Thursday, 26 November 2015

மன்னிப்பாயா மாவீரா ?"நேசம் உறவுருவதால் வருவதில்லை, நினைவுறுவதால் வருவது" - நஞ்சுண்ட காடு நாவலில் கவியழகன்.

1989ம் ஆண்டு தமிழர் தாயக பிரதேசம் இந்திய இராணுவத்தினதும் ஒட்டு குழுக்களினதும் முழுமையான கட்டுபாட்டில் இருக்கிறது. அதே ஆண்டின் நடுப்பகுதியில் பிரேமதாச அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளிற்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி, இந்திய இராணுவம் வெளியேறுவதற்கான காலக்கெடு 31 மார்ச் 1990 என்று நிர்ணயிக்கப்படுகின்றது. காலக்கெடு விதிக்கப்பட்டதும் இந்திய இராணுவம் தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து மெல்ல மெல்ல வெளியேற ஆரம்பிக்கிறது. 


இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்களில் விடுதலை புலிகள் பகிரங்கமாக நடமாட தொடங்குகிறார்கள். நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தங்கள் முதல் வித்தான லெப். சங்கர் வீரமரணமடைந்த நாளான 27 நவம்பரை மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். அதுவரையில் இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுடனான மோதல்களில் வீரமரணமடைந்த 1,307 போராளிகளை நினைவுகூரந்து தமிழர் விடுதலை வரலாற்றில்  முதலாவது மாவீரர் நாள் 1989ம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படுகிறது.


அதுவரை மண்டையன் குழுவின் அடாவடித்தனங்களால் மறைந்திருந்த விடுதலை புலிகளின் மாணவர் அமைப்பு (SOLT) மாவீரர் நாள் தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுக்க களமிறங்குகிறது. நீர்வேலியிலும் கிழக்கு அரியாலையிலும் செயற்பட்ட விடுதலை புலிகளின் பாசறைகளிலிருந்து சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன.


இரவில் அமுலிலிலுருந்த ஊரடங்கை பயன்படுத்தி இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அடக்கபட்டிருந்த யாழ் மண்ணின் உணர்வுகளை மீண்டும் எழுச்சி கொள்ளவைக்கும் வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் அவை.  முகத்தை துணியால் மூடி கட்டியபடி திடீரென்று சைக்கிள்களில் தோன்றும் விடுதலை புலிகளின் மாணவர் அணி சந்திகளிலும் சந்தைகளிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விட்டு மறைந்து விடுகிறது.


யாழ்ப்பாண மாணவ சமுதாயத்திற்குள் ஏற்பட்ட இந்த எழுச்சியில் யாழ் இந்து கல்லூரி மாணவர்களும் யாழ் பரி யோவான் மாணவர்களும் பெரிதும் உள்வாங்கப்படுகிறார்கள்.  இந்திய இராணுவத்தினதும் மண்டையன் குழுவினரதும் சோதனை நடவடிக்கைகளில் நீலநிற யாழ் இந்து மாணவ அடையாள அட்டை வைத்திருப்போரும் சிவப்புநிற பரி யோவான் அடையாள அட்டை வைத்திருப்போரும் தனிக்கவனிப்பிற்கு உள்ளாகிறார்கள். 


யாழ்ப்பாணத்தின் முதலாவது மாவீரர் நாள் நிகழ்வு நீர்வேலியில் இடம்பெறுகிறது. இந்திய இராணுவத்தின் கடும் சுற்றி வளைப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முகத்தை துணியால் மூடி கட்டியபடி ஒரு மாணவன் ஆவேசமாக உரையாற்றுகிறான். உணர்ச்சி பொங்க உரையாற்றி கொண்டிருக்கும் போது ஒரு கணம் அவன் கட்டிய துணி அவிழ்கிறது. அந்த கணம் அவன் வாழ்வை அழிக்கப் போகிறது என்பதை அறியாமல், மீண்டும் துணியை கட்டிவிட்டு தனதுரையை தொடர்கிறான், அந்த உணர்வுமிகு மாணவன். 


அடுத்த வாரம், அவனது வீட்டை முற்றுகையிட்ட மண்டையன் குழுவினரால் அவன் கொண்டு செல்லப்படுகிறான். சக மாணவ செயற்பாட்டாளர்களை காட்டி கொடுக்க வைக்க அந்த மாணவனை மண்டையன் குழு கடுமையான சித்திரவதைக்குள்ளாக்குகிறது. அதற்காக முகத்தில் இரத்தம் சொட்ட சொட்ட கைகள் முற்கம்பியால் கட்டப்பட்ட நிலையில் குற்றுயிரும் குலை உயிருமாக பிரபல விஞ்ஞான ஆசிரியர் செல்வவடிவேல் நடாத்தும் தனியார் கல்வி நிறுவனமொன்றுக்கும் அழைத்து வரப்படுகிறான். 


சில நாட்களின் பின்பு துப்பாக்கி சன்னங்கள் துளைத்த அவனது உயிரற்ற உடல் வீதியோரத்திலிருந்து மீட்கப்படுகிறது. மீட்கப்பட்டது, யாழ் பரியோவான் 1989 கபொத உயர்தர பிரிவை சேர்ந்த தேவகுமார் எனும் மாணவனின் உடல். "அறிவாளி" என்ற பட்டபெயரால் அறியப்பட்ட தேவகுமார் உண்மையிலேயே ஒரு சிறந்த அறிவாளி. தேற்றங்களையும் சமன்பாடுகளையும் அநாயாசமாக நிறுவும், தீர்க்கும் ஆற்றல் படைத்த அதிபுத்திசாலி மாணவன்.  அவன் காவியமாகி சில வாரங்களில் வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளில் அவனது பெறுபேறு 3A C.

------------------------------
மாவீரர்களிற்கு எல்லோருமே இறப்பாலே உறவானவர்கள்" படலையில் ஜேகே

உண்மைதான், தனது இளமைக்கால இன்பங்களை துறந்து தனது தேசம் விடுதலை பெறவேண்டும் தன்னினம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக விடுதலை பயணம் சென்றவர்கள் எங்கள் மாவீரர்கள்.


விடுதலை பயணத்தில் அவர்கள் நடாத்திய வீரம் செறிந்த களங்கள் தமிழினித்திற்கு உயரிய அடையாளத்தையும் நம்பிக்கையையும் சுயகெளரவத்தையும் ஏற்படுத்தின.


எதிர்கொண்ட சவால்கள் இந்த அகிலமாக இருந்த போதிலும்கூட இலட்சியத்தை கைவிடாமல் இறுதிவரை போராடி காவியமான இலட்சிய புருஷர்கள் இவர்கள். 


இந்த மறவர்களின் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வதா அல்லது எமக்காக தம்முயிரை தியாகம் செய்தவர்களின் கனவை நனவாக்கும் வக்கற்றவர்களாய் வாழ்கிறோமே என்று வெட்கப்படுவதா ? 


எனக்காகவும் நம் இனத்திற்காகவும் எமது மண்ணின் விடிவிற்காகவும் உன் இன்னுயிரை தியாகம் செய்த சகோதரனே சகோதரியே,

என்னை மன்னித்து விடு..
உன்னோடு பயணிக்காமல் ஓடி ஒளிந்ததற்கு

என்னை மன்னித்து விடு..
உன் கனவுகளை நனவாக்கும் வல்லமையற்ற கோழையாக வாழ்வதற்கு

என்னை மன்னித்துவிடு.. 
நீ செய்த தியாகத்திற்கு நான் அருகதையானவனல்ல

மன்னிப்பாயா ? No comments:

Post a Comment