Thursday, 5 November 2015

1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:


யாழ் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான Big Matchகள் பரி யோவானில் படித்த காலத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள். 1985 முதல் 1989 வரையான காலப்பகுதிகளில் Big Match, கோட்டை பிரச்சினையால் இடம்பெறாமல் விட்டது. இதுவும் எங்கள் பாடசாலை வாழ்க்கையில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வுகளில் ஒன்று.


1980களில் இடம்பெற்ற இரு ஆட்டங்களை அந்த ஆட்டங்களை கண்டுகளித்த யாரும் மறக்க மாட்டார்கள். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்ட பரி யோவான் அணி, True Johnian Spiritஐ வெளிப்படுத்தின தருணங்கள் அவை. காலங்கள் கடந்தும் நினைவலைகளை விட்டகலாத போட்டிகள் இவை.


1983ல் மகிந்தா (ராஜபக்ஷவிற்கு சொந்தக்காரனில்லை) தலைமையில்  பல புதிய முகங்களை உள்ளடக்கிய பரி யோவான் அணி களமிறங்கியது. கடந்த ஆண்டில் தவறவிட்ட வெற்றிக்கனியை தட்டிபறிக்கும் வெறியோடு மிகப்பலமான மத்திய கல்லூரி அணி போல் பிரகலாதன் தலைமையில் போட்டியில் குதித்தது. 


முதலில் துடுப்பெடுத்தாடிய பரி யோவான் அணி, மத்திய கல்லூரியின் அபார பந்து வீச்சில் தடுமாற தொடங்கியது. 19 ஓட்டங்களிற்கு 3வது விக்கட்டை இழக்க, களமிறங்குகிறார் Captain Mahinda. "Centralஆல ஏலாது, ஏலுமேன்றா பண்ணிப்பார்" போன்ற கோஷங்கள் அடங்கி பரி யோவான் பாசறையில் ஒருவித மெளனம் குடிகொள்கிறது. மத்திய கல்லூரி அணியை உற்சாகபடுத்தும் வேம்படி மாணவிகளின் இரைச்சல் கலந்த சத்தம் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது.


42/5...விக்கட்டுக்கள் தொடர்ந்து விழ, விழ, விழ... "what's the matter.. Minor matter" என்ற கோஷமும் சோக கீதமாய் ஒலிக்கிறது. 7வது விக்கட் 69ல் விழ... பரி யோவான் மாணவர்கள் முகத்தில் சவக்களை. 9வது Batsman ஆக 15 வயது நிரம்பிய இளம் வீரனொருவன் களமிறங்குகிறான்.. T. Ragulan..baby of the team.


ஒரு பக்கத்தில் Mahinda அடித்து ஆட, மற்ற பக்கம் Ragulan மறித்து ஆட, கொஞ்சம் கொஞ்சமாக பரி யோவானின் முதலாவது இன்னிங்ஸ் மீள கட்டியெழுப்பப்படுகிறது.."What's the colour.. Red & Black" மீண்டும் முழங்க தொடங்குகிறது.


அணி 138 ஓட்டங்கள் எடுத்த வேளை Mahinda ஆட்டமிழக்கிறார். A true Captain's knock of 73, .. சனம் எழும்பி நின்று கைதட்டுது. Ragulanனின் பொறுமையான ஆட்டம் பரி யோவான் அணியின் முதல் இன்னிங்ஸை 171 ஓட்டங்களை எட்ட வைக்கிறது.


மத்தியகல்லூரியின் முதலாவது இன்னிங்ஸ் அதிரடியாக ஆரம்பிக்கிறது. வேகமாக ஓட்டங்களை குவித்த மத்திய கல்லூரி அணி முதலாவது நாள் ஆட்ட முடிவில் 154/2ஐ எட்டியது. அடுத்த நாள் காலையில் பரி யோவான் அணியினரின் அபாரமான களதடுப்பாலும் நுட்பமான பந்துவீச்சாலும் மத்திய கல்லூரியின் ஆட்டம் தொய்ந்து, 199/8 என்ற நிலையில் declare செய்யப்படுகிறது. பரி யோவான் அணியின் வேகபந்து வீச்சாளர் ஜெயேந்திரனின் 4/50, மத்திய கல்லூரி அணியினரை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பரி யோவான் அணி, மீண்டும் மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் திக்கு முக்காடுகிறது. இரண்டாவது நாள் lunch breakல் 40/3 என்ற நிலையில், தோல்வி..பின்னாளில் மண்டையன் குழுவின் கூடாரமாக மாறிய அசோக் ஹோட்டலடியில் வந்து நின்றது.


Lunchற்கு பிறகும் விக்கட்டுக்கள் மளமளவென சரிகின்றன.. 63/7. இதற்கிடையில் பரி யோவானின் இன்னுமொரு 15 வயது இளம் துடுப்பாட்டக்காரர் Nishyanthan மத்திய கல்லூரியினரின் பந்து வீச்சில் ஏற்பட்ட விரல் முறிவு காரணமாக தொடர்ந்து ஆடமுடியாமல் ஓய்வு பெறுகிறார். "Are we worried.. No no" மட்டும்.. ஈனஸ்வரத்தில் கேட்கிறது.


Teaக்கு முதல் match முடிஞ்சிடும்
என்ற நம்பிக்கையில் மத்திய கல்லூரி ஆதரவாளர்களின் ஆரவாம் விண்ணதிர்கிறது. பரி யோவான் கல்லூரி மாணவர்களோ இலங்கையின் ஆளும் UNP அமைச்சர்களால் எரித்து நாசமாக்கப்பட்ட யாழ் நூலகம் போல் சோபையிழந்து நிற்கிறார்கள். 


83/8... சங்கு சத்தம் பரி யோவான் மாணவர்களின் காதில் கேட்க, தோல்வி.. மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு முன்னேறியது. சில பரி யோவான் ஆதரவாளர்கள் சைக்கிள் தரிப்பிடம் நோக்கி விரைய.. விரல் முறிந்து வெளியேறிய Nishyanthan களமிறங்குகிறார்.. மறுமுனையில் Ragulan. இரு இளம் துடுப்பாட்டக்காரர்களும் துணிவோடு மத்திய கல்லூரி அணியினரின் பந்து வீச்சை எதிர்கொள்கிறார்கள். நொட்டி, தட்டி ஒருவாறு அணியின் எண்ணிக்கையை 103/8ற்கு கொண்டுவர...நடுவர்கள் Tea சொன்னார்கள். 


சுப்ரமணிய பூங்காவில் தண்ணி குடித்து முகம் கழுவி Shirtஆல துடைத்து விட்டு திரும்ப வந்து boundary lineற்கு கிட்ட அமருகிறோம்...போன வருஷம் விக்னபாலனும் விஜயராகவனும் செய்ததை Ragulaனும் Nishyanthaனும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்புடன்...நப்பாசை என்பது தான் சரியான சொல்லாடல். 


ஆனால் நடந்ததோ வேற, இடைவேளைக்கு பின் Nishyanthn அடித்து ஆட தொடங்கினார். Boundaryகள் விளாசினார்.. கொஞ்ச கொஞ்சமாக பரி யோவான் பாசறை பக்கம் சத்தம் வரத்தொடங்கியது.  


அணியின் எண்ணிக்கை 132ஜ எட்டிய போது Ragulan, LBW முறையில் ஆட்டமிழக்க.. மத்திய கல்லூரி அணி வெற்றியை அண்மிக்கிறது. பரி யோவான் அணியின் கடைசி துடுப்பாட்டகாரனான ஜெயேந்திரன் ஒரு typical no 11. அவரை பாதுகாத்தபடி Nishyanthan ஆடுகிறார். "Yanthan.. Yanthan.. Nishyanthan, Johnian yanthan.. Nishyanthan" கோஷங்கள் ஒவ்வொரு ஓட்டத்தையும் மகிமைப்படுத்துகின்றன. 


Nishyanthan பற்றி சில வரிகள். 1982ல் கொழும்பிலிருந்து வந்து பரி யோவானில் இணைந்தவர். Stylishஆக Bat பண்ணுவார், நடப்பார், கதைப்பார், ஓடுவார். அவர் பேசும் தமிழில் இங்கிலீஷ் வாடை அடிக்கும். 


20 mandatory overs வர இன்னும் நேரம் இருக்க, நேரம் கடத்த Nishyanthan கையாண்ட முறைகள் பிற்காலத்தில் இலங்கை அணியின் தலைவர் அர்ஜனா ரணதுங்கவை புனிதராக்க கூடியவை. ஒன்ற விட்ட ஒரு ஓவரிற்கு தண்ணி கேட்பது, padஜ கழற்றி திரும்ப போடுவது, shoe laceஐ கட்ட சொல்லுவது என்று Nishyanthan மத்திய கல்லூரி அணியினரதும் ஆதரவாளர்களதும் பொறுமையை சோதிக்கிறார். எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக ஒவ்வொரு ஓவர் தொடங்க முதலும் மைதானத்தில் 9 fielders தானா நிற்கிறார்கள் என்று confirm பண்ண, விரலால் சுட்டிகாட்டி எண்ணிபார்ப்பார். Nishyanthan விரல் விட்டு எண்ண எண்ண மத்திய கல்லூரி ஆதரவாளர்கள் அவரை தூஷணத்தால் அபிஷேகம் பண்ணினார்கள். மைதானத்தில் tension ஓ tension.. ஆனால் Nishyanthan மட்டும் cool as a cucumber. 


45 நிமிடங்கள் நீடித்த இந்த கடைசி விக்கெட்டுக்கான நாடகம், பரியோவான் அணிக்கு 37 ஓட்டங்களை சம்பாதித்தது.. ஜெயேந்திரன் எடுத்தது 1 ஓட்டம் மட்டுமே. Nishyanthan அற்புதமாக ஆடி 72 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கும் போது பரி யோவான் அணி தோல்வியிலிருந்து மீண்டிருந்தது.. அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 169. 14 ஓவர்களில் 141 ஓட்டங்களை பெறவேண்டி களமாடிய மத்திய கல்லூரியால் எட்ட முடிந்தது 80/1 மட்டுமே.தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்ட பரி யோவான் அணி கடைசி பந்துவரை போராடும் போர்க்குணத்தையும், பாடசாலையின் சுலோகமான Johnians always play the game என்பதை விளையாட்டு மைதானத்திலும் வாழ்ந்து காட்டியது. 


கிசுகிசு:
பரி யோவான் அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய Nishyanthanற்கு, match முடிய ஜந்து சுண்டுக்குளி பெட்டையள், லவ் லெட்டர் கொடுத்ததாக பாடசாலையில் பரவலாக பேசப்பட்டது. அதிலும் ஒரு கடித்தில் lipstickஆல் "ஜ லவ் யூ நிஷ்"என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாம். 

Johnians always play the Game !

2 comments:

  1. ஓல்ட் பாக்கில குண்டு போட்டாலும் கூட லீவே குடுக்காத சுண்டுக்குளி ஆக்கள், பிக்மட்ச்சுக்கு அரை நாள் லீவு குடுப்பினம். ஆசிரியர்கள் உட்பட எல்லாரும் மட்ச் பாக்கப் போக, நான் மட்டும் வீம்புக்கு நாளைக்கு இருக்கிற‌ எக்சாமுக்கு படிக்கிற மாதிரி கோகுலம் படிச்சிருக்கிறன். சென்ரலில் டீச்சர்மாருக்குக் கிடைக்கு பொக்சில் இருந்து பாக்கலாம் வா என்று கூப்பிட்ட நண்பியிடம் கூட‌, நான் சரியான பிசி ஆக்கும் வரேல்ல என்று வெறுப்பேத்தி இருக்கிறன் (காணததைக் கண்டது மாதிரி புத்தகம் படிக்கிற வியாதி தான்). ஹாஹா.


    பக்கத்தில படுத்திருக்கிற தம்பி, பிக்மட்ச் காலத்தில‌ "அடியடா மச்சான் பவுன்ரி சிக்சர்" என்று காலையும் கையையும் விசுக்கி அடிப்பதும் நடந்திருக்கு. கனவு நினைப்பில அடிச்சானோ இல்லை கனவு கண்டனான் போல என்று அடிக்க சாட்டு சொன்னானோ என்னவோ. கடவுளுக்குத் தான் தெரியும்.

    இதுக்கு மேலே டையை கழட்டு என்று அடாவடி செய்யும் சென்ரல் ஆக்கள், எங்கட இடத்துக்கு எப்படி வருவாய் என்டு விரட்டும் சென் ஜோன்ஸ் ஆக்கள். இதில் சுண்டிக்குளி ஹொஸ்டலுக்கு மேலெ தங்கட கொடியை நட்டுப் போட்டு போகிறவர்கள். எல்லாமே ஞாபகம் வருகிறது

    ReplyDelete
  2. ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே எழுபதுகளில் "இந்திரா,இந்திரா தெய்வேந்திரா,நவீனன் அண்ணா,தேவபாலன்,எத்தனை super johnians.thanks Kingsley.

    ReplyDelete