான எனக்கு முடிவு கோட்டை விட மிச்ச எல்லாம் கண்ணுக்கு தெரிந்தது. 


Robert Williams மண்டபத்தின் கரையில் அடுக்கப்பட்டிருந்த இளநீல நிற வாங்குகளில் அமரந்திருந்த பெற்றோர்கள், அவர்களிற்கு சூசியமும் வடையும் பரிமாறப்படுவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஜீவானந்தம் மாஸ்டர், முன்வாங்கில் வெள்ளையும் சொல்லையுமாக உடையணிந்து மிடுக்காக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அதிபர் ஆனந்தராஜா மாஸ்டர், தண்ணீர் தாங்கியடியில் அமர்ந்திருந்த மாணவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த துரைச்சாமி மாஸ்டர் என்று எல்லாருமே பார்வை வீச்சுக்குள் வந்தார்கள். 

மகாலிங்கம் மாஸ்டர் "set" சொல்லவும் பழைய பூங்கா பக்கம் ஹெலிகொப்டர் ஒன்று பறக்கவும், அந்த சத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெளவால்கள் திடுக்கிட்டெழும்பி மரத்தை விட்டு எழும்பி வானில் பறக்கவும் சரியாயிருந்தது. முகாம்களுக்குள்  ஆமி முடக்கப்படுவதற்கு முந்தைய காலமது. பழைய பூங்காவிலும் குருநகர் தொடர்மாடியிலும் இராணுவ முகாம்கள் இருந்தன. பழைய பூங்கா வீதியில் எப்போதும் இராணுவ நடமாட்டம் இருக்கும். 


"Go" சொல்லாமல் மகாலிங்கம் மாஸ்டர் வாயிலிருந்த விசிலால் விசிலடிக்க, "அந்த" ரேஸ் தொடங்கியது. ஆரம்பக் கோட்டிலிருந்து புயலென புறப்பட்டால், எனக்கு முன்னாலே கோபி பறக்கிறான். மற்றப்பக்கம் இறைவன் கோபியை கலைத்துக் கொண்டு போறான். போன வருடம் கோபிக்கு முதலாவது இடமும் இறைவனிற்கு இரண்டாவது இடமும் கிடைத்தது. ரேஸின் அரைவாசித் தூரமான புளியமரத்தடி தாண்ட, நான்காவது இடத்தில் ஓடிக்கொண்டிருந்த எனக்கு முடிவுக்கோடு வெகு தூரத்திலேயே தெரிகிறது. 


பழைய பூங்காப் பக்கமிருக்கும் குட்டிச்சுவரிற்கு மேலால, ஒரு இராணுவ ட்ரக் வலு வேகமாக போவது தெரிந்த அந்த கணத்தில் தான் அந்த அதிசயம் நடந்தது. எனக்கு இடப்பக்க லேனில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்த இறைவன் தடக்கப்பட்டு கீழே விழுந்துவிட்டான், கோபி இன்னும் முன்னிலையில். 


கடவுளே விழுந்து வழிவிட,  உடனடியாக மூன்றாவது இடத்திற்கும், பிரபு தந்த இரண்டாவது கரண்டி குளுகோஸின் சக்தியால் உந்தப்பட்டு, சில நொடிகளில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறுகிறேன். 


முடிவு கோட்டை நெருங்கியாச்சு, எங்கட இல்லத்தின் பச்சைக் கொடியை சத்தியரூபன் ஆட்டுவது தெரிகிறது, பிரபு "come on come on" கத்துவதும் கேட்கிறது. கோபி கோட்டை முதலாவதாக தாண்டப் போறான், அடுத்தது நான் தான்.


இன்றைக்கு இரண்டாவது இடம், ஹையா ஹையா, நான் சாதித்து விட்டேன். அந்த பச்சைக் கொடியின் நிழலில் நடந்து போய், இரண்டாவது பரிசை இன்னும் சில மணி நேரங்களில் வாங்கப் போகிறேன். தேவதாசன் மாஸ்டர் தான் அறிவிப்பார், ஆனந்தராஜா மாஸ்டர் கதிரையிலிருந்து கூர்ந்து கவனிப்பார், துரைச்சாமி மாஸ்டர் மேசையடியில் நிற்க பிரதம விருந்தினர் அந்த சான்றிதழை வழங்குவார், அதை பத்திரமாய் கொண்டு போய்... என்று கனவு கண்டு கவனத்தை சிதறடித்த அந்த சில கணங்களில்.. Pargiter இல்லக்காரன் கோபிக்கு அடுத்ததாக கோட்டைத் தாண்டிவிட்டான், பின்னால மூசிக்கொண்டு இறைவன் ஓடிவாற சத்தம் கேட்கிறது.


"கர்த்தரே என்னை கைவிடாதேயும்" என்று ஜெபிக்க "ஓடு ராசா ஓடு" என்ற கர்த்தரின் குரல் எதிரொலிக்கிறது. வியர்த்து, இளைத்து,  மூச்சிழைக்க, கோட்டைத் தாண்டுகிறேன். "சேர், இவர் தான் third" சந்திரமெளலீசன் மாஸ்டர் என்னுடைய கையை பிடித்துக் கொண்டு போய், "அந்த" ரேஸின் முடிவை பதிவு செய்கிறார். பிரபு குளுக்கோஸோடு ஓடி வாறான், பின்னால் கொடியோடு சத்தியரூபனும். 

Sack race என்ற "அந்த" ரேஸில் வென்ற பெருமிதத்துடன் பிரபு தந்த குளுகோஸை கையில் வாங்கி வாயில் போட்டு விட்டு, சத்தியிடமிருந்து மீண்டும் எங்கள் Handy இல்லத்தின் கொடியை பெருமையுடன் மீளபெற்றுக் கொள்கிறேன்.Friday, 9 December 2016

ஜெயலலிதா.. ஒரு பார்வை
"I must say it wasn't a pleasure talking to you"

... என்று, கண்ணிமைக்காமல் நேர்கொண்ட பார்வையுடன் சொல்லிவிட்டு, கை குலுக்க கையை நீட்டிய BBC Hardtalk ஊடகவியலாளர் Karan Thaparயோடு கைகுலுக்காமல், மைக்கை கழற்றி மேசையில் டொப்பென்று போட்டு விட்டு, விருட்டென்று எழுந்து செல்லும் ஜெயலலிதாவின் 2004ம் ஆண்டு நேர்காணல், அவரது துணிச்சல் மிகுந்த ஆளுமையின் வெளிப்பாடாக அமைந்தது. 

மீடியா இப்படி சொல்லுது, சனம் அப்படி சொல்லுது பாணி கேள்விகளை கேட்ட கரனிற்கு, பொத்துக்கொண்டு வந்த ஆத்திரத்தை வெளிக்காட்டாமல், ஆணித்தரமாக பதிலடி கொடுக்கும் ஜெயலலிதாவின் அந்த பேட்டியை பார்ப்பவர்களிற்கு ஜெயலலிதா மீது நிட்சயம் ஒரு பிரமிப்பு கலந்த ஈர்ப்பு ஏற்படும். 

இந்த நேர்காணலில், தன்னை ஏன் ஊடகங்கள் குறிவைக்கின்றன என்று  ஜெயலலிதா பின்வருமாறு விபரிப்பார்.

KT: (Intervenes) You’re saying that media picks on you?

JJ: I do think so.

KT: Because you are a woman?

JJ: I don’t think it’s because I am a woman. It’s because I don’t have a background like other women political leaders of Asia. If you’ll allow me to complete a sentence, Mrs. Indira Gandhi was born into the Nehru family. She was the daughter of Jawaharlal Nehru. Mrs. Srimavo Bandaranaiake was the wife of Bandaranaiake, Benazir Bhutto was the daughter of Bhutto, Khaleeda Zia was the widow of Zia-ur- Rehman. 

KT: What’s the point you are making?

JJ: Sheikh Haseena was the daughter of Mujibur Rehman. I have no such background. I’m a self made woman. Nothing was handed to me on a golden platter

----------------------------

1987 டிசம்பரில் MGRன் மரணச்சடங்கில்  பல்வேறு இழி பேச்சுக்களிற்கும் தள்ளல்களிற்கும் நுள்ளல்களிற்கும் மத்தியில், மணிக்கணக்கில் அவரது உடலின் தலைமாட்டில் நின்றதிலிருந்தும், பின்னர் அவரது பூதவுடல் தாங்கிச் சென்ற பீரங்கி வண்டியில் இருந்து தள்ளப்பட்டதிலிருந்தும், சில ஆண்டுகளிற்கு பின்னர் தமிழக சட்டசபையில் துயிலுரியப்பட்டு அவமானப்பட்டதிலிருந்தும் ஆரம்பமான ஜெயலலிதாவின் சவால்கள் நிறைந்த அரசியல் பயணம், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவிற்கு வந்தது. 


இந்திய இராணுவம் ஈழத்தில் கொலைத் தாண்டவமாடிய 1987-89 காலப்பகுதியில் விடுதலைக் புலிகளின் பிரதிநிதிகளை சென்னையில் சந்தித்ததை பகிரங்கமாக அறிவித்த ஜெயலலிதா, இந்தியப் படைகளின் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும் கோரியிருந்தார். விடுதலைப் புலிகளிற்கு பகிரங்கமாக தனது ஆதரவை அறிவித்தும் இருந்தார். 1990 ஒக்டோபரில், பத்மநாபாவினதும் அவரது தோழர்களதும் படுகொலைகளிற்கு பின்னரும் புலிகள் தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடவில்லை என்று செவ்வியளித்தார். 


1990 டிசம்பரில் விபி சிங் அரசு கவிழ்ந்து, சந்திரசேகர் மத்தியில் ஆட்சி கட்டிலேற, மாநில திமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற ஒரே தன்னல நோக்கத்திற்காக புலி எதிர்ப்பாளராக ஜெயலலிதா அவதாரம் எடுத்தார். திமுகவிற்கும் புலிகளிக்குமிடையிலான தொடர்புகளை ஆவணப்படுத்தி, சுப்ரமணிய சுவாமியோடு இணைந்து ஜெயலலிதா சமர்ப்பித்த 101 பக்க அறிக்கை 1991 ஆரம்பத்தில் கலைஞரின் ஆட்சிக்கு உலை வைத்தது. 


May 21, 1991ல் ரஜீவ் படுகொலை நடந்த அடுத்த மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருந்த ஜெயலலிதாவின் அதிமுக அமோக வெற்றி பெற, தனது 43வது வயதில் தமிழ்நாட்டின் வரலாற்றில் வயதில் குறைந்த முதலமைச்சராக ஜெயலலிதா அரியணை ஏறினார். 


புலிகளை தமிழகத்திலிருந்து அகற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகளைக் (extra judicial killings) கூட செய்யுமாறு, தனது அதிகாரிகளுக்கு இக்காலப்பகுதியில் ஜெயலலிதா உத்தரவிட்டதாக, Wikileaks தகவல்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியதன் மூலம் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியதாக ஜெயலலிதா பெருமையும் பட்டுக்கொண்டார்.


ஊரைக் கொள்ளையடித்த ஊழல், வளர்ப்பு மகனின் படோபகார திருமணம் என்பவற்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" என்ற சன் டீவி பேட்டியின் தாக்கத்தாலும், திமுகாவோடு கூட்டணி அமைத்த மூப்பனாரின் செயற்பாட்டாலும் 1996 தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். 


2001 தேர்தலில் ஜிகே மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜெயலலிதாவோடு கூட்டணி அமைக்க, அதிமுக யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியை பிடித்தது. ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மீளாத ஜெயலலிதா முதலமைச்சராவதை உச்சநீதிமன்றம் தடுக்க, ஓ பன்னீர்செல்வம் "நிழல்" முதல்வராக பதவியேற்றார். 


பெப்ரவரி 22, 2002ல் ரணில்-பிரபா ஒப்பந்தம் கைச்சாத்தாகி எட்டாம் நாள், ஜெயலலிதா  ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். ஏப்ரல் 10, 2002 அன்று கிளிநொச்சியிலில் நடந்த தலைவரின் ஊடகவியலாளர் மாநாட்டை தமிழக தொலைக்காட்சிகள் அனைத்தும் ஓளிபரப்பி
தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை தலைவரின் பால் ஈர்க்க, ஜெயலலிதாவிற்கு எரிச்சல் உச்சியில் கொதித்தது.  


ஆறு நாட்கள் கழித்து, ஏப்ரல் 16, 2002ல், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தலைவர் பிரபாகரனை "உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று ஜெயலலிதா அனல் பறக்க பேசினார்.


சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், சென்னை ஊடாக வன்னி செல்லவும் சென்னையில் மருத்துவ உதவி பெறவும் விடுத்த கோரிக்கையையும் இதற்கு சில வாரங்களிற்கு முன்னர் ஜெயலலிதா நிராகரித்திருந்தார். இதனாலேயே பாலசிங்கம் மாலைதீவிலிருந்து நேரடியாக இரணைமடுக் குளத்தில் சென்று இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.


2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சிறுபான்மை திமுக ஆட்சியை பிடிக்க, ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் தஞ்சமடைந்தார். 2009ன் ஆரம்பத்தில் வன்னியுத்தம் உச்ச கட்டத்தை அடைய, மே நடுப்பகுதிக்கு இந்திய பொதுத் தேர்தலிற்கு நாள் குறிக்கப்படுகிறது. 


2009 ஜனவரியில் "யுத்தமென்றால் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள்" என்று கருத்து வெளியிட்ட ஜெயலலிதா, மார்ச் மாதமளவில் "தமீழீழத்தை பெற்றுத் தருவேன்" என்ற நிலைபாட்டிற்கு மாறியிருந்தார். மார்ச் மாதம் சேப்பாக்கம் மைதானத்தில் காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமரந்திருந்து ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தது தமிழனத்தை நெகிழ வைத்தது. 


ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியில் நம்பிக்கை வைத்திருந்த அவரது  தேர்தல் கூட்டாளியான வைகோ போன்ற ஏமாளிகளின் தவறான நம்பிக்கையூட்டங்களின் மத்தியில், 18 மே 2009ல் தமிழீழப் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பலத்த இழப்புக்களோடு மெளனிக்கப்பட்டது.  


2011லும் 2016லும் மீண்டும் மீண்டும் ஆட்சியிலமர்ந்த ஜெயலலிதா, ஈழத்தமிழர்களிற்கான தனது கரிசனையை சட்டமன்ற தீர்மானங்களோடு மட்டுப்படுத்திக் கொண்டார். ஐநா தீர்மானத்திற்கான ஆதரவான தீர்மானமாகட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானம் ஆகட்டும் , இலங்கை கிரிக்கெட் வீரர்களை சென்னையில் விளையாட அனுமதியாமையாகட்டும், அனைத்துமே தமிழர்களின் விடிவிற்கு உறுதுணையாகவும் அரணாகவும் அமைந்தன. 


கடந்த ஏழு ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவர் கடைபிடித்த கொள்கைகளில் மாற்றம் இருக்கவில்லை. இதுவரை அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மார்ச் 2009ல் அவரில் ஏற்பட்ட மாற்றம் அவரின் இறுதி நாட்கள் வரை நீடித்தது மட்டுமல்லாது, இதே காலப்பகுதியில் கபட நாடகம் ஆடிய கருணாநிதியிலிருந்து ஜெயலலிதாவை பிரித்தும் காட்டியது. 


மரித்தோரை மதிக்க வேண்டும் என்பது எமது மரபு. மரித்தோரைப் பற்றி அளவுக்கதிகமாக புகழாமல் இருப்பதும், குறைகளை பேசாமல் இருப்பதும் மரித்தோரை மதிக்கும் மரபில் அடங்கும்.  அதே வேளை மரித்தோரின் தவறுகளை வரலாறு மன்னிக்காது, குறிப்பாக ஒரு இனத்தை, தங்களின் சுய அரசியல் லாபத்திற்காக பலிக்கடாவாக்கியவர்களை வரலாறு என்றும் மன்னிக்காது. 

----- 

1996ல் Simmi Garewalற்கு ஜெயலலிதா ஒரு அழகான தொலைக்காட்சி பேட்டியளித்தார். ஒரு அழகிய உரையாடல் வடிவில் அமைந்த இந்த பேட்டியில், தனது குழந்தைப் பருவம், இளமைக்காலம், சினிமா வாழ்க்கை, அரசியல் பயணம் என்பன பற்றி மனந்திறந்து ஜெயலலிதா பேசுவார். MGR உடனான உறவு பற்றிய கேள்விக்கு கூட நேரடியாக பதிலளிப்பார், பேட்டியின் இறுதியில் தன்னை யாரும் இப்படியான கேள்விகள் கேட்க துணிந்ததில்லை என்று புன்முறுவலோடு சிம்மியை பாராட்டுவார். 


ஜெயலலிதாவின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் இந்தப் பேட்டியில், சிமியோடு இணைந்து ஜெயலலிதா ஆஜா சனம் என்ற தன்னுடைய விருப்பத்திற்குரிய இந்திப்பாடலையும் பாடி அசத்துவார். பேட்டியில் கிரிக்கட் வீரர் நரி கொன்ட்ரக்கடர் மற்றும் நடிகர் ஷமிதா கபூர் ஆகியோர் மீது ஓரு பள்ளி மாணவியாக தனக்கு இருந்த ஈர்ப்பு பற்றி கூறும் போது வெட்கப்படும் ஜெயலலிதா, தன்னுடைய அம்மா பற்றிய நினைவுகளை பகிரும் போது 
கண்ணில் துளிர்விடும் கண்ணீரை கண்களாலேயே கட்டுப்படுத்துவார்.

SG: do you think you intimidate men?

JJ: you must ask them.. I think i do (laughs)


வாழ்வில் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி, மீண்டும் மீண்டும் ஆறுதடவைகள் தமிழக மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா எனும் ஆளுமை பற்றிய இனிய எண்ணங்களை மனதில் பதிவு செய்யும் ஒரு அழகிய நிகழ்ச்சியாக Simi Garewellன் இந்த Rendezvous நேர்காணல்  அமைகிறது.


ஆடும் வரை ஆடிவிட்டு 
அல்லி விழி மூடம்மா

Links

Friday, 2 December 2016

மகனும் நானும்....
மகள்மாரைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள், மகன்மாரைப் பெற்ற அப்பாக்கள் புண்ணியவான்கள்

நேற்றுக் காலை என்னுடைய மூத்தவனின் Primary school graduationல் கலந்து கொண்ட போது கண்கள் ஏனோ பனித்தன. உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வை உணரமுடிந்ததே தவிர, உணர்வின் ஊற்றைத் தேட மூளை மறுத்துவிட்டது. "My baby has become a boy" என்று மண்டைக்குள் ஒரு குரல் கேட்டது.


சாதுவாக மழைத் தூறிக் கொண்டிருந்த புரட்டாசி மாதத்தின் ஒரு செவ்வாய்க்கிழமை மாலைப் பொழுதில், கைக்குழந்தையாய் அவனை முதன்முதலாக கரங்களில் தாங்கினேன். உருண்டு, பிரண்டு, நடந்து, ஓடி, விழுந்து அவன் கண்முன் வளர வளர, வாழ்வில் ஒரு புதுவசந்தம் தவிழ ஆரம்பித்தது.


அம்மா சொல்ல முதல் அப்பா சொல்லி, சொற்கள் வாக்கியங்களாகி, வாக்கியங்கள் கேள்விகளாக தொடங்க, Thomas the Tank Engineல் தொடங்கிய அவனுடனான சம்பாஷணைகள் இன்று Cricket வரை வளர்ந்துவிட்டது. 


ஏழு ஆண்டுகளிற்கு முன்னர் இதே பள்ளியில், ஒரு அழகிய காலைப் பொழுதில், அவனை வகுப்பில் கொண்டு வந்து சேர்த்ததும் இன்று நினைவில் நிழலாடியது. பள்ளியில் முதல்நாள், காரிலிருந்து இறங்கி எனது கையைப் பிடித்துக்கொண்டு வந்தவன், வகுப்பறை வாசலில் எனது கையை விட்டு விட்டு, தனக்கென ஒதுக்கப்பட்ட கதிரையில் அவன் போய் அமர, கண் முட்டி கண்ணீர் வந்தது எனக்குத் தான், அவனுக்கல்ல. 


அடுத்து வந்த ஆண்டுகளில் வகுப்பறையில் கொண்டு போய் விட்ட காலம் போய், காரில் drop off பண்ணும் காலமும் வந்தது. காரிலிருந்து இறங்கி பார்வையால் bye சொல்லிவிட்டு அவன் பள்ளிக்கு போவான். இரவு வீடு வந்து "பள்ளிக்கூடத்தில் என்னடா நடந்தது" என்று கேட்க "nothing" என்று மொட்டையாய் பதில் சொல்வான். 


கிழமையில் நான்கு நாட்கள் பெடியளை பள்ளிக்கூடத்தில் விடும் இனிய பொறுப்பை மகிழ்வோடு நிறைவேற்றினேன். "When the sun shines in the morning and the night is on the way, it's a new day and a new way" என்று ஒவ்வொரு நாளும் நான் பாட, அவங்கள் பேசாமல் கேட்பாங்கள். பதினைந்து நிமிஷ ஓட்டத்தில் பள்ளிக்கூடம் வரமுதல், நாங்கள் ஜெபித்து விட்டு, cricket அல்லது footy பற்றி கதைப்பம். சில நாட்களில் அப்பாவின் அறிவுரை நேரமாகவோ அல்லது அப்பாவின் நனவிடை தோய்தல் பொழுதாகவோ அந்த பதினைந்து நிமிடங்கள் அமைந்துவிடும். ஒவ்வொரு நாளும் நான் விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக கருதும் பதினைந்து நிமிடங்கள் அவை. 


பள்ளியின் ஆராதனை வழிபாடுகளில் அவன் கர்த்தரை ஸ்தோத்தரிப்பதை கண்டு நெகிழ்ந்ததும், மேடை நிகழ்வுகளில் அவனை கண்டு ரசித்ததும்,  இசைக் குழவில் கிட்டாரோடு அவனைக் கண்டு மகிழ்ந்ததும், ஆண்டிறுதி பரிசளிப்பு விழாவில் விருதுகள் பெறும் போது பெருமைப்பட்டதும், விருது பெறாத போது கலங்கியதும் என்று ஏழு ஆண்டுகள் பறந்தோடி விட்டன. 


பதின்மத்திற்குள் மகன் நுழைய எங்கள் வாழ்வும் அடுத்த கட்டத்திற்குள் முன்னேறுகிறது. புலம்பெயர்ந்த பெற்றோருக்கு புலம்பெயர் நாட்டில் பிறந்த தலைமுறை, பதின்ம பருவத்தில் எதிர்நோக்கப் போகும் சவால்களை சந்திக்கும் களமாக இனிவரும் ஆண்டுகள் அமையப் போகின்றன. 


வேகமாக மாறிவரும் உலக அரங்கில், எந்த துறையை தேர்ந்தெடுத்து வாழ்வை நிலைநிறுத்துவான் என்ற எண்ணம் ஒருபக்கம் அலைபாய, என் குழந்தை, இல்லை,  என்ர பெடியனும், காதல் வயப்படுவானா? தமிழ் பெட்டை அல்லாத வேறொருத்தியை காதலித்தால்?... இப்படி அவசியமேயில்லாமல் மனம் இன்னொரு பக்கம் அல்லாட, வாழ்வு எனும் இனிய பயணம் தன்டபாட்டிற்கு தொடர்கிறது.


மகன் என்ற பந்தத்தில் எத்தனையோ இன்பங்கள் நிறைந்திருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இதுவரை அவன் என்னை திட்டவில்லை. பிறந்த நாளிலிருந்து அம்மாட்ட ஏச்சு வாங்கி, அப்பாட்ட அடிவாங்கி, வாத்திமாரிடம் மொத்து வாங்கி, வேலைத் தளத்தில் பொஸ்ஸிடம் கிழி வாங்கி, வீட்ட வந்து மனிசிட்டயும் பேச்சு வாங்கி வாழும் வாழ்க்கையில், திட்டாத ஒரு உறவு இருக்குமென்றால், அது திகட்டும் தானே. 

மகன்மாரைப் பெற்ற அப்பாக்கள் புண்ணியவான்கள்!


Friday, 25 November 2016

மாவீரர் யாரோ என்றால்....
"மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது,
நான் முன்னுக்கு போகப் போறன்,
என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா"

ஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர் நண்பர்களோடு பலமுறை விரிவாக கதைத்திருந்த சிவகுமரனின் இந்த கடைசி  அழைப்பு,  ஓரிரு நிமிடங்களே நீடித்தது. 

----------------------------------------------------------------------------------------------------------------------

1984ல், பரி யோவானில் இணைந்த சிவகுமரன் எல்லோரோடும் பம்பலாக பழகுவான். தேவதாசன் மாஸ்டர் வகுப்பாசிரியராக இருந்த Grade 5Aல் தான் சிவகுமரன் அறிமுகமானான். எங்களது வகுப்பறை பிரின்ஸிபல் ஒஃபிஸிற்கு முன்னால் இருந்த கொட்டகையில் இருந்தது. இப்பொழுது அந்த வகுப்பறைகள் இடிக்கப்பட்டு புதிய கல்லூரி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 


சிவகுமரனின் நட்பில் வாஞ்சை மிதமிஞ்சும், வஞ்சகம் எள்ளளவும் இருக்காது.  சிவகுமரன் விடும் குழப்படிகள்,  தானும் அடிவாங்கி மற்றவர்களுக்கும் அடிவாங்கிக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. சிவகுமரனின் சொந்த ஊர் நயினாதீவு என்பதால், அவனுக்கு நைனா என்ற பட்டபெயர் ஒட்டிக் கொண்டது. சிவகுமரனின் நகைச்சுவை கலந்த பம்பல்களால், இலங்கை வானொலியின் பிரபல நகைச்சுவை கதாபாத்திரமான நானா மரிக்காரை நினைவில் வைத்து, நைனா மரிக்கார் என்ற பட்டப் பெயரையும் பெற்றான். 


சிவகுமரனிடம் சிக்கி கந்தசாமி மாஸ்டர், காசிநாதன் மாஸ்டர் போன்ற அப்பிராணி வாத்திமார் பட்ட அவஸ்தை சொல்லிலடங்காதவை. நைனா ஒரு சிறந்த ராஜதந்திரி, "பயங்கரவாத" வாத்திமாரிடம் தன்னுடைய வாலை சுருட்டிக் கொள்வான். இந்த பயங்கரவாத வாத்திமார் லிஸ்டில், தேவதாசன், கதிர்காமத்தம்பி, பிரபாகரன், தனபாலன், சரா தாமோதரம், டோனி கணேஷன் மாஸ்டர்மார் அடங்குவினம். சந்திரமெளலீசன் மாஸ்டரின் வகுப்புகளில் நைனா விடும் சேட்டைகளை அவரும் சேர்ந்து ரசிப்பதால் வகுப்பு கலகலப்பாகும். 


எங்கட வகுப்பிற்கு duty பார்க்க வாற prefectsஐயும் நைனா வாட்டி வதைப்பான். பத்தாம் வகுப்பில் "ஐசே ஏன் நிற்கிறீஈஈஈர்" நிருபனும்,  Lower VIல் "எடுவை" ஐங்கரனும் சிவகுமரனின் குழப்படிகளை கட்டுப்படுத்த முடியாமல் திக்கு முக்காடினார்கள். 


-------------------------------------------------------------------------------------------------------------------

1988ம் ஆண்டு பரி யோவான் மைதானத்தில், ஒரு சனிக்கிழமை, பற்றிக்ஸ் அணிக்கெதிரான u17 ஆட்டம் நடைபெறுகிறது. பரி யோவான் அணியின் தலைவர் சதீசன், அரைச்சதம் தாண்டி நூறு ஓட்டங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். பழைய பூங்கா பக்கம் இருக்கும் பொன்னுத்துரை பவிலியனிலிருந்து சிவகுமரனோடு நானும் சில நண்பர்களும் மட்ச் பாரத்துக் கொண்டிருந்தோம். 


"மச்சான், காசை எடுங்கடா, சதீசன் செஞ்சரி அடிக்க சோடா குடுப்பம்" நைனா வினையை விலைக்கு வாங்க திட்டம் போட்டான். மைதானத்தில் மட்ச் நடக்கும் போது, மைதானத்திற்குள் ஓடுவது என்பது பரி யோவானின் கடும் ஒழுக்க விதிகளிற்கு முரணாணது, பாரிய குற்றம்.


"மச்சான், பிடிபட்டோமென்றா பிரின்ஸிபலிடம் தான் கொண்டு போய் நிற்பாட்டுவாங்கள்" எவ்வளவோ எச்சரித்தும், விடாப்பிடியாக சதீசன் செஞ்சரி அடிக்க சோடா கொடுப்பதில், நைனா உறுதியாக நின்றான்.


"டேய், நீங்க சோடா வாங்க காசு போடுங்கோ, நான் கொண்டு ஓடுறன்" என்றான் சிவகுமரன். பின்னாட்களில் வெளிநாடுகளிலிருந்து நாங்கள் காசு அனுப்ப, அவன் தாயகத்தில் களமாடப் போகும் வரலாற்றை கட்டியம் கூறுவதாக அந்த சம்பவம் அமையப் போகிறது என்று  அன்று நாங்கள் உணரவில்லை.


நைனா அடம்பிடிக்க தொடங்கினால் யாராலும் சமாளிக்க ஏலாது. வேண்டா வெறுப்பாக எல்லோரும் சேர்ந்து காசு போட்டு, செரில்ஸிற்கு போய் நெக்டோ வாங்கி வந்து, மீண்டும் பழைய பூங்கா பக்கத்தில் போய் மட்ச் பார்க்கத் தொடங்கினோம். 


சதீசன் நூறடிக்க, சிவகுமரன் மைதானத்திற்குள் ஓடிப் போய், நடுப் பிட்சில் வைத்து சதீசனிற்கு சோடா கொடுத்தான்.  "ஐசே, இப்படி செய்யக் கூடாது" என்று நடு பிச்சிலும் சதீசன் அன்பாக கண்டித்துவிட்டு, ஒரு மிடாய் சோடா குடித்தார்.


திரும்பி பழைய பூங்கா பக்கம் வராமல், டைனிங் ஹோல் பக்கம் தப்ப ஓடிய சிவகுமரனை ஏற்றிக் கொண்டு பிரின்ஸிபல் பங்களாவிற்கு செல்ல புவனரட்ணம் மாஸ்டர் சைக்கிளோடு தயாராக நின்றார். 

-----------------------------------------------------------------------------------------------------------------

Big Match வென்ற 1990 பரி யோவான் கிரிக்கெட் அணியில் சிவகுமரன் 12th man. சிவகுமரன் மிகச்சிறந்த fielder. Big Matchல் அணியில் விளையாடிய பதினொரு பேரிடமும் தன்னை எப்படியாவது field பண்ண விடுமாறு வலியுறுத்திக் கேட்டிருந்தான். 


இரண்டாம் நாள் மத்தியானம், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய சென்ரலின்  எட்டாவது விக்கெட் விழுந்து, பரி யோவான் அணி வெற்றியின் விளிம்பில் நிற்க, மைதானத்திற்குள் நுழைந்த  பரி யோவான் பழைய மாணவர்கள், "கடைசி விக்கெட் விழுந்ததும் dressing roomற்கு ஓடுங்கடா, அடி விழும், கவனம்" என்று அணியை எச்சரித்தார்கள்.


இதைக் கேட்டு பயந்த விபீஷ்ணா, அடுத்த ஓவரே, கையை காட்டி, சிவகுமரனை கூப்பிட்டு field பண்ணவிட்டு விட்டு தான் மைதானத்திலிருந்து தப்பி வெளியேறினான். பின்னாட்களில் நண்பர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட, சிவகுமரன் தாய் மண்ணில் களமாடப் போகும் காலங்களை உணர்த்திய சம்பவமாக இதுவும் அமைந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------

1990ம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரிக்கெதிராக பரி யோவான் மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் சிவகுமரன் பிடித்த கட்சை  கேர்ஷன் ஞாபகப்படுத்தினான். "மட்ச் முடியிற நேரம், யாரோ வெளியே வர,  சிவகுமரனை field பண்ண இறக்கினாங்கள். Water tank பக்கமிருந்த boundary லைனில் சிவகுமரன் ஓடிப் போய் ஒரு அந்த மாதிரி கட்ச் எடுத்தான்டா. இன்றைக்கும் என்ட கண்ணுக்குள் நிற்குது" என்றான் கேர்ஷன். 


அதே ஆண்டில் இடம்பெற்ற இரு வேறு ஆட்டங்களில் ஸ்லிப்ஸில் சிவகுமரன் எடுத்த கட்ச் பற்றி சிறிபிரகாஷும், சிவகுமரன் எடுத்த ரன் அவுட் ஒன்றைப் பற்றி அருள்மொழியும் நினைவுறுத்தினார்கள். 


இந்தாண்டு  நாங்கள் Big Match பார்க்கப் போகும் போது, Big Matchல்  Best Fielderற்கான விருதை சிவகுமரன் ஞாபகார்த்த விருதாக வழங்கப்பட SJC 92 லண்டன் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தது நெகிழ வைத்தது. 

---------------------------------------------------------------------------------------------------------------

1990ம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்தம் மீண்டும் தொடங்கியது, எங்களின் பரி யோவான் பாடசாலை வாழ்க்கையும் சிதைந்து போனது. இயக்கம் Open பாஸ் அறிவித்த நாட்களில் நாங்கள் கொம்படி வெளி கடந்து கொண்டிருக்க, சிவகுமரன் இயக்கத்தின் பாசறையொன்றில் போராளியாக மாறியிருந்தான். 

------------------------------------------------------------------------------------------------------------------

1994 டிசம்பரில், சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலப்பகுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றிருக்கும் போது, நான் வந்திருப்பதை அறிந்து தேடி வந்து சந்தித்தான். பரி யோவான் மைதானத்தின் ஓரத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மைதானத்தின் புற்தரையில் அமர்ந்திருந்து  யசியோடும் என்னோடும் பழைய குழப்படிகளை இரை மீட்டான்.


இயக்கத்தில் சிவகுமரனின் வளர்ச்சி துரிதமாக நடந்தது. அந்தக் காலப்பகுதியில் கலை பண்பாட்டு கழகத்தின் துணை பொறுப்பாளராக செயற்பட்ட சேரலாதன், அடுத்த நாள் யசி வீட்டில் மத்தியான சாப்பாட்டிற்கும் எங்களோடு இணைந்து கொண்டான்.  தன்னுடைய கோப்பையிலிருந்து எடுத்து எங்களிற்கு சோறு ஊட்டிவிட்டு நட்பு பாராட்டிய அந்த கணங்களை மறக்கவே இயலாது.

--------------------------------------------------------------------------------------------------------------

2002 நவம்பரில், மாவீரர் நாளிற்கு சில நாட்களுக்கு முன்னர், சிவகுமரனை மீண்டும் கிளிநொச்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிக்கூட காலத்தில் மெல்லிய உருவமாக இருந்த சிவகுமரன், நல்லா கொழுத்து தடியனாக மாறியிருந்தான். இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனாக, நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த நண்பனை கண்டு பெருமைப்பட்டேன்.


"டேய் மச்சான், உன்னை இயக்கத்தில் இவ்வளவு காலம் எப்படிடா வச்சிருந்தவங்கள்" என்று பம்பலாக ஒரு  மூத்த தளபதி முன்னிலையில் கேட்க, அந்த மூத்த தளபதி சேரலாதனிற்கு இயக்கம் "காத்து கழற்றிய" கதையை சொல்லி சிரித்தார். சிவகுமரனும் சளைக்காமல் தனக்கேயுரிய இயல்பான நக்கலுடன் திருப்பி தாக்கி அந்த பொழுதை இனிமையாக்கினான்.  

------------------------------------------------------------------------------

2005 நவம்பர் மாதம் 1ம் திகதி

யுத்த மேகங்கள் சூழத்தொடங்கியிருந்த காலம், இயக்கம் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட தனது அரசியல்துறை உறுப்பினர்களை வன்னிக்கு மீள அழைத்திருந்தது. திருமண நிகழ்வொன்றிற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, சிவகுமரனை சந்திக்க கிளிநொச்சி நோக்கி பயணமானேன். 


"முகமாலைக்கு வாகனத்தோடு ஆளனுப்புறன், நீ பாஸ் எடுக்காமல் வா" என்று அவன் சொல்லியும் கேட்காமல், முறையாக பாஸ் எடுத்து கிளிநொச்சி போய் சேர, "சொன்னா கேட்கமாட்டாய், போ..போய் நந்தவனத்தில் மினக்கிடு" என்று கடிந்து கொண்டான். 


நந்தவனத்தில் அன்று கடமையிலிருந்த தம்பி நாங்கள் படித்த காலத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்தவர், சுணங்காமல் பாஸ் தந்து அனுப்பினார். அன்று சிவகுமரனோடு பாண்டியன் சுவையகத்தில் நாட்டுக் கோழிக் குழம்போடும் கணவாய்க் கறியோடும் மத்தியான சாப்பாடு சாப்பிட்டேன். 


மத்தியானம் சிவகுமரனின் வீட்டில் பழைய கதைகள் கதைத்துக் கொண்டே, இந்திய இலங்கை அணிகளிற்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தோம். அன்றைய ஆட்டத்தில் ட்ராவிட்டும் தோனியும் இணைந்து கலக்கினார்கள். 


மட்சை பார்த்துக் கொண்டே "மச்சான் அவன் எங்க இருக்கிறானடா, மச்சான் இவன் எப்படி இருக்கிறான்டா, டேய், அந்த நாயை என்னை தொடர்பு கொள்ள சொல்லு" என்று எங்களோடு படித்த நண்பர்களை பற்றி சிவகுமரன் அக்கறையாக விசாரித்தான். 


தேத்தண்ணி குடித்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு, அவனது அலுவல் நிமித்தம் தர்மேந்திரா கலையகத்திற்கு கூட்டிக் கொண்டு போனான். அங்கிருந்த போராளிகளை அதட்டினான், பின்னர் அவர்கள் தோள் மேல் கை போட்டு "என்னடா வெருண்டிட்டயளோ" என்று மறுமுகம் காட்டினான்.


முகமாலை மூடும் நேரம் நெருங்க, நான் விடைபெற ஆயத்தமானேன். என்னை இறுக்கிக் கட்டிப்பிடித்து தழுவி விட்டு, "இனி எப்ப சந்திப்பமோ தெரியாது மச்சான், நீ தொடர்பில இரு" என்று சிவகுமரன் சொன்ன சொற்களில் சோகம் குடிகொண்டிருந்தது. -------------------------------------------------------------------------------------------------------------

2009 ஏப்ரல் மாதம் 6ம் நாள்

நடுச்சாமம் Skype அலற, பதறியடித்து எழும்பினேன்.
"அண்ணா, எல்லாம் முடிஞ்சுது, உங்கட friend சேரலாதன் அண்ணாவும்..." எந்த செய்தியை கேட்கக் கூடாது என்று கர்த்தரை தினமும் மன்றாடினோ, அந்த செய்தி செவிப்பறைகளில் ஓங்கி ஒலித்து, இதயத்தை பிளந்தது.

------------------------------------------------------------------------------------------------------------------

ஊர் வாழ வேண்டுமென்றே,
உன்னத ஆர்வம் கொண்டோர்,
ஏராளமான துயர்,
எண்ணங்கள் தாங்கி நின்றோர்

மாவீரர் யாரோ என்றால்.....

----------------------------------------------------
Friday, 18 November 2016

Dravid

இன்றிரவு கடவுள் தோன்றி, நாளை உன்னோடு அந்த மாதிரி  ருசியான  மட்டன் கொத்துரொட்டி சாப்பிட, உனக்கு விருப்பமான மூன்று பேரை சொல்லு, கொண்டு வந்து நிற்பாட்டுறன் என்று வரம் தந்தால், பதில் டக்கென்று வரும்.


முதலாவது, அநீதிக்கெதிராக போராட துணிவும்,  தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தையும்  உணர்வித்த தேசிய தலைவர் பிரபாகரன். இரண்டாவது கனவானாக (Gentleman) வாழ்வது எப்படி என்று களத்திலும் வாழ்விலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ராகுல் ட்ராவிட் மற்றது எங்கட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


ஜனவரி 11, 1973ல் பிறந்த இரண்டாம் நம்பர் காரனான ராகுல் ஷரத் ட்ராவிட், எனது அபிமான கிரிக்கட் வீரர் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ட்ராவிட் என்னுடைய role model & inspiration.  ட்ராவிட் ஆடுகளத்தில் ஆடும் விதம் அவரது ஆளுமையை வெளிப்படுத்தும். ஆடுகளத்திற்கு வெளியே ட்ராவிட் வாழும் விதம், எளிமையின் எடுத்துக்காட்டு. 


"ட்ராவிட் ஒரு பசையல் மன்னன், நொட்டிக் கொண்டு நிற்பான்டா, அவனைப் போய் நீ..."என்று சொன்ன நண்பர்களும் "ட்ராவிட் இஸ் போரிங்.." சொன்ன தோழர்களும் சூழ இருந்து வசை பாடி அழவைத்தும், ட்ராவிட்டை தொடர்ந்து ஆராதித்தேன். ட்ராவிட்டில் வெளிப்பட்ட கடின உழைப்பும், அணிக்காக விளையாடும் சுயநலமற்ற அர்ப்பணிப்பும், எளிமையான கனவான் தனமும் ட்ராவிட்டில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணமாயின. 


1996ம் ஆண்டு மார்ச் மாதம் உலக கிரிக்கெட் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் படுகேவலமாக இந்திய அணி இலங்கை அணியிடம் தோற்க, அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.  உலக கோப்பையில் சொதப்பிய அழுகுணி காம்பிளியை தூக்கிவிட்டு ட்ராவிட்டை அணியில் இணைத்தார்கள்.


அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான சிங்கர் கிண்ண ஒரு நாள் ஆட்டத்தில், மெல்லிய மீசையோடு, No 4ல் தனது முதலாவது ஆட்டத்தில் களமிறங்கிய ட்ராவிட், மூன்று ஓட்டங்களை எடுத்த நிலையில் முரளியின் பந்துவீச்சில் களுவிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். Leg side போன பந்தை, வினையை விலைக்கு வாங்குவது போல், பந்திற்கு நோகாமல் மென்வலு கொண்டு தட்டி விட, களுவிதாரண ஒரு குருட்டு கட்ச் பிடித்தார்.2000களின் ஆரம்பத்தில் தோளில் ஏற்பட்ட  காயத்திற்கு சிகிச்சை பெற மெல்பேர்ண் வந்திருந்த முரளியோடு சில மணித்துளிகள் கதைக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அப்பொழுது முரளியிடம் ட்ராவிட்-டென்டுல்கர் பற்றி கேட்டபோது "டென்டுல்கரை கழற்றலாம், ட்ராவிட்டை அசைக்க ஏலாது" என்று சொன்னார். (ஓமடா முரளி தமிழில் தான் சொன்னார்.)


1996 ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு எதிராக, கிரிக்கட்டின் புனித பூமியான Lordsல் நடந்த இரண்டாவது  டெஸ்ட் போட்டி தான் கங்குலிக்கும் ட்ராவடிற்கும் முதலாவது டெஸ்ட். முதலாவது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்திடம் தோற்க, பசையல் மன்னன் மஞ்ச்ரேக்கரையும் ஸ்பின்னர் ஜோஷியையும் அணியிலிருந்து தட்டிவிட்டு கங்குலியையும் ட்ராவிட்டையும் களமிறக்கினார்கள். 


மஞ்ச்ரேக்கர் ஆடிய No 3ல் கங்குலி இறங்க, டென்டுல்கர், அஸாருதீன், அஜய் ஜடேஜாவிற்கு பிறகு No 7ல் ட்ராவிட் களமிறங்கினார். ட்ராவிட் இறங்கும் போது அணியின் நிலை 202/5, மறுமுனையில் கம்பீரமாக கங்குலி கலக்கிக் கொண்டிருந்தார். தனது முதலாவது டெஸ்ட் ஆட்டத்திலேயே 131 ஓட்டங்களை எடுத்து கங்குலி 296/6ல் ஆட்டமிழந்தார். 


வியர்த்து விறுவிறுத்து, நொட்டி, தட்டி, ஓடி ஓடி, சிங்கிள் சிங்கிளா எடுத்து, குருவி சேர்ப்பது போல் ரன்கள் குவித்து, கும்ப்ளேயோடும்  சிறிநாத்தோடும் மாம்பேரியோடும் மல்லுக்கட்டி,  9வது விக்கெட்டாக ட்ராவிட் ஆட்டமிழக்கும் போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 419/9. ட்ராவிட்  95 ஓட்டங்கள் அடிக்க எடுத்துக் கொண்ட பந்துகள் 267. உலக கிரிக்கட் அரங்கிற்கு தனது வரவை அறிவித்த இன்னிங்ஸாக, ட்ராவிட்டின் முதலாவது லோர்ட்ஸ் டெஸ்ட் இன்னிங்ஸ் அமைந்தது. 


ட்ராவிட்டின் அப்பா ஒரு Jam தொழிற்சாலையில் முகாமையாளராக வேலை செய்ததால், ட்ராவிடிற்கு Jammy என்பது பட்டப் பெயராகியது. அதைவிட Wall, Mr. Dependable என்று பல பெயர்களால் ட்ராவிட் விமர்சிக்கப்படுவார்.  சச்சின் டென்டுல்கர் என்ற கடவுளிற்கே ட்ராவிட் எனும் சுவர் தான் அரண் (even the god needs wall's protection) என்று ட்ராவிட் ரசிகர்கள் கிலாகிப்பார்கள். நட்சத்திரங்கள் நிறைந்த அன்றைய இந்திய கிரிக்கட் அணி, வெளிநாடுகளில் ஈற்றிய பல வெற்றிகளின் கதாநாயகன், ட்ராவிட் தான். 


ட்ராவிட் bat பண்ணும் போது விளையாடும் cover driveல் வெளிப்படும் லாவகத்தையும் square cut அடிக்கும் போது வெளிப்படும் கம்பீரத்தையும் காண கண்கோடி வேண்டும். டென்டுல்கரோடும் லக்‌ஷமனோடும் கங்குலியோடும் இணைந்து ஆடும் போது பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


2002ம் ஆண்டில், இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட மும்மூர்த்திகளான ட்ராவிட்(148), டென்டுல்கர்(193), கங்குலி(128) மூவரும் சதிராடி சதங்கள் அடித்து, 16 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியை இங்கிலாந்தில் வெற்றிவாகை சூடவைத்த    Headlingly டெஸ்டை  இந்திய கிரிக்கட் ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த வெற்றிக்கு அடித்தளம் இட்டது ட்ராவிட்டின் 148 என்று சொன்னால் மிகையாகாது. 


அதே போல் 2006ல் மேற்கிந்தியத்தீவுகளிற்கெதிராக சப்ரீனா பார்க்கில் தனது தடுத்தாடும் (defensive) திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்து ட்ராவிட் (81,68) இந்திய அணிக்கு ஈட்டித்தந்த சரித்திர முக்கியம் வாய்ந்த வெற்றியையும் குறிப்பிட்டேயாக வேண்டும். 2001ல் தென்னாபிரிக்க அணிக்கெதிராக போர்ட் எலிஸபெத்தில் இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய ட்ராவிட்டின் 87 ஓட்டங்களும் ட்ராவிட்டின் தடுத்தாடும் ஆற்றலிற்கு கிடைத்த மகுடம். 


ட்ராவிட் ஆடிய அதகளங்கள் மொக்கை அணிகளிற்கெதிரானவையல்ல. வோர்னும் மக்ராவும் கலக்கிய ஒஸ்ரேலிய அணிக்கெதிராக  கொல்கத்தாவில் அடித்த 180ஐயும்,  அடலெய்டில் கிலப்ஸியோடும் மக்கில்லோடும் மல்லுக்கட்டி நொறுக்கிய 233ஐயும் கிரிக்கெட் வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். ராவல்பிண்டியில் அக்தரையும் சமியையும் துணிவுடன் எதிர்கொண்டு குவித்த 270ஐ பாக்கிஸ்தான்காரன் மறந்தும் மறக்க மாட்டான். 

தொடரும்...


Saturday, 12 November 2016

நல்லதோர் வீணை செய்து..
"நல்லதோர் வீணை செய்து, அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ"

கெளதம் மேனனின் "அச்சம் என்பது மடைமயடா" படத்தை பார்த்து விட்டு வரும் போது இந்த பாரதியார் பாடல் தான் நினைவில் நிழலாடியது. மீண்டும் சிக்கல் மன்னன் சிம்புவோடு ரிஸ்க் எடுத்து கெளதம் மேனன் இணைந்து படைத்த இந்த படைப்பு, சிம்பு படங்களிற்கே உரித்தனான இழுத்தடிப்புகளையும்  தடைகளையும் தாண்டி திரைக்கு வந்திருக்கிறது. ரஹ்மானின் இசையிலமைந்த படத்தின் அருமையான இரண்டு பாடல்கள்  ஏற்கனவே படத்தின்பால் எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தன.

"அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்

படத்தின் முதல் பாதி கெளதம் மேனனின் அதே ஃபோர்மிலவில் விளைந்த நல்ல காதல் கவிதை,  இருதடவை காதலில் தோற்று, love philosophy வசனம் பேசிக் கொண்டு திரியும் சிம்பு, மஞ்சிமிவை கண்ட கணம் முதல் திரையில் விரியும் காதல் காட்சிகள், கவிதை.  எங்களின் உதடுகளில் புன்னகையை வரவழைக்கும் காட்சிகளும் வசனங்களும், மனதார ரசிக்கவும் வைக்கிறது. 

"ஆறும் கரையும் அம்பும் வில்லும்
பாட்டும் உறையும் நானும் அவளும்"

காதலை அழகாக திரையில் வடித்து, அற்புதமான வசனங்களால் செதுக்கி,  அதை  ரசிகரகளும் அனுபவிக்க வைக்கும் வன்மை அறிந்தவர் கெளதம் மேனன். "அவ அப்படியே என்னை சாப்பிட்டாடா" என்று சிம்பு சொல்லும் இடம், லவ்லி. பாரதிதாசனின் "அவளும் நானும்" கவிவரிகளை அழகாக பாடலாக்கிய ரஹ்மானை மெச்சியே ஆகவேண்டும்


"நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்"

பைக்கில் சிம்புவும் மஞ்சிமாவும் பயணம் தொடங்க, ரஹ்மான் எங்களை "பறக்கு ராசாளியில்"  பயணிக்க வைக்கிறார். தென்னிந்தியாவின் அழகிய கரையோரங்கள் கண்களைக் கவர, ரஹ்மானின் இசையும் கவிஞர் தாமரையின் அழகு தமிழ் வரிகளும் நம்மையும் காதலை உணரவைக்கின்றன. பாடலின் இடையில் வரும் அருணகிரிநாதரின் தேவார வரிகளின் திணிப்பு புதுமை.

"என் தோள் மீது நீ
குளிர் காய்கின்ற தீ"

பைக் பயணத்தின் இறுதிக் கணங்களில் திரைக்கதையில் திருப்பம் வந்து, காட்சிகள் ரணகளமாகும் போது, " தள்ளிப் போகாதே" என்ற ஏற்கனவே ஹிட்டான பாட்டை வைக்கும் துணிவு கெளதம் மேனனிற்கு மட்டும் தான் வரும். ஒரு பக்கம் ஒரு ரத்தம் சொட்டும் கொடிய காட்சி, மறுபக்கம் காதல் சொட்டும் ரோமான்டிக் பாடல் என்று, அந்த காட்சியில் அவ்வளவு நேரமும் காதலை ரசித்துக் கொண்டிருந்த எங்கள் உதட்டிலிருந்த புன்னகை மறைந்து இதயம் கனக்க தொடங்குகிறது. 

"கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே..

கை நீட்டி உன்னைத் தீண்டவே பார்த்தேன்.."


படத்தின் மிக முக்கியமான விஷயம் படத்தின் இறுதிவரை சொல்லாமலே மறைக்கப்படும் சிம்புவின் பெயர். அந்தப் பெயரை கேட்டாலே.. வேண்டாம் திரையில் பார்த்துத் தான் அதை அனுபவிக்கணும்.


படத்தின் முதல் பாதி கவிதை என்றால், இரண்டாம் பாதி உண்மையிலேயே வதை. தேவையில்லாமல் நீண்டு போகும் வன்முறைக் காட்சிகளில், படத்தின் முன்பாதியில் செதுக்கிய நல்லதோர் வீணையை தூக்கி குப்பையில் போட்டது போலாகின்றது. 


ப்ரேக் அறுந்து போன Royal Enfield மோட்டர் பைக் மாதிரி பயணிக்கும் திரைக்கதையை, எப்படி முடிப்பது என்று தெரியாமல் கெளதம் மேனன் திணறியது போலுள்ளது.

அச்சம் என்பது மடைமயடா:
முதல் பாதி: நல்லதோர் வீணை
இரண்டாம் பாதி: குப்பையில் வீணை

உறுதி
அடுத்த முறை இந்தியா போகும் போது கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் பார்த்தேயாக வேண்டும் ! Friday, 11 November 2016

வேலை அமைவதெல்லாம்
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பது எவ்வளவு உண்மையோ, வேலை அமைவதும் ஆண்டவன் அருளும் வரப்பிரசாதம் என்பது உண்மையிலும் உண்மை. வேலை தேடிக்கொண்டு இருக்கும் போதும், விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கும் போதும், நேர்முகத் தேர்வுகளிற்கும் aptitude testகளிற்கும் தோன்றும் போதும், இந்த வேலை தான் எனக்கு வாய்க்க போகிறதா என்று மனம் அல்லாடும். அல்லல் நிறைந்த அந்த பயணத்தின் இறுதியில் கிடைக்கும் வேலை, ஆண்டவன் அளித்த வரப்பிரசாதம் என்று மனம் ஏற்றுக் கொண்டால், வாழ்வு வளம் பெறும். 


கொழும்பில் உயர்தர சோதனை எழுதிவிட்டு, CIMA படிக்க தொடங்கின காலம் முதல் வேலை தேடும் படலமும் ஆரம்பமாகியது. 80களின் இறுதியில் நடந்த ஜேவிபி பிரச்சினையால் கம்பஸ் தொடங்க எப்படியும் இரண்டு வருடமாவது ஆகும்.  அந்த இருவருட இடைவேளைக்குள் வேலை ஒன்றை தேடி CIMAவும் முடிக்க வேண்டும் என்று மனக்கணக்கு போட்டேன்.  வேலை எடுப்பதற்கு  influenceம் அதிர்ஷ்டமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைத்த கொடிய காலங்கள் அவை.


Daily Newsல் வந்த Holiday Inn ஹோட்டலில் Accounts Assistant வேலைக்கு, கையால் எழுதிய curricualam vitaeயும் பள்ளிக்கூடத்தில்  வாங்கிய character certificateஐயும் சேர்த்து அனுப்பி விண்ணப்பிக்க, interviewற்கு வரச் சொல்லி கடிதம் வந்தது. Interviewற்கு போனேன், வந்தேன், வேலை கிடைக்கவில்லை, refereeயா போட்டது எங்கட கொழும்பு இந்து பினாவை (பிரன்ஸிபல்).


Coopersல் auditற்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்று அறிந்து விண்ணப்பிக்க, மீண்டும் interview. இந்த முறை வலு நம்பிக்கையோடு interviewஐ கையாள, "கம்பஸ் தொடங்க என்ன செய்ய உத்தேசம்" என்ற கண்ணிவெடிக் கேள்வியில் Coopers கனவு தகர்ந்தது. Coopersன் Management Consulting பிரிவில் வேலை செய்த எங்களுடன் படித்த அருண் மூலம், அந்தப் பிரிவில் இணைய ஒரு case study பரீட்சைக்கு தோற்றி, தோற்றுப் போனேன். 


HNBயில் Banking course செய்தால் Bankல் சுளையாய் சம்பளத்தோடு வேலை கட்டாயம் கிடைக்கும் என்று கேள்விப்பட, பொரளையில் கணத்தைக்கு பக்கத்தில் அமைந்திருந்த HNB training centreல், நண்பன் வாதுலனோடு Banking course செய்தேன். Course முடித்து நடந்த இறுதிப் பரீட்சையின் முடிவில் எனக்கு வெற்றிக்கிண்ணமும் வாதுலனிற்கு வேலையும் கிடைத்தது. வெற்றிக்கிண்ணம் தந்த வங்கி, எனக்கு ஏன் வேலை தரவில்லை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. 


வேலை தேடும் படலம் தொடர்ந்து தோல்வியை தழுவிக்கொண்டிருக்க, CIMA பரீட்சைகளில் கிருஷாந்தனின் தோளில் தொற்றிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தேன். CIMA Stage 4ற்கு வர, வேலை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற டென்ஷன் பரீட்சை டென்ஷனிற்கு இணையாக வாட்டியது. CIMA Finals முடித்ததும் பஞ்சிகாவத்தையில் உள்ள ஒரு இரும்புக்கடை ஒன்றில்  Bookkeeper  வேலை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்து அங்கிள் ஒருத்தர் கடுப்பேற்றியிருந்தார். MBBS கடைசிப் பரீட்சை எழுதினவனிற்கு,  நர்ஸ் வேலை எடுத்து தாரன் என்று சொன்னால் எப்படியிருக்குமோ, அதே மாதிரி தான் இதுவும். 


CIMA Stage 4 பரீட்சைக்கு சில கிழமைகளிற்கு முன்னர், Ernst & Youngல் தோற்றிய interviewல் வெற்றி கிடைத்தது. நவம்பரில் பரீட்சை முடிய, யாழ்ப்பாணம் போய் விட்டு வந்து, புத்தாண்டில் தம்மை தொடர்பு கொள்ளுமாறும், மாதம் 2,000 ரூபாய் சம்பளம் என்றும் Ernst & Young நிறுவனத்தினர் வாக்குறுதி அளித்தார்கள். 


யாழப்பாணம் போற உற்சாகத்தோடும், வேலை கிடைத்த நிம்மதியோடும் CIMAவின் கடைசிப் பரீட்சை பரவசமாய் எழுதினேன். ஒரு மாதம் யாழ்ப்பாணம் போய் திரும்ப, CIMA விரிவுரையாளர் சமன் கிரிவத்துடவ உருவில் குழப்பம் காத்திருந்தது. சமன் ஒரு நல்ல விரிவுரையாளர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதரும் கூட. முன்னாள் ஜேவிபிகாரனான சமன், யாழ்ப்பாண பெடியளில் அதீத அக்கறையும் அன்பும் பாராட்டுவார். 


"I say, don't go to this stupid audit job, I will get you a job with 10,000 rupees salary, give me a copy of your CV" என்று சமன் மண்டைக்குள் பேராசையை விதைத்தார். 


வெள்ளவத்தை மார்க்கெட்டிற்கு எதிரிலுள்ள ஒரு கொமியூனிகேஷனில், சுதர்ஷன் அண்ணாவோடு போய், 100 ரூபாய் கொடுத்து, ஒரு CVஐ கொம்ப்பியூடரில் type பண்ணினோம். அதை ரெண்டு போட்டோ கொப்பி எடுத்து,  CR கொப்பிக்குள் மடியாமல் வைத்துக்கொண்டு, சமனிடம் CV கொடுக்க IASற்கு போனோம். IAS staff roomல் சமன் இல்லை, முரளி மட்டும் நின்றார். 


முரளி, ரஞ்சனின் அண்ணா, எங்களின் CIMA விரிவுரையாளர். "என்ன இங்கால பக்கம்" என்று முரளி பம்பலா விசாரிக்க, நசுங்கிக் கொண்டே வந்த நோக்கத்தை சொன்னோம். "ஓ அப்படியா, அப்ப எனக்கும் ஒரு CV தாரும், ஏதாவது வேலை வந்தா சொல்லுறன்". Aitken Spenceல் வேலை செய்யும் முரளி தானாக உதவிக்கு வந்தார். "இவர் எங்க கிழிக்கப் போறார், சமன் சிங்கன் 10,000 ரூவாய் வேலை வாங்கித் தரப் போறான்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, போட்டோ கொப்பி ஒன்றை முரளியிடம் கொடுத்தேன். கொம்புயூட்டர் ஒரிஜினல் சமனிற்கு சமர்ப்பித்தேன்.


அடுத்த கிழமை ஒரு நாளிரவு மோட்டார் சைக்கிளில் வீட்ட வந்த ஒருத்தர், Aitken Spence நிறுவன கடிதம் ஒன்றை தந்துவிட்டு சென்றார். அந்த கடிதத்தில் அடுத்த நாள் காலை Vauxhall வீதியில் அமைந்திருந்த அவர்களது Finance Departmentல் interviewற்கு  வருமாறு அழைத்திருந்தார்கள். என்ன வேலை, யார் மூலம் அழைத்தார்கள் என்ற விபரம் ஒன்றும் தெரியாது, தொலைபேசி வசதி பரவாத அந்த காலத்தில் யாரையும் தொடர்பு கொண்டு அறியவும் வாய்ப்பிருக்கவில்லை 


அடுத்த நாள் காலை, என்னிடம் இருந்த ஒரே திறமான ஷேர்ட்டான, டுபாயிலிருந்து பபா சித்தப்பா கொண்டுவந்த இளநீல ஷேர்ட்டையும், யாழ்ப்பாணம் போன போது கொண்டு வந்திருந்த அப்பாவின் பழைய நீல நிற டையையும் கட்டிக் கொண்டு, ஆறு தரம் சப்பாத்து பொலிஷ் பண்ணிவிட்டு ரெண்டு பஸ் ஏறி, வியர்க்க விறுவிறுக்க Aitken Spence அலுவலகத்தை அடைந்தேன்.  கண்களை குறுக்கிக் கொண்டும் மீசையை தடவிக் கொண்டும் வில்லத்தனமான பார்வையோடும், தேவன் டீ மெல்லின் வலு கடினமான கேள்விகளை எங்கிருந்தோ வந்து குடிகொண்ட அசட்டு நம்பிக்கையுடன் எதிர்கொண்டேன்.


Aitken Spenceல் புதிதாக உருவாகியிருக்கும் Corporate Plannig Unitல், Management Trainee வேலைக்கு தான், என்னை நேர்முகம் கண்டு கொண்டிருந்தார் தேவன் டீ மெல்.  முரளியின் டீமில் அமைந்திருந்த அந்த வேலைக்கு  முரளியின் சிபார்சிற்கமையவே என்னை interviewற்கு அழைத்திருந்தார்கள். CIMA முடிக்கும் யாருக்கும் அது ஒரு Dream Job. 


நேர்காணல் முடிவில் தேவன் கேட்டார் "how do you know Mr. Thurairajah?". துரைராஜா IASல் எங்களிற்கு Financial Management படிப்பித்த
 CIMA விரிவுரையாளர், இலங்கை வங்கியின் முன்னாள் DGM, சந்திரிக்காவிற்கு கணித ட்யூஷன் கொடுத்தவர், பல நிறுவனங்களில் இயக்குனர், வகுப்பிலும் வெளியிலும் தமிழ் பொடியளோடு மட்டும் அன்பாக பழகுவார், என்னுடைய CVயில் அவர் referee. 


"My dad used to work for Mr. Thurairajah, he is a fine gentleman" தேவனின் வார்த்தைகளில் முதல் தடவையாக கொஞ்சம் கனிவு தெரிந்தது. 


அடுத்த கிழமை அதே மோட்டார் சைக்கிள், இன்னுமொரு Aitken Spence கடிதம், இம்முறை இரண்டாவது நேர்முகம் Aitken Spenceன் Finance Director லலித் விஜயரத்னவுடன். லலித் அவருடைய இளமை காலங்களில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரன்.  கிரிக்கட் பற்றி கன நேரமும் கதைத்து விட்டு, கம்பஸ் படிப்பை கட்டாயம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி, தோளில் தட்டி வாசலிற்கு வந்து வழியனுப்பும் போது சொன்னார்

 "Son, you have been selected for the third interview with the Board, you will soon get a letter from our HR director" கண்களில் வடிந்த கண்ணீரை
துடைக்காமலே அவர் கரம் பற்றினேன் "thank you Mr. Wijeratne"


சனாதிபதி மாளிகைக்கு அருகில் இருந்த Aitken Spenceன் தலைமையகத்தில் Board roomற்குள் நுழைய புல்லரித்தது. பத்திரிகைகளில் வாசித்தறிந்த வியாபார ஜாம்பாவான்களான MA Mack, R சீவரட்ணம், GC விக்கிரமசிங்கவுடன் கைகுலுக்கிய அந்த பொழுது, ஆண்டவன் கொடுத்த வரம் அல்லாமல் வேறொன்றுமில்லை. Aitken Spence நிறுவனத்தின் சம்பிரதாயத்திற்கிணங்க நடந்த அந்த மூன்றாவது நேர்முகத் தேர்வு, பத்து பதினைந்து நிமிடங்களே நீடித்தது. 


February 6, 1995ம் ஆண்டு இலங்கையில் அந்த காலப்பகுதியில் trend setter ஆக அமைந்த Corporate Plannnit Unitல் பந்தாவான Management Trainee என்ற  titleஓடும் சுளையாய் மாதம் 7,500 சம்பளத்துடனும் வேலையில் இணையும் போது, கடந்த வந்த தோல்விகள் தந்த வேதனையும், பட்ட அவமானங்கள் தந்த வலிகளையும் நினைவில் நிறுத்திக் கொண்டேன், குறிப்பாக அந்த பஞ்சிக்காவத்தை இரும்புக்கடை வேலையை மறக்க மனம் மறுத்தது. 


எங்கிருந்தோ வந்து CV கேட்டு வாங்கிய முரளியும்,  என்னைப்பற்றி தேவனிற்கு நாலு நல்ல வார்த்தை சொல்லி வேலை கிடைக்க வைத்த துரைராஜாவும், கடவுள் அனுப்பிவைத்த தூதுவர்களாகவே இன்றுவரை எனக்கு தெரிகிறார்கள்.

"வேலை அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்"


Friday, 4 November 2016

டுபாயில்..
போன வருஷம் மகர ராசிகாரன்களிற்கு சனிபகவான் பதினொன்றாம் வீட்டிற்கு இடம்பெயர, இந்த வருடம் எனக்கு சில அருமையான பயணங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்தது. வேலை நிமித்தம் டுபாய்க்கு இது இரண்டாவது பயணம், போன மார்ச் மாதம் போன போது அப்படியே சுத்தி, கொழும்பு தொட்டு, யாழ்ப்பாணத்தில் இறங்கி Big Match பார்த்து, பம்பலடித்து விட்டு வந்தாச்சு.


எங்கட கம்பனியின் டுபாய் பிரிவிற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட பாக்கிஸ்தான்காரனான நிதிக் கட்டுப்பாட்டாளரை  பயிற்றுவிக்க போனமுறையும், அவர் சில குழப்படிகள் விடுவதால், "அவரை ஒருக்கா போய் வெருட்டி விட்டு வா" என்று இந்த முறையும் என்னுடைய பொஸ்,  ப்ளேன் ஏற்றி அனுப்பி வைத்தார். பாக்கிஸ்தான் சிங்கன் ஒரு சோம்பேறி, போனமுறை போன போது அவரை வேலை வாங்க நான் பட்டபாடு வையகம் அறியாது.---------------------------------------

நவம்பர் மாதத்தின் முதலாவது நாளை கிறிஸ்தவர்கள் அனைத்து புனிதர்கள் தினமாக கொண்டாடுவார்கள். அதற்கடுத்த நாள் இறந்தவர்களை நினைவு கூறும் மரித்த விசுவாசிகளின் தினம் (All souls Day). நவம்பர் மாதம் முழுக்க நம்மை விட்டு பிரிந்தவர்களின் நினைவுகளை நினைவு கூறும் மாதம் தான். 


நவம்பர் 2, பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவுதினம். நவம்பர் 11  (Armistice Day) முதலாவது உலகயுத்தத்தம் நிறைவடைந்த நாளில், யுத்தங்களில் மரித்த இராணுவ வீரர்களின் நினைவு நாள், அதன் ஞாபகார்த்தமாக பொப்பி மலர்களை சட்டையில் அணிவார்கள். நவம்பர் 27ல்,  தேச விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்த மறவர்களை நினைவேந்த,  தமிழர் தேசம் கண்ணீர் மல்க எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்.


மரித்த விசுவாசிகளிற்காக ஒருக்கா சேர்ச்சிற்கு தலையை காட்டிவிட்டு,  இரவு ஷோவாக நயன்தாராவின் "காஷ்மேரா" படம் பார்க்கப் போக திட்டம் தயாரானது. ஹோட்டலிற்கும் தியேட்டருக்கும் இடையில் டுபாய் மரியன்னையின் ஆலயம் இருப்பதை கூகிள் ஆண்டவர் காட்டிக்கொடுக்க, டாக்ஸிக்காரனிடம் சேர்ச் இருக்கும் கூகிள் mapஐ காட்டினேன். "Oh St. Mary's Church... I know I know" டாக்ஸிக்காரன் பறந்தான். சேர்ச்சை அண்மித்ததும் டாக்ஸிக்காரனை ஒரு பத்து நிமிஷம் waitingல் நிற்க சொல்லி கேட்க, அவன் பணிவாக மறுத்து விட்டான். 


ஒரு பெரிய மதிலிற்கு பின்னாலும் ஒரு பள்ளிவாசலுக்கு அடுத்தும் இருந்த ஆலயத்தை நோக்கி நடக்க தொடங்க, ஆராதனை முடிந்து பெருந்திரளாக மக்கள், ஆலயத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஆலயத்தின் பின்கதவால் உள்நுளைய ஆலயம் நிறைய மக்கள், எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. அமைதி நிறைந்த அந்த பெரிய ஆலயத்தில் இருக்கை நிறைய பக்தர்கள். வெள்ளை உடையணிந்த தொண்டர்கள் ஆங்காங்கே இருந்த வெற்றிடங்களில் புதிதாய் வந்தவர்களை அமரச்செய்து கொண்டிருந்தார்கள். ஒரு தூண் மூலையில் நிற்க மட்டும் இடம் கிடைத்தது. கொஞ்ச நேரத்தில் ஆங்கிலத்தில் செபமாலை சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லோரும் சத்தமாக செபிக்க அந்த ஆலயத்தில் ஒருவித தெய்வீகத்தனம் குடிகொண்டது. "அருள்நிறைந்த மரியாயே" செபம் ஆங்கிலத்தில் சொல்ல சாத்தான் நாவைத் தடுக்க, கூகிள் ஆண்டவரை துணைக்கழைத்து ஜெபத்தில் இணைந்தேன். 


டுபாய் மரியன்னை ஆலயத்தின் சூழல், 1980களில் பீட்டர் மாமா வீட்டு முன்றலில் செபமாலை சொல்வதை நினைவுபடுத்தியது. பீட்டர் ரட்னசபாபதி ஒரு ஜொனியன், 40களில் பரி யோவான் கிரிக்கட் அணித்தலைவர், யாழ்ப்பாணத்தில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர். இரவு நேரங்களில் அவரது வீட்டு முன்றலில் செபமாலை சொல்லப்படும், செபமாலை சொல்ல தொடங்க முதல் ஆளனுப்பி எங்களை கூப்பிடுவார்.  


டுபாய் மரியன்னை ஆலயத்தில் செபமாலை சொல்லி முடிய யாரும் அசையவில்லை, புதிதாய் வந்தவர்களால் ஆலயம் நிரம்பிக் கொண்டே இருந்தது, எனக்குள் இருந்த சாத்தான் விளையாட்டைக் காட்டத் தொடங்கியது. "டேய் எட்டரைக்கு நயன்தாராப் படம், இப்ப போனியென்றாத் தான் படம் பார்க்கலாம்" என்று சாத்தான் மனதை குழப்பத் தொடங்கியது. 


ஓரிரு இருமல் சத்தங்களும், aircondition இயங்கும் சத்தத்தையும் தவிர அமைதி குடிகொண்ட அந்த ஆலயத்தில், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு "சாத்தானே அப்பாலே போ" என்று ஜெபிக்க தொடங்கினேன். சரியாக 7:30ற்கு வழிபாடு தொடங்கியது. வழிபாட்டின் வரவேற்பு பாடல் மனதை கட்டிப் போட, சாத்தானும் அப்பாலே போனது.
  1. I’ve wasted many precious years,
    Now I’m coming home;
    I now repent with bitter tears,
    Lord, I’m coming home.

வழிபாட்டை பக்திமயமாக நெறிபடுத்திய அருட்தந்தை, வேதாகமம் வாசித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த பள்ளிவாசலிலிருந்து ஒலிபெருக்கியினூடாக ஒலித்த இஸ்லாமிய பிரார்த்தனையின் ஒலி  ஆலயத்தை நிறைத்தது. அதை சற்றும் பொருட்படுத்தாது, அருட்தந்தை வேதாகமம் வாசிக்க, பக்தர்களும் அமைதியாக செவிமடுத்தார்கள். வழிபாட்டில் டுபாயின் மன்னரிற்காகவும் பிரார்த்திர்கள். 


"ஒருவருக்கொருவர் சமாதானத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்" என்ற ஃபாதர் சொல்ல, ஒஸ்ரேலிய ஞாபகத்தில் பக்கத்தில் நின்ற மலையாள சேட்சிக்கு கைலாகு கொடுக்க கையை நீட்டினேன். அவர் புன்முருவலுடன் கையை கூப்பினார். நற்கருணைக்கான நேரம் வர, மீசை வைத்த மலையாள சோட்டான்கள் நற்கருணை கிண்ணத்தை இரு கைகளாலும் பொத்தி பிடித்துக் கொண்டு வரிசையாக சென்று ஆலயம் முழுவதும் பரந்து நின்று பக்தர்களிற்கு நற்கருணை பரிமாறினார்கள்.

போனவருடம் பாலித் தீவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மயூரனும் மைக்கலும் கொலைக்களத்திற்கு செல்லும் போது பாடிய  Amazing Grace என்ற பிரபல கிறிஸ்தவ துதிப்பாடலை பாடினார்கள். அதே பாடலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு மரணச் சடங்கில் பாட, Amazing Grace மீண்டும் ஒரு வலம் வருகிறது. டுபாய் மரியன்னை ஆலய வழிபாட்டிலும், Amazing Grace இறுதிப் பாடலாக அமைந்தது.

Amazing Grace, how sweet the sound,
That saved a wretch like me.
I once was lost but now I'm found,
Was blind, but now I see.

ஒரு இஸ்லாமிய நாட்டில், ஒரு கிறிஸ்தவ வழிபாட்டில் கலந்து கொண்ட அனுபவம் மெய்யாகவே மெய்சிலிர்க்க வைத்தது. அதுவும் ஆலயம் நிறைந்த மக்களுடன், பக்தி மயான சூழலில், பக்கத்திலிருந்த பள்ளிவாசலிலிருந்து சத்தமாக ஒலித்த இஸ்லாமிய ஆராதனைக்கு மத்தியில், இறந்த அனைத்து ஆத்துமாக்களிற்கான வழிபாட்டில் கலந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம், ஆசீர்வாதம்.

Friday, 28 October 2016

பரி யோவானின் மைதானம் 2
பரி யோவானின் Primary school பொறுப்பாளராக துரைச்சாமி மாஸ்டர் இருந்த காலத்தில் இடைவேளை நேரத்தில் விளையாடக் கூடாது என்ற கொடுமையான விதி கடைபிடிக்கப்பட்டது. ஒளித்து பிடித்து விளையாடினவன், ஓடிபிடிச்சு விளையாடினவன், மாபிள்ஸ் அடிச்சவன் என்று சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே துரைச்சாமி மாஸ்டரின் அறையில் அடிவாங்க அணிவகுக்க, கிரிக்கெட் விளையாடி போர்க்குற்றம் இழைக்க யாரும் துணியவில்லை.


1980களின் ஆரம்ப காலங்களில் பாடசாலை பின்னேரம் மூன்றரை மணிவரை நடைபெற்றது. இடையில் பத்துமணிக்கு ஒரு சிறிய இடைவேளை, பின்னர் மதியம் ஒரு மணிநேரம் இடைவேளை விடப்படும். இந்த இரு இடைவேளைகளிலும் பரி யோவான் மைதானத்தில் மத்திய பிரிவு மாணவர்களின் வகுப்புகளிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அரங்கேறும்.  வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை கிடுகிடுவென சாப்பிட்டு விட்டு, பரி யோவானின் மைதானத்தில் மத்திய பிரிவு அண்ணாமார் விளையாடும் கிரிக்கெட் மட்ச் பார்க்க பறப்போம். 


ஒரே நேரத்தில் நாலைந்து மட்ச்கள் நடக்கும். ஒரு பக்கத்தில் சூட்கேஸுகள் விக்கெட்டுகளாக, அதை சுற்றி பார்வையாளர்கள் சூழ்ந்து நிற்க, மைதானம் நிரம்ப fielders சூழ, எங்கிருந்தோ வந்து போலர் பந்து வீச, பட்ஸ்மன் விளாசுவார். நாங்கள் Primary school படிக்கும் காலத்தில், சதீசனின் வகுப்பு விளாயாடும் பிட்சிலும், சஞ்சீவன்-அகிலன் விளையாடும் பிட்சிலும் தான் பார்வையாளர்கள் அதிகமாக இருப்பார்கள். 


நாங்கள் Middle schoolற்கு வர, நாட்டு பிரச்சினை காரணமாக பாடசாலை நேரம் சுருங்கி, இரண்டு மணிக்கே பாடசாலை முடிவடைய தொடங்கியது. 
எங்களிற்கு கிரிக்கெட் விளையாட கிடைத்த இடைவேளை நேரமும் சுருங்கியது. இடைவேளை மணியடித்ததும் ஓடி வந்து, பிட்ச் பிடித்து, சூட்கேஸ் வைத்து, பழையபடி field set பண்ணி, முதல்நாள் விட்ட இடத்திலிருந்து ஆட்டத்தை தொடர்ந்து, இடைவேளை முடிய மணியடிக்க ஓடிப்போய் தண்ணி குடித்துவிட்டு, Prefect அண்ணா வரமுதல் வகுப்பிற்கு பறந்து, கதிரையில் இருக்க, பக்கத்திலிருக்கும் நல்லவன் ஸ்கோர் கேட்ப்பான். நாம் ஸ்கோர் சொல்லுவதை மட்டும் கண்ட மொனிட்டர் சனியன், பெயரை கரும்பலகையில் எழுதுவான். பிறகென்ன, அடுத்த வகுப்பெடுக்க வரும் சரா மாஸ்டரின் பிரம்பு குxxயை பதம்பார்க்கும்.

-----------------------------------------------------

அண்மையில் Big Match பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்த போது மீண்டும் பரி யோவான் மைதானத்தில், பாடசாலை இடைவேளை நேரம் கிரிக்கட் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நிகழ்வுகளைப் பதிவாக்கிய "மீண்டும் பள்ளிக்கு" என்ற பதிவிலிருந்து

"பழைய சைக்கிள் பார்க் தாண்டி, மைதானத்திற்குள் காலடி வைக்கவும், இடைவேளை மணியடிக்கவும் சரியாகவிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த மாணவர்கள், சூட்கேஸை விக்கெட்டுகளாக வைத்து பிட்ச் பிடித்து, கிரிக்கட் விளையாட தொடங்கினார்கள். சில நிமிடங்களில் மைதானம் நிறைய மாணவர்கள், ஒரே நேரத்தில் ஆறேழு கிரிக்கட் மட்ச்கள்.

அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே..

"டேய் ஜூட், ஏலுமேன்றா என்னை அவுட்டாக்கு" ஆதி சவால் விட்டான்.

"தம்பி, ஒருக்கா எங்களை விளையாட விடுங்கோ" ரோய் பிரதீபன் மிரட்டலாக வேண்டுகோள் வைத்தான்.

"இந்தாங்கோ அங்கிள்" 

"அங்கிளோ, அடி....அண்ணாவென்று சொல்லடா" பந்து தந்த தம்பி பயந்தே போனான்.

பந்தை கையில் எடுத்து கொண்டு திரும்பி பார்த்தால், அந்த நெடிய மரமும், தண்ணீர் தாங்கியும், தண்ணீர் குடிக்கும் பைப்புகளும், பஞ்சலிங்கம் மாஸ்டர் வீடும் நினைவில் நிழலாட, மரத்திற்கு கீழே கச்சான் விற்கும் ஆச்சியும், ஜஸ்கிரீம் விற்கும் சிவகுருவும் கண்முன் தெரிந்தார்கள்."

------------------------------------------------------


இரண்டாம் தவணை ஆரம்பத்தில், பரி யோவான் மைதானம் மெய்வல்லுனர் போட்டிகளிற்கான களமாக அவதாரம் எடுக்கும். சேவியர் மாஸ்டரும், பின்னாட்களில் டோனி கணேஷன் மாஸ்டரும் வழிநடத்த மணியும் செபஸ்ரியம்பிள்ளையும், மைதானத்தை சுற்றி 300 மீட்டர் tracksற்கு சுண்ணாம்பு கோடு இடுவார்கள். Dining hall பக்கமிருந்து தொடங்கும் 100m track, கிரிக்கெட் பிட்சை ஊடறுத்து கம்மாலை கம்பஸடியில் முடியும்.  Scoreboardற்கு முன்னாள் high jump பிட்சும் Paul vault பிட்சும் உருவெடுக்கும். Physics labற்கு முன்னால்  shot putற்கும், Fleming hostelற்கு முன்னால் javelline throwவிற்கும், களங்கள் தயார்படுத்தப்படும். 


மூன்றாம் தவணை மழையில் சுண்ணாம்புக் கோடுகள் அழிய, உதைபந்தாட்டத்திற்கு goal postகள் நடப்படும்.  Robert Williams மண்டப பக்கமாகவும் Principal bungalow பக்கமாகவும் அவை எழுப்பப்படும். 3.30ற்கு u15ற்கு தொடங்கும் போட்டிகள் 5 மணியளவில் u19ற்கு தொடங்க ஆட்டம் சூடுபறக்கும். பற்றிக்ஸ் கல்லூரி அணியுடனான ஆட்டங்களில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும். பச்சை மஞ்சள் ஜேர்ஸி அணிந்து, நிலத்தை தொட்டு பிதா சுதன் போட்டு விட்டு, பற்றிக்ஸ் அணியினர் களமிறங்க, dining hall பக்கத்தில் நிரம்பி வழியும் பற்றிக்ஸ் அணியினரின் ஆதரவாளர்களின் ஆரவாரம் கச்சேரியடியில் கேட்கும். 


பாதுகாப்புக்கு காரணங்களிற்காக எங்களுக்கு Old Park பக்கம் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். சிவப்பு கறுப்பு வரிகள் நிறைந்த ஜேர்ஸி அணிந்து மிடுக்காக பரி யோவான் அணி களமிறங்கும். பரி யோவானின் புகழ்பூத்த பழைய மாணவர்களான அன்டனிப்பிள்ளை மாஸ்டரும் அருள்தாசன் மாஸ்டரும் பயிற்றுவிப்பாளர்களாக இருந்த  காலத்தில், பற்றிக்ஸ் அணியினருக்கு பரி யோவான் அணி சிம்ம சொப்பனமாக இருந்தது. அதன் உச்சக் கட்டமாக 1985ல் இயக்கம் நடாத்திய பாடசாலைகளிற்கிடையிலான பண்டிதர் கிண்ண கோப்பையை வென்று சாம்பியனானது பரி யோவான் உதைபந்தாட்ட அணி. பண்டிதர் கோப்பை வென்ற பரி யோவான் அணிக்கு பார்த்திபன் அண்ணா தலைமை தாங்க, அருள்தாசன் மாஸ்டர் பயிற்சியாளர்.


1983ல் ரோயல், சென் தோமஸ், ட்ரினிட்டி கல்லூரிகளிலிருந்து கலவரத்தால் இடம்பெயர்ந்து வந்து பரி யோவானில் இணைந்த மாணவர்களதும் ஆசிரியர்களதும் முன்னெடுப்பாக, கோல் போஸ்டிற்கு மேல் இரு நீண்ட மூங்கில் தடிகளை கட்டிவிட்டு, ஒரு கண்காட்சி ரக்பி ஆட்டமும் பரி யோவான் மைதானத்தில் அரங்கேறியது. கம்பஸ்காரன்களோடு ஹொக்கி மட்சும் அதே மைதானத்தில் நடக்கும். 
ஹொக்கி கோல் போஸ்டுகள் பழைய பூங்கா பக்கமும் Dinning Hall பக்கமும் நிறுவப்படும்.


1980களின் ஆரம்பத்தில் பழைய பூங்காவில் இராணுவ முகாம் இருந்த காலத்தில் பரி யோவான் மைதானத்தில் இராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்கும்.  காலை வேளைகளில் மைதானத்தை வட்டமிட்டு விட்டு புழுதி கிளப்பியவாறே தரையிறங்கும் ஹெலியை பார்த்த ஞாபகம் இன்றும் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஹெலியிலிருந்து இறங்கும் இராணுவ தளபதிகளை, பச்சை நிற ஜீப்புகள் காவிச் செல்லும். இயக்கம் பலம் பெற தொடங்க, ஹெலி இறங்கிறதும் நின்றுவிட்டது, பழைய பூங்கா இயக்கத்தின் பயிற்சி பாசறையாகியது.


பரி யோவானின் மைதானம் ஒரு புனித பிரதேசம் போல் பாதுகாக்கப்படும். கனெக்ஸ் அண்ணா SPயா இருந்த காலத்தில், ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிய ஏதோ practice இருந்தது, அது முடிய மூன்று மணியாகி விட்டது.  வெறிச்சோடியிருந்த middle school சைக்கிள் parkற்குக்கால சைக்கிளை எடுத்து, விலாசமாக வீதியை தாண்டி மைதானத்தின் ஓரத்தால சைக்கிளில் ஏறி மிதித்துக் கொண்டே பீட்டோ ஹோல் பக்கம் போனேன்.  பீட்டோ ஹோல் முடக்கில் கனெக்ஸ் அண்ணா நிற்கிறார், டக்கென்று சைக்கிளால் பாய்ந்து இறங்கினேன். "இங்க வாரும் ஐசே" கனெக்ஸ் அண்ணாவின் குரலில் கண்டிப்பு நிறைந்திருந்தது. சைக்கிளை உருட்டிக் கொண்டே கிட்ட போய் "அண்..." சொல்லி முடியவில்லை, பளார்.. பளார், கன்னத்தில் ரெண்டு அறை இடியாய் இறங்கியது, மின்னல் கண்ணுக்கு தெரிந்தது. கலங்கின கண்ணை கசக்குவதா, வலிக்கும் கன்னத்தை தடவுவதா என்று நான் யோசிக்க "க்ரவுண்டிற்குள் சைக்கிள் ஓடக் கூடாது, போம்", என்னுடைய கன்னத்தில் அறைந்த கனெக்ஸ் அண்ணா, தன்னுடைய ஹொஸ்டல் அறையை நோக்கி நடக்க தொடங்கினார். 


நாங்க சைக்கிள் ஓடக் கூடாது, ஆனா ஆமி ஹெலி இறக்கலாமா அண்ணா, என்று திருப்பி கேட்கிற துணிவு அன்றும் வரவில்லை, இன்றும் வராது. 

பரி யோவானின் மைதானம் 1