Thursday, 22 October 2015

IPKFன் தீபாவளி



1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது.


48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை புலிகளின் பலத்த எதிர்ப்பை முகம்கொள்கிறது. பல்கலைகழகம், கோட்டை, கோண்டாவில் என்று பல முனைகளில் பலமான இழப்பை இந்திய இராணுவம் சந்திக்கிறது. பலாலி, நாவற்குழி, யாழ் கோட்டை முனைகளில் இந்திய இராணுவம் உலங்குவானூர்திகளின் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சிக்கிறார்கள், கடும் சண்டையில் யாழ் மண் அதிர்கிறது. பல்கலைகழக வளாகத்தில் உலங்குவானூர்திகளில் வந்திறங்கிய சிறப்பு பரா அதிரடிப்படைகளால் புலிகளின் தலைமையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கையை புலிகள் தீரத்துடன் முறியடிக்கிறார்கள்.


ஓக்டோபர் 21, 1987 தீபாவளி நாள். அன்று காலை கோண்டாவில் பகுதியில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய தாங்கிகள் அழிக்கப்பட, புலிகள் தரப்பில் லெப்.கேணல் சந்தோஷம் வித்தாகிறார்.
கோட்டையில் இருந்து முன்னேறிய இந்திய படை சாந்தி தியேட்டரை அண்மித்த பகுதிகளில் நிலைகொள்கிறது. 


அன்று காலையிலிருந்து ஆஸ்பத்திரி பகுதியை நோக்கி ஷெல் வீச்சில் இந்திய இராணுவம் ஈடுபடுகிறது. ஒரு ஷெல் 8ம் இலக்க வார்ட்டில் விழுந்து 7 நோயாளர்கள் பலியாகினர். பிற்பகல் நான்கு மணியளவில் இந்திய இராணுவம் ஆஸ்பத்திரியின் முன் வாயிலூடாக கண்டபடி சுட்டுக்கொண்டு உள் நுழைகிறது. 8ம் இலக்க வார்ட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு Radiology அறையில் அடைக்கலம் புகுந்திருந்த நோயாளிகளும் ஊழியர்களும் இந்திய இராணுவத்தின் கொலை தாண்டவத்திற்கு முதற்பலியாகிறார்கள்.


அசுரனை அழித்த திருநாளில், இந்திய இராணுவ அசுரர்களின் கோர தாண்டவம் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகிறது. தண்ணி குடிக்க எழும்பினவன், காயத்தால் முனகினவன் என்று சத்தம் வந்த பக்கம் எல்லாம் போட்டு தள்ளுகிறது அமைதி காக்க வந்த படை. ஒரு அறையில் இருமல் சத்தம் கேட்க, இந்திய ஆமிகாரன் கிரனேட்டை கிளிப்பை கழற்றிவிட்டு இருமிய நோயாளி பக்கம் வீச, பக்கத்தில் படுத்திருந்த ஆம்புலன்ஸ் சாரதி உட்பட சிலர் பலியாகிறார்கள். 


இதேவேளை யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகள் ஷெல் சத்தத்தால் அதிர்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் ஆமி வெடி கொளுத்தி கொண்டாடுறாங்கள் என்று அவலத்திலும் சனம் நக்கலடித்தது. ஒபரேஷன் லிபரேஷன் காலத்தில் வெட்டிய பங்கர்கள் சமாதானம் வந்திட்டுது என்று நினைத்து சனம் மூட, ஊரில் இருந்த தேவாலயங்கள், கோயில்கள், பாடசாலைகள், மேல்மாடி வீடுகள் என்பன ஷெல் வீச்சிலிருந்து காக்கும் அரண்களாகின்றன. 


விண் கூவிக்கொண்டு பறக்கும் ஷெல்கள் எங்கேயிருந்து வருகின்றன எங்கே விழுகின்றன என்று புரியாமல் யாழ்ப்பாணம் கதிகலங்குகிறது.  ஷெல் குத்தும் சத்தத்தை வைத்து எத்தனை ஷெல்கள் லோட் பண்ணுறாங்கள் என்று எண்ணுவது, பிறகு விழுந்து வெடிக்கும் சத்தத்தை எண்ணி அந்த ரவுண்ட் முடிந்து விட்டது என்று நிம்மதியடைவது, கர்த்தரையும் முருகனையும் துணைக்கழைப்பது, கந்தசஷ்டியும் செபமும் பெலக்க சொல்வது, என்று தீபாவளி இரவை யாழ்ப்பாணம் உயிரை கையில் பிடித்தபடி கழிக்கிறது. 


ஆஸ்பத்திரியில் பிணங்களுக்கு அடியில் படுத்து பிணம் போல் நடித்து உயிர் பிழைக்கிறார்கள் நோயாளிகளும் மருத்துவர்களும் ஊழியர்களும். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் காயக்காரரை காப்பாற்றும் உன்னத நோக்கோடு" We surrender, we are innocent doctors and nurses" என்று ஆங்கிலத்தில் கத்தியபடி கைகளை உயர்த்தி கொண்டு மூன்று தாதிமார்களுடன் வெளியில் வந்த பிரபல மருத்துவர் சிவபாதசுந்தரம், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக்கு இரையாகிறார். 


ஒக்டோபர் 22ம் திகதி முற்பகல் வேளை இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் இராணுவ உயரதிகாரியின் வரவுடன் முடிவிற்கு வர, கையில் ஸ்டெதஸ்கோப்பை பிடித்தபடி மருத்துவர் கணேஷரட்னத்தின் உயிரற்ற உடலோடு 70 பேரின் உடல்கள் மீட்கப்படுகின்றன. ஈழநாதமும் முரசொலியும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு உதயன் முடக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த உடலங்கள் உறவினர்களிற்கு கையளிக்கப்படாமல் மரணவிசாரணை நடாத்தப்படாமல் எரியூட்டப்படுகின்றன. 


புலிகளிற்கும் இந்திய படைகளிற்கும் இடையில் நடந்த மோதலில் சிக்குண்டு பொதுமக்கள் இறந்ததாக இந்திய அமைதி படையின் தளபதி திபீந்தர் சிங் அறிக்கை விட்டார். இதைப்போன்ற படுகொலைகளுக்கு பின்னர் இந்திய அமைதி காக்கும் படையான IPKFக்கு, சனம் Indian People Killing Force என்று பெயரிட்டார்கள். இதுவும் Crime against Humanity தான். அன்றிலிருந்து இன்றுவரை கேட்க நாதியற்ற இனமாக நாங்கள் பயணிக்கிறோம்.


ஜெனிவாவை, ஏன் தமிழகத்தையே, எட்டாத இந்த ஆஸ்பத்திரி படுகொலையை நாங்கள் மட்டும் நினைவு கூற, இன்று வரை நீதிக்காக நியாயம் காத்திருக்கிறது.  அந்த நினைவு நாள் இந்த படுகொலை நாள் என்று வருஷம் முழுக்க விளக்கு கொளுத்தவும் அஞ்சலி செலுத்தவும் எங்களுக்கு ஏதாவது ஒன்று இருக்கும். விளக்கு கொளுத்தி கொளுத்தியே விளங்காமல் போன எங்கட இனத்திற்கு நலமான எதிர்காலம் துலங்குவது எப்போது ? 

1 comment:

  1. இந்த சம்பவம் பற்றி என்ட மாமி ஒருவர் (நேசாக இருந்தவா) நெடுக சொல்லுவா. அண்டைக்கு அவர்கள் உயிர் தப்பியதை நினைச்சால் ஆச்சரியமாக இருக்கு. இதை வாசிக்கச் சொல்லி அனுப்பி இருக்கிறன். :)

    நிற்க, உதையும் இயக்கம் தான் செஞ்சது என்று ஒரு பிரபல ஆங்கில (இலங்கை தமிழ்) எழுத்தாளர் மாத்தி எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இருந்தால் உண்மை என்டும் தமிழில் இருந்தா பொய் என்டும் நம்பும் கூட்டம் இப்பவும் இருக்கு. #கலிகாலம்

    ReplyDelete