Friday, 9 October 2015

ஜெனிவா... இனிவரும் காலங்கள்
50 ஆண்டுகளிற்கு முன்பு Thirtieth of September (G30S அல்லது Gestok) என்ற கம்யூனிச சார்பு இயக்கம் இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆட்சிகவிழ்ப்பு சதி முயற்சி முறியடிக்கப்படுகிறது. அடுத்து வரும் மாதங்களில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசால் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஜெனிவாவை அண்டாத இந்த அநியாயத்தில் அமெரிக்காவின் பங்குமிருப்பதாக இன்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


வண பிதா இம்மானுவேல் ஜெனிவாவின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டது போல், 80களில் தமிழர் தரப்பை சந்திக்க மறுத்த ஜநா, இன்று தமிழர்களிற்கு நடந்த அநியாயங்களை பட்டியிலிட்டு ஒரு நீண்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அத்தோடு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண பரிந்துரைகளையும் வழங்கியிருக்கிறது. அளப்பரிய விலைகள் கொடுத்து பயணிக்கும் எமது விடுதலை போராட்டத்தில் இதுவொரு முக்கியமான வரலாற்று நிகழ்வு.


ஜநா அறிக்கையை தொடர்ந்த அமெரிக்க பிரகடனத்தின் பிரகாரம், இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒரு தரப்பினரிடம் ஒப்படைத்திருப்பது எவ்வாறு நியாயப்படுத்தினாலும் நியாயமாகாது. அதுவும் இலங்கை அரசிடம் அவ்வாறான விசாரணை மேற்கொள்ள நீதிக்கட்டமைப்புகள் இல்லை, கடந்த காலங்களில் இலங்கை மேற்கொண்ட விசாரணைகள் முழுமைடையவில்லை என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இலங்கை அரசிடம் போர்குற்றங்களிற்கான நீதி வழங்கும் பொறிமுறையை ஒப்படைத்தது அநியாத்தின் உச்சக்கட்டம். இராணுவமயமாக்கல் நீக்கப்படல், மக்களின் காணிகள் மீள ஒப்படைத்தல், காணாமல் போனோர் பற்றிய விபரங்கள் வெளியிடல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கல்  குறித்த விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. 


மே 2009ல், முள்ளிவாய்க்காலில் ஆயுத போராட்டம் மெளனிக்கப்பட, ஜெனிவா என்ற களம் திறக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களில் இலங்கை அரசை எதிர்கொள்ள தமிழர் தரப்பிற்கு இருந்த ஒரே களம் ஜெனிவா. கடந்த வாரங்களில் வெளிவந்த ஜநாவின் அறிக்கையும் அதனை தொடர்ந்த அமெரிக்க பிரேரணையும் இந்த களத்திற்கு இன்னும் 18 மாதங்களிற்கு ஓய்வளித்திருக்கிறது. 


இந்த 18 மாதங்களை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப்போகிறது என்பதில் தான் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தியாகத்தாலும் மக்களின் உயிர் உடைமை இழப்புகளாலும் தொடரும் எமது விடுதலை பயணத்தின் முடிவு தங்கியிருக்கிறது. இந்த 18 மாத காலங்கள் தமிழர் தரப்பில் இணக்க அரசியல் செய்பவர்களிற்கும் எதிர்ப்பரசியல் செய்பவர்களிற்கும் ஒரு சமனான ஆடுகளத்தை திறந்து விட்டிருக்கிறது. 


எதிர்ப்பரசியலில் முன்னணி வகிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசு, இலங்கை அரசு எவ்வாறு ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்பதை கண்கானிக்க ஒரு சர்வதேச சட்ட வல்லுனர்களை கொண்ட குழுவை நியமிக்க இருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.  சம்பந்தன் தும்மினா குற்றம் சுமந்திரன் இருமினா குற்றம் என்று இவர்களை தாக்குவதையும் தூற்றுவதையும் தங்கள் முழுநேர செயற்பாடாக ஆக்கிகொண்ட நண்பர்களிற்கு, நமது எதிரியாம் சிங்கள பெளத்த பேரினவாதத்தை குறிவைத்து செயல்படும் TGTEயின் செயற்பாடுகள் முன்மாதிரியாகட்டும். அதே போல் தமிழ் சிவில் சமூகம் வெளியிட்ட அறிக்கையும் தமிழர் தரப்பின் ஜயங்களையும் சந்தேகங்களையும் பிரதிபலிக்கிறது.

இணக்க அரசியலிற்கு தலைமை தாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த சர்வதேச பிரேரணைகளை எச்சரிக்கையுடன் வரவேற்று, சர்வதேசத்தின் நல்லெண்ணெத்தை தான் சம்பாதித்திருப்பதாக கருதுகிறது. தமிழர் தரப்பை காப்பதாக கூறி களமிறங்கிய இந்தியாவை 1987ல் புலிகளிற்கு எதிராக திருப்பி வெற்றியடைந்தது சிங்கள இராஜதந்திரம். அதே போல் 2002ல், மேற்குலகின் அனுசரணையோடு சமபல நிலையில் பேச்சுவார்த்தைக்கு வந்த புலிகளை, சில ஆண்டுகளில் கனடாவும் ஜரோப்பாவும் தடை செய்ய, யுத்தத்திற்குள் தள்ளப்பட்ட புலிகளை அழிக்க அதே மேற்குலகின் ஆதரவை தனதாக்கிக்கொண்டது சிங்கள இராஜதந்திரம். 2002ல் யுத்த நிறுத்தத்தை கண்காணிக்க வந்த சர்வதேச கண்காணிப்பார்களின் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் பற்றி அளித்த அறிக்கை எமது தரப்பை பலவீனமடைய செய்வதில் பெரும்பங்கு வகித்தது. 


எப்போதெல்லாம் தமிழர் தரப்பிற்கு சார்பாக சர்வதேச சக்தி ஒன்று முன்வருகிறதோ அப்போதெல்லாம் அதனை இராஜதந்திர அணுகுமுறையூடாக தனக்கு சார்பாக மாற்றுவதில் சிங்கள தேசம் வெற்றி கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. இந்த வரலாற்று பின்புலத்தில் கூட்டமைப்பின் நகர்வுகள் கூர்மையடைய வேண்டியதும், சர்வதேச அரசியல் வல்லுனர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. 


ஜநா அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதும் போர்குற்ற சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எமது விடிவிற்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்து விடுதலை வேள்வியில் தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மறவர்களின் பேரால், இந்த குற்றங்களை தமிழ் சமூகம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகள் வேற்று கிரகவாசிகளல்ல, அவர்கள் எங்கள் உறவுகள். அவர்களின் வெற்றிகளை கொண்டாடிய நாங்கள் அவர்களின் வீழ்ச்சியிலும் பங்கேற்போம். ஒரு சமூகமாக எமக்கும் சுயபரிசோதனை ஒன்று அவசியம், அந்த சுயபரிசோதனையின் ஆரம்ப புள்ளி வட்டுக்கோட்டை பிரகடனமாக இருக்க வேண்டும். 


நீதி வேண்டியும் நிரந்தர அரசியல் தீர்வு நோக்கியும் பயணிக்கும் அதேவேளை பொருளாதார அபிவிருத்தியிலும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதாகிறது.  It's the economy stupid, என்ற சொல்லாடல் Bill Clintonன் 1992 தேர்தல் பரப்புரையின் போது பயன்பட்டது. எந்தவொரு நாட்டிற்கும் தேசிய இனத்திற்கும் பொருளாதார பலம் என்பது அதன் இருப்பை தக்க வைக்கவும் எதிர்காலத்தை பலப்படுத்தவும் அடித்தளமாக அமைகிறது, தமிழ் இனத்திற்கும் இது விதிவிலக்கல்ல. 


எழுந்திருக்கும் புதிய சூழலை சாதகமாக பயன்படுத்தி வட கிழக்கு மாகாண சபைகளும் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கு தலைமைத்துவம் தர முன்வரவேண்டும். புலம்பெயர் தேசமெங்கும் சிதறிகிடக்கும் வளங்களை ஒன்றிணைக்க தாயகத்தை தளமாக கொண்டியங்கும் சிந்தனை மையம் (Think Tank) ஒன்று தோற்றம் பெறவேண்டும். இந்த மையம், கூட்டமைப்பின் பொருளாதார ஆலோசனை அலகாக (Economic advisory unit) உருப்பெற்று, சீரிய சிந்தனைகளிற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.  


பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஒதுக்கப்படும் நிதி வளங்களை பயன்படுத்தலையும் சர்வதேச நிறுவனங்களுடனான தொடர்பாடலை மேற்கொள்வதையும் புலம்பெயர் சமூகத்துடனான ஒருங்கிணைப்பையும் நோக்கமாக கொண்டு இந்த சிந்தனை மையம் உருப்பெற வேண்டும்.  தாயகத்தின் பொருளாதா தேவைகளை கண்டறிந்து, நீண்டகால பொருளாதார அபிவிருத்தயை குறிக்கோளாக கொண்ட திட்டங்கள் வரைந்து தமிழர் தாயகத்தின் நிகழ்கால எதிர்கால இருப்பை தக்கவைக்கவும் அரசியல் சமூக செயற்பாடுகளிற்கு பலம் சேர்க்கவும் இந்த economy stupid அவசியமானது. 


"We will be remembered only if we give to our younger generation a prosperous and safe country, resulting out of economic prosperity coupled with civilizational heritage"
Abdul Kalam


இனிவரும் இனிவரும் காலங்கள், அவை எங்களின் காலங்கள்1 comment:

  1. //ஜநா அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதும் போர்குற்ற சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எமது விடிவிற்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்து விடுதலை வேள்வியில் தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மறவர்களின் பேரால், இந்த குற்றங்களை தமிழ் சமூகம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். //


    பேஸ்புக்கிலும் சரி, சில ஆங்கில ஊடகங்களில் எழுதும் தமிழர்களும் சரி (யார் என்டு விளங்கும் என்று நினைக்கிறன்) தமிழ் ப்ளொக்கர்களும் சரி இயக்கம் செய்யாததையும் இவர்கள் தான் செஞ்சவை என்று வாய் கூசாமல் சொல்லும் பொய்களால், எங்கள் குரல்கள் உலகுக்கு எட்டவே முடியவில்லை. அதை விட நாங்கள் படித்தவர்கள் நடுநிலையானவர்கள் என்று பிதற்றும் சிலர். இவர்களைப் பார்க்கும் போது Inferno இல் வரும் ஒரு கூற்று ஞாபகம் வருகிறது, "The darkest places in hell are reserved for those who maintain their neutrality in times of moral crisis."

    ReplyDelete