Thursday, 31 December 2015

வாறாயோ 2016ஏ வாறாயோ


ஒவ்வொரு வருடமும் கடக்கும் போதும் கடந்து போகும் வருடத்தின் நிகழ்வுகள் மனத்திரையில் உலாவர இரு வேறு உணர்வுகள் எம்மை ஆட்கொள்ளும். அந்த வருடத்தில் இனிமையான பொழுதுகளை நினைக்கையில் நம்மையறியாமல் புன்சிரிப்பு அரும்பும். அந்த ஆண்டின் துன்பியல் நிகழ்வுகளை, குறிப்பாக நம்மை விட்டு பிரிந்தவர்களை, நினைக்கையில் பெருமூச்சொன்று வெளிகிளம்பும். 


ஈழத்தமிழர்களிற்கு கடக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தந்த வலியுடனும் அடுத்த ஆண்டில் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் தான் கடக்கும். 2015 செப்டெம்பரில் ஜநா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட போர் குற்ற விசாரணை ஆவணம், எம்மினத்தின் மீது காலங்காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்த சர்வதேச ஆவணம். எனினும் போர் குற்றங்களை உள்ளக பொறிமுறையில் விசாரிக்க சர்வதேசம் இணங்கியது தமிழினம் சந்தித்த இன்னொரு மாபெரும் ஏமாற்றம்.


இன்னும் 20 வருடங்களிற்கு இலங்கையை ஆட்சி செய்து, அந்த தீவில் தமிழர்களின் அடையாளத்தை துடைத்து எறிந்துவிடுவார் என்று கணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவிற்கு வந்ததுடன் 2015 ஆரம்பமாகியது. மஹிந்வை அகற்றிய "மாற்றத்தில்", தமிழர் தரப்பு விவேகத்துடன் செயற்பட்டு மாற்றத்தின் பங்காளியாகியது. ஓகஸ்ட் மாத பொதுத்தேர்தலில் "மாற்றம்" உறுதி செய்யப்பட, தமிழர் தாயகத்தில் கூட்டமைப்பின் வெற்றியும் தொடர்ந்தது. தமிழ் தேசியத்தில் பற்றுறுதி கொண்ட தரப்பு தவறான சக்திகளின் சேர்க்கையால் வெற்றிபெறமுடியாமல் போனது தமிழினித்தின் சாபக்கேடே. 


ஆண்டினிறுதியில் உதயமாகியுள்ள தமிழர் பேரவை செலுத்தப் போகும் தாக்கத்தை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த பேரவை சிவில் சமூகத்தின் ஒன்றிணைவாய் மட்டும் அமைந்திருந்தால் அதன் நோக்கங்களில் துலங்கும் தூய்மை அதன் உருவாக்கத்திலும் செயற்பாட்டிலும் புலப்பட்டிருக்கும். 


2015 தலைவர் ரஜினிகாந்த் படம் வராத ஆண்டாக இருந்தாலும் தமிழ் மணம் கமிழ்ந்த கமலின் உத்தம வில்லனும் மணிரத்தினத்தின் இளமை ஊஞ்சலாடிய ஓகே கண்மணியும் நயன்தாராவின் ஜந்து படங்களும் வெள்ளித்திரையை ஆக்கிரமித்தன. புன்னகையின் மகிமையையும் எடை குறைத்தலின் அவசியத்தையும் உணர்த்திய "இஞ்சி இடுப்பழகி"யும் பிள்ளைகளை தனித்துவத்துவமாக வளர்வதின் சிறப்பை உணர்த்திய "பசங்க 2"உம் மனதில் இடம்பிடித்தன. இந்த ஆண்டின் சிறந்த படம் கமலின் கண்கள் நடித்த பாபநாசம் தான்.


ரஹ்மானின் "மென்டல் மனதிலும்" அனிருத்தின் "தங்கமே உன்னைத்தானும்" ஈழத்து சிறுமி கரீஷ்மா ரவிச்சந்திரன் பாடிய "காதல் கிரிக்கட்டும்" செவிக்கு விருந்தளித்தாலும் சிம்புவின் "பீப்" பாடல் தான் அதிகம் பேசப்பட்டது. 


ஓஸ்ரேலியா ஆக்கிரமித்த உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளில் விறுவிறுப்பு இருக்கவில்லை. சிரிலங்கா அணியின் இரு ஜாம்பாவான்களான மஹேலவினதும் சங்கரகாரவினதும் இளைப்பாறுதல்கள் அந்த அணியின் ஏழரை சனியின் தொடக்கமாக பார்கலாம். IPL போட்டிகளிலிருந்து சென்னை அணி நீக்கப்பட்ட முடிவு வலி தந்தது..இனி IPLம் கசக்கும். இந்திய கிரிக்கட் அணியில் புதியவர்களின் வரவையும் தோனியின் சரிவையும் 2015 பதிவுசெய்தது.


யாழ் பரி யோவான் சமூகம் தனது பேரபிமானத்திற்குரிய ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டரையும் கந்தசாமி மாஸ்டரையும் இழந்தது 2015ல். யாழ் மத்திய கல்லூரிக்கெதிரான Big Match கிரிக்கட் ஆட்டத்தை பரி யோவான் அணி வென்றதும் 2015ல்.


இந்த ஆண்டு வாசித்த புத்தகங்களில் ஆப்கானிஸ்தான் பிரச்சினையை மையமாக கொண்ட The Kite Runner என்ற புத்தகம் என்னை நிறையவே பாதித்தது. அதேபோல ஒரு புத்தகம் எமது பிரச்சினையை மையமாக வைத்து தம்பி ஜேகே எழுதவேண்டும் என்பது எனது அவா. 


அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வித்தியாதரனின் எழுத்தாயுதம் ஒரு புஸ்வாணமாய் போனது ஏமாற்றம். ஆரவாரமில்லாமல் வெளியாகிய கவியழகனின் "நஞ்சுண்ட காடு" ஆழமான கருத்துக்களுடன் மலர்ந்த புதுமையான போரிலக்கியம். ஜெயமோகனின் "காடு" ஒருவகை வெறியோடு வாசித்த நாவல். ஏன் வாசிக்கிறோம் என்று தெரியாமல் காட்டுக்குள் எங்களை உள்வாங்கி கிரியோடு எங்களையும் அலையவைத்து கிறங்க வைத்த படைப்பு "காடு". இன்றும் அந்த தேவாங்கும் குட்டப்பனும் நீலியும் மிளாவும் நினைவில் உலாவுவார்கள்.


இந்த ஆண்டு வாசித்தவைகளில் என்னை கவர்ந்த வசனங்கள் இரண்டு.
"கனவு காண்பது மனதின் இயற்கை. கனவை உடைப்பது விதியின் இயற்கை" கடல்புறாவில்   சாண்டில்யன்

"நேசம் உறவுருவதால் வருவதில்லை, 
நினைவுறுவதால் வருவது" நஞ்சுண்ட காட்டில் கவியழகன்


தனிப்பட்ட வாழ்க்கையில் ஏழாண்டுகளிற்கு பின்னர் வேலை மாறியது புதிய உற்சாகத்தையும் வாழ்வை முழுமையாக நோக்கும் ஒரு புதிய பரிமாணத்தையும் தந்தது. ஆண்டின் நடுப்பகுதியில் பம்பலாக எழுதிய சில பதிவுகளிற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து "கனவும் நினைவும்" எனும் Blogல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எழுத வைத்தது. பரி.யோவான் காலங்கள் எழுத தூண்டி , தவறுகளை சுட்டிகாட்டி தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்துவது தம்பி ஜேகே. தம்பி தமிழ்பொடியன், அரசியல் கருத்து வேறுபாடுகளிற்கப்பால், கிடைத்த அரிய உறவு. Blog தொடங்க ஊக்கப்படுத்தியது தெய்வீகன். என்னை குட்டியும் தட்டியும் எழுத வைப்பது ரமோ, மொழி, நிமலன். பாமினி அக்கா என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடுவா. எல்லாத்துக்கும் மேல, எழுதும் போது எவ்வளவு தான் அலுப்பு கொடுத்தாலும் என் எழுத்துக்களை ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் என்ற மனிசி தாற விருது தான் என்னுடைய ஓஸ்கார்.


எம்மினத்தை பொறுத்தவரையிலும் 2015 நம்பிக்கை தரும் ஆண்டாக அமைந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஆக்கிமிக்கப்பட்ட நிலங்களின் விடுவிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் ஏமாற்றமளித்தன. அதேவேளை சம்பூர் நிலம் விடுவிக்கப்பட்டதும், 2009ற்கு பின் நிலவிய இறுக்கம் தளர்ந்து சனம் கொஞ்சம் மூச்சுவிட ஒரு யன்னல் திறந்ததும் 2015ல். 


இந்த மெதுவான நல்ல ஆரம்பம் 2016ல் வேகம் பெற்று எம்மினத்திற்கு நீதியும் கெளரவவுமான சமாதான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது நம்மெல்லோரினதும் பிரார்த்தனையாக இருக்கட்டும். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் எம்மினத்திற்கு 2016 நற்செய்தியை கொண்டுவரும் என்பது என் நம்பிக்கை.

நம்பிக்கை தானே வாழ்க்கை !


Sunday, 20 December 2015

போகட்டும்.. விடுங்கள்

முதல்வர் விக்கியின் "ஊமை" பேச்சிற்கும் கபட நாடகத்திற்கும், உலகமே அறிந்த உண்மை நேற்று பரகசியமாகியது.  வடமாகாண சபையின் முதலமைச்சர் விக்கி ஜயா, இந்திய இராணுவ காலங்களின் மண்டையன் குழு பிதாமகர் சுரேஷ் பிரேமச்சந்திரனோடும் இருமுறை தேர்தலில் தோற்ற கஜன் பொன்னம்பலத்தோடும் இணைந்து புதிய அரசியல் முன்னணி அமைத்திருப்பதாக வந்த செய்தி வரவேற்பப்பட வேண்டியதே. 


விக்கி ஜயாவின் தேர்தல் கால நடவடிக்கைகள் சம்பந்தமாக கூட்டமைப்பில் எழுந்த சந்தேகங்கள் உண்மையாகி விட்டன. நேற்றைய அங்குரார்ப்பணத்திலும் ஊமை நாடகம் நடாத்தி தனது தலைமை பண்பின் திறனையும் தொடர்ந்து தமிழ் மக்களை மடையனாக்கும் செயற்பாட்டையும் விக்கி ஜயா தொடர்வதும் வரவேற்கப்பட வேண்டியதே.


கஜன் பொன்னம்பலம், தமிழ் இனத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளிலிருந்து விலகி தவறானவர்வகளின் கூட்டில் மீண்டும் மீண்டும் பயணிப்பது மட்டும் நெஞ்சை வருத்துகிறது. தூய தமிழ் தேசிய சிந்தனையாளரான கஜன் 2010ல், கஜன் செல்வராசாவிற்கும் பத்மினி சிதம்பரநாதனிற்கும் கூட்டமைப்பு போட்டியிட வாய்ப்பளிக்காததால் தான் பிரிந்து சென்றார். 2009 பேரழிவை எதிர் கொண்ட இனம் அந்த காயத்தின் வலியை சுமந்து கொண்டிருந்த வேளையில், கூட்டமைப்பிற்குள் பிரிவினையை ஏற்படுத்தி வலிதந்தார் கஜன். 

அன்று எந்த புலம்பெயர் சக்திகள் அவரை வழி நடாத்தியது என்று சந்தேகிக்கப்பட்டதோ இன்றும் அதே சக்திகளின் வழிகாட்டலில் அவர் பயணித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. கஜன் வகிக்க வேண்டிய வகிபாகங்களிலிருந்து அவர் தொடர்ந்து விலகி செல்வது வேதனையளிக்கிறது.


ஊடகவியலாளர்களிற்கு அனுமதியில்லாமல் நடந்த அங்குரார்ப்ணத்தில் பங்குபெற்றியோர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் இந்த பழைய குழப்படிக்காரரைக் கொண்ட புதிய பேரவையின் நோக்கத்தை தெளிவுபடுத்தவில்லை. குழப்பங்காரர்களின் கூட்டணியில் தெளிவை எதிர்பார்ப்பது தவறுதானே.

நல்லை ஆதீனம் "புதிய பேரவை அரசியல் தீர்வு திட்டம் தயாரித்து அரசிடம் முன்வைக்கும்" என்கிறார், கஜன் பொன்னம்பலம் "புதிய பேரவை அரசியலிற்கு அப்பால்பட்டது" என்கிறார். புலத்தில் ஏற்கனவே இயங்கும் மக்கள் பேரவைகளின் நீட்சியாக இந்த புதிய பேரவை செயற்படுமா என்ற தெளிவுபடுத்தலும் அவசியமாகிறது.


விக்கி ஜயா போறது தான் போறார், போகும் போது முதலமைச்சர் பதவியை கையளித்துவிட்டு போவது தமிழினித்திற்கு நன்மை பயக்கும். வெறும் வாய்பேச்சு வீரராக, ஒரு செயல் திறனற்ற மாகாண சபையை கடந்த இரு வருடங்களாக நடாத்தி, மத்திய அரசு தந்த சொற்ப நிதியையே செலவிட தெரியாமல் திருப்பி அனுப்புமளவிற்கு மக்களிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திய முதல்வர் என்ற அவப்பெயருடன் விலகி செல்லட்டும்.


மாகாணசபை முதல்வராக மகிந்த முன்னிலையில் பதவியேற்று, புலம்பெயர் மக்களோடும் தமிழக மக்களோடும் சண்டைக்கு போனார். பின்னரே 2015 சனவரியில் அவரது மகிந்த ஆட்சியிலிருந்து அகற்கப்பட்டு ஆட்சி மாற, காட்சி மாறி கூட்டமைப்பிற்குள் சண்டைக்கு போனார். விக்கி ஜயா அரசியலுக்கு வந்த இரு வருடங்களில் அவரது சண்டைகள் தான் சாதனைகள். 


இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழ் அரசியல் பரப்பில் நிலவி வந்த குழப்ப நிலை இந்த புதிய பேரவையின் உதயத்துடன் முடிவிற்கு வருவதும் வரவேற்கத்தக்கது. 


புதிய பேரவை கூட்டமைப்பு போலில்லாது, களத்தில் இறங்கி மக்களோடு வேலை செய்யும் என்று நம்பிக்கையில் புதிய பேரவையை வரவேற்கோம்ம்.


சமூகப்பணி செய்யவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கவும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகள் தேவையில்லை என்பதற்கு இந்த புதிய பேரவை முன்னுதாரணமாக இருக்கும் என்றும் நம்பி புதிய பேரவையை வரவேற்போம்.


கூட்டமைப்பு செய்யத்தவறிய தாயகத்தில் வாழும் மக்களையும் புலம்பெயர் சமுதாயத்தையும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளின் வாழ்வாதாரத்திற்கான உதவித்திட்டங்களை புதிதாக உதயமாயிருக்கும் பழையவர்களின் பேரவை செயற்படுத்தும் என்று நம்பிக்கையில் புதிய பேரவையை வாழ்த்தி வரவேற்போம்.

போகட்டும்.. விடுங்கள்

Thursday, 17 December 2015

CIMA: சோதனையான சோதனைநான்கு stages அல்லது கட்டங்களை கொண்ட CIMA பாடநெறியில் இரண்டு கண்டங்கள் இருந்தது. Stage 2ல் முதலாவது கண்டம், அதை ஒரு மாதிரி தாண்டி வந்தால், Stage 4 என்ற மாபெரும் கண்டம் காத்திருக்கும். அதையும் தாண்டிட்டா வாழ்க்கை இறக்கை கட்டி பறக்குதடா அண்ணாமலை சைக்கிள் (கரியரில் குஷ்பூவோடு) மாதிரியாகிடும்.


CIMA சோதனைகள் மே மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் நடக்கும். 1993 நவம்பரில் புலிகளின் ஒபரேஷன் தவளையில் பூநகரி முகாம் சிக்க, கொழும்பு காலி வீதியில் அம்புலன்ஸ் வண்டிகள் ஊர்வலம் போகும். செக் போயின்டுகளில் நிற்கிற பொலிஸ்காரனும் ஆமிக்காரனும் கடுப்பில நிற்பாங்கள், எப்ப உள்ளே தூக்கி போடுவாங்களோ தெரியாது என்ற டென்ஷனோடு பரீட்சை எழுதிய காலங்கள் அவை. 


1994 இறுதியில், நாங்கள் முதல் மூன்று கட்டங்களையும் தாண்டி நாலாவது stageஐ எட்ட சந்திரிக்கா அம்மையார் ஆட்சிகட்டிலேறி புலிகளோடு யுத்த நிறுத்தம் செய்யவும் சரியாயிருந்தது. கொஞ்சம் நிம்மதியாக பயமில்லாமல் போய் வந்து படிப்பில் கவனம் செலுத்த கிடைத்த காலகட்டம். 


ஒவ்வொரு கட்டத்திலும் நான்கு பாடங்கள். Stage 4ல் MDM என்ற ஒரு பாடம் மிகக் கடுமையானது. Calculus, Algebra அது இது என்று கணிதத்தை மையமாக வைத்து பின்னப்பட்டது இந்த Management Accounting Decision Making என்ற பாடம். கணித பொறிமுறைகளை அடிப்படையாக வைத்து முகாமைத்துவ முடிவுகள் எட்டுவது சம்பந்தப்பட்டது. உயர்தரத்தில் என்ஜினியராகப் போய் சூடு வாங்கின மொக்கு கொமர்ஸ்காரருக்கு இந்த பாடம் ஒரு கண்ணிவெடி.


இயக்கச்சி விழுந்தா ஆனையிறவு கைக்குள்ள, ஆனையிறவை மீட்டா யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைக்கலாம் என்றமாதிரி, MDM தாண்டிட்டா Stage 4 பாஸாகிடலாம், CIMA முடிச்சிட்டா நல்ல கம்பனியில காரோடு வேலை கிடைத்து வடிவான வெள்ள பெட்டையா பார்த்து மாட்டி வாழ்க்கையில் செட்டிலாகிடலாம் என்று நாங்களும் கணக்கு போட்டோம்.


செவ்வாய்கிழமை பரீட்சை..செவ்வாய் என்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். சோதனைக்கு ஒரு நாளிற்கு முன்பாக புத்தகங்களை மூடிவைத்து விடுவேன். திங்கட்கிழமை கொச்சிக்கடை அந்தோனியாருக்கு போய் ஒரு மெழுகுதிரியும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலிற்கு ஒரு கற்பூரமும்  கொளுத்திவிட்டு நாரஹன்பிட்டிய லைப்ரரிக்கு போய் பெடியளிற்கும், தெரிந்த ஒரு சில பெட்டைகளிற்கும், all the best சொல்லிவிட்டு,  பொலவில் இருக்கும் பெட்டிகடையில் தேத்தண்ணி குடித்தேன். 


கிரிஷாந்தன் படு டென்ஷனில் புத்தகத்திற்குள் முகம் புதைத்திருந்தான். அவனை முதுகில் தட்டி Risk Management பகுதியில் சில ஆண்டுகளிற்கு முந்தைய வருட பரீட்சையில் வந்திருந்த ஒரு கேள்வியையும் அதற்கான பதிலையும் சுட்டிகாட்டி "இதை படிடா மச்சான், நாளைக்கு வந்தாலும் வரும்" என்று சொல்லிவிட்டு நகர்கிறேன்.


செவ்வாய் விடிந்ததும் கொழும்பு கம்பஸ் நண்பன் ஜெகானோடு இரண்டு பஸ் பிடித்து போய் பொரளை Aquinas கல்லூரியில் அமைந்திருந்த பரீட்சை நிலையத்தை அடைகிறேன். கல்லூரியின் பிரதான மண்டபம் தான் இலங்கையில் Stage 4 பரீட்சை நடக்கும் ஒரே பரீட்சை நிலையம். மண்டத்தில் ஒரு 10 நீண்ட வரிசைகள் நிரம்பி வழிய பரீட்சார்த்திகள். ஒவ்வொரு வரிசையிலும் 100 பேர், பத்து தர பத்து ஆயிரம் பரீட்சார்த்திகள். இலங்கையில் அப்போதைய Stage 4 Pass rate பத்து வீதம், ஆக இந்த ஆயிரத்தில நூறு பேர் தான் தேறப் போறம்.. என்று நினைத்து முடிக்க தலை சுத்திச்சு..எச்சில் முழுங்கிக் கொண்டேன்.


ஒவ்வொரு பரீட்சைக்கும், அம்மாக்கு யாரோ சாத்திரி சொல்லி, அதை நானும் நம்பி தவறாமல் எடுத்து போகும் பச்சை கலர் Reynolds பேனாவையும் இரண்டு கறுப்பு கலர் Reynolds பேனாவையும் கல்குலேட்டரையும் மேசையில் அழகாக அடுக்கி வைத்து விட்டு பரீட்சைத்தாளை பயபக்தியாக வாங்குகிறேன். இந்த பச்சை கலர் Reynolds பேனா உயர்தர பரீட்சையிலிருந்து ஒவ்வொரு பரீட்சையிலும் என்னோடு பயணித்த lucky charm. இன்று என்னுடைய படிப்றையில் ஓய்வெடுக்கின்றது. 


கண்ணை மூடி கர்த்தரை கும்பிட்டு ஆறு பக்க வினாத்தாளில் பார்வையை செலுத்துகிறேன். வழமையாக நாலு பக்கங்கள் தாண்டாத வினாத்தாளை புரட்டி வினாக்களுக்கான புள்ளிகள் அடிப்படையில் நேர ஒதுக்கீடு செய்து விட்டு வினாக்களை விடையளிக்கும் ஒழுங்கை தீர்மானிக்க வினாக்களை வாசிக்க தொடங்குகிறேன். 


பரீட்சைகளில் வினாவை விடையளிக்கும் ஒழுங்குமுறை என்பது மிகமுக்கியமானது, ஏனெனில் அந்த ஒழுங்கு அந்த மூன்று மணித்தியாலங்களில் பரீட்சார்த்தியின் தன்னம்பிக்கையையும் சிந்திக்கும் திறனையும் நிர்ணயிக்கவல்லது. ஒரு பரீட்சையின் முடிவை மாற்றியமைக்க வல்ல வல்லமையை இந்த திட்டமிடலால் அடையலாம்.


முதலாவது வினா.. ஒரு காருக்குள் ஒரு ரொக்கட் என்ஜினை புகுத்தி அந்த காரை சகாரா பாலைவனத்தில் ஓட்டி ஏதோ ஒரு கின்னஸ் சாதனையை முறியடிக்கும் ஒரு புரஜக்ட், அதில் உள்ள செலவுகள் அது இது என்று மூன்று பக்க நீள கேள்வி. எல்லாம் Physicsம் Mathsம்.. வாசிக்க மண்டை காய்ஞ்சு போச்சு. நேரத்தை பார்த்தால் அரைமணித்தியாலம் வாசிக்கவே செலவாகிட்டுது. ஆனா கேள்வி என்னவென்று ஒரு மண்ணும் விளங்கேல்ல. தலைல கை வைத்துவிட்டேன்.


"கப்பலே கவிழ்ந்தாலும்
கட்டின மனைவியே கைவிட்டாலும்
நாடியில் கை வையாதே" பரி யோவான் ஆசிரியர் ஜீவானந்தம் மாஸ்டர் சொல்வது நினைவில் வந்தது. 


திரும்பி சுத்தி பார்த்தா கிரிஷாந்தன் படு வேகமாக காலாட்டி கொண்டு ஒரு கையை நாடில வைத்து கொண்டு பேப்பரை பாரத்து கொண்டிருக்கிறான். அவன் காலாட்டிற வேகத்தில அவன்ட டவுஸர் கிழியுமோ என்று பயமாயிருந்தது. அவனும் இன்னும் எழுத தொடங்கேல்ல. 


மற்றப்பக்கம் கெளதமன் ஒரு நமட்டு சிரிப்போடு தலையை ஆட்டிகொண்டிருக்கிறான். நான் பார்க்கிறதை கண்டிட்டு "என்ன வீஈ..சர்ப் பேப்பர் செட் பண்ணியிருக்காங்க பிரகாஷ்" என்று முணுமுணுத்தது விளங்கியது. 


எனக்கு மூன்று வாங்கு முன்னால இருந்த என்னோட பஸ்ஸில வந்த கம்பஸ் ஜெகான் எழும்பி பேப்பரை மூடி வைத்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறுகிறான். சன்னமாக யாரோ ஒரு பெட்டை அழுவது கேட்கிறது. திரும்பி பார்த்தால்..முத்துப்பேச்சி என்ற முஸ்லீம் பெட்டை முக்காட்டில் மூக்கு துடைக்கிறா. "முசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி, உன் உசரம் பார்த்தே என் கழுத்து சுளுக்கி போச்சு" பாட்டு வந்த நேரம் அது. உயரமாக அழகாக இருந்த  நஸ்ரியா அந்த என்ற முஸ்லீம் பெட்டை ஒரு கடி முகூர்த்தத்தில் முத்துப்பேச்சியாகிட்டா. அவளை பார்த்து பார்த்து தான் எங்கட விஜயராஜனுக்கு அடிக்கடி கழுத்து சுளுக்கினது என்று பெடியள் சொல்லுவாங்கள்.


கண்ணை மூடி செபிக்க வெளிக்கிட்டா நான் காதலிக்கிற பெட்டையின் முகம் கண்ணுக்குள் வருது.  பரீட்சை முடிய அவளும் யாழ்ப்பாணம் வாராளாம் எப்படியும் அங்க வைத்து கேட்டு போடோணும்.. என் மனம் அரற்ற

"அடப்பாவி இது Stage 4 பரீட்சை நேரமடா, ரணகளத்திலும் உனக்கு காதல் கேட்குதா".. கர்த்தர் லைனில் வந்தார் 

"கர்த்தரே.. என்னை எப்படியாவது பாஸ் பண்ண வைத்திடும்" கெஞ்சுகிறேன் இறைவனிடம்

மறுமுனையில் மெளனம் பதிலாகிறது. சைவக்காரப் பெட்டைய காதலிக்கிறது கர்த்தரிற்கு பிடிக்கல்லயோ ?

"பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் இரட்சிக்கப்படுவதாக" கர்த்தரை மேவி, மேலிடத்தில்  தொடர்பெடுக்க முயல்கிறேன்.

"மகனே" கர்த்தர் மீண்டும் லைனில் வருகிறார். படு பிஸியாயிருக்கிறார், என்னை போல பல விசுவாசிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கிறார் போல.

"இயேசுவே, என்னை காப்பாற்றும்" இறைவனிடம் சரணடைகிறேன்.

"டேய் மொக்கா" இயேசு டென்ஷனாகிவிட்டார்

"யு டூ ஜீசஸ்"...மனம் சொல்ல விரும்பியது.. சொல்லவில்லை

"கடைசி கேள்வியை வாசித்தியா" கர்த்தரின் குரலில் கடுப்பு வெளிப்படுகிறது

"முதலாவது கேள்விக்கு 45 மார்க்ஸ்.. அது வாசிக்கவே மூச்சு முட்டுது, அதில இருக்கிற ஒரு ம...." நான் மலைப்பிரசங்கம் செய்ய வெளிக்கிட இயேசு பொறுமையிழக்கிறார்.

"யாழ்ப்பாணத்தில் சந்திப்போம்" கர்த்தரின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. கர்த்தர் கடுப்பானது அவரின் குரலில் விளங்கியது.

கண்ணை திறந்து கர்த்தர் காட்டிய வழியில், கடைசி பக்கம் புரட்டி கடைசி கேள்வியை தடவினா சுளையாய் 25 மார்க்ஸிற்கு முதல் நாள் கிரிஷாந்தனிற்கு நான் சொல்லி விட்டு வந்த கேள்வி என்னை பார்த்து கண்ணடிக்குது. கறுப்பு Reynolds பேனையை எடுத்து விளாசத் தொடங்கினேன்...

பச்சை கலர் Reynolds பேனா புன்னகைத்தது !

Thursday, 10 December 2015

தேத்தண்ணிநாம் வளரும்  காலங்களில் நம்மோடு ஒட்டிக்கொள்ளும் சில விஷயங்கள் காலங்கள் கடக்கும் போதும் சலிக்காமல் அலுக்காமல் எம்மோடு பயணிக்கும், தேத்தண்ணியும் அப்படித்தான். இன்னொரு விதமாக சொன்னால், தேத்தண்ணியின் சுவையும் நயன்தாராவின் அழகு மாதிரி..ரசிக்க ருசிக்க, ருசிக்க ரசிக்க மெருகேறிக்கொண்டேயிருக்கும், திகட்டவே திகட்டாது. 


வெள்ளைக்காரன் சிலோனிற்கு வந்து கண்டெடுத்த கறுப்பு தங்கம் இந்த தேத்தண்ணி. இறுதி யுத்தம் உச்சக்கட்டத்திலிருக்கும் போது Ceylon Teaயை புறக்கணிப்போம் என்ற கோஷம் எழுந்த போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்த தவிப்பு தமிழ் கூறும் நல்லுலகம் அறியாதது. என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யிற சைனாக்காரி எப்ப சீனா போகும் போதும் எனக்கு Premium China black tea பக்கற்றுகள் கொண்டுவருவாள். சும்மா முகஸ்துதிக்கு "it's wonderful" என்று சொல்லுவன், கருமம் அதை மனுசன் குடிப்பானா. 


படிக்கிற காலங்களில் அம்மா தேத்தண்ணி போட்டு கட்டிலிற்கு கொண்டுவந்து, "எழும்பி படிடா, காலம்பற படித்தா தான் மண்டைக்குள்ள நிற்கும்" என்று சுப்ரபாதம் பாடுவா. Laxspray போட்ட பால் தேத்தண்ணியில் இருக்கும் செழுமை Anchorல் இருக்காது. இது ரெண்டும் இலங்கை அரசு விதித்த பொருளாதார தடையால் ஆனையிறவு தாண்டாமல் விட, பசும்பால் தேயிலையுடன் இணைந்து கொண்டது. 


ஒபரேஷன் லிபரேஷன், ஒபரேஷன் பவன் காலங்களில் சங்கக் கடை வரிசையில் கால்கடுக்க நின்று சீனி வாங்கி தேத்தண்ணி குடித்த காலமும் இருந்தது. மணித்தியால கணக்காக வரிசையில் நிற்கையில் பழசுகள் தங்களுக்குள் கதைத்த அரசியலிலிருந்து அறிந்தவை ஏராளம். சங்கக் கடை சீனி இல்லாத நாட்களில் சக்கரையும் கருப்பட்டியும் கடித்து கொண்டு வாசல் படியிலிருந்து ப்ளேன் டீ குடித்த பொழுதுகள் இனிமையானவை.


கொழும்பில, அம்மம்மா ஒரு தேத்தண்ணி பிரியை. அவ போடுற தேத்தண்ணியை ரசித்து ருசித்து குடிக்கிற ஒரே ஆள் நான் தான். பாட்டு பாடிக்கொண்டே காஸ் அடுப்பில் தண்ணி கொதிக்க வைத்து தேயிலை வடியில் லாவகமாக வடித்து டம்ளரரில் ஆத்தி சுடச்சுட தேத்தண்ணி படிக்கிற மேசைக்கு வரும். டம்ளரரில் குடித்தால் தான் தேத்தண்ணி சுவை கெடாது என்ற சூட்சுமம் சொல்லித் தந்தது அம்மம்மா. இரவிரவா படித்த காலங்களில் நான் கேட்காமல் தானே எழும்பி ரெண்டு மூன்று தரம் தேத்தண்ணி போட்டு தாறதும் அம்மம்மா. 


கடையில் தேத்தண்ணி குடிக்க வெளிக்கிட்டது கொழும்பில் தான். வெள்ளவத்தை காந்தி லொட்ஜ் தேத்தண்ணியை யாரும் அடிக்க முடியாது. பசும்பாலில் நுரைதள்ள டம்ளரரில் கீழ ஒரு கிண்ணி வைத்து சூடு பறக்க பரிமாறுவார்கள். கிண்ணியில் இன்னொருக்கா ஆத்தி வாயில் வைக்க, இளையராஜா மெலடி மண்டைக்குள் கேட்கும். மைசூர் கபே தேத்தண்ணியில் டின்பால் கலப்பதால் அளவிற்கதிமான இனிப்பு தேயிலை சாயத்தின் சுவையை கெடுக்கும்.


சிலோன் இன்ஸிற்கு எதிர்புறம் இருக்கும் ஊத்தைகடை ப்ளேன் டீ அருமை. சின்ன கிளாசில் திறமான சாயத்தில் அளவான சீனி போட்டு தருவாங்கள். ஒரு குட்டி ரொட்டியோடு சேர்த்தடிக்க படித்த களைப்பு பறக்கும். அந்த ப்ளேன் டீக்கே பொக்கற்றுக்குள் காசில்லாமால், அன்றைக்கு காசுள்ள நண்பன் வரும்வரை காத்திருந்து ப்ளேன் டீ வாங்கி குடித்த காலமும் எங்கட குறூப்பில் இருந்தது. அந்த நினைவுகளால் எப்ப கொழும்பு போனாலும் காந்தி லொட்ஜில் பொக்கற்றுக்குள் காசோடதேத்தண்ணி குடிக்காமல் வாறதில்லை.


கொழும்பு கம்பஸ் கன்டீனில் குட்டி ப்ளாஸ்டிக் கப்பில் தேத்தண்ணி என்ற பெயரில் களனித்தண்ணி ஊத்துவாங்கள். காதலிக்கும் பருவமாயிருந்ததால் தேத்தண்ணி சுவையை மறந்து காதலியை ரசித்த பொழுதுகள், களனித்தண்ணியையும் ருசித்து குடித்த கணங்கள்.


CIMA Libraryக்கு போற காலங்களில் நாரஹன்பிட்டிய சந்தையில் இருந்த பெட்டிக்கடை தேத்தண்ணி திறம். அதிலும் காய்ச்சல் காலங்களில் இஞ்சி போட்ட ப்ளேன் டீ குடித்தால் காய்ச்சல் பறந்திடும். மூளையையும் உடலையும் உற்சாகமாக வைத்திருந்து எங்களை CIMA படிக்க வைத்ததில் நாரஹன்பிட்டிய பொல பெட்டி கடைக்கு ஒரு பாரிய பங்குண்டு.


கலியாண வாழ்க்கையில் மனிசியின் மூட், போட்டு தாற தேத்தண்ணியில் தெரியும். சீனியோடு சேர்த்து ஒரு கரண்டி காதலும் கலந்திருந்தால் தேத்தண்ணி அமிர்தமாகும். அமிர்தமாய் தேத்தண்ணியும் போட்டு "வாரும் படியிலிருந்து டீ குடிப்பம்" என்று ஆசையாய் கூப்பிட்டால், பாரதிராஜாவின் வெள்ளை சட்டை போட்ட டான்ஸிங் கேர்ள்ஸ் லல் லல் லா பாடிக்கொண்டு என்னை அழைத்து செல்வார்கள். சீனியே போடாமல் தேத்தண்ணி அநாதரவாய் மேசையில் நின்றால், ஆமி கோட்டைக்கால வெளிக்கிடப் போகுது என்று அர்த்தம்.


ஈபிகாரன்கள் பிள்ளை பிடித்து கொண்டு திரிந்த காலங்களில் நானும் தம்பியும் வீட்டில் அடைபட்டிருந்தோம். பாதுகாப்பு கருதி முன் கேட் ஆமை பூட்டு போட்டு பூட்டப்பட்டிருக்கும். ஒரு நாள் பின்னேரம் தம்பியை தேத்தண்ணி போட்டு தர கேட்டேன். அவன் "நீ தண்ணி சுட வை, கோப்பை கழுவு, நான் தேத்தண்ணி போடுறன்" என்ற ஒரு நியாயமேயில்லாத நிபந்தனை விதித்தான். எனக்குள் இருந்த தேத்தண்ணி விடாய் போராட்டத்தை தவிர்த்து சரணடைவை நோக்கி தள்ளியது.


அடுப்பில் பத்மவியூகத்தில் விறகடிக்கி, நடுவில் பொச்சு மட்டை செருகி, சூர்யா நெருப்பு பெட்டியில் தீக்குச்சி உராசி அடுப்பு மூட்டி கேத்தில் வைத்து தண்ணி கொதிக்க வைக்க தொடங்கினேன். அடுப்பு ஊதி நெருப்பை கூட்ட குனிய.. பலத்த சத்தத்தோடு கிரனேட் வெடிக்கும் சத்தம் ஒன்றும் பிறகு சரமாரியாக துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. சடக்கென்டு கீழ விழுந்து படுத்திட்டன். மதிலிற்கு வெளியே சிலர் சப்பாத்து காலோடு ஓடுற சத்தமும் தொடர்ந்து துப்பாக்கிகளின் சூட்டு சத்தமும் ஒலித்து கொண்டிருக்கிறது.


கொஞ்ச நேரத்தில் எங்கட கேட்டை திறக்க யாரோ முயல்வதும் ஹிந்தியில் கத்துவதும் கேட்கிறது.  தம்பி அறைக்குள் நான் குசினிக்குள், ரெண்டு பேரும் அசையாமல் இருக்கிறம். பக்கத்து வீட்டு அன்ரியின் குரலும் கேட்குது. கொஞ்ச நேரத்தில் கேட்டுக்கு மேலால சப்பாத்து கால் பாயுற சத்தம் கேட்குது. அடுத்த சில நொடிகளில் குசினி வாசலில் இந்தியன் ஆமிக்காரன் துவக்கை நீட்டி கொண்டு நிற்கிறான்.. ஏதோ சொல்லுறான்.. தேத்தண்ணி விடாயில் கதி கலங்கி நிற்கிற எனக்கு ஒன்றும் விளங்கேல்ல

"சலோ சலோ" மட்டும் விளங்குது.

எழும்பி, வெறுமேலோடு கையை தூக்கி கொண்டு நிற்கிறன். அவன் கிட்ட வந்து என்னை வெளியே போகச்சொல்லி தள்ளுறான். இனியென்ன.. கொண்டுபோய் சந்தியில குந்த வைப்பாங்கள், காட்டி கொடுக்க தலையாட்டி ஈபிகாரன் வருவான். வெறுமேலோடு ரோட்டிற்கு போனா அம்மாட்ட அடிவிழும் என்று மண்டையில் பொறி தட்ட

"Sir.. Shirt please" அரை குறையை அரை குறை இங்லீஷில் கெஞ்சினேன்..

"சப்கே குப்கே ஆப்தே சலோ சலோ" என்று சொன்ன மாதிரி கேட்டுது

"Sir.. Me Mohinder Amaranath Fan.. Please.. Shirt.. Please"

ஹிந்தி கதைக்கிறவன் எல்லாம் டெல்லிகாரனாயிருப்பான் மொஹிந்தர் அமரநாத்தை பிடிக்கும், எனக்கு இரக்கம் காட்டுவான் என்று நம்பி அந்த அஸ்திரத்தை ஏவினேன்.

"ஆப்தே கியா ஹேய்.. சலோ சலோ" இந்த முறை அவன் கடுப்பானது விளங்கிச்சு.

பம்பாய்கார ரவி சாஸ்திரியை பிடிக்குமென்று இனி சொன்னால் என்னுடைய பம்மில இவன் தருவான், வெறுமேலோடு ரோட்டிற்கு போனதுக்கு அம்மா தருவா.. வாங்கிறது தான் வாங்கிறது ஏன் அந்நியனிடம் அடி வாங்குவான் என்று முடிவெடுத்து வெறுமேலோடு கைகள் தலைக்கு மேல் உயர்த்திய படி சந்திக்கு வந்தால், என்னை தவிர பிடிபட்ட என்னுடைய அயலண்டை நண்பர்கள் எல்லோரும் சேர்ட் போட்டிருக்கிறாங்கள். என்னை வெறுமேலோடு கண்டதும் அந்த ரணகளத்திலும் நக்கலாய் சிரிக்கிறாங்கள், அவங்களுக்கும் தெரியும் எனக்கு இன்றைக்கு வீட்ட பூசை இருக்கென்று.

இந்திய இராணுவத்தின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் சந்தியில் வெறுமேலோடு குந்தியிருந்து யோசிக்கிறன்

"திரும்பி போகேக்க தம்பி தேத்தண்ணி போட்டு வைத்திருப்பானோ ?"

Thursday, 3 December 2015

மொக்கு கொமர்ஸ்காரன்
1989 டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய எங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை நாட்டில் நிலவிய வன்முறை சூழ்நிலையால் 1990 மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. தெற்கில் ஜேவிபி பயங்கரவாதம் தலைவிரித்தாட வட கிழக்கில் ஈபிகாரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பும் படுகொலைகளும் தாண்டவமாடிய காலகட்டம்.

பரி யோவானில் withdrawals பரீட்சை 1990 பெப்ரவரி மாத கடைசியில் நடந்து, உயர் தரத்தில் கற்க விரும்பிய பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. எனக்கு commerce செய்ய தான் விருப்பம். வீட்டில அம்மா நான் என்ஜியனராகோணும், மொக்கங்கள் தான் commerce செய்வாங்கள் என்று தினம் தினம் கந்தசஷ்டி பாட, நானும் Maths படிக்க விண்ணப்பித்தேன். 

யாழ்ப்பணாத்தில் படித்தா ஒன்று டாக்குத்தராகோணும் என்ஜினியராகோணும் இல்லாட்டி அப்புகாத்தாகோணும், அப்பதான் சமுதாயம் மதிக்கும் என்ற காலங்காலமாக நிலவிய யாழ்ப்பாண சமுதாய எண்ணதின் பிரதிபலிப்பை என்னுடைய அம்மாவிலும் கண்டேன். O/L திறமா செய்யாதவன் தான் commerce படிப்பான், கம்பஸ் போகாதவன் தான் CIMA செய்து கணக்காளராவான்
என்பது யாழ்ப்பாண சமுதாயம் வகுத்த நியதிகள். 


1990 மே மாதம் இரண்டாம் தவணை தொடங்க, வாழ்வில் முதல் தடவையாக வெள்ளை நிற trouser போட்டு, சுண்டுக்குளி பெட்டையளை ஏறெடுத்தும் கொன்வென்ட் பெட்டையளை கண்ணிறையவும் பார்த்து விட்டு, Robert Williams மண்டபத்தில் இருந்த Maths வகுப்பிற்குள் நுழைகிறேன். இனி ஒழுங்கா படிக்கோணும் என்று சபதமெடுத்து கொண்டு முதல் வரிசை கதிரையில் இடம்பிடித்து அமர்கிறேன். முதலாவது பாடம் தொடங்க திரும்பி பார்த்தால் ரமோ, சேகரன், ஜெயரூபன் நவத்தி, நந்தீஸ், நவத்தார் உட்பட எல்லா மண்டைக்காய்களும் பின் வாங்குகளில் இருக்கிறாங்கள்.


க.பொ.த பெறுபேறுகள் வரும்வரை தனியார் வகுப்புகள் தொடங்க கூடாது என்று இயக்கம் கடும் உத்தரவு பிறப்பித்தது. வெக்டரும் பிரேம்நாத்தும் மணியமும் ஞானமும் இயக்கத்திற்கு பயத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை. இயக்கத்தின் உத்தரவிற்கான காரணம் எல்லோருக்கும் புரிந்திருந்தது, யாரும் எதிர்க்க துணியவில்லை.


முதலாவது மாத சோதனை நடந்தது. Pure Maths 70, Chemistry 55, Applied Maths 30, Physics 19. இந்த report ஓட வீட்ட போனா விறகு கொட்டன் உடையும் என்ற பயத்தில், இரவோடு இரவாக அம்மாவிற்கு தெரியாமல் அப்பரோடு கதைத்து Commerceற்கு மாற அனுமதி கேட்டு கடிதம் எழுதி வாங்கி கொண்டேன். 


அடுத்த நாள் காலை "கட்சி மாறிய" அண்ணனுக்கு Principal officeற்கு எதிரில் இருந்த Lower VI Commerce வகுப்பறையில் அமோக வரவேற்பு. 5ம் வகுப்பில் தேவதாசன் மாஸ்டர் படிப்பித்த அதே வகுப்பறை. "டேய் நீ என்ன பெரிய மண்டைக்காய் என்று நினைத்தோ அங்க போனீ" என்று தொடங்கி நக்கலும் நளினமும் பொங்கி பிரவாகித்தன.  தவணை ஆரம்பத்தில் 20ஆக இருந்த commerce வகுப்பில் 36ஆவது நபராக இணைந்து கொண்டேன். Chemistry கொப்பி Commerce கொப்பியாக பெயர் மாறியது.


முதலாவது பாடம் முடிய ஒகஸ்ரின் மாஸ்டர் register mark பண்ண வந்தார். "நீர் என்ன இங்க வந்திட்டீர்" என்று சிரித்து நக்கலடித்துவிட்டு, "இனிமேல் எக்காரணம் கொண்டும் commerceலிருந்து மாற மாட்டேன்" என்று registerல் சத்தியம் பண்ணி உறுதிமொழி எடுக்க வைத்தார். சத்தியபிரமாணம் முடிய, பரி யோவானின் யாப்பிற்கமைய commerce துறைக்கு பொறுப்பாளராக இருந்த கணபதிப்பிள்ளை மாஸ்டரிடம் அப்பரின் கடிதத்தை காட்டி அனுமதி கையெழுத்து வாங்கி வருமாறு அனுப்பப்பட்டேன்.


கணபதிப்பிள்ளை மாஸ்டர்.. ஆள் ஒல்லியாக இருந்தாலும் அவர் நடக்கிற நடையிலும் பேசிற பேச்சிலும் ஒரு terror இருக்கும். மத்தியானத்தில் Good afternoon சொல்லும்போதே எங்களுக்கு காலம்பற குளிருக்கு நடுங்கிற நடுக்கம் நடுங்கும். அவரிடம்  படித்ததில்லை என்றாலும் அவரிடம் பெடியள் கன்னத்தில் அறை வாங்கியதை பார்த்திருக்கிறேன், கன்னம் மின்ன இடியாய் அறை விழும். பரி யோவானின் பழைய மாணவனாக இல்லாதிருந்தும் பரி யோவானின் விழுமியங்களை கட்டி காத்து அடுத்த தலைமுறைகளிற்கு சேர்த்ததில் கணபதிப்பிள்ளை மாஸ்டர் ஆற்றிய பணி காலத்தால் போற்றப்பட வேண்டியது. 


மூச்சை பிடித்துகொண்டு toiletல் pump பண்ணிவிட்டு male staff roomற்குள் நுழைகிறேன். Staff roomலிருந்த easy chairல் சரிந்தபடி "Tigers getting ready for Eelam war II" என்ற தலையங்கமிட்ட Sunday Times வாசித்துக் கொண்டிருக்கிறார் கணபதிப்பிள்ளை மாஸ்டர். 

"Excuse me Sir...."

"Yeeasss".. கண்ணாடிக்கு மேலாக இரு கண்கள் என்னை சந்திக்கின்றன. பார்வையில் கடுமை குடிகொண்டிருக்கிறது..

"I.. Me.. I.. Like.." நாக்கு நர்த்தனமாடுது.

"உமக்கு என்ன வேணும்" ஆஹா தமிழ்

"சேர், நான்.. நான் commerceற்கு மாற போறன்".. தாடையை தடவுகிறேன். மீசை அரும்பிட்டுது, தாடி இன்னும் வளரவில்லை.

"Oh I see".. Sunday Timesஜ கலையாமல் மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்து உட்காருகிறார்.

"ஏன், why do you want to change" 

" Applied is very hard Sir.. Physics is very very hard Sir"

"Go and bring me your withdrawals report"

Officeற்கு ஓடிப்போய் பொன்னம்பலத்திடம் reportஜ வாங்கி வருகிறேன்.

"You have done well in Maths.. But science ... Who is your science teacher ?"

"பிரபாகரன் மாஸ்டர், சேர்"

"ஆ.. அவர் மார்க்ஸ் போடுறதில கஞ்சன்..அதான் குறைவா இருக்கு"

கடுமையாக யோசிக்கிறார்.. நாடியை தடவுகிறார்.. கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு முகட்டை பார்க்கிறார்.. ஏன் இவ்வளவு பில்டப் என்று தெரியாமல் நான் கதிகலங்கி நிற்கிறேன்..

"I can't send you to commerce class. You have done well in Maths and Scinece.. More so there are lot of குழப்படிகாரன்கள் in that class.. You will be spoiled"

" no sir.. Me good boy sir"

"ஐசே.. உம்மை பற்றி எனக்கு நல்லா தெரியும் ஐசே.. கதை விடாதேயும்.. அங்க ஏற்கனவே சிவகுமரன், யோகதாஸ், வாதுலன், சியாமள்ராஜ் என்று ஒரு குழப்படி கூட்டம் இருக்கு.. நீர் ஒரு innocent boy.. அவங்கள் உம்மை கெடுத்து போடுவாங்கள்"

"சேர்.. நான் இனி கவனமா படிப்பன் சேர்.. சத்தியமா அவங்களோட சேரமாட்டன் சேர்.. எனக்கு கம்பஸ் போகணும் சேர்"

"I don't want to spoil your future.. Who is your class teacher"

"ஓகஸ்ரின் மாஸ்டர், சேர்"

"ஜசே, I haven't approved you to change class yet, I mean your class teacher in Form V"

"கம்....கதிர்காமத்தம்பி மாஸ்டர், சேர்"

"I will discuss with him. You can now go and sit in the library until I make a decision"

லைப்ரரிக்கு போற வழியில் குறுக்க வந்த தெய்வங்களாய் கதிர்காமத்தம்பி மாஸ்டரும் மகாலிங்கம் மாஸ்டரும் எதிர்ப்பட்டார்கள். அழாக்குறையாக கணபதிப்பிள்ளை மாஸ்டர் ஆடிய ருத்ரதாண்டவத்தை விவரித்தேன். இருவரும் என்னை அழைத்து கொண்டு கணபதிப்பிள்ளை மாஸ்டரிடம் போனார்கள்.

"என்னடா, ரெண்டு திறமான அப்புகாத்துமாரை பிடித்து கொண்டு வாறாய்" கணபதிப்பிள்ளை மாஸ்டர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினார்.

"மாஸ்டர், அவனுக்கு கையெழுத்து போட்டு கொடுங்கோ, அவனுக்கு நான் guarantee" கதிர்காமத்தம்பி மாஸ்டர். 

"let him study what he likes" மகாலிங்கம் மாஸ்டர், என்னுடைய முதுகில் பலமாய் ஒரு தட்டு தட்டினார், நொந்திச்சு.

"Ok, if you both say so" கடுமை குறையாத புன்முறுவலுடன் கையெழுத்து போட்டு தந்தார் கணபதிப்பிள்ளை மாஸ்டர்.

Commerce வகுப்பில் எனக்கு கிடைத்தது கடைசி வரிசையில் வாங்கு, எனக்கு பக்கத்து வாங்கில் அருள்மொழி. பக்கத்தில் இருந்ததுமே Sports Star magazineஜ எடுத்து காட்டினான். கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. முன்வரிசையில் கருமமே கண்ணாக கிரிஷாந்தனும் கஜோபனும் நோட்ஸ் எழுதிகொண்டிருந்தாங்கள். 

மொக்கு Commerceகாரனாக எனது பயணம் ஆரம்பமாகியது...

இன்றும் தொடர்கிறது...