Thursday, 29 October 2015

ஜேகே என்கிற ஜொனியன்

“அவனா, ஒ குமரன், சென்ஜோன்ஸ்ல படிக்கிறாண்டி, கொஞ்சம் திமிர் பிடிச்சவன்”

“இருக்கட்டுமே, அவனிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு, வாடி கொஞ்சம் அவங்கட பக்கமா நகருவம்”

இந்த வசனங்களை தாங்கி வந்த ஒரு பதிவை வாசித்துவிட்டு, அதற்கு சில வாரங்களுக்கு முன்பு அறிமுகமான தம்பி பாலமுருகனை தொடர்பு கொண்டு இந்த ஜேகேயை தெரியுமா அவர் ஜொனியனா என்று கேட்டேன். பாலமுருகனூடாக கிடைத்த ஜேகேயின் நட்பு உண்மையில் ஒரு பொக்கிஷம். 


சென்.ஜோன்ஸில் படித்தவனென்றால் சுட்டு போட்டாலும் தமிழ் வராது என்ற மாயை உடைத்தவர் ஜேகே. பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் தமிழில் பேசினால் பாடசாலை மானத்தை வாங்குகிறோம் என்ற குற்றச்சாட்டு எழும். அதை துணிவுடன் எதிர்கொண்டு முதன்முதலாக மெல்பேர்ண் மண்ணில் தமிழிலும் பேசியவர் பிரேமன் ராஜதுரை. ஜேகே அதற்கும் அப்பால் சென்று பரி யோவான் கல்லூரி காலத்து நினைவுகளை தமிழில் ரசிக்கும்படி பதிவுசெய்து, பதிவிற்கு பதிவு நான் ஜொனியன் என்று முத்திரை பதித்தார். சில பழைய மாணவர்கள் ஜேகே பேசிய கூட்டங்களில் அவரை அணுகி "எப்பிடி இவ்வளவு அருமையாக தமிழ் கற்றீர்கள், உங்களை பார்க்க எங்களுக்கு பொறாமையாக இருக்கு" என்று சொன்னதை காதார கேட்டிருக்கிறேன். 


யாழ்ப்பாண மொழிநடையில் சுவாரசியமாக சொல்லாடி வாசகர்களை கவர்ந்திழுக்கும் கலையறிந்தவர் ஜேகே. அரசியல் முதல் விஞ்ஞானம் வரை பாடல்கள் தொடங்கி புத்தகங்கள் வரை ஜேகேயின் எழுத்துக்கள், வாசிப்போடு நின்று விடாமல் நம்மையும் இன்னும் தேடலுக்குள் தள்ளும் வன்மம் வாய்ந்தவை. ஜேகே அலசும் பாடல்களை நாமும் மீண்டும் ஆராய்வோம், அவர் ஆராய்ந்து எழுதும் புத்தக விமர்சனங்கள் எம்மையும் அதே புத்தகங்களை தேடி வாசிக்க வைக்கும். 


கடந்த ஆண்டு இதே வாரம், ஜேகேயின் "கொல்லைப்புறத்து காதலிகள்" புத்தக வெளியீடு மெல்பேர்ண் மண்ணில், யாழ் பரியோவான் கல்லூரி மெல்பேர்ண் பழைய மாணவர் சங்கம் மற்றும் நண்பன் ஜெயப்பிரகாஷ் சிறிகாந்தாவின் Jeylabs அணுசரணையில் அரங்கேறியது. விழாவும் ஜேகேயின் எழுத்துக்களை போல் புதுமையும் சுவாரசியமும் நிறைந்ததாக அமைத்திருந்தது. அகிலனும் கஜனும் இணைந்து இளையராஜாவின் பாடல்களை வைத்து படைத்த "ராஜாக்களின் சங்கமம்"இசை விருந்து விழாவிற்கு வந்தவர்களை மெய்மறக்க செய்தது. விசேஷமாக "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாடலில் அகிலன் செய்த புதுமை அருமை, பலதடவை ருசித்தும் திகட்டாத தேன்.


சென் ஜோன்ஸில் படித்தவனென்றால் முள்ளுக்கரண்டியால் chicken சாப்பிட்டுக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி Johnians always play the game என்று பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டம் என்ற மாயையை தகர்த்து.. யாழ் பரியோவானில் எமக்கு செந்தமிழும் தமிழ் பற்றும் தமிழ் தேசிய சிந்தனையும் ஊட்டியே வளர்க்கப்பட்டோம் என்பதற்கு சான்றாக ஜேகேயின் கொல்லைப்புறத்து காதலிகள் புத்தகம் மலர்ந்தது.


கொல்லைப்புறத்து காதலிகள் புத்தகம் 1990களின் யாழ்ப்பணாத்தை படம்பிடித்து காட்டும்  வரலாற்று பதிவு. "கடுமையான போர்க் காலத்திலும் யாழ்ப்பாண மக்கள் போரிற்குள்ளும் வாழ்ந்தார்கள் என்ற அந்த நம்பிக்கையை உறுதியை தெளிவுபட சொல்லும் இந்த நூல் போர்க்காலத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறை எப்படி தமது வாழ்க்கையை பார்க்கிறார்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது" என்று கம்பவாரிதி ஜேகேக்கு அனுப்பிய தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். 

தமிழர் வரலாற்றில், குறிப்பாக எமது தலைமுறையை பொறுத்தவரை, 90 களின் யாழ்ப்பாணம் முக்கியம் வாய்ந்தது. இந்த காலப்பகுதியை பல முனைகளில் வரலாறு பதிவு செய்துள்ளது.  

இந்த காலப்பகுதியின் சிறப்பம்சத்தை ஆயுதப்போராட்டத்தின் வளர்ச்சியூடாகவும் அதை தொடர்ந்த யாழ்ப்பாண இடப்பெயர்வு ஊடாகவும் அணுக முற்படுவது அரசியல் முனை. செல்லடி, பொம்மரடி, ஹெலியடி, அந்த operation, இந்த attack, உதயன் ஈழமுரசு special edition  தொட்டு பிரேமதாச போட்ட பீக்குண்டு, அவ்ரோ எனும் சகடை, சந்திரிக்காட யுத்த நிறுத்தம், கிளாலி to தாண்டிக்குளம் வரை என இன்னும் பல நிகழ்வுகள் இன்றும் எம்மை துரத்தும்...உறுத்தும்.


கலை இலக்கிய முனையில் கம்பவாரிதி தலைமையில் கம்பன் கழகத்தின் செல்வாக்கும் உள்ளூர் கலைஞர்களின் எழுச்சியையும் காலம் பதிவு செய்யும். நல்லூர் திருவிழா மற்றும் ஊர்திரு விழாக்கள் நாதஸ்வரம் தவிலோடும் பட்டிமன்றமும் களைகட்டிய கனாக்காலம் அது.


பொழுதுபோக்கு சாதனங்கள், குறிப்பாக தொலைக்காட்சி அற்ற சூழலில், உள்ளூர் பாடசாலை மற்றும் கழக கிரிக்கட் கால்பந்து விளையாட்டு வீரர்கள் நட்சத்திர அந்தஸ்தோடு கோலோச்சிய பொற்காலத்தை யாழ்ப்பாணம் மறந்தும் மறவாது.


வாழ்வியல் கண்ணோட்டத்தில், யாழ்ப்பாணம் என்றால் வீட்டிக்கொரு கிணறு என்ற சிறப்போடு வீட்டுக்கொரு பங்கர் என்ற அடையாளம் எட்டிய கொடிய காலங்கள் அவை. மண்ணெண்ணை விளக்கில் படித்தும் AL சோதனையில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவனை நினைத்து எங்கள் மண் என்றும் பெருமிதம் கொள்ளும்.


இந்த அனைத்து முனைகளயும் தனது படலைக்குள் அடைத்து கொல்லைப்புறத்து காதலிகள் படைத்திருந்தார் ஜேகே. இந்த கொல்லைப்புறத்து காதலிகள் ஒவ்வொறும் ஒவ்வொரு முனை மட்டுமல்ல, அவர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமும் கூட.

காதல் சொட்ட வைப்பாள் ஒருத்தி
கண்ணீர் வர வைப்பாள் இன்னொருத்தி

வாய்விட்டு சிரிக்க வைப்பாள் பிறிதொருத்தி
வாயடைக்க வைப்பாள் பிறத்தி

இவளோ பளார் என்று கன்னத்தில் அறைவாள்
ஆனால் அதோ அவளோ கன்னத்தில் முத்தமிடுவாள்

வியக்க வைக்க ஒருத்தி 
வியர்க்க வைக்க வேறொருத்தி

பக்கத்தில் பதுமையாய் ஒருத்தி
பதைபதைக்க வைக்க இன்னொருத்தி

சிலிர்க்க வைக்க அவள்
சிந்திக்க வைக்க இவள்

கடந்த ஆண்டில் அவரது புத்தகம் யாழ் மண்ணை அடைந்ததும் நல்லூர் திருவிழாவில் விற்று முடிந்ததும் யாழ் நூலகத்தில் நூலறிமுகம் இடம் பெற்றதும் உதயனில் அவர் பேட்டி வெளியானதும் அவரின் வளர்ச்சியின் அடையாளங்கள். நேற்று ஜேகே பதிவு செய்திருக்கும் ஊரோச்சம் என்ற பதிவில் தமிழ் சமுதாயம் பற்றியும் விடுதலை போராட்டம் பற்றியும் அவர் முன்வைத்திருக்கும் சிந்தனைகள் அவரது சிந்தனை முதிர்ச்சியையும் தமிழ் இனத்தின் சிந்தனையோட்டத்தை சீரியவழியில் துணிச்சலுடன் நெறிப்படுத்த அவர் தயாராகிவிட்டார் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக கருதுகிறேன். ஜேகே போன்ற சீரிய சிந்தனையாளர்களின் கருத்துக்களை தமிழ் சமூகம் உள்வாங்கும் என்பது எனது அவாவும் நம்பிக்கையும்.

ஜேகே தமிழ் இனத்தின் ஒரு குரலாக தொடர்ந்து ஒலிக்க வேண்டும், அவரது எழுத்துக்கள் எமது இனத்தின் பெருமையயும் விழுமியங்களயும் சான்று பகர வேண்டும். அவரது கருத்துக்கள் எமது தமிழ் இனத்தின் நம்பிக்கையயும் வேட்கையயும் பிரதிபலிக்க வேண்டும்.

தாய்மண்ணை பிரிந்தாலும் மண் மணம் மாறாமல் இனப்பற்று தழும்பால் சுவாரஸியமாகவும் அதேவேளை நிறைவான பொருளோடும் இலக்கிய களமாடும் ஜேகே மேலும் மேலும் படைப்புக்கள் படைக்க வாழ்த்துகள்.Friday, 23 October 2015

நாங்களும் ரெளடிதான்வெள்ளியிரவு இன்பத்தமிழ் வானொலியின் ஆனந்த இரவை மிஸ் பண்ணிட்டு மிஸ்ஸிஸ்ஸோட பார்த்த மிஸ் பண்ணக்கூடாத, கிஸ்ஸை மையமாக கொண்ட படம் நானும் ரெளடிதான்.

நயன்தாராவின் அழகை ஆராதிப்பதா நடிப்பை ரசிப்பதா என்ற மனதுக்குள் பட்டிமன்றம் நடந்து முடிய முதல் படம் முடிஞ்சிட்டுது. அரங்கு நிறைந்த காட்சியில் அழகான வசனங்களிற்கு சனம் வாய்விட்டு சிரிச்சது, இந்த படம் பிச்சுக்கொண்டு ஓடப்போவதை கட்டியம் கூறியது. பெண்கள் மீசையில்லாத வி.சேதுபதியை ரசிக்க ஆண்கள் நயன்தாராவை ஜொள்ளு விட்ட சமரசம் உலாவும் இடம், நானும் ரெளடிதான்.


நயன்தாராவை முத்தமிட போன வி.சேதுபதியை மடக்கி, நெருக்கம் விலக்காமால் நயன் பேசிய வசனம்... ப்பா...கிளாசிக். ஒரு பாடல் காட்சியில் கட்டுமரத்தில் நயன்தாரா ஏறி நிற்க வி.சேதுபதி ஆற்றில் இழுத்து கொண்டு போவார்... ரொமான்ஸ் பாஸ் ரொமான்ஸ்.. உச்சகட்ட ரொமான்ஸ். ஒவ்வொரு முறையும் வி.சேதுபதி "ஆர் யு ஓகே பேபி" என்று நயன்தாராவை பார்த்து கேட்பதும் அதற்கு நயன் கொடுக்கும் reactionம்... Priceless.

நயன்தாரா அடிக்க தேடிய அந்த ரெட் டீஷேர்ட் காரன் , ராதிகாவின் "கொத்தமல்லி கொழுந்து", வி.சேதுபதியின் கண்கள், பார்த்திபனின் ஆணவம் என்று படத்தில் கனக்க அருமையான காட்சிகள். அனிருத்தின் பாடல்கள் அருமை, ஆனால் எல்லா பாட்டையும் அவரே பாடுறது கொஞ்சம் ஓவர். "தங்கமே உன்னை நான்".. பாடல் முணுமுணுக்க வைக்கும்.. இசை பிரியர்களை மட்டும்.


அதே அரண பழைய பழிவாங்கும் கதையை வி.சேதுபதி + நயன்தாரா combo வில் சிம்பிளான சிரிக்க வைக்கும் வசனங்களுடனும் நல்ல ஆஜானுபாகுவான வில்லன்களுடன் கலந்து விருந்து படைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கு வாழ்த்துக்கள்.நயனில் மிரஸலாகி படம் பார்த்திட்டு வீட்ட வந்து iPhoneஜ திறந்தா இரு அதிர்ச்சி செய்திகள் காத்து கிடக்குது, நான் அப்படியே ஷாக்காயிட்டேன்..


"சிங்கள சமூகத்திற்கு புகழ் பெற்ற வரலாறு உண்டு - ஆனால் நான் அந்த சமூகத்தை சேர்ந்தவன் அல்ல. எனக்கு என்னுடைய பாரம்பரியம் உண்டு - அதுவும் புகழ் பெற்ற பாரம்பரியம். நீங்கள் தனிச் சிங்கள அரசு வேண்டும் என்று கூறினால், எங்களை எங்களுக்காக ஒரு தனி அரசை தேட கட்டாயப்படுத்துகிறீர்கள்" தானை தளபதி சுமா முழக்கம்

என் கொத்தமல்லி கொழுந்து !


"தனியான சிங்கள தேசத்தினை உருவாக்குவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளை முனைப்போடு செயற்படுவார்களேயானால், தனித் தமிழ்த் தேசம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது" மாவை அண்ணன் கர்ஜிப்பு.

நாங்களும் ரெளடிதான் !

பனடோல் குடிச்சிட்டு படுத்திருந்த புலிகளை உசுப்பேத்தி எழுப்பி விட்ட சிங்கள பேரினவாத தோழர்களிற்கு நன்றிகள்..

ஆர் யு ஓகே பேபி(ஸ்) !

Thursday, 22 October 2015

IPKFன் தீபாவளி1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது.


48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை புலிகளின் பலத்த எதிர்ப்பை முகம்கொள்கிறது. பல்கலைகழகம், கோட்டை, கோண்டாவில் என்று பல முனைகளில் பலமான இழப்பை இந்திய இராணுவம் சந்திக்கிறது. பலாலி, நாவற்குழி, யாழ் கோட்டை முனைகளில் இந்திய இராணுவம் உலங்குவானூர்திகளின் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சிக்கிறார்கள், கடும் சண்டையில் யாழ் மண் அதிர்கிறது. பல்கலைகழக வளாகத்தில் உலங்குவானூர்திகளில் வந்திறங்கிய சிறப்பு பரா அதிரடிப்படைகளால் புலிகளின் தலைமையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கையை புலிகள் தீரத்துடன் முறியடிக்கிறார்கள்.


ஓக்டோபர் 21, 1987 தீபாவளி நாள். அன்று காலை கோண்டாவில் பகுதியில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய தாங்கிகள் அழிக்கப்பட, புலிகள் தரப்பில் லெப்.கேணல் சந்தோஷம் வித்தாகிறார்.
கோட்டையில் இருந்து முன்னேறிய இந்திய படை சாந்தி தியேட்டரை அண்மித்த பகுதிகளில் நிலைகொள்கிறது. 


அன்று காலையிலிருந்து ஆஸ்பத்திரி பகுதியை நோக்கி ஷெல் வீச்சில் இந்திய இராணுவம் ஈடுபடுகிறது. ஒரு ஷெல் 8ம் இலக்க வார்ட்டில் விழுந்து 7 நோயாளர்கள் பலியாகினர். பிற்பகல் நான்கு மணியளவில் இந்திய இராணுவம் ஆஸ்பத்திரியின் முன் வாயிலூடாக கண்டபடி சுட்டுக்கொண்டு உள் நுழைகிறது. 8ம் இலக்க வார்ட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு Radiology அறையில் அடைக்கலம் புகுந்திருந்த நோயாளிகளும் ஊழியர்களும் இந்திய இராணுவத்தின் கொலை தாண்டவத்திற்கு முதற்பலியாகிறார்கள்.


அசுரனை அழித்த திருநாளில், இந்திய இராணுவ அசுரர்களின் கோர தாண்டவம் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகிறது. தண்ணி குடிக்க எழும்பினவன், காயத்தால் முனகினவன் என்று சத்தம் வந்த பக்கம் எல்லாம் போட்டு தள்ளுகிறது அமைதி காக்க வந்த படை. ஒரு அறையில் இருமல் சத்தம் கேட்க, இந்திய ஆமிகாரன் கிரனேட்டை கிளிப்பை கழற்றிவிட்டு இருமிய நோயாளி பக்கம் வீச, பக்கத்தில் படுத்திருந்த ஆம்புலன்ஸ் சாரதி உட்பட சிலர் பலியாகிறார்கள். 


இதேவேளை யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகள் ஷெல் சத்தத்தால் அதிர்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் ஆமி வெடி கொளுத்தி கொண்டாடுறாங்கள் என்று அவலத்திலும் சனம் நக்கலடித்தது. ஒபரேஷன் லிபரேஷன் காலத்தில் வெட்டிய பங்கர்கள் சமாதானம் வந்திட்டுது என்று நினைத்து சனம் மூட, ஊரில் இருந்த தேவாலயங்கள், கோயில்கள், பாடசாலைகள், மேல்மாடி வீடுகள் என்பன ஷெல் வீச்சிலிருந்து காக்கும் அரண்களாகின்றன. 


விண் கூவிக்கொண்டு பறக்கும் ஷெல்கள் எங்கேயிருந்து வருகின்றன எங்கே விழுகின்றன என்று புரியாமல் யாழ்ப்பாணம் கதிகலங்குகிறது.  ஷெல் குத்தும் சத்தத்தை வைத்து எத்தனை ஷெல்கள் லோட் பண்ணுறாங்கள் என்று எண்ணுவது, பிறகு விழுந்து வெடிக்கும் சத்தத்தை எண்ணி அந்த ரவுண்ட் முடிந்து விட்டது என்று நிம்மதியடைவது, கர்த்தரையும் முருகனையும் துணைக்கழைப்பது, கந்தசஷ்டியும் செபமும் பெலக்க சொல்வது, என்று தீபாவளி இரவை யாழ்ப்பாணம் உயிரை கையில் பிடித்தபடி கழிக்கிறது. 


ஆஸ்பத்திரியில் பிணங்களுக்கு அடியில் படுத்து பிணம் போல் நடித்து உயிர் பிழைக்கிறார்கள் நோயாளிகளும் மருத்துவர்களும் ஊழியர்களும். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் காயக்காரரை காப்பாற்றும் உன்னத நோக்கோடு" We surrender, we are innocent doctors and nurses" என்று ஆங்கிலத்தில் கத்தியபடி கைகளை உயர்த்தி கொண்டு மூன்று தாதிமார்களுடன் வெளியில் வந்த பிரபல மருத்துவர் சிவபாதசுந்தரம், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக்கு இரையாகிறார். 


ஒக்டோபர் 22ம் திகதி முற்பகல் வேளை இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் இராணுவ உயரதிகாரியின் வரவுடன் முடிவிற்கு வர, கையில் ஸ்டெதஸ்கோப்பை பிடித்தபடி மருத்துவர் கணேஷரட்னத்தின் உயிரற்ற உடலோடு 70 பேரின் உடல்கள் மீட்கப்படுகின்றன. ஈழநாதமும் முரசொலியும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு உதயன் முடக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த உடலங்கள் உறவினர்களிற்கு கையளிக்கப்படாமல் மரணவிசாரணை நடாத்தப்படாமல் எரியூட்டப்படுகின்றன. 


புலிகளிற்கும் இந்திய படைகளிற்கும் இடையில் நடந்த மோதலில் சிக்குண்டு பொதுமக்கள் இறந்ததாக இந்திய அமைதி படையின் தளபதி திபீந்தர் சிங் அறிக்கை விட்டார். இதைப்போன்ற படுகொலைகளுக்கு பின்னர் இந்திய அமைதி காக்கும் படையான IPKFக்கு, சனம் Indian People Killing Force என்று பெயரிட்டார்கள். இதுவும் Crime against Humanity தான். அன்றிலிருந்து இன்றுவரை கேட்க நாதியற்ற இனமாக நாங்கள் பயணிக்கிறோம்.


ஜெனிவாவை, ஏன் தமிழகத்தையே, எட்டாத இந்த ஆஸ்பத்திரி படுகொலையை நாங்கள் மட்டும் நினைவு கூற, இன்று வரை நீதிக்காக நியாயம் காத்திருக்கிறது.  அந்த நினைவு நாள் இந்த படுகொலை நாள் என்று வருஷம் முழுக்க விளக்கு கொளுத்தவும் அஞ்சலி செலுத்தவும் எங்களுக்கு ஏதாவது ஒன்று இருக்கும். விளக்கு கொளுத்தி கொளுத்தியே விளங்காமல் போன எங்கட இனத்திற்கு நலமான எதிர்காலம் துலங்குவது எப்போது ? 

Thursday, 15 October 2015

Cricketஉம் நானும்ஜந்து வயதில் 
அப்பா வாங்கித்தந்தார் Bat.
நினைவறிந்தவரை, அன்று தான்
"விசர்" கருத்தரித்தது.


Shot wavesல் ABC, BBC தேடி
சாமத்திலும் commentary கேட்டு
Daily Newsல் கடைசி பக்கம் 
முதலில் வாசித்து
Sports Star ஓடி வாங்கி
நாளொரு வண்ணம் "விசர்" வளர்ந்தது


St. John'sல், school
தொடங்க முதல் விளையாடி
முடிஞ்சா பிறகும் விளையாடி
Intervalல் விளையாடி
Book cricketஉம் விளாயாடி
பொழுதொரு வண்ணம் 
 "விசர்" பெருத்தது. 


ஆறு மணியடித்ததும் நண்பர்களின்
ஏச்சுக்கும் நக்கலிற்கும் மத்தியில் 
Match இடைநடுவில், 
வீடு திரும்ப வேண்டிய கட்டுப்பாடு,
இல்லாட்டி "வீடு" groundsற்கு வரும்.


வார இறுதியில், match விளையாட
வீட்டு வேலை செய்து, தேற்றம் நிறுவி
கிழமைக்கொரு ஆட்டம் என்ற quota 
என தியாக வேள்வியானது "விசர்"


விடுமுறை நாட்களில்
காலை மாலை என
ஊர் ஊராய் போய் 
விளாயாடின matchகள்
"வீடு" அறியாது. 


பாடசாலை அணியில் இடம் 
கிடைக்காத விரக்தியும் 
O/L, A/L, CIMA படிப்பு 
என்று வந்ததும்
"விசர்" அடங்கி போனது 
என்னவோ உண்மை தான்.


வேலை கிடைத்து settle ஆனதும் 
"விசர்" மீண்டும் மரமேறியது.
நிஜ honeymoon காணும்வரை
"விசர்" honeymoon
கொண்டாடி மகிழ்ந்தது.


கலியாணம் காட்சி காண
மீண்டும் தியாகங்கள் தொடங்கின.
Mowing, vacuuming, cleaning
Shopping, nappy changing  
என பட்டியல் மாறியது..நீண்டது


"ஆசீர்வாதம்" பெற்று car ஏறி
Stephen Coveyஐயும் வைரமுத்துவையும்
Motivationக்கும் refocusக்கும்
துணைக்கு அழைத்து,
நண்பனின் கடியிலும்
நாலு warmup deliveryயிலும் 
"விசரிற்கு" உற்சாகம் பீறிட
"வீடு" மறந்து 
விளையாட்டு தொடங்கியது.


Ballஐ கையிலெடுத்து, 
ஒருகணம் கண்மூடி 
focus பண்ணினால்
தெரிந்தது தியாகங்கள் 
சோதனைகள் வேதனைகள் தான்.


"விசரிற்கு" விசர் வந்து
முதல் பந்தை ஆக்ரோஷமாய் வீச
Wide ball என்று umpi கடுப்பேத்த
Come on come on என்று 
team கத்தியது


மீண்டும் car ஏறி
இளையராஜாவின் சோகப்பாட்டு,
Deep heat, Hot Bag,
Physio, Sickie என்று
மனம் பதைபதைத்தது..


ஒரு நாள் விசர்த்தனமா 
கிட்ட field பண்ணி,
விசரன் மாதிரி catch பிடிக்க போய் 
மூக்கில் பந்து செல்லமாய் முத்தமிட
ambulance..hospital..fracture..
பட்ட வேதனை இன்னும் மறக்கல்ல


நாட்டுக்காக சிந்தாத ரத்தம் 
"விசரிற்காக" சிந்தியது பெருமை,
ஆனால் பொடியளிடம் கடி வாங்கும் 
போது வலிக்கும்..ஆனா வலிக்காது..


என்றாலும் "விசரிற்கு" 
இது எல்லாம் சகஜமப்பா
நாங்க அப்பவே அப்பிடியாம்..
15ல் வளைக்காததை
40ல் வளைக்க நிற்குது
என்று தணியும் இந்த "விசரின்" மோகம்
அன்று அடங்கும் எந்தன் தேகம் 
என்று வீரவசனம் வேற..

பார்க்கலாம் பார்க்கலாம்
Friday, 9 October 2015

ஜெனிவா... இனிவரும் காலங்கள்
50 ஆண்டுகளிற்கு முன்பு Thirtieth of September (G30S அல்லது Gestok) என்ற கம்யூனிச சார்பு இயக்கம் இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆட்சிகவிழ்ப்பு சதி முயற்சி முறியடிக்கப்படுகிறது. அடுத்து வரும் மாதங்களில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசால் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஜெனிவாவை அண்டாத இந்த அநியாயத்தில் அமெரிக்காவின் பங்குமிருப்பதாக இன்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


வண பிதா இம்மானுவேல் ஜெனிவாவின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டது போல், 80களில் தமிழர் தரப்பை சந்திக்க மறுத்த ஜநா, இன்று தமிழர்களிற்கு நடந்த அநியாயங்களை பட்டியிலிட்டு ஒரு நீண்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அத்தோடு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண பரிந்துரைகளையும் வழங்கியிருக்கிறது. அளப்பரிய விலைகள் கொடுத்து பயணிக்கும் எமது விடுதலை போராட்டத்தில் இதுவொரு முக்கியமான வரலாற்று நிகழ்வு.


ஜநா அறிக்கையை தொடர்ந்த அமெரிக்க பிரகடனத்தின் பிரகாரம், இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒரு தரப்பினரிடம் ஒப்படைத்திருப்பது எவ்வாறு நியாயப்படுத்தினாலும் நியாயமாகாது. அதுவும் இலங்கை அரசிடம் அவ்வாறான விசாரணை மேற்கொள்ள நீதிக்கட்டமைப்புகள் இல்லை, கடந்த காலங்களில் இலங்கை மேற்கொண்ட விசாரணைகள் முழுமைடையவில்லை என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இலங்கை அரசிடம் போர்குற்றங்களிற்கான நீதி வழங்கும் பொறிமுறையை ஒப்படைத்தது அநியாத்தின் உச்சக்கட்டம். இராணுவமயமாக்கல் நீக்கப்படல், மக்களின் காணிகள் மீள ஒப்படைத்தல், காணாமல் போனோர் பற்றிய விபரங்கள் வெளியிடல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கல்  குறித்த விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. 


மே 2009ல், முள்ளிவாய்க்காலில் ஆயுத போராட்டம் மெளனிக்கப்பட, ஜெனிவா என்ற களம் திறக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களில் இலங்கை அரசை எதிர்கொள்ள தமிழர் தரப்பிற்கு இருந்த ஒரே களம் ஜெனிவா. கடந்த வாரங்களில் வெளிவந்த ஜநாவின் அறிக்கையும் அதனை தொடர்ந்த அமெரிக்க பிரேரணையும் இந்த களத்திற்கு இன்னும் 18 மாதங்களிற்கு ஓய்வளித்திருக்கிறது. 


இந்த 18 மாதங்களை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப்போகிறது என்பதில் தான் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தியாகத்தாலும் மக்களின் உயிர் உடைமை இழப்புகளாலும் தொடரும் எமது விடுதலை பயணத்தின் முடிவு தங்கியிருக்கிறது. இந்த 18 மாத காலங்கள் தமிழர் தரப்பில் இணக்க அரசியல் செய்பவர்களிற்கும் எதிர்ப்பரசியல் செய்பவர்களிற்கும் ஒரு சமனான ஆடுகளத்தை திறந்து விட்டிருக்கிறது. 


எதிர்ப்பரசியலில் முன்னணி வகிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசு, இலங்கை அரசு எவ்வாறு ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்பதை கண்கானிக்க ஒரு சர்வதேச சட்ட வல்லுனர்களை கொண்ட குழுவை நியமிக்க இருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.  சம்பந்தன் தும்மினா குற்றம் சுமந்திரன் இருமினா குற்றம் என்று இவர்களை தாக்குவதையும் தூற்றுவதையும் தங்கள் முழுநேர செயற்பாடாக ஆக்கிகொண்ட நண்பர்களிற்கு, நமது எதிரியாம் சிங்கள பெளத்த பேரினவாதத்தை குறிவைத்து செயல்படும் TGTEயின் செயற்பாடுகள் முன்மாதிரியாகட்டும். அதே போல் தமிழ் சிவில் சமூகம் வெளியிட்ட அறிக்கையும் தமிழர் தரப்பின் ஜயங்களையும் சந்தேகங்களையும் பிரதிபலிக்கிறது.

இணக்க அரசியலிற்கு தலைமை தாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த சர்வதேச பிரேரணைகளை எச்சரிக்கையுடன் வரவேற்று, சர்வதேசத்தின் நல்லெண்ணெத்தை தான் சம்பாதித்திருப்பதாக கருதுகிறது. தமிழர் தரப்பை காப்பதாக கூறி களமிறங்கிய இந்தியாவை 1987ல் புலிகளிற்கு எதிராக திருப்பி வெற்றியடைந்தது சிங்கள இராஜதந்திரம். அதே போல் 2002ல், மேற்குலகின் அனுசரணையோடு சமபல நிலையில் பேச்சுவார்த்தைக்கு வந்த புலிகளை, சில ஆண்டுகளில் கனடாவும் ஜரோப்பாவும் தடை செய்ய, யுத்தத்திற்குள் தள்ளப்பட்ட புலிகளை அழிக்க அதே மேற்குலகின் ஆதரவை தனதாக்கிக்கொண்டது சிங்கள இராஜதந்திரம். 2002ல் யுத்த நிறுத்தத்தை கண்காணிக்க வந்த சர்வதேச கண்காணிப்பார்களின் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் பற்றி அளித்த அறிக்கை எமது தரப்பை பலவீனமடைய செய்வதில் பெரும்பங்கு வகித்தது. 


எப்போதெல்லாம் தமிழர் தரப்பிற்கு சார்பாக சர்வதேச சக்தி ஒன்று முன்வருகிறதோ அப்போதெல்லாம் அதனை இராஜதந்திர அணுகுமுறையூடாக தனக்கு சார்பாக மாற்றுவதில் சிங்கள தேசம் வெற்றி கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. இந்த வரலாற்று பின்புலத்தில் கூட்டமைப்பின் நகர்வுகள் கூர்மையடைய வேண்டியதும், சர்வதேச அரசியல் வல்லுனர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. 


ஜநா அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதும் போர்குற்ற சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எமது விடிவிற்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்து விடுதலை வேள்வியில் தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மறவர்களின் பேரால், இந்த குற்றங்களை தமிழ் சமூகம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகள் வேற்று கிரகவாசிகளல்ல, அவர்கள் எங்கள் உறவுகள். அவர்களின் வெற்றிகளை கொண்டாடிய நாங்கள் அவர்களின் வீழ்ச்சியிலும் பங்கேற்போம். ஒரு சமூகமாக எமக்கும் சுயபரிசோதனை ஒன்று அவசியம், அந்த சுயபரிசோதனையின் ஆரம்ப புள்ளி வட்டுக்கோட்டை பிரகடனமாக இருக்க வேண்டும். 


நீதி வேண்டியும் நிரந்தர அரசியல் தீர்வு நோக்கியும் பயணிக்கும் அதேவேளை பொருளாதார அபிவிருத்தியிலும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதாகிறது.  It's the economy stupid, என்ற சொல்லாடல் Bill Clintonன் 1992 தேர்தல் பரப்புரையின் போது பயன்பட்டது. எந்தவொரு நாட்டிற்கும் தேசிய இனத்திற்கும் பொருளாதார பலம் என்பது அதன் இருப்பை தக்க வைக்கவும் எதிர்காலத்தை பலப்படுத்தவும் அடித்தளமாக அமைகிறது, தமிழ் இனத்திற்கும் இது விதிவிலக்கல்ல. 


எழுந்திருக்கும் புதிய சூழலை சாதகமாக பயன்படுத்தி வட கிழக்கு மாகாண சபைகளும் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கு தலைமைத்துவம் தர முன்வரவேண்டும். புலம்பெயர் தேசமெங்கும் சிதறிகிடக்கும் வளங்களை ஒன்றிணைக்க தாயகத்தை தளமாக கொண்டியங்கும் சிந்தனை மையம் (Think Tank) ஒன்று தோற்றம் பெறவேண்டும். இந்த மையம், கூட்டமைப்பின் பொருளாதார ஆலோசனை அலகாக (Economic advisory unit) உருப்பெற்று, சீரிய சிந்தனைகளிற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.  


பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஒதுக்கப்படும் நிதி வளங்களை பயன்படுத்தலையும் சர்வதேச நிறுவனங்களுடனான தொடர்பாடலை மேற்கொள்வதையும் புலம்பெயர் சமூகத்துடனான ஒருங்கிணைப்பையும் நோக்கமாக கொண்டு இந்த சிந்தனை மையம் உருப்பெற வேண்டும்.  தாயகத்தின் பொருளாதா தேவைகளை கண்டறிந்து, நீண்டகால பொருளாதார அபிவிருத்தயை குறிக்கோளாக கொண்ட திட்டங்கள் வரைந்து தமிழர் தாயகத்தின் நிகழ்கால எதிர்கால இருப்பை தக்கவைக்கவும் அரசியல் சமூக செயற்பாடுகளிற்கு பலம் சேர்க்கவும் இந்த economy stupid அவசியமானது. 


"We will be remembered only if we give to our younger generation a prosperous and safe country, resulting out of economic prosperity coupled with civilizational heritage"
Abdul Kalam


இனிவரும் இனிவரும் காலங்கள், அவை எங்களின் காலங்கள்Thursday, 1 October 2015

பரி யோவான் பொழுதுகள்
1979ல் Cemetryக்கு அந்த பக்கமிருக்கும் Primary school gateக்கால நுழைந்து 1990ல் Cemetryக்கு இந்த பக்கமிருக்கும் Main gateக்கால வெளிக்கிட மட்டும், பரி யோவானில் கழித்த பொழுதுகள் இனிமையானவை, பசுமையானவை. பரி யோவானின் பரந்த வளாகத்திற்குள் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையை செதுக்கிய உன்னத சிற்பிகள், அதனுள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வாழ வழிகாட்டிய வாழ்க்கைப் பாடங்கள். 


அந்த காலத்தில் பரி யோவானின் Primary school மிகவும் குளிர்ச்சியானது...அங்கு இருக்கும் பெரிய மரங்களால் மட்டுமல்ல, அங்கு கற்பிக்கும் இளம் ஆசிரியைகளாலும் தான். சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் AL முடிக்கும் மாணவிகள் அடுத்த வருடம் பரி யோவானில் அழகிய பாலர் வகுப்பு ஆசிரியைகளாக அவதாரம் எடுப்பார்கள். Primary school Head Masterக்கு "அந்தப்புரத்து காவலன்" என்ற பட்டம் வழங்கி, சிரேஷ்ட மாணவ தலைவர்கள் கெளரவிப்பார்கள். 


LKGல் Louise Miss, 1ம் வகுப்பில் John Miss, 2ம் வகுப்பில் Sivaguru Miss என்ற மென்வலுக்களை கடந்து 3ம் வகுப்பில காலடி எடுத்து வைக்க.. வன்வலு காத்திருந்தது. 


3ம் வகுப்பில் Joshua master, class teacher. அடி பின்னி எடுத்திட்டார். அவர் முன்னாள் Senior Prefect வேற, ஒழுக்கம் கட்டுப்பாடு எல்லாம் கொஞ்சம் ஓவரா கடைபிடித்தார். உம்மென்றா பிரம்படி இம்மென்றா காதில நுள்ளு.. 


இந்த கண்டத்திலிருந்து தப்பித்து 4ம் வகுப்பிற்கு தாவினா தங்கராஜா டீச்சர்.. முதல் இரண்டு Termsம் சந்திரிக்கா கால யுத்த நிறுத்தம் மாதிரி, நிம்மதியா கழிஞ்சுது. துரைசாமி மாஸ்டர் மட்டும் அனுருத்த ரத்வத்தை மாதிரி இடைக்கிடை வந்து விளாசிட்டு போனார்.. 


July 83 திருநெல்வேலி தாக்குதலோடு பள்ளிகூடம் மூடப்பட்டது. பிரச்சினை முடிஞ்சு schoolற்கு போனால் நிறைய புதுப் பெடியள் நிற்கிறாங்கள், கொழும்பில இருந்து வந்த அகதிகளாம். நாலு வருஷமா ஒன்றா இருந்த classஐ வேற பிரிச்சிட்டாங்கள் என்ற கடுப்பு ஒரு பக்கம் கொச்சை தமிழ் கதைக்கிற இவங்கட இம்சை இன்னொருபக்கம்.. வாழ்க்கை வெறுத்துச்சுது. புது classல் கிடைத்த ஒரே blessing, கணிதம் படிப்பிக்க வந்த தேவதாசன் மாஸ்டர். கட்டுப்பாடு குலையாத கண்டிப்புடன் கணிதத்தை விரும்ப வைத்தவர், தேவதாசன் மாஸ்டர்.


5ம் வகுப்பில் அவர் தான் எங்களுக்கு Class teacher.  ஆனந்தராஜா மாஸ்டர் Principal, துரைச்சாமி மாஸ்டர் Head master, தேவதாசன் மாஸ்டர் Class teacher.. கொடுத்து வைத்த காலங்கள். பரி யோவானில் நான் படித்த மிகச்சிறந்த வகுப்புகளில் இந்தாண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும். 


அந்த வருடம்,  தேவதாசன் மாஸ்டரின் நெறியாள்கையில் பாடசாலைகளிற்கிடையிலான ஆங்கில மொழி போட்டிகளிற்காக Merchant of Venice நாடகம் 5ம் வகுப்பு மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்திற்கான நடிகர்கள் திறமை அடிப்படையில் மட்டும் தெரிவு செய்யப்பட்டார்கள். தேவதாசன் மாஸ்டர் கண்ணியமும் நேர்மையும் மிக்க ஒரு சிறந்த ஆசிரியர். பழைய மாணவனாவும் இருந்ததால் Johnian valuesஐ அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவதில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வார். 


நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் PK, Dilash, Ramo நடிக்க எனக்கு ஒரு சிறிய Messenger வேடம்.. இரண்டு வசனம் தான் பேசணும்.. அந்த பலமான அணியில் இடம் கிடைத்ததே நான் பெற்ற பாக்கியம். தேவதாசன் மாஸ்டர் நாடக குழுவிற்கு காலையும் மாலையும் கடுமையாக பயிற்சி அளித்தார். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைய எல்லா நடிகர்களையும் பின்னி பெடலெடுத்தார். 


முதலாவது சுற்று, யாழ் வட்டார பாடசாலைகளிற்கிடையில் Jaffna English Conventல் நடந்தது. வாழ்வில் முதல்முறையாக ஒரு Girls schoolல் ஒரு நாளை கழித்த அனுபவம் புதுமையாக இருந்தது...ஆனா அம்மாவாண சத்தியமா நாங்க யாரையும் ஏறெடுத்து பார்க்கல்ல..நாங்க ஜொனியன்ஸாம்.. 


வட்டார போட்டியில் நாங்கள் இலகுவாக முதலிடம் பிடித்து மாவட்ட ரீதியான போட்டிக்கு தெரிவானோம்.  மாவட்ட மட்ட போட்டி வேம்படியில் நடந்தது,..மீண்டும் Girls school..அம்மாவாண.. நாங்க  ஜொனியன்ஸாம்..


எங்களுக்கும் Jaffna collegeக்கும் கடுமையான போட்டி, இறுதியில் நாங்கள் தான் ஜெயித்து, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானோம். Trinity Collegeல் நடைபெறவிருந்த போட்டியில் அன்றைய காலத்தில் நிலவிய போர் சூழலால் நாங்கள் பங்குபெற முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த நாடக குழுவில் இருந்த எல்லோரிடமும் இன்றும் இருக்கிறது. 


நாடகம் பாடசாலையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு முறை மேடையேற்றப்பட்டது. 1985ல், அநியாயமாக சுட்டு கொல்லப்படுவதற்கு சில மாதங்களிற்கு முன்னர் அதிபர் ஆனந்தராஜா முன்னிலையில், English Dayக்கு நாடகம் மீண்டும் அரங்கேறியது. நாடகம் முடிய, அதிபர் ஆனந்தராஜா நான் நடித்த பாத்திரத்தை குறிப்பிட்டு என்னுடைய அம்மாவிடம் என்னை பாராட்டினார். 


அது தான் ஆனந்தராஜா மாஸ்டர்...பாடசாலையில் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் பெயரும் அவருக்கு ஞாபகம், ஒவ்வொரு மாணவனின் செயல்பாட்டிலும் அக்கறை செலுத்துவார். அவருடன் பயணிக்க வேண்டிய எமது பரி யோவான் நாட்களை நாம் இழந்தது எமது வாழ்வின் மிகப்பெரிய துர்பாக்கியம். 


ஆனந்தராஜா மாஸ்டர் ஒவ்வொரு நாளும் rounds வருவார். அவர் வாற நேரம் குழப்படி செய்ததால் வகுப்பிற்கு வெளியில் அனுப்பப்பட்ட மாணவர்களிற்கு தனிகவனிப்பு நடக்கும். 


1983-85 காலத்தில் ஆமிக்காரன் கட்டுபாட்டில் குடாநாடு, இயக்கங்கள் ஆமிக்கு அலுப்பு குடுக்க ஆரம்பித்த காலகட்டங்கள்.  பாடசாலை நேரத்தில் ஏதாவது குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு நடந்து யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படும். பதறி அடித்துக்கொண்டு பிள்ளைகளை கூப்பிட வரும் பெற்றோருக்கு Main Gateல் வெள்ளையும் சொள்ளையுமாய் கம்பீரமாக நிற்கும் ஆனந்தராஜா மாஸ்டரின் உருவம் நெஞ்சுக்குள் பாலை வார்க்கும். எந்த ஒரு மாணவனுக்கும் தீங்கு வராமல் பாதுகாக்கும் அக்கறையும் துணிவும் அதில் தெரியும். 


நாளை Oct 3, 2015 அன்று பரி யோவானில் ஆனந்தராஜா நினைவு பேருரை இடம்பெறுகிறது. வெறும் நினைவு பேருரையுடன் நில்லாது போரினால் பாதிக்கப்பட்ட இளையோர்களிற்கு மறுவாழ்வளிக்கும் திட்டம் ஒன்றும் அவரது பெயரால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிகிறேன், வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. 


சில ஆண்டுகளிற்கு முன்னர் இறைவனடி சேர்ந்த தேவதாசன் மாஸ்டரை பாடசாலை காலங்களிற்கு பின்னரும் யாழ்ப்பாணத்திலும் மெல்பேர்ணிலும் சந்திக்கும் வாய்புக்கள் கிட்டின. 1994ம் ஆண்டு AL, CIMA சோதனைகளை கொழும்பில் முடித்து விட்டு, சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலத்தில் மீண்டும் பரி யோவான் திரும்பிய போது, தேவதாசன் மாஸ்டர் Primary school Headmaster. அவர் என்னை ஒவ்வொரு வகுப்பாக கூட்டிக்கொண்டு போய், மாணவர்களிற்கு "இவர் ஒரு Old Boy, என்னிடம் படித்தவர்" என்று பெருமையாக அறிமுகப்படுத்திய போது.. எந்தன் பார்வை மாணவர்களை நோக்கவில்லை..பரி யோவானின் அந்தப்புரம் குளிர்மையானது..

நாங்க ஜொனியன்ஸாம்..