Friday, 25 September 2015

தியாகத்தின் எல்லையை மீறிய திலீபன்அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,

நாளையுடன் நீங்கள் காவியமாகி 28 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு இன்னும் நனவாகவில்லை. நீங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய பிரச்சினைகள்  இன்றும் தீரவில்லை, உண்மைய சொல்ல போனால், பிரச்சினை இன்னும் பெரிசாகிட்டுது. ஆனால் உங்களை போல எங்களுக்காக போராட இன்றும் யாரும் முன்வாரதில்லை... பாராளுமன்ற கதிரைகளுக்காக தான் போராடினம்.

செப்டம்பர் 15, 1987 அன்று காலையில் பிரதித்தலைவர் மாத்தையா அழைத்து வர நல்லூர் கந்தன் முன்றலில் வயதான அம்மா ஒருவர் நெற்றி திலகமிட்டு ஆசி வழங்க, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகால சட்டம் நீக்கல், ஊர்காவல் படையினரின் ஆயுத களைவு மற்றும் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் என்ற ஜந்து கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரத மேடையேறினீர்கள். 


உண்ணாவிரத்தின் இரண்டாம் நீங்கள் ஆற்றிய உரை தமிழர் தேசமெங்கும் பாரிய உணர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக "எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன் அதுவே எனது இறுதி ஆசை" என்று நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் எதிரொலிக்கின்றன.


அண்ணா, உங்களிற்கு பின் ஆயிரமாயிரம் மறவர்களை விதைத்தும் நமது மண்ணில் விடுதலை விருட்சம் முளைவிடவில்லையே என்ற ஏக்கம் மரணத்திலும் எம்முடன் பயணிக்கும். "திலீபனின் பசியடங்க, செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்" என்றான் ஒரு ஈழத்து கவிஞன்.. உண்மைதான், அன்று தீரும் எங்கள் சுதந்திர தாகம்..


திலீபன் அண்ணா, உங்களை நீராவது அருந்தச்சொன்ன நண்பர்களிற்கு நீங்கள் கூறிய பதில்,  2009 ஏப்ரல் மாத இறுதியில்  தமிழீழத்தில் இனப்படுகொலையை எதிர்கொண்டிருந்த உறவுகளை காப்பாற்ற, சென்னை மரீனா கடற்கரையில் தலைமாட்டில் மனைவியும் கால்மாட்டில் துணைவியும் வீற்றிருக்க, சில மணித்துளிகள் உண்ணாவிரத நாடகம் போட்ட வசனகர்த்தா கலைஞரிற்கு நீங்கள் எழுதி வைத்துவிட்டு சென்ற திரைக்கதை.


"உண்ணாவிரதம் என்றால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."


திலீபன் அண்ணா, உங்களது உண்ணாவிரத மேடைக்கருகில் அன்று பல நூறுபேர் உணர்ச்சி பொங்க பேசினார்கள், உணர்வு நிறைந்த கவிதை படைத்தார்கள். உதயன், முரசொலி, ஈழநாதம், ஈழமுரசு பேப்பர் எல்லாம் நீங்கள் தான். யாழ்ப்பாண மக்களின் மையப்புள்ளியாக நீங்கள், உங்களை இந்தியா சாகவிடாது என்ற நப்பாசையுடன் சனம். அந்த நாட்களில் வெளிவந்த பலநூறு கவிதைகளில் இன்றும் எனது நினைவை விட்டகலா வரிகளிவை...

"தேச பிதாவே, தேசபிதாவே
பாரதத்தின் தேசபிதாவே 
எங்களூர் திலீபனை 
உங்களுக்கு தெரியுமா" 


உங்கள் முதலாவது ஆண்டு நினைவு நாள் வரும்போது, யாழ்ப்பாணம் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மூச்சுவிடக்கூட முடியாது திணறிக்கொண்டு இருந்தது. உங்கள் நினைவு பாடல்களை சுமந்து கொண்டு வெளிவந்த  cassetteஐ இரகசியமாக வீட்டுக்கு வீடு அனுப்பியது இயக்கம். கரண்ட் வாற நேரம் volumeஐ குறைத்து விட்டு கேட்ட பாடல்கள் இன்றும் நினைவலைகளில் ஒலிக்கின்றன. 


"மூச்சிழுக்கும் நேரமெல்லாம் உன் முகமே ஞாபகம், காற்றலைகள் உன் பெயரை காலமெல்லாம் பாடிடும்"... 
காலத்தால் அழிக்க முடியாதா காசி ஆனந்தன் வரிகள்.


"பாடும் பறவைகள் வாருங்கள், புலி வீரன் திலீபனை பாருங்கள்" என்ற பாடலை பாடி கொடுத்துவிட்டு அழுதபடியே ஸ்டூடியோவை விட்டு வாணி ஜெயராம் வெளியேறினாராம். அண்ணா, சில நாட்களிற்கு முன்னர் 1986ல் கைதிகள் பரிமாற்றம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த யாழ்ப்பாணம் வந்த விஜயகுமாரணதுங்கவின் விஜயம் பற்றிய வீடியோ பார்த்தேன். அதில், அன்றைய யாழ்ப்பாண அரசியல் துறை பொறுப்பாளர் ரஹீம் உங்களை "அமிர்தலிங்கம்" என்று அறிமுகபடுத்துவார். பிறகு விசாரித்ததில் நீங்கள் அரசியல் துறையிலிருந்ததால் அது உங்கட பட்டபெயர் என்றறிந்தேன். 


செப்டெம்பர் 26, 1987 ஒரு சனிக்கிழமை, புரட்டாசி சனி நாள். காலை 10.58 மணிக்கு உங்கள் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் சிவகுமரன் உங்கள் பாதம் தொட்டு வணங்க 265 மணித்தியாலங்கள் நீங்கள் நிகழ்த்திய யாகம் முழுமையடைந்தது. 


அன்றும் எங்களிற்கு பாடசாலை நடந்தது. செய்தி வந்ததும், உடனடியாக மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டோம். அன்றிரவு நண்பர்களுடன் நல்லை முன்றலில் உங்கள் வித்துடலிற்கு இறுதி மரியாதை செலுத்தியதும் சுதுமலையில் நடந்த மாபெரும் இறுதி அஞ்சலி கூட்டமும் இன்னும் நினைவிலிருக்குது. கூட்டத்தின் இறுதியில் உங்கள் விருப்பத்திற்கமைய உடல் யாழ் பல்கலைகழக மருத்துவபீடத்திற்கு கையளிக்கப்பட்டது.  நீங்கள் உயிரோடு உலாவியிருக்க வேண்டிய மருத்துவ பீடம், உங்கள் புகழுடலை தனதாக்கிக்கொண்டது. 


அண்ணா, யாழ்ப்பாண கோட்டையில் புலிக்கொடி பறக்கும் என்று நீங்கள் முழங்கினீர்கள. நீங்கள் காவியமாகி 3வது நினைவுதினத்தில் யாழ்ப்பாண கோட்டையில் புலிக்கொடி பறந்தது. நீங்கள் காவியமான அதே நேரத்தில் அன்றைய யாழ்ப்பாண தளபதி பானு கோட்டையில் புலிக்கொடியை ஏற்றினர். அதேபோல் உங்களது தாயக கனவும் நனவாகும், மறவர்களின் தியாகம் வீணாகாது என்று இன்றும் நம்புகிறோம்...நம்பிக்கை தானே வாழ்க்கை..


திலீபன் அண்ணா, நீங்கள் உங்கள் இன்னுயரை தேசத்திற்காக, மக்களுக்காக ஆகுதியாக்கிய போது உங்களுக்காக எம்மினமே தலைவணங்கியது. உங்கள் உயிரை தியாகம் செய்து இனத்தை காப்பாற்ற முன்வந்த தியாகத்தின் சிகரம் நீங்கள். இலட்சிய வேட்கையோடும் தளராத மனவுறுதியோடும் போராடிய எங்கள் நிஜ Hero நீங்கள். 


அதனால் தான் அண்மையில் நல்லூரில் உங்கள் நினைவுதூபி இருந்த இடத்திலிருந்து தம்பி ஜேகே எழுதிய பதிவில் "சிதைக்கப்பட்ட திலீபன் நினைவுதூபியை பார்க்கும்  ஒவ்வொருவரும் அதை மனதில் ஸ்தாபித்து கொள்கிறார்கள்", என்றார்.  உண்மை தான்.. 28 ஆண்டுகளிற்கு முன்பு உங்களிற்கு எங்கள் மனங்களில் கட்டிய துயிலுமில்லத்தில் இன்றும் நாங்கள் சுடரேற்றுகின்றோம். 


1 comment:

  1. அந்த காலத்தில் பலகலைக்கழக அனுமதி கிடைக்கிறதே பெரிய பாடு, இதில அதை இடையில விட்டுட்டு போராடிய இவர்களைப் போன்றவர்களைப் பத்தி இப்ப நினைத்தாலும் ஆச்சரியாமாக இருக்கு. எத்தனை படித்தவர்கள் நாடுக்காக போராடினார்கள்.

    ReplyDelete