ஒவ்வொரு வருடமும் கடக்கும் போதும் கடந்து போகும் வருடத்தின் நிகழ்வுகள் மனத்திரையில் உலாவர இரு வேறு உணர்வுகள் எம்மை ஆட்கொள்ளும். அந்த வருடத்தில் இனிமையான பொழுதுகளை நினைக்கையில் நம்மையறியாமல் புன்சிரிப்பு அரும்பும். அந்த ஆண்டின் துன்பியல் நிகழ்வுகளை, குறிப்பாக நம்மை விட்டு பிரிந்தவர்களை, நினைக்கையில் பெருமூச்சொன்று வெளிகிளம்பும்.
ஈழத்தமிழர்களிற்கு கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தந்த வலியுடனும் அடுத்த ஆண்டில் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் தான் கடக்கும். 2015 செப்டெம்பரில் ஜநா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட போர் குற்ற விசாரணை ஆவணம், எம்மினத்தின் மீது காலங்காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்த சர்வதேச ஆவணம். எனினும் போர் குற்றங்களை உள்ளக பொறிமுறையில் விசாரிக்க சர்வதேசம் இணங்கியது தமிழினம் சந்தித்த இன்னொரு மாபெரும் ஏமாற்றம்.
இன்னும் 20 வருடங்களிற்கு இலங்கையை ஆட்சி செய்து, அந்த தீவில் தமிழர்களின் அடையாளத்தை துடைத்து எறிந்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவிற்கு வந்ததுடன் 2015 ஆரம்பமாகியது. மஹிந்வை அகற்றிய "மாற்றத்தில்", தமிழர் தரப்பு விவேகத்துடன் செயற்பட்டு மாற்றத்தின் பங்காளியாகியது. ஓகஸ்ட் மாத பொதுத்தேர்தலில் "மாற்றம்" உறுதி செய்யப்பட, தமிழர் தாயகத்தில் கூட்டமைப்பின் வெற்றியும் தொடர்ந்தது. தமிழ் தேசியத்தில் பற்றுறுதி கொண்ட தரப்பு தவறான சக்திகளின் சேர்க்கையால் வெற்றிபெறமுடியாமல் போனது தமிழினித்தின் சாபக்கேடே.
ஆண்டினிறுதியில் உதயமாகியுள்ள தமிழர் பேரவை செலுத்தப் போகும் தாக்கத்தை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த பேரவை சிவில் சமூகத்தின் ஒன்றிணைவாய் மட்டும் அமைந்திருந்தால் அதன் நோக்கங்களில் துலங்கும் தூய்மை அதன் உருவாக்கத்திலும் செயற்பாட்டிலும் புலப்பட்டிருக்கும்.
2015 தலைவர் ரஜினிகாந்த் படம் வராத ஆண்டாக இருந்தாலும் தமிழ் மணம் கமிழ்ந்த கமலின் உத்தம வில்லனும் மணிரத்தினத்தின் இளமை ஊஞ்சலாடிய ஓகே கண்மணியும் நயன்தாராவின் ஜந்து படங்களும் வெள்ளித்திரையை ஆக்கிரமித்தன. புன்னகையின் மகிமையையும் எடை குறைத்தலின் அவசியத்தையும் உணர்த்திய "இஞ்சி இடுப்பழகி"யும் பிள்ளைகளை தனித்துவத்துவமாக வளர்வதின் சிறப்பை உணர்த்திய "பசங்க 2"உம் மனதில் இடம்பிடித்தன. இந்த ஆண்டின் சிறந்த படம் கமலின் கண்கள் நடித்த பாபநாசம் தான்.
ரஹ்மானின் "மென்டல் மனதிலும்" அனிருத்தின் "தங்கமே உன்னைத்தானும்" ஈழத்து சிறுமி கரீஷ்மா ரவிச்சந்திரன் பாடிய "காதல் கிரிக்கட்டும்" செவிக்கு விருந்தளித்தாலும் சிம்புவின் "பீப்" பாடல் தான் அதிகம் பேசப்பட்டது.
ஓஸ்ரேலியா ஆக்கிரமித்த உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளில் விறுவிறுப்பு இருக்கவில்லை. சிரிலங்கா அணியின் இரு ஜாம்பாவான்களான மஹேலவினதும் சங்கரகாரவினதும் இளைப்பாறுதல்கள் அந்த அணியின் ஏழரை சனியின் தொடக்கமாக பார்கலாம். IPL போட்டிகளிலிருந்து சென்னை அணி நீக்கப்பட்ட முடிவு வலி தந்தது..இனி IPLம் கசக்கும். இந்திய கிரிக்கட் அணியில் புதியவர்களின் வரவையும் தோனியின் சரிவையும் 2015 பதிவுசெய்தது.
யாழ் பரி யோவான் சமூகம் தனது பேரபிமானத்திற்குரிய ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டரையும் கந்தசாமி மாஸ்டரையும் இழந்தது 2015ல். யாழ் மத்திய கல்லூரிக்கெதிரான Big Match கிரிக்கட் ஆட்டத்தை பரி யோவான் அணி வென்றதும் 2015ல்.
இந்த ஆண்டு வாசித்த புத்தகங்களில் ஆப்கானிஸ்தான் பிரச்சினையை மையமாக கொண்ட The Kite Runner என்ற புத்தகம் என்னை நிறையவே பாதித்தது. அதேபோல ஒரு புத்தகம் எமது பிரச்சினையை மையமாக வைத்து தம்பி ஜேகே எழுதவேண்டும் என்பது எனது அவா.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வித்தியாதரனின் எழுத்தாயுதம் ஒரு புஸ்வாணமாய் போனது ஏமாற்றம். ஆரவாரமில்லாமல் வெளியாகிய கவியழகனின் "நஞ்சுண்ட காடு" ஆழமான கருத்துக்களுடன் மலர்ந்த புதுமையான போரிலக்கியம். ஜெயமோகனின் "காடு" ஒருவகை வெறியோடு வாசித்த நாவல். ஏன் வாசிக்கிறோம் என்று தெரியாமல் காட்டுக்குள் எங்களை உள்வாங்கி கிரியோடு எங்களையும் அலையவைத்து கிறங்க வைத்த படைப்பு "காடு". இன்றும் அந்த தேவாங்கும் குட்டப்பனும் நீலியும் மிளாவும் நினைவில் உலாவுவார்கள்.
இந்த ஆண்டு வாசித்தவைகளில் என்னை கவர்ந்த வசனங்கள் இரண்டு.
"கனவு காண்பது மனதின் இயற்கை. கனவை உடைப்பது விதியின் இயற்கை" கடல்புறாவில் சாண்டில்யன்
"நேசம் உறவுருவதால் வருவதில்லை,
நினைவுறுவதால் வருவது" நஞ்சுண்ட காட்டில் கவியழகன்
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏழாண்டுகளிற்கு பின்னர் வேலை மாறியது புதிய உற்சாகத்தையும் வாழ்வை முழுமையாக நோக்கும் ஒரு புதிய பரிமாணத்தையும் தந்தது. ஆண்டின் நடுப்பகுதியில் பம்பலாக எழுதிய சில பதிவுகளிற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து "கனவும் நினைவும்" எனும் Blogல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எழுத வைத்தது. பரி.யோவான் காலங்கள் எழுத தூண்டி , தவறுகளை சுட்டிகாட்டி தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்துவது தம்பி ஜேகே. தம்பி தமிழ்பொடியன், அரசியல் கருத்து வேறுபாடுகளிற்கப்பால், கிடைத்த அரிய உறவு. Blog தொடங்க ஊக்கப்படுத்தியது தெய்வீகன். என்னை குட்டியும் தட்டியும் எழுத வைப்பது ரமோ, மொழி, நிமலன். பாமினி அக்கா என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடுவா. எல்லாத்துக்கும் மேல, எழுதும் போது எவ்வளவு தான் அலுப்பு கொடுத்தாலும் என் எழுத்துக்களை ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் என்ற மனிசி தாற விருது தான் என்னுடைய ஓஸ்கார்.
எம்மினத்தை பொறுத்தவரையிலும் 2015 நம்பிக்கை தரும் ஆண்டாக அமைந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஆக்கிமிக்கப்பட்ட நிலங்களின் விடுவிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் ஏமாற்றமளித்தன. அதேவேளை சம்பூர் நிலம் விடுவிக்கப்பட்டதும், 2009ற்கு பின் நிலவிய இறுக்கம் தளர்ந்து சனம் கொஞ்சம் மூச்சுவிட ஒரு யன்னல் திறந்ததும் 2015ல்.
இந்த மெதுவான நல்ல ஆரம்பம் 2016ல் வேகம் பெற்று எம்மினத்திற்கு நீதியும் கெளரவவுமான சமாதான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது நம்மெல்லோரினதும் பிரார்த்தனையாக இருக்கட்டும். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் எம்மினத்திற்கு 2016 நற்செய்தியை கொண்டுவரும் என்பது என் நம்பிக்கை.
நம்பிக்கை தானே வாழ்க்கை !