Thursday, 17 December 2015

CIMA: சோதனையான சோதனைஅந்தக் காலத்து CIMA syllabus பிரகாரம், CIMA பாடநெறியில் நான்கு stages இருந்தது. UKயில் இருக்கும் லண்டன்காரன்கள் இந்த நான்கு stagesலும் இரண்டு கண்டங்களை வைத்திருந்தார்கள். 

முதலாவது கண்டம் Stage 2ல், Information Technology Management (ITM) என்ற பாட வடிவத்தில் உருவெடுக்கும். IASல் “In the U.K...... there is a super market..... and they have red pen...” என்று திரும்ப திரும்ப தேவாரத்தை ஒப்பித்த மாதிரி கரும்பலகையில் கீறிக் காட்டி படிப்பிக்கிறேன் என்று பேக் காட்டிய ஆனந்தகுமார் என்ற வாத்தியிடம் படித்து pass பண்ணவே முடியாத கடுமையான பாடம்.

Oxoniaவில் ITMற்கு கிருஷ்ணகுமார் தான் lecturer. அதீத ஈடுபாட்டோடும், அருமையான deliveryயோடும், மொக்கன்களிற்கும் விளங்கும் எளிமையான notes உடனும் கிருஷ்ணகுமார் படிப்பித்துக் கொண்டிருந்தார். IASல் Stage 2 படித்த எங்களிற்கு கிருஷ்ணகுமாரின் Notedஐ தந்துதவி, விளங்காத விஷயங்களை விளங்கப்படுத்தியது, சில வருடங்களிற்கு முன்னர் நம்மை விட்டுப் பிரிந்த மைக்கல் நவரட்ணராஜா. 

முதலாவது கண்டத்தைத் தாண்டி வந்தால், “வாடா மச்சான் வாடா” என்று கடூரமாக சிரித்துக் கொண்டே கொண்டு, Stage 4 என்ற மாபெரும் கண்டம் காத்திருக்கும். Stage 4 தாண்டி விட்டால், இறக்கை கட்டி பறக்குதடா அண்ணாமலை சைக்கிள் (கரியரில் குஷ்பூவோடு) மாதிரி வாழ்க்கை மாறிவிடும் என்று விசுவாசமாக நம்பினோம். 

CIMA சோதனைகள் மே மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் மூன்றாவது கிழமையில் தான் நடக்கும். நாங்கள் Stage 2 எடுத்த 1993 நவம்பரில் தான் புலிகளின் ஒபரேஷன் தவளையில் பூநகரி முகாம் சிக்க, கொழும்பு காலி வீதியில் அம்புலன்ஸ் வண்டிகள் சாரை சாரையாக ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. கொழும்பு வீதிகளில் முளைத்த Check pointகளில் நிற்கிற பொலிஸ்காரனும் ஆமிக்காரனும் கடுப்பில நின்றார்கள், எப்ப உள்ளே தூக்கி போடுவாங்களோ தெரியாது என்ற டென்ஷனோடு பரீட்சை எழுதிய காலங்கள் அவை. 


1994 நவம்பரில், நாங்கள் முதல் மூன்று கட்டங்களையும் தாண்டி நாலாவது stageஐ எட்ட, சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக் கட்டிலேறி, புலிகளோடு யுத்த நிறுத்தம் செய்யவும் சரியாயிருந்தது. அம்மையாரின் செயலாளர் பாலபட்டபெந்தியும் குழுவினரும் ஹெலியில் பரி யோவான் மைதானத்திலும் கம்பஸ் மைதானத்திலும் இறங்கி தமிழ்ச்செல்வனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் வீதியில் கெடுபிடிகள் குறைந்திருந்ததால், கொஞ்சம் நிம்மதியாகவும் பயமில்லாமலும் போய் வந்து படிப்பில் கவனம் செலுத்த முடிந்திருந்தது. 

நவம்பர் 1994 சோதனைகளிற்கு பிறகு, புதிய பாடத்திட்டத்தை, New Syllabus, அமுலாக்க லண்டன்காரன் முடிவெடுத்திருந்தான். நவம்பர் 1994ல் முடிக்கா விட்டால், அடுத்த வருடம் முதல் முறையாக அமுலாக இருக்கும் அறிமுகமே இல்லாத பாடத் திட்டத்தில் சங்கமிக்க வேண்டியிருக்கும் என்ற additional pressure வேறு வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. 


Stage 4ல் MDM, MFM, MSP, MCA என்று நான்கு பாடங்கள். நான்கும் ஒவ்வொரு விதமான பாடங்கள். நான்கிலும் மிக மிக கடினமானது MDM தான்.  Calculus, Algebra அது இது என்று கணிதத்தை மையமாக வைத்து பின்னப்பட்டது தான் Management Accounting: Decision Making என்ற இந்தப் பாடம். கணிதப் பொறிமுறைகளை அடிப்படையாக வைத்து முகாமைத்துவ முடிவுகள் எட்டுவது சம்பந்தப்பட்ட பாடம். . உயர்தரத்தில் என்ஜினியராகப் போறேன் என்று Maths படிக்கப் போய் சூடு வாங்கின மொக்கு கொமர்ஸ்காரருக்கு இந்த பாடம் ஒரு கண்ணிவெடி.


இயக்கச்சி விழுந்தா ஆனையிறவு கைக்குள்ள, ஆனையிறவை மீட்டா யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைக்கலாம் என்றமாதிரி, MDM தாண்டிட்டா Stage 4 பாஸாகிடலாம், CIMA முடிச்சிட்டா நல்ல கம்பனியில கறுப்புக் காரோடு வேலை கிடைத்து, வடிவான வெள்ள பெட்டையா பார்த்து மாட்டி, வாழ்க்கையில் செட்டிலாகிடலாம் என்று நாங்களும் கனவு காணத் தொடங்கியிருந்தோம். 

நவம்பர் 1994, மூன்றாவது செவ்வாய்கிழமை,
அந்த சுபநாளில் தான் எங்களது தலைவிதியை நிர்ணயிக்கும் இறுதித் தேர்வுகளின் ஆரம்பநாள். செவ்வாய் என்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். அந்த சிறப்பு நிறைந்த செவ்வாய்க்கிழமை காலம்பற தான் எங்களுக்கு MDM பரீட்சை, ஆண்டவரே...யேசப்பா.. 

வழமையாக சோதனைகளிற்கு ஒரு நாளிற்கு முன்பாக புத்தகங்களை மூடிவைத்து விடுவது வழக்கம். கடைசி நேரத்தில் படிப்பது ஏறாது என்ற ஒரு கணிப்பு, பரீட்சை எனும் சண்டைக்கு முன்னர் மண்டையை relax ஆக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம். 

சோதனைக்கு முதல் நாளான திங்கட்கிழமை கொச்சிக்கடை அந்தோனியாருக்கு போய் ஒரு மெழுகுதிரியும், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலிற்கு போய் கந்தனுக்கு ஒரு கற்பூரமும்  கொளுத்திவிட்டு, நாரஹன்பிட்டிய CIMA Librayக்குப் போய் பெடியளிற்கும், தெரிந்த ஒரு சில பெட்டைகளிற்கும், all the best சொல்லிவிட்டு,  நாரஹன்பிட்டி பொலவில் இருக்கும் பெட்டிகடையில் நல்ல ஒரு தேத்தண்ணியும் குடித்து விட்டு சோதனைக்கு தயரானோம்.

தேத்தண்ணியும் குடிக்க வராமல், CIMA Libraryயில் கிரிஷாந்தன் படு tensionல் புத்தகத்திற்குள் முகம் புதைத்திருந்தான்.  அவனைப் பார்க்க எனக்கிருந்த tensionற்கும் tension வந்துவிட்டது.

கிரிஷாந்தனை முதுகில் தட்டி “மச்சான், 1992 நவம்பர் பேப்பரில் வந்த Risk Management கேள்வியை ஒருக்கா திரும்பிப் பார்.. நாளைக்கு வந்தாலும் வருமடா” என்று சில ஆண்டுகளிற்கு முந்தைய வருட பரீட்சையில் வந்திருந்த ஒரு கேள்வியையும் அதற்கான பதிலையும் சுட்டிகாட்டி விட்டு விடை பெற்றேன்.  

செவ்வாய்க் கிழமை விடிந்ததும் கொழும்பு கம்பஸ் நண்பன் ஜெகானோடு இரண்டு பஸ் பிடித்து போய் பொரளை Aquinas கல்லூரியில் அமைந்திருந்த CIMA பரீட்சை நிலையத்தை அடைந்தோம். Aquinas கல்லூரியின் பிரதான மண்டபம் தான் இலங்கையில் Stage 4 பரீட்சைகள் நடக்கும் ஒரே பரீட்சை நிலையம். மண்டத்தில் 10 நீண்ட வரிசைகள் நிரம்பி வழிய பரீட்சார்த்திகளிற்கான வாங்குகளும் கதிரைகளும் அடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வரிசையிலும் 100 பேர், பத்து தர பத்து ஆயிரம் பரீட்சார்த்திகள்.. (அம்மட்ட சிரி.)

இலங்கையில் அப்போதைய Stage 4 Pass rate பத்து வீதம், ஆக இந்த ஆயிரத்தில நூறு பேர் தான் தேறப் போறம்.. என்று நினைத்து முடிக்க தலை சுத்திச்சு..எச்சில் முழுங்கிக் கொண்டேன்... (மகே அம்மே.)

ஒவ்வொரு பரீட்சைக்கும், அம்மாக்கு யாரோ சாத்திரி சொல்லி, அதை நானும் நம்பி தவறாமல் எடுத்து போகும் பச்சை கலர் Reynolds பேனாவையும் இரண்டு கறுப்பு கலர் Reynolds பேனாவையும் scientific calculatorஐயும் மேசையில் அழகாக அடுக்கி வைத்து விட்டு பரீட்சைத்தாளை பயபக்தியாக வாங்குகிறேன்.

கண்ணை மூடி கர்த்தரைக் கும்பிட்டு விட்டு ஆறு பக்க வினாத்தாளில் பார்வையை செலுத்துகிறேன். வழமையாக நாலு பக்கங்கள் தாண்டாத வினாத்தாளை புரட்டி வினாக்களுக்கான புள்ளிகள் அடிப்படையில் நேர ஒதுக்கீடு செய்து விட்டு வினாக்களிற்கு விடையளிக்கும் ஒழுங்கை தீர்மானிக்க வினாக்களை வாசிக்க தொடங்குகிறேன். 

பரீட்சைகளில் வினாவை விடையளிக்கும் ஒழுங்குமுறை என்பது மிகமுக்கியமான exam technique. ஏனெனில் அந்த ஒழுங்குமுறை தான் பரீட்சார்த்தியின் தன்னம்பிக்கையையும் சிந்திக்கும் திறனையும் நிர்ணயிக்கவல்லது. 
அந்த மூன்று மணித்தியாலங்களில் களமாடி வெல்ல, எந்த முன்னரணை முதலில் அடிக்க வேண்டும், எந்த baseஐ கடைசியில் நொறுக்க வேண்டும் என்ற ஒரு தாக்குதல் திட்டம் தான் இந்த ஒழுங்கு முறை. ஒரு பரீட்சையின் முடிவை மாற்றியமைக்க வல்ல வல்லமையை இந்த முறையான திட்டமிடலால்  நிட்சயமாக அடையலாம்.


MDM வினாத்தாளின் முதலாவது கேள்வி ஒரு காருக்குள் ஒரு ரொக்கட் என்ஜினை புகுத்தி அந்த காரை சகாரா பாலைவனத்தில் ஓட்டி ஏதோ ஒரு கின்னஸ் சாதனையை முறியடிக்கும் ஒரு Project சம்பந்தப்பட்டதாக 
அமைந்திருந்தது. அந்த Project பற்றிய விவரணம், அது சம்பந்தப்பட்ட செலவுகள் அது இது என்ற  மூன்று பக்கங்கள் நீண்ட கேள்வியில் நிறைந்திருந்தது எல்லாம் Physicsம் Mathsம் தான், வாசிக்கவே மண்டை காய்ஞ்சு போச்சு. நேரத்தை பார்த்தால் அரைமணித்தியாலம் வாசிக்கவே செலவாகிட்டுது. ஆனா கேள்வி என்னவென்று ஒரு மண்ணும் விளங்கேல்ல. நாடியில் கை வைத்து வைத்துவிட்டேன்.

"கப்பலே கவிழ்ந்தாலும்
கட்டின மனைவியே கைவிட்டாலும்
நாடியில கை வையாதே"
என்று  பரி யோவான் ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டர் சொல்வது அப்போதும் நினைவில் வந்தது. 


திரும்பி சுத்தி பார்த்தா கிரிஷாந்தன் படு வேகமாக காலாட்டி கொண்டு ஒரு கையை நாடில வைத்து கொண்டு பேப்பரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் காலாட்டிற வேகத்தில அவன்ட டவுஸர் கிழியுமோ என்று பயமாயிருந்தது. அவனும் இன்னும் எழுத தொடங்கேல்ல. 


மற்றப் பக்கம் திரும்பினால் கெளதமன் ஒரு நமட்டு சிரிப்போடு தலையை ஆட்டிகொண்டிருக்கிறான். நான் பார்க்கிறதை கண்டிட்டு "என்ன வீஈ..சர்ப் பேப்பர் செட் பண்ணியிருக்காங்க பிரகாஷ்" என்று வாய்க்குள் முணுமுணுத்தது விளங்கியது. 
எனக்கு மூன்று வாங்கு முன்னால இருந்த,  என்னோட பஸ்ஸில வந்த கம்பஸ் ஜெகான் எழும்பி பேப்பரை மூடி வைத்துவிட்டு மண்டபத்தை விட்டே வெளியேறுகிறான். 

சன்னமாக யாரோ ஒரு பெட்டை அழுவது கேட்கிறது. திரும்பி பார்த்தால்..முத்துப்பேச்சி என்ற முஸ்லீம் பெட்டை முக்காட்டில் மூக்கு துடைக்கிறா. "முசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி, உன் உசரம் பார்த்தே என் கழுத்து சுளுக்கி போச்சு" பாட்டு வந்த நேரம் அது. உயரமாக அழகாக இருந்த  நஸ்ரியா அந்த என்ற முஸ்லீம் பெட்டை எங்களுக்கு முத்துப்பேச்சியாகிட்டா.


கஷ்டம் வந்தால் கடவுளை கூப்பிடுவது மனிதனின் பழக்கம் தானே. இறுக்க கண்ணை மூடி செபிக்க வெளிக்கிட்டா நான் காதலிக்கிற பெட்டையின் முகம் தான் கண்ணுக்குள் வருது.  பரீட்சை முடிய அவளும் யாழ்ப்பாணம் வாராளாம், எப்படியும் அங்க வைத்து கேட்டு போடோணும்.. என்று மனம் அரற்றத் தொடங்க,

"அடப்பாவி இது Stage 4 பரீட்சை நேரமடா, ரணகளத்திலும் உனக்கு காதல் கேட்குதா".. கர்த்தர் லைனில் வந்தார் 

"கர்த்தரே.. என்னை எப்படியாவது பாஸ் பண்ண வைத்திடும்" கெஞ்சுகிறேன் இறைவனிடம்

மறுமுனையில் மெளனம் பதிலாகிறது. சைவக்காரப் பெட்டைய காதலிக்கிறது கர்த்தரிற்கு பிடிக்கல்லயோ ?

"பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் இரட்சிக்கப்படுவதாக" கர்த்தரை மேவி, மேலிடத்தில்  தொடர்பெடுக்க முயல்கிறேன .

"மகனே" கர்த்தர் மீண்டும் லைனில் வருகிறார். படு பிஸியாயிருக்கிறார், என்னை போல பல விசுவாசிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கிறார் போல.

"இயேசுவே, என்னை காப்பாற்றும்" இறைவனிடம் மறுபடியும் சரணடைகிறேன்.

"டேய் மொக்கா" இயேசு டென்ஷனாகிவிட்டார்

"யு டூ ஜீசஸ்"...மனம் சொல்ல விரும்பியது.. சொல்லவில்லை

"கடைசி கேள்வியை வாசித்தியா" கர்த்தரின் குரலில் கடுப்பு வெளிப்படுகிறது

"முதலாவது கேள்விக்கு 45 மார்க்ஸ்.. அது வாசிக்கவே மூச்சு முட்டுது, அதில இருக்கிற ஒரு ம...." இயேசுவிற்கே மலைப்பிரசங்கம் வைக்க வெளிக்கிட இயேசு பொறுமையிழக்கிறார்.

"யாழ்ப்பாணத்தில் சந்திப்போம்" கர்த்தரின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. கர்த்தர் கடுப்பானது அவரின் குரலில் விளங்கியது.

கண்ணை திறந்து கர்த்தர் காட்டிய வழியில், கடைசி பக்கம் புரட்டி கடைசி கேள்வியை தடவினா சுளையாய் 25 மார்க்ஸிற்கு முதல் நாள் கிரிஷாந்தனிற்கு  சொல்லி விட்டு வந்த கேள்வி என்னை பார்த்து கண்ணடிக்குது. கறுப்பு Reynolds பேனையை எடுத்து விளாசத் தொடங்கினேன்...

பச்சை கலர் Reynolds பேனா சிரிக்கத் தொடங்கியது. !

2 comments:

  1. ஆழமான கருத்துக்களை எழிய நடையில் சொல்லும் பாணி...நன்று.. நன்று..! அதென்ன சைவப்பிள்ளை? கர்த்தரை கந்தனுடன் கலந்துரையாட வைத்தீர்களோ? எல்லாருக்கும் ஒரு பேனா...!

    ReplyDelete