Thursday, 10 December 2015

தேத்தண்ணிநாம் வளரும்  காலங்களில் நம்மோடு ஒட்டிக்கொள்ளும் சில விஷயங்கள் காலங்கள் கடக்கும் போதும் சலிக்காமல் அலுக்காமல் எம்மோடு பயணிக்கும், தேத்தண்ணியும் அப்படித்தான். இன்னொரு விதமாக சொன்னால், தேத்தண்ணியின் சுவையும் நயன்தாராவின் அழகு மாதிரி..ரசிக்க ருசிக்க, ருசிக்க ரசிக்க மெருகேறிக்கொண்டேயிருக்கும், திகட்டவே திகட்டாது. 


வெள்ளைக்காரன் சிலோனிற்கு வந்து கண்டெடுத்த கறுப்பு தங்கம் இந்த தேத்தண்ணி. இறுதி யுத்தம் உச்சக்கட்டத்திலிருக்கும் போது Ceylon Teaயை புறக்கணிப்போம் என்ற கோஷம் எழுந்த போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்த தவிப்பு தமிழ் கூறும் நல்லுலகம் அறியாதது. என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யிற சைனாக்காரி எப்ப சீனா போகும் போதும் எனக்கு Premium China black tea பக்கற்றுகள் கொண்டுவருவாள். சும்மா முகஸ்துதிக்கு "it's wonderful" என்று சொல்லுவன், கருமம் அதை மனுசன் குடிப்பானா. 


படிக்கிற காலங்களில் அம்மா தேத்தண்ணி போட்டு கட்டிலிற்கு கொண்டுவந்து, "எழும்பி படிடா, காலம்பற படித்தா தான் மண்டைக்குள்ள நிற்கும்" என்று சுப்ரபாதம் பாடுவா. Laxspray போட்ட பால் தேத்தண்ணியில் இருக்கும் செழுமை Anchorல் இருக்காது. இது ரெண்டும் இலங்கை அரசு விதித்த பொருளாதார தடையால் ஆனையிறவு தாண்டாமல் விட, பசும்பால் தேயிலையுடன் இணைந்து கொண்டது. 


ஒபரேஷன் லிபரேஷன், ஒபரேஷன் பவன் காலங்களில் சங்கக் கடை வரிசையில் கால்கடுக்க நின்று சீனி வாங்கி தேத்தண்ணி குடித்த காலமும் இருந்தது. மணித்தியால கணக்காக வரிசையில் நிற்கையில் பழசுகள் தங்களுக்குள் கதைத்த அரசியலிலிருந்து அறிந்தவை ஏராளம். சங்கக் கடை சீனி இல்லாத நாட்களில் சக்கரையும் கருப்பட்டியும் கடித்து கொண்டு வாசல் படியிலிருந்து ப்ளேன் டீ குடித்த பொழுதுகள் இனிமையானவை.


கொழும்பில, அம்மம்மா ஒரு தேத்தண்ணி பிரியை. அவ போடுற தேத்தண்ணியை ரசித்து ருசித்து குடிக்கிற ஒரே ஆள் நான் தான். பாட்டு பாடிக்கொண்டே காஸ் அடுப்பில் தண்ணி கொதிக்க வைத்து தேயிலை வடியில் லாவகமாக வடித்து டம்ளரரில் ஆத்தி சுடச்சுட தேத்தண்ணி படிக்கிற மேசைக்கு வரும். டம்ளரரில் குடித்தால் தான் தேத்தண்ணி சுவை கெடாது என்ற சூட்சுமம் சொல்லித் தந்தது அம்மம்மா. இரவிரவா படித்த காலங்களில் நான் கேட்காமல் தானே எழும்பி ரெண்டு மூன்று தரம் தேத்தண்ணி போட்டு தாறதும் அம்மம்மா. 


கடையில் தேத்தண்ணி குடிக்க வெளிக்கிட்டது கொழும்பில் தான். வெள்ளவத்தை காந்தி லொட்ஜ் தேத்தண்ணியை யாரும் அடிக்க முடியாது. பசும்பாலில் நுரைதள்ள டம்ளரரில் கீழ ஒரு கிண்ணி வைத்து சூடு பறக்க பரிமாறுவார்கள். கிண்ணியில் இன்னொருக்கா ஆத்தி வாயில் வைக்க, இளையராஜா மெலடி மண்டைக்குள் கேட்கும். மைசூர் கபே தேத்தண்ணியில் டின்பால் கலப்பதால் அளவிற்கதிமான இனிப்பு தேயிலை சாயத்தின் சுவையை கெடுக்கும்.


சிலோன் இன்ஸிற்கு எதிர்புறம் இருக்கும் ஊத்தைகடை ப்ளேன் டீ அருமை. சின்ன கிளாசில் திறமான சாயத்தில் அளவான சீனி போட்டு தருவாங்கள். ஒரு குட்டி ரொட்டியோடு சேர்த்தடிக்க படித்த களைப்பு பறக்கும். அந்த ப்ளேன் டீக்கே பொக்கற்றுக்குள் காசில்லாமால், அன்றைக்கு காசுள்ள நண்பன் வரும்வரை காத்திருந்து ப்ளேன் டீ வாங்கி குடித்த காலமும் எங்கட குறூப்பில் இருந்தது. அந்த நினைவுகளால் எப்ப கொழும்பு போனாலும் காந்தி லொட்ஜில் பொக்கற்றுக்குள் காசோடதேத்தண்ணி குடிக்காமல் வாறதில்லை.


கொழும்பு கம்பஸ் கன்டீனில் குட்டி ப்ளாஸ்டிக் கப்பில் தேத்தண்ணி என்ற பெயரில் களனித்தண்ணி ஊத்துவாங்கள். காதலிக்கும் பருவமாயிருந்ததால் தேத்தண்ணி சுவையை மறந்து காதலியை ரசித்த பொழுதுகள், களனித்தண்ணியையும் ருசித்து குடித்த கணங்கள்.


CIMA Libraryக்கு போற காலங்களில் நாரஹன்பிட்டிய சந்தையில் இருந்த பெட்டிக்கடை தேத்தண்ணி திறம். அதிலும் காய்ச்சல் காலங்களில் இஞ்சி போட்ட ப்ளேன் டீ குடித்தால் காய்ச்சல் பறந்திடும். மூளையையும் உடலையும் உற்சாகமாக வைத்திருந்து எங்களை CIMA படிக்க வைத்ததில் நாரஹன்பிட்டிய பொல பெட்டி கடைக்கு ஒரு பாரிய பங்குண்டு.


கலியாண வாழ்க்கையில் மனிசியின் மூட், போட்டு தாற தேத்தண்ணியில் தெரியும். சீனியோடு சேர்த்து ஒரு கரண்டி காதலும் கலந்திருந்தால் தேத்தண்ணி அமிர்தமாகும். அமிர்தமாய் தேத்தண்ணியும் போட்டு "வாரும் படியிலிருந்து டீ குடிப்பம்" என்று ஆசையாய் கூப்பிட்டால், பாரதிராஜாவின் வெள்ளை சட்டை போட்ட டான்ஸிங் கேர்ள்ஸ் லல் லல் லா பாடிக்கொண்டு என்னை அழைத்து செல்வார்கள். சீனியே போடாமல் தேத்தண்ணி அநாதரவாய் மேசையில் நின்றால், ஆமி கோட்டைக்கால வெளிக்கிடப் போகுது என்று அர்த்தம்.


ஈபிகாரன்கள் பிள்ளை பிடித்து கொண்டு திரிந்த காலங்களில் நானும் தம்பியும் வீட்டில் அடைபட்டிருந்தோம். பாதுகாப்பு கருதி முன் கேட் ஆமை பூட்டு போட்டு பூட்டப்பட்டிருக்கும். ஒரு நாள் பின்னேரம் தம்பியை தேத்தண்ணி போட்டு தர கேட்டேன். அவன் "நீ தண்ணி சுட வை, கோப்பை கழுவு, நான் தேத்தண்ணி போடுறன்" என்ற ஒரு நியாயமேயில்லாத நிபந்தனை விதித்தான். எனக்குள் இருந்த தேத்தண்ணி விடாய் போராட்டத்தை தவிர்த்து சரணடைவை நோக்கி தள்ளியது.


அடுப்பில் பத்மவியூகத்தில் விறகடிக்கி, நடுவில் பொச்சு மட்டை செருகி, சூர்யா நெருப்பு பெட்டியில் தீக்குச்சி உராசி அடுப்பு மூட்டி கேத்தில் வைத்து தண்ணி கொதிக்க வைக்க தொடங்கினேன். அடுப்பு ஊதி நெருப்பை கூட்ட குனிய.. பலத்த சத்தத்தோடு கிரனேட் வெடிக்கும் சத்தம் ஒன்றும் பிறகு சரமாரியாக துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. சடக்கென்டு கீழ விழுந்து படுத்திட்டன். மதிலிற்கு வெளியே சிலர் சப்பாத்து காலோடு ஓடுற சத்தமும் தொடர்ந்து துப்பாக்கிகளின் சூட்டு சத்தமும் ஒலித்து கொண்டிருக்கிறது.


கொஞ்ச நேரத்தில் எங்கட கேட்டை திறக்க யாரோ முயல்வதும் ஹிந்தியில் கத்துவதும் கேட்கிறது.  தம்பி அறைக்குள் நான் குசினிக்குள், ரெண்டு பேரும் அசையாமல் இருக்கிறம். பக்கத்து வீட்டு அன்ரியின் குரலும் கேட்குது. கொஞ்ச நேரத்தில் கேட்டுக்கு மேலால சப்பாத்து கால் பாயுற சத்தம் கேட்குது. அடுத்த சில நொடிகளில் குசினி வாசலில் இந்தியன் ஆமிக்காரன் துவக்கை நீட்டி கொண்டு நிற்கிறான்.. ஏதோ சொல்லுறான்.. தேத்தண்ணி விடாயில் கதி கலங்கி நிற்கிற எனக்கு ஒன்றும் விளங்கேல்ல

"சலோ சலோ" மட்டும் விளங்குது.

எழும்பி, வெறுமேலோடு கையை தூக்கி கொண்டு நிற்கிறன். அவன் கிட்ட வந்து என்னை வெளியே போகச்சொல்லி தள்ளுறான். இனியென்ன.. கொண்டுபோய் சந்தியில குந்த வைப்பாங்கள், காட்டி கொடுக்க தலையாட்டி ஈபிகாரன் வருவான். வெறுமேலோடு ரோட்டிற்கு போனா அம்மாட்ட அடிவிழும் என்று மண்டையில் பொறி தட்ட

"Sir.. Shirt please" அரை குறையை அரை குறை இங்லீஷில் கெஞ்சினேன்..

"சப்கே குப்கே ஆப்தே சலோ சலோ" என்று சொன்ன மாதிரி கேட்டுது

"Sir.. Me Mohinder Amaranath Fan.. Please.. Shirt.. Please"

ஹிந்தி கதைக்கிறவன் எல்லாம் டெல்லிகாரனாயிருப்பான் மொஹிந்தர் அமரநாத்தை பிடிக்கும், எனக்கு இரக்கம் காட்டுவான் என்று நம்பி அந்த அஸ்திரத்தை ஏவினேன்.

"ஆப்தே கியா ஹேய்.. சலோ சலோ" இந்த முறை அவன் கடுப்பானது விளங்கிச்சு.

பம்பாய்கார ரவி சாஸ்திரியை பிடிக்குமென்று இனி சொன்னால் என்னுடைய பம்மில இவன் தருவான், வெறுமேலோடு ரோட்டிற்கு போனதுக்கு அம்மா தருவா.. வாங்கிறது தான் வாங்கிறது ஏன் அந்நியனிடம் அடி வாங்குவான் என்று முடிவெடுத்து வெறுமேலோடு கைகள் தலைக்கு மேல் உயர்த்திய படி சந்திக்கு வந்தால், என்னை தவிர பிடிபட்ட என்னுடைய அயலண்டை நண்பர்கள் எல்லோரும் சேர்ட் போட்டிருக்கிறாங்கள். என்னை வெறுமேலோடு கண்டதும் அந்த ரணகளத்திலும் நக்கலாய் சிரிக்கிறாங்கள், அவங்களுக்கும் தெரியும் எனக்கு இன்றைக்கு வீட்ட பூசை இருக்கென்று.

இந்திய இராணுவத்தின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் சந்தியில் வெறுமேலோடு குந்தியிருந்து யோசிக்கிறன்

"திரும்பி போகேக்க தம்பி தேத்தண்ணி போட்டு வைத்திருப்பானோ ?"

2 comments:

  1. Very interesting story, I like the way you wrote. At least at three places your story made me laugh, while understanding the danger you were experiencing. IPKF were cruel than may be SL armies.

    ReplyDelete
  2. தேத்தண்ணி பதிவு வாசிச்சனான். இவ்வளவு வலிகளைக்கடந்து தான் வந்திருக்கிறமோ என்று ஆச்சரியமாக இருக்கு. இடைக்கிடை ஹாஹ்ஹா என்டு சிரிச்சனான்.

    ஊரில காஸ் குக்கர் இருந்த ஞாபகம் இல்லை. இந்தியன் ஆமி காலத்தில சரியான சின்ன ஆக்கள். ஆனாலும் நெஞ்சில அவர்கள் வைச்ச துவக்கு பரலின் வலி இப்பவும் இருக்கிறது. இரண்டு வயது தம்பிய சுடுவாங்களோ என்று பதறினது ஞாபகத்தில வருது. அதுவும் அந்த சிரியன் குட்டித்தம்பியின்ட படத்தைப் பாத்த நாளில இருந்து அடிக்கடி ஞாபகம் வருகிறது. முதுகு தண்டில் குளிர் பரவுவதைப் பத்தி சொன்னால் யாருக்குத் தான் விளங்கும். :/

    அடப்பாவிங்களா. டீ சீமா படிக்க உதவினதோ. ஹாஹா. சிரிச்சு சிரிச்சு கண்ணில தண்ணி. கடைசி வரி புனைவு என்டு நினைக்கிறன். அருமையாக இருந்தது ஜூட் அண்ணா.

    ReplyDelete